“இளம் பாடகி செல்வி மஞ்சரி கலாமோகன் கலைப்பாரம்பரியம் மிகுந்த குடும்பப் பின்னணியில் இருந்து வருவது சிறப்பு அம்சமாகும். இவரது பாட்டனாரின் தமையனார் குழந்தைவேலு இலங்கை வானொலியில் முதல்தர இசை வித்துவானாக திகழ்ந்தவராவார். ஓவியம், இசை ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்கவர்களைக் கொண்ட பின்னணியுடன் கர்நாடக இசையில் கால் பதித்திருக்கும் மஞ்சரி கலாமோகன் ஸ்ரீமதி மனோரமா பிரசாத்தின் கீழ் பதினொரு ஆண்டுகள் கர்நாடக இசையைப் பயின்று பயின்று தனது இசைத் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவரது சமர்ப்பணம் என்ற இந்த இசை நிகழ்வு ஒரு குருவினதும் ஆர்வம் மிகுந்த சிஷையினதும் கடினமான உழைப்பின் அறுவடை என்று கூறலாம்” என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் சென்ற சனியன்று லண்டனில் விம்பிள்டன் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற விழாவில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
லண்டனில் திறமை மிக்க கலைஞர்களாகத் திகழும் ஸ்ரீ கே.ரி. சிவகணேஷ் (வயலின்) ஸ்ரீ.எம்.பாலச்சந்தர் (மிருதங்கம்) ஸ்ரீ.ஆர்.என்.பிரகாஷ் (கடம்) ஆகியோர் மஞ்சரி கலாமோகனின் வாய்ப்பாட்டிற்கு அருமையான வாத்திய இன்னிசையை வழங்கியிருந்தனர். “சாவேரி, நாட்டை, ஜயந்தசிறீ, ஆனந்தபைரவி, பைரவிகல்யாணி, மிஷ்ர லலித், நீலமணி, ஆபோகி, பிஹாக் ஆகிய பல்வேறுபட்ட இராகங்களில் தன்னுடைய இனிய குரலால் கச்சேரி செய்த மஞ்சரி கலாமோகனுக்கு கர்நாடக இசைத் துறையில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. மிகச் சிறந்த வாக்கேயக்காரர்களின் பாடல்களைத் தேர்ந்து மிக இயல்பாக சுருதி சுத்தமாக பாடிய பாங்கு இனிய இசை அனுபவத்தைத் தந்திருக்கிறது. மஞ்சரி கலாமோகனுக்கு வாய்த்திருக்கிற இந்த இனிமையான குரல் இறைவனின் வரப்பிரசாதமாகும். அழகிய ஆபரணங்களைப் பெட்டியில் வைத்து பின்பு மெருகு பூசிப் பாவிப்பது அல்ல இசை. தொடர்ச்சியான, கடுமையான பயிற்சியே இசைத்துறையில் வேண்டப்படுவதாகும்” என்று பிரபல இசை விமர்சகி ஸ்ரீமதி புஷ்கலா கோபால் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
மஞ்சரி கலாமோகனின் இந்த இசை நிகழ்வு இசை பயிலும் ஏனைய மாணவிகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளதென்றும்இ அவரைப் பின்பற்றி இசைத்துறையில் நன்கு மிளரவேண்டுமென்றும் நடன ஆசிரியை ஸ்ரீமதி அனுஜா சுப்ரமணியம் தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.
தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதர், ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், பூச்சி சீனிவாச ஐயங்கார், கோட்டவாசல் வெங்கடராம ஐயர் ஆகிய சங்கீத மேதைகளின் பிரசித்தி பெற்ற பாடல்களை மஞ்சரி கலாமோகன் தனது இனிய குரல் வளத்தால் பாடி சபையினரை பரவசப்படுத்தினார். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் மஞ்சரி கலாமோகன் போன்ற ஆற்றல் மிக்க இளம் கலைஞர்களின் தோற்றம் நமது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக உள்ளது என்று கூறலாம்.