” உலகிலேயே மிகவும் ஏமாற்றமளிப்பது, (75 ஆண்டுச்சரித்திரமுள்ள) இந்தியச் சினிமாத்துறைதான். தென்னிந்தியாவில் உருவாகும் சினிமாப்படங்களில் 20 வீதம் மட்டும் வர்த்தகரீதியாகவாவது வெற்றிபெறுகின்றன. உயர்ந்ததோர் கலைமரபைக்கொண்டது தென்னிந்தியா. தென்னிந்தியாவின் சங்கீதம் உலகிலேயே முதன்மையான ஒன்று. தென்னிந்தியரின் நடனம், உலகெங்குமுள்ளவர்களால் மிகவும் போற்றி ரசிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பண்டைக்காலச்சிற்பங்கள், ஈடிணையற்றவை. இப்படியாக ஒரு உன்னதமானதும், ஆழமானதுமான கலை மரபை வளர்த்துவந்திருப்பவர்கள், சினிமாத்துறையிலே இத்துணை பின்தங்கியிருப்பது ஏமாற்றமும் வேதனையுமளிப்பதாகும். “
இவ்வாறு 48 ஆண்டுகளுக்கு முன்னர், ஈழத்து இலக்கியஉலகில் முன்னர் வெளியான மல்லிகை இதழில் (1970 செப்டெம்பர்) சொன்னவரும், இலங்கையின் சிங்களத்திரையுலகை வெளியுலகம் வியப்புடன் விழியுயர்த்தி பார்க்கவைத்தவருமான திரைப்பட மேதை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நேற்று முன்தினம் கொழும்பில் காலமானார்.
இவ்வாறு தென்னிந்தியப்படங்கள் பற்றிய பார்வையை அன்றே வைத்திருந்த இவர், ஜெயகாந்தனின் முதல் திரைப்படமான “உன்னைப்போல் ஒருவனை” யும் பார்த்திருக்கிறார். அதனை இவருக்காகவே ஜெயகாந்தன் காண்பித்துமிருக்கிறார் என்ற தகவலையும் அதே மல்லிகையில் பதிவுசெய்துள்ளார். டொமினிக் ஜீவாவின் மல்லிகை எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகப்பணியாளர்களை ஒவ்வொரு இதழிலும் மரியாதை நிமித்தம் அட்டைப்பட அதிதியாக கௌரவித்து அவர்களின் நேர்காணல்களை அல்லது அவர்கள் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வந்திருக்கிறது. மாவை நித்தியானந்தன், ‘தில்லைக்கூத்தன்’ என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் ஆகியோர் மல்லிகைக்காக லெஸ்டரை நேரில் சந்தித்து எழுதிய குறிப்பிட்ட நேர்காணல் கட்டுரையைப்பார்த்த பின்னரே லெஸ்டரின் படங்களை விரும்பிப்பார்த்தேன்.
முற்போக்கான எண்ணங்களும் இடதுசாரிச்சிந்தனைகளும் கொண்டிருந்த லெஸ்டர், சிறந்த இலக்கியவாசகராகவும் திகழ்ந்தார். இலங்கைச்சிங்கள மக்களின் இயல்புகள், கலாசாரம், நம்பிக்கைகள், நாகரீகம் என்பனவற்றை யதார்த்தமாக பிரதிபலித்த சிங்கள படைப்புகளை (நாவல், சிறுகதை) திரைப்படமாக்குவதில் ஆர்வம்கொண்டிருந்தவர். அதனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா (கம்பெரலிய, மடோல்தூவ, யுகாந்தய) , மடவள எஸ். ரத்நாயக்க (அக்கர பஹ) கருணாசேன ஜயலத் ( கொளு ஹதவத்த) ஜீ.பி. சேனாநாயக்கா ( நிதானய) முதலான படங்களை தமிழ் எழுத்தாளர்களும் விரும்பிப்பார்த்தனர். அவை பற்றிய விமர்சனங்களையும் எழுதினர். லெஸ்டர் பற்றிய சிறந்த அறிமுகத்தை ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் பலர் எழுதிவந்துள்ளனர்.
1919 ஆம் ஆண்டில் ஏப்ரில் மாதம் பிறந்திருக்கும் லெஸ்டர், கடந்த ஏப்ரில் மாதம் தனது 99 ஆவது பிறந்ததினத்தையும் கொண்டாடினார். அதனை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் அவர் வசித்த திம்பிரிகஸ்ஸாய இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினார்கள். நூறு ஆண்டு வயதை நெருங்குவதற்கு 12 மாதங்கள் இருக்கும் தருணத்தில் அவர் இலங்கை கலையுலகிற்கு விடைகொடுத்துவிட்டார்.
பத்திரிகையாளராக தனது தொழில் வாழ்வை ஆரம்பித்த லெஸ்டர், சிறந்த திரைப்பட இயக்குநராகவே ஒளிவீசிக்கொண்டிருந்தவர். இவருக்கு பேராதனை பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டத்தையும் வழங்கி, அதனாலும் பெருமைகொண்டது. ரேகாவ (1956) சந்தேசிய (1960) கம்பெரலிய (1963) தெலொவக் அதர (1966) ரண்சலு (1967) கொலு ஹதவத்த (1968) அக்கரபஹா (1969) நிதானய (1972) தேசநிசா (1972) த கோட் கிங் (1975), மடோல் தூவ (1976), அஹசின் பொலவட்ட (1978), பிங்ஹாமி (1979), வீரபுரன் அப்பு (1979), பெத்தேகம (1980) கலியுகய (1982), யுகாந்தய (1983) அவறகிற (1995) வேகந்த வளவ்வ (2002), அம்மா வரேன் (2006) முதலான படங்களை இயக்கியிருக்கும் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தான் உளமாற நேசித்த சிங்களத்திரையுலகில் பணத்தை சேகரிக்கவில்லை. அவர் சேகரித்தது ஆயிரக்கணக்கான ரசிகர்களைத்தான். அதனால் அவர் தொடர்ந்தும் வாடகை வீட்டில்தான் வசித்துவந்தார். அவரது மனைவி சுமித்ராவும் திரைப்பட இயக்குநர். எடிட்டர். லெஸ்டரின் அனைத்துவெற்றிகளுக்கும் பின்னின்றவர்.
லெஸ்டரின் முதல் படமான ரேகாவ பிரான்ஸ் திரைப்படவிழாவில் 1957 இல் காண்பிக்கப்பட்டது. அந்த விழாவுக்கு சென்றவிடத்தில்தான் சுமித்ராவை சந்தித்துள்ளார். அப்பொழுது சுமித்ரா அங்கு திரைப்படக்கலை பற்றி கற்றுக்கொண்டிருந்தமையால் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதன்பின்னர் லெஸ்டரும் சுமித்ராவும் தனித்தனியாகவும் இணைந்தும் பல படங்களை இயக்கியிருக்கின்றனர் இருவருக்கும் ஆங்கிலப்புலமையும் பிறமொழி இலக்கியங்கள் பற்றிய ஆழ்ந்த ஞானமும் இருந்தமையால் தாம் கற்றதையும் பெற்றதையும் இலங்கை கலையுலகிற்கு வழங்கிவந்தார்கள். அதன்மூலம் இலங்கை சிங்களத் திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் பாடுபட்டு உழைத்தார்கள். அவர்களின் சேவையை கவனத்தில் கொண்ட இலங்கை அரசும் 2010 இல் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் – சுமித்ராபீரிஸ் மன்றம் ( Foundation) என்ற அமைப்பையும் உருவாக்கி வர்த்தமானியிலும் பிரகடனப்படுத்தியுள்ளது. பின்னாளில் இலங்கையில் சிறந்த சிங்களத்திரைப்பட இயக்குநர்களாக அறிமுகமான தர்மசேன பத்திராஜ, பிரசன்ன விதானகே, தர்மஶ்ரீ பண்டாரநாயக்க, காமினி பொன்சேகா, சுமித்ரா பீரிஸ், சோமரத்தின திஸாநாயக்க உட்பட சிலருக்கு லெஸ்டர் ஞானத்தந்தையாக விளங்கியவர் எனவும் சொல்லமுடியும்.
எமது மக்களுக்கு எத்தகைய திரைப்படங்கள் தேவை என்பதை லெஸ்டர் உணர்ந்திருந்த காலத்தில்தான் யதார்த்தத்திற்கு புறம்பான நாடகத்தன்மைகொண்ட பக்கம் பக்கமாக வசனங்கள் குவிந்த தென்னிந்திய தமிழ்ப்படங்கள் வெளிவரத்தொடங்கி அவையே திரைப்படங்கள் என்ற மாயையும் எம்மத்தியில் உருவாக்கியிருந்தன. லெஸ்டர் இலங்கையில் வெளியான சிறந்த சிங்கள இலக்கியப்படைப்புகளை திரையில் அறிமுகப்படுத்துவதிலும் முன்னோடியாகத்திகழ்ந்திருப்பவர். அவர் திரைப்படமாக்கியிருக்கும் கம்பெரலிய ( கிராமப்பிரழ்வு) மடோல் தூவ ( மடோல்த்தீவு) நிதானய ( புதையல்) கொளு ஹதவத்த ( ஊமை உள்ளம்) முதலான கதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிங்களப்படைப்புகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்தேசிய திரைப்படம் போர்த்துக்கீசியர் இலங்கையை ஆக்கிரமித்திருந்த காலத்தின் பின்னணியை சித்திரித்த திரைப்படமாகும். இதில் காமினி பொன்சேக்கா ஒரு துணைப்பாத்திரத்தில்தான் அறிமுகமானார். “போர்த்துக்கிஸி காரயா ரட்டவல்லல் யன்ன சூரயா…” என்ற இத்திரைப்படப்பாடல் அக்காலப்பகுதியில் இலங்கையில் சிங்களப்பிரதேசங்களில் பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பிரபல்யமான பாடலாகும். பெத்தேகம என்ற திரைப்படம், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் அரசாங்க அதிபராக பணியிலிருந்த Leonard Woolf எழுதிய The village in the jungle நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது. இதனை பல்கலைக்கழகத்திலும் ஆங்கில இலக்கியத்தில் பாட நூலாக வைத்திருந்தார்கள். பெத்தேகமவில் விஜயகுமாரணதுங்க – மாலினி பொன்சேக்கா – ஜோ அபேவிக்கிரம திறம்பட நடித்திருந்தார்கள். ஜோ அபேவிக்கிரம அந்த ஆண்டில் (1980) சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். குறிப்பிட்ட Leonard Woolf மனைவிதான் பிற்காலத்தில் ஆங்கில இலக்கியத்தில் பிரபல்யம் பெற்ற Virginia Woolf என்பதும் குறிப்பிடத்தக்கது.
லெஸ்டர் சமூகப்பார்வைகொண்ட யதார்த்தமான கதைகளையே தனது படங்களுக்கு தெரிவுசெய்து வெற்றிகண்டவர். கோடிக்கணக்கில் செலவுசெய்து ஆடம்பரமான காட்சிகளையும் உருவாக்கி, நம்பமுடியாத சண்டைக்காட்சிகளையும் காதல் டூயட் பாட்டுக்களையும் புகுத்தி வெளிநாடுகளின் காட்சிகளை நம்பியிருந்த தென்னிந்திய வணிக சினிமாக்கள் இலங்கையில் வந்திறங்கிக்கொண்டிருந்த (இன்றும்தான்) காலப்பகுதியிலேயே இலங்கையின் உண்மையான ஆத்மாவை, தான் தெரிவுசெய்த கதைகளிலிருந்து திரைப்படமாக்கி காண்பித்து, இதுதான் சினிமா என்று சர்வதேச திரைப்படவிழாக்களில் காண்பித்தவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்.
1970 களிலேயே அவர் மல்லிகை இதழ் ஊடாக மாவை நித்தியானந்தனுக்கும் தில்லைக்கூத்தனுக்கும் தெரிவித்துள்ள செய்திகளை இங்கு பதிவுசெய்கின்றேன்.
” வழமைக்கு முரணான ஒரு திரைப்படத்தை எடுப்பதைவிட வர்த்தக ரீதியான தோல்வியை விரும்பி ஏற்றுக்கொள்ளத் தென்னிந்தியத் திரைப்படத்துறையினர் தயாராக இருக்கிறார்கள். நமது திரைப்பட மரபில் ‘ மாற்றம்’ அல்லது ‘புரட்சி’ ஏற்படுவதை அவர்கள் அடியோடு வெறுக்கிறார்கள். அப்படியாக ஏற்படும் திருப்பம், தமக்கே ஆபத்தாக முடியுமென்று படமுதலாளிகள் பயப்படுகின்றனர். பழைய பட்டியல் முறைப்படங்களே பாதுகாப்பானவை என்ற நம்பிக்கையால் வழமை குலைந்து போகாத வகையில் தொடர்ந்தும் பழைய மாதிரியான படங்களை மாத்திரம் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.”
” நான் பம்பாய்க்குச்சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு திரைப்படத் தயாரிப்பாளரைச் சந்தித்தேன். அப்பொழுது அவர், தாம் பன்னிரண்டு திரைப்படங்களை ஒரே நேரத்தில் எடுத்துவருவதாக என்னிடம் சொன்னார். இப்படிச்செய்தால் நல்ல படம் உருவாகுமா? இந்தப்பன்னிரண்டு படங்களுக்காகவும் 48 இலட்சம் (அன்றைய மதிப்பில்) ரூபாய்களை செலவிடுகிறாராம். ஆனால், எனது “கம்பெரலிய ” போன்ற தன்மையுள்ள ஒரு படத்தை தாம் ஒருபொழுதுமே எடுக்கத்துணியமாட்டாராம். தரமற்ற படங்களைத்தாயாரிக்க 48 இலட்சம் ரூபாய்கள் செலவழிக்கும் ஒருவர், அதன் ஒரு மிகச்சிறு பகுதியையாவது – குறைந்தது கலைத்தரமுள்ள ஒரு படத்திற்காவது செலவிடக்கூடாதா?”
” தென்னிந்திய திரையுலகைப்பொறுத்தவரை ஜெயகாந்தனின் முயற்சிகள் குறிப்பிடப்படவேண்டியவை. ‘ உன்னைப்போல் ஒருவன்’ என்ற அவரது திரைப்படத்தை ஜெயகாந்தன் எனக்காக திரையிட்டுக்காட்டியதோடு, தாமே என்னருகில் இருந்து விளக்கங்களும் தந்தார். அவரது முயற்சிகளுக்கு அங்குள்ள பட வர்த்தகர்கள் பெரும் இடையூறுகளும் தடைகளும் விளைவித்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன்.”
” பேசும் மொழியில் ஒரு இயக்குநர் அதிக அறிவுபெற்றிருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. சினிமாவில், இரண்டு மொழிகள் வருகின்றன. ஒன்று பேச்சு. மற்றது காட்சி. காட்சிதான் சினிமாவில் அதிகம் முக்கியமானது. சிங்களம் அதிகம் தெரிந்த ‘சிங்களப்பண்டிதர்கள்’ தமது அறிவையெல்லாம் வைத்துக்கொண்டு எப்படிப்பட்ட கீழ்த்தரமான படங்களை எடுத்துவருகிறார்கள்? பார்த்தீர்களா?”
” கலைக்குச் சமுதாயப்பணி உண்டு. ஆனால், இது அரசியல் ரீதியானது மட்டும்தான் என்பதல்ல. என்னைப்பொறுத்தவரையில் சினிமாவின் வாயிலாக, வாழ்க்கையின் சில அனுபவங்களைப் பார்வையாளனுக்கு அளிப்பதை விரும்புகிறேன். சில உணர்ச்சிகளை ஏற்படுத்துவதை விரும்புகிறேன். மிகச்சாதாரணமான விடயங்கள் கூட, திரைப்படத்திலே புதிய உயர்வுகளை ரசிகனுக்குத் தருகின்றன. “திரையிலே பார்க்கின்ற வரைக்கும் இதை நான் அறிந்திருக்கவில்லை” என்று அவன் சொல்கிறான்.
சிலர், “சிரிப்பு, காதலும் களியாட்டங்களும்தான் மகிழ்வூட்டுவன” என்று எண்ணுகிறார்கள். கனமான விடயங்களும் மகிழ்ச்சியை அளிப்பனவே. ‘பதர் பாஞ்சாலி’ என்ற படத்தை எடுத்துக்கொண்டால், அதில் எந்தவிதமான களியாட்டங்களும் இல்லாதிருந்தும், அது மக்களிடையே அமோகமான வெற்றியைப்பெற்றது. ஆனால், திரைத்துறை முதலாளிகளோ தோல்வியில் முடிந்ததாக ஒரு பொய்க்கதையை வேண்டுமென்றே பரப்பிவிட்டார்கள்.”
” மக்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கும் கலையென்று எதுவுமில்லை. மாபெரும் ஓவியக்கலைஞரான பிக்காசோவிடம், அவரது ஓவியத்தின் அர்த்தமென்னவென்று யாரோ கேட்டபோது, அவர் அழகாக பதிலளித்தார். ” ஒரு பறவை பாடும்போது, அதற்கு அர்த்தமென்னவென்று அந்தப்பறவையிடம் கேட்பீர்களா?” என்று அவர் கேட்டார்.
” எம்முடையது ஒரு படைப்பாளிகளின் நாடாக இல்லாமல், விமர்சகர்களின் நாடாகவே அதிகம் காணப்படுகிறது”
இவ்வாறு வெளிப்படையாகப்பேசியிருக்கும் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தொடர்ச்சியாக சிங்கள நாவல்களையே படமாக்கிவந்திருப்பவர். அதுபற்றியும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், ” எதைவேண்டுமானாலும் திரைப்படமாக்கலாம். ஒரு டெலிபோன் டிரக்டரியை வைத்துக்கூடப் படமெடுக்கலாம்! படைப்பாற்றலே முக்கியம்” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
பெரும்பாலான ஆங்கில, தமிழ், சிங்களம் உட்பட வேற்று மொழிப்படங்கள் உண்மைச்சம்பவங்களை பின்னணியாகவும் நாவல்கள், கதைகளை மூலமாகவும் கொண்டிருப்பவை. இதுபற்றி விபரிப்பதாயின் நீண்டதொரு பட்டியலையே வெளியிடமுடியும்.
எனினும் இலக்கியப்படைப்புகள் திரைப்படமாகும்போது மூலக்கதை சிதறுண்டு முழுமைபெறத்தவறியிருக்கிறது. லெஸ்டரும் சிங்கள நாவல்களை திரைப்படமாக்கியிருப்பதனால், அவர் இதுபற்றியும் இவ்வாறு அந்த நேர்காணலில் சொல்லியிருக்கிறார்:
” அவை முழுமைபெறமுடியாது! எப்பொழுதும் ஏதாவது இழக்கப்படத்தான் செய்யும். பெரும்பாலும் அது ஆய்வறிவுப்பாகம். அல்லது சமூகவியற் துறையின் ஒரு பாகமாகத்தான் இருக்கிறது. இலக்கியம் வாசிப்பின் மூலமும் , சினிமா காட்சியின் மூலமும் அளிக்கப்படுபவை. உணர்வு ரீதியாக சினிமாவே அதிக பலம் வாய்ந்தது.”
லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் என்ற மகா கலைஞரின் மறைவு அவரது முதுமைக்கு விடுதலை. திரைப்படத்துறையினருக்கோ ஈடு செய்யப்படவேண்டிய பேரிழப்பு. அன்னாருக்கு எமது இதய அஞ்சலி.
letchumananm@gmail.com