ஈழத்து கவிதை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்களில் ஒருவராகத் தெரிபவர் வானம்பாடி என அன்புடன் அழைக்கப்படும் வதிரி.சி.ரவீந்திரன் ஆகும். 25/10/1953இல் சாவகச்சேரியில் பிறந்த இவர் வதிரியையும், பின்னர் கொழும்பையும் வாழ்விடமாகவும் கொண்டிருப்பதனால் இவரின் சிந்தனைத் தளம் விரிவடைய பலருடன் நட்புடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவரின் கவிதை முயற்சி பூம்பொழிலில் எழுதியதுடன் ஆரம்பமாகியது எனலாம். கவிதை,சிறுகதை, கட்டுரை, நாடகம், நூல்விமர்சனம் என தன் திறமையை வெளிப்படுத்தி நின்றாலும் கவிதை மூலமே அறியப்பட்டவர். சாவகச்சேரி ட்றிபேக் கல்லூரியிலும், வதிரி.வடக்கு மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையிலும், உய்ர வகுப்பை கரவெடி தேவரியாளி இந்துக் கல்லூரியிலும் பயின்றார். இளமையிலேயே வாசிக்கும் பழக்கத்தினை கொண்டிருந்தவரின் அறிவுப் பசிக்குத் தீனி போடுபவர்களாக பலர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக இவருக்கு வாய்த்த ஆசிரியர்களும், நண்பர்களும் தான்.தேவரையாளி இந்துக் கல்லூரியின் பெருமை இலக்கியத்தும் உண்டு. அங்கு படித்த காலத்தில் தான் எழுத்தாளர். திரு.தெணியான், கவிஞரும், நாடகாசிரியருமான கலாநிதி.காரை.எஸ்.சுந்தரம்பிள்ளை ஆகியோரின் நெறிப்படுத்தல் இவருக்குக் கிடைத்ததும் வாய்ப்பாக அமைந்தது. நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் மேலோங்க பல நாடகங்களில் நடித்தும் உள்ளார். கலாநிதி.காரை.சுந்தரம்பிள்ளை அவர்களினதும்,திரு.இளவரசு ஆழ்வாப்பிள்ளையினதும் நாடக இயக்கம் நடிப்பில் ஜொலிக்க உதவியது.நாடகப் பயிற்சிப் பட்டறையின் அனுபவம் இன்று வரை நாடக விமர்சகராகவும்,தேசிய நாடக சபை உறுப்பினராகவும் இயங்க முடிந்திருக்கிறது.
வதிரி பல கற்றறிஞர்களை உருவாக்கித் தந்துள்ளது.இங்கிருந்து தான் அமரர்.ராஜசிறிகாந்தன், அமரர்.சைவப்புலவர்.சி.வல்லிபுரம், அமரர்.கோவி.நேசன், வதிரி.கண.எதிர்வீரசிங்கம் போன்றோர் உருவாகினர். இப்போது வதிரி.சி.ரவீந்திரனின் எழுத்துப்பயணம் நம்முடன் பயணிக்கிறது. பழகுவற்கு இனியவர் என பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இவரின் எழுத்துக்கள் பூம்பொழில் தொடங்கி மன்றம்(வதிரி) தினபதி, சிந்தாமணி, தினகரன், நான், மல்லிகை, அனு, ஈழநாடு, நமது ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல், ஞானம், தினமுரசு,ஏன், யாதும்,பொறிகள்,ஜீவநதி, அக்னி, சுவடுகள் நான்காவது பரிமாணம், காற்றுவெளி வரை வெளிவருகின்றன. இவரின் ஈழத்து மெல்லிசைப்பாடல் என்ற கட்டுரை என்னை அவரிடம் சேர்த்தது.பல கலைஞர்களை அக்கட்டுரை இனங்காட்டியது. சிறந்த பேச்சாளர்.உதைப்பந்தாட்டப் பிரியர்.
சிறப்புக் கவியரங்குகளில் பங்கு பற்றி தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். உதிரியாக பத்திரிகைகளில் வருகிற படைப்புக்களை வாசித்த மாத்திரத்தில் அசைபோடும் முன்பே இன்னொன்று ஆக்கிரமித்து விடுவது இயல்பு.இங்கு தன் கவிதைகளை சிதற விடாமல் தொகுத்து ‘மீண்டு வந்த நாட்கள், எனும் தொகுப்பாக கொடகே பதிப்பகம் மூலம் கொணர்ந்துள்ளமை பாராட்டத்தக்கது.104 பக்கங்களில் ஒரு அழகிய பதிப்பாக 2011இல் கொடகே சகோதரர்கள் வெளிக்கொண்டு வந்ததன் மூலம் ஈழத்து தமிழ் இலக்கியதிலும் தங்கள் பங்களிப்பை செய்தவர்கள் ஆகிறார்கள்.இந் நூல் இலங்கை தேசிய சாகித்திய 2012இற்குரிய விருதினையும் பெற்றுக்கொடுத்துள்ளது. இவரின் படைப்பு முயற்சிகளுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவே இவரின் தொழில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. திருமணப் பதிவாளராகக் கடமைபுரிவதால் பலருடன் பழகும் வாய்ப்பு ஏற்படுவதுடன்,அவர்களின் குடும்பத்தினருடனான உரிமையும் ஏர்பட வாய்ப்புண்டு.இது இன்னும் படைப்பாளிக்கு வலுச் சேர்க்கும் எனலாம்.அனுபவப் பாடம் பிறரிடமிருந்தும் வரலாம். இலங்கை வானொலியில் , ரூபவஹினியில், வசந்தம் தொலைக்கட்சி போன்றன நடத்திய சிறப்பு நிகழ்வுகளின் பங்களிப்பு தன்னை மெருகேற்றிக்கொள்ள உதவியதாக இருக்கலாம். குறிப்பாக, ஒலி மஞ்சரி, வாலிப வட்டம், பாவளம், உதய தரிசனம் என பலவற்றைக் கூறலாம்.
பல பரிசுகளுக்கு இந் நூலை சிபாரிசு செய்யலாம்.ஆனால் பரிசுகளும் இயல்பாகவே தெரிவு செய்யப்படவேண்டும்.சில சமயங்களில் காலங்களும் காத்திருப்பதில்லை. நல்ல படைப்பாளி விருதினைத் தேடிப் போகவேண்டியதில்லை.காலம் கனிய அதுவாகவே தேடி வரும். பாரதியை அவர் காலத்தில் நினைத்தவர் எவருமிலர். இன்று அவரே பலருக்கு ஆகர்சக் கவிஞராகிறார். முகநூலின் மூலமகாவே இவரின் நட்புக் கிடைத்தது. பலரைக் காற்றுவெளிக்கு அறிமுகம் செய்து வைதுள்ளமை இவரின் பரந்த மனத்தைக் காட்டியது.யாருக்கும் வராது.
மரபுக் கவிதைக்கு யாரும் எதிரியல்ல.ஆனால் பண்டிதத்தனம் மிக்கவர்கள் இன்னும் புதுக்கவிதையை விமர்சிக்கவே செய்கிறார்கள். மஹாகவியுடன் ஆரம்பமாகிய ஈழத்து நவீன கவிதைக் களம் எல்லைகளைக் கடந்து நின்றாலும் இன்னும் விமர்சனத்துடனேயே நோக்கப்படுகின்றது. நவீன கவிதைத் தளம் ஆரோக்கியமான சூழலில் பயணிக்கிறது என்று சொல்லும் அதே வேளை மருத்துவம் பார்க்கவும் வேண்டும் என்பர் சிலர். மேலை நாட்டு கவிதைகளின் பரிச்சயம் மிக்கவர்கள் நம்மிடையே வளர்ந்து புதிய பரிமாணங்களைச் செய்தவண்னமே இருப்பர். உச்சத்தைத் தொடாவிட்டாலும் நல்ல படி முறை வளர்ச்சி உண்டு எனலாம். இந்தச் சூழலில் தான் வதிரியின் மீண்டு வந்த நாட்கள் நோக்கப்படவேண்டியது. புதுக்கவிதையில் பரிச்சயமானவர்கள் தங்கள் அனுபவ வெளிப்பாடுகளை வீச்சுடன் சொல்லிவருகிறார்கள். கட்டுடைகிறது என்போரும் உண்டு.
தொகுப்பின் முதல் கவிதையே போதும்.முழுக் கவிதைகளினையும் உள்வாங்கி கொள்ள..நாட்டைப் பிரிந்து போகும் காதல் மனங்களூ சில உண்மைகளை சொல்கிறார். முன்பு வண்ணச் சிறகுவின் கவிதையும் வாசிக்கையில் மனம் உருகும். இடப்பெயர்வு, புலப்பெயர்வு, மக்களை, வாழ்ந்த சூழலைவிட்டுப் பிரிதல் தருகிற வலிகள் இன்னும் உண்டு.அரசியலாலர்களின் அரசியலில் நசுங்கிப் போவது மனிதங்களே என்பது முற்றிலும் உண்மை.
தலைமகனைப் புதைத்த மண்ணை
தடவி முகர்ந்து விட்டு
மதலை மொழிக் குழந்தையழ
பார்பணைத்துப் பால் கொடுக்கும்
அபலைப் பெண் அழுதழுது
ஏறுகிறாள் ரயில் தனியே…
இவரின் மொழி சற்று வண்ணச் கிறகுவின் கவிதையில் இருந்து வேறுபட்டாலும் இரண்டுமே நெகிழ்ச்சியை ஏற்படுத்துவனவாகும். யாழ்நகரின் ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் அகதியாக வெளியேற்றப்பட்ட மக்களின் அவலம் இன்னும் வரலாறாக இருக்கிறது.
‘யுத்தமெனும் கொடுமையால்
நாங்கள் ஒவ்வொருவராக
இடம்பெயர்ந்து சென்றோம்.
ஆண்டுகள் பலவாக எங்கள்
முகங்கள் மறந்த் போனோம்
எமக்கேற்றவாறு தகுதிகளை
வளர்த்துக் கொண்டோம்.
எங்கள் உறவுகள்
பிரிந்த் இடைவெளிகள்
விரிந்து விரிந்து போனாலும்
நீ மனத்திரைக்குள்
மங்காது வாழுகின்றாய்..’
நட்பின் பிரிவை அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
புதிய கதை பிறக்கிறது என்கிற கவிதையும் கிராமத்துக் கதை ஒன்றைச் சொகிறது.
‘என்ன காணும்
அடிமை குடிமைகள் என்ற நினைப்போ?
நாமும் மனிதர்கள் தாம்.
பழிய நயினார் காலம்
பாறி விழுந்துட்டுது.’
காலம் மாறிக்கொண்டிருக்கிறது. புதிய தலைமுறைகள் புதிய சிந்தனைகளுடன் பயணிக்கிறது. 39 தலைப்புக்களில் எழுதபட்ட கவிதைகள் பல கதைத் தளங்களில் நின்று எழுதபட்டிருக்கிறது. இன்னொரு வகையில் பார்க்கையில் சஞ்சிகைகளுக்கேற்ப கவிதைகள் பிரசுரமாகுகையில் கூட கவிதைக் களம் மாறுபடுகிறது.மல்லிகையில் வெளி வரும் கவிதைகள் வேறொரு மலரில் வருகையில் பாதிப்பை ஏற்படுத்துவதில் வித்தியாசம் உண்டு என்பது கணிப்பு.
ஈழத்து சிறு சஞ்சிகை வரலாற்றி தனி இடத்தை இன்று வரை தக்கவைத்துக் கொண்ட மல்லிகையின் படைப்புக்கள் அனைத்துமே வித்தியாசமாக இருக்கும். மூன்றாவது மனிதனில் வரும் படைப்புக்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கே வதிரியின் கவிதைகள் பல கோணங்களில் நின்று எழுதப்பட்டதாகவே நினைக்கிறேன்.
புதிய கதை பிறக்கிறது, உள்ளக்குமுறல், எழுத்து,துயர் தரிசனங்கள், எங்களது பல்கலைக் கழகம்,உடைந்த நாற்காலியும் நானும், முரண்பாடும் முற்றுப்புள்ளியும், பூட்டு, மீண்டு வந்த நாட்கள் மல்லிகையில் வெளிவந்த கவிதைகளாகும். அதனால் கொஞ்சம் அதிகமாகவே எனக்குள் இறங்கி இறுக்கம் கொள்கின்றன.
‘அகதிமுகாம் வாழ்வை
அனுதாபமாக பார்த்தோர்
ஏதிலிகளான எமக்கு
ஏலுமான உதவிகள் புரிந்தனர்.
மீண்டு வந்த நாங்கள்
சொந்த இடம் மீண்ட போது
எமது நிலம் ஆதி நிலையில் கிடந்தது.
சொந்தங்களைப் போல்!
இப்போ
எங்கள் இருப்புக்களையும்
இழந்து..
இழப்பதற்கெதுவுமில்லையென
மீண்டு வந்த நாட்களின்
வடுக்களோடு!
வலி சுமந்தவனுக்குத் தான் வலிகள் பற்றிச் சொல்லமுடியும். புரியும். உடைந்த நாற்காலியின் அனுபவத்தைச் சொல்கையில் நாற்காலிகள் இன்றி குப்பி விளக்கில் வாழ்ந்து படித்த அனுபவம் எனக்கு நினைவில் வந்தது. ஒவ்வொரு கிராமதுள்ளிம் சொல்லமுடியாத வடுக்கள். ஏழ்மை, சமூக ஏற்றத் தாழ்வு, மனித முரண்பாடுகள் எவ்வளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது எனப்தை ஒரு கவிஞனால் தான் பாடமுடியும். கவிதை எழுதுவது இலகுவானது அல்ல.எனினும் வலிகள் நிறைந்த வரிகள் கவிதையாகிவிடுவதும் உண்டு. நேர்மையான கவிஞனின் வரிகள் காலம் கடந்தும் வாழும்.
‘மொட்டை மரங்கள்
பழைய வரலாறுகளை
எண்ணிக் கலங்குகின்றன.
இளங்கன்றுகள்
இனிய கனிகளைத் தந்து
புதிய வரலாற்றை
பதிவு செய்கின்றன.’
நல்ல கற்பனை. நாடக அனுபவமும் அவரின் சிந்தனைகளுக்கு உந்துசத்தியாகின்றன. ஆங்காங்கே முன்னாலுள்ளவனைப் பார்த்து பேசுவதும்,எங்கோ உள்ளவர்க்காக கதைப்பதும் போன்ற உணர்வைத் தருகின்றன. வார்த்தைகளின் போக்கு நெருடலைத் தரவில்லை. எழுத்துப்பிழைகளும் பதிப்பில் இல்லை. ஆர்பாட்டமில்லாமல் எழுதும் வதிரி.சி.ரவீந்திரனிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம். மீண்டு வந்த நாட்களுக்குப் பிறகான அனுபவ வெளிபாடாக அவை அமையட்டுமே. பிறந்த நாளுக்கும் எமது அன்புப்பரிசு.
mullaiamuthan@gmail.com
25/10/2013