முதலாவது விமரிசனம்!
‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு , வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் , அந்தத் தமிழன் இலங்கைத் தமிழனாகவே வாழத் தொடங்கி விட்ட நிர்பந்தம், வாக்குரிமை நிராகரிக்கப் பட்டு , மாறுகின்ற அரசியல் சூழலில் பாமரனின் வாழ்வு அலைவுறும் அவலம், நிலம் நிராகரிக்கப் படுகின்றபோது அரசு மனித நிராகரிப்புகளும் சேர்ந்து கொள்ள சிதைவுறும் குடும்பங்கள் உறவுகள் , இந்திய மண்ணுக்கு தூக்கி எறியப்பட்டவனாக வந்து சேருகின்ற அவலம், இந்திய தமிழகம் அவனுக்கு தந்த வாழ்வுதான் என்ன? இவையே நாவலின் களமாக இருக்கின்றன. இன்றைக்கெல்லாம் நாவல்கள் மூன்று அடிப்படைகளில் தான் வெளி வருகின்றன: தகவல்களின் அடிப்படையில் வியப் பூட்டுவது; பிரதேச மொழியைப் பதிவு செய்வது; இதுவரை அறியப் படாத சம்பவங்கள் என்ற முன்னெடுப்பில் சம்பந்தம் இல்லாத சம்பவங்களால் பக்கங்களை நிரப்புவது. இந்த மூன்று உத்திகளையும் கையிலெடுத்து, அதை போலிச்சடங்குகளாக்கி நாவலுக்கான சுவையை கலைத்தன்மையை இழந்து போன நாவல்களே இன்று அதிகம். அல்லது செய்நேர்த்தி மிகுந்து உண்மைகளை தொலைத்து விட்ட எழுத்துகளுக்கும் இடையில் நல்ல எழுத்தை , கலையும் உண்மையும் கூடிய எழுத்துக்களைத் தேர்வதே வாசகனின் இன்றைய சவால். தகவல்களை பின்னில் விட்டு மனிதனை முன்னிறுத்தி இந்நாவல் செயல்பட்டிருக்கின்றது. வாசகனை அந்நியப் படுத்தாது கூட இழுத்துச் செல்லுகின்ற மொழி, கதையோட்டம் சரியாக இருந்தால் எந்த பிரதேச மொழியும் புரிதலுக்கானதே, என சொல்லாமல் செய்து விட்ட நாவலிது. கதையோட்டத்திற்கு தேவையான சம்பவங்களால் ,தன்னை தகவமைத்துக் கொண்ட நாவலாகவும் இருக்கின்றது.
இலக்கிய நண்பர் ஒருவர் அடிக்கடி அன்னியன் நாவலை சிலாகித்து ஒன்றுமில்லாததை எழுதிச் சென்ற நாவல் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் சொன்ன கோட்பாடு அல்லது கருத்தியல் இரண்டுக்குள்ளும் அந்நாவல் வரவில்லை , அந்நாவல் அப்படியான சிலாகிக்க கூடிய நாவலாகவும் என் வாசிப்பில் பதிவாகவில்லை. ஆனால் தனி மனித வழிபாட்டு மரபில் நாவல் , சிறுகதை எழுதப்பட்டது ஒருகாலம், அடுத்த காலம் எதிர்மறை வழிபாட்டு மரபுக்கு இடம் கொடுத்தது. இன்றைய கால கட்டம் வரலாறுகள் மாற்றி வாசிக்கப் பட்டு ஆய்வுக்குள்ளாக்கப் படும் கால கட்டம். அந்த மரபில் மிகப் பெரிய அரசியல் நிகழ்வுகளின் போது இந்த அரசியல் ஏதுமறியா பாமரன் , அந்த அரசியல் அவனையறியாமல் தாக்குகின்ற போது எப்படி எதிர் கொண்டிருப்பான் என்பதையும், அவனுடைய எதிர்கொள்ளலில் மனித வாழ்வு என்னவாக மாறிப் போகின்றது என்பதையும் பதிவு செய்து போகின்ற நாவலாக இருக்கின்றது. ஒவ்வொரு மனிதனுமே அவனது வாழ்வில் முக்கிய கதாநாயகனாக மாறுவதும் பின்னர் இல்லாமல் போவதும் தவிர்க்க முடியாதது என்பதை சொல்லாமல் சொல்லிச் சென்று விடுகின்றது நாவல் வெள்ளையனுக்கும் இந்தியனுக்குமான முரண்பாடு எந்த இடத்தில் முதலாளி தொழிலாளி பிரச்சனையாய் மாறியது, பின்னர் எப்படி சிங்கள தமிழன் பிரச்சனையாய் உருமாறியது என்பதையெல்லாம் நாவல் வாசிப்பில் சம்பவங்களுக்கிடையில் அழகாக பாமரனின் குரலில் சொல்லிச் சென்று விடுகின்றது நாவல் இதுவரை இவ்வகையான கருத்துக்களை அரசியல் கற்றறிந்தோர் வாயிலாக மட்டுமே கேட்டிருக்கின்றோம் ”இலங்கையில இருந்து கிட்டு இந்திய சுதந்திரத்தை கொண்டாடினா உன்னை அந்நியனா பார்க்காம சொந்தமாகவா பார்ப்பான்?” என்று கதாபாத்திரம் கேட்கின்ற கேள்வி மிக முக்கியமான கேள்வி. இந்தியா பிரச்சனைக்குள் புகுந்து எத்தனை சமரசம் செய்தாலும் நீரு பூத்த நெருப்பாய் உள்பகை கனன்று கொண்டே தான் இருக்கும் . அதையே இன்னமும் எதிர்பார்க்கும் தமிழர்கள்..இப்படி பலதையும் நமை யோசிக்க வைத்த நாவலாக இருக்கின்றது. மூன்று கால இடைவெளிகள் நாவலில் பதிவாகின்றன. ஒரு காலம்தாண்டி இன்னொரு காலத்திற்குள் நுழைவதை அல்லது மாறுவதை உணர்ந்து விடாது இயல்பாய் நகர்தலாய் தடங்கலில்லாது கதையின் மொழி நமை இழுத்துச் செல்கின்றது.. இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் தமிழனின் வாழ்வுரிமையை, வோட்டுரிமை குடியுரிமையை பறித்ததன் மூலம் சிங்கள இருப்பை தகவமைத்துக் கொள்ள முயற்சி செய்தது. இன்றும் போர் மற்றும் இலங்கை நிகழ்வுகளால் துரத்தி விடப் பட்ட மக்கள் தமிழகத்தில் அடுத்த தலைமுறை வளர்ந்த பின்னரும் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம் என்ன?. ஜெர்மனியின் போய் குடியேறியவன் கூட அன்னாட்டு குடியுரிமை பெற்று விடுகின்றான் தமிழகத்தில் தமிழ் பேசுகின்ற ஒருவனுக்கு கூட இந்த மண்ணின் மைந்தன் எனும் அடையாளத்தை தமிழகம், இந்தியா தர மறுப்பது ஏன்? கேட்பதற்கும்நாதியில்லை, அரசியல் ஆதாய வாதிகளுக்கும் இன்னமும் அது தோன்றவில்லை. இக்கேள்விகள் நாவல் எழுப்பவில்லை நாவலின் வாசிப்பின் பின் என் மனம் எழுப்பிப் போகின்றது
இரண்டாவது விமரிசனம்
வனச்சாட்சி நாவல் குறித்து கோயம்புத்தூரில் நடைபெற்ற உரையாடலுக்குப் பிறகு இன்னும் அந்த நாவல் பற்றி விரிவாக , விட்டுப் போன தளங்களையும் பேச வேண்டியிருப்பதை உணர்ந்தேன். இந்த அரங்கில் மலையகத் தமிழர் ஒருவர், அந்த காலகட்ட அரசியல் இதில் கவனிக்க வேண்டிய விசயம் அந்த கால கட்ட அரசியல் மட்டும் தான், (வரலாறு அல்ல) தெரிந்த நபர்கள் இருவர் இந்த மக்களின் சிக்கல்களை சமகாலத்தில் அறிந்திராத ஆனால் பாடுகளை உணர்ந்து கொள்ள விரும்பும் நான் என மூன்று வகைப்பட்ட நபர்களின் விமரிசனங்கள் இருந்தன. வாழ்வு குறித்தும் தர நிர்ணயம் குறித்தும் முன் தீர்மானங்களை உடைய நபர்களினால், திறந்த விமரிசனத்தை வைக்க முடியாமல் போகின்றது என்பதுவும், அவர்களின் விமரிசனங்கள் அவர்களின் மன எல்லைக் கோட்டின் முன்னும் பின்னும் என்பதாகவே தீர்மானமாகின்றது. ஆனால் ஒரு படைப்பு இதற்கெல்லாம் எந்த முன் தீர்மானங்களுக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்கின்றது நாவல் விமரிசனத்தில் நாவலை மீண்டும் முன் மொழிய நான் விரும்புவதில்லை. நாவலின் ஒட்டு மொத்த சாரம்சத்தின் முக்கிய பகுதிகளைச் சொல்லி வாசிக்கத் தூண்டி விடவே விரும்புவேன். மீண்டும் கதை சொல்லுவதன் மூலம் நாவலை எழுதிய கதை சொல்லிக்கு துரோகம் செய்கின்றோம். எழுதப் பட்ட நாவலை எவ்வளவு திறம்பட சொன்னாலும் அது படைப்பாளியின் கதையாக ஒரு போதும் ஆகாது.
மஹாபாரதத்தை எத்தனை சுருக்கமாக பங்காளிச் சண்டை என்று நாம் சொல்லி முடித்து விட்டாலும், சொல்பவர் ஒவ்வொருவர் பார்வையிலிருந்தும் அந்த கதை விரிந்து கொண்டே போகும்.எவ்வளவுதான் சொல்லி முடித்து விட்ட பின்னரும் சொல்லாத கதைகளை தன்னகத்தே கொண்டபடியே இருக்கும் அது போல இந்த மேடையில் தொடர்ந்து பலரும் இந்நாவலின் கதையை சொல்லி முடித்த பின்னரும் இன்னும் வாசிப்பில் நம்மிடையே வந்து சேரவேண்டிய கதைகள் இருக்கவே செய்கின்றன. இலங்கை மலையகத் தமிழர் வரலாறா இந்நாவல் என்றால் அதுமட்டுமல்ல , இந்தியாவிலிருந்து வெள்ளையர்களுக்காக தமிழர்களாலேயே கொண்டு செல்லப் பட்ட தமிழன் பட்ட துயரங்கள் , வெள்ளையன் வெளியேறி உருவான அரசாங்கம் எப்படி தமிழர்களை நிராகரித்து விட்டு அரசை சிங்கள அரசாக உருவாக்க பாடுபட்ட போது அதே இந்தியத் தமிழன் இலங்கைத் தமிழனாய் மாறிப் போயிருந்தவன் . நாடிழந்து தான் எந்த நிலத்துக்கு சொந்தமானவன் என்று புரியாமல் அல்லலுறுவதும்,, மூன்றாவதாக அவன் இந்தியாவிற்கு தூக்கி எறியப் பட்ட பின்னும் அவர்களது இன்றைய வாழ்வு என்ற சம்பவங்களின் வாயிலாக அதிகாரம் மனித வாழ்வை சிந்திக்காது எப்படி செயல்படுகின்றது என்பதாக
இந்த நாவல் பயணிக்கின்றது.
அரசியல், அரசின் பார்வைகளாக அதன் வழியில் எதையும் பதிவு செய்யாது ,அதனால் மனிதன் வாழ்வில் நிகழ்ந்த , நிகழ்த்தப் பட்ட எல்லா துயர சம்பவங்களையும் சொல்லி உணர்த்திப் போகின்றது. புதுமைப் பித்தனின் துண்பக் கேணிக்குப் பிறகு 70 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியத்தமிழனின் பார்வையில் மலையகத் தமிழனின் பாடுகள் பதிவு செய்யப் பட்டிருப்பது முக்கியமானது. இது இந்த நிகழ்வின் வந்த முக்கியமான விமரிசனம் வரலாற்று நாவல் வரலாற்றுத் தகவல்களை தன்னுள் அதக்கிக் கொண்டு புனைவுகளை ஆக்குகின்றது.. எல்லா தகவல்களையு,ம் அது வரிசைக் கிரமமாக அடுக்கத் தேவையில்லை. அப்படியாக தெரிந்த தகவல்களை எல்லாம் கொட்டி அடுக்கி விட்டு நாவலாகும் தன்மையிலிருந்து விலகி தோற்றுப் போன நாவல்களுக்கு மத்தியில் மனிதர்களை பேசி வென்ற நாவலிது அந்த கால கட்ட அரசியல் பார்வையோடு இருந்தவரிலிருந்து வேறு பட்டு அது குறித்த மனித உணர்வுகளை பதிவு செய்வதே நாவல். தமிழகத்தை பொறுத்தவரை ஈழத் தமிழரையம் சரி மலையகத் தமிழரையும் சரி அரசியலாகவும், அதை அவர்களது அரசியல், மற்றும் இலக்கிய இருப்பாகவும் சிந்தித்து பார்த்து விட்ட பலருக்கு இந்நாவல் பலவற்றை விட்டு விட்டதாகவே தோன்றக் கூடும். ஆனால் அது உண்மையில்லை . இந்நாவலின் தளம் என்பது வேறு. 200 ஆண்டு கால மலையக வரலாற்றைச் சொல்லும் முதன்மைச் சம்பவங்கள் மனிதர்கள் மனதில் ஏற்படுத்திய உணர்வுகளை இந்நாவல். சொல்லியிருக்கின்றது.. . எஸ் வி ஆர். நாவல் எழுதிய பிறகு எங்களிடம் வாசிக்கக் கொடுத்திருக்லாம் வரலாற்ருத் தகவலை சரிபார்க்க என்றது சரியான கருத்தாக எனக்குத் தெரியவில்லை
இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் பலருக்கு கசப்பான உண்மைகளையும் சொல்லுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டிருக்கும் முஸ்லீம் எங்களது தாயகம் பாகிஸ்தான் என்று சொன்னால் எப்படி கோபம் வருமோ? அப்படித்தானே இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் இந்தியா எங்களுக்கு செய்யும் காப்பாத்தும் என்று சொல்வதும். என்பது போன்ற கசப்பான உண்மைகளை சொல்லுகின்றது.
இந்நாவல் இன்னொரு தளத்தில் இருந்தும் நம்மை யோசிக்க வைக்கின்றது. தமிழகத்துக்கு போர் காரணமாக வந்து சேர்ந்த தமிழர்களை இன்னமும் அகதிகளாகவே வைத்திருக்கின்றது இந்திய தமிழக அரசு இங்கேயே பிறந்து வளர்ந்த தலைமுறை வந்த பின்னரும் கூட ஒவ்வொரு முக்கிய அரசியல் நிகழ்வுக்கும் முகாமை விட்டு வர கூடாது நிர்பந்ததிக்கப் படுகின்றனர்.
தமிழர்களாகிய நாமும் தமிழர்களை வந்தேறிகளாக பார்க்கத்தான் செய்கின்றோமென்றால் இலங்கையில் நிலை என்னவாக இருக்கும். அடுத்த விசயம் மாமியார் வீடு கோபித்துக் கொண்டு அம்மா வீடு வரும் பெண்ணுக்கு நல்ல தாயார் சொல்லுகின்ற அறவுரையில் புகுந்த வீட்டின் மேல் இருக்கின்ற வெறுப்பை குறைக்கின்ற உரையாடல் அவசியம். அதுபோலவே அங்கேயே வாழ்ந்துதான் ஆகவேண்டிய நிலையில் தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்தியா மற்றும் எந்த நாட்டின் அரசியம் தலையீடும்அங்கு வாழும் தமிழனுக்கு எதிராக மாறும் என்பதுவும், அவனை இன்னமும் அந்த மண்ணிலிருந்து அன்னியப் படுத்தி விடும் என்பதுவும் நிஜம். ஆனால் நாமோ நம்மின் சமூகப் பற்றை காண்பிக்க இனப் பற்றை காண்பிக்க இன்னொரு இனத் துவேசத்தை கையிலெடுக்கின்றோம் அது அநாவசிமானது. இதை இந்நாவல் சம்பவங்கள் சொல்லிச் செல்லுகின்ற போது ஏற்கனவே இனப் பற்று பொதுப் புத்தியில் இருக்கும் நமக்கு விரோதமான போக்காகவும், நாவலின் கடைசிப் பகுதி நீர்த்துப் போனதாகவும், கோமாளிகள் உலாவுவதாகவும் தோன்றுவதில் ஆச்சரியமில்லை.( கோவை ஞானியின் கூற்றுப் படி)
வரலாற்றுக்க்கும் புனைவுக்கும் தனது பக்க கலை நியாயத்தை , நடுநிலை உணர்வுகளை எழுப்புதன் மூலம், இதுவரை பதியப் படாத அறிய தகவல்களாகவும் வனசாட்சியின் சாட்சியம் வன்னி மரத்தின் சாட்சியம்