மீரா மொஹிதீன் ஜமால்தீன் என்ற இயற் பெயரையுடைய கவிஞர் மருதூர் ஜமால்தீனின் ”வலிகள் சுமந்த தேசம்” கவிதை நூல் நூலாசிரியரின் 8 ஆவது நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது இந்த நூலை ஏறாவூர் வாசிப்பு வட்டம் வெளியிட்டுள்ளது.
இந்த நூலில் மறக்க முடியவில்லை, தெளிந்து கொள், உங்களுக்கின்னும், ஏன் விடிகிறாய், அபாபீல்கள், கழுகுப் பார்வைக்குள் நீ, என்றும் நானே தலைவனாக, ஏமாளிகள், உடன் பிறப்பே, ஆத்மாக்களே, நிலை மாறுகின்றேன், எதை எதிர்பார்க்கிறாய், நாளைய அபாபீல்களாக, நிம்மதி ஏது?, நாளை முதல், எம்மிலக்கு, காத்திருக்கிறது, சொல்லிக் கொடு, வாடிக்கிடக்கிறது, நினைவிருக்கட்டும் எம்மை ஆகிய தலைப்புக்களில் 20 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. இந்த நூலுக்கான முன்னுரையை தீரன் ஆர்.எம். நௌசாத்தும் பின்னட்டைக் குறிப்பை ஏறாவூர் தாஹிரும் வழங்கியுள்ளார்கள்.
சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இலக்கியப் பணியாற்றி வந்த இவர் தனது கன்னிக் கவிதைத் தொகுதியை 2008 இல் புரவலர் புத்தகப் பூங்கா மூலம் வெளியீடு செய்தார். அதனைத் தொடர்ந்து மருதூர் ஜமால்தீன் ரமழான் ஸலவாத் (2010), கிழக்கின் பெரு வெள்ளக் காவியம் (2010), முஹம்மத் (ஸல்) புகழ் மாலை (2011), இஸ்லாமிய கீதங்கள் (2012), தாலாட்டு (2015), பத்ர் யுத்தம் (2016) ஆகிய நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். புதுக் கவிதை, மரபுக் கவிதை ஆகிய இரண்டு வடிவங்களிலும் கவிதை எழுதுவதில் சமர்த்தரான இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, இஸ்லாமியப் பாடல்கள் போன்ற ஐநூறுக்கு மேற்பட்ட படைப்புக்கள் தேசிய பத்திரிகைகளிலும் பல்வேறு சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்த மெட்டுக்கும் உடனடியாக பாடல் வரிகளை மிகவும் இலகுவாக எழுதும் ஆற்றல் கை வரப்பெற்ற இவர் தற்போது முகநூலிலும் பல்வேறு வலைத்தளங்களிலும் பல படைப்புக்களை எழுதி அதிக ஈடுபாடுகாட்டி வருகின்றார்.
அநியாயங்களுக்கு எதிரான காட்டமாகவும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கான சாடல்களாவும் முயற்சி செய்து முன்னேறாமல் சோம்பேறிகளாகவும் ஏமாளிகளாகவும் இருக்கும் மானிடர்களுக்கு சாட்டையடியாகவும் தனது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள அரும்பாடு படும் மானிடனின் அவலக் குரல்களை படம் பிடித்துக் காட்டும் விதமாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைத் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவதாகவும் இப்படி பல கருக்களை வைத்தே ”வலிகள் சுமந்த தேசம்” என்ற கவிதை நூலை மருதூர் ஜமால்தீன் யாத்துள்ளார்.
மிகவும் எளிய வடிவில் வெளிவந்துள்ள இந்தக் கவிதைத் தொகுதி சுடும் நெருப்பாக பல விடயங்களை கக்கி நிற்கின்றமை ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கின்றன. இந்த நூலில் நெருப்பாகச் சுடும் சில வரிகளைக் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
* மறக்க முடியவில்லை என் தாய் நிலத்தை கொத்தியெறிந்து விட்டு குதூகலிக்கின்றீர்.. உமக்கென்ன தெரியும் என்னுயிர் அங்கிருப்பது..
* உன் முகமூடி கிழித்தெறியப்படும் ஒரு நாளில் மனிதப் போர்வைக்குள் எத்தனை உருவங்களில்தான் உலா வருகின்றாய்?
* உனது ஒவ்வொரு மூச்சுக்களுக்கும் கேள்வி காத்திருக்கிறது. தெளிந்து கொள் மௌத்தின் வரவு உனக்கு அருகிலிருக்கிறது..
* என்ன வயிற்றெரிச்சல் உங்களுக்கு எம்மைத் துவம்சம் செய்திட எத்தனிக்கும் உங்கள் கால்களை உசுப்பிவிட்டது யார்?
* குதர்க்கப் பேச்சாலும் குண்டாந் தடிகளாலும் அதர்மத்தைத் தூவியா அஹிம்சை வளர்ப்பது?
* நேற்றுக் கண்ட கனவு போல நேசத்தைப் பறிகொடுத்து போற்றத்தகு வளங்களை போக்கிரிகளின் புகலிடமாக்கிய அந்தக் காலங்கள் அந்திப் பொழுதுகளாய் மறையும் தருணத்தில் துவேஷ விளக்கைத் தூண்டுகிறீர்கள்..
* போர்க் கவசங்களால் பொன்னான உயிர்களை வேரற்று இடமற்று வெதும்பி வாழ்ந்து துன்பமே நாவலாகத் தொடர்கையில் இன்னுமே நீங்கள் பாடம் கற்கவில்லை.
* காலக் கவசத்தைக் கைப்பற்றி தனக்குக் கீழே ஏனைய சமூகம் கொத்தடிமைகளென்று கொக்கரித்தே உங்களின் கழுத்தறுபட்டதை மறந்துவிட்டீர்கள்.
ழூ நினைவிருக்கட்டும் இந்த நாடு உங்கள் நீதிமன்றமல்ல நீங்கள் தீர்ப்பளிக்க எல்லா மக்களினதும்..
* இரவே நீயும் ஏனோ விடிகிறாய்? கடித்துக் குதறும் கழுகுப் பார்வை நடித்துப் பறிக்கும் நாடகசாலை கிடைத்தது லாபமாய் கொத்தியே செல்லும் பறவையாய் மிருகமாய் பாதையில் மனிதம் பாய்வன கண்டும் ஏனோ விடிகிறாய்?
* எனது வளவுக்குள் விழா எடுக்கின்றன சில வல்லூறுகள்.. அகிம்சைப் போதனைக்கு அத்திவாரமிடுவதாய் ஆளுமைகளை சுமக்கும் ஆத்மாக்களுக்கு பொறி வைக்கின்றன.. வன்மைக் குணத்துடன் வந்து இடம்பிடித்தும் சொந்தம் தமக்கு மட்டுமாய் சொதப்புகின்றன..
* வாழ்வுப் பாதையை பீதி வெள்ளத்திலாக்கி உயிர்க் கூடுகளை உடைக்க முயல்கின்றன..
* மானுடங்கள் மனித நேயத்திற்காய் விண்ணப்பிக்கும் நவீன யுகத்திலா இந்த வல்லூறுகள் வன்மம் புரிய வேண்டும்?
மேலுள்ள வரிகளின் மூலம் கவிஞரின் சுட்டுக் கொதிக்கின்ற இதயத்தையும் வெம்பி நிற்கின்ற மனதையும் கண்டு கொள்ளலாம். வாசிக்கின்ற எமக்கும் அதே மனநிலை ஏற்பட்டு இதயம் கனத்துவிடுகின்றது. எப்படியோ எல்லா இனங்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் மற்றவர்களுக்குப் பிரச்சினையில்லாமல் வாழ முயற்சிப்போமாக என்று ஒவ்வொருவரும் பிரார்த்தித்துக்கொள்வோம். சமாதானம் ஒன்றின் மூலமே நாடு முன்னேற்றமடையும். இனத்துவேச காய் நகர்த்தல்கள் ஒரு நாட்டை அழிவுக்கே இட்டுச் செல்லும்.
”வலிகள் சுமந்த தேசம்” ஒரு சமூகத்தின் சோகத்தை சுமந்து நிற்கின்றது என்று சொல்வது பொருத்தமானது. வாசகர்கள் இந்த நூலை வாசிப்பதன் மூலம் கவிஞரின் மனதில் உள்ள ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். இலக்கியப் பிரியர்கள் ஒவ்வொருவரும் இந்த நூலைக் கட்டாயம் வாங்கி வாசிக்கவும்.
மருதூர் ஜமால்தீன் இன்னும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!
நூல் – வலிகள் சுமந்த தேசம்
நூல் வகை – கவிதை
நூலாசிரியர் – மருதூர் ஜமால்தீன்
தொலைபேசி – 0775590611
வெளியீடு – ஏறாவூர் வாசிப்பு வட்டம்
விலை – 100 ரூபாய்