வாசிப்புக்குச் சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…

வாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…தேவகாந்தன்2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில்லை, இதை வாசிக்க ஆரம்பித்தபொழுதில். அது பழக்கமும் இல்லை. வாசித்து முடிந்த பிறகு எழுத மனம் உந்தினால்தான் உண்டு. சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை இரண்டரைத் தடவையாக வாசித்த பிறகு இன்றைக்கு எழுத மனம் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை வாசித்து மூடிவைத்துவிட்டு நான்கைந்து நாட்கள் கழிய புத்தகத்தை தொடர முயன்றபோது முடியாமல்போனது. பக்கங்களை பின்னோக்கி நகர்த்தியபோதும் தொடுப்பை பிடிக்க முடியவில்லை. மீண்டும் வாசித்தேன். வாசிப்பில் அலுப்புத் தோன்றவில்லை. புதியதான தோற்றம். அது மீண்டும் மீண்டும் தன் ரகசியங்களைக் கட்டவிழ்த்துக்கொண்டே இருந்தது. சுகம் எச்சமாய் வந்தது. அதுவே இப்பிரதியின் அறுதியான பலன். ‘விடம்பன’த்துக்கு அடையாளமொன்று தேவைதான். அவ்வகையில் இதை நாவலென்று கொள்ளமுடியும். இதன் முன்னுரையில் சுகுமாரன் வகைப்படுத்துவதுபோல் picaresque வகையாகவும் எடுத்துக்கொள்ளலாம். Picaresque வகையினத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றிரண்டு பண்புகளையே அது இறுக்கமாகப் பற்றிக்கொண்டு செல்கிறது. பிக்காறெஸ்க் நாவலில் அல்லது உலுத்த வகை நாவலில் தன்னிலைக் கதைசொல்லும் பண்பை இது எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிடுகிறது.

ஜேர்மன் மொழியில் 1959இல் வெளிவந்து 1961இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான குந்தர் கிராஸின் The Tin Drum இவ்வகை நாவலுக்கு ஆரம்ப கால முன்னுதாரணமென்று சொல்லப்பட்டாலும், அந்த அமைவில் ‘விடம்பனம்’ செல்லவில்லை. ஆனாலும் அந்த வகையினத்தில் தவிர வேறில் இதைச் சேர்க்கவும் முடியாது. பெரும்பாலும் நீண்ட வசனங்களைக்கொண்டு அமைந்திருக்கிறது பிரதி. சல்மான் ருஷ்டியினதைப்போன்ற நீள வசனங்கள். வாசிப்பை மெல்ல நகர்த்துகிற அம்சம் இதுவேயெனினும், இதில் மனம் லயித்துவிடுகிறதைச்  சொல்லுகிறபோது, சில நீண்ட வசனங்கள் இடறச் செய்வதையும் சேர்த்தேதான் குறிப்பிடவேண்டும். பாத்திரங்கள் சில நெஞ்சில் நிறுதிட்டமாய்ப் பதிந்துவிடுகின்றன. அவளும் இவளும் என வரும் இரு பெண்பாத்திரங்களான ராணி மார்க்கும், ஆடுதன் ராணியும் அவற்றில் தலையாயவை. அவளா இவளா என்று எழுவாயைக் கண்டறிய முடியாத குழப்பம், கவனம் சிதறினால் வாசகனில் விழுந்துவிடுவதைத் தவிர்க்க முடியாதிருக்கும். இது திட்டமாய் அமைக்கப்படவில்லை என்பதை மீறியும், இவ்வகைக் கதை சொல்லலுக்கு இதுவே உகந்த முறையென்று எண்ணுமளவிற்குத்தான் இருக்கிறது. புனைவுப் பாத்திரங்களான ஆடுதன் ராணியும், ராணி மார்க்கும், மணிமொழியும், தமிழ்வாணனும், காத்தானும், மூக்காயியும், சின்னக் கட்டாரியும்போலவே கருங்கண்ணியும், ஜிம்மியும்கூட மனத்தில் பதிகிற விதமாகவே நாவல் நடந்திருக்கிறது. அவ்வப்போது குறுக்கீடு செய்யும் அம்மாஞ்சிப் பாத்திரத்தைக்கூட, அதன் குணவியல்புகளிலிருந்து மங்கலாகவேனும் ஒரு உருவத்தை வாசகனால் கற்பிதம் பண்ணமுடிகிறது. அம்மாஞ்சி பாத்திரத்தின் சிந்தனையின் வரன்முறையான வளர்ச்சி  நாவலின் தவிர்க்கவியலாப் பக்கங்களாகின்றன. அதனாலேயே ஒரு மங்கலான உருவத்தோடேனும் பாத்திரம் மனத்தில் இருக்கச் செய்கிறது. எனில் இதில் எந்தவொரு தனிப் பாத்திரமும் கதையை நகர்த்தவில்லையென்பது பிரதானமானது. தொடர்ந்தேர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கதையொன்றுடன் நாவல் வந்திருக்கவில்லை. ஆயினும் இதில் ஒரு கதை இருக்கவே செய்கிறது. ஆனால் அந்தக் கதை மய்யமழிந்து கிடப்பதுதான் பிரதியின் விசேஷம்.

மாயவரமும், நாகப்பட்டினமும், சென்னையும், மும்பையும் என பல சிறிய பெரிய நகரங்கள் இந் நாவலில் பேசப்பட்டிருந்தாலும், தஞ்சையே இதன் பிரதான ஆடுகளம். அதற்கிணையாக முக்கியத்துவம் பெறுவது இருபதாம் நூற்றாண்டு நடுப்பகுதியிலிருந்து தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தின் நடுப்பகுதிவரை தொடரும் காலம். கூறுகூறாக தம் செயற்பாட்டையும் கருத்தையும் பாத்திரங்கள் வெளிப்படுத்தினாலும், இவை பேசுவது தஞ்சையின் கதையைத்தான். அதன் சமூக, பொருளாதார கட்டமைப்புகளும் மாந்தரின் இயங்குமுறையும், பாடுகளுமே அவற்றில் தொனிக்கின்றன. பிரதி சொல்லாது விட்ட இடைவெளிகளை இவையே இட்டுநிரப்பச் செய்கின்றன. குருதிப் புனல்கள் தரிசனமாகின்றன. மேலும் தஞ்சாவூரினது மட்டுமல்ல, முன்னர் குறிப்பிடப்பட்ட சற்றொப்ப அரை நூற்றாண்டளவான காலத்தின் கதையையுமே பிரதி பேசுகிறது. இவையே பிரதியின் மய்யங்கள் – காலமும், களமும். பாத்திரங்களின் இயக்கம் காட்சிகளாய்க் காட்டப்படுகின்றன. உரையாடல் கேட்கிறது. சிந்தனைகளைக் கவனிக்க முடிகிறது. இவையெல்லாம் நகரும் சித்திரங்களாகி வாசகன் மனத்தை அலைவுறுத்துகின்றன. கால காலத்தில் கலைகளும், பண்பாட்டு விழுமியங்களும் மாறுவது ஏனென்ற கேள்விக்கு நாவலில் பதில் இருக்கிறது. நிலப் பிரச்னை, நீர்ப் பிரச்னைகளின் மூலம்பற்றிய புரிதல் ஏற்படும்போது அந்தப் பதிலை வாசகன் அடைகிறான். கிராமத்தில் விளையும் பஞ்சத்தால் கிராமங்கள் சுருங்கி மக்கள் தொகை ஐதாகிறபோது பெருகிவரும் காட்டுப் பன்றிகளை அழிக்க பெருவனத்துக்கு தீ வைக்கையில், தஞ்சம் கொண்டிருந்த புரட்சியாளர்களும் எரிந்து கருகிப்போவதிலிருந்து, கடலோரக் கிராமங்கள் இரண்டினுக்கிடையில் ஏற்படும் முரண் கலவரமாய் கடலிலே பொங்கியெழுந்து படகுகளும், மனிதர்களும் தீப்பிழம்பில் வெந்தழிந்துபோவதும்வரையான சம்பவங்கள் மனத்தை அதிரவைக்கும் விதமாய் நாவலில் பதிவாகியிருக்கின்றன. வாசக மனம் அதிராமல் தொடரமுடியாமலிருக்கும்.  மனிதரின் காதலும், காமமும்கூட காட்சிகளாகவே பதிவுபெறுகின்றன. சமூகப் பிரக்ஞையுள்ள பாத்திரங்களும் தொடர் செயற்பாடுகளின்றி உதிரிகளாகவே இருக்கின்றன. புரட்சியாளர்கள் எங்குமே காட்டப்படவில்லை. ஆனாலும் அவர்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகளும் திட்டமிட்ட வகையிலன்றி, உணர்வழுத்தங்களுக்கேற்ப உதிரிகளாகவே மனத்தில் பதிவாகின்றன. இது அதனால் ஒருவகையில் இப்பிரதியிலேயே குறிப்பிடப்படும் Cloud Atlas நாவல் போன்றதுதான்.  2004இல் வெளிவந்த David Mitchel என்கிற பிரிட்டிஷ் படைப்பாளியின் Cloud Atlas நாவல் ஆறு கதைகளைக் கொண்டது. நாவலில் மிக நுண்மையான இழைகள் கொண்டு அவை இணைக்கப்பட்டிருக்கும். ‘விடம்பனம்’ சம்பவங்களை இணைத்து ஒற்றைக் கதையாக்குகிறது. களத்தினதும், காலத்தினதும் ஒற்றைக் கதை. அதை காட்சிகளினதும் உரையாடல்களினதும் வழி ‘விடம்பனம்’ செய்கையில் picaresque என்ற வகையினத்துக்குப் பதிலாக. picturesque என ஒரு புதுவகைப்பாட்டைச் செய்யலாமோவென எண்ணத் தோன்றுகிறது. எந்த வகையினமாயினும் இது தமிழுக்குப் புதிது என்பதுதான் பிரதி செய்கிற விசேஷம்.

நாவல் கட்டமைப்பின் கருதுகோள்களை, சமூகத்தின் பாரம்பரியமான எண்ணங்களை, கலாச்சாரங்களை நாவல் அநாயாசமாக கேளிக்கையோடு உடைத்துக்கொண்டு செல்லும்பொழுது, வாசகனில் சிரிப்பை அனுங்கச்செய்தாலும், அது சுரப்பாய்க் கொண்டிருக்கிற உணர்வு சோகம்தான். எவ்வகையான சோகம்? இவ்வளவு காலமாய், இவ்வளவு மோசமான இந்த இலக்கிய, சமூக பழைய மதிப்பீடுகளை சுமந்துவந்திருக்கிறோமே என்று கொள்கிற சோகம். கடந்த கால வாழ்நிலையும், பண்பாட்டு அழிவுகளும் மனத்தை நோகச் செய்யவில்லை, சோகமே கொள்ள வைக்கின்றன. அழகாகவும், நீளமாகவும் வளர்த்து வைத்த கூந்தலை ஒருநாள் கட்டையாக வெட்டுகிறபோது ஏற்படுமே ஒரு சோகம், அதுபோன்ற ஒரு சோகம். வலியற்ற சோகம். வேடிக்கையைக்கூட சோகத்தோடு அனுபவிக்க வைக்கிற பிரதியாக இது இருக்கிறது. சோகத்தை வேடிக்கையாக நான் இதில் உணரவில்லை.

பல்வேறு பாத்திரங்கள் பிரதியில். வாழும், மறைந்த படைப்பாளிகளாக. சுந்தர ராமசாமி, தஞ்சைபிரகாஷ், யுகபாரதி, ஓவியர் சீனிவாசன் பெருமாள் முருகன் என அப் பாத்திரங்கள். இது எதார்த்தத்தின் பதிவைப் புரிகிற வேளையில் சிலவேளை அதீத அளவுக்கும் சென்றுவிடுகிறது. பெருமாள் முருகனை ஒரு பின்புல பாத்திரமாக நாவலில் கொண்டுவரும் படைப்பாளி, பின்பகுதியின் நீண்ட பக்கங்களுக்கு இழுத்துச் செல்வது மட்டுமல்ல, ஒரு எல்லைக்கு மேலே சுமந்துகொண்டும் நடக்கிறார். அஃதிறந்து போகிற நிலையில் பிரதி பாதிப்பை அடைகிறது. வேண்டாத்தனமாய் வாசகனுக்குப் படுகிறது. யுகபாரதியின் பாத்திரத்தை அவ்வாறு அவர் செய்யவில்லையென்பதை இங்கே இணைத்துப் பார்க்கவேண்டும். நாவல் மேலே மேலேயென பலஹீனமாகவும் நகர முனைந்தது ஏன் என்பதற்கு எனக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அது முடிவதற்கான சரியான எல்லையை மீறி வளர்ந்துள்ளதாய் எனக்குத் தோன்றுகிறது. அவ்வாறு வளர்வதற்கான நியாயங்களை ஒரு நவீன இலக்கியப் பிரதி கொண்டிருக்க முடியும். அப்போதும் அது தான் புனைந்துவந்த மொழியின் வலிதோடு இருக்கவேண்டும். தன்னை நீர்த்துக்கொண்டு அதைச் செய்யவேண்டியதில்லை. எங்கள் ஊரில் கொடி (பட்டம்) ஏற்றுவார்கள் முந்திய காலங்களில். மூலைக்கொடி, கொக்குக் கொடியென அவை பலவகை. கொடியின் பின்பகுதியில் நீளமான வாலொன்றை, குரங்கு வால் போலவென்று வைத்துக் கொள்வோமே, கட்டப்படும். அதுதான் கொடியின் சமநிலையைக் காத்தபடி மேலே மேலேயென கிளப்பிச் செல்வது. அது நீளமாகவோ குட்டையாகவோ இருந்தால் உயர்த்தில் மிதந்தபடியிருக்க முடியாமல் கீழும் மேலுமாய் கொடி திண்டாடிக்கொண்டிருக்கும். கூடுதலான சமநிலையிழப்பு சிலவேளை கொடியை தலைகுப்புறவாக பூமியைநோக்கி சரித்தும்விடும். கொடிக்கு மட்டுமல்ல வாலின் அளவு முக்கியமென நான் நினைக்கிறேன். தமிழுக்கு புதிய வகையினத்தின் ஒரு வரவை முன்னறிவித்த ‘விடம்பனம்’, ஓரளவு சமநிலையை இழந்தாலும், விண்ணில் இன்னும் நின்று கூவிக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கேதுவான அமைவை அது கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

ஆரம்பத்திலிருந்தே பிரதி கொண்டிருக்கும் இறுக்கம் தீவிர வாசகனையும் மலைக்க வைப்பது. அவள் தலைகீழாக மரத்தில் ஏறி இறங்குவதிலிருந்து அந்த மலைப்பு தொடங்குகிறது. அவ்வாறு ஒரு ஓணான்போல மரத்தில் ஏறிவிட முடியாதபோதும், அந்த யதார்த்தத்தனத்தை மறந்து பிரதியோடு வாசகன் ஒன்றாகி மலைக்கிறான். அந்தளவுக்கு பிரதி ஒரு வலிய, உன்னதமான மொழியைக் கொண்டிருக்கிறது. தமிழ்ப் படைப்புத் துறையில் பெரும்பாலும் நாவலிலேயே பரிசோதனைகள் நடத்தப்பெற்றிருக்கின்றன. ‘மத்தாப்பு’ என்ற பல படைப்பாளிகள் இணைந்து உருவாக்கிய இலங்கை நாவலிலிருந்து இந்தக் கணக்கீட்டைத் தொடங்கலாம். சீனிவாசன் நடராசனும் ஒரு பரிசோதனையில் இறங்குகிறார் தன் முதல் நாவல் மூலமே. அதில் அவர் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறாரென்று கருத முடியும். மூன்று விதமான எழுத்துருக்களை பிரதி பயன்படுத்தியிருக்கிறது. நாவலை இடைவெட்டும் அம்மாஞ்சியின் பகுதி சாய்வெழுத்திலும், மருதம் இலக்கியவட்டத்தின் பகுதிகள் நெடுநேர் எழுத்திலும் வருகின்றன. அனுபம் சூட்டின் சித்திரங்களுடன் கச்சிதமாக அமைந்திருக்கிறது தயாரிப்பு. அழகிய பிரதிகளோடு அனுபவிக்கும் சுகமும் அழகாகவே இருக்கும். ‘விடம்பனம்’ தன் செழுமைக் குறைவோடும் வாசிப்புக்கு சவாலான பிரதியாகவே நின்றுகொண்டிருக்கிறது.

bdevakanthan@yahoo.com