வாசிப்பும், யோசிப்பும் 121: செங்கை ஆழியான் பற்றிய நினைவுகள்… விரைவில் பூரண குணமடைய வேண்டுகின்றோம்!

செங்கை ஆழியான்செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்'‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகும் தனது பத்திக்காக எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கட்டுரையில் செங்கை ஆழியானைப்பற்றி எழுதியிருந்தார். அதிலவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அதிர்ச்சியைத்தந்தது. செங்கை ஆழியான் அவர்கள் சுகவீனமுற்று, பேசுவதற்கும்  முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டிருந்த விடயமே அது.

இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையில் செங்கை ஆழியானுக்கு (கலாநிதி. க. குணராசா) அவர்களுக்கு முக்கியமான பங்குண்டு. புனைகதை, தமிழர்தம் வரலாறு பற்றிய ஆய்வு, அரசியல் மற்றும் இலக்கிய ஆவணச்சேகரிப்பு ஆகிய துறைகளில் அவரது பங்களிப்பு முக்கியமானது.  புனைகதையைப்பொறுத்தவரையில் சமூக (வாடைக்காற்று, காட்டாறு, , வரலாறு (கடற்கோட்டை, நந்திக்கடல், கந்தவேள் கோட்டம்) மற்றும் நகைச்சுவை (ஆச்சி பயணம் போகின்றாள், கொத்தியின் காதல், நடந்தாய் வாழி வழுக்கியாறு போன்ற)  ஆகிய துறைகளில் பல முக்கியமான நாவல்களை அவர் படைத்துள்ளார். 1977 மற்றும் 1981 காலகட்டத்தில் யாழ் நகரம் பொலிஸாரினால் எரிக்கப்பட்டபோது அவற்றைப் பதிவு செய்ய வரதரின் வேண்டுகோளின்பேரில் ஆவணப்படைப்புகளாக உருவாக்கினார். அவற்றை அவர் நீலவண்ணன் என்னும் புனை பெயரில் எழுதியதாக ஞாபகம். இவரது பல குறுநாவல்கள் தமிழகத்துச் சஞ்சிகைகளில் பரிசுகளைப்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை தவிர மறுமலர்ச்சி, சுதந்திரன், மல்லிகை மற்றும் ஈழநாடு சிறுகதைகளைத்தொகுத்திருக்கின்றார்.  அத்தொகுப்புகளுக்காக நிச்சயம் இவரை ஈழத்தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும்.

இவரது நாவலான ‘வாடைக்காற்று’ ஈழத்தில் வெளியான தமிழத்திரைப்படங்களிலொன்று. அதன் மூலம் ஈழத்துத் தமிழ்த்திரைப்பட உலகிலும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இவரது மூத்த அண்ணனான புதுமைலோலனும் ஈழத்தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்த இன்னுமோர் எழுத்தாளரே. புதுமைலோலன் தமிழரசுக்கட்சிக்காக அரசியலில் ஈடுபட்டவர். காலிமுகத்திடல் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றி அடியுதைபட்டு காயங்களுக்குள்ளாகியவர்தான் அவர். அவரது மகனும் தமிழர் விடுதலைப்போராட்டத்தில் போராடி மடிந்தவர்களிலொருவர்.

என் மாணவப்பருவத்தில் நான் வாசித்த ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர் செங்கை ஆழியான். இவரது நந்திக்கடல் நூல் என்னிடமிருந்தது. சிரித்திரனில் தொடராக ‘ஆச்சி பயணம் போகின்றாள்’ நகைச்சுவை நாவல் தொடராக வெளியானபோது விரும்பி வாசித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் சிரித்திரனில் வெளியான ‘நடந்தாய் வாழி வழுக்கியாறு’, வீரகேசரி பிரசுரமாக வெளியான ‘வாடைக்காற்று’, , அவரது சிறுகதையான ஈழநாடு வாரமலரில் வெளியான ‘கங்குமட்டை’  இவையெல்லாம் என்னை மிகவும் கவர்ந்தவை. ஈழத்தமிழர்தம் வரலாறு  பற்றிய அவரது நூல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

செங்கை ஆழியான என்றதும் எனக்கு ஞாபகம் வரும் இன்னுமொரு முக்கியமான விடயம். அவரது அண்ணரான புதுமைலோலன் யாழ் நவீன சந்தைக்கு முன் நடாத்திய ‘அன்பு புத்தகசாலை’தான். என் சிறுவயதில் நான் ‘வெற்றிமணி’ சஞ்சிகையினை வாங்குவதற்காக அங்கு செல்வதுண்டு. செங்கை ஆழியானின் ‘நந்திக்கடல்’ நாவலினையும் நான் அங்குதான் வாங்கினேன்.

செங்கை ஆழியான் அவர்கள் விரைவில் மீண்டும் பூரண சுகமடைந்து எழுத்துப்பணியில் ஈடுபட வேண்டுகின்றோம்.


‘மனமேனி’ (முகநூல் பதிவு பற்றிய கருத்தொன்று)…

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்எனது ‘போரே! நீ போய் விடு! என்ற சிறுகதையினை முகநூலில் பதிவிட்டிருந்தேன். பதிவுகள் இணைய இதழிலும் பிரசுரமாகியிருந்தது. அதற்கு புதுவைப்பித்தன் (Puthuvai Piththan) என்னும் முகநூல் நண்பர் தனது கருத்தினைச்சுருக்கமாப் பகிர்ந்திருந்தார்.

அது: ‘மழையாய்ப் பொழிந்த வன்னியின் வனப்பினில் நனைந்தது
மன மேனி!’

அவரது கருத்தினைக்கீழுள்ளவாறு மாற்றியதும் அதுவோரு அற்புதமான கவிதையாகிறது. வாசித்துப்பாருங்கள்:

‘மழையாய்ப் பொழிந்த
வன்னியின் வனப்பினில்
நனைந்தது
மன மேனி!’

எனது கதை விடாது மழை பொழியும் கார்காலத்து நாளொன்றில் , வன்னி மண்ணில் நடைபெறுமொரு கதை. அந்தக் கதையில் மழைக்கும், மண்ணுக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுத்திருந்தேன். மழையினை ஒரு குறியீடாகவும் அந்தக் கதையில் பாவித்திருக்கின்றேன். ஆழ்ந்து வாசித்தால் அது புரியும். அந்தக் கதையை வாசிக்குமொருவரை அந்த மழைக்காட்சியும், மண்ணின் வனப்பும் என்னை எவ்விதம் அவை ஈர்த்தனவோ அவ்வாறே ஈர்க்க வேண்டுமென எண்ணியதன் விளைவே அவற்றின் அக்கதைக்கான முக்கியத்துவமும்.

புதுவைப்பித்தனையும் அவை அவ்வாறே கவர்ந்திருக்கின்றன என்பதை அவரது கருத்தும் புலப்படுத்துகின்றது. ‘மனமென்னும் மேடை மேலே ‘, ‘மனமொரு குரங்கு’ போன்ற திரைப்படப்பாடல்களுள்ளன. ‘மனக்கண்’ என்று அ.ந.க;வின் பிரபல்யமான நாவலுள்ளது. ‘மனக்கண்’ என்னும் படிமம் அதிகமாகப்பாவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘மனமேனி’ என்னும் படிமத்தை நான் இதுவரை வாசித்ததேயில்லை. இதுவரை நான் வாசித்திராத படிமம் ‘மனமேனி’ நீங்கள் யாராவது ‘மனமேனி’ என்னும் உருவகத்தாலான படிமத்தை வாசித்திருக்கின்றீர்களா?

கதையில் விபரிக்கப்பட்டுள்ள ‘வன்னியின் வனப்பு’ பற்றிய எண்ணங்கள் மழையாகப்பொழிகின்றன. அவ்விதம் பொழிந்த அந்த எண்ண மழையில் நீராடுகின்றது மனமென்னும் மேனி. அற்புதமான படிமம் ‘மனமேனி’. இவரது இந்தச்சிறு கவிதைக்குறிப்பிலுள்ள இன்னுமொரு நல்ல அம்சமென்னவென்றால்.. கதையில் வரும் விடயங்களையே ‘மழை, ‘வன்னி மண்’ ஆகியவற்றையே பாவித்து தனது மனமேனியினை நனைய விட்டிருக்கின்றார்.

முகநூலில் நான் பதிவுகளை இடும்போது எதிர்பார்ப்பது இதனைத்தான். பதிவொன்றினை வாசிக்காமல் முகத்துக்காக இடும் நூற்றுக்கணக்கான விருப்புகளை விட , நன்கு வாசித்து இவ்விதம் வெளிப்படும் ஓரிரு எண்ணக்கருத்துகள் மிகவும் முக்கியமானவை. அவையே கலைத்துவம் மிக்க படைப்புகளாக இன்பமளிப்பவை.

நன்றி நண்பரே!

ngiiri2704@rogers.com