வாசிப்பும், யோசிப்பும் 135: பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது ‘கருடா! செளக்கியமா?’ ருஷ்யக் கரடியைச் சீண்டியது துருக்கி!

ருஷ்ய அதிபர் புடின்துருக்கி அதிபர்அண்மையில் ருஷ்ய விமானப்படையினரின் விமானமொன்றினை துருக்கி சுட்டு வீழ்த்தியது யாவரும் அறிந்ததே. துருக்கியால் ஒரு போதுமே ருஷ்யாவுடன் நேருக்கு நேர் மோத முடியாது. இருந்தாலும் ஏன் துருக்கி இவ்வளவு துணிவாக ருஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. ருஷ்ய அதிபர் புட்டின் குற்றஞ்சாட்டுவது போல் துருக்கி திரை மறைவில் இசிஸுடன் (ISIS) நட்பாகவிருக்கிறது. அவர்கள் விற்கும் எண்ணெயினை வாங்குகின்றது. சிரியாவின் தன்னின மக்களைக்கொண்ட போராளிகளுக்கு ஆதரவளிக்கிறது. அதே சமயம் துருக்கி நேட்டோ என்னும் மேற்கு நாடுகளின் கூடாரத்தில் அங்கம்  வகிக்கும் நாடு. துருக்கிக்கும் , ருஷ்யாவுக்குமிடையிலான மோதல் வளர்ந்து ருஷ்யாவுக்கும் நேட்டோவுக்குமிடையிலான மோதலாக வெடிக்கும் ஆபத்து உண்டு.

இவ்விதமானதொரு சூழலில்தான் துருக்கி ருஷ்ய விமானத்தைச்சுட்டு வீழ்த்தியுள்ளது. இது துருக்கியுடன் நட்பாகவிருக்கும் இசிஸின் ஆலோசனையாகவிருக்க வேண்டும். துருக்கி ருஷ்ய விமானத்தைச்சுட்டு வீழ்த்துவதன் மூலம் அம்மோதலை நேட்டோவுக்கும், ருஷ்யாவுக்குமிடையிலான மோதலாக மாற்றிடலாமென்று துருக்கியும், இசிஸும் திட்டமிட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் அவர்கள் விரித்த வலைக்குள் ருஷ்யா விழவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. அது மட்டுமல்ல உடனடியாகவே ருஷ்யா சிரியாவில் இசிஸின் எண்ணெய்க்கிணறு நிலைகள் மீது தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது.

தான் நேட்டோ நாட்டின் அங்கத்தவர் என்பதனால் , ருஷ்யா தன் மீது தாக்குதலைத்தொடுக்காது என்ற நம்பிக்கையிலேயே ருஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது துருக்கி. இதே சமயம் ருஷ்யாவோ பிற நேட்டோ நாடுகளை இசிஸைத்தாக்குவதற்காகத் தன் அணியில் ஒன்றிணைப்பதில் வெற்றியடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. துருக்கி இசிஸுடன் இணைந்து செயற்படுவதை ஏனைய நேட்டோ நாடுகளும் உணர்ந்திருப்பதைத் தற்போது அவதானிக்க முடிகின்றது. இதனால்தான் உடனடியாகவே தனது நாடாளுமன்றத்தைக்கூட்டி சம்மதத்தை வாங்கிய பிரிட்டன் உடனடியாகவே சிரியாவிலுள்ள இசிஸின் எண்ணெய்க்கிணறுகளின் மீது பலத்த குண்டு வீச்சுகளை நடாத்தியிருக்கின்றது. முதல் முறையாக அமெரிக்காவும் இசிஸின் எண்ணெய்க்கிணறுகளின் மீது விமானத்தாக்குதல்களை நடாத்தியிருக்கின்றது. ஜேர்மனியும் களத்தில் இறங்கியிருக்கின்றது.

துருக்கியும், இசிஸும் போட்ட திட்டத்தை தனது இராஜதந்திர நகர்வுகள் மூலம் புடின் தனக்குச் சாதகமானதாக மாற்றியிருப்பதையே இசிஸ் நிலைகள் மீதான நேட்டோ நாடுகளின் ருஷ்யாவுடன் இணைந்த தாக்குதல்கள் புலப்படுத்துகின்றன. அதே சமயம் வர்த்தகமுட்படப் பலதுறைகளில் தங்கியுள்ள துருக்கி மீதான பொருளாதாரதடைகளையும் ருஷ்யா விதித்துள்ளது. நேட்டோவையும்,  ருஷ்யாவையும் மோத வைக்க நினைத்தன துருக்கியும், இசிஸும். ருஷ்யாவோ துருக்கியை நேட்டோவிலேயே தனிமைப்பட வைத்துவிட்டது. துருவக் கரடியுடன் மோதிய துருக்கிக்கு முதல் சுற்றில் தோல்விதான்.