வாசிப்பும், யோசிப்பும் 171: திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோமின் மறைவுச்செய்தியும், சில நினைவுகளும்! | அன்னையர் தினப்பதிவொன்று…….

– வாசித்தவை, யோசித்தவை மற்றும் வாசித்து யோசித்தவை ஆகியவற்றின் பதிவுகளிவை. –

திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோம்தமிழ்ப்படைப்புகள் பலவற்றை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்புச்செய்து , தமிழ் இலக்கியத்தை உலகளாவியரீதியில் அறிமுகப்படுத்தும் பணியினைச்செய்த திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோம் தனது எண்பதாவது வயதில் இலண்டனில் மறைந்ததாகச்செய்திகள் தெரிவிக்கின்றன. இவரது இழப்பு முக்கியமானதோரிழப்பு. ஆனால் தனது மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஆற்றிய இவரது சேவையினைத்தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும். அதே சமயம் இவரது மறைவு பற்றிய செய்தி சில நினைவுகளை மீண்டும் அசை போட வைத்து விட்டது.

தமிழ் இலக்கியத்தோட்டம் வருடா வருடம் வழங்கும் இயல் விருதான  2007ற்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருது மொழிபெயர்ப்பாளரான திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோமுக்குக் கிடைத்தது. அந்த வருடத்துக்குரிய சாதனையாளரைத்தேர்வு செய்யும் தெரிவுக்குழுவில் ஒருவராக நானுமிருந்தேன். ஏனையவர்களாக  பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி, கவிஞரும், எழுத்தாளருமான மு. பொன்னம்பலம் ஆகியோரிருந்தனர்.

நான் இவரைத்தெரிவு செய்திருந்ததற்கு முக்கிய காரணம் இவரது மொழிபெயர்ப்புச்சேவைதான்.  இன்றைய உலகில் சுமார் எண்பது மில்லியன் தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் சிதறி வாழ்ந்திருந்தும் உலக இலக்கிய அளவில் தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவம் இன்னும் பூரணமாக அறியப்படவில்லை. இந்நிலையில் தமிழ்ப் படைப்புகளை ஆங்கில மொழி மாற்றம் செய்து, அதன் மூலம் தமிழ் இலக்கியத்தின், மொழியின் பங்களிப்பை உலக இலக்கிய அரங்கில் நிறுவும் வேலையினைத் தனியொருவராக நின்று இவர் ஆற்றிவந்ததற்காகவும்,  தமிழ் இலக்கியத்தின் பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை, நவீனப் படைப்புகளை, தமிழின் நவீன நாடக முயற்சிகளை, பெண்ணியம் மற்றும் தலித் இலக்கியப் படைப்புகளையெல்லாம் ஒரு பரந்த அளவில் மொழிபெயர்த்ததன் மூலம் தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தை ஒரு பரந்த அளவில் சர்வதேசமயப்படுத்தியதன் மூலம் இவர் ஆற்றியுள்ள பங்குக்காகவும் இவரது மொழிபெயர்ப்புப்பணி என்னைப்பொறுத்தவரையில் முக்கியமாகப்பட்டது.

மேலும் நவீன மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து (இளங்கோ, சீத்தலைச்சாத்தனார்  தொடக்கம் புதுமைப் பித்தன், சு.ரா, மெளனி, அசோகமித்திரன், நா.முத்துசாமி, பாமா என நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் வரை) அவ்வப்போது படைப்புகளை மொழிபெயர்த்துத் தமிழ் இலக்கியத்துக்குச் சேவையாற்றிவந்த திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ட்ராமின் பங்களிப்பு தமிழ்ப் படைப்பாளிகளின் பங்களிப்புக்கு எந்தவகையிலும் குறைவானதல்ல என்பது என் கருத்து. பாமாவின் ‘கருக்கு’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக திருமதி லக்சுமி ஹோல்ஸ்ட்ராம் 2000ஆம் ஆண்டிலும் , அம்பையின் ‘காட்டில் ஒரு மான்’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக 2006 ஆம் ஆண்டிலும் Crossword  விருதினைப் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவரது தெரிவு காரணமாக இயல் விருது எழுத்தாளர் ஜெயமோகனின் பலத்த கண்டனத்துக்கு அச்சமயம் உள்ளாகியது. அதனைத்தொடர்ந்து இணையத்தில் இயல் விருது என்றொரு பெரியதோரு விவாதமே நடைபெற்று இறுதியில் அவரது ‘இயல் விருதின் மரணம்’ என்னும் கட்டுரையுடன் ஓய்ந்தது. இவையெல்லாவற்றையும் திருமதி லக்சுமி ஹோல்ஸ்ட்ரோமின் மறைவுச்செய்தி மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டது.


அன்னையர் தினப்பதிவொன்று…….


திருமதி நவரத்தினம்அம்மாவின் நினைவு ஒரு நாளில் மட்டுமே நினைவுக்கு வருமொன்றல்ல. சுவாசிக்கும் மூச்சைப்போன்றது அது. இருக்கும் வரை எம் நெஞ்சில் இருக்கும் நினைவு அது.


அம்மாவை நினைத்ததும் என் நினைவுக்கு வரும் மறக்க முடியாத நினைவுகளிலொன்று: அப்பொழுது வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலகட்டம். அம்மாவோ அங்கு ஆசிரியையாகப் பணிபுரிந்துகொண்டிருந்தார்.


நாங்கள் அப்பொழுது வசித்ததோ பட்டாணிச்சுப்புளியங்குளத்தை அண்மித்துள்ள குருமண்காட்டுப்பகுதியில். மன்னார் றோட்டிலிருந்து செல்லும் ஒற்றையடிப்பாதையில் சில வீடுகளே இருந்தன. கானகத்தின் மத்தியில் அமைந்திருந்த பகுதியாகக் குருமண்காடு விளங்கிய காலகட்டம் அது. மன்னார் றோடும், குருமண்காட்டினூடு செல்லும் ஒற்றையடிப்பாதையும் சந்திக்கும் இடத்தில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான சுடுகாடிருந்தது.


வவுனியா மகா வித்தியாலயத்துக்கும், குருமண்காட்டுப்பகுதிக்குமிடையில் குறைந்தது இரண்டு மைல்களாவது தூரமிருக்கும்.


சரஸ்வதி பூசை நடைபெறும் சமயங்களில் சில தடவைகள் நிகழ்ச்சிகள் முடிவடைய இரவு ஒன்பதைத்தாண்டி விட்டிருக்கும். அப்படியான சமயங்களில் நாங்கள் அம்மாவுடன் ஒண்டியபடி , கவிந்து கிடக்கும் இரவினை ஊடறுத்துச்செல்லும் ஸ்டேசன் றோட்டினூடு குருமண்காட்டினை நோக்கி நடந்து செல்வோம். அச்சமயங்களில் அம்மா ‘சிவசிவா’ என்று ஜெபித்தபடியே வருவா.


நத்துகள் கத்தும் இரவினில் , வெளவால்களின் படையெடுப்பில் நகர் ஆட்பட்டிருக்கும் தருணத்தில், இருண்டிருக்கும் நகர் மனித நடமாட்டமேயற்றுக்கிடக்கும். இரவு வானிலோ நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும்.


பண்டாரிக்குளத்தைக்கடக்கையில் அப்பகுதியில் இருக்கும் வர்த்தக நிலையங்களெல்லாம் மூடிவிட்டிருக்கும். ஆங்காங்கே வீதியோரங்களில் படுத்திருந்தபடி அசைபோடும் மாடுகளின் அசைவுகளை மட்டுமே உணர்ந்தபடி நடந்து சென்றுகொண்டிருப்போம்.


அந்தப்பயணத்தில் குழந்தைகளான எமக்கு மிகவும் அச்சத்தினை ஏற்படுத்தும் பகுதி குருமண்காடும், மன்னார் றோடும் சந்திக்கும் பகுதிதான். அச்சந்தியிலிருந்த சுடலையும், அவ்வப்போது அங்கிருந்து கேட்கும் நரிகளின் ஊளையிடும் ஒலிகளும்தாம். மேலும் அப்பகுதியிலிருந்த பெரியதொரு பாம்புப்புற்றும் எமக்கு அச்சத்தினைத்தருமொன்று. அதனைக்கடக்கையில் தாழம்பூ வாசனை மணக்கும். நாகபாம்பு அங்கு வசிப்பதால்தான் அந்த வாசனை வருகிறதென்று கூறுவார்கள். ஆனால் அம்மாவோ எந்தவித அச்சமுமில்லாமல் ஜெபித்தபடி எங்களைக் கூட்டிக்கொண்டு செல்வார்.


இப்பொழுது நினைத்தாலும் அந்த நினைவுகள் அம்மாவை நினைக்கும் தருணங்களெல்லாம் ஞாபகத்துக்கு வரும். கூடவே இன்னுமொரு நினைவும் தோன்றும். ஒரு பெண் தன்னந்தனியாக , இரவினில் தன் குழந்தைகளுடன் நடந்து செல்லக்கூடியதாக , எந்த வித ஆபத்துகளும் ஏற்படாத வகையில் அந்த நகர் அப்பொழுது இருந்தது. ஆனால் நாகரிகத்தின் உச்சாணிக்கொப்பில் இருப்பதாக மானுடர் பெருமைப்படும் இன்று யாராவது அவ்விதம் எந்த நகரிலாவது நடந்து செல்ல முடியுமா என்ன?


இது போல் பல நினைவுகள் அம்மாவை நினைக்கும்போது நெஞ்சினில் படம் விரித்தாடுகின்றன.