– அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்) பற்றிய சிறு குறிப்புகளிவை. –
அது ஒரு காலம். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் றீகல் (வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்திருந்த றீகல் இப்பொழுது இல்லை), மனோஹரா தியேட்டர்களில் மட்டுமே அதிக அளவில் ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் அதில் ரியோ திரைப்பட அரங்கும் சேர்ந்து கொண்டது. யாழ் நகர மண்டபத்தின் பகுதியே அவ்விதம் ரியோ தியேட்டராக மாறியது. ஆங்கிலப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகள் பாடசாலை மாணவர்களால் நிறைந்திருக்கும். கலரி, இரண்டாம் வகுப்பு மட்டுமே எப்பொழுதும் நிறைந்திருக்கும். பாடசாலை விட்டதும் றீகலுக்கும், மனோஹராவுக்கும் மாணவர்கள் படையெடுப்பார்கள். அன்று பார்த்த ஆங்கிலப் படங்கள் பல இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன. அத்திரைப்படங்களினூடு எனக்கு அறிமுகமான நடிகர்கள் பலர். அந்தனி குயீன், சாள்டன் கெஸ்டன் (இவர்களெல்லாரும் என் அப்பாவின் காலகட்டத்து நடிகர்கள். என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள். எங்கள் காலகட்டத்திலும் நடித்துக்கொண்டிருந்தார்கள்.), மைக்கல் கெயின், ஜான் வெய்ன், கிறிஸ்தோபர் லீ, லீ வான் கிளீவ், ஜீன் போல் பெல் மாண்டோ , யூல் பீரயினர், சீன் கானரி (ஷான் கானரி), ஜீனா லொல்லோ பிரிஜிடா (இவரது ஒரேயொரு படத்தைத்தான் பார்த்திருக்கின்றேன். அது விக்டர் ஹியுகோவின் புகழ் பெற்ற நாவலான The Hunch Back a Notre Dame , தமிழில் அதன் தழுவல் கல்யாணகுமார் நடிப்பில் மணியோசை என்று வந்தது.), உர்சுலா அன்ரெஸ், சார்ள்ஸ் பிரோன்சன், அலன் டிலோன், ஜூலியனா ஜெம்மா, கேர்க் டக்ளஸ், ஹென்றி ஃபொண்டா, ஹரி கூப்பர் (இவர் எங்களது அப்பாவின் பால்ய காலத்து நாயகர்களில் ஒருவர்; எங்களது காலத்திலும் இவரது புகழ்பெற்ற திரைப்படமான High Noon திரையிட்டபோது பார்த்திருக்கின்றேன்.), கிரகரி பெக், கிளிண்ட் ஈஸ்ட்வூட், டெலிச விலாஸ் என்று பெரியதொரு நடிகர்/ நடிகைகளின் பட்டாளம் அறிமுகமானது அக்கால கட்டத்தில்தான். சிசில் டிமில் (Cecil DeMille ) ஹாலிவூட்டின் புகழ்பெற்ற தயாரிப்பாளர்; இயக்குநர்; வசனகர்த்தா. ‘பென்ஹர்’ , ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ , ‘த கிரேட்டஸ்ட் ஷோ ஒன் ஏர்த்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தவர். இவரது மகளே அந்தனி குயீனின் முதல் மனைவி என்று அப்பா அடிக்கடி கூறுவார்.
இவ்விதமாக அன்று பார்த்த ஆங்கிலப் படங்கள் பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியவையாக விளங்கின. ஜேம்ஸ் பான்டின் துப்பறியும் படங்கள், ஆல்ஃபிரெட் ஹிட்ஷாக்கின் திகில் படங்கள் (‘சைக்கோ திரைப்படத்தை அந்த வயதிலேயே பார்த்திருக்கிறேன்.), திகில் மிகுந்த பேய்ப்படங்கள் (கிறிஸ்தோபர் லீ டிராகுலாவாக வரும் திரைப்படங்கள்), வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைப் படங்கள் (It is a mad mad mad wordl திரைப்படத்தை இப்பொழுது நினைத்தாலும் புன்னகை அரும்பும். அவ்வளவுக்கு வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த படம்; மனோஹராவில் பார்த்தது), கானகத்து மிருகங்களைப் பற்றிய படங்கள் (ஜான் வெயினின் ‘ஹட்டாரி’ , ஆபிரிக்கன் சவாரி போன்ற படங்கள். ஹட்டாரிக்குப் பாடசாலைகளே மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம்), ‘வெஸ்டேர்ன் (அல்லது Cow-Boy) படங்கள் (லீ வான் கிளீவ், சார்ள்ஸ் புரோன்சன், ஜான் வெயின், ஜூலியனா ஜெம்மா போன்றவர்களின் பெரும்பாலான திரைப்படங்கள்; சார்ள்ஸ் புரோன்சன் தனது ஆரம்ப காலத்தில் இவ்விதமான படங்கள் அதிகமானவற்றில் நடித்திருக்கின்றார். அதிலொன்றான The Bull of the West எங்கள் காலத்தில் திரையிட்டபோது பார்த்திருக்கின்றேன். நான் பார்த்த இவரது முதலாவது படம் ‘ரெட் சன்’, யாழ் றியோ தியேட்டரில் பார்த்தேன். பின்னர் இவர் பல்வேறு வேடங்களில் நடித்த திரைப்படங்கள் வெளிவந்தன.), அறிவியல் அல்லது விஞ்ஞானத் திரைப்படங்கள் ( சாள்டன் ஹெஸ்டனின் ‘த ஒமேஹா மான்’, யூல் பிரையினரின் ‘வெஸ்ட் வேர்ல்ட் இவை இரண்டையும் ஒருபோதுமே மறக்க முடியாது.
யூல் பிரயினர் ‘அன்ட்ராயிட்’டாக நடிக்கும் ‘வெஸ்ட் வேர்ல்ட்டில்’ பலமுறை இறந்து பிழைப்பார். ஜூராசிக் புகழ் மைக்கல் கிரைய்க்கடன் எழுதி, இயக்கிய திரைப்படமது. பொழுதுபோக்குப் பூங்காவொன்றில் அமெரிக்காவின் ஆரம்ப காலகட்டம், ரோம் காலகட்டம், ஐரோப்பாவின் மத்திய காலகட்டம் போன்றவற்றை உள்ளடக்கிய விருப்பமான காலகட்டத்துக்குரிய கம்யூட்டர் மனிதர்களுடன் நீங்கள் விளையாடலாம். அவர்களைக் கொல்லவும் முடியும். இவ்விதமான கம்யூட்டர் மனிதர்கள் ஒருபோதுமே மனிதர்களை மீறாத வகையில்தான் ‘புறோகிறாம்; எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அந்தக் கம்யூட்டர் மனிதர்கள் புறோகிறாமையும் மீறிச் செயற்பட ஆரம்,பித்துவிடுகின்றார்கள். மனிதர்களைக் கொல்லவும் செய்கின்றார்கள். இவ்விதமாகச் செல்லும் கதை. மைக்கல் கிராய்க்டனின் ஜுராசிக் பார்க்கிலும் இவ்விதமானதொரு பொழுதுபோக்குப் பூங்காவொன்று , ஃபாசிலிலுள்ள டைனோசர்களின் உயிர் அணுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு கட்டத்தில் அம்மிருகங்கள் மனிதர்களை மீறிச் செயற்பட ஆரம்பிக்கும்.), கொள்ளைகளை மையமாக வைத்து உருவான படங்கள் (டேஞ்சர் டயபோலிக், த பிரயின், த இத்தாலியன் ஜாப், த கிரேட் ட்ரெயின் ராபரி, தெயர் வாஸ் அ குரூக்ட் மான் போன்ற) என்று பல்வகையான ஹாலிவூட் திரைப்படங்களில் மூழ்கிக் கழிந்தது எங்களது பாடசாலை மாணவப் பருவம். பல திரைப்படங்கள் எங்கள் வயதுக்கு மீறிய காட்சிகள் ( நடிகையின் நீர் வீழ்ச்சியில் நிர்வாணக் குளியல், நாயக- நாயகியரின் முத்தக் காட்சிகள் போன்ற) அவ்வப்போது , ஓரிரு கணங்கள், வருவதுண்டு. அவற்றுக்காகவும் சிலர் ஆங்கிலப்படங்களுக்குப் படையெடுப்பதுண்டு.
ஹேர்க் டக்ளஸின் There was a crooked manன் மறக்க முடியாத திரைப்படங்களிலொன்று. அதில் அவர் செல்வந்தர் ஒருவரிடமிருந்து அரை மில்லியன் டாலர்கள் கொள்ளையடிப்பார். அக்கொள்ளையில் ஈடுபட்டவர்களில் அவரைத் தவிர மற்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு விடுகின்றார்கள். இவர் பணத்தைப் பெண்களின் உள்ளாடைக்குள் முடிந்து, பாம்புப் புற்றொன்றில் போட்டு விடுவார். பின்னர் இவர் கொள்ளையடித்த செல்வந்தரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அரிசோனாவிலுள்ள பாலைநிலமொன்றின் நடுவிலுள்ள சிறைக்கூடத்தில் அடைக்கப்படுகின்றார். அவரைச் சிறைப்பிடிக்கும் சிறையதிகாரியாக ஆரம்பத்தில் ஹென்றி ஃபொன்டா வருவார் (பின்னர் ஏற்கனவே இருந்த சிறை வார்டனாக வருவார்). சிறையிலிருந்த வார்டனுக்கு ஹேர்க் டக்ளஷின் பணத்தைப் பங்கு போடவேண்டுமென்று ஆசை. அதற்காக அவர் ஹேர்க் டக்ளசுடன் திட்டமிடுகையிலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றார். அதன் பின்னர் புதிய வார்டனாக வருகின்ரார் ஹென்றி ஃபொன்டா. பின்னர் சிறையை உடைத்து ஹேர்க் டக்ளஸ் தப்பிச் சென்று பாம்புப் புற்றிலிருந்து பண முடிப்பை எடுத்து, மகிழ்ச்சியுடன் திறக்கையில் எதிர்பாராத வகையில் அதற்குள்ளிருந்த பாம்பு பாய்ந்து இவரைக் கொத்திவிடவே இறந்து போகின்றார். இவரைப் பின்தொடர்ந்து வரும் வார்டன் ஹென்றி ஃபொன்டா இவரது உடலையும், பண முடிப்பையும் எடுத்துக்கொண்டு சிறைச்சாலைக்குச் செல்கின்றார். சென்றவர் ஹேர்க் டக்ளசின் உடலைப் போட்டுவிட்டு, பணமுடிப்புடன் மெக்சிக்கோவுக்குத் தப்பிச்செல்கிறார். ஹேர்க் டகள்சின் பாம்புப் புற்றுக்குள்ளிருந்த பண முடிப்பை எடுக்கும் போது எதிர்பாராத விதமாக அதனுள்ளிருந்த பாம்பு பாய்ந்து கொத்தும் கட்டத்தில் திரையரங்கு அதிர்ச்சியில் ஆழ்ந்துவிடும். அந்தக் கட்டம்தான் எப்பொழுதும் இந்தப் படத்தைப் பற்றி எண்ணுகையில் நினைவுக்கு வரும்.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற நாவல்களிலொன்றான Walk About என்பதை அடிப்படையாக வைத்து உருவான திரைப்படம். ஒரு பதின்ம வயது வெள்ளியினத்துச் சிறுமியும், அவளது இளைய தம்பியும் ஆஸ்திரேலியப் பாலை வனத்தில் வழிதடுமாறிச் சிக்குண்ட நிலையில் (சுற்றுலாவுக்காக அழைத்து வந்த அவர்களது தந்தை அவர்களைச் சுட்டுக்கொல்ல முற்படுகையில் இவர்கள் இருவரும் தப்பிச் செல்கின்றார்கள்; தந்தை காருக்குத் தீ வைத்து விட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொல்கின்றார்), அவர்களுடன் சேரும் ஆஸ்திரேலியவின் பூர்விகக் குடி இளைஞனொருவனும் சேர்ந்து கொள்கின்றான். இவர்கள் மூவரும் அப்பாலை வனப் பிரதேசத்தில் தப்பிப் பிழைத்தலுக்காக நடத்தும் போராட்டம் பற்றிய படம். என் மனதில் பசுமையாக நிற்கும் ஆங்கிலப் படங்களில் Walk About ற்கு முக்கிய இடமுண்டு.