வாசிப்பும், யோசிப்பும் 238 : சுரதாவும், ஆசிரியப்பாவும்..; கவிதை: ஒரு சிற்றுலகப்பறவையின் பேருலகம்; கூத்தாடி அரசியல்; மனிதாபிமான நோக்கில் அணுகுவோம்!!

கவிஞர் சுரதாஅண்மையில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் முன்பொருமுறை அமரர்களான சோவுக்கும், கவிஞர் சுரதாவுக்குமிடையில் கவிதை பற்றி நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களைக் குறிப்பிட்டு, கவிஞர் சுரதா சோவின் கவிதை பற்றிய கூற்றுக்கெதிராக எழுதிய கவிதையினையும் தனது முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். ‘பழுதென்ன கண்டீர் என் பாட்டில்?’ சுரதா எழுதிய கவிதையின் இடையில்

“ஆனந்த விகடனில்யான் எழுது கின்ற
ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை
ஊனமுண்டா? ஓட்டையுண்டா? “

என்று குறிப்பிட்டிருப்பார்.

அது பற்றிய என் கருத்தினைப் பின்வருமாறு முன் வைத்திருந்தேன்.அதற்கு கவிக்கோ ஞானச்செல்வன் பதிலளித்திருந்தார். ஒரு பதிவுக்காக அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

கிரிதரன் நவரத்தினம்: “ஆசிரியப்பாவில் எதுகை, மோனை அவசியமில்லை. இயல்பாக இருந்தால் நல்லது, ஆனால் அவசியமில்லை. ஆசிரியப்பாவில் முக்கியமானது பாவிக்கப்படும் சீர்களும் (பெரும்பாலும் தேமா, புளிமா போன்ற ஈரசைச்சீர்களாக இருக்க வேண்டும்) . தளைகளும் (பெரும்பான்மையாக நேரொன்றிய ஆசிரியத் தளையும் நிரையொன்றிய ஆசிரியத் தளையும் வரவேண்டும் ஆனால் வஞ்சிச்சீர்கள் வரவே கூடாது). எதற்காகக் கவிஞர் சுரதா ‘ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை ஊனமுண்டா? என்று கேட்கின்றார் இங்கே?”

கவிக்கோ ஞானச்செல்வன்: எதுகைமோனை அகவற்பாவுக்கு அவசியமில்லைதான்.அமைந்தால் சிறப்பேயன்றிக் குறைவில்லை.பொதுவாக யாப்பு எனும்போது முதலில் நினைப்பது எதுகை மோனை. அதைச்சுட்டிய சுரதா வரியில் தாழ்ச்சியில்லை. “எது கைக்கு வந்ததோ எதுகை எனப்போட்டு மதுகை அதுவின்றி மனம்போன போக்கினிலே” எழுதாமலிருந்தால் சரி. (மதுகை-வலிமை).

கவிதை: ஒரு சிற்றுலகப்பறவையின் பேருலகம்!

சிற்றுலகப்பறவையின் பேருலகம்!

அடியே! நீ கூறினாய்
உன் உலகம் மிகச்சிறியதென.
அது ஒரு சிறு வட்டமென.
என் உலகமோ மிகவும்
விரிந்தது; பரந்தது.
எல்லைகளற்ற
காலவெளியில் எந்நேரமும்
சிறகடிக்குமொரு பறவை
நான்.
உன் சிற்றுலகில்
எல்லைகளற்றுப் பறக்க
விழையும்
எனக்குமோரிடம்
நட்பென்று தந்தாய்,
சிற்றுலகப்பறவையே
எத்துணைப் பெரிய உள்ளமடி\
உனக்கு.

கூத்தாடி அரசியல்..

பாரதிராஜா

கூத்தாடிகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று
கூத்தாடி பாரதிராஜா அறிக்கையாம்.
கூத்தாடிகள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால்
கூத்தாடியான இவர் அரசியல் பேசலாமோ?
இது எப்படி இருக்கு ?

{ *என்னைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு எத்தொழில் செய்யும் மானுடரும் வரலாம்)

 

மனிதாபிமான நோக்கில் அணுகுவோம்!

மனிதாபிமான நோக்கில் அணுகுவோம்!அண்மையில் தென்னிலங்கையில் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் நூற்றுக்கணக்கில் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். மானுட அழிவுகள் பற்றி முகநூலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் பல இனரீதியில், இனவாதம் மிக்கவையாக இருப்பது மிகவும் துரதிருஷ்ட்டமானது. மானுட அழிவுகளை மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் அணுகும் பண்பினை நாம் இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லையென்பதையே இவ்வகையான கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன. மானுடர்கள் தமக்குள் நிலவும் பல்வேறு வகையான பிரிவினைகள் காரணமாக ஏற்படுத்தும் அழிவுகள் காரணமாக நாடோறும் பல்லாயிரக்கணக்கில் மானுடர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றார்கள். அவற்றுக்கெதிராக, அனைத்து மானுடர்களின் உரிமைகளுக்காகவும் நீதி கேட்டுப் போராடும் நாம், இயற்கை அழிவுகளினால் பலியாகும் மானுடர்களின் அழிவுகளை இனியாவது மனிதாபிமானத்துடன் அணுகுவோம். மரண வீட்டில் ஏற்பட்ட இழப்புகளை, அவற்றால் துயருறும் உறவுகளை நினைவு கூர்வோம். இயலக்கூடிய உதவிகளைச் செய்வோம்.

இது போல் இன்னுமொரு நிகழ்வு பற்றியும் பலர் தெரிவித்திருந்த கருத்துகள் எவ்வளவுதூரம் நாம் இன்னும் மத, இன ரீதியாகப் பிளவு பட்டிருக்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டின. திருமலையில் தமிழ்ச்சிறுமிகள் பாலியல் வன்முறைக்குள்ளாகியுள்ளதாகவும், அதனைப்புரிந்தவர்கள் முஸ்லீம் இளைஞர்கள் இருவர் என்றும் வெளியான செய்திகளுக்குக் கருத்துகளைத்தெரிவித்திருந்த பலர் அனைத்து முஸ்லீம் இன மக்களையும், அவர்களது மதத்தினையம் புண்படுத்தும் வகையில் தமது கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள். இரு மனிதர்கள் புரிந்த சமூக விரோதச் செயலுக்கு எதிராகக் கருத்துக்கூறுவதற்குப் பதில் தமிழ், முஸ்லீம் மக்களை இன, மதரீதியாகப் பிளவுபடுத்தும் இவ்விதமான கருத்துகளை வெளியிடுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறுமிகளுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும், அச்சிறுமிகள் மீது வன்முறையினைப்புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தபட்டுத் தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும் . இதுவே அனைவரினதும் நோக்கமுமாகவும் இருக்க வேண்டும்.

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் மானுட அழிவுகளை, மானுடர்கள் மத்தியில மானுடர்கள் மானுடர்கள் மீது புரியும் சமூக வன்முறைகளை இன, மத, மொழி போன்ற பிரிவுகள் நோக்கில் அல்லாது, மனிதாபிமான நோக்கில், மானுட உரிமைகளுக்கான நீதி வேண்டிய நோக்கில் அணுகும் பண்பினை நாம் வளர்த்துக்கொள்வோம்.