ஈழத்தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆளுமைகளிலொருவரான கவிஞர் இ.முருகையன் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மறைந்து ஒரு மாதம் கழிந்த சூழலில் அ.ந.க. நினைவாகக் ‘கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)’ என்னும் கவிதையொன்றினை மார்ச் 14, 1968 தினகரன் பத்திரிகையில் எழுதியுள்ளார். மிகவும் சுவையான நினைவு கூரல். கவிஞரின் கனவில் ஒரு மாதம் முன் மறைந்த அ.ந.க தோன்றுகின்றார். நோய்வாய்ப்பட்டு மறைந்த அ.ந.க தேகசுகத்துடன் தோன்றுகின்றார். “நோயெல்லாம் தீர்ந்து மாயமாய் மறைந்த யாக்கைய ராகி இருந்தார்” அ.ந.க. அவருடன் கவிஞர் கதைக்கத் தொடங்கினார்.
“இப்போ தெப்படிச் சுகம்?” எனக் கேட்கின்றார். அதற்கு அ.ந.க
அதற்கு அ.ந.க “நல்ல சுகம்” என்று நவில்கின்றார்.
கவிஞருக்கோ ஒரு மாதத்தின் முன் “அன்பர், சுவைஞர், ஆதரவாளர் துன்ப முகத்தராய்ச் சூழ்ந்து நிற்கையில், மூண்டெரி சூழ்ந்து முறுகிப் படர அன்னார் உடலம் தகனம் ஆனமை” நினைவுக்கு வருகின்றது. இருந்தாலும் அ.ந.க.விடம் எப்படி அதை கூறுவதென்று கவிஞருக்கு ஒரு தயக்கம். கவிஞர் முன் தோன்றிய அ.ந.க.வே செளக்கியம் என்று கூறும்போது எவ்விதம் அவரது உடலம் சிதையில் எரிந்ததை எடுத்துக் கூறுவது? இருந்தாலும் சொல்லாமலிருப்பதும் நல்லது அல்லவே. தயக்கத்தை நீக்கியவராகக் கவிஞர் அ.ந.க.விடம் கூறுகின்றார்: “உடலம் எரிந்ததை நான் கண்டேன்!”
இதற்கு அ.ந.க என்ன பதிலைக்கூறுகின்றார் தெரியுமா? கவிஞரின் வரிகளிலேயே படிப்போமா?
“இதற்கு விடையாய்க்
கலைஞர் சொன்ன பதிலைக் கேள்மினோ:
உடலம் எரிந்ததும் உண்மை தான். ஆயினும்
என் உட லாலே வீசப் பட்ட
மின்காந்த விம்ப மீதிலே, டாக்டர்
ஒப்ப ரேஷன் ஒன்றை ஆற்றினார்.
அதன் பின் எனக்கு நோய் அனைத்தும் முழுச் சுகம்”
அ.ந.க.வின் இப்பதிலுடன் கனவு நிலை நீங்கி நனவுலகுக்கு வருகின்றார் கவிஞர் இ.முருகையன். கவிஞரின் கனவில் தோன்றும் அ.ந.க கூறும் இப்பதில் என்னை மிகவும் கவர்ந்தது. அ.ந.க.வின் ஆளுமையினை எடுத்தியம்புவது. ‘எதிர்காலச்சித்தன் பாடல்’ என்னும் சிறந்த அறிவியல் மிகுந்த கவிதையினைத் தந்த கவீந்திரன் (அ.ந.க) நிச்சயம் இவ்விதமொரு அறிவியல் பூர்வமான பதிலைக் கூறியிருக்கக் கூடும்தான். அ.ந.க.வின் உடல் சிதையில் எரிந்ததைக் கூறிய கவிஞர் முருகையனைப்பார்த்து அ.ந.க. கூறுவதாகக் கவிஞர் சித்திரித்துள்ள பதிலில் தொனிக்கும் அறிவியல் என்னை மிகவும் கவர்ந்தது. கவிஞரின் கற்பனைச்சிறப்பினையும் கூடவே வெளிப்படுத்துவது. அ.ந.க கூறுகின்றார் ‘உண்மைதான். என் உடல் எரிந்தது உண்மைதான். அவ்விதம் எரிந்தபோது வெளிப்பட்ட மின்காந்த அலைகளின் விளைவாகத் தோன்றிய விம்பத்தின் மீது டாக்டர் ‘ஒப்பரேஷன்’ செய்து மீண்டும் உயிர்ப்பித்து விட்டார்’. உண்மையில் இப்பதிலில் தொக்கி நிற்கும் உண்மை என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. ‘தொலைகாவும்’ (Teleporting) தொழில்நுட்பம் மூலம் மானுடர்களும் அலைகளாகக் (வானொலி அலைகளைப்போல்) காற்றினூடு பயணித்து மீண்டும் சுய உருவுக்கு வரும் வகையிலான தொழில்நுட்பம் (ஸ்டார் வார்ஸ் போன்ற அறிவியல் திரைப்படங்களில் வருவது போன்ற) மானுட வரலாற்றில் நிச்சயம் சம்பவிக்கும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டவன் நான். அது போல் மானுட மரணத்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாற்றும் தொழில் நுட்பமும் சாத்தியம் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் நான். அ.ந.க.வும் கூட இவ்விதமான நம்பிக்கையினைக் கொண்டிருந்தவர். ‘வெற்றியின் இரகசியங்கள்’ என்னும் தான் எழுதிய உளவியல் மற்றும் வாழ்க்கையினை முன்னேற்றும் சிந்தனைகள் மிக்க நூலில் அ.ந.க கூறியிருக்கும் பின்வரும் கூற்று அவரது சாவை வெல்லுதல் சாத்தியம் என்னும் நம்பிக்கையினை வெளிப்படுத்தும் கூற்று எனலாம்:
“எதுவும் சாத்தியம் என்று தமிழிலே பாடினவர் தாயுமானவர்: “கரடி வெம்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம், கட்செவி எடுத்தாட்ட லாம், அனல்மேல் நடக்கலாம், ஜலமேல் இருக்கலாம், தன் னிகரில் சித்தி பெறலாம், சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறீமரிது காண்’ என்று பாடினர். சிந்தையை அடக்குதலைக் கூட அரிய காரியம் என்றாரல்லாது அசாத்தியம் என்று கூறவில்லை. சிந்தையை அடக்குதல் அரிய காரியம்தான். ஆனல் அதையும் மனிதர்கள் செய்யத்தான் செய்கிறர்கள்! சிந்தையை அடக்கியவர்கள் இன்று கூட எம்மிடையில் இல்லாமல் இல்லை! முயற்சியின் பெருமையைப் பற்றி வள்ளுவர் “முயற்சி திருவினையாக்கும். முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்?? என்று கூறியிருக்கிறார். முயற்சியால் வாழ்வை வளம் பெறச் செய்யமட்டுமல்ல, சாவையும் வெல்ல முடியும்! இந்த உலகில் தம் வாழ்வை நீடிக்கவிரும்பாதவர்கள் யாரும் கிடையாது. தற்கொலையை நாடும் ஒரு சில மன நோயாளர்களைத் தவிர. வைத்தியத் துறை விஞ்ஞானிகள் இத் துறையில் ஈடுபட்டு உழைத்து வருகிறார்கள். அதன் பயனாக சாவை வெல்லும் துறையிலும் மனிதன் முன்னேற்றம் அடைந்து கொண்டேயிருக்கிறான்! மலேரியா பரப்பும் கொசுவை ஒழிக்க மனிதன் மருந்து கண்டான். அம்மை நோயைத் தடுக்க அம்மைப் பால் கட்ட ஆரம்பித்தான். உடலை ரோகங்கள் அணுகாது தடுத்துப் பலமுறுத்த விட்டமின் ஜீவ சத்துகளைக் கண்டு பிடித்தான். இக்கண்டுபிடிப்புகளால் உலகம் முழுவதிலும் மக்களின் சராசரி சாவு விகிதம் குறைந்து வருகிறது. வாழும் வயது உயர்ந்து வருகிறது. ஆம், இன்றைய உலகில் வாழ்க்கை முன்னேறிக்கொண் டிருக்கிறது. சாவு பின்னேறிக் கொண்டிருக்கிறது. மனிதனின் தாக்குதலுக்கு முன்னுல் யமனுல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சுமார் 15 வருடங்களுக்கு முன் இலங்கையில் சராசரி 40 வயதில் மனிதனை எமபுரத்துக்கு இட்டுச் சென்ற எம கிங்கரர்கள் இன்று 63 வயதுவரை காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. சீக்கிரம் மனிதன் சாவை முற்ருக வென்று விடவும் கூடும். சமீபத்தில் ஒரு சோவியத் விஞ்ஞானி “மனிதன் சாகவேண்டிய அவசியமில்லை. சாசுவத மாக சீவிக்க வழி காண்பது சாத்திமே’ என்று கூறியிருக்கிறான்! இவை எல்லாம் மனித முயற்சியால், உழைப்பால் சாதிக்கக் கூடியவற்றை நமக்குக் காட்டுகின்றன. இச் சாதனைகளுக்கு எல்லையே கிடையாது. இதுவரை மனிதன் சாதித்தவை பல. எதிர்காலத்தில் சாதிக்க இருப்பவை இன் னும் பல. உலகம் முழுவதும் வியக்கும் படியான மாபெரும் சாதனைகளைச் செய்தவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான்! மற்றவனல் எதைச் சாதிக்க முடியுமோ அதனை என்னலும் சாதிக்க முடியும்- நான் அதை விரும்பி முயற்சித்தால் என்ற எண்ணம் உள்ள எவனும் அச்சாதனையைத் தானும் புரிய முடியும்-தானும் அச்சாதனையைப் புரிந்தவன்போல் திட்டமிட்டுச் செயலாற்றினால்! பெரிய சாதனைகளைப் புரிபவர்களைக் கண்டு சிலர் மலைப்புக் கொண்டுவிடுகிறார்கள். தம்மிடமில்லாத ஏதோ அரிய சக்தி அவர்களிடம் இருப்பதாக எண்ணி அதிசயிக்கிறார்கள். அவர்கள் மனிதர்கள் அல்ல, தெய்வங்கள் என்றுகூட சிலர் நினைத்து விடுகிறார்கள். ஆனல் உண்மை என்ன? வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்று கருதப்படுபவர்களிடம் எவ்வித விசேஷ சக்தியும் கிடையாது. அடிப்படையாகப் பார்க்கப் போனல் மனிதர்கள் எல்லோருடைய சக்திகளும் ஏறக்குறைய ஒன்று போல் சமமாகத்தான் இருக்கின்றன. ஆனால் ஒரு சிலரிடம் அவை விருத்தி அடைந்தும் இன்னும் சிலரிடம் விருத்தி யடையாமலும் இருக்கின்றன.” (‘வெற்றியின் இரகசியங்கள்’ நூலில்)
எனவே அவரது அவ்வாளுமையினை உள்வாங்கிக் கவிஞர் முருகையன் இவ்விதமானதொரு நினைவுக் கவிதையை, கனவுக் கவிதையினைத் தந்திருக்கின்றார். இச்சிறப்பான அம்சங்கள் மூலம் ஈழத்தமிழ் இலக்கிய உலகில் உருவான நல்லதொரு கவிதைகளிலொன்றாக நான் கவிஞர் இ.முருகையனின் இக்கவிதையை நிச்சயம் பதிவு செய்வேன் எவ்விதத்தயக்கமுமில்லாமல்.
அக்கவிதையின் ஆரம்பத்தில் சுருக்கமாக அ.ந.க பற்றி அறிமுகமொன்றினையும் தந்திருக்கின்றார் கவிஞர்:
“கந்த சாமி இன்னார் என்பதை
அறியாதவரும் சில பேர் இதனைப்
படிக்க நேரலாம்- அவர்க்காய், இதோ இந்தக்
குறிப்பு – நன்கு கவனித்திடுக.
“மனக்கண்” எழுதி மக்களைக் கவர்ந்தவர்,
“மதமாற்றத்தின்” மனவியல் அடிப்படை
நமக்குக் காட்ட நாடகம் தந்தவர்,
“வெற்றியின் இரகசியம்” மற்றவர்க் குணர்த்தச்
சொற்றிறன் பல்கிய நற்றமிழ்ப் புது நூல்
செய்து தந்த சிந்தனை யாளர்,
கட்டுரை யாளர், திட்டம் வகுத்துக்
கலையை மதிப்பிடும் காட்சி படைத்தவர்.
“சத்திய தரிசனம்”, “நான் செய் நித்திலம்”
“எதிர்காலச் சித்தன்” முதலான கவிதைகள்
தந்த ஒருவரே கந்த சாமியாம்.
சென்ற மாதம் இயற்கை எய்திய
கவிஞர், கலைஞர் – கந்த சாமி”
கவிஞர் இ.முருகையனின் அக்கவிதையின் முழு வடிவம் இதோ:
கவிதை: ‘கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)’
– கவிஞர் முருகையன் –
நேற்றை இரவு பாதித் துயிலிலே
கந்த சாமியைக் காண நேர்ந்தது.
*
(கந்த சாமி இன்னார் என்பதை
அறியாதவரும் சில பேர் இதனைப்
படிக்க நேரலாம்- அவர்க்காய், இதோ இந்தக்
குறிப்பு – நன்கு கவனித்திடுக.
“மனக்கண்” எழுதி மக்களைக் கவர்ந்தவர்,
“மதமாற்றத்தின்” மனவியல் அடிப்படை
நமக்குக் காட்ட நாடகம் தந்தவர்,
“வெற்றியின் இரகசியம்” மற்றவர்க் குணர்த்தச்
சொற்றிறன் பல்கிய நற்றமிழ்ப் புது நூல்
செய்து தந்த சிந்தனை யாளர்,
கட்டுரை யாளர், திட்டம் வகுத்துக்
கலையை மதிப்பிடும் காட்சி படைத்தவர்.
“சத்திய தரிசனம்”, “நான் செய் நித்திலம்”
“எதிர்காலச் சித்தன்” முதலான கவிதைகள்
தந்த ஒருவரே கந்த சாமியாம்.
சென்ற மாதம் இயற்கை எய்திய
கவிஞர், கலைஞர் – கந்த சாமி)
*
அப்படிப்பட்ட கந்த சாமி
நோய் வாய்ப் பட்ட காலையில், அடங்கிச்
சக்கை ஆகி என்பு தோல் போர்த்தே
எக்கி உள் ஒடுங்கிய யாக்கையர் ஆனார்.
*
நேற்றைய இரவு பாதித் துயிலிலே
கந்த சாமியைக் கண்ட போது,
நோயெல்லாம் தீர்ந்து மாயமாய் மறைந்த
யாக்கைய ராகி இருந்தார் கலைஞர்!
வழக்கம் போல் நான் கதைக்க லாயினேன்.
*
“இப்போ தெப்படிச் சுகம்?” எனக் கேட்டேன்.
*
“நல்ல சுகம்” என்ன நவின்றார் நண்பர்.
*
எனக்கோ சொல்லவும் தயக்கம்; ஆயினும்,
சொல்லா தொழிதலும் நல்ல தல்லவே!
ஆதலால் மெல்லக் கதையைத் தொடங்கினேன்.
கனத்தையில் அன்று கண்ட காட்சி என்
நெஞ்சக் களத்தில் நிகழ்ந்தது மீண்டும்.
அன்பர், சுவைஞர், ஆதர வாளர்
துன்ப முகத்தராய்ச் சூழ்ந்து நிற்கையில்,
மூண்டெரி சூழ்ந்து முறுகிப் படர
அன்னார் உடலம் தகனம் ஆனமை
நன்றாய் எனக்கு ஞாபகம் இருந்தது.
ஆயினும், இன்றோ அவரே சொல்கிறார்
தாம் இப் போது செளக்கியம் என்று!
*
“உடலம் எரிந்ததை நான் கண்டேன்!”
என்று சொன்னேன்; இதற்கு விடையாய்க்
கலைஞர் சொன்ன பதிலைக் கேள்மினோ:
*
“உடலம் எரிந்ததும் உண்மை தான். ஆயினும்
என் உட லாலே வீசப் பட்ட
மின்காந்த விம்ப மீதிலே, டாக்டர்
ஒப்ப ரேஷன் ஒன்றை ஆற்றினார்.
அதன் பின் எனக்கு நோய் அனைத்தும் முழுச் சுகம்”
இப்படி யாக எடுத்துக் கூறினார்.
கேட்ட நானோ முழுவதும்
விளங்கிய பான்மையில் தலையசைத் தெழுந்தேன்.
நன்றி: தினகரன் மார்ச் 14, 1968.