அண்மையில் எழுத்தாளர் சோ.பத்மநாதனின் மொழிபெயர்ப்பில் வெளியான ‘தென்னிலங்கைக் கவிதைகள்’ நூலிலுள்ள சிங்களக் கவிஞர் ஆரியவன்ச றனவீரவின் (Ariyawansa Ranaweera) கவிதைகளிலொன்றான ‘இன்றைய சிங்கம்’ (Contemporary Lion) கவிதையை வாசித்தபோது பலவித எண்ணங்கள் இலங்கைக் கொடியினைப்பற்றி எழுந்தன. சோ.பத்மநாதனின் மொழிபெயர்ப்புக் கவிதையான ‘இன்றைய சிங்கம்’ கவிதை வருமாறு:
கவிதை: இன்றைய சிங்கம்
வலக்கையில் வாள் ஏந்தி
தலையைச் சிலுப்பியபடி
காற்றில் படபடக்கிறது
சிங்கராஜா
எங்கள் சின்னம்.
மகாவம்சம்:
யானையின் தலையைப்பிளக்கிறது.
தனியே அலையும் சிங்கராஜா
அதன் வீர கர்ச்சனை
அதன் இனத்துக்கு ஆறுதல்
ஆபத்து வேளையில்
தன்னினத்தைக் காக்க
தலைமை தாங்கி
முன்னே செல்கிறது சிங்கம்.
அமைதி காலத்தில்
நீர்வளத்தை வசப்படுத்தி
பயிர்பச்சை செழிக்க
பாரிய குளங்களைக் கட்டியது.
மகளுடைய விலங்கியல் நூல்:
இரவு பகலாய்
கண்ணை மூடியபடி
சோம்பி
தூங்கி வழியும்
சில அடிகள் ஓடும்
தன் இனத்தைப்புறக்கணிக்கும்
பெண் சிங்கம் கொண்டுவரும் இரைதான்
அதற்கு உணவு, ஆகாரம்.
பிற்குறிப்பு:
காற்றில் படபடக்கும் சிங்கம்
இடையிடையே எழும்புகிறது.
விலங்குநூல் சொல்லும் சிங்கங்களில்
வரலாற்றுச் சிங்கங்களும்
எஞ்சியுள்ளனவா என்று
சரிபார்க்குமாப் போல.
மூலம்: ஆரியவன்ஸ றனவீர
ஆங்கில மூலம்: ஈ.எம்.ஜீ.எதிரிசிங்ஹ
ஆங்கிலம் வழி தமிழில்: பொ.பத்மநாதன்
மேற்படி கவிதையில் இலங்கைக் கொடியில் இனக்காவலனாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் ஆண் சிங்கமானது உண்மையில் ‘சோம்பி வழியுமொரு பிராணி. தன் இனத்தைப் புறக்கணிக்கும். பெண் சிங்கம் வேட்டையாடிக் கொண்டுவரும் இரைதான் அதன் உணவு ‘ என்கின்றார் கவிஞர் ஆரியவன்ஸ றனவீர. கவிதையின் பிற்குறிப்புப் பகுதியில் கவிஞர் காற்றில் படபடக்கும் கொடியிலுள்ள சிங்கத்தின் தோற்றமானது தன் இனத்தைப் புறக்கணிக்கும் விலங்கு நூல் சிங்கங்களில் , தன்னினக்காவலனாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் வரலாற்றுச் சிங்கங்களும் எஞ்சியுள்ளனவா என்பதைப் பார்ப்பதற்காகக் கொடிச்சிங்கம் எழுந்து எழுந்து பார்ப்பதைப்போல் தெரிகின்றது என்கின்றார். அதன் மூலம் கவிஞர் என்ன சொல்ல வருகின்றார்? அதாவது வரலாற்றுச் சிங்கங்களைப்போல் உண்மைச்சிங்கங்கள் இல்லை. எனவே இயற்கையில் தன்னிடத்தைப் புறக்கணிக்கும் ஒரு மிருகத்தை எதற்காக இனக்காவலானக் கொடியில் வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்கின்றாரா? அவ்விதமே எனக்குப் புரிகின்றது.
அதே நேரம் தற்போதுள்ள இலங்கைக் கொடியிலுள்ள சிங்கமானது கடந்த காலச் சிறுபான்மையின இன அழிவுகளின்போது பெரும்பான்மையின இனவாதிகளால், அரசியல்வாதிகளால் கொண்டாடப்படுமொரு மிருகமாக இருந்ததால் , இலங்கையின் சிறுபான்மையினங்களின் அச்சங்களுக்குமுரியதொரு விலங்காக மாறியுள்ளது. உண்மையில் தற்போதுள்ள இலங்கைக்கொடியிலுள்ள நல்ல அம்சங்களை அதிலுள்ள சிங்கம் மறைத்து விடுகின்றது என்றே எனக்குப்படுகின்றது. கொடியிலுள்ள பச்சைப்பட்டை முஸ்லிம் இனத்தைக் குறிக்கின்றது. அடுத்த பட்டை (ஆரஞ்சு நிறப்பட்டை) தமிழ் மக்களைக் குறிக்கின்றது. கொடியின் முக்கால் பகுதியை எடுத்துள்ள சிங்கமுள்ள பகுதியும், வாளேந்திய சிங்கமும் சிங்களப்பெரும்பான்மையினத்தைக் குறிக்கின்றது. சிங்கமுள்ள பகுதியின் பின்னணி நிறம் இலங்கையிலுள்ள பல்வேறு மதங்களையும் குறிக்கின்றது. சிங்கத்தின் நான்கு புறங்களிலிலுள்ள நான்கு இலைகள் புத்தமதத்தின் நான்கு கோட்பாடுகளைக் குறிக்கின்றன. அக்கோட்பாடுகள்: ‘கருணா’, முதிதா, உபேக்சா & மேட்டா (Karuna, Mudita, Upeksha and Metta).
கவிஞர் ஆரியவன்ஸ றனவீர இலங்கைக் கொடியிலுள்ள சிங்கத்தைக் கேள்விக்குள்ளாக்குவதைப்போல் இலங்கையின் ஏனைய சிறுபான்மையின மக்களும் கேள்விக்குள்ளாக்குவார்கள்.
சிங்கள மக்களின் வீரத்தையும், பெருமையையும் எடுத்தியம்பச் சிங்கத்தை வாளுடன் பாவித்திருப்பதற்குப் பதில், பெரும்பான்மையினத்தையும் ஏனைய இனங்களைச் சித்திரித்திருப்பதைப்போல் நிறமொன்றினால் சித்திரித்திருக்கலாமென்று எனக்குத்தோன்றுகின்றது. இலங்கையின் சிறுபான்மையின மக்கள் அனைவருக்கும் கடந்த சோகமயமான அழிவுகள் கொடியில் வாளுடன் சிங்கத்தைப்பார்க்கையில் நினைவுக்கு வரும். புதிய அரசியலமைப்பு உருவாகும் பட்சத்தில், சிறுபான்மையினங்களின் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும் பட்சத்தில், போர்க்குற்ற விசாரணைகள் நடைபெற்று , நீதி அனைத்து மக்களுக்கும் நிலைநாட்டப்படும் பட்சத்தில் அதற்கு முதற்படியாக இலங்கையின் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவமும் நீக்கப்படுதல் அவசியமென்று எனக்குப்படுகின்றது.
ngiri2704@rogers.com