அண்மையில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னன் சங்கிலியன் பற்றிய கட்டுரையொன்றினை கனடாவிலிருந்து வெளியாகும் ‘உலகத்தமிழர்’ பத்திரிகை தனது மே 31- ஜூன்06 பதிப்பில் ‘அரசியல் கட்டுரை’யாக ‘சங்கிலியனும் சிவசேனையும்’ என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதில் ஆய்வாளர் நிலாந்தன் சங்கிலியன் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
” சங்கிலியன் முதலாவதாக யாழ்ப்பாணத்தின் கடைசி அரசன். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப்போராடி தோற்கடிக்கப்பட்ட ஒரு மன்னன். அவனுடைய அரசுதான் யாழ்ப்பாணத்தின் கடைசி தமிழ் அரசு ஆகும்….. இரண்டாவதாக சங்கிலியன் தனது சொந்த மக்களில் சுமார் 600 பேர்களை வெட்டிக்கொன்றான் என்று ஒரு குற்றச்சாட்டு. மன்னாரில் போர்த்துக்கீசரால் மதம் மாற்றப்பட்ட சுமார் 600 க்கும் குறையாத தமிழ் மக்களை சங்கிலியன் வேட்டையாடியதாக குற்றஞ் சாட்டப்படுகிறது’
சங்கிலியன் என்னும் மன்னரைப்பற்றிய சரியான விளக்கம் பொதுமக்களுக்கு வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம். ஓர் அரசியல் ஆய்வாளருக்கு இல்லாமல் போகலாமா? இலங்கைத்தமிழ் மன்னர்களின் யாழ்ப்பாண அரசின் வரலாற்றில் சங்கிலியன் என்னும் பெயரில் இருவரின் பெயர்கள் காணப்படுகின்றன. இம்மன்னர்கள் மாறி மாறி யாழ்ப்பாண அரசை ஆண்ட போது தமது பெயர்களை செகராசசேகர்ரன், பரராசசேகரன் என்னும் பட்டப்பெயர்களுடன் ஆண்டு வந்தார்கள். இவர்களில் முதலாவது சங்கிலி மன்னன் ஏழாம் செகராசசேகரன் என்னும் பெயரில் 1519 தொடக்கம் 1561 வரை நாற்பதாண்டுகள் ஆட்சியிலிருந்தவன். இவன் இவனுக்கு முன் ஆண்ட ஆறாவது பரராசசேகரனின் மூன்றாவது மனைவி மங்கத்தம்மாளின் மகனாகக் கருதப்படுபவன்.
சங்கிலி 2 சங்கிலி குமாரன் என்னும் பெயரில் 1616 தொடக்கம் 1620 வரை நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவன்.
யாழ்ப்பாண அரசர்களின் வரலாற்றைப்பற்றிய நூலான மாதகல் மயில்வாகனப்புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலானது கைலாயமாலை, வையா பாடல், பரராசசேகரனுலா மற்றும் இராசமுறை என்னும் நூல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை என்பதை யாழ்ப்பாண வைபவமாலை நூலின் பாயிரத்திலுள்ள செய்யள் கூறும். யாழ்பபாண வைபவமாலையின் காலகட்டத்தை அதன் பாயிரத்தில் கூறப்படும் ஒல்லாந்து தேசாபதியின் பெயரின் அடிப்படையில் கிபி.1736 என்று கருதலாம் என்பது சுவாமி ஞானப்பிரகாசர் போன்ற வரலாற்றறிஞர்கள் ஆகியோரின் கருத்து. ஏற்கக்கூடிய தர்க்கம்.
மயில்வாகனப்புலவர் சங்கிலியன் மன்னர்கள் இருவரின் வாழ்க்கை வரலாறுகளையும் ஒன்றாக்கிக் குழப்பியடித்த விபரங்களை யாழ்ப்பாண வைபவமாலை நூலை அக்காலகட்டத்தில் சிங்களவர்கள் மற்றும் போர்த்துக்கீசர்கள், ஒல்லாந்தர் போன்றோரின் வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் ஒப்பிட்டு, ஆராய்ந்து சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம் அண்மையில் பேராசிரியர் சிற்றம்பலம் போன்றோர் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். சுவாமி ஞானப்பிரகாசரின் ‘யாழ்ப்பாண வைபவ விமர்சனம்’ இவ்வகையில் மிகவும் முக்கியமான நூல்களிலொன்று.
யாழ்ப்பாண அரசின் பொற்காலங்களில் ஏழாம் செகராசசேகரனின் (சங்கிலி 1) காலம் முக்கியமானது. இவனது வரலாற்றை மையமாக வைத்து பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை ‘சங்கிலி’ என்னும் நாடகமொன்றினையும் எழுதியுள்ளார். 1505இல் இலங்கைக்குள் அடியெடுத்து வைத்த போர்த்துக்கீசரால் இவனிருந்தவரை ஒருபோதுமே யாழ்ப்பாணத்தைக் கைக்கொள்ள முடியவில்லை. பிறகன்சா என்னும் போர்த்துக்கீசத்தளபதியும் இவனிடம் தோற்றதாகத்தான் வரலாறு கூறுகின்றது. இவன் சீதவாக்கை மன்னன் மாயாதுன்னையுடன் இணைந்து போர்த்துக்கீசருக்கெதிராகச் செயற்பட்டதை வரலாறு எடுத்தியம்புகின்றது. இவனே மன்னாரில் மதம் மாறிய கிறிஸ்த்வர்களைக்கொன்றவன் என சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் எடுத்துரைக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் அவ்விதம் மதம் மாறிய மக்களுடனூடாகப் போர்த்துக்கீசர்கள் காலூன்றி விடுவார்கள். யாழ்ப்பாண அரசுக்கு எதிராகச் செயற்படுவார்கள் என்பதால் என்றும் அவ்வரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
இவனது பலம் காரணமாகவும், அதனால் யாழ்ப்பாண அரசை வென்று அங்கு காலூன்ற முடியாமலிருந்ததனாலும் போர்த்துக்கீசர் இவன் மேல் மிகுந்த வெறுப்பு கொண்டிருந்தனர். இவனைப்பற்றி மிகவும் கேவலமாகத் தமது வரலாற்றுக்குறிப்புகளில் குறிப்பிட்டிருப்பதைச் சுவாமி ஞானப்பிரகாசர் தனது ‘யாழ்ப்பாண வைபவ விமர்சனம்’ நூலில் குறிப்பிடுவார். இவனது பதவிக்காலம் முடிவுற்ற நிலையிலும் , தனது முதிய வயதிலும் போர்த்துக்கீசருக்கெதிராகச் செயற்பட்டதைப் போர்த்துகீசரான பாதர் குவேறாஸ் குறிப்புகளூனூடு எடுத்துக் காட்டுவார் சுவாமி ஞானப்பிரகாசர்.
இவனது காலத்துக்குப்பின் போர்த்துக்கீசரின் ஆதிக்கம் யாழ்ப்பாண அரசில் ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் போர்த்துக்கீசருடன் இணைந்து அல்லது அவர்களின் மேலாதிக்கத்தை ஏற்று ஆட்சி செய்ததாகத் தெரிகின்றது. இவர்களின் காலகட்டத்தின் இறுதி மன்னனே சங்கிலிகுமாரன். இவன் அரச வாரிசல்லனென்றும், இவனுக்கு முன் அரசாண்ட எட்டாம் பரராசசேகரனின் வாரிசு சிறுவனாக இருந்ததால் அவன் உரிய வயது வரை அவனைக்கவனிக்கத் தமையனான அரசகேசரி பண்டாரம் என்பவனை நியமித்ததாகவும் அக்காலகட்டத்தில் சங்கிலிகுமாரன் ஏனையோர் சிலருடன் இணைந்து சதி செய்து ஆட்சியைக் கைப்பற்றியதாகவும் சுவாமி ஞானப்பிரகாசரின் நூல் எடுத்துரைக்கும். இதன் காரணமாக இவனுக்கெதிரான கலவரங்கள் அடிக்கடி யாழ்ப்பாண அரசில் எழுந்ததையும், அவற்றை அடக்க இவன் தஞ்சை நாயக்க மன்னரின் படைகளை உதவிக்கழைத்ததையும் மேற்படி சுவாமி ஞானப்பிரகாசரின் நூல் எடுத்துரைக்கும். இவற்றின் காரணமாக இவனுக்கும் போர்த்துக்கீசருக்குமிடையிலான முரண்பாடுகள் முற்றி, போர் வெடித்து, தோல்வியுற்று இறுதியில் இவன் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டு கோவாவுக்கு அனுப்பப்பட்டானென்றும் அங்கு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டதாகவும் சுவாமி ஞானப்பிரகாசரின் நூல் விபரிக்கும்.
இவற்றிலிருந்து நாம் வரக்கூடிய முடிவு இதுதான். யாழ்ப்பாண அரசின் காலகட்டத்தில் சங்கிலி என்னும் பெயரில் இருவர் ஆட்சி செய்துள்ளார்கள். சங்கிலி 1 ஏழாம் செகராசசேகரன் என்னும் பெயரில் நீண்ட காலம் ஆட்சி செய்திருக்கின்றான். அடுத்தவனான சங்கிலி 2 இவனது ஆட்சிக்காலம் குறுகியது. போர்த்துக்கீசரின் மேலாதிக்கம் யாழ்ப்பாண அரசிலிருந்த காலத்தில் ஆட்சி செய்தவன். இறுதியில் அவர்களுடன் முரண்பட்டுப்போரிட்டுத் தோற்றுக் கைது செய்யப்பட்டவன். முற்றாக யாழ்ப்பாண அரசைப்போர்த்துக்கீசர் கைப்பற்றும் போது யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனாக விளங்கியவன்., அவ்வகையில் முக்கியத்தும் மிக்கவன். இவ்விரு சங்கிலி மன்னர்களுக்குமிடையில் காணப்படும் ஒற்றுமையென்னவென்றால் இருவருமே முறையாக ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் அல்லர் என்னும் குற்றச்சாட்டுத்தான். ஆயினும் இருவருமே யாழ்ப்பாண அரசின் மன்னர்கள். இவர்களில் என்னைப்பொறுத்தவரையில் ஏழாம் செகராசசேகரனான முதலாம் சங்கிலியே மிகவும் முக்கியமானவன். நீண்ட காலம் ஆட்சியிலிருந்தவன். இவன் இருந்தவரை யாழ்ப்பாண அரசில் போர்த்துக்கீசரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இவன் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையில் போர்த்துக்கீசர் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்னும் தீர்க்க சிந்தனையுடன் செயற்பட்டவன். அதனால்தான் சீதவாக்கை மன்னனான மாயாதுன்னையுடன் இணைந்து போர்த்துக்கீசருக்கெதிராகப் போராடியவன். அவ்வகையில் மிகவும் முக்கியவத்துவம் வாய்ந்த மன்னனிவனே. இன்று நினைவு கூரப்பட வேண்டியவனும் இவனே.
நிலாந்தன் போன்ற அரசியல் ஆய்வாளர்கள் முதலில் ஏற்கனவே எழுதப்பட்ட இலங்கை மன்னரின், யாழ்ப்பாண அரசின் அரசர் பற்றிய வரலாறுகளை, விமர்சனங்களை நன்கு படித்து விட்டு ஆய்வுகளைச் செய்ய வேண்டும். அரசியல் ஆய்வாளர்களென்ற பெயரிலிவர்கள் இயங்குவதால் இவர்களது ஆக்கங்களை வாசிக்கும் பொது மக்கள் , அரசியல்வாதிகள் (ஆய்வுகளற்ற 🙂 ) போன்றோர் இவர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் செயற்படுவதால் தேவையற்ற விளைவுகள் ஏற்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள சங்கிலியன் பற்றிய சர்ச்சையும் அத்தகைய ஒன்றுதான். ஏற்பட்டுள்ள தேவையற்ற விளைவுகளிலொன்றுதான்.
ngiri2704@rogers.com