வாழ்வாதாரக்கல்வியும்……வாழ்வியல் திறன்களும்…..

அறிமுகம்

- முனைவர் இரா. இராமகுமார், எம்.ஏ., எம்.எட்., எம்பில்., பி.எச்.டி.,  எம்.ஏ(வரலாறு). அக்ரி(உ)., த.பண்டிட்., டி.டி.எட்., நெட்., ஜே.ஆர்.எப்., உதவிப் பேராசிரியர் & நெறியாளர், தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் - 629“கல்லா மாந்தர் இல்லா நிலையை
காலம் தான் தந்திடுமா!
பெற்றவர் உற்றவர் மற்றவர் போற்றிடும்
மாற்றம் தான் வந்திடுமா!
கற்றவர் பெற்றிடும் கற்பனைப் பெட்டகத்தை
திறன்கள் தான் வளர்த்திடுமா!
கற்றவை பெற்றவை காகிதமாகிவிடுமா!
காலத்தால் கலை நயக் காவியமாகிவிடுமா!”

மனித வாழ்வில் உடல், உள்ளம், உணர்வு ஆகியவற்றை நலமாக வைத்துக்கொள்ளுத்ல் வேண்டும். நம்மை நாமே பரிசோதனை செய்து கொள்ளுதல் தற்காலத்திற்கு இன்றியமையானதாகும். பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து வருகின்ற மாணவர்களிடத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான குணங்கள் இரண்டறக் கலந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எதிர்மறையான குணங்களை நேர்மறையாக மாற்றிடத் தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பு, திட்டமிடுதல் போன்றவை தேவையானதாகும். சுயக் கட்டுப்பாடு, தன்னை அறிதல் மற்றும் நுண்ணறிவுடன் கூடிய சிந்தனை மூலம் ஆரோக்கியமான குணநலன்கள் உருவாகிடும். மாணவர்களின் நிறைகளையும் குறைகளையும் அடையாளம் கண்டு, ஆசிரியர் அவற்றை எடுத்துரைக்கும் போது அவர்களுடைய குறைகள் யாவும், நிறைகளாக மாற்றிட இயலும். என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம், எவ்வாறு ஊக்கப்படுத்தலாம் என்பதனை ஆசிரியர் வகுப்பறைச் சூழலில் மாணவர்களின் நலனை உற்று நோக்கி, அதன் பின்பு அறவுரைப் பகர்தல் அவசியமாகின்றது.இதன் மூலம் மாணவர்கள் தம் கருத்தையும் எண்ணங்களையும் தைரியமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் பண்பை வளர்க்க உதவிடும். இதனை செயல்படுத்திடவும், மாணவர்களிடத்து நடைமுறைப் படுத்திடவும் ஒவ்வொரு ஆசிரியர்களும் வாழ்வியல் திறன்களைக் குறித்து அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.

வாழ்வியல் திறன்கள்
கல்வியானது உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர்வதாகும். மனித வாழ்வில் கல்விக் கற்கும் காலமே வசந்தமானது. இதனை கற்பவர் உணர்வதில்லை என்பதே நிதர்சனம். திறன்கள் வெளிப்படாதவரை வாழ்வில் வெளிச்சமில்லை எனலாம்.அறியப்பட்டத் திறன்கள் அறிவினை வலுப்படுத்திட உதவும் என்பதில் ஐயமில்லை. ‘வாழ்க்கைத் திறன்கள்’ என்னும் கல்வி ஏற்பாட்டினை ,நான்கு முக்கியக் காரணிகள் நிர்ணயம் செய்பவையாக உள்ளன. அவையாவன,

1. தன்னை அறிதல்.
2. துணிந்து உரைத்தல் மற்றும் மறுக்கும் திறன்.
3. பகுத்தறியும் திறன்.
4. தொடர்புகொள்ளும் திறன்.

இத்தகைய வாழ்வியல் திறன்கள் எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்கு வலிகோலுகின்றன. ஆனல் இன்றைய கல்வி இத்தகைய திறன்களை நிறைவேற்றிடுமா என்பது இமாலயக் கேள்வியாக உள்ளது. நல்லாசிரியர் இத்தகையத் திறன்களை மாணவர்களிடையே அளவிட்டு, மதிப்பீடு செய்வதும், சிறப்பாக மாணவர்களிடையே வளர்ப்பதும் ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.

தன்னை அறிதல்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்பது வாழ்க்கையின் தத்துவமாகும். கற்கும் மாணவர் சமூகம் தன்னைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றிருத்தல் அவசியமானதாகும். தன்னுடைய நிறை குறைகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை உணர்ந்த மாணவர்கள் மட்டுமே எதிகாலத்தைத் தீர்மானிப்பவர்களாகவே மாற்றம் பெறுவர்.

துணிந்து உரைத்தல் மற்றும் மறுக்கும் திறன்
மாணவர்கள், கூற விரும்பும் கருத்துக்கள்யாவும் மிகச் சரியானது என்ற தெளிவுடன் இருப்பின், அதனைத் துணிவுடன் எடுத்துக் கூறும் ஆற்றல் இருத்தல் வேண்டும். பிற மாணவர்கள் எடுத்துரைக்கும் கருத்துகளை ஊக்குவிப்பதோடு, தவறான கருத்தாக இருப்பின் அதனை மறுக்கும் திறனையும் வளர்த்திடல் வேண்டும்.சரியான பாதையில் சென்றிடவும், நேர்முகத்தேர்வு உள்ளிட்டப் பல்வேறு தேர்வுகளை எதிகொள்ளவும் இத்தகைய திறன் கற்பவர்களுக்கு இன்றியமையாத் தேவையாகும்.

பகுத்தறியும் திறன்
மனிதன் மட்டுமே ஆறறிவுடையவன்.பகுத்தறிவு மானிடக் குலத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். மாணவர்களிடம் பகுத்தறியும் திறன் இருந்தால் கல்வியில் மட்டுமல்லாது, சமூகத்திலும் நல்லவர்களையும் தீயவர்களையும் தரம் பிரித்து அறிவதற்கு இயலும். பகுப்பாய்வுடன் நடந்துகொள்ளுதல் என்பது நல்வாழ்வுக்கு வழிவகுத்திடும்.

தொடர்புகொள்ளும் திறன்
மனிதனை மனிதனாக்கியது மொழித் தொடர்பாகும். தொடர்பில்லாச் சமூகம் விரிவான சிந்தனை ஆற்றலை வெளிப்படுத்திட இயலாது. எனவே, சமூகத்தில் மற்றவருடன் இணக்கமாகப் பழகிட , சில அடிப்படைப் பண்புகளைத் தொடர்பு கொள்ளும் திறனுக்காக வளர்த்துக்கொள்ளுதல் மாணவர்களுக்கு அடிப்படையாகுகின்றது. இன்றைய நவீன காலத்தில் குழுச் செயல்பாடு, கணினி அறிவு ஆகியவற்றை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமைகளாகவும் உள்ளன. ஆசிரியர் மாணவர்களிடம் தொடர்புகொள்ளும் திறன்களை வளர்த்திட தமது கற்பித்தல் நிகழ்வில்,

1.பிறர் கூறும் கருத்துகளை உற்று நோக்குதல்.
2.நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுதல்.
3.தன்னுடையக் கருத்தில் தெளிவாக இருத்தல்.
4.உரையாடும்போது பிறர் கண்களைப் பார்த்து, தன்னம்பிக்கையோடு உரையாடுதல். 
5.உரையாடும்போது முக பாவனைகள் மற்றும் உடல் அசைவுகள் , குரல் ஏற்றத்தாழ்வுடன் சரியான வார்த்தைகளைத் தெளிவான உச்சரிப்புடன் பயன்படுத்துதல் உள்ளிட்டவைகளை சூழ் நிலைக்குத் தகுந்தாற் போல் எடுத்துரைப்பது நலம் பயக்கும். 

குழு மனப்பான்மையை வளர்த்தல்
சமூகத்தில் குழுவிற்குத் தனிச் செல்வாக்கு உண்டு.போட்டிகள் நிறைந்த சிக்கலான சமூகத்தில் மாணவர்கள் கற்க வேண்டிய முதன்மையான செயல்பாட்டு நிலை குழுச் செயல்பாடு ஆகும் . இது, மற்றவர்களோடு பழகுவதற்குரிய நல் வாய்ப்பினையும், மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பு அளித்திடும் பண்பினையும் உருவாக்கித் தருவதாக அமையும். குழுத் தலைவனாகச் செயல்படுவதன் மூலம் மாணவன், தன் குழுவில் உள்ள பிற மாணவர்களின் திறனுக்கு ஏற்ப பணிகளைப் பிரித்துக்கொடுக்கும் திறன் பெறுகிறான். கற்றலில் பின்தங்கியவர்கள் , குழுவில் இணையும்போது தாழ்வு மனப்பான்மை நீங்கிட வழிபிறக்கும். . தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, பயமின்றி தன்னுடய சுயக் கருத்துக்களை எடுத்துரைப்பதோடு, எதிர்காலத்தில் குழுவிற்குத் தலைமையேற்றுச் செயல்படும் நிலைக்குரியவராகுவர். குழுவாக இணைந்து செயல்படும்போது, இடச் சூழல் இனிமையுடையதாக்கபடும். மன இறுக்கம் மடைமாற்றம் செய்யப்பெற்று,வளமான அமைதியுடன் சுதந்திரமாகக் கற்கக் குழுச் செயல்பாடு உதவியாக இருக்கும்.

தனித்திறனை வளர்த்தல்
ஒருவருடையத் திறமையை எவராலும் அழித்துவிட முடியாது.திறமைக்கு மதமோ மொழியே கிடையாது. திறமைக்கு வயது ஒரு தடையாக இருப்பதில்லை.கல்வியின் அடிப்படை, கற்பவர்களின் தனித்திறன்களைக் கண்டுபிடித்து வளர்ப்பதாகும். மதிப்பைக் கருத்தில் கொள்ளாமல் மதிப்பெண்ணைப் பார்க்கும் சமூகத்தில் தனித்திறன்களுக்குப் புகழ் கிடைத்திடுமா என்னும் வினாவிற்குக் கல்வியாளர்கள் விடையளிக்கத் தயங்குகின்றனர்.

மாணவர்களை மதிப்பெண் மற்றும் நினைவாற்றல் சக்தியை மட்டும் வைத்து வளர்த்திடும் கல்விமுறை சிறந்த கல்வி முறை ஆகாது. ஆசிரியர் இதனை மட்டும் வைத்து மதிப்பிடவும் கூடாது. கதை , ஓவியம் , ஒருங்கிணைப்பவர், பாட்டு, தொகுப்பாளர், நடனம் , எழுத்தாளர், தூய்மையாக்குபவர், கற்பிப்பவர், திட்டமிடுபவர், செயலாற்றுபவர், அறிக்கை தயாரிப்பவர், குழு மேலாண்மை செய்பவர் எனப் பல வகையில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கல்வி ஏற்பாட்டினை மாற்றி அமைத்திடல் வேண்டும். திறமைமிகு மாணாக்கரைக் கண்டறிந்து ஆசிரியர் அதற்கு வழிக்காட்டிடல் வேண்டும்.

பாராட்டும் பண்பை வளர்த்தல்
செய்வன திருந்த செய்; செய்ததற்கு வெகுமதி சேர் என்பது நவீன பழமொழியாகும்.பாராட்டுச் செய்யும் செயலை மென்மேலும் செய்வதற்கு உறுதுணை புரிவதாக அமையும்.கலைக்கூடமாம் கல்லூரி என்பது ஏட்டுக் கல்வியை எடுத்துரைப்பதாக மட்டுமின்றி, சக தோழமைகளுடன் இணைந்து பயிலவும் பகிர்ந்து வாழவும் விட்டுக்கொடுக்கவும் கற்றுத்தருவதாக வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களின் ஒவ்வொரு நற்செயலையும் உற்சாகப்படுத்த மறக்கக் கூடாது. ஆசிரியர் பாராட்டுவது மாணவர்களின் மனதில் பதியும். அவர்களும் குழுச் செயல்பாட்டின்போது, தங்கள் நண்பர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவர். குழுவுடன் இணைந்து செயல்பாட்டைச் செய்யும்போது, அதில் தன்னுடன் முயற்சி செய்யும் ஒரு மாணவனுக்கு, பிறர் விட்டுக்கொடுக்கும் பண்பு வளர்கிறது.

தான் படித்ததைத் தன் குழு மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்து எழுதும்போது, மேலும் அதிக மதிப்பெண் பெறுவதுடன், தான் செய்த சிறு உதவியால் மதிப்பெண் பெற்ற தன் தோழன், தோழியின் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள முடியும்.

தன்னுடன் பயிலும் மாணவர்கள், சிறு தவறு செய்தால், உடனே கேலி செய்து, வெறுத்து ஒதுக்காமல், தட்டிக்கொடுத்து, விட்டுக்கொடுங்கள் என்று ஆசிரியர் எடுத்துரைக்க வேண்டும். இதனால், அன்பான, உண்மையான நட்பைப் பெறலாம். இதனை ஆசிரியர் மாணவச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும் போது காவலனாக இருந்திடல் வேண்டும். நண்பர்களின் சின்னச் சின்ன நிகழ்வுகளையும் பாராட்டுதல் நல்ல பழக்கம் ஆகும்.இதுவே ஆரோக்கியமான நட்புக்குரியதாகும்.

நிறைவுரை
அச்சம், கோபம், கூச்சம் போன்ற மனவெழுச்சிகள் நிகழ்கால இளந்தலைமுறை மாணாக்கரிடையே நிரந்திரமாகத் தேங்கியுள்ளன.தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, பிறரின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்தல் முற்றிலுமாக நீக்கம் பெற்றுத் தற்புகழ்ச்சியும் தவறான நடத்தைகளும் மேலோங்கியுள்ளன. புன்னகையான முகம் இயந்திரமாக்கப்பட்டு, மனப்பாடக் கல்வியை மூட்டையாக சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தூய்மை ,உடைமைகளைப் பாதுகாத்தல். ஆசிரியர்களுக்கு மதிப்பு அளித்தல்.சுய மரியாதை,பெரியோரைப் பேணுதல் என்பன இலைமறை காயாக மறைந்து வருகின்றன. இது ஆரோக்கியமான நற் சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல.மனப்பான்மைகளும் மதிப்புகளும் ஒவ்வொரு தனி நபரைப் பொருத்தும் மாறுபடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.எதிர்காலச் சமூகச் சூழலையும் மாணவர்களின் மனப்போக்கையும் கருத்தில்கொண்டு, அதற்கேற்ப தலைமுறைஇடைவெளி இல்லாமல் வாழ்வியல் திறன்களை இணைக்கும் பாலமாகப் பாடத்திட்டமும் ஆசிரியரின் கற்பித்தல் திறனும் அமைந்தால் மட்டுமே புதிய சமூகம் வீறு நடைபோட்டு, முள்ளாகிய வாழ்வுப் பாதை மலராக மாற்றம் போற்றிடும் என துணிந்துரைக்கலாம்.

* கட்டுரையாளர் – – முனைவர் இரா. இராமகுமார், எம்.ஏ., எம்.எட்., எம்பில்., பி.எச்.டி.,  எம்.ஏ(வரலாறு). அக்ரி(உ)., த.பண்டிட்., டி.டி.எட்., நெட்., ஜே.ஆர்.எப்., உதவிப் பேராசிரியர் & நெறியாளர், தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் – 629 701 –

* மின்னஞ்சல் : drrksir121314@gmail.com