அன்பிற்குரிய தமிழ் நண்பர்களே! என் தந்தையாரின் ஐந்து உரைநூல்கள், இலங்கைத் தமிழ் மாணவர்களுக்குப், பாடப் புத்தகங்களாக , 1952 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இருந்தன. அவர் 1966 ஆம் ஆண்டே காலமாகிவிட்ட போதும், அவரின் இப் பாட நூல்கள், பாடவிதானங்களில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமையால், மீண்டும் மீண்டும் மீள் பிரசுரம் செய்யப்பட்டன. உங்களில் பலர் இந் நூல்களை , உங்கள் 10 ஆம், 11 ஆம், 12 ஆம் வகுப்புக்களில் படித்திருந்திருப்பீர்கள். தாம் படித்த இந்துசமயபாட நூல் , பாரதியார் பாடல்கள் விளக்கவுரை, கம்பராமாயணம் கும்பகர்ணன் வதைப்படலம், கம்பராமாயணம் – சுந்தரகாண்டம்- காட்சிப் படலமும் நிந்தனைப் படலமும், கம்பரிமாயணம் அயோத்தியா காண்டம் – மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும் போன்ற சிறந்த உரைநூல்களைப் பற்றிப் பலர், என்னுடன் மிக மிகப் பெருமையாகக் கூறியுள்ளார்கள். இந்த நூல்களை எல்லாம் , அத்துடன் என் தந்தையாரால் சேமித்து வைக்கப் பட்டிருந்த, அவரின் பல நூற்றுக் கணக்கான பத்திரிகைக் கட்டுரைகள் , அவரின் கையெழுத்துப் பிரதிகள் , அவரின் பல புகைப்படங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடைத்தற்கரிய பழம் பெரும் தமிழ் இலக்கிய நூல்கள் , போன்ற அரும் பெரும் பொக்கிசங்களை நாம் 1995 ஆம் ஆண்டுப் பேரழிவில் , குடிப்பெயர்வில் இழந்தோம்.
என் தந்தையாரின் ஆக்கங்களை, கடந்த சில வருடங்களாக நான் மிகச் சிரமப்பட்டுத் தேடியெடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இன்று நான் சில நல்லுள்ளங்களின் உதவியினால் , என் தந்தையாரின் 5 உரை நூல்களையும் எடுக்க முடிந்துள்ளது. நூலகம் தாபகர் திரு பத்மநாபஜயரின் உதவியினால் மூன்று உரை நூல்களும், எனது நண்பர் திரு அருண் மனோகரனின் உதவியால் ஒரு உரை நூலும், எனது நண்பர் திருமதி குகா நித்தியானந்தன் உதவியால் ஒரு உரை நூலும் ஆக , ஜந்து உரை நுல்களும் கிடைத்துள்ளன. இவற்றில் நான்கு நூல்கள், நூலக இணையத்தில் தற்போது பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளன. மற்றைய உரைநூல் என்னிடம் கைவசம் உள்ளது. விரைவில் நூலகம் இணையத்தில் பதிவிறக்கம் செய்ய ஒழுங்குகள் செய்யப்படும். நூலகம் இணையத்தளத்தில், வேந்தனார் அவர்களின் நான்கு உரைநூல்கள், “தன்னேர் இலாத தமிழ்” கட்டுரை நூல், கவிதைப் பூப்பொழில்(1964 & 2010), “குழந்தைமொழி”(2010” திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சி”(1962) என்பன பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளன. இவற்றை வாசித்து நீங்கள் பயனடைய முடியும்.
என்னால் தொகுக்கப்பட்டு ,2010 இல் வெளியிடப் பட்ட “வித்துவான் வேந்தனார்” என்ற நூலும் , நூலகம் இணையத் தளத்தில், எனது பெயரின் கீழ் பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளது. இந்த நூல் வேந்தனார் பற்றித் தமிழ் அறிஞர்கள், அவரது நண்பர்கள், மாணவர்கள் ஆகியோர் காலத்திற்குக் காலம் எழுதிய ஆக்கங்களின் தொகுப்பாகும். வேந்தனார் பற்றி வருங்காலங்களில் ஆராய விருக்கும் தமிழ் இலக்கிய மாணவர்கட்கும், வேந்தனார் பற்றி அறிய விரும்புவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்தரக் கூடியது. வித்துவான் வேர்தனார் எழுதிய ஆக்கங்களில், எமக்குத் தெரிந்த ஆக்கங்கள் பற்றிய விபரம், இந்த நூலில் பக்கம் 146 – 154 வரை, பட்டியலிடப் பட்டுள்ளன. இவற்றில் தினகரன் பத்திரிகைக் கட்டுரைகளில் ஓர் தொகுதியும், ஈழநாடு பத்திரிகை தொல்காப்பியக் கட்டுரைகளும், வரும் 28 சித்திரை 2019 இல், இரு கட்டுரை நூல்களாக , இலண்டனில் வெளியிடப்படவுள்ளன. இவை இலக்கியப் பிரியர்களுக்கு பெருவிருந்தாக அமையும் என்பது எனது திடமான கணிப்பாகும். மீதமுள்ள அவரின் பத்திரிகைக் கட்டுரைகளும் இரண்டு – மூன்று நூல்களாக , வருங் காலங்களில் வெளியிடப்படும். அவரின் குழந்தைப் பாடல்கள் 35 இல் 13 பாடல்களை, எனதருமைத் தமக்கையார் , இறுவெட்டில் வெளியிட்டிருந்தார். எனது கடந்த மூன்று வருட தேடல்களில், அவரின் மூன்று குழந்தைப் பாடல்கள் மேலதிகமாக , ஈழநாடு , தினகரன் பத்திரிகைகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன . ஆக அவரின் 38 குழந்தைப் பாடல்களில், இசையமைக்கப் படாத 25 பாடல்களும், தற்போது இசையுடன் இறுவெட்டில் வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அந்தவகையில் அவரின் 38 குழந்தைப் பாடல்களும் , பிள்ளைகளின்வயதிற்கேற்ப ,மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு , ஒவ்வொரு நூலுடனும் இறுவெட்டுக்களும் இணைக்கப்பட்டு, வரும் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்படவுள்ளன. இந்நூல்கள் இலங்கை, இந்தியா மற்றும் உலகெங்கும் சிதறுண்டு வாழும் நம் தமிழ் சிறார்களுக்கு மிக மிகப் பயனுள்ளதாக அமையும் என்பதில், எனக்கு எவ்வித ஜயப்பாடும் இல்லை. இவற்றில் கணிசமான பாடல்கள், கடந்த 65 வருடங்களாக, உங்களில் பலராலும், சிறுவயதில் பாலர் பாடப் புத்தகத்தில், நீங்கள் படித்த பாடல்களாகும். ( காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா, கும்பிடு நீ கும்பிடென்று குனிந்து சொல்லும் பாட்டி, சின்னச் சின்னப்பூனை, வெண்ணிலா, பறவைக்குஞ்சு, புள்ளிக்கோழி, மயில், கரும்பு தின்போம் போன்ற பாடல்கள்).
நூலகம் இணையத்தில் , வேந்தனாருக்கான தனி ஆவணப் பக்கம் ஒன்றும் திறக்கப் பட்டுள்ளது இதில் படிப்படியாக வேந்தனார் பற்றிய ஒலி – ஓளி நாடாக்களும் , அவரின் இசையோடு இசைக்கப்பட்ட பாடல்களும் பதிவிடப்படும். உங்கள் அனைவரையும் நூற்றாண்டு விழா 28.04.2019 ஞாயிறு மாலை , விழாவில் சந்திக்கும் பெரு விருப்பில் உள்ளேன்.
“வில்லுக்கு வீரன் யாரெனில் விஜயனாகும்
விறல் தமிழ் சொல்லிற்கு வேந்தன் யார்? வேந்தனார்!.
வேந்தனாரின் சொற்பொழிவுகள் சில வந்த, பத்திரிகைகள் சிலவற்றின் விபரம்.
சுதந்திரன் பத்திரிகை
1.அன்று அரசு வீற்றிருந்த தமிழன் இன்று ஆட்சிபீடம் இழந்து அல்லல் படுகின்றான்.22.04.1949
2.அக்காலத்திலும் இக்காலத்திலும் தமிழ் மக்களின் தயக்கமிகு சிந்தனைகள். 18.06.1949.
3.தில்லைச் சிதம்பரம் திறந்துவிட்ட பின்னும் தீண்டாமையுண்டா?
4.திருக்குறளை , புறநானூற்றை அளித்ண தமிழரின் மரபினர் நாங்கள். 26.09.1949
தமிழ் இளைஞன் -சஞ்சிகை.
5.சிந்திக்க மக்களுக்கு நேரம் கொடுங்கள். 11.05.1950
ஈழகேசரி பத்திரிகை
6.வீரத் தமிழ் மக்கள் 03.10.1950.
வீரகேசரிப் பத்திரிகை.
7.மலை பெயர்ந்தாலும் நிலை பெயராத வைர உள்ளம் பாய்ந்த வீரத் தமிழர். 10.09.1950
8.வள்ளுவர் தந்த தமிழ்மறை வையமெல்லாம் ஓங்குக. 17.09.1950
9.தமிழ் உள்ளவரை அடிகளின் பெயரும் புகழும் நிலைக்கும். 21.10.1950
11 நாவலர் கொண்டாட்டங்களில் அவரது அருள் ஒளியைக் காணவில்லை. 23.12.1954
தினகரன் பத்திரிகை.
10.மக்கள் வாழ்வை வளம்படுத்தும் சிந்தனை. 13.05.1951
இதில் இலக்கம் 6 , 10 இரண்டும் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. மற்ற 9 ஆக்கங்களும் தேடப் பட்டுக் கொண்டுள்ளன. எங்காவது இவற்றை எடுக்க முடியுமா?
நன்றி.
அன்புடன்
வேந்தனார் இளஞ்சேய்.
vilansei@hotmail.com