விலகிச் செல்லும் பாதை: கருணாகரனின் ‘எதுவுமல்ல எதுவும்;’

கருணாகரனின் நான்காவது கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற தலைப்பில். 108 பக்கங்கள். 56 கவிதைகள். இலங்கையிலிருந்து ‘மகிழ்’ வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதைகள் 2006 க்கும் 2008 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டுள்ளன. கருணாகரன்கருணாகரனின் நான்காவது கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற தலைப்பில். 108 பக்கங்கள். 56 கவிதைகள். இலங்கையிலிருந்து ‘மகிழ்’ வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதைகள் 2006 க்கும் 2008 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்தக் காலப் பகுதியில் போர் நடைபெற்ற ஈழப் பகுதியிலிருந்து எழுதப்பட்ட வேறு கவிதைத் தொகுதிகள் ஏதும் இதுவரையில் வந்ததா என்று தெரியவில்லை. அப்படி வேறு தொகுதிகள் வரவில்லையென்றால், இந்தக் கவிதைகளே அந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. இந்தக் காலப்பகுதியில் கருணாகரனினால், இலங்கையில், வன்னியில் இருந்து எழுதப்பட்ட இன்னொரு தொகுதிக் கவிதைகள் ஓராண்டின் முன்னர் ‘பலியாடு’ (இந்தத் தொகுதி ‘பலியாட்டின் கண்கள்’ என்றே வந்திருக்க வேண்டும் என்று கருணாகரன் சொல்கிறார்) என்ற தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலை தமிழகத்திலுள்ள வடலி என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அவற்றைத் தவிர்த்து எஞ்சிய கவிதைகள் ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

கருணாகரனின் இந்தக் கவிதைகள் எழுதப்பட்ட இந்தக் காலகட்டமானது வன்னியைப் பொறுத்த அளவில் முக்கியமானதாகும். போர் மிக உக்கிரமாக நடைபெற்ற அந்தக் காலத்தில், அந்த நிலப்பகுதியில், அந்தச் சூழலில் வாழ்ந்த கவியின் பதிவுகள் அல்லது வெளிப்பாடுகளாக இந்தக் கவிதைகள் உள்ளன. அதேசமயம், இந்தத் தொகுதிக் கவிதைகள் அத்தனையும் நாம் எதிர்பார்ப்பதைப் போல முற்றிலும் போர்க் கவிதைகளாகவோ போர் பற்றிய கவிதைகளாகவோ இல்லை. (அப்படி இருக்க வேண்டுமா என்ன? அப்படியொரு நிபந்தனையை யாரும் விதிக்கவும் முடியாது). அதாவது, நாம் எதிர்பார்ப்பதைப்போல ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைப் பரப்புக்குள்ளும் எதிர்பார்ப்புக்குள்ளும் இவை நிற்கவில்லை. எதிர்பார்ப்புகளைப் பொருட்படுத்தாமல் அவற்றுக்கு அப்பால் தன்னியல்பில் இவை இயங்குகின்றன. நம் எதிர்பார்ப்புகளை இவை நிராகரித்து விட்டு வேறு வாசல்களைத் திறந்து அழைக்கின்றன.

இலக்கியப்படைப்பானது அடிப்படையில் எந்த வரன்முறைக்குள்ளும் தேங்கிநிற்பதல்ல. அவ்வாறே அது எத்தகைய முன்னனுமானங்களையும் எதிர்பார்க்கைகளையும் எப்படியோ கடந்து விடுகின்றது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு ஒரு படைப்பு உருவாக்கப்படுமானால் அது ஒரு உயிரற்ற பண்டமாகிவிடும். சந்தையை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை ஆகிவிடும். சந்தையை மையப்படுத்தி ஆக்கப்படும் படைப்புகளுக்கு சந்தைப் பெறுமானமே எப்போதும் முதனிலைபெறும். ஆகவே, எதிர்பார்க்கைகளை நிராகரித்து விட்டுத் தன்னியல்பில் எல்லைகளைச் சிதைத்தவாறு நகரும் படைப்பே புதிதாயும் தாக்கமாயும் இருக்கும்.

இந்த வகையிலே எதிர்பார்ப்புகளைச் சிதைத்தவாறு, கருணாகரனின் சிந்தனைப் பரப்பின் விரிவையும் ஆழத்தையும் எல்லைகளாகக் கொண்டனவாக இந்தக் கவிதைகள் உள்ளன. கருணாகரனின் அக்கறைகள் அல்லது அவருடைய கவனம் என்பன இப்படித்தான் உள்ளன. ஒன்றுக்குள் மட்டும் கட்டுப்பட்டிராத இயல்பு. எந்த அடையாளங்களுக்குள்ளும் வரையறுக்கப்படாத தன்மை. ஒருங்கைச் சிதைக்கும் தன்மை. இவை அவருடைய கவிதைகளைச் சிலவேளைகளிற் பலவீனப்படுத்துகின்றன. சில வேளைகளில் அதுவே அவரையும் அவருடைய கவிதைகளையும் பலப்படுத்துகின்றது. பலவீனப்படும்போது இந்தக் கவிதைகள் சிதறல்களாக, ஒன்றினுள்ளும் வகைப்படுத்த முடியாதவையாகத் தோன்றுகின்றன. ஆகவே குறிப்பிட்ட கவனத்தைக் கோரத் தவறிவிடுகின்றன. இதை அவர் கவிதைகளைத் தொகுக்கும் முறையிற் சீராக்கலாம்.

அவருடைய கவிதைகள் பலமாகும்போது எந்த அடையாளத்துக்குள்ளும் கட்டுண்டிடாத சுயாதீனத் தன்மையையும் சுதந்திரத்தையும் இவை கொண்டிருக்கின்றன. எந்த அடையாளப்படுத்தல்களுக்குள்ளும் சிக்கிக் கொண்டு விடாமல் பரந்த வெளிப்பரப்பில் நிற்கின்றன.

கருணாகரன் எப்போதும் தன்னுடைய கவிதைகளைத் தொகுதியாக்கும்போது வகைப்படுத்தத் தவறி விடுகிறார் என்றே நம்புகிறேன். அவர் தனது அரசியற் கவிதைகளைத் தனியாகவும் பிற கவிதைகளை வேறொன்றாகவும் பிரித்திருந்தால் கூடுதலான கவனத்தையும் பெரும்பாலானவர்களுடைய ஈர்ப்பையும் பெற்றிருக்க முடியும் என்று ஒரு இலங்கை நண்பர் சொன்னதை இங்கே நினைத்துக் கொள்ளலாம். ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற இந்தத் தொகுதியிலும் நண்பர் சொன்ன விடயத்தை நாம் காணமுடியும்.

என்னதான் நாம் பொதுமைப்படுத்திய வாசிப்பு முறைமையில் ஈடுபட்டாலும் நம்மையறியாமலே நாம் வாசிக்கும் கவிதைகளை வகைப்படுத்தத் தொடங்கிவிடுகிறோம். இது கவிஞருக்கு நாம் செய்கின்ற ஒரு பிழையான செயலே என்றபோதும் இதுதான் நிலை. இதனாற்தான் எந்த முன்னனுமானங்களோடும் கற்பிதங்களோடும் தன்னுடைய விஷ்ணுபுரம் என்ற நாவலை வாசிக்க வேண்டாம் என்று தன்னுடைய வாசகர்களிடம் வினயமாக ஜெயமோகன் கேட்டார்.

ஈழக்கவிதைகள் என்றாலே அங்கேயுள்ள நிலைமைகளைக் குறித்த சேதிகள் என்ன, அவை எவ்வாறு பதியப்பட்டுள்ளன என்று நாம் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறோம். அதற்கப்பால் வேறு விசயங்களை அங்கேயுள்ள கவிஞர்கள் எழுதினால் அது நம்மை அவ்வளவாகக் கவர்ந்து விடுவதில்லை. இதற்கு நல்லதொரு உதாரணம், பலஸ்தீனக் கவிதைகள் அல்லது ஆபிரிக்கக் கவிதைகள். இந்தப் பிராந்தியத்தின் அரசியற் கவிதைகளே உலகெங்கும் அறிமுகமாகியதும் இத்தகைய பின்னணியிற்தான். அல்லது இத்தகைய உளவியலிற்தான்.

ஈழக்கவிதைகளைப் பொறுத்தவரையில் பொதுவாகவே நமக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு எப்போதுமிருப்பதுண்டு. கடந்த முப்பதாண்டுகால ஈழத்துத்தமிழ்க்கவிதைகள் அங்கே நிலவுகின்ற அரசியற் கொந்தளிப்பை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளமை இந்த உணர்வை நமக்கு ஏற்படுத்தியிருக்கலாம். ஈழக் கவிதைகளிற் பரிச்சயமுள்ள தமிழ் வாசகர்களுக்கு இத்தகைய அனுபவம் நிச்சயமாக இருக்கும். ஆங்கிலத்திலோ அல்லது பிற மொழிகளிலோ பெயர்க்கப்பட்டுள்ள ஈழக்கவிதைகளும் அங்கே நிலவும் அரசியற் போராட்டங்களையும் வன்முறைகளையுமே அதிகமாக மையப்படுத்தியுள்ளன. இதை விளங்கிக் கொள்வதற்கு நாம் இன்னொரு முனையிலிருந்து புரிதலை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையை விட்டு நீண்ட காலத்துக்கு முன்னர் வெளியேறியிருந்த பிரமிள் கூட இலங்கை நினைவுகளை அல்லது அங்குள்ள நிலவரங்களின் தாக்கத்தினால் எழுதிய கவிதைகள் அரசியற் கவிதைகளாகவே உள்ளன. பிரமிளின் ஏனைய கவிதைகளில் அவர் பின்னர் வாழ்ந்த தமிழகத்தின் அரசியலையும் அங்கே நிலவிய சமூகக் கொந்தளிப்புகளையும் நாம் காணமுடியாது. இலக்கிய ரீதியாகவும் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகள் பற்றிய மோதல்களின் பதிவுகளாகவும் அவர் சில அதிரடிக்கவிதைகளை எழுதியுள்ளரே தவிர, தமிழகத்தின் சமூக அரசியற் சூழலை மையப்படுத்திப் பிரமிள் எழுதவில்லை.

இவ்வாறே ஈழ நிலைமைகளைப் பற்றி தமிழகத்திலிருந்து இன்குலாப், அறிவுமதி தொடக்கம் மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா வரையில் எழுதியுள்ள அத்தனையும் அரசியற்கவிதைகளாகவே உள்ளன. அண்மையில் மனுஷ்யபுத்திரன் எழுதியிருந்த ஈழத்தைப் பற்றிய கவிதை கூட அரசியற்கவிதையாகவே உள்ளது. ஜெயமோகன் அண்மையில் மொழிபெயர்த்திருந்த ஈழம்பற்றிய சில மலையாளக் கவிதைகளும் அரசியற் கவிதைகளாகவே இருக்கின்றன. பொதுவாகவே ஈழக்கவிதைகளை அறிந்திருக்கும் எவருக்கும் அவை அரசியலை மையப்படுத்திய கவிதைகள் என்ற புரிதலே இருக்கும். அல்லது அரசியலைப் பேசுவதையே முதன்மையாகக் கொண்ட ஒரு போக்கே ஈழக்கவிதைகளின் பிரதான செயற்பாடாக உள்ளது என்ற உணர்வே ஏற்படும்.

எனவே ஈழக்கவிதைகளை வாசிக்கும் ஒருவரிடம் சில எதிர்பார்க்கைகள் முன்னேற்பாடாகவே வந்து விடுகின்றன. ஆனால், இந்த எதிர்பார்க்கைகளைக் கடந்த கவிதை முயற்சிகள் அங்கே நிகழ்ந்து கொண்டுமிருக்கின்றன. இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. ‘நீ இப்போது இறங்கும் ஆறு’ என்ற கவிதை நூல் சேரனுடைய பல கோணங்களைக் காட்டுகின்றது. கவியொருவனின் அக்கறைகளும் கவனமும் சிந்தனையும் பல கோணங்களிலானது என்பதைச் சேரன் உணர்த்துகிறார். தொடக்கத்தில் அரசியற் கவிதைகளாகவும் சமூக நிகழ்ச்சிகளின் வெளிப்படுத்துகைகளாகவும் தன்னுடைய கவிதைகளை யாத்த சேரன், அவற்றுக்காக அந்தக் கவிதைகளின் வழியாகவே அறியப்பட்டவர்@ அடையாளப்படுத்தப்பட்டவர்@ கவனப்படுத்தப்பட்டவர். அதிலும் ‘யமன்’, ‘இரண்டாவது சூரியோதயம்’ போன்ற கவிதை நூல்களே கவிதைப் பரப்பில் முக்கியமான ஒரு கவியாகச் சேரனை அறியப்படுத்தின. இந்த இரண்டு கவிதை நூல்களும் முற்றிலும் அரசியலை மையப்படுத்திய கவிதைகளையே கொண்டவை. பின்னர் வந்த ‘கானல்வரி’ என்ற தொகுதிகூட சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்திய கவிதைகளையே அதிகமாகக் கொண்டது. ஆனால், கானல்வரி ஏனைய தொகுதிகள் பெற்ற இடத்தைப் பெறவில்லை. ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்’ மறுபடியும் முற்றுமுழுதாகவே அரசியலை மையப்படுத்தியது. எனவே அரசியற் கவிதைகளுக்கூடாகவே சேரன் அதிக கவனிப்புக்குரியவரானார். ஈழ அரசியல் என்பது கொந்தளிப்பும் தீவிரமும் என்ற நிலையில் இருந்ததால் அவற்றைப் பிரதிபலித்த படைப்புகளும் அதேயளவு கொந்தளிப்பைக் கொண்டிருந்தன. இந்தக் கொந்தளிப்பைச் சரியாகத் தமது எழுத்து முயற்சிகளில் பயன்படுத்தியவர்கள் வெற்றியடைந்த படைப்பாளிகளாகினர். இதில் இன்னொருவர் வ.ஐ.ச. ஜெயபாலன். புpன்னாளில் புதுவை இரத்தினதுரை. அரசியற்கவிதைகளால் ஒரு காலத்தில் பரந்து பட்ட மக்களிடம் அறிமுகமானவர் காசி. ஆனந்தன். ஆனால், காசி ஆனந்தனின் கவிதைகள் அரசியற் சுலோகங்களைப் போலச் சுருங்கி  விட்டதால், அவருடைய அடையாளமும் இடமும் மெல்ல மெல்ல மங்கியே விட்டது.

‘சேரன் கவிதைகள் 100 – நீ இப்பொழுது இறங்கும் ஆறு’ என்ற தொகுதி சற்று மாறுபட்டது என்று பார்த்தோம். அது முன்னரே கூறியிருப்பதைப் போல பன்முகத்தன்மையுடையதாக, வேறுபட்ட கோணங்களையுடையதாக, கவியொருவரின் பன்னோக்கும் அனுபவமுமுடைத்ததாக வெளிவந்தது. இந்த நிலைக்குச் சேரன் வந்து சேர்வதற்கு அவருக்கு நீண்டகாலம் சென்றது. ஏறக்குறைய முப்பதாண்டுகள். கானல்வரியில் சில கவிதைகள் காதலையும் இளமைப்பிராயத்து நினைவுகளையும் கல்லூரி வாழ்க்கையையும் சொல்வதாக இருந்தாலும் அவை முக்கியமான வெளிப்பாடுகளாக கவனம் பெறவில்லை. ஆனால், பின்னர் சேரன் இன்னொரு தளத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, அவர் புலம்பெயர்ந்து வேறொரு சூழலில் வாழும் நிலையில், வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் இனங்காண்கிறார். அவருக்குப் பல வண்ணங்கள் புலப்படுகின்றன. ஆகவே அதன் பின்னர் அவருடைய கவிதைகள் வேறான பரிமாணங்களைப் பெறத் தொடங்கின. ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் எழுதிய, பிற்காலத்தையக் கவிதைகளில் சேரனைக் காணமுடியவில்லை என்றொரு பகிரங்க அபிப்பிராயம் பரவலாகவே உண்டு. இதற்குக் காரணம், சேரன் முன்னரைப்போல அரசியலை முதன்மைப்படுத்தி அல்லது அரசியலை மையப்படுத்தி எழுதவில்லை என்பதே. ஆனால், பின்னர் அவர் எழுதிய கவிதைகளே எனக்கு முக்கியமாகப் படுகின்றன. அவற்றில் அவருடைய மொழியும் அழகியலும் உச்சமடைகின்றன.

இது தனியே சேரனுக்கு மட்டும் நிகழ்ந்த ஒன்றல்ல. ஈழக்கவிஞர்கள் பலருக்கும் நேர்ந்த ஒரு நிலை. இதை நாம் இன்னொரு வகையிற் பார்க்கலாம். கடந்த முப்பதாண்டுகால ஈழக்கவிதைகளில் முக்கியமான இரண்டு தொகுப்புகள் எல்லோரையும் கவனப்படுத்தின. அவற்றிலொன்று ‘மரணத்துள் வாழ்வோம்’. இன்னொன்று, ‘சொல்லாத சேதிகள்’. இவை இரண்டும் அரசியலை மையப்படுத்திய கவிதைகளின் கூட்டுருவாக்கத்தினாலானவை. ஓன்று இலங்கையின் இனப்பிரச்சினையை மையப்படுத்தியது. மற்றது, பெண்ணரசியலை, பெண்களின் விடுதலையை மையப்படுத்தியது.

இவற்றைப்போலவே இந்தக் காலப்பகுதியில் வெளிவந்த பெரும்பாலான கவிதை நூல்களின் தலைப்புகளே இதற்கு மேலும் உதாரணமாகின்றன. ஈழத்தின் ஏனைய முதன்மைக் கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலனின் ‘நமக்கென்றொரு புல்வெளி’, ‘சூரியனோடு பேசுதல்’, புதுவை இரத்தினதுரையின் ‘நினைவழியா நாட்கள்’, சு.வில்வரெத்தினத்தின் ‘காற்றுவெளிக் கிராமம்’, ‘காலத்துயர்’, பா.அகிலனின் ‘பதுங்குகுழி நாட்கள்’, நிலாந்தனின் ‘மண்பட்டினங்கள்’, ‘யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே’, சித்தாந்தனின் ‘துரத்தும் நிழல்களின் யுகம்’, கருணாகரனின் ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள்’, ‘பலியாடு’ கல்வயல் வே. குமாரசாமியின் ‘மரண நனவுகள்’ எனப்பலவற்றைச் சொல்லலாம்.

ஆகவே, ஈழத்தில் அரசியலைப் பேசாத, அரசியலை மையப்படுத்தாத ஈழக்கவிஞர்கள் இல்லை என்பதே என்னுடைய கணிப்பு. ஆனால், இன்றைய தலைமுறை ஈழக்கவிஞர்கள் இதிலிருந்த சற்று விலகி வருவதையும் நாம் அவதானிக்கலாம். அவர்களுக்கு இதுவரையான இலங்கை அரசியல் போக்குகளின் அனுபவங்கள் சில கசப்பான படிப்பினைகளைத் தந்திருக்கலாம். அல்லது, அரசியற் கவிதைகளையிட்ட சலிப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும் அவர்களும் ஏதோ ஒரு நிலையில் அரசியலைப் பேசியே தீர்க்கின்றனர். இதை நாம் பஹீமா ஜஹானினும் அனாரிலும் றஸ்மியிலும் த. அகிலனினும் ஹரிகரசர்மாவிலும் என். ஆத்மாவிலும் றியாஸ் குரானாவிலும் ஏனையோரிடத்திலும் காணலாம்.

கருணாகரன், இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையில் நிற்கிறார். ஆனால், சோலைக்கிளியைப் போல அல்ல. சோலைக்கிளி எப்போதும் பொதுப் போக்கிலிருந்து வேறு படுத்திய ஒரு புள்ளியில் தன்னை நிறுத்திக் கொண்டு செயற்படுபவர். ஆகவேதான் இலங்கையில் நடந்த தமிழ் – சிங்கள முரண்பாடுகளைப் பற்றியோ தமிழ் – முஸ்லிம் பிரச்சினைகளைப் பற்றியோ அவர் எதையும் சொல்லவில்லை. ஆனால், சோலைக்கிளி முற்றிலும் தான் சார்ந்த சமூகத்தின் வாழ்க்கையையே கவிதைப்படுத்தியிருக்கிறார். 

கருணாகரனிடம் இதற்கு மாறான வேறொரு அடையாளம் தெரிகிறது. சில இடங்களில் அவர் யாரையும் உதாரணம் காட்டமுடியாத ஒரு தனி அடையாளமாகிறார். சில இடங்களில் மு.பொவின் விசாரத்தை நோக்கிச் செல்கிறார். சில இடங்களில் சேரனுக்கு அண்மித்ததாக நிற்கிறார். சில இடங்களில் இவர் நகுலனுக்கு நெருக்கமாகிறார். சில இடங்களில் பொதுப்போக்கிற் தானும் ஒரு அங்கமாகிவிடுகிறார்.

ஆனால், அவர் தனியனாக நிற்கும் இடமே இங்கே முக்கியமானது. ஒரு கவி  தன்னுடைய தனித்த அடையாளத்தின் மூலமே எப்போதும் துலங்க முடியும். இது மிக எளிய உண்மை. மாதிரிகளைச் செய்தல் மூலமும் போலச் செய்தல் மூலமும் எந்தப் படைப்பும் துலக்கமுற முடியாது. அப்படிச் செய்து எந்தப் படைப்பாளியும் முன்னகர இயலாது. சேரனுக்கும் ஜெயபாலனுக்கும் அவர்களுடைய சமகாலத்தவர்களுக்கும் ஏற்பட்ட முக்கியத்துவம் அவர்களுக்கு முந்தியவர்களைவிட வேறொன்றை, இனவிடுதலைப் போராட்ட அரசியலைப் பேசிய புதிய கவிதைகளை அவர்கள் எழுதியமையே. அதிலும் அதுவரையில்லாத முறையில் அவர்கள் அவற்றை எழுதினர். ‘மரணத்துள் வாழ்வோம்’, ‘சொல்லாத சேதிகள்’ போன்றவற்றுக்கு ஏற்பட்ட முக்கியத்துவம் அல்லது கவர்ச்சி என்பதும் இந்த அடிப்படையிலானதே.

இதற்கு ஈழக்கவிஞர்களில் அண்மைய உதாரணங்கள், சோலைக்கிளி, நிலாந்தன், அஸ்வகோஸ், சந்திரபோஸ் சுதாகர், பா.அகிலன், அனார் போன்றோர். இவர்கள் தங்களுக்கு முன்னேயிருந்தோரை விலகி இன்னொன்றைச் செய்தனர். அதையும் புதிதாய் செய்தனர். இதில் முக்கியமானவை அஸ்வகோஸ், நிலாந்தன் ஆகியோருடைய கவிதைகள். இதிலும் நிலாந்தனுடைய கவிதைகள், காவியத்தன்மை வாய்ந்தவை. நெடுங்கவிதைகள். இந்தக் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் மொழி நாடக மொழி. காலத்தை ஊடுருவி எடுக்கும் மையப்பொருள். அசாத்தியமான வேகத்தையுடைய உணர்வெழுச்சி.

அவை தமிழ்ச் சூழலில் அதிகம் கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவை. அவ்வாறே அஸ்வகோஸின் கவிதைகளும் கவனப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு கொண்டாட்டம் பலருடைய கவனத்தைக் கோரும். அத்தகையதொரு கொண்டாட்டத்தில் நிலாந்தனின் ‘மண்பட்டினங்களும்’, ‘யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே’ மற்றும் அவரால் இறுதியாக எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ‘யுகபுராணமும் அஸ்வகோஸின் வனத்தின் அழைப்பும் தமிழ்ச் சூழலில் முறையாக உள்வாங்கப்பட்டிருக்குமானால், ஈழக்கவிதைகளின் பரிமாணம் மட்டுமல்ல தமிழ்க்கவிதையின் பரிமாணங்களும் வேறாக உணரப்பட்டிருக்கும். விளைவாக மேலும் பல பரிமாணங்களும் பரிசோதனைகளும் இந்தக் கவிதைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய வாய்புகளும் ஏற்பட்டிருக்கும். ‘மண்பட்டினங்கள்’ தமிழகத்தில் வெளிவந்திருந்தபோது பலரையும் வியப்பிலாழ்த்தியது இதற்கு மேலும் ஒரு உதாரணமாகும்.

இவர்களிடமிருந்து கருணாகரன் வேறுபடும் இடமும் விலகும் இடமும் அவருடைய ‘ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்’ என்ற தொகுதியின் கவிதைகளிலேயே. அந்தத் தொகுதியிலுள்ள கவிதைகளில் ‘எனது வருகை’, ‘நகர் மீள்படலம்’, ‘விழியோடிருத்தல்’ போன்றவை முக்கியமானவை. இவை அரசியற் கவிதைகளாக இருந்த போதும் முக்கியமான வெளிப்பாட்டு அடையாளத்தைப் பெறுகின்றன. ஈழ நிலவரத்தை அறிந்தவர்களுக்கு அந்தக் கவிதைகளின் பரிமாணங்கள் புரியும். பலஸ்தீன அரசியலையப் பேசும் நிஸார் கப்பானி, அடோனிஸ் போன்றோரின் கவிதைகளை ஒத்ததாக அல்லது அவற்றுக்குச் சமாந்தரமாக இந்தக் கவிதைகளை கருணாகரன் எழுதியிருக்கிறார். இந்தத் தொகுதிக்கான விமர்சனமொன்றின்போது இந்தக் கவிதைகள் சில மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தாக்கத்தின் வெளிப்பாடுகளாக இருக்கலாம் என்ற தொனிப்பட சி.சிவசேகரம் எழுதியிருந்ததாக நினைவு.

ஆனாலும் கருணாகரன் இவற்றையும் கடந்து இன்னொரு தளத்தில் தன்னை நிலைப்படுத்துகிறார்.

‘பொறிகள் உடைபடத் திறபடும் வெளியில்
துளிர்க்கும் புன்னகையில்
குழந்தைகளின் பொம்மைகளும் உயிர்க்கின்றன
விரிகிறது காலவெளி….’

(ஒரு பயணியின் குறிப்புரை)

இந்த அடையாளத்துக்கு இன்னொரு சிறந்த உதாரணம் அவருடைய முதலாவது தொகுதியிலுள்ள ‘பரிகாசம்’ என்ற கவிதையாகும்.

பரிகாசம்
இரவின் துயரம் பகலுக்கில்லை
பகலோ
ஒளியால் நிரம்பியது
ஆனபோதும்
பகலின் மனம் சிதைந்தது
ஆரவாரங்களும் கூச்சலும்
இரைச்சலும் நிறைந்தது.

அந்தரத்தில் தொங்கும் சூரியன்
பகலின் துடிக்கும் ஆன்மா

வசவுகளாலும்
பொய்களாலும்
பகல்
சதா உதிர்ந்து கொண்டேயிருக்கிறது.

பகலின் அழிவு
ஒரு கிண்ணத்தில்
இரவாய் நிரம்புகிறது
நிரம்பும் இரவில் நுரைக்கிறது தனிமை
இரவின் தனிமையில்
வளர்கிறது முதுமை.

அது பாசாங்குகளற்றது
அமைதியும் இசையும் நிறைந்த
மாபெரும் வெளியானது.

இரவின் காட்சிகள்
அசையும் பாறைகள் போலவும்
உலவும் சிற்பங்களாயும்
மிளிரும் உருவங்கள்

இரவின் மனமோ
முகையவிழும் மலரின் இதழ்களில்
விரிந்து கொண்டேயிருக்கிறது எல்லையற்று.

தனிமையும்
அமைதியும்
இருளும்
உறைந்த
இரவின் துயரம் வலியது எனினும்
அன்பும் கருணையும் காதலும் நிறைந்தது.

இரவு நிரம்பிய கிண்ணத்திலிருந்து
எழுந்து வருகிறது பகல்
சாபம் பெற்ற ஒரு பாவியைப்போல
அதன் அமைதியிழந்த முகம்
அறையப்பட்டிருக்கிறது காலத்தில்.

(ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்)

கருணாகரனின் கவிதைகளில் சரிபாதிவரையானவை இந்த மாதிரியானவை. ஒரு பக்கத்தில் அவர் தீவிர நிலையில் அரசியலை மையப்படுத்திப் பேசுகிறார். அதேவேளை அவற்றுக்கு முற்றிலும் வேறாக சமாந்தரமாகவே வேறு முனைகளில் தன்னுடைய கவனங்களைக் குவிக்கிறார்.

‘எதுவுமல்ல எதுவும்’ என்ற அவருடைய இந்தத் தொகுதி இதற்கு நல்லதொரு சான்று. ஏனெனில், எங்களுடைய எதிர்பார்ப்பு என்பது, யுத்தம் நடந்த காலத்தில், யுத்தம் நடந்த நிலப்பகுதியில் வாழ்ந்த ஒரு கவியின் கவிதைகள் என்ற அளவில் இந்தக் கவிதைகளும் அவற்றைப் பற்றியனவாகவே இருக்கும் என்று அமைகிறது. அத்துடன் ஈழக்கவிதைகள் பெரும்பாலும் அரசியற் கவிதைகளாகவே இருக்கும் என்றதொரு எதிர்பார்ப்பு யுத்தத்தைப் பற்றிப் பேசும் கவிதைகளாகவே இவை இருக்கும் என்று எண்ணும்போது, கருணாகரன் அவற்றைக் கடந்து வேறு திசைகளுக்குப் போய்விடுகிறார் என்று மீண்டும் சொல்லவேண்டியுள்ளது.

அதாவது இவை யுத்தக் கவிதைகளாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு இவற்றை நாம் அணுகமுற்படுகிறோம். ஆனால், இதைக் கருணாகரன் சிதைத்து விடுகிறார். அவர், இந்தக் காலப்பகுதியில் யுத்தத்தின் நடுவே இருந்தாலும் அந்தக் கணங்களை, அங்கே நிலவிய நெருக்கடி நிலைமைகளை வேறொரு மனநிலையின் மூலம் அணுகியிருக்கிறார். அல்லது வேறு வகையான மனநிலையின் மூலமாகத் தன்னைச் சுற்றியிருந்த நெருக்கடிகளைக் கடந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

இது முக்கியமான ஒரு நிகழ்வு. முக்கியமானதொரு அணுகல். ஒரு கவி என்ற வகையில் இந்த மாதிரியான ஒரு தெரிவை அவர் வெளிப்படுத்தி உதாரணப்படுத்துகிறார். அல்லது வகைப்படுத்துகிறார். நெருக்கடியினால் அழுத்தமடையும் மனதை – புலன் திருப்புவதன் மூலம் அந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ளப்படும் ஒருவகை உபாயச் சிகிச்சை இதுவெனலாம். இதைத் தெரிந்தே – பிக்ஞைபூர்வமாகவே கருணாகரன் மேற்கொண்டாரா அல்லது, எழுந்தமானமாக அவரிடம் இப்படியானதொரு நிலைமை ஏற்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால், கருணாகரனின் ஏனைய கவிதை நூல்களை நாம் இதனுடன் இணைத்துப் பார்க்கும்போது, அவரிடம் ஏற்கனவே ஒரு தெளிவான நிலைப்பாடு அடியோட்டமாக உள்ளது என்று புலப்படுகிறது. தன்னை எதனிடத்திலும் அடையாளப்படுத்தி விடாத, அடக்கி விடாத போக்கு இது. எனவேதான் அவர், எப்போதும் மற்றவற்றிலிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் விலகி நிற்கிறார்.

இதோ இதற்கு இன்னொரு அடையாளம்.

யாருடைய வீடு
இந்த வீடு உன்னுடையதென்று சொல்லுவதற்கில்லை
ஆனாலும் நீ சொல்லிக் கொண்டிருக்கிறாய்
இது உன்னுடையதென்று
பல்லிகள்
கரப்பான் பூச்சிகள்
எல்லாமே உன் வீட்டிலுள்ளன
நீ வளர்க்கும் நாயும்
உன் பூமரங்களும்
உள்ளன இந்த வீட்டில்
நீ சொல்கிறாய் இன்னும்
இந்த வீடு உன்னுடையதென்று

உன் நாய் அதன் இன்னொன்றிடம்
இதைத் தன் வீடென்று சொல்லுமே!
உன் வேலையாள் சொல்வான்
தன் சகாவிடம் இது தன் வீடென்று
கரப்பான் பூச்சி நினைக்கும்
இது தன் வீடென்று
பல்லி யோசிக்கும்
இது தானிருக்கும் வீடென்று
சிலந்தியெண்ணும்
இது தன் வீடிருக்கும் வீடென்று
உன்னுடைய பெண் நினைக்கிறாள்
இது தன்னுடைய வீடென்று

இன்னும் நீ சொல்லிக் கொண்டிருக்கிறாய்
இந்த வீடு உன்னுடைய தென்று.

(ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்)

இத்தகைய கவிதைகள் அவருடைய ஒவ்வொரு தொகுதியிலும் உள்ளன.

ஆகவே கருணாகரனின் ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற தொகுதியின் கவிதைகளையும் அவருடைய முந்தைய தொகுதிகளின் கவிதைகளின் தொடர்ச்சியாகவோ மீதியாகவோ பார்க்கலாம் என்பதே என்னுடைய கருத்து.  ஆனால், மீறல்களை நிகழ்த்தும் ஒரு கவியின் கவிதைகளை அப்படிப் பார்க்கலாமா என்ற கேள்வியும் இந்த இடத்தில் எழுகிறது.

எங்கேனும் ஒரு புள்ளியில் நம்மையறியாமலே ஒரு கவி தன்னுடைய திசையை விட்டு விலகி, பாதையை விட்டு விலகி, வேறொரு தளத்துக்குச் சென்று விடலாம். அது அந்தக் கவியினுடைய இன்னொரு பரிமாண நிலை. முதிர்ச்சியின் விளைவு. ஆகவே அப்படி விலகும் அந்தக் கணமே முக்கியமானது. அதுவே படைப்பின் உள்ளார்ந்த அடிப்படைத் தருணம். அந்தக் கணத்தை அறிவதே கவியின் ஆளுமைப் பெறுமானமாகும். அந்தக் கணத்தை வாசகர்கள் அறிவது அல்லது கவி கண்டடைந்த அந்தக் கணத்தை வாசகர்களும் கண்டடைவது என்பது ஒரு சமாந்தரப் பயணமே. வானத்திலே இரண்டு பறவைகள் அருகருகாகச் சமாரந்தரமாக வட்டமிடுவதைப்போல. இரண்டுக்கும் புலப்படு காட்சிகள் அநேகமாக ஒன்றாகவே இருக்கும். பறத்தலின் விசையும் ஒன்றாகவே இருக்கச் சாத்தியம். இந்தக் கணத்தில் இரண்டு பருந்துகளின் அந்தரவெளிச் சமாந்தரப் பறத்தலை உங்கள் மனம் உணர்ந்தால் நான் சொல்லும் நிலை புரியும்.

ஆகவே, அத்தகைய கண்டடைதலை கருணாகரனும் கொண்டிருக்கிறாரா என்பதே இன்றைய கேள்வியாகும். அல்லது என்னுடைய அவதானிப்பாகும். என்னுடைய அவதானிப்பென்பது, கவிதையை நோக்குதல் நிலை நின்றது. அல்லது கவிதையை அனுபவித்தல் என்ற நிலைக்குரியது.

இதை மேலும் பார்க்கலாம்.

‘எதுவுமல்ல எதுவும்’ என்ற இந்தத் தொகுதியில் ஆரம்பத்திலே குறிப்பிட்டிருப்பதைப்போல 56 கவிதைகள் உள்ளன. இவற்றில் ஏதோ வகையில் அரசியலைப் பேசுபவை அல்லது யுத்தத்தைப் பற்றியவை 12 கவிதைகள்.

‘அடங்க மறுக்கும் சிறு குரலை
மறைத்து வைத்திருந்தேன்
பதுங்கு குழியின் இடுக்கினுள்
பீரங்கியிடம் அது சொல்லவிருந்த
சில வார்த்தைகளையும்
கேட்கவிருந்த சில கேள்விகளையும்
நான் களவாடினேன்
நிகழக்கூடிய அபாயம் கருதி

அது பகல்
தீரா விடாய் கொண்ட பகல்.
தேவாலயங்கள் இடிந்து வீழ்ந்த
அப்போதில்
இடிபாடுகளில் புறாக்களும்
பிரார்த்தனைகளும் சிக்கியவேளை
பீரங்கிகளின் வாய்மொழியைக் கேட்டேன்
அருகில்
மிக அருகில்..’

(பீரங்கியின் வாய்மொழி)

இந்த மாதிரியான யுத்தக் கவிதைகளை எம்;மை அதிர்ச்சிக்குள்ளாக்குவன. இந்த விவரிப்பு யுத்தகளத்தினுள் எம்மையும் பீரங்கிகளுக்கருகில், நிறுத்துவன.

ஏனையவை வேறு விசயங்களோடானவை.

இந்தக் கவிதைகள் கருணாகரனின் கவிதைகள் என்று அவருடன் பழகியவர்களாலேயே கண்டு பிடிக்க முடியாத ஒரு மொழிப் பிரயோகத்திலும் வெளிப்பாட்டு முறையிலும் எழுதப்பட்டுள்ளன. இது கருணாகரனிடம் ஏற்பட்டுள்ள மாற்றம். ஆனால், அவருடைய முன்னைய கவிதைகளுடன் ஒப்பிடும்போது இந்த மொழிப் பிரயோகமும் வெளிப்பாட்டு முறையும் அதிகம் வெற்றியடைந்தது என்று சொல்ல முடியவில்லை. சில கவிதைகள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. சில கவிதைகள் அவரையும் நம்மையும் இடறிவிட்டன.

இரண்டுக்கும் உதாரணங்கள்.

கவனத்திற்குரிய கவிதை.
காயங்கள் நிரம்பிய கூடு
திறக்க முடியாத பூட்டாகத்
தொடரும் மௌனத்துக்கு வெளியே
நிறுத்தப்பட்டிருக்கிறேன்
வெகு நேரம்

எல்லாப் பக்கமும் வாசலுடைய
சிறு கூட்டில்
இருந்த வானத்தை
தன்னோ டெடுத்துச் சென்ற
பறவை
திரும்பவில்லை இன்னும்

அசைகிற சிறு பூவில்
துடிக்கும் ஒளியில்
அழிய முடியாமற் தத்தளிக்கும்
வாசனை மீதமர்கிறது

ஒரு வண்ணத்துப் பூச்சி
தீயாய்
நெருப்பைத் தின்னக் காத்திருந்த
மலர்
வாசனையோடு நகர்ந்து சென்ற வழியில்
என்னைக் கண்டு திடுக்குற்றது.

அழிய முடியாமல் பெருஞ்சாபத்தோடிருந்த
மௌனத்திற்கிடையில்
விலக முடியாமல்
நானும்
அந்த மலரும்
காயங்கள் நிரம்பிய கூடும்.
கவனத்தைக் குலைக்கும் கவிதை.
எல்லா மனிதர் பற்றிய குறிப்பு
பார்த்த மனிதர்களைப் பற்றி
எந்த மனிதரிடமுமில்லை
எல்லா மனிதர் பற்றிய குறிப்பும்

எல்லா மனிதரிடமும் இல்லை
எல்லா மனிதர் பற்றிய
எல்லாமும்

அவரவர் வயிறும்
அவரவர் உலகமும்
தனித்தனியென்றான்
என்றோ சந்தித்த யாரோ ஒருவன்

தனித்தனியாகவே இருக்கிறது
எல்லோருக்கும் வயிறு
அவரவர்க்கான உலகமாய்
இன்னும் எதுவுமோவாய்…
இந்தக் கவிதை நகுலனையே நினைவூட்டுகிறது.

ஆனால், இதற்கப்பால், கருணாகரன் புதிய நிலைகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒரு பயணி என்பது இங்கே நிரூபணமாகிறது. புதிய நிலைகளை நோக்கிச் செல்லும்போது பல இடறல்கள் நிகழலாம். ஒரு மையத்தில்  தேங்கியிருப்பதையும் விட அசைவது மேல். அதுவும் படைப்பில் என்றால், மேலிலும் மேல்.

கருணாகரன் இந்த அடிப்படையைப் பேணுவாராக இருந்தால், அவரிடம் நாம் இன்னும் மேலதிகமாக எதிர்பார்க்கலாம்.

இதற்கு மேலும் சில அடையாளங்களை நாம் இந்தத் தொகுதிக் கவிதைகளில் பார்க்க வேண்டும். அதற்கு முன் இந்தத் தொகுதியின் தலைப்பே அவருடைய ஏனைய தொகுப்புகளின் தலைப்பிலிருந்து வேறுபடுகிறது. முந்திய தொகுதிகள் முற்றிலும் அரசியல் மயப்பட்டவை. ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள்’, ‘பலியாடு’. ஆனால், ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற இந்தத் தொகுதி அவற்றிலிருந்தும் பிற ஈழக்கவிதைகளிலிருந்தும் வேறுபடுவதைக் காட்டுகிறது. ஆகவே, ஒரு புதிய நிலைநோக்கி நகரத் தொடங்கும் ஈழக்கவியாகவே, கருணாகரனைப் பார்க்க வேண்டுமோ என்று எண்ணத் தோன்றும் இடம் இது. அப்படியாயின் அடுத்த கட்டமாக நாம் பார்க்க வேண்டியது கவிதைகளை.

இதற்கமையவே நாம் முன்னர் பார்த்த முதற்கவிதை, ‘காயங்கள் நிரம்பிய கூடு’

‘……
அசைகிற சிறு பூவில்
துடிக்கும் ஒளியில்
அழிய முடியாமற் தத்தளிக்கும்
வாசனை மீதமர்கிறது
ஒரு வண்ணத்துப் பூச்சி
தீயாய்…

இதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். வண்ணத்துப் பூச்சி அமர்வது பூக்களின் மீதோ அவற்றின் வண்ணத்தின் மீதோ என்பதற்கப்பால், அது தேனை உறிஞ்சிக் கொள்வதற்கே அமர்கிறது என்பதற்கும் அப்பால், அந்தப் பூக்களின் வாசனை மீதே அமர்கிறது என்ற மாற்றுப் பார்வையை அவர் முன்வைக்கும் விதத்தில் தன்னுடைய புதிய தளத்தை நிர்மாணித்துக்கொள்கிறார். இதை நாம் இந்தத் தொகுதியிலுள்ள பிற  கவிதைகளிலும் காணமுடியும். இத்தகைய அழகியலை வளர்த்துச் செல்வதன் மூலம் தன்னுடைய கவிதைகளை வளப்படுத்துகிறார்.

‘…..
பறத்தலின் சுவாரஷ்யம்
பறவைக்கிருக்குமா
இல்லை மிகுந்திருக்குமா
பறந்தே தீர வேணும் என்ற சலிப்பு?
…….’
(அந்தரங்கம்)

‘……..
கொண்டு செல்ல முடியவில்லை
என்னோடிருந்த எந்தக் காலையையும்
எடுத்து வரமுடியாத
மலர்களின் அழைப்புக்குரல்
இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
தொடுவானப் புள்ளிக்குமப்பால்
மறைந்து கொண்டிருக்கும்
வீட்டிலிருந்து..’

(இருளின் வீடு)

‘….குருதி மணக்கும் வார்த்தையில்
குவிந்து கொண்டேயிருக்கிறது கடல்
மணலாகி…’
 (வேட்டை)

‘….
அந்தரத்தில் மிதக்கும் கிளை
விலகிச் செல்கையில்
குருவியின் இதயம் படபடத்தது
வானத்தைத் திறந்து மூடி’
(திசையழிவு)
‘நிலத்தில்
கண்ணாடியின் முன்பாக
நிற்கும்போதறிந்த
நீயுமல்ல நானுமல்ல
இந்தப் பொழுதில் பிணக்குற்று நிற்பது
……….

மழைச் செடிகளில்
நிலம் தன்னை எழுதி
வானத்தின் கீழே
விரித்திருப்பதைக் கண்ணுற்ற
உன்னிடம் கேட்கிறேன்
காற்றிடம் எதையறிந்திருக்கிறாய்
எதைச் சொல்லியிருக்கிறாய்?’

(வெக்கை)

இப்படிப் பல. நிச்சயமாகப் புதிய திசையொன்றை நோக்கி, புதிய தளமொன்றை நிர்மாணித்தவாறு நகர்கிறார் கருணாகரன். முப்பதாண்டுகால ஈழக்கவிகளில், அங்கே நிலவிய அரசியற் சதுரங்கங்களுக்கிடையில் அதிகம் சிக்காமல், தன்னுடைய கவிதைகளை எழுதிச் சென்றவர் சோலைக்கிளி. உள்ளோடும் எள்ளலும் அன்பும் கருணையும் அழகும் வினோதமும் லயிப்பும் ஈர்ப்பும் மொழியின் அசாத்தியங்களும் மொழிதற் புலமையும் கூடிய கவிதைகள் சோலைக்கிளியினுடையவை. எனவேதான் பிற ஈழக்கவிஞர்களை விடவும் அவர் தனித்துத் தெரிகிறார். எந்தத் துடுப்புகளாலும் சோலைக்கிளியை யாரும் நகர்த்திச் செல்ல முடியாது. ஆட்கொள்ளல்களும் எதிர்களுமற்ற வெளி அவருடையது.

சோலைக்கிளி வகுத்துக் கொண்ட இந்தப் பாதைக்குப்பிறகு, அவர் செய்த பயணத்துக்குப் பிறகு இன்னொரு வழியில், இன்னொரு பயணத்தைச் செய்கிறார்  கருணாகரன். இந்த வகையில் சோலைக்கிளியைப் போல அவர் தனக்கொவ்வாதவற்றிலிருந்து விலகுவதும், அவற்றைப் பேசாது விடுவதன் மூலமாகவும் அவற்றைப் புறக்கணிப்பதான ஒரு நிலையை உருவாக்குகிறார். சோலைக்கிளியின் கவிதைகள் அதிகமும் வாழ்வின் பல்வேறு உணர்நிலைகளைப் பற்றிப் பேசுவன. ஆனால், அவர் பிற ஈழக்கவிகளைப்போல வாய்பாட்டுத்தனமாக அரசியலுக்குக் கவிதையைப் பலியிடவில்லை. அரசியலைப் பேசுவதென்பது கவிதைக்கு ஆகாதென்ற தொனியில் நான் இங்கே வாதிடவில்லை. அரசியலைத் தீவிர நிலையிற் பேசிய ஈழக்கவிதைகளும் கவிஞர்களும் பின்னர் அந்த நிலையிலிருந்து அவர்களே தொலைவுக்கு நகர்ந்து விட்டனர். அப்படி நகர்ந்து செல்ல வேண்டியதொரு நிலைமை அங்கே உருவாகியது. அல்லது அவர்கள் முன்மொழிந்த அரசியல் அவர்களை எதிர்நிலைக்குத் தள்ளிப் பந்தாடியிருக்கிறது. இதையே பிரக்ஞைபூர்வமாக முன்னுணர்ந்தாரோ சோலைக்கிளி. எனவே இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களின் நிமித்தமாகவோ கருணாகரன் தன்னுடைய கவிதைகளை இன்னொரு தளத்துக்கு நகர்த்தியிருக்கிறார்.

யுத்தம் கருணாகரனை இவ்வாறான ஒரு நிலைக்குக் கொண்டு சென்றிருக்க முடியும். இதுகாலவரையான நம்பிக்கைகளின் சரிவும் எதிர்பார்ப்புகளின் வீழ்ச்சியும் அவரை இத்தகையதொரு நிலைக்குத் தள்ளியிருக்கலாம். தடுத்தாட்கொள்வதற்கு எந்தக் கைகளும் இல்லை என்ற யதார்த்தம்.

ஆனாலும் இந்தத் தொகுப்பிலுள்ள சில கவிதைகள் யுத்தத்தை, பீரங்கிகளை, யுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளை, அவற்றின் நிலைமைகளை எல்லாம் பேசுகின்றன. எனவேதான் இந்தக் கவிதைத் தொகுதியும் கருணாகரனின் முந்திய கவிதைகளின் தொடர்ச்சியாக உள்ளனவோ என்ற ஐயத்தை முன்னரே குறிப்பிட்டேன். அதேவேளை அவர் அந்தப் போக்கிலிருந்து விடுபட்டுள்ளார் என்பதையும் கவனப்படுத்துகிறேன்.

கருணாகரனைப் போல இனி அங்குள்ள ஏனைய கவிஞர்களும் மெல்ல மெல்ல தங்களின் பாதைகளை வேறாக்கிக் கொள்ளக்கூடிய நிலைமையே தெரிகிறது. அண்மையில் வெளிவந்திருந்த இன்னொரு ஈழக்கவிஞரான சித்தாந்தனின் ‘துரத்தும் நிழல்களின் யுகம்’ கவிதைகளும் இதையே மெய்ப்பிக்கின்றன. மேலும் அனார், றியாஸ் குரானா போன்றவர்களின் கவிதைகளிலும்.

இதேவேளை கருணாகரனிடம் இருக்கும் இன்னொரு முக்கிய விசயம், அவர் தன்னுடைய கவிதைகளை வௌ;வேறாகவே எழுதுகிறார். மொழி ரீதியாகவும் மொழிதல் ரீதியாகவும் உள்ளன ஒவ்வொரு கவிதைக்கும் இடையிலான வேறுபாடுகள். இவற்றை அவர் கவனமாகக் கையாள்கிறார். முதலாவது தொகுப்பான ஒரு பொழுதுக்குக் காத்திருத்தலுக்கும் ஒரு பயணியின் தொகுப்புக்குமிடையில் நிறைய வேறுபாடுகளுண்டு. இவை இரண்டிலிருந்தும் வேறுபட்டது பலியாடு. பலியாட்டின் தொடர்ச்சியே ‘எதுவுமல்ல எதுவும்’.

ஆனால், ஈழத்தின் பெரும்பாலான கவிஞர்கள் இப்படிச் செய்வதில்லை. சேரனின் கவிதைகளை ஒருவர் எளிதில் இனங்காண முடியும். அவ்வாறே சு.வி, வ.ஐ.ச.ஜெயபாலன், சோலைக்கிளி, புதுவை இரத்தினதுரை, முருகையன் போன்றோரின் கவிதைகளை எவரும் எளிதில் இனங்காண முடியும். ஏன், சண்முகம் சிவலிங்கம், மஹாகவி போன்றோரிடத்திலும் இத்தகைய பிராண்ட் தன்மை தாராளமாகவே உண்டு. இதற்கு இவர்கள் எப்போதும் தங்களுக்கென்றொரு (பிராண்ட்) ‘அடையாளத்தை’ பேணுவதே காரணம்.

தமிழகத்தில் இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. செழிப்பான உதாரணம் விக்கிரமாதித்யன்.

ஒன்றில் இவர்கள் பயன்படுத்தும் மொழி. அல்லது வடிவம். அல்லது சொல்முறை. அல்லது இவர்களுடைய நோக்குநிலை. எனவே இந்த மாதிரியான வழமையான அம்சங்கள் இவர்களை ஒரு எல்லைக்குள்ளேயே சுற்ற வைத்து விடுகின்றன. பழகிய தளம் என்று சொல்வார்களே. அப்படி.

சிலருக்கு இந்தப் பழகிய தளம் விருப்பத்துக்குரியதாகவும் இலகுவானதாகவும் இருக்கலாம். இது எழுதுவோருக்கு மட்டுமல்ல, வாசிப்போருக்கும் பொருந்தும். புதிது, மாற்று என்பதில் அவர்களுக்குப் பயிற்சி கிட்டும்வரையில், ம்ஹ{ம், புதிது சிரமம்.

ஆகவே ஈழக்கவிதைகள் மெல்ல அவர்களுடைய தேக்கமடைந்திருக்கும் அரசியலை விட்டு வேறொரு வெளிதேடிச் செல்வதற்கான அடிவைப்பாக ‘எதுவுமல்ல எதுவும்’ கவிதைகளைக் கொள்ளலாம். அத்துடன் கருணாகரன் இன்னொரு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கான அடையாளமாகவும் இந்தக் கவிதைகளைக் காணலாம். என்றபோதும் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் கருணாகரன், இந்தத் தொகுதியில் எழுதிய கவிதைகளின் மூலம் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகுவார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதற்கான சூழலும் மெல்லக் கருக்கொள்கிறது.

ஏனென்றால், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், இளவாலை விஜயேந்திரன், சோலைக்கிளி, திருமாவளவன், வாசுதேவன், ஜபார், நிலாந்தன், கருணாகரன் போன்றோருக்கு அடுத்த தலைமுறையினர் இன்று ஈழக்கவிதைகளின் பரப்புக்குள் முக்கியமானவர்களாக வந்துள்ளனர். நட்சத்திரன் செவ்விந்தியன், பா. அகிலன், சந்திரபோஸ் சுதாகர் (எஸ்.போஸ்), சித்தாந்தன், ஆழியாள், பஹீமா ஜஹான், றியாஸ் குரானா, மஜீத், றஸ்மி, பெண்ணியா, அனார், தானா.விஷ்ணு, என். ஆத்மா, பிரதீபா, தர்மினி, தீபச்செல்வன் என்று நீள்கின்றது இவர்களின் வருகை. ஆகவே புதிய கவிதைப் போக்குகளின் மத்தியில், அவை உருவாக்குகின்ற சவால்களுக்கு முன்னே தன்னையும் தன்னுடைய கவிதைகளையும் நிறுத்தவேண்டிய நிலையில் இருக்கிறார் கருணாகரன்.

ஆகவே, இதற்கு முன்னர் ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள்’, ‘பலியாடு’ என மூன்று கவிதை நூல்களை வெளியிட்டிருக்கும் கருணாகரன் தன்னைச் சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் இந்தக் காலம் அமையலாம்.

எனினும் இயல்பு முற்றாக அழிந்து, முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் குருதியின் நெடிலோடு வருகின்ற வார்த்தைகளை யாராலும் எளிதில் மறந்து விடவும் முடியாது. எளிதிற் புறக்கணித்து விடவும் இயலாது. 

‘….குருதி மணக்கும் வார்த்தையில்
குவிந்து கொண்டேயிருக்கிறது கடல்
மணலாகி…’
(வேட்டை)

உண்மையே. எளிதில் மறக்கவே முடியாதவைதான் இந்தக் கவிதைகள்.

mkugaraj@gmail.com