1. விளக்கீடு இன்று!
விளக்கீடு இன்றென்றாள் என் மனையாள்
வந்துமோதின அந்நாள் இனிய நினவுகள்
வகை வகையாய் சுட்டிகளை வைத்தே
வரிசையாய் விளக்கேற்றி நாம் மகிழ்ந்தநாள்
வீடெல்லாம் நிறையவே சுட்டி விளக்கேற்றி
வாழைத் தண்டை வாசலினில் நட்டுவைத்து
வகையாக நன்கே எள்பொதியிட்டு எரித்தநாள்
வாராதோ மீண்டொருநாள் எம் வாழ்வில்
ஒளியேற்றி உறவுடனே கூடி ஒன்றாய்
ஓடியாடி மகிழ்ந்தே வாழ்ந்தவர் அன்றோ
விளக்கீடு வருவதும் தெரியாமல் நாமிங்கே
விரைவான வாழ்வில் வகையாக மாட்டுண்டோம்.
வாழ்வதனில் வருமிருள் எல்லாம் அகன்றிடவே
வழி வழியாய் நாம் கொண்டாடி வரும்நாள்
புலம்பெயர்வாழ்வில் பொசுங்கிடும் வழமைகள்
பழமைகள் தொலைத்தே பணமதை நாடுகின்றோம்.
எம் பண்டிகைத் திருநாட்களை மறவாமல்
ஏற்றமுடன் இவற்றை கொண்டாடி மகிழ்வோம்
புலம்தான் பெயர்ந்தோமே ஒழிய நாமென்றும்
பண்பாடு மறவாமல் பழமைதனைப் பேணிடுவோம்
இருண்டஎண்ணங்கள் ஒழிந்தோடிப் போகட்டும்
இன்பங்கள் என்றுமே எமக்கெனி வந்திடட்டும்
துன்பங்கள் எல்லாம் தொலைந்தே போகட்டும்
தூயவெண்ணங்கள் நம் மனதினில் ஒளிரட்டும்.
விளக்கீடு இன்று ஒளியேற்றிடுக வீடெல்லாம்
விளக்கிடுக பிள்ளைகட்கு இதன் விளக்கத்தினை
விரட்டிடுக மனதினின் இருளதனை நன்கே
வாழ்ந்திடுக சிறப்புடனே ஒளி நாளில் நலமே.
2. பழந்தமிழர் பெருமையை பழகுதமிழில் வடித்திடுவோம்
உலகத்தின் மூத்த குடியினை
உயர் தமிழ் செம்மொழியினை
மனித குலத்தின் பிறப்பிடத்தை
மறத் தமிழர் பண்பாட்டுயர்வினை
மறைத்திடல் உலகால் முடியுமோ
மறந்திடல் நம்மால் இயலுமோ
உணர்ந்திடுங்கள் இவ் வுண்மையை
உரைத்திடுங்கள் நாம் தமிழரென
இளையோர் உணராரி வற்றை
இனிதாய் இவர்க்கு இதனை
பெருமையாக் கூறிட லெமது
பொறுப்பன்றோ புரிந்திடு வீர்
பழந்தமிழர் பெருமை யெலாம்
பழகு தமிழ் மொழியினிலே
பாட நூல்களாயிங் காக்கிடவே
பாங்குடேனே பணிபுரிவோம் வாரீர்.
3. நிலம்மீட்டு நம்மண் ஆள்வோம்.
உலகத்தின் மூத்த குடி
உயர்தமிழ்ப் பெருங் குடி
குடி பெயர்ந்து தாழ்ந்ததே
கொடி யிழந்து வீழ்ந்ததே
தரணியின் வல்லர செல்லாம்
தமிழனினத்தை அழிப்பதேன் நம்
வரலாற்றை மறைத்திடவா எம்
விடுதலையை மறுத்திடு கின்றார்
நூலகம் எரிந்தது கண்டோம்
நூல்களும்அழிந்ததுஉணர்ந்தோம்
கல்வியைஅழித்தல்ஏலுமோ
கற்றதால்நாம்உயர்ந்த வரன்றோ
பறவைகளின் இடப் பெயர்வை
பாரினிலே ஆராய் கின்றார்
மறத்தமிழன் குடி பெயர்வை
மதிப்பீடு செய்தி டாரோ
ஒற்றுமை நமக்குள் வேண்டும்
ஒன்றாய் இயங்கிடல் வேண்டும்
வேற்றுமை களைந்திடல் வேண்டும்
வெற்றிகள் கிடைத்திடும் பாரீர்
வாசித்தல் சிந்தனைக்கு கருவாகும்
வரலாறு தமிழர்ற்கு உரித்தாகும்
தமிழ்மொழி தமிழரின் சொத்தாகும்
தனிநாடு நம்மவரின் இலக்காகும்
புலம்விட்டு வந்தோம்-நாம்
பலம்பெற்று மீண்டெழு வோம்
நிலை குலைந்து போகோம்நாம்
நிலம்மீட்டு நம்மண் ஆள்வோம்.
4. வாழ்த்துப்பா: திரு.நடராசா சச்சிதானந்தன்!
– அண்மையில் பவள வயதினையடைந்த சமூக சேவையாளர் திரு நடராசா சச்சிதானந்தனுக்கு என் அன்பான வாழ்த்து.- வே.இளஞ்சேய் –
சச்சிதானந்தன் இவர் ஓர் சலிப்பில்லா உழைப்பாளி
சுறுசுறுப்பாய் இயங்கிடும் முதுவயது இளைஞரிவர்
கச்சிதமாய் பல நிறுவனங்கள் தொடக்கியே வைத்தவர்
கடும் உழைப்பால் அவற்றைச் சீராக இயக்கியவர்
லூயிசம் சிவன் கோயில் இவரின் ஓர் முயற்சி
லூயிசம் தமிழ்ப் பாடசாலை இவரினால் தோற்றமடைந்தது
வடமாகாண கல்வி அபிவிருத்தி ஒன்றியம் தொடங்கியவரும் இவரே
வகையாக இவற்றை நடாத்தி வருபவருமிவரே
சமூக சேவையில் சச்சி என்றும் முன்நிற்பார்
சரியான முறையினிலே திட்டங்கள் தீட்டிடுவார்
இணுவில் கிராமத்தின் இனிய மனிதரிவர்
இன்றுவரை ஓடி ஆடி உழைத்திடும் உத்தமரிவர்
பவள வயதினிலும் பொதுப்பணி செய்கின்றார்
பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கின்றார்
ஆங்கிலக் கல்வியினைப் புலத்திலே சிறப்பிக்க முனைகின்றார்
அதற்காக இவரும் அல்லும் பகலும் அலைகின்றார்
முதுமை என்பது மனதிற்கு இல்லை
முடங்கிக் கிடக்க சச்சி முயன்றதில்லை
முதுமையில் இளமையுடன் முனைப்புடன் இயங்கிடும்
மாண்புமிகு சச்சியே நீர் வாழ்க நூறாண்டு வாழ்க
இன்றுபோல் நீங்களென்றும் இன்பமாய் வாழ்ந்திட
இளமை உணர்வுடன் நற்பணிகள் செய்திட
இன்பத் தமிழ் உணர்வால் இணைந்த நானும்
இன்புடனே வாழ்த்துகின்றேன் வாழ்க வளமுடனெனவே.
5. கவிதை – வாழ்த்துதல் நன்றன்றோ
வாழ்த்துதற்கு நமக்கு நல்மனமது
வேண்டும்
வஞ்சமற்ற நல்ல நெஞ்சமது
வேண்டும்
இதயத்தில் வற்றாத இரக்கமது
வேண்டும்
இன்பமாய் இருந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ
பாராட்ட நல்ல உணர்வது
வேண்டும்
பக்குவமான சிறந்த குணமது
வேண்டும்
நல்லதை ரசிக்கும் இயல்பது
வேண்டும்
நலமாய் சிறந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ
உழைப்பவனை ஊக்குவித் திடல்
வேண்டும்
உற்சாகப்படுத்தி நன்கு உதவிடல்
வேண்டும்
உயர் கருத்துக்களை மதித்திடல்
வேண்டும்
உறவுகளுடன் உறவாடிடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ
கவிதையை ரசிக்கும் கவியுளம்
வேண்டும்
கன்னித் தமிழினைப் போற்றிடல்
வேண்டும்
கற்றோருடன் பழகிடும் பழக்கம்
வேண்டும்
கவலையற்று மகிழ்ந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ
இன்பத்தமிழை என்றும் மதித்திடல்
வேண்டும்
இனியதமிழில் என்றும் பேசிடல்
வேண்டும்
அறிவுத்தமிழை என்றும் கற்றிடல்
வேண்டும்
அருந்தமிழை சுவைத்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ
அன்னை தந்தையைப் போற்றிடல்
வேண்டும்
அறிவுதந்த குருவினை மதித்திடல்
வேண்டும்
ஆண்டவனை என்றுமே துதித்திடல்
வேண்டும்
அன்னைத் தமிழைப் பரப்பிடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ
சமூகத்திற் குழைப்போரை மதித்திடல்
வேண்டும்
சங்கங்களில் சேர்ந்து பணியாற்றிடல்
வேண்டும்
வலிமையவர்க்கு சேர்த்து செயலாற்றிடல்
வேண்டும்
வாயார வளமே வாழ்ந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ
venthanar ilansei <vilansei@hotmail.com>