‘வேரில் பழுத்த பலா’ புதினத்தின் கருவும் உருவும்

‘வேரில் பழுத்த பலா’ புதினத்தின் கருவும் உருவும்சு.சமுத்திரம் இலக்கியத் தளத்தில் பல்வேறு விமரிசனங்களை எழுப்பியவரும் பல்வேறு விமரிசனங்களுக்கு உள்ளானவரும் ஆவார். இவரது ‘வேரில் பழுத்த பலா’ என்ற புதினம் சாகித்திய அகாதமி விருதைப் பெற்று உள்ளது. அரசு அலுவலகச் செயல்பாடுகளையும் அநீதியின் உச்சக் குரலையும் நீதியின் மெளனத்தையும் சாதியத்தின் பன்முகத்தையும் கருவாகக் கொண்டு புதினமாக உருப் பெற்று உள்ளது. சு.சமுத்திரம் இக்கருவிற்கு எங்ஙனம் உருவம் கொடுத்துள்ளார் என்பதை ஆய்வதாகக் கட்டுரை அமையப் பெறுகிறது.

தொடக்கம்
‘எல்லாக் குழந்தையும் நல்லக் குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே – அவர்
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
அன்னை வளர்ப்பினிலே’

என்ற வரிகளை மெய்ப்பிக்கும் வகையிலேயே புதினத்தின் தொடக்கம் அமைந்து உள்ளது. முதன்மைப் பாத்திரமான சரவணனின் அலுவலகப் புறப்பாடே, புதினத்தின் முதல் காட்சி ஆகும். புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் தராதவன். ஆனால் அகத் தோற்றத்தில் எவ்வித கறையும் படியாவண்ணம் தற்காத்துக் கொள்ளும் குணம் உள்ளவன் என்பதை தெளிவுபடுத்துவதாய்,

‘ உடை என்பது, உடம்பை உடைத்துக் காட்ட அல்ல. மறைத்துக் கொள்ளவே என்பதை சரவணன் கொள்கையாகக் கொண்டிருப்பானோ என்ற சந்தேகம் எவருக்கும் வரலாம்.’ என்ற வரிகள் அமைந்துள்ளது. ஒரு மனிதனின் குணம், பண்பு அக அழகில் இருக்கிறதே தவிர புற அழகில் இல்லை என்பதை மனத்தில் ஆழப் பதியச் செய்து வளர்த்தது தாய் முத்தம்மாவும் இரண்டாம் தாயகத் திகழும் அண்ணி தங்கம்மாளுமே ஆவர். இப்பண்பு தங்கை வசந்தவிற்கான பணித் தேடலிலும் நிலை பெற்று இருக்கிறது. தன்னிடம் அதிகாரமும் பதவியும் இருந்த நிலையிலும, “ வேலைக்குன்னு பேனாவைத் தான் தொட்டேன். எவன் காலையும் தொடலைஸ இவளுக்கும் தொட மாட்டேன். இவளுக்கு நான் வழிதான் காட்ட முடியும். கூடவே நடக்க முடியாது ? ” என்று கூறுகிறான்.

சு.சமுத்திரம் தனது படைப்பின் முதன்மைப் பாத்திரத்தை, ‘ ஊருக்குத் தான் உபதேசம். தனக்கு அல்ல’ என்றா எண்ணம் கொண்டதாக இல்லாமல் பேச்சும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகப் படைத்துள்ளார்.

தலைப்பு

படைப்பாளர் புதினத்திற்கு மேலோட்டமாக இல்லாஅமல் குறியீடாகவும் கவிதையாகவும், ‘வேரில் பழுத்த பலா’ என்று தலைப்பிட்டு உள்ளார். கதையின் மையக் கருவைக் கடந்து முதன்மைப் பாத்திரத்தின் எண்ணப் போக்கை மனத்திற் கொண்டு தலைப்பு அமைந்துள்ளது. நம்முடைய தேவைகளை நிவிர்த்தி செய்யும் காரணிகள் காலடியில் கிடப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் ஏழு கடல் ஏழு மலை தாண்டி மனம் தேடுவதே இயல்பாகும். அதைப் போன்று சரவணன், வாழ்க்கைத் துணையையும் பிரச்சினைகளுக்கான தீர்வையும் திறமை கொண்ட ஆளுமையையும் எங்கோ தேடிக் கொண்டிருந்தான். ஆனால், “ அலுவலக மரங்களின் உச்சாணிக் கிளைகளில் அணில் கடித்த பழங்களையும் பிஞ்சில் பழுத்த பழங்களையும் பிடுங்காமல் பார்த்த எனக்கு இவ்வளவு நாளாய் இந்த வேரில் பழுத்த பலா பார்வைக்குப் படாமல் போய் விட்டதே? இப்போ, இவளை இவளையே. . . . . இவளை மட்டுமே . . . . நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோணுதே! இதுக்குப் பெயர் தான் காதலோ ” என்று சரவணன் எண்ணுவதாகப் புதினம் அமைந்துள்ளது.

மனிதன், ‘ உற்று நோக்குதல், முன்னெச்சரிக்கை, ஆய்ந்து முடிவு எடுக்க வேண்ண்டும், தொலை நோக்குச் சிந்தனை’ என்றெல்லாம் சிந்திப்பவனாக இருக்கிறான். ஆனால் அருகாமையில் இருக்கக்கூடிய வாய்ப்புகளையும் மூலதனத்தையும் திறனையும் திறமையையும் பயன்படுத்துக் கொள்ளத் தவறி விடுகிறான் என்பதைப் படைப்பாளர் தலைப்பின் வாயிலாகவும் கதைப் போக்கின் வாயிலாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

புதினத்தை வாசிப்பஓர் இனிமேலாவது கைக்கு எட்டாத உச்சாணிக் கிளையில் இருந்து சற்று தாழ்த்தி கீழிருந்து மேல் நோக்கியதாகத் தமது பார்வையைச் செலுத்த வேண்டும் என்பதாகவே படைப்பாளரின் சிந்தனை இருப்பதை அறியலாம்.

அரசு அலுவலகச் செயல்பாடு
மக்களாட்சித் தத்துவத்தில் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் வாயிலாகவே மக்களைச் சென்று சேர்கின்றன. மக்களின் வரிப்பணாத்தில் இருந்தே அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் மக்களுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. புதினத்தில், அரசு அலுவலகங்களுக்கான எழுது பொருட்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து தேவைக்கேற்ப பகிர்ந்து வழங்கும் அலுவலகமே கதைக் களமாக அமைந்துள்ளது. கதை நாயகன் இவ்வலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஆவார்.

தரம் குறைந்த பொருட்களைக் கொள்முதல் செய்து ஊழலில் ஈடுபட்டவர்களைச் சரவணன் அடையாளம் கண்டு தண்டனை பெற்றுத் தர முயற்சி மேற்கொள்கிறான். இச்சுழலில் அலுவலகத்தையும் அலுவலர்களையும்தன் கட்டுப்பாட்டில்ப் வைத்திருக்கும் செளரிராஜன், “ நடுங்கிக் கொண்டிருந்த அக்கெளண்டண்டைப் பார்த்து, தைரியமாய் இருக்கும்படி சைகை செய்தார். இது, யோக்கியன் பயப்ப்பட வேண்டிய காலம்; நீ பயப்பட வேண்டாம்’ என்று காதில் போடப் போனார்” என்று கூறுவதாய் புதினம் அமைந்துள்ளது.

குறுக்கு வழியில் பொருள் தேடுபவர்களுக்குப் பின்னணியில் துணையாக ஆள் பலமும் இருக்கிறது. பண பலமும் இருக்கிறது. ஆனால் குழந்தைப் பருவத்தில் வீடும் பால்ய பருவத்தில் கல்விமுறையும் சமூகமும் கற்றுத் தந்த ஒழுக்கம், நேர்மை, கடமை மற்றும் பொறுப்பு உணர்ச்சி அனைத்தையும் மனத்திற் கொண்டு பணியாற்றும் ஒருவனுக்கு எதுவும் துணை நிற்பதில்லை. பணி, கடமை என்ற நிலையைக் கடந்து தனது இயல்பான வாழ்வையும் அலுவலகச் செயல்பாட்டையும் எதிர் கொள்ளும் திறன் இன்றி ஓடி ஒழியும் நிலைக்கு நீதி தள்ளப்படுகிறது என்பதை, “ நீங்க நினைக்கிறது மாதிரி இது சின்ன விஷயம் இல்ல மேடம். மனுப் போட்டதில் இருந்து அது முடியுறது வரைக்கும் மன நிம்மதியில்லாமல் போயிடும். . . இந்த டிபார்ட்மெந்தை எதிர்த்து நிற்கறதுக்கு ஆள் பலமோ. . .. பண பலமோ . . . . என்கிட்ட இல்லை. நல்லவனுக்கு அடையாளம் சொல்லாமல் போகிறது தான் . . . .” என்ற சரவணனின் கூற்று வழி அறியலாம்.

படைப்பாளர் சு.சமுத்திரம் இப்பிரச்சினைக்கு “ வீட்டுக்கு வீடு வாசப்படி ஸார். இங்களை மாதிரி நேர்மையானவங்க எங்கே போனாலும் வம்பு தான். அதனால் தெரிஞ்ச வம்பு. தெரியாத வம்பைவிட நல்லது. ” என்று தந்துள்ள தீர்வும் எதார்த்தமானதாகவும் ஏற்கக்கூடிய ஒன்றாகவும் உள்ளது.

தெரிந்து, திட்டமிட்டு குற்றம் செய்பவர்களைத் தன் சுற்றமாகக் கொண்டவர்கள் நீதியை நிலை நாட்ட எண்ணுபவர்கள் கூடுதல் கவனத்துடன் தனது முழுத் திறனையும் பயன்படுத்தியே வெற்றி கொள்ள முடியும் என்பதை சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பாகப் படைப்பாளர் பதிவு செய்துள்ளார். ஆனால் அதே நிலைதான் இன்றும் நிலவுகிறது என்பதுதான் சமூகத்தை அச்சுறுத்துவதாய் உள்ளது.

அநீதியின் உச்ச குரல்
மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பார்கள். பாரத நாட்டில் தலை முதல் பாதம் வரை லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்பது பரந்துபட்டு வளார்ந்திருக்கிறது. அதனால் சட்டமீறலில் ஈடுபடுபவர்களின் எணிக்கையும் அதற்குத் துனைநிற்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. மனச்சாட்சி, நேர்மை, கடமை என்று வரையறுத்துக் கொண்டு விதிமீறலைக் கொலைக் குற்றம் போல் எண்ணி வாழும் ஒரு கூட்டத்தினரால் நிம்மதியாக தனித்து வாழவும் முடியவில்லை. அவர்கள் இவர்களை வாழவும் விடுவதில்லை. சொல் அம்புகளாலேயே வீழ்த்தி விருகிறார்கள்.

நேர்மையின் உருவமாக இருக்கும் சரவணனுக்குத் துணையாகவும் பக்கபலமாகவும் இருக்கும் அன்னத்தைச் அலுவலர்கள் எளிமையாகக் கையாள்கிறார்கள். அதிகமாகப் பேசிவில்லை. குறைந்த வார்த்தைகள் தான். ஆனால் மனத்தை ரணமாக்கி, வீட்டிலும் மன நிம்மதியின்றி இருக்கச் செய்யக்கூடிய வலிமை படைத்ததாகும்.

“ இன்னைக்கு ஈவினிங்ல ஏழு மணி வரைக்கும் ஆபீஸ்ல இருக்க முடியுமான்னு கேட்டாரு. . . .. வேணு முன்னால் . .. . முடியாதுன்னு சொல்லிடுறேன்.”

“இருக்கியான்னு கேட்டால், நீ படுக்கிறேன்னு சொல்லி இருப்பே”

“உமா, கண்ணாடியைப் பார்த்துப் பேசியவர் போல் உதட்டைக் கடித்தாள். செளரிராஜன், ‘ நல்லதுக்குக் காலமில்லை’ ”

என்று சக அலுவலர்கள் பேசுவதாகப் புதினம் அமைந்துள்ளது. படிப்பு, பாலினம், வயது, பணி அனுபவம் போன்ற காரணங்களால் பேசத் தயங்கினால் சமூகம் நம்மீது ஏறி அமர்ந்து, நம்மைக் கழுதையாகச் சுமக்க வைத்து விடும்.

அன்னத்தின் செயல்பாட்டை முழுமையாக முடக்கப் போடுவதற்கு இந்தவொரு வார்த்தை போதும் சமூகக் கட்டமைப்பில் நல்ல பெயருடன், மரியாதையாக வாழ வேண்டும் என்று எண்ணி வாழ்பவர்கள் பிறரது ஏச்சுப் பேச்சிற்குக்கூட பலம் கொள்வார்கள். ஆனால் வெட்கம், மானம் என்று எதற்கும் பணியாத கூட்டம் தனது ஆசை, எண்ணம், செயல்பாடு வெற்றி பெறுகிறதா. நம்மைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்தால் போதும் என்பதாக இருக்கிறது. அதனால்தான் நியாயமாக நடக்கக்கூடிய அன்னத்தைப் பார்த்து சற்றும் யோசிக்காமல் இப்படியொரு கேள்வியைச் சக அலுவலரால் கேட்க முடிகிறது. சரவணன் ஏதோ அரசுப் பணத்தைக் கொள்ளை அடித்தது போல அவன்மீது தொடர்ந்து புகார்களும் ஆதாரங்களும் தலைமை அலுவலகத்திற்குச் செல்கிறது. அங்கிருந்து உடனடியாகப் பதில் அளிக்குமாறு சரவணனுக்குக் கடிதமும் வருகிறது. ஆனால் சரவணன் எழுதக்கூடிய எந்தக் கடிதத்திற்கும் எதிர்வினை இல்லை. மாறாக அக்கடிதத்தின் நகல் குற்றவாளிகளுக்கு உடனடியாகக் கிடைக்கிறது. ‘தகரம்’ சற்று அதிகமாகவே சத்தம் எழுப்பும் என்பார்கள். அதுபோல் உமா, செளரிராஜன் போன்றவர்களின் குரல் நாற்திசைகளையும் எட்டுகிறது. ஆனால் அன்னம், சரவணன் போன்றவர்களின் குரல் அலுவலக அறையை விட்டு வெளியில்கூட கேட்கவில்லை. அநீதியின் குரல் சமூகத்தில் சற்று வீரியமிக்கதாகவே உள்ளது என்பதை அறியலாம். இச்சூழலில் நீதி குரல் எழுப்ப முடியாமல் மெளனம் காத்துக் கொண்டிருக்கிறது.

சாதியத்தின் பன்முகம்
வரலாற்றின் தொடக்க காலத்தில் தொழில்களின் அடிப்படையில் உருவான சாதி, பின்னர் ஏற்றாத்தாழ்வை நிர்மாணிக்கும் வலிமை பெற்று விட்டது. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கருத்து சமூகத்தில் நிலை பெற்று இருந்தாலும், மேன்மைத் தொழில், தாழ்ந்த தொழில், கேவலமான தொழில் என்றெல்லாம் மனிதமனம் பாகுபடுத்தி வைத்திருக்கிறது. இச்சமூகம் ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்று உடல் உழைப்பு வர்க்கத்தினரை அடையாளப்படுத்தி வைத்திருக்கிறது. இவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றலெ கிடையாது. எடுப்பார் கைப்பிள்ளை என்றே முத்திரை பதித்து வைத்துள்ளனர். இப்பிரிவினர் எங்கெல்லாம் தனது உடல் உழைப்பைத் தாண்டி அறிவுப் பூர்வமாகச் சிந்தித்து அறிவுரை, திட்டம், வழி கூறும் அளவிற்கு வந்தால் சாதியின் பெயரால் புறம் தள்ளப்படுகிறார்கள். இதை அன்றாட சமூக நிகழ்வுகளில் இருந்தே காணலாம்.

“ஒரு தடவை கொஞ்சம் சொல்லிக் ஒடுங்க ஸார்னு. நான் கேட்டதுக்கு அவ்வளவு பகிரங்கமாகவா கற்றுக் கொடுக்க முடியுமுன்னு அசிங்கமாய் கேட்ட பயல் . . . . இப்போ இந்தக் கிழட்டு செளரியும் எப்படிச் சிரிக்கிறான்” என்று அன்னம் உள்ளம் குமுறுவதாகப் புதினம் குறிப்பிடுகிறது.

சாதியத் தாக்கத்திற்கு ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உடல் மற்றும் உள்ளா அளவில் உள்ளாகிறார்கள். அன்னம் மேல் சாதிப் பெண்ணாக இருந்திருந்தால் சக அலுவலர் எவரேனும் இவ்வாறு கேட்டு இருப்பார்களா. இதற்கு அன்னம் வெளிப்படையாக எதிர்ப்புகூட தெரிவிக்கவில்லை. தெரிவிக்கவும் முடியவில்லை. ஆனால் இச்சமூகம் இவர்களுக்குப் பல நன்மைகளைத் தாமாக முன்வந்து செய்வது போல் பாவனை செய்து கொள்கிறது.

“ நீ வேற . . . பாவம். ‘காலனிப் பொண்ணு’ இது பார்க்கக்கூடிய ஒரு வேலை ‘டெஸ்பாட்ச்’ னு ‘பாவம்’ பார்த்தோம் பாரு. .. . நமக்கு இதுவும் வேணும். .. . இன்னமும் வேணும் . . . .”

“ நல்லதுக்குக் காலமில்ல . . . . ஒன்னயெல்லாம் அக்கெளவுண்ட் செக்ஷன்ல மாட்ட வச்சு . . . . டிராப் செய்யணும். காலனிப் பெண்ணாச்சேன்னு கருணை வைக்கிறதுக்கு இது காலமில்லை”

“பாவம் பாவம்” என்று கூறியே இம்மக்களின் திறனை வெளிப்ப்படுத்த வாய்ப்பளிக்காமல் சமூகம் மறைத்து விடுகிறது. சாதியத்துற்குப் பன்முகம் உள்ளது. அதில் இது ஒரு விதமாகும்.

முடிவுரை

பெற்றோர் மற்றும் பெரியோர்களின் குழந்தை வளர்ப்பு முறை நன்றாக இருந்தால் நாளைய சமூகம் பண்பட்ட, ஆரோக்கியமானதாக இருக்கும். சிர்கெட்ட, தவறுகள் நிறைந்த இச்சமூகத்தைச் சீர்படுத்த இவர்களால் முடியும். அன்னம் மட்டுமல்ல சரவணன் போன்றவர்களும் சமூகத்தின் பார்வைகு அகப்படாமல் ‘வேரில் பழுத்த பலா’ வாகத்தான் உள்ளார்கள்.

அரசு அலுவலகச் சீர்கேடுகள், குழந்தை வளர்ப்பு முறையும் அவர்களின் பண்பட்ட குணத்தையும் கதைக் கருவாகக் கொண்டு புனையப்பட்டவை புதினமாக உருப் பெற்று உள்ளது. படைப்பாளரின் தேர்ந்த ‘கரு’ கதைப் பின்னலில் ஏற்றதொரு உருவத்தைப் பெற்று விடுகிறது.

gmari3696@gmail.com