வாசகர் முற்றம் – அங்கம் – 02 : “தாய்மொழி கன்னடம், தமிழ்மொழியில் தீராத காதல்”! மெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்!

கன்னட இலக்கியம் அறிமுகம்

விஜி இராமச்சந்திரன்பழங்காலம் (600 – 1200)
கன்னட இலக்கியத்தின் முதல் பெரும் படைப்பாக 9 ஆம் நூற்றாண்டில் எழுந்த கவிராச மார்க்கம் கருதப்படுகிறது. இந்த நூல் கவிதையியல் பற்றியது. 10 ஆம் நூற்றாண்டில் வட்டாராதனே என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் எழுந்தது. இந்த நூல் சமண சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தது. இக் காலத்தில் பம்பா, இரன்னா போன்ற கன்னட மகாகவிகள் எழுதினார்கள். இதனால் கன்னட இலக்கியத்தின் பொற்காலம் என்றும் இது குறிப்பிடப்படுவதுண்டு. இக்காலத்தில் சமண சமயம் சிறப்புற்று இருந்தது.

இடைக்காலம் (1200 – 1700)
போசளப் பேரரசு எழுச்சியுடன் சமணம் வீழ்ச்சி அடைந்து, வீர சைவம் உயர் நிலை பெற்றது. இக் காலத்தில் எழுந்த இலக்கியங்களை  வீரசைவ சாகித்தியா என்று குறிப்பிடுவர். 1300 களில் இருந்து 1500 வரை விசய நகரக் கர்நாடகம்,  விசய நகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்களின் ஆதரவில் வைணவ சமயமும், கன்னட வைணவ இலக்கியமும் வளர்ச்சி பெற்றன. விசய நகர வீழ்ச்சிக்குப் பின்பு மைசூர் அரசு மற்றும் Keladi Nayaka ஆகியவை கர்நாடகத்தை ஆட்சி செய்தன. இவர்களின் ஆட்சியின் கீழும் பல கன்னட இலக்கியங்கள் படைக்கப்பெற்றன.

தற்காலம் (1700 – இன்று)
18 ஆம் நூற்றாண்டு தொடக்கம் ஐரோப்பியர் ஆட்சி இந்தியாவிலும், கர்நாடகத்திலும் நிகழ்ந்தது. ஐரோப்பியரின் தாக்கத்தில் புதினம், கலைக்களஞ்சியம், அகராதி, பத்திரிகை, இதழ் போன்ற வடிவங்கள் கன்னடத்தில் வளர்ச்சி பெற்றன. 20 ஆம் நூற்றாண்டில் பல இலக்கிய இயக்கங்கள் கன்னடத்தில் பிறந்தன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த நவ உதயம் (புதிய எழுச்சி) இலக்கிய இயக்கம் அன்றாட வாழ்வின் விடயங்கள் பற்றி, மனிதபிமான விடயங்கள் பற்றி கருக்களில் இலக்கியம் படைத்தது. 1940 களில் கன்னட முற்போக்காளர் இலக்கிய இயக்கம் எழுந்தது. இவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்து தமது இலக்கியங்களை படைத்தனர். 1950 களில் நவ்யா இலக்கிய இயக்கம் வளர்ச்சி பெற்றது. (ஆதாரம்: தமிழ் விக்கிபீடியா)

வாசகர் முற்றம் தொடரில்  தமிழ் வாசகர்களை அறிமுகப்படுத்தும்போது, ஏன் கன்னட இலக்கியம் பற்றி வருகிறது என யோசிக்கின்றீர்களா?  கன்னட இலக்கிய மேதைகள் சித்தலிங்கையா, புரந்தர தாசர், சிவராம் கரந்த், யு.ஆர் . அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னாட் முதலான பல இலக்கிய ஆளுமைகளைப்பற்றி அறிந்திருக்கின்றேன். சிவராம் கரந்த், அனந்தமூர்த்தியின் கதைகள் திரைப்படங்களாகி கவனத்தையும் பெற்றுள்ளன. கிரிஷ் கர்னாட் நாடக திரைப்படக்கலைஞர். இவர் பல தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். பேராசிரியர் அனந்தமூர்த்தி இலங்கைக்கும் 2003 இல் தேசிய சாகித்திய விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டவர். இந்ததகவல்களின் பின்னணியில் தாய்மொழியை கன்னடமாகக்கொண்டிருக்கும் மெல்பன் வாசகி ஒருவர்,  எவ்வாறு தீவிர தமிழ் வாசகரானார் என்பது பற்றிய பதிவுதான் இது!

தமிழ்நாட்டில், வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பிறந்திருக்கும் விஜயலக்‌ஷ்மி அவர்கள்,  அவுஸ்திரேலியா மெல்பனுக்கு 1995 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தவர். தேர்ந்த தமிழ் இலக்கிய வாசகரான இவரை விஜி என்றுதான் அழைக்கின்றோம். தனது பள்ளிப் பருவத்திலேயே  தனக்கு தமிழில் ஆர்வம் வந்துவிட்டது எனச்சொன்னார்.  ஆனால்,  இவரது  தாய் மொழி கன்னடம்.  ஆயினும் பல தலை முறைகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த  குடும்பத்தின் புதல்வி.  தந்தையார் அரசு பணி நிமித்தமாக பல மாநிலங்களில் பணிபுரிந்தமையால் தாய் மொழி கன்னடத்துடன்  ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம்  என இதர  மொழிகளும் நன்கு பேசத் தெரிந்த இவருக்கு,  தமிழின் மீது தீராக் காதல் ஏற்பட்டதற்கு  நல்ல மாதாந்திர நூல்களை வாசித்து தன்னையும் வாசிப்பில்  ஊக்குவித்த தனது தாயாரும் 7 ஆம் வகுப்பில் தனக்கு தமிழாசிரியராக இருந்த திரு.பத்திநாதன் அய்யாவும் தான் காரணம் எனச்சொல்கிறார்.

“இலக்கியத்தை அவர் எங்களுக்கு கற்பித்த விதம் தமிழின் பால் என்னை ஈர்த்தது. அதன் காரணமாக திருப்பத்தூர் கம்பன் விழாவிற்கு  வருடந்தோறும் சென்று தமிழ் அறிஞர்களின் பேச்சைக் கேட்டு ரசித்திருக்கிறேன். அது போன்றே பள்ளியில் நடைபெறும் எல்லா இலக்கிய போட்டிகளிலும் பங்கு கொண்டு பரிசுகள் பல வாங்கியும் இருக்கிறேன்.” என்றார் விஜி. அவர் மேலும் தனது வாசிப்பு அனுபவம் எவ்வாறு தொடர்ந்தது என்றும் இவ்வாறு விபரித்தார்.

சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ தான் முதன்முதலாக நான் வாசித்த தொடர். மற்றும் மணியனின் ‘அலாஸ்கா பயணத் தொடர்’ மற்றும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ என்பனவற்றையும்  அம்மாவின் அறிவுரையில் வாசித்தது. பள்ளிப் பருவத்திலேயே இவை மட்டுமே வாசிக்க அனுமதி இருந்தது.  பின்னர் படிப்படியாக நானே தெரிவு செய்து படிக்கத் துவங்கிய பின் என் ஆதர்ஸ எழுத்தாளர்  பாலகுமாரனின் “அகல்யா” என்னைத் தீவிர தமிழ் வாசகராக்கியது. கிணற்றுத்தவளையென இருந்த நான் வாசிப்பின் மூலம் சமூகத்தின் பல்வேறு கோணங்களையும்  அறிந்து கொண்டேன். இன்னும் வாசிக்க வேண்டும் என்று ஆர்வம் ஓங்கியது.

.”அது ஒரு கனாக்காலம். கம்பராமாயணம் எனக்கு கனவிலும் நனவிலும் ரீங்கரித்த வண்ணமே இருந்தது. பாரதியின் கவிதைகள் பரவசத்தை தந்தன. ஜெயகாந்தன், இந்துமதி, தி.ஜானகிராமன், ராஜம் கிருஷ்ணன், கி.ராஜநாராயணன் என்று பலரதும் சிறுகதை தொகுப்புகளைப்  படிக்கும் வாய்ப்பு அமைந்தது. மணியனின் பயணக்கட்டுரைகளை எனது தாயார் விரும்பிப் படிப்பார். என்னையும் படிக்கச் செய்வார்.  அந்த  எழுத்துகளின் வழி பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தை காண முயன்றேன்.

 

- விஜி இராமச்சந்திரன் உரையாற்றுகின்றார். அருகில் எழுத்தாளர்கள் முருகபூபதி & நோயல் நடேசன் -

– விஜி இராமச்சந்திரன் உரையாற்றுகின்றார். அருகில் எழுத்தாளர்கள் முருகபூபதி & நோயல் நடேசன் –

எல்லா பதின்மவயது பிள்ளைகளைப் போலவே பாலகுமாரன் என் ஆதர்ஸ எழுத்தாளரானார். பள்ளி இறுதி ஆண்டில் கண்ணதாசன் கட்டுரைகள் வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. “கான மயிலாட கண்டிருந்த வான்கோழி” போல கவிதைகளும் எழுத முயற்சித்திருக்கிறேன். பின்னர் கல்லூரிப் படிப்பு, திருமணம் என்று வேறு எங்கெங்கோ வாழ்க்கைத் தடம் ஓடியது. திருமணம் முடிந்து 23 வருடங்கள்.  அன்று படித்து வியந்த ஆஸ்திரேலியா கண்டத்தில் வாழ்வேன் என்று கற்பனையும் செய்யவில்லை. ஆரம்ப நாட்கள் வெறுமையில் கழிந்தது. ஆங்கிலம் கேட்டு கேட்டு கசந்து போனது. தமிழ் மீது தாகம் வந்தது.

ஆஸ்திரேலியாவில்  மெல்பன் வந்த பின்னர்,  கடந்த 15 வருடங்களாக திரு. நகை சுகுமாறன்  அவர்களது,  வள்ளுவர் கலைக் கூடத்தின் ஒரு அங்கமாக இருந்து இளம் பிள்ளைகளுக்கு தமிழை பயிற்றுவிக்கும் பணியில் அவ்வப்போது ஈடுபட்டேன். அப்படியாக என் இரண்டு குழந்தைகளும் தமிழை பிழையற பேசவும், எழுதவும் பயின்றனர்.  அவர்களின் தமிழ் உச்சரிப்பு எனக்கு பெருமை தருகிறது.  தமிழிசையை பொருள் புரிந்து மேடையில் அவர்கள் பாடும் போது பாரதிதாசன் சொன்ன தமிழ் அமுது காதில் பாயும்.

குழந்தைகள்  வளர்ந்து  ஆளாகிய பிறகு மீண்டும் புது வாழ்க்கை என்றே கூறலாம். என் வாழ்வில் வாசிப்பில் மற்றுமொரு அத்தியாயம் இவ்வாறு அமைந்தது.  என்னை எப்போதும் ஊக்குவிக்கும் காதல் கணவர் இராமச்சந்திரன், மெல்பன் வாசகர் வட்டத்திற்குள்  என்னை இணைத்த என் தோழி சாந்தி சிவகுமாருக்கும்  நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

இதன் மூலம் எழுத்தாளர்கள் திரு. முத்துகிருஷ்ணன், திரு. முருகபூபதி மற்றும் ஜே.கே. ஆகியோரின்  நட்பும் கிடைத்தது. “நுண்ணுணர்வினாரோடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே யொக்கும் ” எனும் நாலடியார் செய்யுள் வரிகளைப் போல வாசகர் வட்டம் ஒரு நல்ல அனுபவத்தை எனக்கு ஒவ்வொரு முறையும் தருகிறது. இப்போது நான் வாசிக்கும் புத்தகம் பாமா எழுதிய “கருக்கு”.
- வாசகர் முற்றக் கலந்துரையாடல் -

– வாசகர் முற்றக் கலந்துரையாடல் –

தமிழ் இனிது. தமிழ் இலக்கியம் ஆழ்ந்த பெருமை உடையது. எழுத்து ஒரு வரம். எழுத்தாளன் தன் எழுத்தின் மூலம் இந்த சமூகத்தை அற வழியில் ஆற்றுப்படுத்தியபடியே இருக்கிறான். இந்தச் சமூகம் நிறைய நல்ல புத்தகங்களை தெரிவு செய்து வாசித்து உய்வடையவேண்டும். இங்கு வளரும் நம் குழந்தைகளுக்கு தமிழை கற்றுத் தரவேண்டும். மொழியின் வாசனையை அவர்கள் முகரட்டும். இலக்கியம் அவர்களை தமிழின்பால் ஈர்க்கும். இது தான் இந்த சமூகத்திற்கு எனது அன்பான  வேண்டுகோள்.”
இவ்வாறு சொல்லும் விஜி இராமச்சந்திரன், எமது அவுஸ்திரேலித் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  2017 இல் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில், அம்பை எழுதிய காட்டில் ஒரு மான் (சிறுகதைகள்) நூலை அறிமுகப்படுத்தி, தமது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

அம்பை தமிழில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி. அவரையும் விட்டுவைக்காமல்,  விஜி இராமச்சந்திரன் வாசித்திருக்கிறார்.

“யார் இந்த அம்பை ? ” எனக்கேட்கும் பல தமிழ் எழுத்தாளர்களும் எம்மத்தியில் வாழ்கிறார்கள்! அதனால் விஜி இராமச்சந்திரன்,  நான் சந்தித்த வித்தியாசமான ஒரு வாசகர். அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>