வாழ்வை எழுதுதல் — அங்கம் –06: தேவாலயங்களில் இறுதிமூச்சை காணிக்கையாக்கிய ஆத்மாக்கள் ! அரசியல்வாதிகளே…. நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…!?

முருகபூபதிஅந்த   தேவாலயத்தின் முன்னால் நிற்கின்றேன்.  சில மாதங்களுக்கு முன்னர்தான் ஏப்ரில் மாதம் 21 ஆம் திகதி அங்கு பலர் தங்கள் இறுதிமூச்சை காணிக்கையாக்கினர். அவர்களின் பெயர்ப்பட்டியல் பதிவான காட்சிப்பலகையின் முன்னால் நின்று மௌனமாக பிரார்த்தித்தேன்.  பிரார்த்தனையின்போது அமைதி அவசியம்  என்று  சிறுவயதில் எனது அம்மாவும் பாட்டியும் அடிக்கடி சொல்லித்தந்திருக்கிறார்கள். எங்கள் வீட்டில்  நவராத்திரி , கந்தசஷ்டி விரத காலங்களில் பிரார்த்தனை வழிபாடு நடக்கும்போது அதற்கு இடையூறு தரும்வகையில் சத்தம் போடக்கூடாது, குழப்படி செய்யக்கூடாது என்று அம்மாவும் பாட்டியும் எச்சரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குப்பயந்து  அமைதியாக இருப்போம். வெள்ளிக்கிழமைகளிலும் திருவிழாக்காலங்களிலும் கோயில்களுக்கு செல்லும்போதும், அங்கே அமைதியாக இருக்கவேண்டும் என்றுதான் புத்தி சொல்லி அழைத்துப்போவார்கள். செவ்வாய்க்கிழமைகளில் அம்மா, எங்கள் ஊரில் சிலாபம் செல்லும் பாதையில் தழுபொத்தை என்ற இடத்தில் வரும் அந்தோனியார் கோயிலுக்கு அழைத்துச்செல்வார்கள். அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கும்போது, அம்மா கையோடு எடுத்துவரும் தேங்காய் எண்ணெய் போத்திலை என்னிடத்தில் தந்து அங்குள்ள தீபவிளக்கிற்கு எண்ணெய் வார்க்குமாறு சொல்வார்கள்.

அந்தோனியார் கோயில் மிகவும்  அமைதியாக இருக்கும். வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அங்கு செல்வோம். கோயில்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்வோம். ஊரின் புறநகரத்திலிருக்கும் பௌத்த விகாரைக்கு வெசாக், பொசன் பண்டிகை  காலங்களில் செல்வோம். எனினும் அங்கிருந்த பள்ளிவாசல்களுக்கு செல்லும் பழக்கம் இருந்ததில்லை. ஆயினும்,  அங்கிருந்த  அல்கிலால் மகா வித்தியாலயத்தில் மேல் வகுப்பு படிக்கும்போது, அவர்களின் பிரார்த்தனைகளை கேட்பதுண்டு. எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களில் அநேகர் இஸ்லாமியர். மூவினத்தவர்களும் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக  எங்கள் ஊர்  விளங்கியமையால், மூவினத்து நண்பர்களையும் சம்பாதித்திருக்கின்றேன்.

ஒரு காலத்தில்,   சிறுவயதில் அமைதியை நாடி வேண்டுதலுக்காக   சென்ற  கோயில்கள், தேவாலயங்கள், விகாரைகள் முன்பாக பொலிஸ் காவலையும் ஆயுதப்படையினர் நிற்பதையும்  இம்முறை பயணத்தில் கண்டு  மனம் அவஸ்தைப்பட்டது. வெள்ளிக்கிழமை தொழுகைவேளைகளில் அங்கிருக்கும் பள்ளிவாசல்களின்  வாயில்களில் மேலதிகமாக ஆயுதப்படையினர் நின்றதையும் கண்டேன். எல்லாம் கடந்த ஏப்ரில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தாக்குதல்களின் எதிரொலிதான்.

இலங்கையில் நான் வசித்த காலப்பகுதியில் இப்படிப்பட்ட காட்சிகளை காணவில்லை. எவ்வாறு இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன..?  என யோசித்துக்கொண்டு நீர்கொழும்பு கட்டுவபிட்டிய  தேவாலயத்தை சுற்றிப்பார்க்கிறேன். தாயகத்தை  விட்டு புலம்பெயர்ந்து  வந்தபின்னர்,  எங்கள் தேசத்தின் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள்  அடுத்தடுத்து நினைவுக்கு வருகின்றன.

1990 ஆம் ஆண்டு,  கிழக்கிலங்கை –  காத்தான்குடியில்  இரண்டு பள்ளிவாசல்களில்  தொழுகைக்கு வந்திருந்த  பலர்மீது, அவர்களை வேண்டாதவர்களினால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
1995 ஆம் ஆண்டு இலங்கையின் வடபுலத்தில் நவாலி புனித பேதுருவானவர் தேவாலயத்தில் வழிபாட்டிலிருந்த பலரில் ஐம்பதிற்கும் அதிகமான தமிழ்பொதுமக்கள் விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலியாகினர். இவர்களும் அந்த தேவாலயத்திற்கு வேண்டுதலுக்காகத்தான் சென்றிருந்தனர்.

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்கு 2005 ஆம் ஆண்டு யேசுபாலகன் பிறந்த தினத்தில் வழிபடச்சென்றார், அந்தப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம். அவர் தமிழ்மக்களின் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பிவந்தவர்.

ஜோசப் பரராஜசிங்கம் யேசுபாலகனிடத்தில் வேண்டுதலுக்காக சென்றவர். அவரை வேண்டாதவர்களினால்  அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு 2008 ஆம் ஆண்டு முதலாம் திகதி ஆங்கிலப்புதுவருடம் பிறந்த வேளையில் வழிபடச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன்,   அவரை வேண்டாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இவ்வருடம்  ( 2019 ) ஏப்ரில் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தின்போது கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம் ,  மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் என்பவற்றுக்கு வேண்டுதலுக்குச்சென்றவர்கள் மீதுதான் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள்  நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். 

இவ்வாறு வேண்டுதலுக்காக சென்றவர்கள் மீது, ஏன் கொலைவெறி தாக்குதல்கள் நடந்தன…?   இந்த ஈனச்செயல்களைச் செய்தவர்களுக்கு சிறு வயதில் நல்ல புத்தி சொல்லிக்கொடுக்கத்தக்க அம்மாமார், பாட்டிமார், ஆசான்கள் கிடைக்கவில்லையா..?
எனினும் அந்த தீய சக்திகளுக்கு  எமது சமூகமும் ஊடகங்களும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயரை சூட்டிவைத்திருக்கின்றன.  அதுதான்  “ இனந்தெரியாதவர்கள்  “

சம்பவங்கள் நடந்தபின்னர் விசாரணை என்ற பெயரில் ஏதோவெல்லாம் நடக்கும். நாடாளுமன்றத்திற்கு சென்றிருப்பவர்கள் விவாதிப்பார்கள். தேர்தல் காலம் வந்ததும், எதிரணியிலிருப்பவர்கள்,  “    நாம் பதவியிலிருந்திருந்தால், மக்களை காப்பாற்றியிருப்போம்  “  என்பார்கள்.  அதற்கு எதிர்வினையாற்றும் வகையில்,     எதிரணியினர்  பதவியிலிருந்த  காலத்தில் நடந்த சம்பவங்களை ஆளும் தரப்பு பட்டியலிட்டுப்பேசும்.! மக்களிடம் ஆணை கேட்பது அதிகாரத்திற்காகவே. அதனைப்பெறுவதற்கு ஏட்டிக்குப்போட்டியாக தேர்தல் பிரசார மேடைகளை முடிந்தவரையில் பயன்படுத்திக்கொள்வார்கள்.
வாழ்வை எழுதுதல்   --  அங்கம் –06: தேவாலயங்களில்    இறுதிமூச்சை   காணிக்கையாக்கிய   ஆத்மாக்கள் ! அரசியல்வாதிகளே…. நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…!?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பே, புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தும், எதனையும் செய்யாமல் கையாலாகத்தனமாக இருந்தவர்களையும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளையும் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்தினால் ஒரு விசாரணை தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டது. அதிலும் பெரிய இழுபறிகள் நிகழ்ந்தன.
தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸ் அந்த விசாரணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார். அதனை அவதானித்தார்  சம்பவங்கள் நடந்தவேளையில் நாட்டிலிருக்காத தேசத்தின்  அதிபர் மைத்திரியார். உடனே என்ன செய்தார்?

“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள், பாதுகாப்பு துறையிலிருந்து வெளியேறியவர்கள் “  என்று ஒரு பெரிய குண்டைப்போட்டார்.  அது தேவாலயங்களில் பாவிக்கப்பட்ட குண்டுகளை விட மிகவும் வலிமையானது.
அந்த பொன்னான வாக்கைக்கேட்டதும்   சிசிர மெண்டிஸ் தனது ராஜினாமா கடிதத்தை   பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொடவிடம் கையளித்துவிட்டு, தனக்கு சுகமில்லை எனச்சொல்லி ஓய்வுக்குச்சென்றார்.

“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்துவதை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை   “  என்றும் மற்றும் ஒரு அதிரடிக்குண்டைப்போட்டார்   மைத்திரியார். 
இவ்வாறெல்லாம் அவர் செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டே தெரிவுக்குழு பல வாரங்களாக விசாரணை செய்துகொண்டிருந்தது. ஊடகங்களும் அந்த விசாரணை வாக்குமூலங்களுக்காக பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன. நாமும் படித்துத்  தொலைத்( ந்) து  கொண்டிருந்தோம்.

அங்கு சாட்சியமளித்த முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசிய சுத்தமான சிங்கள மொழியை  கேட்டு வியந்துபோன –  எதிர்காலத்தின் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்  கனவில் மிதந்த ஃபீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்கா, “  தம்மால் கூட அவ்வாறு அழகாக சிங்களம் பேசமுடியவில்லையே   “ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தேசிய பாதுகாப்பு சபையை உரிய முறையில்  ( முன்னாள் ) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்ட வில்லை என பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.
“  தன்னை பதவி விலகுமாறும், அவ்வாறு பதவி விலகினால் தனக்கு இராஜதந்திர பதவியொன்றை வழங்குவதாகவும்  “ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அழுத்தங்களை பிரயோகித்திருந்ததாக பொலிஸ் மாஅதிபர் பூஜித்த  ஜயசுந்தர சாட்சியமளித்திருந்தார்.

இறுதியில் என்ன நடந்தது…? அந்த விசாரணைக்குழுவின் அறிக்கையை மைத்திரியார் கிடப்பில் போட்டார்.

“ போதைவஸ்த்து கடத்தல்காரர்களை எப்படியும் தூக்கிலே தொங்கவிடுவேன்  “  என்று தனது பதவிக்காலத்தின் இறுதிப்பகுதியில் தொடர்ச்சியாகச்  சொல்லிக்கொண்டிருந்த அவர்,  இறுதியில் செய்தது என்ன..?

ஒரு வெளிநாட்டுப்பெண்ணை துடிக்கத்துடிக்க கொன்றுவிட்டு  மரணதண்டனைக்கைதியாக இருந்த ஒருவருக்கு பொதுமன்னிப்பு அளித்ததுதான்!

அதிபர் தேர்தல் நெருங்கியபோது,  எதிரணி ( ராஜபக்‌ஷக்கள்)  தனது அரசின் மீது பாதுகாப்பு தொடர்பாக முன்வைத்த விமர்சனங்களினால் கலவரமுற்றிருந்த பதவியிலிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு,  அல்பக்கதாதியின் உருவத்தில்  ஒரு  துரும்பு கிடைத்தது!   ஐ.எஸ்.ஐ எஸ். அமைப்பின் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டார்.

அதனை தனது  அரசு கண்டித்ததாம்…!   ஆனால்,  நாட்டின் தேசிய பாதுகாப்பை பொறுப்பேற்கப்போவதாக தேர்தல் பிராசர மேடைகளில்   கூறிக்கொண்டிருக்கும் தரப்பினர்  ( ராஜபக்‌ஷக்கள் ) அது தொடர்பாக கருத்துக்களை கூறுவதற்கு தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன்,   இவர்களுக்கும்  அந்தப்  பயங்கரவாத அமைப்புடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா? என்ற கேள்வி எழுவதாகவும் சொன்னார்.

இறுதியில் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் அதிபர் தேர்தல் முடிந்தவுடன் காட்சிகள் மாறின. காட்சி மாற்றங்களை வழக்கம்போன்று ஊடகங்கள் பக்கம் நிரப்பி, கேலிச்சித்திரங்கள் வரைந்து தனது சேவையை தொடருகின்றன.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அவசரமாக இலங்கை  வந்த பாரதப்பிரதமர் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதிபர் தேர்தல் முடிந்த மறுகணமே தனது வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ்.  ஜெய்சங்கரை அவசரமாக இலங்கைக்கு  அனுப்பி, தனது எஜமான் உங்களுடன் பேசவிரும்புகிறார். அவசியம் வாருங்கள் என்று புதிய அதிபருக்கு அழைப்புவிடுத்தார்.
புதியவரும் பதவி ஏற்றபின்னர் முதலாவது விஜயமாக  பாரதம் சென்றார். இதற்கிடையில் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களும் புதிய அதிபரை சந்தித்து நடந்த சம்பவங்களுக்கு சரியான உரிய விசாரணைகளை நடத்துமாறு கோரியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்து ஏழு மாதங்களாகிவிட்டன. இந்நிலையில் முன்னாள் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின்  “ கம்பி நீட்டும்  “ படலங்கள் தொடங்கியிருக்கிறது.

அன்று கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குச்சென்று,  மெழுவர்த்திகளை ஏற்றி, மரணித்த ஆத்மாக்களின் சாந்திக்காக பிரார்த்தித்தேன்.

குண்டு வெடிக்கப்பட்ட இடத்தை கண்ணாடியால் சட்டமிட்டு நினைவிடமாக்கியிருந்தார்கள்.   அதன் முன்னால் கனத்த மனதுடன் சில  நிமிடங்கள் நின்றேன்.  இந்த இடத்தில்தான் பேராயர் மல்கம் ரஞ்சித் தனது பரிவாரங்களுடன் வந்து தாள் பணிந்து அஞ்சலி செலுத்தினார்.

தேவாலயம் திருத்தவேலைகளுக்குப்பின்னர் பொலிவுடன் காட்சியளிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு பொலிவிழந்துவிட்டது.

மீண்டும் கொல்லப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் தாங்கிய காட்சிப்பலகையின் முன்பாக வந்தேன்.

அங்கு நின்ற ஒரு முதிய மாது, அதனைப்பார்த்தவாறு,  “  இவர்களை கொன்றவர்களுக்கும் எங்கள் ஆண்டவர் பாவசங்கீர்த்தனம் கொடுப்பார்.  “ எனப்பெருமுச்செறிந்து சொன்னதை கேட்டேன்.  ஆம்..!  அவரின் ஆண்டவர்,   “  ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு  “  என்றுதானே சொல்லியிருக்கிறார்! 

எனக்கு உடனே இலக்கிய நண்பர் ஷோபா சக்தி எழுதிய CROSS FIRE என்ற சிறுகதை நினைவுக்கு வந்தது. இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் கொல்லப்பட்ட தியாகராஜா மகேஸ்வரன்  பற்றிய கதை அது. ஷோபா சக்தி அதனை தனது பிரத்தியேக பாணியில் எழுதியிருப்பார். அதன் இறுதிப்பந்தியில் உபுல் கீர்த்தி என்ற பத்திரிகையாளரிடம்  சிவபாலன் என்பவர் இவ்வாறு ஒரு கேள்வியை முன்வைப்பார்:

“ அது மகேஸ்வரனுக்கு வைக்கப்பட்ட  இலக்குத்தானா…? அல்லது வேறு யாருக்காவது வைக்கப்பட்ட இலக்கில் மகேஸ்வரன் தவறுதலாக சிக்கினாரா..?  “

இந்த எதிர்பாராத கேள்வியினால் பத்திரிகையாளர் உப்புல் கீர்த்தியிடமிருந்து,  “ அது கடவுளுக்கு வைக்கப்பட்ட இலக்கு. கும்பிடப்போன மகேஸ்வரன் குறுக்கே மாட்டிக்கொண்டார். “ என்று பதில் வரும். உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிர்நீத்தவர்கள் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார உத்திகளுக்கு பயன்பட்டர்கள்.  அவர்களின் வாழ்வும் கதைகளாக எழுதப்படும்.  அவ்வளவுதான்!

letchumananm@gmail.com