வாசகர் முற்றம் – அங்கம் 06: சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையில் வாசித்து தேர்ந்திருக்கும் அசோக் ! தாஸ்தாவஸ்கியை ஆதர்சமாக கொண்டிருக்கும் இளம்தலைமுறை வாசகர்!

அசோக் - வாசகர்சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை நாவல் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்வு, மெல்பனில் கடந்த ஆண்டு ( 2019 ) நடந்தவேளையில் நான் முதல் முதலில் சந்தித்த இலக்கிய வாசகர் அசோக். எமது 19 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் நிகழ்ந்த வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்கில், இவர் மறைந்த தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோரக்கிராமத்தின் கதை நாவலைப்பற்றி பேசினார். தமிழகம்  – மதுரையில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் துறையில் கற்றுத் தேர்ந்தவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மெல்பன் வாசியாகிவிட்டவர். தன்னை தீவிர வாசகனாக்கியவர், மதுரையில் தனது தமிழ் ஆசானாக விளங்கியவரான  குமரேசன் அய்யா என நன்றியோடு சொல்லிவருகிறார்.

சமூகத்தில் ஒரு நல்லபிரஜை உருவாவதற்கு பெற்றவர்களும்  ஆசிரியர்களும் நல்ல உறவுகளும் சிறந்த நட்புகளும், படிக்கும் புத்தகங்களும்தான் பிரதான காரணம் என்பார்கள். பள்ளிப்பருவத்தில் அசோக்கின் தமிழ் ஆர்வத்தை அவதானித்த ஆசான் குமரேசன், பரீட்சைகளில் தமிழ்ப்பாடத்தில் அசோக் சிறந்த மதிப்பெண்கள் பெறும்போதெல்லாம், பேனை வாங்கி பரிசளித்து பாராட்டி ஊக்குவித்தவர். இதனை இங்கு அசோக் நினைவூட்டுவதன் ஊடாக அன்றைய ஆசிரியர்களின் அடிப்படை இயல்புகளை இக்காலத்தலைமுறையினருக்கும் இக்கால ஆசிரியர்களுக்கும் நல்லதோர் செய்தியாகத்  தருகின்றார். அந்த ஆசான், அசோக்கிற்கு  செய்யுள் மற்றும் சங்கத்தமிழ் பாடல்களையும் இலக்கியப்பாடல்களையும் சொல்லிக்கொடுத்துள்ளார்.

அசோக்,  தனது  வாசிப்பு அனுபவத்தை  பாடசாலையில்  கற்ற துணைப்பாட நூல்களிலிருந்தே பெற்றிருக்கிறார்.  அந்நாட்களில் படித்த  நூல்களை சுருங்கக் கூறுதல் ,  அதனை சுருக்கி எழுதுதல் முதலான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த நடைமுறை தமிழகத்திலும் இலங்கையிலும் முன்பிருந்தது. தற்போது இந்த நடைமுறை இருக்கிறதா என்பது தெரியவில்லை!? அசோக்கின் தமிழாசிரியர், அசோக்கின் ஆற்றல்களை நன்கு இனங்கண்டிருந்தமையால், பாடசாலை ஆண்டுவிழாக்களில் மேடையேற்றப்படும் நாடகங்களுக்கு கதை வசனம் எழுதுவதற்கும் பயிற்சி வழங்கியிருக்கிறார். நாடகப்பிரதிகளை எவ்வாறு எழுதவேண்டும், அவற்றில் வரும் பாத்திரங்களை எவ்வாறு வார்த்து வடிவமைக்கவேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக்கொடுத்து நாடகத்துறையிலும் ஊக்கம் வழங்கியுள்ளார். அதற்காக அசோக்கிற்கு அவர் அறிமுகப்படுத்தியது சேக்‌ஷ்பியரின்  நாடகங்களை.  இவ்வாறு பாடசாலையில் தொடங்கிய வாசிப்பு  பழக்கம், வீட்டிலும் அசோக்கிற்கு தொடர்ந்துள்ளது.

மதுரையில், அசோக்கின் கல்லூரி நாட்கள் மற்றும் ஒரு திருப்புமுனை.   நவீன தமிழ் இலக்கியத்தில் தீவிர நாட்டம் இக்காலப்பகுதியில்தான் இவருக்கு வந்துள்ளது.  தனக்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர் தனது  நண்பனின்  தந்தை தன்ராஜ் அவர்கள்  என்று அவரையும் அசோக் மறக்காமல் நன்றியுணர்வோடு நினைவுகூர்கிறார். தன்ராஜ்  சிறந்த வழக்கறிஞர் எனவும்  தீவிர இலக்கிய வாசகர் எனவும் சொல்லும் அசோக்,  சுந்தர ராமசாமி , பூமணி, தொ.பரமசிவன் முதலான  எழுத்தாளர்களை தனக்கு அறிமுகப்படுத்தியவரும் அவர்தான் எனச்சொல்கிறார்.  இன்றும்தான்  வாசிக்கும் அனைத்து இலக்கியத்திற்கும் அவரே Inspiration எனவும் குறிப்பிட்டார்.

அசோக்  தனது  முதல் வேலையை  பெங்களூரில் ஆரம்பித்தவர். அங்குதான்  தமிழ் நூல்கள் தவிர உலக இலக்கியங்களையும் வாசிக்கத்  தொடங்கினார். அந்த அனுபவங்களைக்கேட்டேன். 

“ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாவஸ்கி மீது அதிக ஈடுபாடு கொண்டு வாசித்தேன். இன்றும் என் சிறந்த நண்பன்தாஸ்தாவஸ்கிதான். டால்ஸ்டாய், துர்கனேவ், செகாவ், ஒரான் பமுக், முரகாமி, டிக்கன்ஸ்  என உலக எழுத்தாளர்களின் இலக்கியங்களைத்  தேடி வாசித்தேன். க.நா.சு. பற்றி  நன்கு அறிவீர்கள். அவர்தான் தமிழ் இலக்கியப்பரப்பிற்கு உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி அடையாளம் காண்பித்தவர்.  அவரது எழுத்துக்களினால், உலக இலக்கியம் பற்றியும் தெரிந்துகொண்டேன்.   அய்ரோப்பிய இலக்கியங்களை எனக்கு  அறிமுகப்படுத்தியது  க.நா.சு. அவர்களின்  எழுத்துக்கள்தான் என்பதையும் இவ்வேளையில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.    கார்ல் மார்க்ஸையும்  பெரியாரையும்  வாசித்ததும் இக்காலத்தில்தான்.  இதுவே எனது அரசியல் பார்வையையும்  செம்மைப்படுத்தியது.

வேலை நிமித்தமாக மெல்பன் வந்து சுமார் பத்து  வருடங்களாகிவிட்டன.  இங்கு வந்த பின்னர்  கவிதை வாசிப்பில் ஆர்வம் வந்தது.  இரண்டாம் உலகப் போர் குறித்த பல புத்தகங்களை  வாசித்தது இக்காலத்தில் தான். சென்ற ஆண்டு மதுரை சென்ற பொழுது எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன் அண்ணன் அவர்களை ஒரு புத்தகக் கடையில் தற்செயலாகச்  சந்தித்தேன். என் வாழ்வை மாற்றிய சில சந்திப்புகளில் முக்கியமான சந்திப்பு அது. அவர் மூலம் மெல்பன் வாசகர் வட்டத்தில் சேர்ந்தேன்.
சிறந்த நண்பர்களையும் , சிந்தனையாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் வாசிப்பை வேறு தளத்திற்கு இட்டுச் சென்றது.

‘ஒரு புளியமரத்தின் கதை’ வாசகர் வட்ட சந்திப்பில் அந்த நூலைப் பற்றிய என் கேள்விக்கு நீங்கள் அளித்த பதில் உங்கள் அனுபவத்தில் வந்தது. எந்த நூலிலும் இல்லாதது. கடந்த 2019 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியத் தமிழ் கலை, இலக்கியச்சங்கம் மெல்பனில் நடத்திய 19 ஆவது தமிழ்  எழுத்தாளர் விழாவில் தமிழக படைப்பாளி  நாஞ்சில் நாடன் அவர்களைச்  சந்தித்தது என் வாழ்வின் முக்கிய தருணம். பள்ளியில் பயின்று கைவிட்ட சங்க இலக்கியத்தை மீண்டும் வாசிக்கத்  தூண்டியது அவரது  எழுத்தே. தற்போது  கம்பராமாயணம் வாசிக்கத்  தொடங்கி உள்ளேன்.  அதற்கு  மதமோ, கடவுளோ காரணம் அல்ல. கம்பனின் கவியே காரணம். “  இவ்வாறு தனது வாசிப்பு அனுபவத்தின் படிமுறை வளர்ச்சியை அசோக் பகிர்ந்துகொண்டார்.

அசோக்கின் வாசிப்பு அனுபவத்திலிருந்து எமக்கு புலனாகிய விடயங்கள்:   இவரது மனதிற்கு நெருக்கமான எழுத்தாளர் தாஸ்தாவஸ்கி. தமிழில் புதுமைப்பித்தன். தனது வாசிப்பு அனுபவங்களை தனது பிரத்தியேக ஏடு ஒன்றில் பதிவுசெய்துவரும் அசோக், எழுத்தாளர் – இலக்கியப்பயணி அ. முத்துக்கிருஷ்ணன் வழங்கிய ஊக்கத்தினால், வலைப்பதிவுகளிலும் எழுதுவதற்கு ஆர்வம் கொண்டிருக்கிறார்.  அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அயராமல் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தத்  தீவிர வாசகரிடமிருந்து எதிர்காலத்தில்  சிறந்த ஆக்க இலக்கியப்படைப்புகளை எதிர்பார்க்கலாம்.

இலக்கிய நண்பர் அசோக்கிற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

letchumananm@gmail.com