இர.மணிமேகலை (பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி.,கோயம்புத்தூர்.) கவிதைகள் –
1. கூடுதுறை
சிந்தனைகளற்றுச் சஞ்சரித்தவாறிருந்தது மஞ்சள்
அவ்வப்போது பளிச்சிடும் கீற்றுக்களும்
அதன் நிமித்தமாகவே இருந்தது
மஞ்சளைத் தனித்தியங்கவிடாத நீலம்
தன்னை அதனுள் செலுத்தியபடி
நிறம் பாய்ச்ச அதற்கொரு ஆயுதம் கையகப்பட்டது
தேன் ஊறும் சொற்களில்
மூழ்கிப்போன மஞ்சள்
தன் நிறமிழந்து பச்சையாக மாறிப்போனது
பச்சையின் பிரவாகம் தாங்காது
ஆரஞ்சு சிவப்பிடம் சென்றது
கருமையும்கூட நெகிழ்ந்தது
சினங்களின் தீயை நீரால் தணித்துக்கொண்ட சிவப்பு
சற்றுத் தடுமாறியது பின்
நீலத்தின் மடைமாற்றத்திற்குக் காத்திருக்கத்தொடங்கியது
பச்சையின் அலை வீசிக்கொண்டுதானிருந்தது
சிவப்போ மழைத்துளியின் சாரலென
புன்னகையை உதிர்த்திருந்தது.
2. எல்லைகள்
வட்டமொன்று உசிதமென்கிறாள்
அதனுள்ளே
மென்மை தேவை
இனிமை வேண்டும்
வெம்மை கூடவே கூடாது
மேலும் அதை
எல்லோருக்குமானதாகப் பொதுமைப்படுத்தினாள்
வட்டத்தின் பெருமையும்
விவரணையும் விஸ்தரித்துக் கொண்டேயிருந்தது
வட்டத்தினுள் இருப்பவர்களுக்கு
வட்டம் பற்றிய உணர்வு தேவையில்லை என்றும் கூறும் அவள்
வட்டத்திற்கு வெளியே நின்றிருந்தாள்
நிறம் மாறும் சாட்டை ஒன்று
அவளைச் சுழற்றியது
வட்டத்து வாசிகளின் பார்வையில்
இப்பொழுது இரக்கம் கூடியிருந்தது.
3. ஆள்வார்கள்
கருமேகங்கள் சூழ்ந்த
மீளா வெண்படு குழி
கருடாழ்வாரின் அருளிச்செயல்களுக்கு
ஏங்கியிருக்கின்றன அவயங்கள்
கடலலை மேல் வரும் படகொன்று
சினங்கொண்டு முரண்பட்ட
அழகிய தோழியொருத்தியென
மிதந்து செல்கிறது
என் நகக்கண்களோ
பனியிட ஆள்வார்களின்
செயல்களில்
நனைந்தபடி.
உடுத்துத்திரியும் எருமைமாடுகள்
– துவாரகன் –
நான் எருமைமாடுகளை முன்னரும் கண்டுள்ளேன்
அவை எப்போதும் உடுத்திக் கொண்டதாக அறியவில்லை
புரண்டு படுக்கும் சேற்றுத்தண்ணீர்
வற்றிப்போன நாள்முதல்
எருமைமாடுகள் உடுக்கத் தொடங்கியுள்ளன.
தங்கள் லிங்கம் வெளியே தெரியாதபடி
அம்மணத்தைக் கண்டு
குழந்தைகள் அருவருக்காதபடி
அழகாக உடுக்கின்றன.
பட்டுப்பீதாம்பரத்துக்கும்
சுக்கான் பிடித்து புகை விடுதலுக்கும்
வெளிநாட்டுச் சரக்குகளில் மிதப்பதற்கும்
உடுத்துத் திரியவேண்டும் என்று
கரிக்குருவி
ஒருநாள் சீட்டியடித்துச் சொன்னதாம்.
யாருக்குத் தெரியும்
மனிதர்களின் ஆடைகளைப் பிடுங்கி
எல்லா விலங்குகளுக்கும் விற்றுவிடும் காலம் ஒன்று
எருமைமாடுகளின் புண்ணியத்தில் கிடைக்கவும் கூடும்.
1. நதியும் நானும்
– ரொஷான் தேல பண்டார; தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் –
பார்வையின் எல்லைக்குள் எங்கும் மழையேயில்லை
எரியும் மனதை ஆன்மீகத்தால் குளிர்விக்க
ப்ரிய நேசத்தால் நிறைந்த இன்னுமொரு மழை
அவசியமெனக் கருதுகிறேன் நான்
சற்று நீண்டது பகல் இன்னும்
மேற்கு வாயிலால் உள்ளே எட்டிப் பார்க்கும் பாவங்களை
அதற்கேற்ப கரைத்து அனுப்பிவிடத் தோன்றுகிறது
வாழ்நாள் முழுவதற்குமாக சுமந்து வந்த அழுக்குகள் அநேகம்
வந்த தூரமும் அதிகம்
எல்லையற்றது மிதந்து அசையும் திசை
இன்னும் நிச்சலனத்திலிருக்கிறது நதி
எனினும்
கணத்துக்குக் கணம் மாறியபடியும்
ஆழத்தில் அதிர்ந்தபடியும் கிடக்கிறோம்
நதியும் நானும்
2. எனது குடும்பம்
– தக்ஷிலா ஸ்வர்ணமாலி; தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை –
விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்
விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்
விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான்
பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன்
எமக்கென இருக்கிறது
நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று
விஷமேறிய மரத்தின் சிற்பம்
– – எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) –
மலைப்பாம்புக் குட்டிகளென விழுதுகளைப் படர விட்ட
மரத்தின் ஆதிக் கிளைகள்
காட்சி கூடத்தில் வனம் பார்க்கும் சிற்பங்களாகின்றன
விருட்சங்களை வெட்டிச் செல்லும்
விஷமேறிய பார்வைகளை சிற்பி
காடுகளெங்கிலும் சுமந்தலையும் செம்மாலை நேரங்களில்
வன மரங்களின் இலைகளினூடு சூரியனாடும் மஞ்சள் நடனம்
எவ்வளவு ப்ரியத்துக்குரியது
நச்சேற்றிய சிற்பியின் பாதங்களிலேயே வீழ்ந்து கிடக்கும் மரங்களில்
அவனது எண்ணங்களிலிருந்தும் ஆற்றல்களிலிருந்தும் உருவாகிய
வனக் கொலைகளுக்கான ஆயுதங்கள் தீட்டப்படுகையில்
வன்மங்கள் கூராகின
இங்கு தாயின் கரத்திலிருந்துகொண்டே தடவிப் பார்க்கிறது
புராதனச் சடங்குகளின் பிரிந்த விம்பங்களென
தனித்திருக்கும் அம் மரச் சிற்ப விலங்குகளால்
எவ்வித ஆபத்துமில்லையென்பதை உணர்ந்த குழந்தை
பிஞ்சு விரல்கள் தொட்ட மரங்கள்
உடல் சிலிர்த்து எழுந்திடப்
பற்றியெரிகிறது மலைக் காடு
வாழ்வைகொண்டாடு
– மெய்யன் நடராஜ் (டோஹா கட்டார் ) –
வழிதவறி போனவர்க்கு
வாழ்க்கை ஒரு காடு
வழியறிந்து வாழ்பவர்க்கு
வசந்தமுள்ள வீடு
மொழியுணர்ந்து படிப்பவர்க்கு
முழு அறிவு ஏடு
விழி திறந்து நீ படித்து
வெற்றியதை தேடு
கிலிபிடித்து தவிப்பவர்க்கு
கேவலம் சுடு காடு
எலிபிடிக்கும் பூனையிலும்
ஈனமிவர் பாடு
சலிப்படைந்து மனமுடையும்
சஞ்சலத்தின் கூடு
நலிவடைந்து வாடுமிவர்
நடைவழியை மூடு
உளிசெதுக்கும் சிற்பமென
உனைசெதுக்கி போடு
விளிப்பதற்குள் சேவைசெய்து
விளம்புதலை நாடு
அளிப்பதிலே வள்ளலென
ஆகிவிடு ஈடு
களிப்புடனே வாழ்வதனை
கட்டிகொண் டாடு
அகப்படாத வித்தை
– மு.கோபி சரபோஜி –
காலார கிளம்பி
கருக்கல் மறைவில்
வயிற்றுக்கொரு கையறு பாடி
கையும்,காலும்
அழம்பியே பழக்கப்பட்ட தாத்தாவிற்கு………..
வருடம் போயும்
பிடிபடவில்லை
பத்துக்கு நாலு பாத்ரூமில்
பக்குவமாய் வயிறு கழுவி
புறம் வருதல்!
அடிதடி…
-செண்பக ஜெகதீசன் –
படித்துப் பெறும்
பட்டங்களுக்கு அடித்துக்கொள்ளாமல்,
படிக்காமலே
பெயருக்குப் பின்னே
போட்டுக்கொள்ளும்
சாதிப்
பட்டங்களுக்காக அடித்துக்கொண்டு
சண்டையிட்டுச் சாகிறாயே
மனிதனே,
அது ஏன்…!
வேறோர் பரிமாணம்…
– ஜுமானா ஜுனைட், இலங்கை. –
வளி கொண்ட உலகமெலாம் நடந்து
“வழி”யற்ற உள்ளங்களைப் பார்த்தேன் –
வலித்தது…
வலியிலாத உள்ளங்கள் வாழும்
உலகமெங்கே தேடிப்பார்த்தேன் –
“வெளி”களில் கண்டேன்….!
அண்டமெல்லாம் மின்னும்
நட்சத்திரங்கள் அருகிலே
ஓருலகாவது இருக்கலாம்…
அங்கே –
மனிதன் போன்றோ வேறோ
பல்லுயிரினங்கள் உலவலாம்…
நெருங்கி வரும் நதிகளில்
தேன் பாயலாம்..
நெருங்காமல் வெப்பமெல்லாம்
தணிந்திடலாம்..
எட்டும் திசையெல்லாம்
களி கொள்ளலாம்..
ஒளிக்குக் கிட்டும் கதிகளில்
நாம் செல்லலாம்..
தொலைவு வெளி காலமெல்லாம்
சுருங்கிடலாம்…
தொல்லை கொள்ளை களவில்லாமல்
வாழ்ந்திடலாம்…
எண்ணாத காட்சிகள் தோன்றிடலாம்..
நாம்
எண்ணியது உடனேயே நடந்திடலாம்…
மண்ணுலகில் காணாத மாயம்
அங்கெல்லாம் உண்டென்றால்
அங்கு மட்டும் வாழ்க்கை
வலிக்காது சலிக்காது நிலைத்தோங்கும்…!
வழியற்ற உள்ளங்களை ஆங்கனுப்ப
“வழியொன்று” தேடுகிறேன் இப்போது….!!
jjunaid3026@yahoo.com