சாஹித்ய அகாடமியில் கிடைத்த ஒரு நட்பு – பேராசிரியர் மோஹன்லால் (1)

‘Literature is what a man does in his lonelinessDr. S. Radhakrishnan

‘இலக்கியம் ஒரு மனிதன் தன் தனிமையில் கொள்ளும் ஈடுபாடு’1956-லோ என்னவோ அகாதமிகளைத் தொடக்கி வைத்துப் பேசிய டாக்டர். எஸ் ராதாகிருஷ்ணன்

- வெங்கட் சாமிநாதன் -எனக்கும் சாஹித்ய அல்லது எந்த அகாடமிகளுக்குமே (நிறுவனமாகி பூதாகரித்து முன் நிற்கும் இலக்கியத்துக்கும்) என்ன சம்பந்தம்?. ஒரு சம்பந்தமும் இல்லையென்று தான் நான் தில்லியில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து (1956 டிஸம்பர் 29 ) தோன்றியது. சாஹித்ய அகாடமி இருப்பது ஒரு அழகான கட்டிடத்தில். அந்த கட்டிடத்தை நிர்மாணித்தவர்  ரஹ்மான் என்னும் ஒரு கட்டிட கலைஞர்.. இந்திராணி ரஹ்மான் என்னும் அன்று புகழ்பெற்றிருந்த நடனமணியின் கணவர். வாசலில் ரஷ்ய எழுத்தாளர் புஷ்கினின் சிலை வரவேற்கும், மிக அழகான கம்பீரமான தோற்றம் கொண்டது அந்த சிலை. எழுத்தாளன் என்றாலே ஒரு பஞ்சபரதேசி உருவம் நம் கண்முன் நிற்குமே. அப்படி அல்ல.   ஏழு வீதிகள் பிரியும் ஒரு போக்குவரத்து வட்டத் தீவினைப் பார்த்து நிற்கும். கட்டிடத்தின் பெயர் ரவீந்திர பவன். உள்ளே நுழைந்ததும் தலைகுனிந்து இருக்கும் தாகூரின் மார்பளவுச் சிலை ஒன்றைப் பார்க்கலாம். வேத காலத்து ரிஷிபோல. அக்காலத்தில் கவிகளும் ரிஷிகளாகத் தான் இருந்தார்கள். வால்மீகி, வியாசர், அதனால் தானோ என்னவோ வள்ளுவருக்கும் ஒரு ரிஷித் தோற்றம் கொடுத்து இருக்கிறோம். எல்லாம் அழகானவைதான். மூன்று காரியா லயங்களை அது உள்ளடக்கியது. லலித்கலை, சாஹித்யம் பின் சங்கீதமும்  நாடகமும். எல்லாம் ஒன்றேயான தரிசனத்தின் மூன்று தோற்றங்கள் என்ற சிந்தனையை உள்ளடக்கியது போல். ஆனால், உள்ளே நடமாடியவர்களுக்கு அது பற்றிய பிரக்ஞை இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவர் மற்றவரோடு சந்தித்துப் பேசி நான் பார்த்ததில்லை. காண்டீனைத் தவிர என்று சொல்ல வேண்டும்.

இந்த இடம் தில்லியிலேயே எனக்கு மிகவும் பிடித்த இடம். எல்லா கலைக்கூடங்களும், திரை யரங்குகளும், கலைப் பயிற்சி மையங்களும் அந்த மையப் பகுதியிலிருந்து பிரியும் ஏழு வீதிகளையும் நிறைத்திருக்கின்றன. இப்படி ஒரு இடம் வேறு எந்த நகரிலாவது ஒரு இடத்தில் எல்லா கலைக்கூடங்களும் சங்கமித்திருப்பதைக் கண்டது உண்டா? எனக்கு சந்தேகம் தான். இந்தியா வரும் எந்த நாட்டுக் கலைஞருக்கும் பரிச்சயமா யிருக்கும் இடம் இது. அவர்கள் பாதங்கள் நடமாடிய இடம். எனக்கு பல நாடுகளின், பல கலைகளின் பரிச்சயத்தைத் தந்த இடம் அது.

தில்லியில் நான் வாழத்தொடங்கிய நாளிலிருந்து தில்லியை விட்டுச் செல்லும் வரை வாரம் ஒன்றிரண்டு மாலை நேரங்களையாவது சில சமயங்களில் வாரத்தின் எல்லா மாலை நேரங்களையும் அங்கு கழித்திருப்பேன். கலை உணர்வும் இலக்கியப் பசியும் கொண்ட எவனுக்கும் ஒரு தரத்தில் அவனுக்கு வேண்டியதை அந்த இடம் கொடுக்கும். எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. இப்போதைய சந்தர்ப்பத்தில் இலக்கியத்தை, குறிப்பாக தமிழ் இலக்கியத்தைப் பற்றி மாத்திரம் பேசுவோமே.

இதில் நான் பங்கு கொண்டது என்பது நிகழ்ந்தது அந்தக் கட்டிடத்தில் அடியெடுத்து வைத்து சுமார் 32 வருடங்கள் கழித்துத்தான். அது வரை நான் ஒரு பார்வையாளனாகவே எட்ட நின்று அல்லது கடைசி இருக்கையில் இருந்து கொண்டு பார்த்து, கேட்டு மகிழ்ந்து வந்தேன். ஆக 1987 லோ என்னவோ தில்லி சாகித்ய அகாடமியில், க.நா. சுப்பிரமணியம் முன் வந்து பொறுப் பேற்று நடத்திய புதுமைப் பித்தன் கருத்தரங்கு ஒன்று ஒரு நாள் நடந்தது. அது அந்த நிறுவனத்தின் சிந்தையில் உதித்தது அல்ல. க.நா. சு விடமிருந்து வந்த யோசனைக்கு அந்த நிறுவனம் செவி மடுத்தது. அனுமதித்தது என்று சொல்லலாமா? அதில் என்னைப் பங்கேற்க, க.நா.சு. பட்டியலிட்டுக் கொடுத்தவர்களில் என் பெயரும் இருக்க, சாகித்ய அகாடமி யிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதன் முதலாக ஒரு இலக்கியக் கருத்தரங்கில் பங்கேற்கும் சந்தர்ப்பம் என்னிடம் நட்புக்கொண்டிருந்த ஒரு இலக்கியப் பெரியவரின் சிபாரிசில் தான் எனக்குக் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும் அதன் பிறகும் இந்த நிறுவனத்திற்கு நான் ஒரு பொருட்டாயிருக்க வில்லை. சிபாரிசு செய்தவர் இவ்வுலகை விட்டு மறைந்ததும் வேறு சிபாரிசு செய்பவர் யாரும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் புதுமைப்பித்தன் கருத்தரங்கு சாக்கில் புதுமைப் பித்தனின் கயிற்றரவு.  கதையை Patriot தினசரி பத்திரிகைக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தேன். அது ஒரு கொசுறு லாபம்.

உலகம் என்ன எப்போதுமேவா இருண்டிருக்கும்? பொழுது புலரத் தானே வேண்டும்! எனக்கும் பொழுது புலரவிருந்தது. ஒரு சாலை விபத்தில் காலடிபட்டு எலும்பு முறிந்து படுக்கையில் கிடந்தேன். அது ஒரு நீண்ட காலம். அதனிடையில் ஒரு நாள் தில்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த டாக்டர் செ.ரவீந்திரன் என் வீட்டுக்கு வந்தார். தில்லி சாகித்ய அகாடமி வெளியிட்டுக்கொண்டிருக்கும் என்ஸைக்ளோபீடியா ஆஃப் இண்டியன் லிட்டெரேச்சரின் மூன்றாவது வால்யூமுக்கு சில கட்டுரைகள் எழுத வேண்டும் என்று சொன்னார். சாஹித்ய அகாடமி, அப்போது தில்லி பல்கலைக் கழகத்தின் Head of Modern Indian Languages Department- ஆக இருந்த  ப்ரொ. தாஸ் குபதாவின் உதவியை நாட, அவர் தன் கீழ் இருக்கும் டா. ரவீந்திரனிடம் தமிழ் சார்ந்த பொறுப்பைச் சுமத்த அவர் என்னிடம் அதைத் தள்ளிவிட்டார்
.
என்ன என்று பார்த்தேன். ஏழு  கட்டுரைகள் எழுதவேண்டுமாம். 1. நாலாயிர திவ்ய பிரபந்தம், 2. நம்மாழ்வார், 3. பெரியாழ்வார், 4. பெரிய புராணம். 5. Mysticism 6. Opera (இசை நாடகம்) 7. Progressive literature ஆச்சரியமாக இருந்தது. இது என்ன மாயாவி, கல்கி, அகிலன் பத்தி எழுதற சமாசாரமா என்ன? இது ரவீந்திரனோட நாற்றங்கால். அதிலே நான் எப்படி நாற்று பிடுங்க கால் வைப்பது? அவரே சொன்னாலும்.

கஷ்டமாக இருந்தது. நான் கேட்டேன். “ஏன் என்னிடம் கொடுக்கறீங்க ரவி, இது உங்க டிபார்ட்மெண்ட் ஹெட் உங்களை நம்பி உங்களை எழுதச் சொல்லிக் கொடுத்திருக்கார். அவருக்கும் என்னைத் தெரியாது. சாஹித்ய அகாடமிக்கும் என்னைத் தெரியாது இது யார் அழைப்பில்லாமல் வந்திருப்பது என்று கேட்க மாட்டார்களா?” என்று கேட்டேன். ஆனால் ரவீந்திரனுக்கு என் குரல் சென்ற பக்கம் காது கேட்கவில்லை. காது என்ன? அவரே கேட்க மாட்டார். அவருக்கு அவர் தீர்மானம்  ஒன்று தான் தெரியும். அவரோடு வாதம் செய்ய முடியாது. “இல்லை சார், நீங்க எழுதுங்க நானும்தான்  எழுதப்போறேன். நீங்களும் கொஞ்சம் எழுதுங்களேன்”. என்று தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அது அவர் சுபாவம். ”இது சினேகத்துக்காக பரிமாறிக்கிற விஷயம் இல்லே ரவி. நான் தமிழ் எம்.ஏ. படிச்சவன் இல்லை. கலாநிதியோ முனைவரோ இல்லை. தமிழ் ப்ரொபஸர் இல்லை.  எல்லாரும்,  ”நீ யார்றா? ன்னு கேப்பாங்க. நான் எப்படி எழுத முடியும்?” அவர் கேட்பதாக இல்லை. எழுதுங்க சார் நீங்க எழுதலாம்.” என்று தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். “சரி நான் எழுதறேன். அதை டைப் பண்ணிக் கொடுக்கவேண்டாமா? யார் அதைச் செய்வாங்க? இது எப்படி நடக்கும்?” என்றால்,  “அதை எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம் நீங்க முதல்லே எழுதுங்க” என்று அதை என் தலையில் கட்டிவிட்டுப் போய்விட்டார்.

கடைசியில் எழுதிக்கொடுத்தேன். மு.ராகவ அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரி, மு.அருணாசலம், எஸ் வையாபுரிப்பிள்ளை ஆகியோர் ஆசீர்வாதத்தில். டைப் செய்ய முடியவில்லை. கையெழுத்துப் பிரதியாகத் தான் போயிற்று என்று நினைவு. பேட்ரியட், ,லிங்க் பத்திரிகை களுக்கும் கையெழுத்துப் பிரதிகள் தான் போகும். அவர்களுக்கு என் நிலை தெரியும். கே. எஸ் ஸ்ரீனிவாசனின் Ethos of Indian Literature – ஐயும் அவர் கேட்க தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தேன். அதுவும் கையெழுத்துப் பிரதியாகத் தான் சென்றது.

சில மாதங்கள் கழிந்தன. கால் சரியாகி நான் நடமாடத் தொடங்கினேன். இதனிடையில் Authors Guild of India வின் வருடாந்திரக் கூட்டம் ஒன்று தில்லியில் அப்போது நடந்தது.  ஒன்று சொல்ல வேண்டுமே. அப்போது தில்லியில் இருந்த  வாஸந்தி என் பெயரை அந்த Guild-ல் உறுப்பினராகச் சேர்க்க  சிபாரிசு செய்ய (எல்லாம் ஒரே சிபாரிசு மயமாகவே இருக்கு இல்லையா? இன்னமும் இருக்கு. தமிழனா பிறந்தா கூடவே அதுவும் வரும்)  அந்த நிறுவனமும் அந்த சிபாரிசை ஏற்று என்னை ஒரு தமிழ் எழுத்தாளராகவும், உறுப்பினராகும் தகுதி பெற்றவனாகவும் அங்கீகரித்தது. ஆக அந்த வருட கூட்டத்துக்கு நானும் சென்றேன். அது சாகித்ய அகாடமிக்கு அடுத்த  Indian Historial Congress கட்டிடத்தின் புல்வெளியில் எழுப்பபட்டிருந்த  ஷாமியானாவில் நடந்து கொண்டிருந்தது.

நான் முதல் அமர்வு முடிந்ததும் சாஹித்ய அகாடமியின் காண்டீனில் சாப்பிடப் போனேன். கில்ட் தில்லியிலிருந்து இயங்கும் ஸ்தாபனம். தில்லியில் கருத்தரங்கு நடத்தினால் உறுப்பினர்கள் தம் செலவிலேயே சாப்பாடு இருக்கை எல்லாம் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆனால் வெளியூரில் கருத்தரங்கு நடத்தினால் வெளியூர் கிளை வரும் உறுப்பினர் களுக்கு இருக்கை சாப்பாடு எல்லாம் செலவு செய்ய வேண்டும். சாமர்த்தியகாரர்கள். ( தமிழில் ஒரு புகழ் பெற்ற நடைமுறை வழக்கு உண்டல்லவா? என் வீட்டுக்கு வந்தா என்னா நீ கொண்டாருவே, நான் உன் வீட்டுக்கு வந்தா நீ எனக்கு என்னா தருவே?)

ஆக சாகித்ய அகாடமி காண்டீனில் சாப்பிட்டு விட்டு சாகித்ய அகாடமி அலுவலகத்துக்குச் சென்று  நான் என்சைக்ளோபீடியா வுக்கு எழுதிக் கொடுத்தது என்ன ஆயிற்று, ஏதாவது காசு வருமா வராதா என்று விசாரிக்கச் சென்றேன். என்சைக்ளோபீடியாவுக்கு என்று இருந்த அலுவலக அறையில் லாலாஜி என்பவர் பொறுப்பாளராக இருந்தது தெரிந்தது. அவர் மேஜையின் முன்னால் ஒரே காகிதக் குவியல். என்னை உட்காரச் சொல்லி ” ”இது மதிய சாப்பாட்டு  நேரம். எல்லோரும் சாப்பிடப் போயிருக்கிறார்கள், என்ன விஷயம்” என்று கேட்டார். சொன்னேன். ”கவலைப் படாதீர்கள் கொஞ்சம் தாமதமாகும். ஆனால் உங்கள் வீடு தேடி செக் வந்துவிடும் என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தார். மேஜையில் என் முன்னால் இருந்த காகிதக் குவியலில் பதம் என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை அச்சாகிக் கிடந்தது. முன்னால் தானியம் கிடந்தால் குருவி கொத்தாமல் இருக்குமா? படித்தேன். “இதெல்லாம் ப்ரூஃப் படித்தாகி அச்சுக்குப் போகவிருக்கிறது” என்றார் லாலாஜி. பதம் பற்றி இவ்வளவு அறியாத்தனமாக  ஒருவர் எழுதமுடியுமா?, அதுவும் சாஹித்ய அகாடமியின் ஒப்புதல் பெற்று என்சை க்ளோபீடியாவில் சேரப்போகிறதா? என்று திகைப்பாக இருந்தது. “இது யார் எழுதியது? இந்த ஆளுக்கு ஒன்றும் அதிகம் தெரியாது போல இருக்கிறதே” என்றேன். “அப்படியா? எங்களுக்கு என்ன தெரியும்.? விஷயம் தெரிந்தவர்கள் இவர்கள் என்று எங்களுக்குச் சொல்லித் தான் இவர்களை எழுதச் சொல்கிறோம்” என்றார். அதற்கு மேல் சொல்வதற்கோ செய்தவற்கோ ஒன்றும் இல்லை.

”நான் வருகிறேன். கருத்தரங்கு ஆரம்பமாகும் நேரமாகிவிட்டது” என்று சொல்லி நான் வெளியே வந்தேன். ஒரு மணி நேரமாகி யிருக்கும். கருத்தரங்கு நடக்கும் இடத்துக்கு வந்து லாலாஜி யாரையோ தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது. யாரையோ என்ன? என் வரிசைக்கு வந்ததும் என்னை அழைத்தார் லாலாஜி.”  நான் வெளியே வந்ததும், “எடிட்டருக்கு உங்களைப் பார்க்கணுமாம் கையோடு அழைத்து வரச் சொன்னார். வாருங்கள்” என்றார். ”அவர் எப்படி என்னைக் கூப்பிட முடியும்.? அவருக்கு என்னைத் தெரியாது. நான் அவரைப் பார்த்ததுமில்லை” என்றேன். “நீங்கள் ஒரு பதம் பற்றி சொன்னதைச் சொன்னேன். அவர்தான் சொன்னார். ”அவரை உடனே அழைத்துவா. விட்டு விடாதே” என்று சொன்னார்” என்றார் சிரித்துக்கொண்டே. ” நாம் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் அவரிடம் போய் சொல்வாங்களா? இனிமே உங்க கிட்ட நான் ஜாக்கிரதையா இருக்கணும்” என்று சொன்னதற்கும் அந்த ஆள் சிரிப்பை நிறுத்தவில்லை. சரி ஏதோ வம்பு தான் என்று எண்ணிக் கொண்டேன். வந்த இடத்தில் வாயைப் பொத்திக்கொண்டு இருந்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன்.

Prof. Mohanlal, Editor என்று போர்டு போட்டிருந்தது. உள்ளே நுழைந்தேன். ”ஸ்வாமிநாதன்ஜி ஆ கயே சாப்” என்று என்னை அறிமுகம் செய்துவிட்டு லாலாஜி போயாயிற்று. மோஹன் லால் உட்காரச் சொன்னார். ”நல்ல சமயத்தில் வந்தீர்கள். நானும் உதவிக்கு ஆள் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்களுக்கு நீங்கள் உதவ வேண்டும்.” என்றார் சிரித்துக்கொண்டே. இப்படிச் சொல்லித் தான் ஆசுவாசப் படுத்துவார்கள்” என்று நினைத்துக்கொண்டேன். ”இதில் என்ன விட்டுப் போயிற்று? இது முன்னால் இருந்தவர்கள் செய்தது. எனக்கும் அனேக கட்டுரைகள் திருப்தி தரவில்லை. என்ன செய்வது?, யாரைக் கேட்பது? என்று தெரியவில்லை” என்றார். சரி, இப்போது பதம் பற்றி யாரை எழுதச் சொல்லலாம். நீங்கள் எழுதுவீர்களா?” என்று கேட்டார். “எனக்குத் தெரிந்தவர், தமிழ், சமஸ்கிருதம், சங்கீதம், நாட்டியம் எல்லாவற்றிலும் தேர்ந்த ஞானம் உள்ளவர். அவர் தில்லியில் தான் இருக்கிறார். அவருக்கு எழுதிக் கேளுங்கள்” என்று சொல்லி அவர் விலாசம் டெலிபோன் நம்பர்  எல்லாம் கொடுத்தேன். அங்கிருந்தே கே.எஸ் ஸ்ரீனிவாசனுக்கு டெலெபோன் செய்து அவருக்கு விஷயத்தைச் சொன்னேன். அவரும் எழுத ஒப்புக்கொண்டார்.  கொஞ்ச நாளில் கே எஸ் ஸ்ரீனிவாசன் எழுதிய கட்டுரையும் வந்தது. அதில் ப்ரொபஸர் மோஹன்லாலுக்கு மிகுந்த திருப்தி.

அன்றிலிருந்து ப்ரொபஸர் மோஹன்லாலுக்கும் எனக்கும் இடையே நம்பிக்கையும் நெருக்கமும் வலுத்தது. என்ஸை க்ளோபீடியாவுக்கு தமிழ் சார்ந்த விஷயங்களில் என் ஆலோசனையை, பங்களிப்பை மோஹன்லால் மிகவும் விரும்பத் தொடங்கினார்

என்னிடம் என்ஸைக்ளோபீடியா முழுதிலும் சேர்க்கத் திட்டமிட்டு அவருக்குத் தரப்பட்டிருக்கும் கட்டுரைப் பட்டியல் முழுதையும் என்னிடம் கொடுத்தார். ப்ரொபஸர் மோகன்லால் அப்போது என்ஸைக்ளோபீடியா முழுதுக்கும் அவர் பொறுப்பேற்று அதிக காலம் ஆகிவிடவில்லை. முன்னர் ஆங்கிலத்திற்கு மாத்திரம் பொறுப்பாளராக இருந்தார். முதல் இரண்டு பாகங்கள் இதுவரை வெளியாகியிருந்தன. தயாராகிக்கொண்டிருக்கும் மூன்றாவது பாகத்திலிருந்து மோஹன்லாலின் பொறுப்பு. முதல் இரண்டு பாகங்கள் A யிலிருந்து J வரை முடிந்திருந்தது.

அந்த பட்டியலிலிருந்து நீங்கள் என்ன எழுத முடியும்? இன்னம் யார் யாரை எழுதச் சொல்ல முடியும் என்று சொல்லுங்கள் என்றார். நான் பட்டியலைப் பார்த்தேன். ஜன ரஞ்சக பிரபல எழுத்தாளர்கள், பண்டிதர் உலகில் தெரிந்த பெயர்கள் எல்லாம் இருந்தன சிலரைத் தவிர இவர்களை யெல்லாம் சேர்க்க முடியாதே என்றேன். சேர்க்கும் சிலரும் ஒரு கால கட்டத்தில் பிரபலமாக இருக்கிறார்கள் லக்ஷக் கணக்கில் வாசகர்களைக் கொண்டவர்கள் என்ற காரணத்தால் சேர்க்கலாம். பண்டிதர்கள் பற்றி நான் என்ன சொல்லட்டும்? அனேகர் இதில் விட்டுப் போனவர்கள் இருக்கிறார்கள். காரணம் இந்தப் பட்டியலைத் தயாரித்தவர்களுக்கு பண்டிதர்களையும் பிரபலங்களையும் வெகுஜனப் பிரியர் களையும் தான் தெரியும்”. என்றேன். ”புரிகிறது. ஆனால் ஆலோசகர் குழுவும் தமிழ்ப் பொறுப்பாளரும் கொடுத்த பெயர்களை நான் நீக்கமுடியாது. ஆனால் விட்டுப் போனவர்கள் யார் என்று சொல்லுங்கள் அவர்களைப் பற்றி யார் எழுதுவார்கள் என்றும் சொல்லுங்கள்” என்றார். எனக்கு ஆச்சரியமாகவும் திகைப்பாகவும் இருந்தது. சாஹித்ய அகாடமியிலிருந்து கலைக் களஞ்சியத்துக்கு பொறுப்பேற்றுள்ளவர் நான் எழுதிக்கொடுத் ததையும், எழுத சிபாரிசு செய்தவர்கள் எழுதிக்கொடுத்ததையும் மாத்திரம் வைத்துக்கொண்டு என்னைப் பற்றி ஏதும் அறியாமலேயே இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது சந்தோஷமாகவும், இதுகாறும் நான் அனுபவத்தறியாத ஒரு நிகழ்வாகவும் இருந்தது. புதிய பெயர்களையும் யாரை எழுதக் கேட்கலாம் என்பதையும் நீங்கள் எழுதும் பொருட்கள் பற்றியும் ஆங்கில அகர வரிசைப்படி தயாரியுங்கள். இப்போதே எல்லாம் வேண்டாம். மூன்றாம் நான்காம் பாகங்களுக்கு மாத்திரம் அவ்வப்போது வரிசைப்படி சொல்லி வாருங்கள் என்றார். நான் ஒத்துக்கொண்டேன்.

இதெல்லாம் முடிந்த பிறகு, ”இதைப் பாருங்கள்,” என்றார். ஒரு பழம் தமிழ் நூல் பற்றி ஒரு கட்டுரை. எழுதியது புகழ் பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர். வெளிநாடுகளுக்கு உரையாற்றச் செல்பவர். ”இதில் வெறும் அளப்பு தான் இருக்கிறதே தவிர விஷயம் இல்லையே,” என்றார். படித்துப் பார்த்தேன் அவர் சொன்னது சரிதான். அதற்குப் பதிலாக இந்த நூல் பற்றி ஒருவர் புத்தகமே எழுதி அது உங்கள் சாகித்ய அகாடமி பரிசும் பெற்றுள்ளது. அவர் தில்லி வாசி. அவரை எழுதச் சொல்லுங்கள், “நான் பேசமுடியாது. அவருடன் எனக்கு பரிச்சயமில்லை, நீங்களே பேசுங்கள்,” என்று சொல்லி அவர் பெயர், விலாசம் எல்லாம் கொடுத்தேன். மோஹன் லாலின் சந்தோஷம் தெரிந்தது. நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். எங்கள் பரஸ்பர நம்பிக்கையும் மதிப்பும் வளர்ந்தன.

என் அனேக கட்டுரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டவர் பம்மல் சம்பந்த முதலியார் பற்றிய கட்டுரையை கொஞ்சம் வெட்டி என்னிடம் கொடுத்து ”பாருங்கள்” என்றார். நான் எழுதிய கட்டுரையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு சரிபார்க்கத் தொடங்கினேன். அவர் ”அதைப் பார்க்காதீர்கள். நான் தந்ததை மாத்திரம் பார்த்து ஏதாவது விட்டுப் போயிற்றா என்று சொல்லுங்கள்” என்றார். பக்கத்திலிருந்த அவர் உதவியாளர் எல்லோரும் சிரித்தார்கள். எனக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை. ராஜாஜி பற்றி கே. ஆர். ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதியிருந்தார். நன்றாகத் தான் இருந்தது. ஆனால் ராஜாஜியின் தமிழ் பங்களிப்பைப் பற்றி ஏதும் இருக்கவில்லை. சொன்னேன். எழுதித் தாருங்கள். Tamil contribution  என்ற தலைப்பில் இதையும் அதன் அடியில் சேர்த்துவிடலாம் என்றார். கே.எஸ் ஸ்ரீனிவாசன் சைவ சித்தாந்தம் பற்றி மிக நன்றாக எழுதி யிருந்தார். பிறகு அன்றைய தினம் கடைசியாக நான் சொன்னவரிடமிருந்து பழம் தமிழ் நூல் பற்றி வந்திருந்த கட்டுரையைக் காண்பித்து, “நீங்கள் சொன்னதால் இவருக்கு எழுதினோம். ஆனால் இப்படி எழுதியிருக்கிறாரே, எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது” என்றார். இவர் இதே நூல் பற்றி எழுதிய புத்தகத்துக்கு உங்கள் அகாதமி பரிசு கொடுத்திருக்கிறதே” என்றேன். ’இப்போது இதை நிராகரிக்கவும் முடியாது. நீங்கள் ஒன்று எழுதிக்கொடுங்கள். ஒன்றை நூலின் தலைப்பிலும் இன்னொன்றை ஆசிரியர் பெயர் தலைப்பிலும் பிரசுரித்து விடலாம்” என்றார்.

அவரது தீர்வு வேடிக்கையாக இருந்தது. எழுதிக்கொடுத்தேன். இரண்டுமே பிரசுரமாகியுள்ளன. ஏற்கனவே பிற மொழிகளிலும் பல எழுத்தாளரைப் பற்றி A revaluation, An estimate, The Modern phase என்ற தலைப்புகளில் ஒருவரைப் பற்றி இரு பார்வைகள் தரப் பட்டிருந்தன. இன்னும் பலரைப் பற்றி பல பரிமாணங்களில் எழுத வேண்டியிருந்தால் இருவர் எழுத்துக்களும்  ஒன்றிணைக்கப் பட்டிருந்தன. சிலப்பதிகாரம் பற்றி நானும் எழுதியிருந்தேன். க.நா.சு.வும் எழுதியிருந்தார். இசை,, நாட்டியம் பற்றியது விட்டுப் போயிருந்தது. அதை நான் பூர்த்தி செய்தேன்.  Satire பற்றி ஏ.வி. சுப்பிரமணியம் எழுதியதுடன் அதன் தற்கால வெளிப்பாடு பற்றி நான் எழுதினேன். சுந்தர ராமசாமி, வீரமா முனிவர் பற்றி யெல்லாம் எழுதப்பட்டிருந்தது முழுமையாக இல்லை என நான் சொல்ல, அதற்கென்ன எழுதிக்கொடுங்கள் சேர்த்துவிடலாம் என்றார். எழுதிக்கொடுத்தேன். (அடுத்து முடிவடையும்)

vswaminathan.venkat@gmail.com