கனடா மிஸசாகாவில் நடந்த அமிர்தார்ணவம் -1 நூல் வெளியீட்டு விழா

கனடா மிஸசாகாவில் நடந்த அமிர்தார்ணவம் -1 நூல் வெளியீட்டு விழா    சென்ற சனிக்கிழமை கனடா மிஸசாகாவில் டிக்ஸி வீதியில் உள்ள நூல்நிலைய பார்வையாளர் மண்டபத்தில் பரதகலாவித்தகர் ஸ்ரீமதி. லலிதாஞ்சனா கதிர்காமனின் ஆக்கத்தில் அமிர்தார்ணவம் என்ற நடனக்கலைக்குரிய பாடல்களும், அதற்குரிய முத்திரைகளும் அடங்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் திரு. திருமதி குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்சென்ற சனிக்கிழமை கனடா மிஸசாகாவில் டிக்ஸி வீதியில் உள்ள நூல்நிலைய பார்வையாளர் மண்டபத்தில் பரதகலாவித்தகர் ஸ்ரீமதி. லலிதாஞ்சனா கதிர்காமனின் ஆக்கத்தில் அமிர்தார்ணவம் என்ற நடனக்கலைக்குரிய பாடல்களும், அதற்குரிய முத்திரைகளும் அடங்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் திரு. திருமதி குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.எஸ். மதிவாசன், திரு. ஸ்ரீமதி பவானி ஆலாலசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். முதலில் மங்களவிளக்கேற்றி, கனடிய தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, அமிர்தாலயா நுண்கலைக்கல்லூரிக் கீதம் போன்றன இசைக்கப்பட்டன. தொடர்ந்து வரவேற்புரை நிகழ்ந்தது. அடுத்து திருமதி வாசுகி நகுலராஜா அவர்களால் நூல் ஆய்வு செய்யப்பட்டது. சிறுவர்களுக்கு ஏற்ற பாடல்களை எடுத்து அதற்கு எப்படி அபிநயம் பிடிக்கலாம் என்பதை சிறப்பாகவும் எழிமையாகவும் இந்த நூல் எடுத்துக் காட்டுவதாகவும், வர்ணத்தில் படங்கள் அச்சிடப்பட்டிருப்பதால் பலராலும் வரவேற்கப்படும் என்றும் தனது ஆய்வுரையில் அவர் குறிப்பிட்டார். அடுத்து உரையாற்றிய கலைக்கோயில் அதிபர் குகேந்திரன் கனகேந்திரம் அவர்கள் இந்த நூலில் உள்ள சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி, அமரரான தங்கள் சகோதரியும் இசையாசிரியையுமான திருமதி. அமிர்தாஞ்சனா சுரேஸ்வரன் அவர்களின் நினைவாக தமிழிலும், ஆங்கிலத்திலும் படங்களோடு கூடிய விளக்கங்கள் அடங்கிய இந்த நூலை வெளியிட்ட ஸ்ரீமதி லலிதாஞ்சனாவிற்கு நன்றி தெரிவித்தார்.

ஆசிரியைமணி ஸ்ரீமதி லலிதாஞ்சனாவின் குருவான கலாபூஷணம் ஸ்ரீமதி திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்கள் வழுவூர் இராமையாபிள்ளையிடம் முறையாக நடனக்கலை பயின்றவர். இதைவிட தனது சகோதரியான ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துருவிடமும் இவர் நடனக்கலையைப் பயின்றிருக்கின்றார். கனடாவில் அமிர்தாலயா என்ற நடக்கல்லூரியின் அதிபராக இருக்கின்றார். வழுவூர் நடனக்கலை இவர்களது கல்லூரியின் சிறப்பம்சமாகும்.
 

ஆடற்கலை சிறப்பாக அமைய அமிர்தார்ணவம் போன்ற நூல்கள் இன்னும் பல வெளிவரவேண்டும். குறிப்பாக புலம் பெயர்ந்த மண்ணில் இவற்றை ஆவணப்படுத்த வேண்டும். அதனாலே தமிழிலும் ஆங்கிலத்திலும் வர்ணவிளக்கப் படங்களுடன் வெளிவந்திருக்கும் இந்த நடனக்கலை நூலைத் தொகுத்து  வெளியிட்ட ஸ்ரீமதி லலிதாஞ்சனா கதிர்காமனைப் பாராட்டுகின்றேன். தகுந்த முறையில் ஆவணப்படுத்தாமல் எம்மவர்கள் விட்ட சில தவறுகளினால் பல கலைகள் எம்மிடம் இருந்து மறைந்து விட்டன. அழியும் நிலையில் இருந்த பரதக் கலையைச் சில கலைஞர்கள் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியால் இன்று காப்பாற்ற முடிந்திருக்கிறது. ஆனால் எமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுள்வேத மருத்துவ முறை இன்று அழிந்துவிடும் நிலைக்குச் சென்றுவிட்டது. குடும்ப வைத்திய முறையாக இருந்ததால் வாய்வழி வந்த வைத்திய முறை ஒருபோதும் எழுதி ஆவணப்படுத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல எமது ஊரில் இருந்த மூலிகை மருந்துகளும் அழிந்து கொண்டே போகின்றன. இவற்றையும் அழிவில் இருந்து நாம் காப்பாற்ற வேண்டும், கடந்த பதினேழு வருடங்களாக நடனக்கலையை புலம் பெயர்ந்த மண்ணில் கற்பிக்கும் அமிதாலயா அதிபர் ஸ்ரீமதி லலிதஞ்சனா அவர்களின் அளப்பரிய சேவையை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன் என்று இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்த கொண்ட எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.

கனடா மிஸசாகாவில் நடந்த அமிர்தார்ணவம் -1 நூல் வெளியீட்டு விழா

தொடர்ந்து ஸ்ரீமதி லிதாஞ்சனாவின் மாணவிகளின் குழு நடனங்கள் இடம் பெற்றன. நான்கு குழுக்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் சிறந்த குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அதே போல ஒவ்வொரு குழுவிலும் சிறந்த நடன தாரகைகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. இறுதியாக ஸ்ரீமதி லலிதாஞ்சனா கதிர்காமன் அவர்கள் பிரதமவிருந்தினர், விசேடவிருந்தினர், மற்றும் பெற்றோர்களுக்கும், இந்த நூலை வெளியிட உதவியாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியுரையில் நன்றி வழங்கினார். அரங்கேற்றம் செய்த அவரது மாணவிகளின் சிறப்பு நடனத்துடன் விழா இனிதே முடிவுற்றது.

அனுப்பியவர்: maliniaravinthan@hotmail.com