முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.
முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.
அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?
முள்ளிவாய்க்கால்:
ஆறறிவின் சிற்றறிவு!
முள்ளிவாய்க்கால்:
நாகரிகத்தின்
அநாகரிகம்.
முள்ளிவாய்க்கால்:
சிந்திக்கும் மனிதரின்
சீரழிவு.
ஆனால், இனி
முள்ளிவாய்க்காலின்
மெளனம்
சுதந்திர வேட்கையின்,
தர்ம நாட்டத்தின்
புரட்சிக்கீதம்.
முள்ளிவாய்க்கால்:
வீழ்ச்சியின்
எழுச்சி.
நந்திக்கடலோரத்துக்
கலங்கரை விளக்கம்.
இனி ஒளியூட்டும்.
வழி காட்டும்.
* ஓவியம்: புகழேந்தி; நன்றி!
ngiri2704@rogers.com