அக்டோபர் கவிதைகள் -1

முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி , தமிழகம்)  கவிதைகள்

1. தீபமேற்றுவோம்!

தீபாவளித் திருநாளிலே தீபமேற்றுவோம்!
தீயஎண்ண மிருந்தாலதைத் தூரவோட்டுவோம்!
கோபம்கயமை கள்ளமில்லா உள்ளம்பெறவே
கண்கள்மூடி கடவுளையே நாமும்போற்றுவோம்!!

புத்தாடைகள் அணிந்தேநாமும் பாதம்பதிப்போம்!
பூமிப்பந்தைப் புரட்டிப்போட்டு நாமும்குதிப்போம்!
தத்துவங்கள் பொய்களல்ல மெய்யேதானென்ற
தாத்தாபாட்டி அறிவுரைகள் நாமும்மதிப்போம்!!

பலகாரங்கள் வகையாய்ச்செய்து நாமும்தின்னலாம்!
பக்கம்அக்கம் உள்ளோரிடம் பகிர்ந்தேஉண்ணலாம்!
சிலகாலங்கள் வாழ்ந்தேநாமும் போகும்முன்னரே
செயல்கள் நல்லசெயல்களையே நாமும்பண்ணலாம்!!

பட்டாசுகள் வாங்கிவாங்கிக் கொளுத்திப்போடுவோம்!
படபடவென்று வெடிக்கும்போது நாமும்ஆடுவோம்!
கடவுள்வேறாய் மதங்கள்வேறாய் நாமேபிரித்தோம்
கருணைஒன்றே அன்பேகடவுள் நாமும்பாடுவோம்!!

தீபாவளித் திருநாளிலே தீபமேற்றுவோம்!
தீயஎண்ண மிருந்தாலதைத் தூரவோட்டுவோம்!
கோபம்கயமை கள்ளமில்லா உள்ளம்பெறவே
கண்கள்மூடி கடவுளையே நாமும்போற்றுவோம்!!

2.  வீரவணக்கம்!

தீக்குளித்த செங்கொடிக்கு வீரவணக்கம்! – இனி
        தென்னகமே உன்பெருமை சொல்லிமணக்கும்! – இங்கு
வாக்களித்த மக்கள்மனம் போட்டகணக்கும் – நான்
         வழிமொழிந்தே வரவேற்றேன் நெஞ்சிலெனக்கும்!!

மூவரையும் தூக்கிலிடத் துடித்தகணத்தில் – நீ
         முடிவெடுத்தாய் போராட்டம் என்றேசினத்தில் – இங்கு
பாவையரும் பட்டினியாய்க் கிடந்தகணத்தில் – நீ
         பரிதவிப்பை ஒளித்தாயே உந்தன்மனத்தில்!!

சீமானும் நெடுமாவும் வருத்தஞ்சொல்லவே! – உன்
        சிலைமுன்னே நின்றபடி வருந்திச்செல்லவே! – இங்கு
ஏமாளி ஆகிவிட்டான் தமிழன்மெல்லவே! – இனி
         எழுந்திடடா கொடுமைகளைத் துரத்திக்கொல்லவே!!
 
தரணிதனில் தென்னாட்டின் வீரமங்கையே! – நீ
         தமிழர்க்குப் புகழ்சேர்த்த அன்புத்தங்கையே! – உன்
கருணையாலே எழுச்சிபெரும் தென்னிலங்கையே! – எனக்
         கவிதையாலே பாடிவிட்டேன் எனதுபங்கையே!!

தீக்குளித்த செங்கொடிக்கு வீரவணக்கம்! – இனி
        தென்னகமே உன்பெருமை சொல்லிமணக்கும்! – இங்கு
வாக்களித்த மக்கள்மனம் போட்டகணக்கும் – நான்
         வழிமொழிந்தே வரவேற்றேன் நெஞ்சிலெனக்கும்!!

 [ சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் எவ்வளவோ வகையான பங்களிப்புகளைச் செய்யக் கூடிய செங்கொடி போன்ற யுவதிகள், யுவனகள் உணர்ச்சிவெறியேற்றும் அரசியல் தலைவர்களின் வீர உரைகள் கேட்டுத் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதில் பதிவுகளுக்கு உடன்பாடில்லை. மாறாக இவ்விதம் உணர்ச்சிவெறியேற்றும் தலைவர்கள் தங்கள் உயிர்களை தங்களது கொள்கைக்காக மாய்த்துக்கொள்வதில் எமக்கு ஆட்சேபணையேதுமில்லை. செங்கொடி போன்ற இளம் சந்ததியினர், தங்களது வாழ்நாளைத் தங்களது கொளகைக்காகப் பலவேறு வழிகளில் பாடுபடுவதற்கு முயலவேண்டுமேயொழிய மாய்ப்பதற்கு முயலக்கூடாது. இன்று செங்கொடி போய்விட்டார். ஆனால், பழுத்த அரசியல் தலைவர்களோ தங்கள் அரசியலை செல்வச் செழிப்புடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசியல் தலைவர்கள் இளம் சமுதாயத்தினர் ஆற்றக்கூடிய வேலைத் திட்டங்களை வகுத்துக்கொடுத்து, சமுதாயம் பயனுள்ள வகையில் அவர்களது பங்களிப்புகள் அமையும் வகையில் வழிநடத்த வேண்டுமேயொழிய, தங்களது சுய அரசியல் இலாபங்களுக்காக இளம் சமுதாயத்தினரைத் தூண்டி இவ்விதம் பலிகொடுக்கக் கூடாது. இளைஞர்கள் உணர்ச்சிவெறியில் தங்களை மாய்த்துக்கொள்வதற்குப் பதில் , தங்கள் இருப்பினை ஆக்கபூர்வமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை எடுத்துக்கூறி வழிகாட்ட வேண்டும்.- பதிவுகள் ]

3. எதிர்காலம் நம்கைகளில்…

மண்குதிரையை நம்பி
ஆற்றில் இறந்குவதுபோல் – ஒரு 
பொன்னான நேரத்தை
வீணாக்காதே!

இலட்சியங்கள் எல்லாம்
நம் கைக்கெட்டும் தூரந்தான்!
அலட்சியம் செய்தால்
நம் வாழ்க்கையே பாரந்தான்!!

தும்பி இனத்தைச் சேர்ந்த வண்டு
சுறுசுறுப்புடன் வாழ்வது கண்டு – நாம்
முயற்சியோடு போராடுவது நன்று!!

நம் இலட்சியப் பாதையில் – நாம்
சந்திக்கும் தடைகள் ஓராயிரம்! – என்றும்
நம் வாழ்வில் சாதிக்க
தன்னமிக்கைதானே ஒரே ஆயுதம்!!

தோல்விகள் தந்த பாடங்கள் எல்லாம்
எதிர்கால இலட்சியத்தின்
ஏணிப்படிகள் தானே நண்பா!

சூரியனை நோக்கிப் பறக்கும்
பீனிக்ஸ் பறவை போல்…
கண்ணில் தீப்பொறி பறக்க – இம்
மண்ணில் புதுநெறி பிறக்க…
தன்னம்பிக்கை சிறகோடு
இலட்சிய வானில்
இலக்கு நோக்கிப் பற!!

மதில்மேல் பூனையல்ல
நம் எதிர்காலம்!
எம்மிளைஞனின் கைகளில் தான்
என்தேசத்தின் எதிர்காலம்!!

4. உலக அதிசயம்!

ஒரு பெண்
இன்னொரு பெண்ணைப்
பார்த்து வெட்கப்படுவது
உலக அதிசயந்தான்!

தேவதையே…
உன்னைப் பார்த்த
அந்த நிலா
வெட்கத்தில்
மேகங்களுக்குள்
ஒளிந்து கொள்கிறதே…

இது
உலக அதிசயந்தான்!!

5. நிலாவும் நீயும்!

இரவில்
மொட்டைமாடியில்
வானத்து நிலாவைக் காட்டி
எனக்கும்
நம் குழந்தைகளுக்கும்
நிலாச்சோறு
ஊட்டிக் கொண்டிருக்கிறாய்
நீ!

வானில்
தன் குழந்தைகளான
விண்மீன்களுக்கு
உன்னைக் காட்டி
ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது
அந்த நிலா!!

6. மஞ்சள் நிலவு!

மஞ்சள் நிற
சூரியனை
நீள்வட்டப் பாதையில்
சுற்றிவருகின்றன
கோள்கள்!

மஞ்சள் நிற
நிலவான உன்னை
அழகுவட்டப் பாதையில்
சுற்றிச் சுற்றி வருகிறேன்
நான்!!

7. அடைமழை!

அடைமழை பெய்து
அப்போதுதான்
ஓய்ந்திருந்தது!
 
அலுவலகம் முடிந்து
வீடு திரும்புவதற்காய்
சாலையோரமாய் நடந்தேன்!

என் கைகுலுக்கிவிட்டு
தேநீர் அருந்தச் சொன்னது
தென்றல்!

ஸ்ட்ராங்காய்
ஒரு டீ குடித்தவுடனே
மீண்டும் கிளம்பினேன்
சாலையோரமாய் நிறுத்திவைத்திருந்த
நடராஜா சர்வீசில்…!

பூக்கடைப் பெண்மணி
உரக்கக் கூவினாள்
‘நான்கு முழம்
பத்து ரூபா…
நான்கு முழம்
பத்து ரூபா…’
என்று!

கடந்து போகயிலே
அவள் முகம் பார்த்தேன்
கூவியபடியே
அவள் கண்களிலிருந்து
மீண்டும் வலுத்தது
அடைமழை…!!

8. நிலவழகி!

எனக்கும்
நம் குழந்தைகளுக்கும்
நிலாச்சோறு
ஊட்டிக்கொண்டிருக்கும்
உன் அழகைப்
பார்த்து இரசிக்க
மேகக் கூட்டங்களை
விலக்கியபடியே
முண்டியடித்துக் கொண்டு
வந்து நிற்கிறது
அந்த நிலா!!

9. முயற்சி!

விழுந்து விழுந்து நீ கிடந்தால்
உலகம் உன்னை குட்டுமடா…
எழுந்து எழுந்து நீ நடந்தால்
உலகம் கைகள் தட்டுமடா…!!

ஒருவழி அடைத்தால் மறுவழி திறக்கும்
இருவிழி திறந்தால் வெளிச்சம் பிறக்கும்!
பலநாள் தோல்வி சிலநாள் வெற்றி
முயன்றே பார்த்தால் நிரந்தர வெற்றி!!
இரும்பாய் மனதை இறுகப் பற்றி
விரும்பி உழைத்தால் வந்திடும் வெற்றி!
கருவறைக் குழந்தையும் காலால் உதைக்கும்!
கருவறை தாண்டக் கற்றிடும் முயற்சி!!
பச்சிளங் குழந்தையும் பசியால் அழுமே
பாலுண்ண வேண்டி பயிலும் முயற்சி!
தளர்ந்த வயது தாத்தா கூட
தடியும் பிடித்து நடப்பதும் முயற்சி!
கருவறை தொடங்கி கல்லறை வரையில்
அழுகை தேடல் எல்லாம் முயற்சி!
வெற்றிகள் கிடைத்தால் மகிழ்ச்சி மகிழ்ச்சி
தோல்விகள் வந்தால் வேண்டாம் அயற்சி!
தூங்கும் பாறையும் தகுந்த உளியால்
தட்டத் தட்டத் திறக்குது சிற்பம்!
தோல்விகள் தாங்கும் வண்மை மனமே
தொடர்ந்த வெற்றிகள் தாங்கிடத் தகுதி!

விழுந்து விழுந்து நீ கிடந்தால்
உலகம் உன்னை குட்டுமடா…
எழுந்து எழுந்து நீ நடந்தால்
உலகம் கைகள் தட்டுமடா…!!

10. இது கலவிநேரம்!

விழிகளில் காதல் வழியும் நேரம்!
விரக தாபமோ விரலி னோரம்!
மொழியாய் மௌனம் முனகல் பாரம்!
முத்தங்க ளிடவே நூலிழை தூரம்!!

உடைகள் எல்லாம் உதறிச் செல்லும்!
உதடும் உதடும் கவ்விக் கொள்ளும்!
படைகள் வந்தும் பதறா உள்ளம்!
படுக்கை மீதே அழைத்துச் செல்லும்!!

கால்க ளிரண்டும் பின்னிக் கொள்ள
காலம் நேரம் மறந்து செல்ல
தோள்க ளிரண்டும் தொட்டுக் கொள்ள
தொடர்ந்து நானோ என்ன சொல்ல?

11 . புத்திசாலித்தனம்!

மனிதநேயத்துடன் கூடிய
குள்ளநரித்தனம்!
புத்திசாலித்தனம்!!

மனிதநேயமில்லாத
புத்திசாலித்தனம்!
குள்ளநரித்தனம்!!

munaivendri.naa.sureshkumar@gmail.com


காதலின் கரைகளில்..

சித்ரா –

காதலன் ஒருகரையில்
காதலி மறுகரையில்
நதியில் கால் நனைக்காமல் ..

பேச்சால் கயிறு திரித்து
வீசுகிறான் காதலன்
இக்கரைக்கு இழுத்து
நதியின் பிரவாகத்தை போன்ற
தன் காதலில் ஜெயிக்க …

காதலி  வீசிய கயிறு
மூக்கணாங்கயிறாகி –
இளுவையாய் இழுத்தபடி அவள் –
நதியின் ஆழத்தை போன்ற
தன் காதலை  நிரூபிக்க

இழுபறிகளின் நடுவே
சம்மந்தமே இல்லாமல்
காதல் மட்டும் , ஜீவநதியாக
களங்கமற்று எப்போதும் போல்..

k_chithra@yahoo.com)


இவை…

– ஜுமானா ஜுனைட், இலங்கை. –
 

காலத்தால் மாறாத
பக்கங்கள்…
ஆனால் வேதமல்ல…
 
இதயவுச்சி
கொண்டெழுதிய
அச்சரங்கள்…
 
அகாலமாய்
மரணமடையும்
மௌனங்கள்…
 
உயிர்த் திட்டுக்களில்
திடீரென வெடித்த
அசரீரிகள்…
 
வானத்து நிர்வாணங்களை
மூடி மூடி வைத்த மேகங்கள்
கலைந்த போது ஏற்பட்ட
கார்ப்பெயல்கள்…
 
பனித்துளிகளை
கௌவிக் கொண்டோடிய
சூர்யோதயங்களின்
புன்முறுவல்கள்…
 
நறுமண புஷ்பங்களை
காயப்படுத்தாமல்
மிதமாய் வீசிய
இளந்தென்றல்கள்…               
 
jjunaid3026@yahoo.com


நினைவுக்குள் ஆயிரம் …

சம்பூர் சனா, இலங்கை

தட்ப வெப்பங்கள் மாறலாம்
உண்மை நட்புக்கள் மாறுமோ..? 
காலம் செல்லத்தான்
மெல்ல
மனித உள்ளங்கள் மாறுமே
அன்பும் கூடவே தானும்
மாறித்தான் போகுமோ…?
 
சில நொடிகளில் வாழ்ந்தோம்
பல யுகங்களை கடந்தோம்
எல்லாம்
வெறும் விடுகதையாய் ஆச்சு!
பல வருடங்கள் சென்று
எம் நிலைதனை நினைத்தோம்
சிறு கதையாய்ப் போச்சு..
 
எம் கண்ணீரோடிணைந்து
கால வெள்ளம்
ஓடுதம்மா…
 
உன்னோடு பேசிய
அன்பு வசனத்தை
நினைத்தேன்…
கண்ணீராய் பெருகிய
ஆனந்தம்
அதில் நனைந்தேன்…
எந்தன் உள்ளத்தில்
ஓர் உற்சாகம்
உண்டானதே..
இது என் வாழ்க்கையின்
பேருற்சவம்
என்றாகுமே…
 
காலங்கள் தாண்டிவந்து
எனை ஈர்த்தாய்
எண்ணத்தில் தோன்றி
எனைக் கொன்றாய்..
 
யாதுமறியாமல் நின்றேனே
உன் நாமம்
அதை மட்டும் நவின்றேனே
யாதுமாகி என்னுள்ளத்தில்
உறைந்தாயே…
யாது இப்போது செய்ய..
யாதுமறியாமலே கேட்கிறேன்…!
 
வான் மழையில் நனைந்தோம்
விளையாட்டாய்,
காய்ச்சல் வந்து நாமோ
இணைந்து தும்மினோமே…
 
கண்களோடு கண்களை
இரண்டு பேரும் நோக்கி
கண்ணீர் வராமல் யார்
வெல்வதென்று பார்த்தோமே…
 
காயம் பட்ட உனக்கு
மருந்து கட்ட எண்ணி,
என் மனதில் காயம் –
உன் வார்த்தை பட்டதாலா…?!
 
மாமரத்தில் நாமோ
ஏறி விளையாட,
உன் கால் சறுக்கி நீ
மணல்மேட்டில் விழ –
என் காலும் ஏன் சறுக்கியதோ…!
 
நீ தப்பு செய்யாமலே
உனை அப்பா திட்டியப்போ
என் கண்ணில் நீர் வடிந்ததேனோ…,
அதை உன் கண்கள் பார்க்குமுன்பே
என் கைகள் துடைத்ததுமேனோ…!
 
எம் கண்ணீரோடிணைந்து
கால வெள்ளம்
ஓடுதம்மா… 
 
sampoorsana@yahoo.com