அமரர் எஸ்.பொ 1 : சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான்! ஆக்க இலக்கியத்தில் பரீட்சார்த்தமான முயற்சிகளின் மூலவர்!

எஸ்.பொபொன்னுத்துரை  இலங்கையிலிருந்து   நைஜீரியாவுக்கு  தொழில் வாய்ப்பு  பெற்றுச் சென்ற  காலகட்டத்தில்   அங்கு  ஆபிரிக்க இலக்கியங்களை   ஆழ்ந்து   கற்றார்.  பின்னாளில்  பல  ஆபிரிக்க இலக்கியங்களையும்  அதேசமயம்  அரபு  இலக்கியங்களையும் மொழிபெயர்த்து  நூலுருவாக்கினார். ஆபிரிக்காவில்  ஒரு  தவம்  என்ற   விரிவான  கட்டுரையின்  முதல் அத்தியாயத்தை  வீரகேசரி  வாரவெளியீட்டுக்கு  அனுப்பினார்.  இதர அத்தியாயங்களும்   அவரிடமிருந்து  கிடைத்தபின்னர் வெளியிடுவதற்கு   வீரகேசரி  வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர்  பொன். ராஜகோபால்  தீர்மானித்திருந்தார். எனினும்   பொன்னுத்துரை   அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தமையினால்  அந்தத் தொடர்  வெளியாவது சாத்தியப்படவில்லை.   முதலாவது  அத்தியாயத்தின்  மூலப்பிரதி  பொன்னுத்துரையிடமும்   இருக்கவில்லை.    வீரகேசரிக்கு   அனுப்பிய பிரதியும்   காணாமல்போனது.   காலம்  கடந்து  பின்னாளில்  பல ஆபிரிக்க   இலக்கியங்களையும்   அதேசமயம்  அரபு இலக்கியங்களையும்  மொழிபெயர்த்து   நூலுருவாக்கினார். இவற்றுக்காக   அவர்   செலவிட்ட   நேரம்   மிகப்பெறுமதியானது.

மேலைத்தேய   மதங்கள்   பற்றியும்   கிழைத்தேய    மதங்கள்  குறித்தும்  அவரிடம்  ஆழமான  பார்வை  இருந்தமையினால் கிறிஸ்தவ – இஸ்லாமிய – இந்து – பௌத்த – சமண இலக்கியங்களையும்   ஆழ்ந்து   கற்றார்.    அதனால்தான்  அவரால் கீதையின்   நிழலில் (கல்கியில் தொடராக வந்தது)  மகாவம்ச –   மாயினி –  இஸ்லாமும்   தமிழும் –   பெருங்காப்பியப்பத்து-  காந்தி தரிசனம்   முதலான   நூல்களையும்   எழுத  முடிந்திருக்கிறது. கவிதையில்   ஆரம்பித்து ,  சிறுகதை,   நாவல்  எழுதிய  பொன்னுத்துரை நூற்றுக்கணக்கான    விமர்சனங்களும்  நூல்  மதிப்புரைகளும் எழுதியிருப்பவர்.   பொதுவாக  எவரும்  தமது  நூலுக்கு  முன்னுரை எழுதிக்கொண்டிருந்தபொழுது   இவர்  அதற்கு  முன்னீடு எனப்பெயரிட்டுத்தான்  எழுதியவர்.   எதிலும்  மாற்றம்  புதுமை நிகழவேண்டும்  என்ற  அவா   அவரைப்பற்றியிருந்தது. தமது   விமர்சன  முறைமையை   –  ” My literary criticism is more in defence of established  creative writing institution ”   என்றே குறிப்பிட்டு  வந்திருக்கிறார்.

ஆக்க   இலக்கியத்தில்  எப்பொழுதும்  பரீட்சார்த்தமான  முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர்,  தமது  படைப்புகளின்  தலைப்புகளையும்  ஒரு எழுத்தில்   அல்லது  மிகவும்  குறைந்த  எழுத்துக்களில்தான்   தெரிவு செய்வார். உதாரணம்:  தீ.  – வீ   – சடங்கு  –   முறுவல் –  ஆண்மை –  மாயினி  –    அவா – ?   (கேள்விக்குறியிலும்  ஒரு  நூல்)

படைபிலக்கியத்தில்  மட்டுமன்றி   வானொலி   நிகழ்ச்சி உரைச்சித்திரங்களிலும்   அவற்றுக்கு  சிறிய   தலைப்புகளையே சூட்டியவர்.   குறிப்பாக  அவர்  இலங்கை  வானொலியில்  1970  களில் நடத்திய   ஒரு  நிகழ்ச்சிக்கு  வேர்   எனத்தலைப்பிட்டார். குறிப்பிட்ட  வேர்   என்ற  தலைப்புக்குள்  சிலரை   வானொலியில் பேசவைத்தார்.   மனித  குலத்தின்   வேரின்  சால்பையும்  – பண்பாட்டுக்கோலங்களில்  –    இயற்கையில்   வேரின்   இன்றியமையாத    தன்மைகளையும்    அந்த  வானொலிச்சித்திரம் நேர்த்தியாகவும்   தரமாகவும்    அமைத்தது. அதனால்   அந்த உரைச்சித்திரம்   பலதடவைகள்   மறு  ஒலிபரப்புச்செய்யப்பட்டது.

அதுபோன்று   அவுஸ்திரேலியா  மெல்பனில்  ஒலிபரப்பாகும் வானொலி    ஒன்றில்   அவர்   நிகழ்த்திய   மனித   குலத்தின்    உணவு நாகரீகம்   என்ற  உரைச்சித்திரமும்  முக்கியமானது.   1989  இல் குறிப்பிட்ட   3zzz   தமிழ் ஓசை வானொலி  நிகழ்ச்சியை   நடத்தியவர் பொன்னுத்துரையின்    நீண்ட  கால  நண்பர்  நவரத்தினம்  இளங்கோ என்பதும்   குறிப்பிடத்தகுந்தது.

 

பொன்னுத்துரையின்  சில  நாடகங்கள்  இலங்கை,    தமிழ் நாடு அவுஸ்திரேலியா    முதலான  நாடுகளிலும்  மேடையேறியுள்ளன. தமிழ்  நாட்டில்   சில   தொலைக்காட்சிகளிலும்  சில  தொடர் நிகழ்ச்சிகளை   நடத்தியிருக்கிறார். தனித்தும்  எழுதினார்  – சிலருடன்  இணைந்தும்  எழுதினார். உதாரணமாக   அவர்   இணைந்து    எழுதியவை:- மத்தாப்பு – ( நாவல்) எஸ்.பொ.வுடன்  இணைந்தவர்கள்:   இ.நாகராஜன், இரசிகமணி    கனக செந்திநாதன்,    சு.வேலுப்பிள்ளை,    குறமகள். ஈழத்து   இலக்கியத்தில்  முதல்  முதலில்   வெளியான  பரீட்சார்த்த நாவல்    மத்தாப்பு. சதுரங்கம் – ( கட்டுரை )  இணைந்தவர்கள்:    ஆர். பாலகிருஷ்ணன்,    வ.அ. இராசரத்தினம்,   எம்.ஏ. ரஹ்மான்,   சாலை  இளந்திரையன். பொன்னுத்துரை  ஆக்க   இலக்கியத்துறைக்கு  அப்பால் சிற்றிதழ்களை   நடத்தும்   பெருவிருப்பும்    கொண்டிருந்தவர். கொழும்பில்    பிரபல்யமான  விவேகானந்தா   கல்லூரியில்   அவர் ஆசிரியராக   பணியாற்றிய  காலத்தில்  ரஹ்மான  நடத்திய இளம்பிறையில்   பொன்னுத்துரை   உத்தியோகப்பற்றில்லாத ஆசிரியராகவே    விளங்கினார்.   ரஹ்மான்  தொடங்கிய  அரசு வெளியீட்டு  நிறுவனம் –  அகஸ்தியர் –  தளையசிங்கம் – பொன்னுத்துரை –  இரசிகமணி  கனகசெந்திநான்,  கவிஞர் அண்ணல்    உட்பட  பலரது  நூல்களை  வெளியிட்டது.

பொன்னுத்துரை    இலக்கியத்தில்  செம்மைப்படுத்தும்   மரபினையும் ஈழத்து   இலக்கியவளர்ச்சியில்  உருவாக்கினார்.   பொதுவாக படைப்பாளிகள்   தமது  படைப்புகளை   தாமே   படைத்துவிட்டு  அவசர அவசரமாக  வெளியிடுவதில்   அவருக்கு  உடன்பாடு  இருந்ததில்லை. பொன்னுத்துரை   தமது   சிறுகதை,   நாவல்,  கட்டுரை,  விமர்சனங்களையும்  எழுதியபின்னர்   மீண்டும்   மீண்டும்   படித்து செம்மைப்படுத்தும்    இயல்பினைக்கொண்டிருந்தவர்.   மற்றவர்களின் படைப்புகளையும்    நுனிப்புல்  மேயாமல்   ஆழ்ந்து  படித்து கருத்துச்சொல்லி    அவற்றில்  நீக்கவேண்டிய   – இணைக்கவேண்டிய -செம்மைப்படுத்த    வேண்டிய   அம்சங்களை   குறித்துக்கொடுப்பார். தனது  படைப்புகளையும்  மற்றவர்களிடம்  படிக்கக்கொடுத்து கருத்துக்கேட்டதன்   பின்னரே   மேலும்    செம்மைப்படுத்தி   அச்சுக்கு அனுப்புவார்.    இந்த    இயல்பு   அவர்  எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து   தொடர்ந்தது. மற்றவர்களின்   படைப்புகளை   செம்மைப்படுத்தும் பொழுது அவருக்கிருக்கும்    நிதானம்   சிறப்பானது.   இலங்கையிலும் தமிழ்நாட்டிலும்    அவுஸ்திரேலியா    உட்பட   ஐரோப்பிய  நாடுகளிலும் வதியும்   பலரது    படைப்புகளை    அவர்   செம்மைப்படுத்தியிருக்கிறார். அந்தப்படைப்புகளுக்குப் பொருத்தமான தலைப்புகளையும் வைத்தவர் எஸ்.பொ.

சென்னையில்   மித்ர  பதிப்பகத்தின்  வெளியீடுகளில்  அழகியலையும் அச்சமைப்பிலும்  பக்கவடிவமைப்பிலும்    கலைநேர்த்தியையும் காண்பித்தார். மலேசியாவில்   எழுத்தாளர்    பீர்முகம்மது   தொகுத்த மலேசியச்சிறுகதைகள்  நூலுக்கு   பொன்னுத்துரையே  பெயர் சூட்டினார்.    அதன்  பெயர்   வேரும்  வாழ்வும்.   இந்தத்தலைப்பில் ஈழத்து   எழுத்தாளர்களை  நான்கு    தலைமுறைகளாக   வகுத்து பெரிய  தொகுப்பினை  வெளியிடும்    எண்ணமும்  அவர் அவுஸ்திரேலியாவுக்கு   1989  இல்   புகலிடம்   பெற்றபின்னர் உதயமாகியது.   ஆனால், சிறுகதைகளை தேடி    எடுத்து   தொகுப்பதில் தாமதங்கள்    நீடித்தமையினால்    புகலிட  நாடுகளில்  வதியும்  ஈழத்து எழுத்தாளர்களின்    சிறுகதைகளை    தொகுத்து  பனியும்  பனையும் என்ற   தொகுப்பினை  வெளியிட்டார். அவரது  இந்த   முயற்சிக்கு  அவுஸ்திரேலியா  கனடா  மற்றும் ஐரோப்பிய   நாடுகளில்   புகலிடம் பெற்றவர்கள்   ஒத்துழைப்பு வழங்கினர்.

பொன்னுத்துரையின்  வாழ்வையும்  பணிகளையும்  விளக்கும் எஸ்.பொ. ஒரு பன்முகப்பார்வை   என்ற  நூலில்  பல   இலக்கிய ஆளுமைகள்    அவர்    குறித்து   விரிவான  கட்டுரைகள   எழுதியுள்ளனர். கொழும்பிலிருந்து   நீண்டகாலமாக  வெளியாகும்  ஞானம்  இதழின் ஆசிரியர்   டொக்டர்  தி. ஞானசேகரனின்  கேள்விகளுக்கு  எஸ்.பொ . தெரிவிக்கும்   நீண்ட  பதில்களைக்கொண்ட  தொடர்  நேர்காணல்  பல மாதங்களாக   ஞானம்   இதழில்    வெளியானது. பின்னர்   தீதும்   நன்றும்   பிறர்தர  வரா  என்ற  தலைப்பில்   குறிப்பிட்ட   நேர்காணல்  நூல்  2007  இல்  வெளியானது.   1924 பக்கங்களில்  எஸ்.பொ.   எழுதிய   அவரது    சுயவரலாற்று   ஆவணம் வரலாற்றில்    வாழ்தல்  இரண்டு   பாகங்களாக   ஒரே வேளையில் வெளியானது.

” புலம்பெயர்ந்தோர்   இலக்கியமே   எதிர்காலத்தில்   தலைமை  ஏற்கும் ” என்ற   கருத்தையும்   அவர்  சில வருடங்களுக்கு  முன்னர் சொன்னதனால்   இலக்கிய  உலகில்,    குறிப்பாக   தமிழ்நாட்டில் சர்ச்சை  எழுந்தது. குறிப்பிட்ட  புலம்பெயர்ந்தோர்  இலக்கியம்   என்ற  பதப்பிரயோகத்தை முதல்  முதலில்   அறிமுகப்படுத்தியவரும்   பொன்னுத்துரைதான். 1989   இல்  இந்தக்கனதியான   இரண்டு  சொற்களை  அவர்  மெல்பனில் நடந்த எனது சமாந்தரங்கள் கதைத்தொகுப்பின் வெளியீட்டு விழாவில்     முன்மொழிந்தார்.  பின்னர்   புலம்பெயர்ந்த  படைப்பாளிகளுடன்  தொடர்புகளை   ஏற்படுத்தி   பனியும்  பனையும்  தொகுப்பினையும்   வெளியிட்டதுடன்    புலம்பெயர்   இலக்கியம்  குறித்த   தனது   கருத்துருவாக்கத்திற்கு  மேலும்    வலுச்சேர்க்கும்    வகையில்   தமிழ்நாடு     புதுச்சேரியில்   22-03-2006   இல்   புதுவை பல்கலைக்கழகத்தின்    சுப்பிரமணிய  பாரதியார்   தமிழியற்  புலத்தில் நிகழ்ந்த   பன்னாட்டு    கருத்தரங்கில்   புலம்பெயர்ந்தோர்   இலக்கியம் பற்றி   விரிவுரை   நிகழ்த்தினார்.

ஏற்கனவே   ஈழத்து  இலக்கியங்களின்   உரை நடை –   ஈழத்து மொழிவழக்குகள்  புரியவில்லை  – அவற்றுக்கு   அடிக்குறிப்புகள் தேவை   என்ற  மனப்பான்மையுடன்    வாழ்ந்த  தமிழக வாசகர்களுக்கும்   படைப்பாளிகளுக்கும்    ஈழத்து   இலக்கியத்தின் நீட்சியான    போர்க்கால   இலக்கியத்தையும்   ஈழ   மக்களின்   புகலிட வாழ்வை   சித்திரிக்கும்   புலம்பெயர்ந்தோர்   இலக்கியத்தையும் தமிழகம்    தெரிந்துகொள்ளவேண்டும்    என்பதை   தொடர்ந்து வலியுறுத்துவதற்கு   குறிப்பிட்ட  பன்னாட்டு   கருத்தரங்கினை  தக்க முறையில்   பயன்படுத்தினார். அன்று    அவர்   நிகழ்த்திய  நீண்ட   உரை  அதே  ஆண்டில்  (2006 இல்) பனிக்குள்   நெருப்பு  என்ற  பெயரில்  தனி  நூலாக  வெளியானது. அவருக்கு  2010   இற்கான  கனேடிய   இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது  2011  ஆம்   ஆண்டு  கனடாவில்  வழங்கப்பட்டது. பொன்னுத்துரையின்   பல  நூல்களுக்கு   தமிழகத்தின்   மூத்த முன்னணி    படைப்பாளிகளும்    விமர்சகர்களும்   முன்னுரை வழங்கியுள்ளனர்.

ஜெயமோகன்   தமது   ஈழ  இலக்கியம்   என்ற  நூலில்  எஸ்.பொ.வை யாழ்ப்பாணத்துப்பாணன்   என்றே   விளித்து  அவர்  பற்றிய  தமது விரிவான   பார்வையை   பதிவு  செய்துள்ளார். சென்னையில்   மித்ர   பதிப்பகத்தின்   சார்பில்  முழுநாள் இலக்கியக்கருத்தரங்கினை   நடத்தியிருக்கும்   எஸ்.பொ. – அவரது இலக்கியப்பிரவேச  ஆரம்ப  காலத் தோழர்  மல்லிகை  ஜீவாவை சென்னைக்கு   அழைத்து  பாராட்டி  விருதுவழங்கி  கௌரவித்தார். பொன்னுத்துரையின்   வாழ்வும்   பணிகளும்   இலங்கை – தமிழ்நாடு – ஆபிரிக்கா – அவுஸ்திரேலியா  என்று  பரந்துபட்டிருந்தது.   அதனால் அவர்   சர்வதேசப்பார்வை   மிக்க   ஆளுமையுள்ள  படைப்பாளியாகவும் விளங்கினார்.

(தொடரும்)

letchumananm@gmail.com