படகர்களின் வாய்மொழி வழக்காறுகளில் சூழலியல் சிந்தனைகள் – 1 (பாவம் போக்கும் (கருஹரசோது) இறப்புச் சடங்கில் சூழலியல் சிந்தனைகள்)

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -வாய்மொழி வழக்காறுகள் மானுட வாழ்வின் அறிவின் சேகரமாகும். அவை பெரும் தலைமுறை தொடர்ச்சியினைக் கொண்டவை. வாழ்வியல் சூழலோடு பிணைந்து நிற்கின்ற இந்த வழக்காறுகள் அவர்தம் வாழ்வியல் விழுமியங்களையும் பறைசாற்றுபவை. அர்த்தப்பட்ட வாழ்வினை அர்த்தப்பட வேண்டிய வாழ்விற்குக் காட்டாகக்கூறி நெறிப்படுத்துபவை. அந்நிலையில் நீலகிரி படகர் இன மக்களின் இறப்புச் சடங்கு சார்ந்த “கரு ஹரசோது” எனும் பாவம் போக்கும் சடங்கில் இடம்பெறும் வாய்மொழி வழக்காறுகளில் நிலவும் சூழலியல் சிந்தனைகள் இம்மக்களின் சூழலியல் அறிவினையும், பாதுகாப்பினையும் புலப்படுத்துபவையாக அமைகின்றன.

படகர்களின் வாழ்வியல், வழிபாட்டு நிலையைவிட இறப்புச்சடங்கியலுக்கே அதிகமான முக்கியத்துவம் அளிக்கின்றது. மறுபிறப்பு மற்றும் பேய்களின் மீதும் நம்பிக்கையில்லாத இம்மக்கள் இம்மையுலகிலிருந்து பிரிந்துச் செல்கின்ற ஆன்மா மறுமையுலகத்தில் தம் முன்னோர்களுடன் உறைவதாக நம்புகின்றனர். இந்நிலையில் இம்மையுலகில் பிரியும் ஆன்மாவினையும், அவ் ஆன்மா உற்ற உடலையும் புனிதப்படுத்துவது இவர்களின் முக்கியமான இறப்பியல் சடங்காகும். அதனுள்ளும் இறந்த உடலினைக் கிழக்குநோக்கி கிடத்தி பாவம்போக்கும் ‘கரு ஹரசோது’ எனும் சடங்கு மிகவும் இன்றியமையானதாகும்.

ஆண் இறந்திருந்தால் ஆண் எருமைக் கன்றினையும், பெண் இறந்திருந்தால் பெண் எருமைக் கன்றினையும் சடலத்தின் வலதுப்புறத்து தலைமாட்டில் இருத்தி, இறந்தவரின் வலதுக்காரத்தினைக் கன்றின் வாலினைப் பற்றச்செய்து இந்தப் பாவம் போக்கும் சடங்கினை மேற்கொள்கின்றனர். படக மொழியில் கன்றினைக் ‘கரு’ என்றழைக்கின்றனர். இவர்தம் ஆதி வாழ்வினை எருமைகளோடு ஆரம்பித்ததன் மரபுநிலைத் தொடர்ச்சியாகவும், இறந்தவருடன் அவர்தம் மறுமை உலக வாழ்விற்கு எருமையினை அனுப்பிவைக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலும், இறந்தவரின் நினைவாக இவ்வுலகில் விடப்படுகின்ற எருமையாகவும்; இந்தச் சடங்கில் பயன்படுத்தும் எருமைகளைக் கருதலாம்.

இச்சடங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இதில் சொல்லப்படுகின்ற வாய்மொழி வழக்காறுகள் விளங்குகின்றன. வாக்கியங்களாக அமைந்துள்ள இவ்வழக்காறுகள் இவர்கள் பாவமாகக் கருதும் செயல்களை அடுக்குகின்றன. ஊரின் பெரியவர் ஒருவர், கட்டிலில் வைக்கப்பட்ட சடலத்தின் தலைமாட்டின் நடுவில் நின்று இந்தப் பாவங்களைச் சொல்ல, பிணத்தினைச் சூழ்ந்துள்ள ஆண்கள் அந்தப் பாவம் நீங்கட்டும் என்று தம் வலதுக் கரத்தினைப் போகட்டும் என்று சைகை செய்வதைப்போல முன்னோக்கி வீசுகின்றனர்.

இந்த வாக்கியங்களைத் தொடர்ந்து மூன்றுமுறை சொல்லவேண்டும். அவ்வாறு சொல்லும் போது இடையில் தடுமாற்றமோ, மறதியோ வரக்கூடாது. அவ்வாறு நேரின் மீண்டும் இந்த வாக்கியங்களை முதலிலிருந்து கூறவேண்டும் என்பது இவர்களின் மரபாகும். மேலும் இந்தப் பாவமன்னிப்பின் வாக்கியத்தினைக் கூறுபவர் பேரக்குழந்தைகளைக் கண்டு நிறைவாழ்வினை வாழ்ந்தவாராக இருக்க வேண்டும் என்பதும் இவர்களின் மரபுநிலையாகும். தொன்றுதொட்டு இயற்கையோடு இணைந்து வாழும் இம்மக்கள் இயற்கையின்மேல் கொண்ட நேயத்தினையும், மதிப்பினையும் இந்தப் பாவமன்னிப்பிற்குரிய வாய்மொழி வழக்காறுகள் சிறப்பாகவே விளக்கி நிற்கின்றன. மேலும் இது இவர்களின் சூழலியல் அறிவிற்கும் பேணலுக்குமான சிறந்த சான்றாகவும் திகழ்கின்றன.

படகர்கள் தம் வாழ்க்கை வட்டச் சடங்கிற்கு உரிய காலமாக வளர்மதிக் காலத்தையே மரபார்ந்து நிர்ணயம் செய்து வந்துள்ளனர். இவர்களின் முக்கியமான குலதெய்வச் சடங்குகள் அனைத்தும் முழுமதிநாளில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முழுமதி என்பது வளமைக்குரிய குறியீடாக இருந்தாலும் சடங்கிற்குரிய வெளிச்சத்திற்காகவே இம்முழுமதிநாளினைப் படகர்களின் முன்னோர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று துணியலாம். ஏனெனில், ஆரூடத்தின்மீது பெரும்பாலும் நம்பிக்கையற்றவர்களாவே படகர்கள் விளங்குகின்றனர். இன்றும் இவர்களின் திருமணம் உட்பட்ட சடங்குகள் ஆரூடம் சார்பின்றியே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நிலவினை இவர்கள் ‘திங்குவா’ என்று அழைக்கின்றனர். முழு நிலவினை ‘உன்னவெ’ என்றும் அமாவசையினை ‘அவ் ஜெனா’ என்றும் அழைக்கின்றனர்.  நிலவின் மீது தொன்றுதொட்டு மனிதகுலத்திற்குப் பெரும் மதிப்புநிலை நிலவிவருவது நாம் அறிந்தவொன்றே. இதற்குச் சிறந்ததொரு உதாரணமாக உறையூர் முதுகண்ண சாத்தனாரின் புறனானூற்றின் 27 ஆம்  பாடலினைக் கொள்ளலாம்.

படகர்களின் வாய்மொழி வழக்காறுகளில் சூழலியல் சிந்தனைகள் – 1 (பாவம் போக்கும் (கருஹரசோது) இறப்புச் சடங்கில் சூழலியல் சிந்தனைகள்)

படகர்கள் நிலவின்மீது வைத்திருக்கின்ற மதிப்பினை “சந்திரன சர்ப்ப நுங்குவனெ ஒரிகிதது பாப்பா” எனும் பாவம் போக்கும் வழக்காறு விளக்குகின்றது. அதாவது நிலவினைப் பாம்பு விழுங்கும் போது (நுங்குவனெ) ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது (ஒரிகிதது) பாவம் (பாப்பா) என்று விளக்கம் தருகிறது இந்த வழக்காறு. நாளும் தண்ணிய நிலையில் வெளிச்சம் தருகின்ற நிலவினைப் பாம்பு விழுங்கும்போது, நிலவு துயரில் உள்ளபோது உறங்குவது எந்த முறையில் நியாயம்? இது பெரும் பாவம் என்று விளிக்கிறது இவ்வழக்காறு. மேலும் சந்திர கிரகணத்தால் வலிநீண்டு துயருற்ற நிலையில் அதன் வலியினை உணராமல் கிரகணத்திற்குப் பிறகு உறங்குவதும் நேயமற்றது என்பதும் இவ்வழக்காற்றிற்குப் பொருந்தும்.

கால்நடைகளுக்கு அடுத்து வேளாண்மைத் தொழிலினை மேற்கொள்ளும் இவர்கள் நீர் நிலைகளைப் பராமறிப்பதை தம் சமூகச் சடங்குகளின் ஒரு பகுதியாகவே உட்செறித்துள்ளனர். எருமைகளுக்கு உப்பு ஊற்றும் சடங்கு, பூமி விடுப்புச் சடங்கு உள்ளிட்ட இவர்களின் மரபார்ந்த சடங்குகள் ஆற்றங்கரையிலேயே நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகளை நிகழ்த்துவதன் முதற்கட்டமாக அந்நீர்நிலையினைச் சுத்தம் செய்வதே அடங்குகின்றது.

பவ மன்னிப்பிற்கான வழக்காற்றில் நான்கு வழக்காறுகள் நீரினையும் நீர் நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டதாகும். “பாவிக உகதது பாப்பா” நீர் நிலைகளில் (பாவிக) எச்சில் உமிழ்ந்தது (உகதது) பாவம். இதை சில இடங்களில் இதை “அரதோப்ப பாவிக உகதது பாப்பா” என்றும் “அரதோப்ப கங்கெக உகதது பாப்பா” என்றும் வெவ்வேறு வழக்காறுகளாகப் பயன்படுத்துகின்றனர். இங்கு குறிக்கும் ‘அரதோப்பா’ என்பதற்கு ஓடுகின்ற என்று பொருள். ஆக தேக்கிவைத்த நீர் நிலைக்கும், ஓடுகின்ற நீர் நிலைக்கும் எச்சில் உமிழ்வது பாவம் என்று இப்பாவம் குறிக்கின்றது.

“அரதோப்ப பாவிக அப்பண இல்லாதெ லகா ஏரிதது பாப்பா” எனும் வழக்காறு ஓடுகின்ற நீரினைக் கடந்துச் செல்கின்றபோது அதை வணங்காமல் (லகா ஏரிதது) செல்வது பாவம் என்பதை விளக்குகின்றது. ஒரு சில ஊர்களில் ஓடுகின்ற ஆற்றில் குளிக்கும் போது ஒற்றை உடையில்லாமல் குளிப்பது பாவம் என்று இதற்குப் பொருள் தருகின்றனர். அவ்வாறு இருப்பது நீரினை அவமதிப்பதையும், நமக்கான எச்சரிக்கையின்மையினையும் உணர்த்துகின்றது. இதே கருத்தினையே ஆசாரக்கோவையின் 11 ஆம் வெண்பா வலியுறுத்துகின்றது. இதேபோல ஆசாரக்கோவையின் 14 ஆம் பாடல் இதற்கு முன்கண்ட நீரில் உமிழக்கூடாது எனும் கருத்தினை வலியுறுத்துகிறது. இன்றும் படகர்கள் கால்களில் காலணிகளை அணிந்துக்கொண்டு நீர் நிலைகளுக்குள் இறங்குவதோ, நீரினை வலது கரத்தால் தொட்டு வணங்காமல் பயன்படுத்துவதோ, நீரில் உமிழ்வதோ கிடையாது.

நீர் நிலைகளில் வாழ்கின்ற உயிரினங்களையும், நீர் ஆற்றல் வீணாவதையும், நீர் ஆற்றலைக் கொண்டு பேரிடர் உருவாக்குவதையோ பாவமாகக் கருதுவதை படகர்களின் “கட்டித கெரெய ஒடத்தது பாப்ப”, “தும்பித பாவிய தரதது பாப்ப” எனும் வழக்காறுகள் விளக்குகின்றன. தேக்கப்பட்ட (கட்டித) நீர் நிலையினை, ஏரி நீரினை (கெரெய) உடைத்தது (ஒடத்தது) பாவம். நிறைந்த (தும்பித) பாவிய (குளத்தினை –  மடுவினை – அணையினை) திறந்தது (தரதது) பாவம் என்று பொருள்தருகின்றன இவ்வழக்காறுகள்.

நீர் தேக்கிவைக்கப்பட்ட சிறிய அளவிலான நீர்நிலையினை உடைப்பதன்மூலம் அங்கிருக்கும் நீர் வீணாவதோடு தேக்கப்பட்டதன் நோக்கம், தேக்கியவரின் உழைப்பும் வீணாகிறது. இது ஒருவகையில் பிறரின் உழைப்பினை, பிழைப்பினைக் கெடுக்கின்ற செயல்பாடாகும். மேலும் நீர்நிலைகளை அழித்து குடியிருப்போ, விளைநிலங்களோ உருவாக்குவது பாவம் என்ற கருத்தையும் இது பகர்கின்றது. மேலும், நீர் நிறைந்த குளம், மடு அல்லது அணையினைத் திறப்பதன்மூலம் தண்ணீர் வீணாவதை, நிலங்கள் சேதமுறுவதை நிகழ்த்தலாம். அங்கு வாழ்கின்ற சிறிய உயிரினங்களின் வாழ்வியல் பாதிப்படையலாம். எனவே இது இவர்களால் பாவமாகக் கருதப்படுகின்றது. நீர் சார்ந்த இவர்களின் இறப்புச் சடங்கார்ந்த வழக்காறுகள் இவர்களின் உற்பத்தி மற்றும் அடிப்படைத் தேவைகளை ஒட்டியதாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

எல்லா உயிர்களையும் பொதுநிலையில் வைப்பதே மனிதத்துவத்தின் இயல்பாகும். இந்தக் கூற்றினைப் படகர்களின் இந்த இறப்புச் சடங்கார்ந்த வாய்மொழி வழக்காற்றியலோடுப் பொருத்திப் பார்க்கும்போது “உட்டு ஹொப்பெய ஒரெ தட்டிதது பாப்ப”, “கட்டொப்பெக கய் ஆக்கிதது பாப்ப”, “அச்செய சிகித்தது பாப்ப”, “பரல பாக்கிதது பாப்ப”, “அச்செய சிகித்து பிசிலுக ஆக்கிதது பாப்ப”, “ஏவா பயில மோவாக ஜில்லிதது பாப்ப”, “ஆவா கோவா கொத்தது பாப்ப”, “ஓஜிய கப்பெய கொத்தது பாப்பா” ஆகிய வழக்காறுகளில் இந்த ஜீவக்காருண்யத்துவம் விளங்கி நின்கின்றது. இந்த வழக்காறுகளில் பெரும்பான்மையானவை நேரடியாகவும், மறைபொருளாகவும் என்ற இருநிலைகளில் உள்ளுறைக்கொண்டு விளங்குபவை.

‘ஹொப்பெ’ என்பது பசுமையான தழையினையும், தனிப்பட்ட ஒருவகைச் செடியினையும் குறிக்கும். இந்த ‘உப்பெகிடு’ எனும் செடி இவர்கள் பல் மருத்துவத்திற்குப் பயன்படுத்தும் சிறந்த மூலிகையாகும். வளர்ந்து நிற்கின்ற (உட்டு) ஹொப்பெயைச் சிதைத்தது (ஒரெ தட்டிதது) பாவம் என்பதை குறிக்கும் “உட்டு ஹொப்பெய ஒரெ தட்டிதது பாப்ப” எனும் பாவமானது பசுமையாக வளர்ந்து நிற்கின்ற செடி தழையினை சிதைப்பது பாவம் என்ற நேரடியான பொருளைத் தருகின்றது. மேலும் ‘உட்டு’ எனும் படகச் சொல் பிறப்பினைக் குறிப்பதாகும். உடன் பிறந்தவர்களைக் குறிக்கும் இச்சொல் சகோதர உறவுக்கொண்ட அனைவரையும் குறித்து நிற்பதாகும். அந்நிலையில் சகோதரி (உட்டு ஹொப்பெய) முறையுள்ள பெண்ணை விரும்பியது பாவம் என்ற பொருளையும், உடன் பிறந்த சகோதரியை கவனிக்கமால் விட்டது பாவம் எனும் பொருளோடும் கூடிய உள்ளுறைப் பொருளையும் அளிக்கின்றது.

அதே நிலையில் “கட்டு ஹொப்பெ” என்பது கட்டிவைக்கப்பட்ட ஹொப்பெ என்று பொருள் தரும். அதாவது ஒருவர் கட்டி வைத்திருக்கும் ஹொப்பெயில் நாம் கை வைப்பது பாவம் என்ற பொருளினைத் தருகின்றது. “கட்டொப்பெக (கட்டிவைக்கப்பட்ட ஹெப்பெ) கய் ஆக்கிதது (கை வைத்தது) பாப்ப” எனும் பிறரின் பொருளினைக் களவாடுவது பாவம் எனும் நேரடிப் பொருளையும் குடும்பம் எனும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட பெண்ணினை விரும்புவதும், அவளினை மயக்கி வாழ்வினைக் கெடுப்பதும் பாவம் எனும் உள்ளுறைப் பொருளினையும் அளிக்கின்றது.

பருவமெய்தும் முன்பே ஒரு பெண்ணை புணர்வது பாவம் என்ற உள்ளுறை பொருளோடும் பசுமையாக உள்ள செடிகொடிகளைச் சிதைப்பது பாவம் என்ற நேரடிப் பொருளோடும் “அச்செய (பசிய இலை தழையினை) சிகத்தது (சிதைத்தது) பாப்ப” எனும் வழக்காறு அமைகின்றது. அதே நிலையில் வரண்டுபோன தாவரங்களையும் இறந்துப் போன சடலமாக நினைத்து அதை கூட்டி அகற்றுவதை பாவம் எனும் நேரடிப்பொருளையும், வயது முதிர்ந்தவர்களைப் பாதுகாக்காமல் விடுவது பாவம் எனும் உள்ளுறைப் பொருளையும் விளக்குவதாக “பரல (வரண்டது) பாக்கிதது (கூட்டித் தள்ளியது) பாப்ப” என்ற வழக்காறு விளக்குகின்றது.

ஒருவரின் பசுமையான வாழ்வினை, நல்ல எதிர்க்காலத்தினை முன்னமே கிள்ளி எறிந்தது பாவம் என்ற உள்ளுறைப் பொருளுடனும், விளையும் பயிரினை முளையிலே கிள்ளி எறிவது பாவம் என்ற நேரடிப் பொருளுடனும் “ஏவா (முளைத்த இளம்) பயில (பயிரினை) மோவாக (முளையிலேயே) ஜில்லிதது (கிள்ளி எறிந்தது) பாப்ப” என்ற வழக்காறு விளக்குகின்றது. மேலும் நல் வாழ்வு வாழ்ந்து வருபவரை கெடுத்து அவர்களை துயர் நிறைந்த வாழ்நிலைக்கு ஆளாக்குவது பாவம் என்ற மறைபொருளுடனும், பசுமையான செடியினை வெட்டி அதை வெயிலில் போட்டது பாவம் எனும் நேரடிப் பொருளுடனும் “அச்செய (பசுமையான செடியினை) சிகித்தது (சிதைத்தது) பிசிலுக (வெயிலில்) ஆக்கிதது (இட்டது) பாப்ப” என்ற வழக்காறு விளங்குகின்றது.

எருமை, பாம்பு, தவளை, ஓணான், பல்லி இவற்றை கொல்வதை பெரும் பாவமாக இந்த வழக்காறுகள் கொள்கின்றன. “ஆவா (பாம்பு) கோவா (எருமை) கொத்தது (கொன்றது) பாப்ப”, “ஓஜி (ஓணான் – பல்லி) கப்பெய (தவளை) கொத்தது (கொன்றது) பாப்ப” எனும் வழக்காறுகளில் வேளாண்மைக்குத் துணைபுரியும் இந்த உயிரினங்களைக் கொல்வதை பாவமாகக் கருதுவது குறிப்பிடத்தக்கது. இது தமக்குத் பெருந்துணைப்புரியும் அவ்விலங்கினங்களின் மீது அவர்கள் கொண்டிடுள்ள அன்பினைக் காட்டுகின்றது.

தன்னை சுற்றியுள்ள சூழலினை உணர்ந்து அதற்கேற்ப வாழும் வாழ்முறையின் வாய்மொழி சாசனமாக படகர்களின் இந்த இறப்புச் சடங்கார்ந்த பாவம் போக்கு வாய்மொழி வழக்காறுகள் விளங்குகின்றன. இறப்புச் சடங்கின்போது பொதுவெளியில் இவ்வழக்காற்றினைச் சொல்லும்போது இது இறந்தவருக்காக மேற்கொள்ளும் கூட்டுப் பிரார்த்தனையாகவும், இது எல்லாம் பாவங்கள் இதை யாரும் செய்யக்கூடாது எனும் நினைவூட்டலாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இது மிகவும் குறிப்பிடத்தகுந்த முறையில் இயற்கைசார்ந்த நீடித்த நிலையான வளர்ச்சிக்கான செயல்பாடாகவும் இது திகழ்கின்றது.

suniljogheema@gmail.com