தொடர் நாவல்: மண்ணின் குரல் (1 -5)

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -– 1984  இல் ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’.  ‘புரட்சிப்பாதை’ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் ‘புரட்சிப்பாதை’ நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா)  வெளியீடாக ஜனவரி 1987இல்  கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல்.  இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல்  ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.  ஒரு பதிவுக்காகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. –


அத்தியாயம் ஒன்று: கமலா டீச்சர்!

மாரி தொடங்கிவிட்டதால் கடந்த இரு மாதங்களாகவே மப்பும் மந்தாரமாகத்தான் வானம் இருண்டு கிடக்கின்றது. தமிழரின் வாழ்வைப்போல், வேளைக்கே இருண்டுவிடும் பொழுதுகளில், கும்மிருளைக் கிழித்தபடி கவசவாகனங்கள் விரைவதும், கொள்ளிவாற் பிசாசுகளால் கிராமங்கள் எரிவதும்.ஆதிகாலத்தில் ‘கொள்ளிவாற் பிசாசுகளை சேற்றிலுருவாகும் வாயு ஒன்றின் விளைவே என்பதனை அறியாத மானுடர்கள் மருண்டு திரிந்தார்கள். இன்றும் ‘கொள்ளிவாற் பிசாசுகளின் நடமாட்டம் தமிழீழமெங்கனுமே அதிகமாகத்தான் இருக்கின்றது.ஆமாம். இவையும் ஒருவிதச் சேற்றில்தான் உருவாகின்றன.இனவாதச்சேற்றில் உருவான ‘கொள்ளிவாற் பிசாசுகள் இவை, விரைவாக வீடுசேரும் அவசரத்தில் கமலா, வயல் வெளிகளினூடே நீண்டிருக்கும் அச்சாலையில் தனிமையில் வந்து கொண்டிருந்தாள். இலேசாக இருண்டுவிட்டது. மழை வேறு மெல்லிய தூறலாக துமித்தபடி இருந்தது.ஏதோ ஒருவிதச் சோகத்தில் ஆழ்ந்திருப்பதைப்போல் பனை மரங்களெல்லாம் மெளனித்துக் கிடக்கின்றன. வழக்கமாக ஒருவித ஆனந்தத்தில் எக்காளமிடும் தவளைகள் கூட சுருதிகுறைத்து சோககீதம் இசைத்தபடி இருக்கின்றன.

கமலா ஒரு நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இளமாது. வட்டுக்கோட்டையிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகக் கடமையாற்றுகிறாள். அவளது தந்தையும் ஒரு தமிழாசிரியரே! அவளிற்கடுத்து மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் இருக்கின்றார்கள். அவளிற்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் குடும்பநிலைமை காரணமாக கிடைத்த ஆசிரியை வேலையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாள். அவளிற்கடுத்த இரு சகோதரிகளும் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருக்கிறார்கள். இளவயதிலேயே தாயை இழந்து விட்ட குடும்பத்தில் அவளே தாயாக, தமக்கையாக விளங்கினாள். கடைசித் தங்கையும், தம்பியும் பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் கல்வி பயின்று கொண்டிருக்கின்றார்கள்.

இனரீதியாக அடக்குமுறைகளுக்குள்ளாகும் இனத்திற்காக பொங்கும் அவள், சமுதாயத்தில் பெண்கள் இன்னும் அடிமையாக இருப்பதை எண்ணிச் சீறுவாள். குடும்பம் என்னும் புனிதமான பிணைப்பு நிலவ வேண்டுமானால் பெண்ணிற்கு மட்டுமல்ல, ஆணிற்கும் கற்பு அவசியமெனப் பட்டிமன்றங்களில் அடிக்கடி வாதாடிக்கொண்டவள்; கொண்டிருப்பவள். ‘கற்பு என்பதனை காரணங்காட்டி பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் ஈனச்செயலை எதிர்த்தாளே தவிர கற்பின் அவசியத்தை அவள் மறுக்கவில்லை. அது ஆணிற்கும் அவசியமென்ற பாரதியின் கொள்கையில் ஊறியவள் அவள். கல்யாணம் என்ற பெயரில் பெண்களை விற்கும் ஈனச்செயலை கடுமையாகக் கண்டிப்பவள்.

அவளது வாழ்விலும் அவளது மனதிற்கேயுரியதொரு இனிமை இருக்கத்தான் செய்தது; அவளது இலட்சியங்களுக்கேற்றதொரு வீரனாக, ஈஸ்வரன் இருந்தான். அநீதிகளுக்கு, அக்கிரமங்களுக்கெதிராகச் சீறி யெழுந்த அவனது வாழ்வு ‘காடுகளிலும், குகைகளிலும் தனித்த இரவுகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அவன் ஒரு ‘விடுதலைப்போராளி’ அவன் தலைமறைவாகி ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டபோதும் இன்றுவரை அவள் அவனைச் சந்திக்கவில்லை. கடைசியாக அவன் கூறிய சொற்கள் இன்றும், சற்று முன்னால்தான் கூறியது போல் பசுமையாக எதிரொலித்த வண்ணம் இருக்கின்றது.

“கமலா! சிலவேளைகளில் இதுவே எமது கடைசிச் சந்திப்பாகக் கூட இருக்கலாம்; அநீதிகளுக்கு, அக்கிரமங்களுக் கெதிரான “புரட்சிப் பாதையில் காதல், குடும்பம் என்பவற்றின் முக்கியத்துவம் குறைந்து விடுகின்றதேயொழிய, காதல் மறைவதில்லை; என் வாழ்வின் உந்து சக்தியாக என் இறுதி மூச்சுவரை உனது நினைவுகள் தொடர்ந்து வரும். ஒருவேளை புரட்சி வேள்வித்தீயில் எனதுடல் வெந்து போகுமாயின் அதற்காகக் கலக்கமடையாதே! உன் காதலன் புனிதமானதொரு இலட்சியத்திற்காகப் போராடியவனென்று பெருமைப்படு”.

அன்றிலிருந்து அவளைப் பொறுத்தவரையில் அவள் இருவகைப்பட்ட வாழ்வு வாழத்தொடங்கினாள்; எண்ணத்தில் ஈஸ்வரனின் நினைவுகளுடன் மானசீகமானதொரு வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்த அதேசமயம் நிஜவாழ்விலோ குடும்பத்தின் பொறுப்புகளைத் தாங்குமொரு சுமைதாங்கியாக மாறிவிட்டிருந்தாள். மெதுவாக துமித்துக்கொண்டிருந்த தூறல் சிறிது பெருக்கத் தொடங்கிவிட்டிருந்தது. விரைவில் நடையைப் போட்டாள். கண்ணுக்கெட்டியதுரம் வரை ஆள் அரவமேயற்று மயான

அமைதியிலே அவ்வயற் பிரதேசம் மூழ்கிக்கிடக்கின்றது. வழக்கமாக பஸ்ஸில்தான் அவள் வீடு செல்வது வழக்கம்; ஆனால் அன்று பஸ் எதுவும் வந்த பாடாய் இல்லை. அடிக்கடி பஸ்கள் நிற்பதும், வீதிகளில் பிணங்கள் மிதப்பதும் சாதாரண காட்சிகளாகிவிட்டன. “பாவம் அப்பா கவலைப்படப்போகிறார்”, அவளில்லை யென்றால் வீட்டில் எதுவுமே ஓடாது. இதுவரையில் பயிர்களிற்குள் அமைதியாக இரை தேடிக்கொண்டிருந்த “ஆட்காட்டி”க் குருவியொன்று திடிரெனச் சத்தமிட்டபடி பறக்கின்றது. “ஆட்காட்டிக் குருவி”கள் மிருகங்களின் தோழர்களாகக் கருதப்படுபவை.காடுகளில்  வேட்டைக்காரர்களைக் கண்டவுடன் சத்தமிட்டு மிருகங்களைக் காப்பாற்றுவதால் வந்த பெயர்தான் ‘ஆட்காட்டியென்று கர்ணபரம்பரைக் கதையொன்று உண்டு. ஆட்காட்டியைத் தொடர்ந்து தந்திக்கம்பம் ஒன்றில் நெடுநேரமாக நின்றிருந்த நீண்ட  இரட்டைவாற் கரிக்குருவியொன்றும், காற்றுவெளியில் வட்டமிட்டுக் கொண்டிருந்த ‘ஊர் உலாத்தி’க்குருவிகளும் எங்கோ கடுகி மறைந்தன. இதுவரை மெளனித்துக் கிடந்த பனைகளிற்கிடையில் மெல்லியதொரு சலனம் கருவானைக் கோடுகிழித்தபடி மின்னலொன்று ஓடி மறைந்தது.

‘மின்னல் மீண்டும் ஈஸ்வரனை நினைவில் கொண்டுவந்து நிறுத்தியது. அவன் அடிக்கடி சொல்வான்;

“கமலா, ஈழத்து முற்போக்குத் தமிழ்க் கவிஞரொருவரின் கவிதையொன்றுதான் இந்த மின்னலைக் கண்டதும் ஞாபகம் வருகின்றது. மின்னலின் வாழ்வோ கணப்பொழுது: அக்கணப் பொழுதினுள் அது ஒளிவீசி மறைகின்றது. மனிதவாழ்வும் இத்தகையதாயிருக்க வேண்டும். ஒரு கணப்பொழுதே வாழ்ந்தாலும் பிரயோசனமாகப் பயனுள்ள வாழ்வு வாழவேண்டும்.

ஏதோ தொலைவில் இரையும் சத்தம் கேட்கிறது. பஸ்தான் வருகின்றதோ..? திரும்பிப் பார்த்தவளின் கண்களில், தொலைவில் மெல்லிருளைக் கிழித்தபடி வந்துகொண்டிருக்கும் இராணுவக் கவச வாகனங்கள் தெரிகின்றன.


அத்தியாயம் இரண்டு: குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை.

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -மெல்லியதொரு அதிகாலைப் பொழுது; முன்பனிக் காலக்குளிர்மையில் காலை குளித்துக் கொண்டிருந்தது; பனித் துளிகளைத் தாங்கி நின்ற புற்கள் மெல்லிய தென்றலில் சிலிர்த்து நின்றன; கீழ்வானத்தே சிவப்பு கவியத் தொடங்கி விட்டிருந்தது; கிராமத்துச் சேவல்கள் ஆரம்பித்து வைத்த கச்சேரியில், காகங்களும், காகங்களைத் தொடர்ந்து கிளிகளும், தேன்சிட்டுக்களும் அணில்களும் கலந்துகொண்டிருந்தன. வெகுதொலைவில் விண்ணில் நிரை நிரையாக நீர்க்காகங்கள் காக்கைத்தீவுக் கடலைநோக்கி கோடுகிழித்துக் கொண்டிருந்தன.

அந்த மெல்லிய காலையின் எழிலை இடைக்கிடை மின்னல் வேகத்தில் விரைந்து கொண்டிருந்த இராணுவ, பொலிஸ் அல்லது கடற்படையினரின் வாகனங்கள் குலைத்துக்கொண்டிருந்தன.

வயல்களிற்கு நடுவில், நீண்டிருந்த மெல்லிய செம்மண் பாதையில் விரைந்து கொண்டிருந்தான் அநபாயன். அந்தக் கிராமத்தில் பாற்காரி செல்லம்மாவைத் தெரியாதவர்கள் யாருமில்லை; அவளது கணவர் தம்பிமுத்து வாத்தியார் இறந்ததிலிருந்து, அப்பொழுது அநபாயன் ஒரு வயதுக்குழந்தை – ஒரே குழந்தையுடன் வயலையும் பார்த்துக்கொண்டு, கிராமத்தவர்க்கு பாலையும் விற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்தி ஓர் டாக்டராக அல்லது ‘எஞ்சினியராகப் பார்க்கவேண்டுமென்பதே; அந்த ஆசையும் கடந்த சில காலமாக அவியத் தொடங்கிவிட்டது: பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பெயரில் இராணுவத்தினரின் அட்டூழியங்கள் அதிகரிக்க அதிகரிக்க மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வதைப்போல் வாழ்ந்து கொண்டிருந்தாள்; அவளது ஒரே பற்றுக்கோடு இந்த வாழ்கையிலிருக்குமென்றதால் அது ‘அநபாயன் ஒருவன்தான். யாழ் இந்துக் கல்லூரியில் பல்கலைக் கழக புகுமுக வகுப்பில் அவன் கல்வி பயின்று கொண்டிருந்தான்.

அதிகாலைக் கூதற்காற்று, உடம்பைச் சிலிர்க்க வைத்தது; அநபாயனின் சிந்தனை ஒரு கணம் கலைந்து மீண்டும் குவிந்தது; அவனது சிந்தனை முழுவதுமே அண்மைக் காலமாகவே அதிகரித்து விட்டிருந்த இராணுவ அட்டூழியங் களிலேயே இருந்தது; கண்ட இடத்தில் நாய்களைச் சுடுவதுபோல்.. ….உயிர்களிற்கு மதிப்பே அற்றவொரு வாழ்வில்….. ஒரே இனமிருகங்கள் கூட தங்களிற்கிடையில் ஒருசில பாலுணர்வு வேட்கைகள் தவிர, மோதிக் கொள்வதில்லை; ஆறறிவு படைத்த மனிதர் மட்டும் வர்க்க, மத, மொழி, நாடு ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கின்ற அதேநேரம், மனித இனத்தையே அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறார்; ஏன்?.

அவன் பால் கொடுப்பதற்காகச் செல்லும் போஸ்ட் மாஸ்டர் வீட்டிற்கோ, அல்லது கந்தர் வாத்தியார் வீட்டிற்கோ, J.P.யார் மயில்வாகனத்தார் வீட்டிற்கோ வீதி வழியாகப் போவதானால் விரைவாகப் போய்விடலாம். ஆனால் அவன் வயல்களிற்கு மத்தியில் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமே. இராணுவத்தினரின் கெடுபிடிதான். எந்த விதப் பயனுமற்று, வாழ்வை வீணாக்க அவனிற்கு விருப்பமில்லை; நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணில். காலையின் எழிலை, அல்லது மாலையின் மஞ்சள் ஒயிலை ரசிப்பதற்குக் கூட எனக்குச் சுதந்திரமில்லை; வீதியில் ஆடிப்பாடி ஓடிட எனக்கு உரிமையில்லை. இது என்ன வாழ்வு.பயந்து. தன்மானம் சுயகெளரவமற்ற அடிமைத்தனமான வாழ்வு. எத்தனை காலம் தான் பொறுத்து மாய்ந்து கிடப்பது.?

சிந்தனையில் மூழ்கி விரைந்து கொண்டிருந்த அநபாயனின் கவனத்தை, வயலின் நடுவினில் புதர்கள் மண்டித் தென்னைகளுடன் தெரிந்துகொண்டிருந்த அந்த நிலப்பரப்பும், அதனைச் சுற்றி வட்டமிட்டுக் கரைந்து கொண்டிருந்த காகங்களும் கவர்ந்திழுத்தன; காகங்கள் கரைந்து கொண்டிருப்பதனால் ஏதாவது காரணமில்லாமலிருக்காது. மெல்லியதொரு திகிலுடன் கூடிய உணர்வு அவன் நெஞ்சினைப் பற்றிப்படர்ந்தது.

பாதையின் ஓரத்தே நின்ற பூவரச மரமொன்றில் சைக்கிளைச் சாய்த்து வைத்துவிட்டு; மெல்ல வயலினுள் இறங்கியவன், புதர் மண்டிக் கிடந்த அந்தத் திட்டை நோக்கி நடந்தான்; மனித நடமாட்டத்தையுணர்ந்த காகங்கள் சற்றுத் தள்ளிப்போய் நின்று கத்தத் தொடங்கின. பதரை நெருங்க நெருங்க அநபாயனின் நெஞ்சிலும் வேகம் அதிகரித்தது.

காகங்கள் கரைந்த திக்கை நோக்கிச் சென்றவனின் பார்வையில் அந்தச் சிவந்த உடல்பட்டது; அது ஒரு பெண்ணின் உடல், ஆடைகள் எதுவுமற்ற நிலையில், முகங்குப்புற குடங்கிக் கிடந்த உடலில் ஆங்காங்கே சிகரட் சுட்டதாலான காயங்கள் கன்றிக் கிடந்தன; தோள்கள், முதுகு, தொடைகள், கால்கள் எல்லாம் காயங்களும், நகக்காயங்களும், சிகரட் வடுக்களுமாக காட்சியளித்தன;

அநபாயன் மிகுந்த மனோதிடம் வாய்ந்தவன்; தம்பிமுத்து வாத்தியின் உறுதியான உடம்பும் செல்லம்மாவின் மனோதிடமும் கலந்துருவான அவன் எதனையும், எத்தகைய சந்தர்ப்பத்திலும் மன உறுதியுடன் எதிர்கொள்பவன்; குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலையெனக் குலைந்து கிடந்த அந்த உடலை தனது சேர்ட்டைக் கழட்டி இயலுமானவரை மறைத்துவிட்டு, மெல்லத் தலையைத் திருப்பியபோது அவனது மன உறுதியும் குலைந்து, “கமலா டீச்சர்” என்று அலறியே விட்டான்; ஏதோ சந்தேகம் வரப்பெற்றவனாக கமலா டீச்சரின் நாடித்துடிப்பைப் பரீட்சித்துப் பார்த்தவனின் நெஞ்சில் சிறிது தென்பு படர்ந்தது; கமலாடீச்சர் செத்துவிடவில்லை. நாடி துடித்துக் கொண்டுதானிருந்தது.

அடுத்த சில நிமிடங்களில், வாயுவேகம் மனோவேகம் என்பார்களே அந்த விதத்தில் காரியங்கள் நடந்தன; கார்க்காரச் சண்முகத்தின் வீடு அருகில் தானிருந்தது; அவனது காரில் கமலாடீச்சரை யாழ் பெரியாஸ்பத்திரியில் சேர்த்து விட்டுத் திரும்பிய போதுதான், அவனிற்குக் கமலாடீச்சரின் குடும்ப ஞாபகம் வந்தது; ஆனால் அதற்கிடையில் கிராமம் முழுக்க செய்தி வெகு வேகமாகப் பரவிவிட்டது. கமலா டீச்சரின் முதலிரு தங்கைமாரும் பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் அறையெடுத்துத் தங்கியிருப்பதால் அவர்களிற்கு செய்தி உடனே தெரிய வாய்ப்பில்லை.

அநபாயன் கமலா டீச்சரின் வீட்டை அடைந்த போது, ஏற்கனவே தந்தையாரும், கடைசிப்பையனும் பெரியாஸ் பத்திரிக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். கடைசித் தங்கை சாரதா மட்டுமே வீட்டிலிருந்தாள். அவளை ஆறுதல் படுத்தியபடி அவனது தாய் செல்லம்மாவும், இன்னும் சில அயல்வீட்டுப் பெண்களுமிருந்தார்கள்.


அத்தியாயம் மூன்று: யார் இந்தச் சாமியார்?

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -சுற்றிவர கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்த வயல்வெளியில் தொலைவில் நீலவானப் பின்னணியில் பனை, தென்னந்தோப்புக்கள்தான் தெரிந்தன. “ஸ்.ஸ்’சென்று வீசும் மெல்லிய தென்றலையும் அங்கும் இங்குமாய் அலைவதைப்போல் பறக்கும் ஊர்லாத்திகளின் ஒசைகளையும் இடையிடையே கூட்டம் கூட்டமாகப் பறக்கும் கிளிகளினதும் தனிமையில் சஞ்சரிக்கும் மணிப்புறாக்களினதும் ஒலிகளையும் தவிர வேறெவ்வித அரவமுமற்று அந்தப் புதர்கள் மண்டிக்கிடந்த மணற்குன்று காட்சியளித்தது. கிராமத்தின் ஒருகோடியில் வயற்காணிக்கு நடுவில் தனிமையில் ஆழ்ந்திருந்த அந்த மணற்குன்று தவமியற்றும் யோகியைப்போல் காட்சியளித்தது.

மனித நடமாட்டமெதுவுமற்ற அந்த மணற்குன்றில் ஒன்றிரண்டு பனைகளும், தென்னைகளும் தொட்டாற்சிணுங்கிப் புதர்களுமே பெருமளவு காணப்பட்டன. புதர்களாலும், பனைகளாலும் மறைக்கப்பட்ட இடத்தில் இயற்கையாகவே இருப்பதற்கேற்ற வகையில் அமைந்திருந்த பாறையொன்றில் அமர்ந்திருந்தபடி எதிரே விரிந்திருந்த காட்சியினை வெறித்தபடி தனக்குள்ளாகவே பெரிதும் சிந்தனையில் மூழ்கியவனாக அநபாயனிருந்தான். அந்த மணற்குன்றும் பனைகளும், தென்னைகளும் வயல்வெளிகளும், பறவைகளும் விரிந்து கிடக்கும் நீலவானும் அவன் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருந்தன. நேரம் கிடைக்கும் வேளைகளிலெல்லாம் அங்கு கவிந்து கிடக்கும் அமைதியில் மூழ்கி விடுவதைப்போல் பிடித்தமான தொரு செயல் அவன் வாழ்வில் வேறெதுவுமில்லை எனலாம்.

கிராமத்துக்கேயுரிய மெல்லிய ஆரவாரங்களிலிருந்து விலகி ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைப்பற்றி, சுரண்டல்கள், அடக்குமுறைகளிற்கெதிரான ஓர் சமுதாய அமைப்பினைப்பற்றி இடைக்கிடையே அவன் நெஞ்சினைக் கவர்ந்த கமலா டீச்சரின் கடைசித் தங்கை சாரதாவைப்பற்றிச் சிந்திப்பதற்கு அவன் அந்த இடத்தையே நாடுவான்.

கமலா டீச்சர் இன்னும் ஆஸ்பத்திரியில்தான். சிறுவயதிலிருந்தே தர்மங்களையும் கோட்பாடுகளையுமே மேலான இலட்சியங்களாக ஏற்று வாழ்ந்து வந்த அந்த மென்மையான உள்ளத்தினை அந்தக் கீழ்த்தரமான மிருகங்களின் கூட்டு வெறியாட்டம் எத்தனை தூரம் புண்படுத்தியிருக்கும்.கமலா டீச்சரிற்கு நடந்த செயல் இரு உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. ஒரு அடக்கப்படும் இனத்தின் உறுப்பினர் என்ற வகையில் அவ்வினத்தினரால் புனிதமாகக் கருதப்படும் ஒரு கோட்பாட்டினைச் சிதைத்ததன் மூலம் அடக்குமினம் இன்னுமொரு முறை சரித்திரத்தில் தனது கொடூரக் கரங்களைப் பதித்து விட்டுள்ள அதே சமயம்.அதற்கும் கீழாக இன்னுமொரு உண்மையையும் காட்டி நிற்கின்றது.
பெண்ணிற்கும் உணர்வுகள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள மறுத்து பெண்ணினை வெறுமனே போகப் பொருளாகக் கருதும் ஆண்கள் தலையெடுத்த சமுதாய அமைப்பினில் ஆண்களின் கேவலமான வெறியாட்டத்திற்குப் பலியான ஒரு உத்தமியின் கண்ணிர்க் கதையினையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

அநபாயனின் சிந்தனைகளோ சங்கிலித் தொடராக விரிந்த வண்ணமேயிருந்தன. கொதிக்கும் எண்ண அலைகளும், விடைதேடிடும் வினாக்களுமாக அநபாயனின் நெஞ்சம் இளமைக்கேயுரிய கொதிப்பினில் வெடித்துக்கொண்டிருந்தது. கமலா டீச்சர் கோழையல்ல.வாழ்வினை சவாலாக ஏற்று வாழும் பக்குவம் அவவிற்கு நிறையவேயுண்டு. தகப்பனின் வளர்ப்பும் ஈஸ்வரனின் தொடர்பும் நிச்சயம் அவவின் வாழ்வினைப் பயனுள்ளதாக்க வைத்திடும் வல்லமை கொண்டவை.

அநபாயனின் சிந்தனை கமலா டீச்சரிலிருந்து வேறு துறைக்கு திரும்பியது.

ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் ஒற்றுமையாக இன்பமாக வாழ்வதற்கு வழிகளிருக்கையில் மனிதர்கள் ஏன் மனிதர்களை தரம்பிரித்து ஏற்றத் தாழ்வுகளிற்குள் மூழகடித்து ஏழை, பணக்காரர் என்று வர்க்க வேறுபாடுகளிற்குள் அமிழ்த்தி வாழ்கிறார்கள்?  பட்டினியால் கோடிக்கணக்கான மக்களை சாகவிட்டு அந்த மக்களின் உழைப்பினில் வாழும் மக்களோ மாளிகைகளில் ஆனந்த சயனம் புரிகின்றார்கள். இது ஏன்? இந்த மக்கள் கூட்டமே மக்களை இனம், மதம், மொழி ரீதியில் பிளவுபடுத்தி தங்களுக்கெதிராக எழுந்துவிடாமல் தடுத்துவிடுகிறது.

சிந்தனை மனிதனின் அறியாமையைப் போக்குகின்றது. விடை தெரியாமல் தவிக்கும் நெஞ்சிற்கு விடையினைத் தந்துவிடுகின்றது.தெளிவினை ஏற்படுத்துகின்றது.

“தம்பி பலமான சிந்தனையோ, அப்படி எந்தக்கோட்டையைப் பிடிக்க இந்தச் சிந்தனையோ…”\

திடுக்கிட்டவனாக சிந்தனையினின்றும் நீங்கியவனாக அநபாயன் திரும்பினான். எதிரில் காவியும் தாடியும் ஒளிமயமான கண்களுமாகத் கதைகளில் வருவதைப்போல் ஒரு சாமியார் நின்றிருந்தார். “அப்பாடா.இயற்கை எவ்வளவு இனிமையாக இருக்கின்றது” இவ்விதம் ஆனந்தமான குரலில் கூறியவர் கலகலவெனச் சிரித்தபடி அநபாயனிற்கருகில் மணற்திட்டியில் அமர்ந்தார். சிந்தனையை கலைத்துவிட்ட அந்த சாமியார் மேல் ஏற்பட்ட வெறுப்பினை வெளிக்காட்டாமல் சொற்களை உதிர்த்த அநபாயனின் சொற்களில் விரவி நின்ற வெறுப்பினைச் சாமியார் புரிந்துகொண்டார்.

“சமுதாயப் பிரச்சனையிலிருந்து விலகி பேரின்பத்தில் திளைத்திருக்கும் சாமியாருக்கு இயற்கை இனிக்கத்தானே செய்யும்”.

வெறுப்புடன் உதிர்ந்த அநபாயனின் சொற்களில் தொங்கி நின்ற குத்தலைக் கவனித்த சாமியார் மெல்லப் புன்முறுவல் பூத்தார்.

அந்தப் புன்முறுவல் மாறாதவராக சாமியார் தொடர்ந்தார். “சாமிமார்களென்றால் தம்பிக்கு அவ்வளவு வெறுப்போ’ நான் இதுவரை பார்த்த சாமிமாரெல்லாம் கள்ளச்சாமிமார்கள், பொம்பிளைச் சாமிமார்கள்.மக்களை ஏமாற்றி வாழும் எத்தர்கள்.”

“என்ன தாக்குதல் பலமாகவேயிருக்கின்றதே..” என்று இலேசாகச் சிரித்த சாமியார் தொடர்ந்தார். “தம்பி சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.சமுதாயம் சீரழிந்து கிடப்பதற்கு ஒரு சில கள்ளச் சாமிமார்களும் காரணந்தான். அதற்காக எல்லாச் சாமிமார்களுமே கள்ளச் சாமிமார்களல்ல.”

இவ்விதம் கூறிய சாமியாரின் தொடர்ந்து வந்த சொற்கள் அநபாயனின் நெஞ்சில் ஒருவித திகைப்புடன் கூடிய சந்தேகத்தை உருவாக்கின .இவர் உண்மையிலே சாமியார் தானா? அல்லது சாமியாரைப்போல் நடிக்கும் இன்னுமொரு கள்ளச்சாமியார்தானோ.கள்ளச் சாமியார்களும் எத்தனை வகைகளில் வேறுபட்டு நின்கின்றார்கள்.


அத்தியாயம் நான்கு: மர்மச்சாமியார்!

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -“தம்பி நீ சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கின்றது; ஆதிமனிதனின் அறியாமையில் உருவானது சமயம். ஆமாம் தம்பி இயற்கையின் விளைவுகளிற்கு அர்த்தம் புரியாத நிலையில், அவற்றிற்குக் காரணங்களைக் காட்டிட மனிதரால் ‘கடவுள்’ எனும் கோட்பாடு வைக்கப்பட்டது. வானம் இடித்தால் அல்லது கடல் பெருகி புயல் அடித்தால் “கடவுள்” கோபம் அடைந்திருப்பதாகக் கருதிக் கொண்டார்.”

இவ்விதம் சொல்லிய சாமியார் தாடியை மெல்ல நீவியபடி மேலும் தொடர வாயெடுக்கையில் அநபாயன் குறுக்கிட்டான்.

“அப்படியானால் நீங்கள் கடவுளை நம்பவில்லையா?” இதற்கு இலேசாக சிரித்தபடியே சாமியார் தொடர்ந்தார்;

“தம்பி மனிதரால் அறியமுடியாதபடி புதிர் நிறைந்ததாக இப்பிரபஞ்சத்தின் தோற்றமிருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்; தம்பி பொருளும் சக்தியும் ஒன்றென்று நவீன விஞ்ஞானம் கூறுகின்றது. என்னைப் பொறுத்தவரையில் இவ்வுலகம், கிரகங்கள், நட்சத்திரங்கள், பால்வெளிகளை உள்ளடக்கிய இயற்கையே சக்தி; அச்சக்தியே இயற்கை. இயற்கையில் யாவுமே ஒழுங்காக இருக்கின்றன. மனிதரும் ஒழுங்காக இருப்பாரானால் பிரச்சனைகளே இல்லை.”
“அறியாமையில் உருவான சமயம் என்கின்றீர்களே! அதனை நீங்கள் நம்புகிறீர்களா..?”

“தம்பி! நமக்கும் மேலாகவொரு புதிரான சக்தி இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் சமயத்தையோ அதன் மூடத்தனமான கோட்பாடுகளையோ நான் ஏற்கவில்லை. அன்றாடம் பிரச்சனைகளால் வாடும் மனிதனை பிரச்சனைகளைத் தீர்த்து புதுப்பாதை காட்டுவதற்கு சமயம் முயலவில்லை. மாறாக என்ன செய்கின்றது? ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு” “கொடுமை செய்பவன் நரகத்திற்குப் போவான். எல்லாவற்றையும் கடவுள் மேல் பழி போட்டுவிட்டு நிம்மதியாகவிரு. இவ்விதமான போதனைகளால் சமயம் மனிதரை, பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்குப் பதில் பிரச்சனைகளில் இருந்து தப்பி ஒடவைப்பதால், மனிதரை மனிதராக வாழ்வதற்கு நடைமுறை சாத்தியமான வழிகளைக் கூறாமல் நடமுறைக்கொவ்வாத நரகத்தைப் பற்றியும், சொர்க்கத்தைப் பற்றியும் போதிப்பதால். அத்தகைய சமயத்தை நான் ஆதரிக்கவில்லை. நமக்குப் புதுவிதமான, நடைமுறைக்குச் சாத்தியமான பிரச்சனைகளிற்கு அறிவுபூர்வமான தீர்வுகளைக் கூறுகின்ற ‘சமயம்’தான் தேவையே தவிர மூடநம்பிக்கை களுடன் கூடிய, மனிதனை பிரச்சனைகளிலிருந்து கோழையைப் போல ஒடவைக்கின்ற சமயம் தேவையில்லை.”

இவ்விதம் வெகு தெளிவாகக்கூறிய சாமியாரை அநபாயன் வியப்புடன் நோக்கினான்; “இந்தச் சாமியார் நிறைய நூல்களைப் படித்தவராக இருக்கவேண்டும்”. என எண்ணிக் கொண்டான். சாமியாரோ மேலும் தொடர்ந்தார்.

“தம்பி சமுதாயத்தில் நிகழும் சகல பிரச்சனைகளையும் உருவாக்கியவன் மனிதரே! மனிதரின் அறியாமையாலும், சுயநல வேட்கையாலும் உருவான பிரச்சனைகளே மனிதரிற்கிடையே நிலவிடும் ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம், என்று குகைகளில் குழுக்களாக வாழ்ந்து வந்த மனிதர் வேளாண்மை செய்வதற்குக் கற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து உருவான பிரச்சனைகளின் தொடர்ச்சியான விளைவுகளே இன்றைய சமுதாய அமைப்பு.”

இச்சமயம் எங்கோ தொலைவிலிருந்து வேட்டுச் சத்தங்கள் கேட்டு மறைந்தன; அண்மைக் காலமாகவே சிங்கள வெறி இராணுவத்தின் அக்கிரமங்கள் வெகுவாகவே அதிகரித்துள்ளன. விடுதலைப் போராளிகளை தேடுதல் என்ற போர்வையில், அப்பாவி இளைஞர்களை கைதுசெய்து சித்திரவதைப் படுத்துவது, சுட்டுக் கொல்வது, பெண்கள் தாய்மார்களை மிருகத்தனமாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்குவது, இராணுவ முகாம்களில் பெண்களை நிர்வாணமாகத் துன்புறுத்துவது. ஒவ்வொரு மானமுள்ள தமிழரையும் இரத்தக் கொதிப்பூட்டும்படியான செயல்கள், இறுதியில் அந்த வெறியர்களின் அழிவிலேயே முடியுமென்ற வரலாற்று நியதியை அந்த முட்டாள்களால் உணர முடியவில்லைதான்.
சாமியாரும் கொதித்தார்.

“தம்பி கேட்டாயா கோழைகள், மானநரம்பற்ற பேடிகள் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறார்கள். ஆயினும் அந்த முட்டாள்கள் நீதியின் மகத்துவத்தை தர்மத்தின் சரித்திரத்தை அறியவில்லை; தாய்மார்களின் கன்னியரின், மழலைகளின் கண்ணிர்த்துளிகளிற்கு அவர்கள் நிச்சயம் பதில் சொல்லியேயாகவேண்டும்.”

சற்று உணர்ச்சி வசப்பட்டவராகக் கூறிய சாமியார் இடை நிறுத்தியவராக பழைய கதைக்குத் திரும்பினார்.

“ஆ. எங்கு விட்டேன். ஆமாம் மனிதர்கள் எவ்விதம் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கினார்கள் என்பதனை விளக்கிக் கொண்டிருந்தேன் அல்லவா. ஆரம்பத்தில் குழுக்களாக விவசாயம் செய்த மனிதர்கள் காலப்போக்கில் தனித்தனியாகச் செய்யத் தொடங்கினர். ஒரு சிலர் கூடுதலாகப் பிரயாசப்பட்டதற்கு நல்ல விளைச்சல் கிடைப்பது இயல்புதானே. மேலும் சில இடங்களில் தரை அமைப்பு சரியில்லாமல் இருந்தால் அவ்விடத்து விளைச்சல் பாதிக்கப்படலாம் அல்லவா. அல்லது இயற்கையின் கோபம் சில இடங்களை அழிக்கலாம். இவ்வாறாக ஒரு சிலரிடம் கூடுதலாக விளைச்சல் இருக்கையில் மற்றவர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். விளைவு! பாதிக்கப்பட்டவர்கள் ‘விளைச்சல்’ கிடைத்தவரிடம் சீவியத்திற்கு தங்கவேண்டிய நிலை. ஏழை பணக்காரர் உருவான கதை இதுவே. காலப்போக்கில் பணம் படைத்தவர் மேலும் பணக்காரராகையில் ஏழைகளோ மேலும் ஏழைகளாகப் போன அதேசமயம் எண்ணிக்கையிலும் அதிகரித்தார்கள்.”

“இந்தச் சாமியார் இலேசுபட்ட ஆளல்ல; இவரிடம் நிறையவே விஷயமுள்ளது. இவரிற்குப் பின்னால் நிச்சயம் ஒரு மர்மம் மறைந்திருக்கத்தான் வேண்டும்.” இவ்விதம் எண்ணிய அநபாயன் சாமியாரை நோக்கினான். சாமியார் இருக்கையிலிருந்து மெல்ல எழுந்து கொண்ட்ார். “தம்பி அடுத்த முறை உன்னைச் சந்திக்கும் பொழுது மேலும் நிறையவே பேசுவோம்.”

“சாமியார் இடையில் தங்களைச் சந்திக்க வேண்டுமானால் எங்கு சந்திக்கலாம்.?”

தனது முகவரியைக் கேட்பதற்குப் பதில் இவ்விதம் வெகு சாமார்த்தியமாகக் கேட்ட அநபாயனை நோக்கி இலேசாக புன்முறுவல் பூர்த்த சாமியார் மேலும் கூறினார்.

“தம்பி! வெகு விரைவிலேயே உன்னை எனது ஆச்சிரமத்திற்கே அழைத்துச் செல்வேன்; அதுவரை பொறுத்திரு. இவ்விதம் கூறிய சாமியார் பதிலெதனையும் எதிர்பாராதவராக விடுவிடென நடையைக் கட்டிவிட்டார். “கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” இவ்வாறாக தமிழில் ஒரு பழமொழியே உண்டு. அப்பழமொழியின் அர்த்தத்தை வெகு சீக்கிரமே அநபாயன் அச்சாமியார் மூலம் அறிந்து கொண்டான்.


அத்தியாயம் ஐந்து: தம்பியின் மனமாற்றம்!

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -இரவு வெகுவாகவே சீக்கிரமாகப் படரத் தொடங்கிவிட்டது. விண்ணில் ஆங்காங்கே சுடர்க் கன்னிகள் மெல்ல எட்டி எட்டிப் பார்த்து, நாணி நகைக்கத் தொடங்கிவிட்டிருந்தார்கள். சாமியார் போய் அரை மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது. வீட்டில் அம்மா கவலைப்பட்டுக் கொண்டிருப்பா, பொடியனை இன்னும் காணவில்லையே என்று. ஒரு காலத்தில் வீட்டில் பெண்களைத்தான் பத்திரமாகப் பெற்றோர் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ ஆண்களை வைத்துப் பாதுகாப்பதே பெரிய தலையிடி பெற்றோர்க்கு. கிராமத்தின் ஒரு கோடியில் ஆமிக்காரன் தேடத் தொடங்கி விட்டானென்றதுமே பெற்றோர் ஆண் பிள்ளைகளைக் கொல்லைப் புறங்களால் அடுத்த கிராமங்களிற்கனுப்புவதும். வாழ்வே ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு என்று யாரோ ஒரு பிரபல நாவலாசிரியர் கூறியிருப்பது சரியாகத்தான் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இருக்கின்றது. மக்கள் மரணத்துடன் வாழுவதற்குப் பழகிக் கொண்டார்கள்.

வீடு செல்வதற்கு முன் அநபாயன் கமலா டீச்சரின் வீடு செல்ல விரும்பினான். பாவம் சாரதா. வீட்டுப் பொறுப்புக் களெல்லாமே அவள் தலையில் விழுந்துவிட்டன. தந்தையார் நடராஜா வாத்தியாரோ இடிந்து போனவராகிவிட்டார். வாழ்வில் எதிலுமே பற்றுதலற்ற சடமாகவவே மாறிவிட்டார். கல்யாணமும் குடியுமாக இருக்கவேண்டிய வயதில் குடும்பத்துச் சுமை தாங்கியாக விளங்கிய கமலாவிற்கு நடந்ததை எண்ணுவதில் அவர் இயலாமையால் குமுறி வெடித்தார். கடவுள் பக்தனான அவருக்கு கடவுள் மேலேயே ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அவருக்கு மட்டும் சக்தியிருக்குமாயின் சிங்களக் காடையரை, காமுக வெறியர்களை ஈவிரக்கமற்ற நயவஞ்சகரைக் கண்டதுண்டமாக வெட்டிக் கொத்திக் குதறிக் காகங்களுக்கு விருந்து வைத்தால் மாத்திரமே சற்று அமைதி அடைவார்.

தமிழரும் சிங்களவரைப்போல் இரத்தமும் சதையும் உணர்வுகளுமுள்ள ஒரு மனிதர்தானே. பிறகேனிவ்விதம் சிங்கள இனத்தையே பிழையாக வழி நடாத்தும் கொலைகாரப் பாவிகளைச் சிங்களச் சமுதாயம் அனுமதித்து விடுகின்றது. இன உணர்வு எவ்விதம் மனிதரை ஈவு இரக்கமற்றவராக மாற்றி விடுகின்றது என்பதற்கு இன்றைய கொலைகாரச் சிங்களத் தலைவர்களும் காடையரும், இராணுவ வெறியர்களும் உதாரணம். இவ்விதமான எண்ண ஓட்டங்களிற்குள் மூழ்கியவராக வெந்து கிடப்பதே நடராஜா வாத்தியாரின் வழக்கமாகிவிட்டது.

அநபாயன் கமலா டீச்சரின் வீட்டை அடைந்த போது நடராஜா வாத்தியார் முன் திண்ணையில் சாய்ந்தவராகச் சிந்தனையில் மூழ்கிக்கிடந்தார். உள்ளே குசினியில் சாரதா இடியப்பம்’ அவிப்பதற்கு ‘மா’ குழைத்துக் கொண்டிருந்தாள். கமலா டீச்சரின் செல்லக் குட்டியான கடைசித் தம்பி பார்த்திபனைக் காணவில்லை. மற்ற இரு சகோதரிகளும் கமலா டீச்சருடன் ஆஸ்பத்திரியிலே தங்கியிருந்தார்கள். நடராஜா வாத்தியாரும் சாரதாவும் சற்று முன்னால்தான் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பியிருந்தார்கள்.

மா குழைத்துக் கொண்டிருந்த சாரதாவின் வதனத்தில் அநபாயனைக் கண்டதும் சற்றே மகிழ்ச்சியலைகள் படர்ந்தன. அவளைப் பார்க்கையில் அநபாயனிற்குப் பாவமாகவிருந்தது.

“சாரதா கமலா டீச்சர் எப்படியிருக்கிறா.”

“இப்போதைக்கு பரவாயில்லை. இனி உயிரிற்கு ஆபத்தெதுவுமில்லை என்று “டொக்டர்கள்’ சொல்லி விட்டார்கள்.”

அநபாயன் சாரதாவிற்குதவியாக வெங்காயம், கிழங்குகள் வெட்டுதல், தேங்காய் துருவுதல் போன்ற வேலைகளைச் செய்து கொடுத்தான்.

சாரதா தொடர்ந்தாள். “பாவம் அக்கா எங்களிற்கெல்லாம் தாய்க்குத் தாயாகவிருந்து பார்த்ததைத் தவிர, அவவாழ்வில் கண்ட சுகம்தானென்ன. ஒரு உயிருக்கும் தீங்கே நினைக்காத அவ்விற்கேன் இந்த நிலை. எவ்வளவு தூரம் மனோ ரீதியாக. உடல் ரீதியாக அவ வேதனை அடைந்திருப்பா.”

அநபாயன் கமலா டீச்சரிலிருந்து பேச்சை வேறு திசைக்கு திருப்ப விரும்பினான்; சாரதாவை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்கிட அவன் விரும்பவில்லை.

“எங்கை. பார்த்திபனைக் காணவில்லை.”

பார்த்திபனைப் பற்றிக் கேட்டதும் சாரதாவின் முகத்தில் கலக்கம் படர்ந்தது.

“கொஞ்ச நாளாகவே அக்காவிற்கு இது நடந்ததிலிருந்து அவன் போக்கே பெரிதும் மாறி விட்டது அநபாயன். அக்காவின் செல்லக்குட்டி அவன். அவன் எங்கு போறான். எப்பவாறானென்பது யாருக்குமே தெரியாது. யாரும் விசாரிக்கக்கூடிய மன நிலையிலும் இல்லை. முன்பு மாதிரி அவனில்லை. தனியவிருந்து அடிக்கடி யோசித்துக் கொண்டேயிருப்பான்.”

என்ன மாதிரியிருந்த குடும்பம் எப்படிச் சிதைந்து விட்டது. அன்று நேரம் கழித்து அநபாயன் வீடு திரும்பும்போது அங்கு செல்லம்மா மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருந்தாள்.

பக்கத்து வீட்டு பாக்கியத்திடம் “பொடியன்ர போக்கே நல்லா மாறிவிட்டது. கமலாவின் விஷயத்திலிருந்து அவன் பெரிதும் மாறி விட்டான். எங்கு போறான் எப்ப வாறான் என்பதே தெரியாது.”

இவ்விதம் அங்கலாய்த்து கொண்டிருக்கையில், அவற்றைக் கேட்டுக்கொண்டே வந்த அநபாயனின் இதழ்களில் மெல்லியதொரு இளநகை படர்ந்தது. சாரதா பார்த்திபனைப் பற்றிக் கூறியவை நினைவுக்கு வந்ததே அவனது அந்த இளநகைக்குக் காரணம்.

[ தொடரும்]