என்னோடு வந்த கவிதைகள் (10)

- பிச்சினிக்காடு இளங்கோ காற்று மாறியடிக்கும்போது
விழுமிய வேர்களை
விட்டுவிடாதே கிராமமே

திறந்த வெளியில்
ஆடைமாற்றும் போதும்
மானம் விட்டுவிடாத
மறத்தி மாதிரி இரு       -வைரமுத்து –   
        
படிப்பைப்பற்றிக்கவலைப்படாமல் உடல் வளத்தைமட்டுமே கவலைப்பட்ட ஒரு சமுதாயச்சூழலில் படித்தது, படிப்புக்குக் கவனம் செலுத்தியது எல்லாம் வியப்பாகவே இருக்கிறது. ஐந்து வகுப்பை பிச்சினிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முடித்து, ஆறாவது வகுப்பில் பட்டுக்கோட்டை அரசு கழக உயர்நிலைப்பள்ளியில் சேர்த்தார்கள்.உறவினர் வீட்டில் தங்கிப்படிக்கவேண்டும். கண்டியன்தெருவில்தான் மறைந்த மாமா வாசிலிங்கம் பட்டுமாமி வீட்டில் தங்கிப்படித்தேன். பின்பு மயில்பாலையத்தில் தாத்தா செவிட்டு ரெத்தினம் அவர்கள் வீட்டில் தங்கிப்படித்தேன். இந்தக்காலங்களில் என்னைக் கல்வியில் நானேதான் ஈடுபடுத்திக்கொண்டேன். பள்ளியின் எந்தப்போட்டியிலும் (விளையாட்டைத்தவிர)கலந்துகொள்ளும் மாணவனாக நானில்லை. அதிக மதிப்பெண் வாங்குகிற மாணவனாக நான் தென்படவில்லை. ஆனால் படிப்புக்காக அதிகம் கவலைப்படுகிற மாணவனாக நான் இருந்தேன். அதுதான் இன்றுவரை என்னைக்காப்பாற்றி வந்திருக்கிறது. ஏழாவது வகுப்பில் படிக்கும்போது விளையாட்டுப்போட்டியில் இரண்டு பரிசுகள் வாங்கினேன். அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் எஸ்.D. சோமசுந்தரம் அவர்கள் பரிசுகள் வழங்கினார் . அவர் முன்னிலையில் சென்னை ராஜாஜி ஹாலில் உவமைக்கவிஞர் சுரதாவின்  மணிவிழாவில் கலந்துகொண்டு கவிதை பாடியதும், பிச்சினிக்காட்டிலேயே அவரைக்  கவிதையில் வரவேற்றதும் காலமும் நானும் கைகோத்து வந்ததன் பதிவு.

கல்வியில் எனக்கு நடைவண்டியாய் இருந்து வழிநடத்திய பெருமை நண்பன் இளநகைக்கு உண்டு. இளநகையின் நட்பும் உறவும் எனக்கு இல்லாதிருந்தால் என் பயணம் எப்படிப்போய் அமைந்திருக்கும் என்று சொல்லமுடியாது. காரணம் அவர்களுடைய குடும்பம் ஒரு கல்விக்குடும்பம். அனைவரும் கல்வியாளர்கள். பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள். அனைவருடைய பெயரும் நல்லதமிழில் இருக்கும். மூத்தவர். சிவ.இளங்கோ. அடுத்தவர் மணவாளன், கண்ணன், அழகன்,கனிமொழி,நிலவு, நம்பி, இளநகை. அந்தக்ககுடும்பத்தை பகுத்தறிவுப்பல்கலைக்கழகம் என்று நான் சொல்வதுண்டு.கல்விக்கட்டணம் செலுத்தாமல் கல்விக்கற்றவன் என்றும்  நான் சொல்வதுண்டு. இளநகை,வெற்றிச்செல்வன் உள்ளிட்ட நண்பர்குழுவில் நானிருந்தேன்.அவர்களோடு நூல்நிலையம் சென்றேன். திருக்குறள் எழுதும் போட்டியில் கலந்துகொண்டேன். சில நாட்களில் மாலையில் இளநகையின் மூத்த அண்ணன்  தொழிற்சங்கத்தலைவர் சிவ. இளங்கோ அவர்களுடன் அவருடைய மூத்தமகள் அருளை நானும் இளநகையும் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு காந்தி பூங்காவுக்குச்செல்வோம். அப்போது திரு சிவ. இளங்கோ செய்தித்தாள்களைப் படிப்பார். வானொலி கேட்போம். மாநிலச்செய்திக்காக கத்திருப்போம். ‘மாநிலச்செய்திகள் வாசிப்பது பத்மநாபன்’- என்ற கனத்த குரலில் பூங்காமுழுவதும் செய்திகேட்கும். சில நேரங்களில் ‘நாடகம் கேட்டீர்கள்’- எழுதியது பட்டுக்கோட்டை குமாரவேல் என்று ஒலிபரப்பாகும். அப்போது நினைக்கவில்லை நானும் திருச்சி வானொலியில் பணியாற்றுவேன் என்று. 1983க்குப்பிறகு திருச்சி வானொலியில் என்னுடைய பெயரும் ஒலிபரப்பானது.பின்பு ஒரு நாள் பட்டுக்கோட்டை குமாரவேல் அவர்களையும் கவிஞர் சுரதா அவர்களையும் ஒன்றாகச்சந்திக்கின்ற வாய்ப்பும்  கிடைத்தது.

இலக்கியக்க்கூட்டங்களுக்கும்,அரசியல் கூட்டங்களுக்கும் இளநகையோடும் இளநகையின் தந்தை மறைந்த சிவஞான கோவிந்தசாமி அவர்களோடும் சென்றதுண்டு. அவர்களோடுதான் தந்தைபெரியாரின் கூட்டத்திற்குச்சென்றேன். நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களை அப்பொழுதான் நேரில் பார்த்தேன். ஈ.வெ.கி.சம்பத் அவர்களுடைய கூட்டத்திற்கும் அப்போதுதான் சென்றேன். இளநகையின் தந்தை ஒரு பகுத்தறிவுவாதி. எனக்கு ஆசிரியரும் கூட.. பாரதிதாசனைப்போல நறுக்குமீசை வைத்திருந்தார். வெள்ளுடையில் வருவார். ஒருசேர தந்தைபெரியாரையும் பாவேந்தர்பாரதிதாசனையும் பார்ப்பதுபோல் இருக்கும். அவர்தான் நான் பார்த்த முதல் பெரியார். அவர்தான்  பட்டுக்கோட்டை பெரியார். அவர்பெயரில் அவருடைய கடைக்குட்டி மகன், என் நண்பன் இளநகை ஏற்படுத்திய அறக்கட்டளை சார்பில் தலைவர் கீ. விரமணி அவர்களால் எனக்கு 15.05.2006-ல் விருதும் பத்தாயிரம் ரூபாயும்  வழங்கப்பட்டது . அவருடைய நினைவாக அவர் பிறந்த மன்னார்குடி அருகில் உள்ள மகாதேவபட்டணத்தில் சமுதாயக்கூடம் அமைத்து, நூல் நிலையம் அமைத்து, ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்படுகிறது. அவர்கள் காட்டிய வெளிச்சத்தில் பயணமான நான் ஒரு கவிஞனாக வெளிவந்தேன். தலைவர் சிவ. இளங்கோ அவர்கள் பற்றியும், பகுத்தறிவு தந்தை சிவஞான கோவிந்தசாமி அவர்கள் பற்றியும் ,ஆசிரியர் சிவ.கண்ணன் அவர்கள் பற்றியும் கவிதைகள் எழுதினேன்.சிவஞான கோவிந்தசாமி அவர்கள்பற்றி நான் எழுதிய எண்சீர் விருத்தம் அவரை முழுமையாகப் படம்பிடித்துக்காட்டும் கவிதையாக அமைந்துவிட்டது. அந்தக் கவிதையும் கவிதையின் பாடுபொருளும் சிறப்பாக அமைந்தது . அது இன்றைக்கு மகாதேவபட்டணத்தில் சமுதாயக்கூடத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இளநகையின் வீட்டிற்குச்செல்லும்போதெல்லாம் இளநகையின் அம்மா என்னை பிச்சினிக்காடு என்றுதான் அழைப்பார். இளங்கோ என்றழைத்ததில்லை. நண்பர் டாக்டர் வெற்றிச்செல்வன் அழைக்கும்போதும் இயல்பாக ‘என்ன பிச்சினிக்காடு ?’ என்றுதான் அழைப்பார். எனக்கே தெரியாது பிச்சினிக்காடு என்பெயருடன் சேரும் என்று. திருச்சி வானொலியில் பிச்சினிக்காடு இளங்கோ என்றுதான் என்பெயர் காற்றில் மிதந்தது. இவர்கள் இருவரும்தான் எனக்குமுன்னே என்பெயருடன் என் ஊர்ப்பெயரைச் சேர்த்தவர்கள். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மும்பாயில் பணியாற்றியபோது ஊர்ஞாபகம் வந்துவிட்டால் உடனே சத்திரபாதி ரயில்வே சந்திப்பிற்குச்சென்று(  விக்டோரியா டெர்மினஸ்)  சென்னை செல்லும் ரயில் பயணிகளைப் பார்ப்பாராம். அது தான் உடனடியாக ஊரைநெருங்க அவருக்குக்கிடைத்த ஒரேவழி. அவர் அந்தப்பயணிகளைப்பார்த்து மனநிறைவு  அடைந்ததைப்போல் நானும் ஏங்கியிருக்கிறேன். சிங்கப்பூரில் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்கும்போதும் அனுப்பிவைக்கும்போதும் அதே நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு. ஆனால் அன்றைக்குப் பிச்சினிக்காட்டிற்கும் பட்டுக்கோட்டைக்கும் 10கிலோமீட்டர்தான் தூரம் . நினைத்தால் சென்றுவரலாம். என்றாலும் அந்தக்காலத்தில்  வீட்டைவிட்டு பிரிந்திருப்பது முடியாத ஒன்றாக இருந்தது.வெள்ளிக்கிழமை மாலை ஊருக்கு வந்தால் நண்பர்களோடு விளையாட்டு. திங்கட்கிழமை காலையில் பட்டுக்கோட்டைக்கு வரவேண்டும். ஞாயிறு இரவே படுக்கையில் அழத்தொடங்கிவிடுவேன். அம்மாயி ஆத்தாபிள்ளை பள்ளிக்குப்போகவேண்டாம் என்று ஆறுதல் சொல்வார். ஆனாலும் அடுத்தநாள் அழுதுகொண்டே புறப்பட்டுவிடுவேன். பட்டுக்கோட்டையில் இருக்கும்போது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 9’45 வரை யாராவது ஊரிலிருந்து வ்ருவார்களா என முத்துப்பேட்டை சாலையில் எதிர்பார்ப்பேன். அப்புறம்தான் வகுப்புக்குப் போவேன். திங்கட்கிழமை பட்டுக்கோட்டையில் மாட்டுச்சந்தை. எப்படியும் யாராவது வந்து விடுவார்கள். சில வேளையில் நம்பிக்கை வீணானதுமுண்டு. பத்துக்கிகிலோமீட்டர் இடைவெளியில் வாழும்போதே என்னை ஊர்ப்பற்று வாட்டியது. பள்ளிவாழ்க்கை, கல்லூரிவழ்க்கை ஊரைவிட்டுத்தான் கழிந்தது. அதன்பின் பணியின் காரணமாக வெளியூரில் கழிந்தது. அதற்குப்பின் சிங்கப்பூரில் கழிந்துகொண்டிருக்கிறது. கல்வியில் விழிப்புணர்வு என்பது எனக்குக் பல்கலைக்கழகத்தில்தான்.கவிதை என்னையும் கவிதையை நானும் கவனிக்கத்தொடங்கி ஆண்டுகள் ஓடிவிட்டன. மறக்கமுடியாத கவிதைக்கும் மறக்கமுடியாத நிகழ்விற்கும் சாட்சியாய் விளங்கும் அந்தக்கவிதையை இதோ தருகிறேன்.

உள்ளத்தில் தொழுகின்ற தெய்வமானார் த.வீ.சிவஞான கோவிதசாமி

பகுத்தறிவுச் சூரியனாய் வாழ்ந்த தந்தை
   பண்பாட்டை மொழியுணர்வை விதைத்த மேதை
வகுத்துணர்ந்த வள்ளுவரின் வழியில் வாழ்ந்தார்
   வரலாற்றைப் படைப்பதற்குத் தடமாய்ப் போனார்
தொகுத்துரைத்தார் தொலைநோக்கு வேண்டு மென்றார்
   தொண்டுக்கும் தூய்மைக்கும் வடிவ மானார்
வெகுளிக்கே இடமின்றி அன்பைத் தூவி
   வெண்ணிலவாய் இருள்கிழித்து வாழ்ந்தார் வென்றார்

வெள்ளுடையில் நாள்தோறும் வெளிச்சம் தந்தார்
   வெண்தாடி வேந்தரையே விரும்பி ஏற்றார்
துள்ளுதமிழ்ப் பாவேந்தர் தோற்றம் கொண்டார்
   துணிந்தமொழி தெளிந்தநடை பேச்சால் ஆண்டார்
தெள்ளுதமிழ் வளர்கின்ற வழியில் ஒன்றாய்த்
   தீந்தமிழில் பேர்வைத்து இன்பம் கண்டார்
உள்ளுவதில் இமயம்போல் உயர்ந்தார் வாழ்ந்தார்
   உள்ளத்தில் தொழுகின்ற தெய்வ மானார்

இந்தக்கவிதைக்கும் எனக்கும் வாழ்வோடுகலந்த தொடர்பு இருப்பதால் என்னோடு வந்த கவிதைத்தொடரில் இடம்பெறுகிறது. என் கவிதைகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கின்றன. ஒவ்வொரு கவிதைக்குப்பின்னும் ஒரு காட்சி விரிவதை என்னால் உணரமுடிகிறது . கவிஞர் ராஜா சந்திரசேகர் எழுதியது மீண்டும் அசைபோடுகையில் சரியாக வந்து விழுகிறது.

‘மனதிற்குள் நடக்கையில்
நினைவுகளின் சத்தம்
கால்கள் மிதிபட’

    (வரும் 11)

pichinikkaduelango@yahoo.com