முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10 – தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட பொய்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்! தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10: தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட  பொய்களும் மறைக்கப்பட்ட  உண்மைகளும்! தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!தோழர் தொல்.திருமாவளவன் இங்கு இலண்டன் வந்தார். இரண்டரை நாட்கள் தங்கி நின்றார். இரண்டு விழாக்களில் பங்கேற்றார். இப்போது தாயகம் திரும்பி விட்டார். ஆனாலும் அவர் இங்கு வருவதற்கு முன்னரே ஆரம்பமாகிய சர்ச்சைகளும், சலசலப்புக்களும், அவர் மீதான அவதூறுகளும், அவரது இரு நிகழ்வுகளிலும் தொடர்ந்தன. இப்போது அவர் தாயகம் திரும்பி பல நாட்கள் ஆகிவிட்ட பின்பும் இன்னமும் தொடர்கின்றன. தொல்.திருமாவளவன் நாம் எல்லோரும் அறிந்த, நாடறிந்த, உலகறிந்த அரசியல் செயற்பாட்டாளர். விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பினை உருவாக்கி தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும்  ஆதரவாக தொடர்ந்தும் குரல் எழுப்பி வரும் அவர், இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மிக அண்மையில் முனைவர் பட்டத்தினை பெற்றுக் கொண்டவர். ஆரம்பம் முதலே ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு சக்தியாக விளங்கிய இவர், விடுதலைப்புலிகள் உடனும் அதன் தலைவர் வே.பிரபாகரனுடனும் என்றுமே நல்ல உறவினையும் நட்பினையும் பேணி வந்தவர். ஆயினும் ஈழவிடுதலைப்போரின் இறுதிக்கட்டத்தில் இவரது விடுதலைச்சிறுத்தைகள்  அமைப்பானது, அன்றைய ஆளும் இந்திரா காங்கிரசுடனும், தி.மு.கழகத்துடனும் வைத்திருந்த உறவானது, ஈழமக்கள் பலராலும் முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு உடந்தையாக இருந்தவர் என்ற துரோக முத்திரையை அவர் மீது சுமத்தியிருந்தது. அத்துடன் இன்று ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் எழுச்சி பெற்ற இந்துத்துவா சக்தியானது  இன்று அனைத்து சிறுபான்மை இனங்களையும் குழுக்களையும் ஒடுக்குகின்ற கால கட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு  சக்தியாக விளங்கும் இவரையும் இவரது கட்சியினையும் கருவறுப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. அதிகாரங்களுடன் ஒத்தியங்கும் ஊடகங்களும் அவர் மீதான ஊடக மறைப்பினைச் செய்வதுடன் அவருக்கெதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்பதிலும் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.

இத்தகைய சர்ச்சைகள் மிகுந்த வரலாற்றுப் பின்புலம் கொண்ட அவர், கடந்த வாரம் இலண்டனில் இயங்குகின்ற விம்பம் கலை,இலக்கிய திரைப்பட மற்றும்  கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் தனது  ‘அமைப்பாத் திரள்வோம்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தருகின்றார். அவர் இங்கு வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு  முன்னரே காவேரி தொலைக்காட்சியில் ‘தடம்’ நிகழ்ச்சிக்காக அவரை அதன் நிகழ்ச்சியாளர் மதன் ரவிச்சந்திரன் நேர்காணல் காண்கிறார். அதில் மதன் ரவிச்சந்திரன் “விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படும் பலர் கலந்து கொள்ளும்   இலண்டன் நிகழ்வொன்றில்  நீங்கள் கலந்து  கொள்ளப் போவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி உங்களது கருத்து என்ன?” என்ற கேள்வியைத் தொடுக்கிறார். அதற்கு திருமாவளவன்  “கே.கிருஷ்ணராஜா என்பவரது அழைப்பின் பேரிலேயே நான் அங்கு போகின்றேன். மற்றும்படி கிருஷ்ணராஜாவின் நண்பர்கள் யார், அவர்கள் எல்லாம் எப்படிப் பட்டவர்கள் என்று உளவு பார்க்கும் வல்லமை என்னிடம் இல்லை” என்று பதில் அளிக்கிறார். இப்படியாக திருமாவளவன் இலண்டன் நிகழ்விற்கு முன்பாக பல்வேறு சக்திகளாலும் அவரது நிகழ்வு குறித்தான சேறடிப்பு ஆரம்பமாகின்றது.

கடந்த சனிக்கிழமை 24.08.2019  அன்று ஈஸ்ட் ஹாம் Trinity centre இல் அவரது உருவப் படங்களும் பதாதைகளும் தாங்கிய பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அரங்கில் அவரது ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல் வெளியீட்டு விழா ஆரம்பமாகின்றது. நூல் வெளியீட்டுரையை நிகழ்த்த ‘விம்பம்’ அமைப்பினர் என்னைப் பணித்திருந்த படியினால் நான் நேரத்துடனேயே அங்கு வருகை தந்திருந்தேன். குறித்த நேரத்தினை விட கொஞ்சம் தாமதமாக விழாவானது சுமார் 5 மணியளவில் ஆரம்பமாகியது. கே.கிருஷ்ணராஜா தனது அறிமுகவுரையை நிகழ்த்தினார். அதன் பின் ராகவன் தலைமையில் நூல் அறிமுக நிகழ்வு ஆரம்பமாகின்றது. ராகவனின் தலைமை உரையை அடுத்து தோழர் கோகுலரூபன், கவிஞர் தேன்மொழிதாஸ் இன் கவிதையொன்றினை வாசிக்கிறார். திருமாவளவன் புகழ் பாடும் அக்கவிதையினை அவர் வாசிக்க ஆரம்பித்ததும், அதனை குழப்பும் வகையில் அங்கு வந்திருந்த இருவரால் எதிர்கோஷங்களும் கூச்சல்களும்  எழுப்பபடுகின்றன. எனவே விழா அமைப்பாளர்களும் மக்களும் அவர்களை அணுகி அவர்களுடன் உரையாட முற்பட்ட வேளையில், அவர்கள் இன்னமும்  ஆக்ரோஷமாக குரல் எழுப்பி கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை மிகவும் அநாகரிகமாக வெளிப்படுத்துகின்றனர். அசிங்கமான  வார்த்தைகள் அவர்கள் வாயில் இருந்து வருகின்றன. அவர்கள் தமது கையில் வைத்திருந்த ஈ.வே.ரா. பெரியார், கலைஞர் கருணாநிதி, ராகுல் காந்தி போன்றவர்களது உருவப்படங்கள் தாங்கிய துண்டுப் பிரசுரங்களைக் கிழித்து எறிகின்றனர். ஏற்கனவே பேராசிரியர் சுபவீரபாண்டியன் கடந்த  வருடம் இங்கு வருகை தந்திருந்த போது ‘நாம் தமிழர் கட்சியினை’ சேர்ந்த ஈழத்தமிழர்கள் அவருக்கு எதிராக குரல்  எழுப்பியிருந்தனர். அதன்பின் ஸ்டேர்லைட் ஆலை படுகொலைக்கு  எதிராக  நாம் இங்கு ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய போது அதற்கு வருகை தரவிருந்த சுபவீரபாண்டியன் ‘நாம் தமிழர் கட்சியின்’ மிரட்டலினால் அதனைத் தவிர்த்திருந்தமையையும் நாம் அறிந்திருந்தோம். எனவே இவர்களும் நாம் தமிழர் கட்சியினை சேர்ந்த ஈழத்தமிழர்கள் என்று எம்மால் ஊகிக்க முடிகின்றது. மற்றவர்கள் இந்த ஆர்ப்பாட்டக் காரர்களை வெளியேற்ற முற்பட்டபோது எழுந்து  வந்த திருமாவளவன் “அவர்களை வெளியேற்ற வேண்டாம். அவர்கள் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன். அவர்களை என்னுடன் பேச விடுங்கள்” என்று கேட்கிறார். ஆயினும் எந்த வித உரையாடலிற்கும் தயாரில்லாத அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் கூச்சல்களை எழுப்பவே அவர்கள் மற்றவர்களாலும், நிகழ்ச்சி அமைப்பாளர்களினாலும் வெளியேற்றப்படுகின்றனர்.
முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10: தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட  பொய்களும் மறைக்கப்பட்ட  உண்மைகளும்! தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!
நிகழ்வு தொடர்ந்தும் எந்தவித இடையூறுமின்றி நடைபெற்றது. பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த தலித் சமூக மேம்பாட்டு முன்னணியைச் சேர்ந்த அசுரா- நாதன், தேவதாசனும், டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த கரவை தாசனும், நோர்வேயில் இருந்து வருகை தந்திருந்த சரிநிகர் ஆசிரியர் என். சரவணனும், தமிழகத்தைச் சேர்ந்த ‘பெரியார்-அம்பேத்கார் படிப்பு வட்டம்’ அமைப்பில் உள்ள  ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்துவும் தொடர்ந்தும் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து கவிஞர் மாதவி சிவசீலனும் இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்த தோழர் க.கஜமுகன், தோழர் வேலு ஆகியோரும் நூல் குறித்த தமது பார்வையினை தெரிவித்தார்கள். நிகழ்வில் திருமாவளவன் வாழ்வு குறித்ததும், அவரது ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல் குறித்த பலரது விமர்சனக் கட்டுரைகள் அடங்கியதுமான ‘சமத்துவம் கோரும் ஒடுக்கப்பட்டோருக்கான குரல்’ என்ற கையேடோன்று அனைவருக்கும் வழங்கப்பட்டது. வெளியீட்டுரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். ஏற்கனவே அங்கு விநியோகிக்கப்படிருந்த கையேட்டில், எதிர்வினையுடன் கூடிய ஒரு காட்டமான விமர்சனத்தை நான் பதிவிட்டிருந்த போதிலும், எனது வெளியீட்டுரையில் அது பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை.

தொடர்ந்து கவிஞர் நா.சபேசன் நூலை வெளியிட்டு வைக்க அரங்கில் உள்ளோர் வந்து நூல்களைப் பெற்றுக் கொண்டனர். எதிர்பார்த்ததை விட அன்று அநேகமான நூல்கள் விற்பனையாகியதில் எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. அடுத்து திருமாவளவன் தனது பேருரையை நிகழ்த்தினார். முதலில்  தனது நூல் குறித்து பேசிய அவர் தொடர்ந்து தனக்கும் விடுதலைப்புலிகளுக்குமான உறவுகள் குறித்தும் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும் பேசினார். இறுதியாக அரங்கில் உள்ளோரின் கேள்விகளிட்கு அவர் பதில் அளித்தார்.

அடுத்த நாள் ஞாயிறு காலை 11 மணியளவில் விம்பம் அமைப்பினர் இலண்டன் University of London – SOAS இல் இன்னுமொரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வினை தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் முரளி சண்முகவேல் நெறிப்படுத்தினார். இந்நிகழ்வில் மானிடவியல் பேராசிரியர் David Mosse தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்தியாவின் சாதீயக் கொடுமைகளையும், அதற்கெதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியையும் கூறி, விடுதலைச் சிறுத்தைகளின் தோற்றத்திற்கு பின்பான  அதன்  வளர்ச்சியையும் விபரித்தார். அதன் பின் South Asian Solidarity அமைப்பைச் சேர்ந்த கல்பனா வில்சன் உரையாற்றினார். தொடர்ந்து திருமாவளவன் ‘விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் எழுச்சியும் அதன் சவால்களும்’ என்ற தலைப்பில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மாபெரும் உரையினை நிகழ்த்தினார். முக்கியமாக இதன் ஆரம்ப கால செயற்பாடுகள் குறித்தும், அதன்போது எழுந்த சிக்கல்கள்,சவால்கள் குறித்தும் பேசிய அவர், விடுதலைச்சிறுத்தைகளின் எழுச்சியைச் சிதைப்பதற்கு தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் எவ்வாறு பங்காற்றுகின்றன என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த உரைக்குப் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும் ஈழம் குறித்த கேள்விகளையே பலரும் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளிற்குப் பின்னர் திருமாவளவன் எம்முடன் பிரத்தியேகமாக உரையாடினார். எம்முடன் மதிய உணவினைப் பகிர்ந்து கொண்டார். அன்றிரவே அவர் தனது தாயகம் நோக்கி பயணித்து விட்டார். அவர் இங்கு வருவதற்கு முன்னரேயே எதிர்கொண்ட எதிர்வினைகள், நிகழ்வுகளின் போது எதிர்கொண்ட ஆர்ப்பாட்டங்கள், புறக்கணிப்புக்கள என்பவற்றிட்கும் மேலாக இந்நிகழ்வுகளின் பின்பாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட அவதூறுகளும் குற்றச்சாட்டுக்களும் மிக அதிகமாக இருந்தன.  இந்நிகழ்வுகள் குறித்தும், நடந்து முடிந்த சம்பவங்கள் குறித்தும் அவர் ஆற்றிய உரைகள் குறித்தும் மிகவும் மோசமான முறையிலும் உண்மைக்குப் புறம்பான முறையிலும் திரித்து வெளியிடப்பட்ட செய்திகள் மிகவும் அநாகரிகமாகவும் அசிங்கமானவையுமாவும் இருந்தன. உண்மையில் RSS இன் நிகழ்ச்சி நிரலில் உருக்கொள்ளப்படும் ‘இந்துத்துவா’ என்னும் மோசமான கருத்தியல் ஆனது இந்தியாவிலும் அதைச் சூழவுள்ள தென்கிழக்காசிய பிராந்தியங்களில் மட்டுமே உருக்கொண்டுள்ளதாக எண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால் அது இங்கு புகலிடத்திலும் ஐரோப்பிய, கனடா, அமெரிக்கா போன்ற மேற்கத்தைய தேசங்களிலும் மிகப் பெரிய அளவில் உருக்கொண்டுள்ளது எமக்கு பெரிதும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தது. அதனையும் விட இந்த நிகழ்ச்சி நிரலில் ஈழவிடுதலை ஆதரவாளர்கள், தமிழ்த்தேசியவாதிகள், தமிழ் இன உணர்வாளர்கள், இடதுசாரிகள் என பலரும் பங்கு கொண்டிருப்பது எமக்கு பெரும் வேதனையையும் வலியையும் ஏற்படுத்தி நிற்கின்றன.  எம்மோடு இதுவரை காலமும் நட்புடனும் தோழமையுடனும் உறவாடிய நட்பு சக்திகள், இன்று தமிழகத்தில்  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு பாசிச கட்சியின் ஆலோசனையின்படி ‘இந்துத்துவா’ சிந்தனைகளை மேற்கொள்வது எமக்குள் தாங்கொணாத துயரத்தினை ஏற்படுத்தி நிற்கின்றன.

நிறைவாக, திருமாவளவன் இன்று தான் உருவாக்கிய விடுதலைச்சிறுத்தைகள் அணி மூலம் அதிகாரங்களுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும் எதிராக ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். அடக்கப்பட்ட மக்களின் குரலாய், அவர்களை ஒன்று திரட்ட அமைப்பாய் திரண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் பயணிக்கும் அவரது செயற்பாடுகள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உவப்பானதாக இருக்கப்போவதில்லை. அதனை அழிக்கவும் சிதைக்கவும் அவர்களும் தமது கடுமையான செயல்களை இவருக்கெதிராக பிரயோகிப்பர் என்பதினையும் நாம் அறிவோம். இதற்கெதிராக  நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே  இன்று எம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.

vasan456@hotmail.com