பிரெஞ்சு நாவல்: காதலன் – 10 & 11!

அத்தியாயம் -10

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -நாகரத்தினம் கிருஷ்ணாமரி கிளாட் கார்பெண்ட்டர்(Marie-Claude Carpenter) அமெரிக்க பெண்மணி. எனது நினைவுத்திறனை நம்புவதால் அவள் பாஸ்ட்டனைச்( Boston) சேர்ந்தவள் என்பது உறுதி. மிகவும் நிர்மலமான கண்கள். வெளிர்நீலம். 1943. இளமஞ்சள்நிறம். வயதுக்கான தளர்ச்சியில்லை, தவிர அழகானவளென்றும் ஞாபகம். முகத்திற் சட்டென்று மின்னலாய் தோன்றி மறையும், கணநேரப் புன்னகை. நன்றாக நினைவிருக்கிறது, தாழ்ந்த குரல், உரத்துபேசுவதைத் தவிர்க்கும் ரகம். நடுத்தர வயதைக் கடந்திருந்தாள், நாற்பத்தைந்துவயது.  பாரீஸின் பதினாறாவது வட்டத்தில், அல்மா(Alma)வுக்கு அருகில் வசித்துவந்தாள். அவளுடையது கடைசி மாடி, மிகப்பெரியது, எட்டிப்பார்த்து சேன்(Seine)நதியை வியக்கலாம். குளிர்காலத்தின் இரவு உணவுக்கும், கோடையில் மதிய உணவுக்கும் அங்கு சென்றதுண்டு. அவற்றைப் பாரீஸ் நகரத்திலிருந்த உயர்ரக உணவு விநியோக விடுதிகளிலிருந்து தருவிப்போம். பெரும்பாலும் அவை தரமானவை என்பது உறுதி, ஆனால் வயிறு நிறைந்ததில்லை.

மரி கிளாட் கார்பெண்ட்டரை அனேகமாக அவளது குடியிருப்பில் மட்டுமே பார்த்திருக்கிறேன், வெளியிற் சந்தித்ததில்லை. சில நேரங்களில் அங்கே கவிஞர் மல்லார்மே(Mallarme)யின ஆசாமி ஒருவரைப் பார்த்ததாக ஞாபகம். அவ்வப்போது இலக்கியவாதிகளைச் சந்தித்த நினைவுமிருக்கிறது, அவர்கள் ஒருவரா, இருவரா அல்லது மூவரா, நினைவில்லை. ஒருமுறை அனைவரையும் சேர்த்தேக் கண்டிருக்கிறேன். அதன்பிறகு என்ன ஆனார்கள் தெரியவில்லை. அவர்களை மரி கிளாடு எங்குப் பிடித்தாள், எப்படி அவர்களை அறிமுகம் செய்துகொண்டாள், தனது குடியிருப்பிற்கு அவர்களை அழைப்பதற்கான காரணங்களென்ன.. ம் தெரியாது. அதற்குமுன்பு அவர்களைக் குறித்து கேள்விப்பட்டதில்லை. அவ்வாறே அவர்களுடைய படைப்புகளை வாசித்ததுமில்லை, அவைபற்றி பிறர்சொல்ல கேட்டதுமில்லை. உணவுக்கென்று நாங்கள் எடுக்கும் நேரம் மிகக் குறைவு. ஆனால் போரைப் பற்றி நிறைய பேசுவோம்.

இடம் ஸ்டலின்கிராடு(Stalingrad), 1942ம் ஆண்டு – பின்பனிக்காலம். மரி கிளாட் கார்பெண்ட்டர், கேட்பது அதிகம். அத்தனை தகவல்களையும் மனதிற் பதிவுசெய்திருப்பாள். பேசுவது குறைவு. எப்படி இதுபோன்ற சம்பவங்களை அவள் அறியாமற்போனாளென்று இடைக்கிடை வியப்பாள், கலகலவென்று சிரிக்கவும் செய்வாள். உண்டு முடித்தாளோ இல்லையோ, சில வேலைகள் நிமித்தமாக உடனே தான் விடைபெற வேண்டியிருக்கிறதென்று கூறி வருத்தப்படுவாள். அதென்ன வேலைகளென்று ஒருபோதும் அவள் சொன்னதில்லை.

எஞ்சி இருப்பவர்கள் எண்ணிக்கையிற் கூடுதலாக இருந்தால், அவள் போனபிறகு ஒன்றிரண்டு மணிநேரம் கூடுதலாக பேசிக்கொண்டிருப்பதுண்டு. புறப்படுவதற்குமுன், அவளும் உங்கள் விருப்பம்போல நிதானமாக இருந்து உரையாடிவிட்டுச் செல்லுங்கள் என்பாள். அவளைப் பற்றி பின்னால் பேசுகிற வழக்கமெல்லாம் எங்களிடத்திலில்லை. அவளைப்பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில், பேசுவதற்கு எதுவுமில்லையென்பது உண்மையான காரணமாகவிருக்கலாம்.

புறப்படுகிறபோது, ஏதோ பொருளற்ற கனவுலகில் சஞ்சாரித்து மீள்வதுபோலவும், பழக்கமற்ற மனிதர்களுடன் சிலமணிநேரங்கள் இருந்ததுபோலவும், நாங்கள் கழித்தத் தருணத்திற்கு நாளை என்ற சொல்லே அந்நியம்போலவும், மனிதர்வாழ்க்கை பற்றிய சிரத்தையோ அல்லது வேறுவகையான பிரக்ஞைகளோ அற்றவள்போலவும் உணர்ந்தேன், மற்றவர் அனுபவமும் அதுவாகத்தானிருந்தது. வேறொரு எல்லைக்குள் பிரவேசித்து கடந்துவந்திருந்தேன். தொடர்வண்டியில் பயணித்திருந்தேன். மருத்துவர் அழைக்கும்வரை, அதற்கான அறையில் காத்திருந்த நோயாளியைப்போலவும், ஓட்டல்களில், விமான நிலையங்களில் காத்திருந்ததுபோன்றும் அவ்வனுபவமிருந்தது.

கோடையில் சேன் நதியைப் ரசித்தவண்ணம் மொட்டைமாடியில் அமர்ந்து பகலுணவு கொள்வதும், செடிகொடிகள் நிறைந்திருக்கும் கட்டிடத்தின் மேற்தளத்தில் காப்பி குடிப்பதும் வழக்கம். நீச்சல் குளமொன்றும் இருந்தது. ஆனால் ஒருவருக்கும் நீந்தவராது. சிற்சில நேரங்களில் பாரீஸ்நகரத்தின் வெறிச்சோடிய பெரியவீதிகள், நதி, சிறிய தெருக்களென்று எங்களது கவனஞ்செல்லும். ஆட்கள் நடமாட்டமற்ற வீதிகளில் கட்டல்பா மரங்கள் பூத்துக்குலுங்கும்.

மரி கிளாட் கார்பெண்ட்டர்மீதே என் கவனமிருக்கும், அவளுக்கு அது இடையூறாக இருக்கிறதென்றும் அறிவேன், இருந்தும் என்னால் அதனைத் தவிர்க்க இயல்வதில்லை. மரி கிளாட் கார்பெண்ட்டர் என்பவளைக் கண்டறிய, அதாவது அவள் யாரென்பதைக் கண்டறிய, அப்படி அவதானிப்பதுண்டு. எதற்காக மற்ற இடங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு இங்கே வந்திருக்கிறாள், அவ்வளவு தூரத்திலிருந்து
அதாவது பாஸ்ட்டனிலிருந்து அவளை வரச் செய்தது எது? ஏன் அவள் மட்டும் பணக்காரியாக இருக்கிறாள்? பிறர் அவளைப்பற்றி ஒன்றுமே தெரிந்து வைத்திராததின் காரணமென்ன? அவ்வபோது விருந்துகள் கொடுக்கவேண்டிய அவசியமென்ன? அவளுடைய கண்களில் மாத்திரம், வெகுதூரத்தில், ஆழமான பார்வைக்குப் பின்னே துகளாய் மரணம் உறுத்துவது எதனால்? ஏன்? இந்தவகை இந்தநிறம் எனச் சொல்லமுடியாதபடி, நல்ல குளிர்காலத்திலும், கோடைகாலத்து வெண்மையைப்போல, அத்தனைத் திருத்தமாய், அவள் அணிகிற கவுன்களுக்கிடையிலுங்கூட ஏதோவொரு ஒற்றுமையிருப்பதும், அது என்னவென்று அறியாமல் நான் திணறுவதும் உண்டு. அதுவும் தவிர, இன்னொரு உடலுக்குச் சொந்தமான அவ்வாடைகளை இரவல்பெற்று அணிந்திருப்பதாலேயே அவை, அவளுக்குப் பொருந்தவில்லை என்பதுமாதிரி, எனது கண்களுக்கு அவள் தெரிவாள்.

மரி கிளாட் கார்பெண்ட்டர் வரவேற்றவர்கள் பட்டியலில் பெட்டி ·பெர்ணாண்டெஸ்(Betty Fernandez)உண்டு. பெண்கள் என்று நினத்தவுடன் பிரகாசிக்கிற நினைவுகளில், ஆண்கள் கலந்திருப்பதில்லை. பெட்டி ·பெர்ணாண்டெஸ் வித்தியாசமான பெண்மணி. அவளுடைய பெயரை உச்சரித்த அடுத்த கணம் பாரீஸ் நகர வீதியொன்றில் அவள் நடக்கிறாள். பார்வையில் குறைபாடுடையவள்போல கவனித்து நிதானமாக
நடக்கிறாள். விழிமடல்களிரண்டும் அவ்வப்போது திறந்து மூடுகின்றன. சம்பிரதாய வணக்கத்தைத் தெரிவிக்கக் கை உயர, வாய் “வணக்கம், எப்படி இருக்கீர்கள்”, என்கிறது. இப்போது அவளில்லை, இறந்து பல வருடங்களாகின்றன. முப்பது வருடங்களிருக்கலாம்.

இன்றைக்கும் பெட்டி ·பெர்ணாண்டெஸ்(Betty Fernandez) வசீகரம் கண்முன்னே நிற்கிறது, அவற்றையெல்லாம், நான் மறப்பதேது, அதற்கான காலமெல்லாம் கடந்துவிட்டது. அவளது ஈர்ப்பு சக்தி அப்பழுக்கற்றதென்று சொல்வதற்கில்லை. குறைகளில்லாததென்று உலகில் ஒன்றிருக்கிறதா என்ன? அது சூழ்நிலைகளாக இருக்கட்டும் அல்லது காலமோ, குளிரோ, பசியோ, ஜெர்மானியர்களுடைய
போர்த்தோல்வியோ, குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதோ எதுவாக இருந்தாலென்ன?, முழுமையானதென்று ஒன்றில்லை. இதுபோன்ற வரலாறுகளை அலட்சியம் செய்தவளாகவே வீதியில் நடக்கிறாள், எத்தனை நெஞ்சழுத்தம் அவளுக்கு. இங்கேயும் கண்கள் என்னவோ நிர்மலமாவே இருக்கின்றன. பழமையான கவுன், வீதி வெயிலில் புழுதிபடிந்த கறுப்புத் தொப்பி. வெடவெடவென்று நல்ல உயரத்துடன் சீன மையினால் எழுதப்பட்ட ஓவியம், அல்லது செதுக்கிய சிற்பம் போன்றிருக்கிறாள். மகாராணியை வீதியில் எதிர்ப்படும் பலரும், நின்று ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் என்பதை அறியாதவள் போலவே கடந்து செல்கிறாள்.

அவள் எங்கிருந்து வருகிறாளென சட்டென்று நம்மால் யூகித்துவிட முடியாது, ஆனாலும் வேறொரு உலகத்திலிருந்து வந்தவளென்றே நினைக்கத் தோன்றும். அவள் அழகி, இந்நிகழ்வு அவளை அழகியாக மாற்றியிருக்கிறது. போன தலைமுறை ஐரோப்பிய உடைகள், ஜரிகைத் துணிகள், காலவதியான கவுன்கள், பழைய திரைத்துணிகள், குளியல் தொட்டிக்கென உபயோகித்தவை, ஆடை அலங்கார நிபுணர்கள் வெட்டியெறிந்தவைகளென எதையும் விட்டுவைக்காமல் அணிந்து, கறையான் வாய்க்கு அகப்பட்ட கிழநரிகள்போலவும், கிழட்டு நீர்நாய்கள்போலவும், நாராய்க் கிழிந்து, கவர்ச்சியற்று, அழுது வடியும் அழகுடனுடன், அந்நியத் தன்மையுடன், எதுவுமே சரிபட்டு வராது என்பதைப்போல லொடலொடவென்று அவை இருந்தபோதிலும், காற்றில் அசைகிறபோது, அவ்வளவு அழகு. உடலுக்குப் பாந்தமாய் இல்லாதிருந்தும், ஒருவித எழிலை அப்பெண்மணிக்கு அள்ளித்தருகின்றன. எப்பொருளாக இருந்தாலும், அது எந்நிலையில் இருந்தாலும், அவளது உடலையோ, தலையையோ தீண்டிய மறுகணம், தம் பங்கிற்குப் பெட்டி ·பெர்ணாண்டெஸ் சௌந்தர்யத்தில் பங்கேற்க அவை தவறுவதில்லை.

மரி கிளாட் கார்பெண்ட்டர், பெட்டி ·பெர்ணாண்டெஸையும் தன்னுடைய இல்லத்திற்கு அழைப்பதுண்டு. அதற்கான நாளொன்று இருந்தது. ஒரு தடவை, திரியே லா ரொஷெல்(Drieu la Rochelle)கூட வந்திருந்தார். செருக்கினால் துன்புறுவது வெளிப்படையாகத் தெரிந்தது. வார்த்தைகளை அளந்து பேசினார், பிறருக்குத் தயவுகாட்டிவிடக்கூடாது எனத் திட்டமிட்டவர்போல, மொழிபெயர்ப்பாளிக்குரிய இரட்டைக்குரலில் சங்கடப்பட்டுக்கொண்டு பேசினார். பிராசில்லா(Brasillah)வும் அங்கிருந்திருக்கலாம், ஞாபகபடுத்தமுடியவில்லை என்கிறபோது வருத்தமாக இருக்கிறது. ஆனால் சார்த்ரு வந்ததில்லையென்று உறுதியாகச் சொல்லமுடியும். மோன்பர்னாஸ் கவிஞர்களும் வந்திருந்தார்கள் என்று சொல்லமுடியுமேயன்றி, அவர்களுடைய பெயர்களையோ அல்லது வேறுதகவல்களையோ சொல்வதற்கில்லை. ஜெர்மானியர்கள் எவருமில்லை. அரசியல் பேசியதில்லை. இலக்கியம் குறித்து உரையாடுவோம். ரமோன் ·பெர்னாண்டெஸ்(Ramon Fernadez) பல்சாக்(Balzac) பற்றி நிறைய பேசுவார், விடியவிடியக் கேட்டுக்கொண்டிருப்போம். அவர் சொன்னவை அனைத்துமே மறக்கபட்டவை என்கிறபோது, சொல்வதற்கு என்ன இருக்கிறது, தவிர அவற்றின் நம்பகத்தன்மையை சோதிக்க இயலாதவர்களாக வேறு இருந்தோம். அவர் தெரிவித்தவை அனைத்துமே கொசுறு செய்திகளாக இருந்ததால் அவற்றை அபிப்ராயங்கள் என்று கொள்ளமுடிந்ததே தவிர ஆதாரபூர்வமானத் தகவல்களாகக் கொள்ள முடியவில்லை. தனக்கும் ஒருமுறை பல்ஸாக்போல வரவேண்டும் என்ற எண்ணமிருந்ததை மெய்ப்பிப்பதுபோல, பல்ஸாக் ஆகவே தன்னை நினைத்துக்கொண்டு அவரைப்பற்றி ரமோன் நிறைய பேசினார். அறிபொருள் விடயத்திலும், ரமோனிடம் ஓர் உயர்வகைப் பண்பிருந்தது. ஞானமென்பது கடப்பாடு, சுமை என அடுத்தவர் உணராவண்ணம் அதனை எளிமையாகக் கையாண்டார், ஒருவகையில் அது அவசியமுங்கூட. ஓர் உண்மையான மனிதர். அவரை வீதியிலோ, காப்பி பாரிலோ சந்திக்க நேருவது, ஒருவகையான கொண்டாட்டமெனலாம். உங்களைக் கண்டதும் அவர் கொள்கிற குதூகலமும், உங்களுக்கு வணக்கம் தெரிவித்து அவரடைகிற உவகையும், அவ்வளவும் உண்மை. வணக்கம் எப்படி இருக்கிறீர்கள்? எனக் கால் புள்ளியின்றி ஆங்கிலேயர்களைப்போல கேட்பார், கூடவே சிரிப்பும் வரும். உண்மையில் அந்நேரத்தில் எழும் வேடிக்கைபேச்சுக்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொள்வதால் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்க அவ்வாறு சிரிக்கிறாரென்று சொல்லலாம். ஒருபக்கம் ஒத்து¨ழையாமை, இன்னொருபக்கம் ஒத்துழைப்பு, ஒருபக்கம் பசி மறுபக்கம் குளிர், ஒருபுறம் தியாகம், மறுபுறம் சுயநலம். பெட்டி ·பெர்னாண்டெஸ், வேறு இனம். அவள் பேச்சு, வீதிகளில் அவள் பார்த்த, அவள் அறிந்த மனிதற்களின் நிலைமை, கடைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விற்பனைக்கான பொருட்களென்று எப்படியும் இருக்கலாம், சில நேரங்களில் கூடுதலாக விநியோகிக்கப்படும் பால், மீன்,
பற்றாகுறையை நிவர்த்திப்பதற்கான ஆலோசனைகள், நிரந்தரமாகிப்போன பசி, பட்டினி என மனிதர் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதில் ஏற்படும் அத்தனை சங்கடங்களிலும், இடுக்கண் களைய விருப்பிய நட்பு மனத்துடன், அக்கறையுடனும், மிகுந்த பரிவுடனும் கருத்தினை வைக்க, அவள் கூட்டாளிகளான அனுதாபிகள் கவனத்துடன் கேட்பர். போர்முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பின்னர், பிரெஞ்சு பொதுவுடமை இயக்கத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அதுவே நிரந்தரமென்றும், தீர்வென்றும் கருதினேன். என்ன நடந்தது? மீண்டும் அதே நிலைமை, அதே பரிவு, யாசகம், மீண்டும் முட்டாள்தனமான தீர்ப்புகள், மூடநம்பிக்கையுடனான தீர்வுகள்- அதாவது சொந்தப் பிரச்சினைகளின் வழியில் அரசியல் சிக்கல்களுக்கு விடைகாண முனைவது. பெட்டி ·பெர்னாண்டெஸ¤ம் மாறினாள். ஜெர்மானியப் படைகள் ஆக்ரமித்திருந்த வெறிச்சோடிய பிரான்சு வீதிகளில் இப்போது அவளது கவனம், பாரீஸைப் பார்த்தாள், மரி கிளாட் கார்ப்பெண்ட்டரைப்போலவே கட்டல்பா மரங்கள் பூத்துக்குலுங்குவதைப் பார்க்கிறாள், அவளைப்போலவே இவளுக்கும் விருந்தினரை உபசரிக்கும் நாட்கள் அமைந்தன.


அத்தியாயம் -11

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -அவளது விடுதிவரை தனது சொகுசுக் காரில் அழைத்துசெல்கிறான். பிறர் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக விடுதியின் வாசலுக்கு சற்று முன்பாகவே நிறுத்திக்கொள்கிறான். இரவு நேரம். அவள் இறங்கிக்கொள்கிறாள். அவனைத் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறாள். சாலையையொட்டி வெளிக்கதவினைக் கடந்ததும் பள்ளியின் மிகப்பெரிய விளையாட்டுத் திடல், அது ஒளிவெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. நடைகூடத்தின் மறுமுனையில் இவளுக்கென்றே காத்திருக்கும் அவளைப் பார்க்கிறாள். இவளைக் காணாததால் ஏற்பட்டப் பதட்டம், நேரான பார்வை, ‘எங்கே போயிருந்தாய்?’, என்று கேள்வி. ‘உறங்குவதற்கு நான் வரவில்லை’, என்பது இவள் பதில். ஆனால் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. ஹெலென் லாகோனெல்லும் அதைக் கேட்கவில்லை. தனது பிரத்தியேகத் தொப்பியை தலையிலிருந்து அகற்றியவள்,சடைகளைப் பிரித்து படுப்பதற்கு முன்பாகச் செய்யும் வழக்கப்படித் தலைமயிரை ஒழுங்கு செய்துகொள்வதில் மும்முரமாக இருக்கிறாள். பள்ளிக்குக்கூட நீ போகவில்லை போலிருக்கிறது. ஆம் அங்கும் போகவில்லை. பள்ளியிலிருந்து தொலைபேசியில் தெரிவித்திருந்தார்களாம். அதனாற்றான் ஹெலெனுக்குத் தெரியவந்ததாம், சொல்கிறாள். விடுதியின் தலைமைக் கண்காணிப்புப் பெண்மணியை அவள் சந்தித்தாக வேண்டுமென்கிறாள். கூடத்து இருட்டில், நிறைய இளம்பெண்கள். அனைவரும் வெள்ளையுடையில் இருக்கின்றனர். நின்றிருந்த மரங்களில் பெரியபெரிய விளக்குகள். படிப்பதற்கென உபயோகத்திலிருக்கும் அறைகள் சிலவற்றில் வெகுநேரத்திற்குப் பிறகும் அணைக்கப்படாமல் மின்சார விளக்குககள், ஒருசில பெண்கள் படிக்கவோ அல்லது எழுதவோ செய்கிறார்கள் என்பதற்கான சாட்சி. மற்றவர்கள் வகுப்பறைகளில் பேசிக்கொண்டிருக்கலாம், சீட்டுக்கட்டு விளையாடலாம் அல்லது பாடிக்கொண்டிருக்கலாம். உறங்கச்செல்வதற்கான நேரமென்று எதுவுமில்லை. பகல் நேரங்களில் வெப்பத்தின் கடுமை அதிகம். மாலையில், இளம் கண்காணிப்புப் பெண்களின் விருப்பப்படி சிறிது நேரம் ஓட அனுமதியுண்டு. அரசு காப்பகத்தில் வெள்ளைக்காரப் பெண்கள் என்று சொன்னால் நாங்கள் இருவர்மட்டுமே. மற்றவர்களனைவரும், கால்வாசி அரைவாசியான கலப்பினத்து பெண்கள். அவர்கள் கப்பல் மற்றும் தரைப்படை ராணுவ வீரர்கள், சுங்கத்துறை ஊழியர்கள், பொதுப்பணித்துறை மற்றும் அஞ்சலகப் பணியிலிருந்த தகப்பன்மார்களால் கைவிடப்பட்டவர்கள். பெரும்பாலும் அரசாங்கத்தின் சமூகப் பாதுகாப்புத்துறையினால் பராமரிக்கப்படுபவர்கள். ஹெலெனை பொறுத்தவரையில், மருத்துவமனைகளுக்குத் தாதிகளும், அநாதை இல்லங்களுக்குக் கண்காணிப்பாளர்களும், தொழுநோய் கூடங்களூக்குச் சேவையாளர்களும், மனநோய் மருத்துவ மனைகளில் பணியாளர்களும் வேண்டும், அதற்காகவே பிரெஞ்சு அரசாங்கம், அப்படிப்பட்ட பெண்பிள்ளைகளை வைத்துப் பராமரிக்கிறதென்று நினைக்கிறாள். காலரா, கொள்ளைநோய் காலங்களில் அதற்கான பணிவிடங்களுக்கும் அரசாங்கம் இவர்களை அனுப்பக்கூடுமென நம்புகிறாள். தனக்கும் அப்படியேதேனும் நடந்துவிடுமோ என்ற அச்சமிருப்பதால் பல நேரங்களில் அவள் அழுவதுண்டு. ஆகவே விடுதியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, அங்கேயே பாதுகாப்பாக இருந்துவிடுவது நல்லதென அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பாள்.

கண்காணிப்பு அலுவலகத்திற்குச் சென்றேன். கண்காணிப்பு அலுவலகர் ஒரு பெண்மணி. கலப்பினத்தவள், இளம் வயது. என்னையும், ஹெலெனையும் சற்று அதிகமாகவே அவதானிக்கும் வழக்கம் அவளுக்குண்டு. என்னிடத்தில் அவள், “நீ பள்ளிக்குச் செல்லவில்லை, இரவு நேரத்திற்கு உறங்க வரவுமில்லை, வெளியிலிருந்திருக்கிறாய். நடந்தவற்றை உனது தாயாரிடம் சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோமென்றாள். நான் அவளிடத்தில், ” எனக்கு வேறு வழியில்லை அதாற்றான் அப்படி நடந்துகொண்டேன். ஆனால் இன்றிரவுமுதல் அப்படி எதுவும் நடக்காது, உறங்குவதற்கு இங்குதான் வருவேன், தவிர அம்மாவிடம் சொல்வதால் எந்தப் பயனுமில்லை”, என்று கூறினேன். என்னை நேராக நோக்கியவள், சிரிக்கிறாள்.

பள்ளிக்கு மட்டம்போடுவதும், இரவுநேரங்களில் வெளியிற் தங்குவதும், விடுதிக்குத் தாமதித்து வருவதும் எனக்கு வாடிக்கையாகிறது. எனது அம்மாவிற்குத் தகவல்போனது. அவள், காப்பகத்தின் தலைமை நிருவாகத்திலிருந்தப் பெண்மணியை வந்து பார்த்தாள். அவளிடம், ” மாலை நேரத்தில் என்னைச் சுதந்திரமாகச் சுற்றித் திரிய அனுமதிக்கவேண்டுமென்கிறாள். நான் விடுதிக்குத் திரும்பிவருவதற்கான நேரத்தைத் திட்டமிடுதலோ, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுதியில் தங்கியுள்ள பிற பிள்ளைகளோடுமட்டுமே வெளியிற் செல்லவேண்டுமென்றோ நிர்ப்பந்தம் எதுவும் கூடாதென்கிறாள். மேலும், “என் மகள் எந்நேரமும் சுதந்திரமாக இருக்கிறவள், அப்படியில்லையென்றாள், ஓடிவிடக்கூடியவள், அம்மாவான எனக்கே, அவள் அப்படி இருப்பதைப்பற்றி கவலைகளில்லை, அப்படியே
இருந்துபோகட்டுமென நினைக்கிறேன், சுதந்திரமாக இருக்க அனுமதிக்கிறேன்”, என்கிறாள். காப்பக நிர்வாகியிடமிருந்து பதிலில்லை, அம்மா சொல்வதயெல்லாம் அவள் கேட்டுத்தான் தீரவேண்டும், காரணம் எனக்குள்ள வெள்ளைத் தோல், கலப்பினசிறுமிகள் அதிகமுள்ள அப் பள்ளியின் மரியாதை, என்னைப்போல ஒன்றிரண்டு வெள்ளைத்தோல் பெண்களின் இருப்பால் காப்பாற்றப்படுகிறதென்று நினைப்பவள் அவள். அம்மாவுக்கோ, தன்னுடைய மகள் ஊர் சுற்றினாலும், ஒழுங்காகப் படிக்கிறாள், அவளுடைய பிள்ளைகளால் ஏற்பட்ட வேதனைகளும், அவலங்களும், என்னால்தான் தீர்ந்தாகவேண்டும் என்பதான கவலை. விளைவு, விடுதிவாழ்க்கை அடுத்துவந்த நாட்களில், ஹோட்டெல் வாழ்க்கையாகிப்போனது, அதற்கானச் சுதந்திரத்தை விடுதி நிருவாகி எனக்குக் கொடுத்திருந்தாள்.

கூடிய சீக்கிரம், திருமண ஒப்பந்தத்திற்கான வைரமோதிரமொன்று எனது கைவிரலில் ஜொலிக்கக்கூடும். காப்பகத்தில் பணிபுரிகிற பெண்கள் எனது நடவடிக்கைகளையும் மற்றதையும் அவதானித்துக்கொண்டிருக்கப் போவதில்லை. ஒருவேளை எனது திருமண ஒப்பந்தத்தை வேண்டுமானால் சந்தேகிக்கலாம், ஆனால் இத்தனை விலைகூடிய வைர,மோதிரத்தை என்னைப்போல சிறுமியொருத்திக்குக் காரணமின்றி கொடுப்பார்களா என்கிறபோது நம்பத்தானே வேண்டும்.

ஹெலென் லாகோனெல், விசுப்பலகையொன்றில் ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள், எனது நடவடிக்கைகள், விரைவில் காப்பகத்தை விடுச்செல்வதற்கான அறிகுறியென நினைத்திருக்கக் கூடும், மெல்ல விசும்புகிறாள். நான் அவளை நெருங்கி பக்கத்தில் அமர்கிறேன். எனது உடலொட்டிக் கிடந்த ஹெலென் லாகோனெல் சரீரத்தின் அழகினை மெய்மறந்து ரசிக்கிறேன். எனக்கு மிக அண்மையில், உள்ளாடை ஏதுமின்றி, சௌந்தர்யமயமான ஓர் உடல். இதுவரை நான் பார்த்திராத மார்பகங்கள். கூச்சமற்ற ஜென்மம். மற்றவர்கள் என்ன நினைப்பார்களென்ற கவலைப்படமாட்டாள், நாங்கள் அனைவரும் ஒன்றாக உறங்கும் மண்டபத்தில், நிர்வாணமாக அவள் உலாத்த
பலமுறைக் கண்டிருக்கிறேன். கடவுள் படைப்புகளிலேயே மேன்மைக்குரியது, ஹெலென் உடலாகத்தான் இருக்கவேண்டும், ஒப்பிடமுடியாதது, இவ்வளவு பொருத்தமாக உடலும் மார்பும் அமைந்திருக்கக் கண்டதில்லை. உடலிருந்து கச்சிதமாய் பிரிந்து, தேவைப்படும் கைகளுக்குச் சௌகரியமாகத் தோற்றமளிக்கும் மார்பகங்களின் அசாதாரண வெளிவட்டங்கள். என்னுடைய இறந்துபோன இளைய சகோதரனுடைய உறவு வைத்திருந்த கூலிப்பெண்ணுடைய மார்புகளுக்குக்கூட இத்தனை வளப்பமில்லை. ஆண்களுடைய அங்கங்களுக்கிடையே இப்படியொரு இணக்கமிருப்பதில்லை, அதுவன்றி அவற்றை வெளிப்படையாகப் பிரித்தறிய முடியாது. ஹெலெனுடைய மார்பகங்களுக்குண்டான வதைகளும் அவளுக்கில்லை. ஹெலெனோடு அதிககாலமென்றில்லை, அதிகபட்சமாக ஒரு கோடைகாலமென்று சொல்லலாம், அவ்வளவுதான். ஹெலென் தலா(Dalat)விலிருந்து வந்தவள். அவளுடைய தந்தை ஓர் அரசு அலுவலர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் வகுப்புகளெல்லாம் தொடங்கி ஒரு சில மாதங்கள் முடிந்திருந்த நிலையில் காலம் கடந்து பள்ளியில் சேர்ந்திருந்தாள். அவளுக்கு அச்சம். எப்போதும் எவருடனாவது இருக்கவேண்டும், இருக்கிறாள். வாய் திறக்கமாட்டாள். பெருவாரியான நேரங்களில் அழுதபடி இருப்பவள். அவளுடலுக்கென்று பிரத்தியேகமான ஒரு நிறம், மலையின் பழுப்புமில்லாமல்,ரோஜா நிறத்திலுமில்லாமல், வித்தியாசமான கலவை. இங்கே எல்லாப்பெண்களும் கடுமியான வெக்கை காரணமாக இரத்த சோகைப் பீடித்ததுபோலிருக்க, அவளைச் சுலபமாகப் பிரித்து இனங்காண முடியும். அவள் உயர்நிலைப்பள்ளிக்குச் செல்பவளல்ல, பள்ளிக்குச் செல்வதென்பது அவள் கேட்டறியாதது. எதையும் நினைவில் நிறுத்த அவளுக்குப் போதவும்போதாது, படிப்பும் வராது. விடுதியிலிருந்த தொடக்க வகுப்புகளுக்குச் சென்றுவருவது உண்மை என்றபோதிலும், பலனென்று எதுவுமில்லை. என்னைக் கட்டிப்பிடித்தபடி அழுகிறாள். அவள் கேசத்தை மெல்ல அளைந்தபடி, விடுதியைவிட்டுச் செல்லும் எண்ணமெதுவும் எனக்கில்லையென அமைதிப்படுத்துகிறேன். தான் அழகாய் இருக்கிறோமென்ற உணர்வுகூட அவளிடத்திலில்லை அவளது பெற்றோர்க்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. சீக்கிரம்,மணம் செய்து விடுவதென்று குறியாய் இருந்தார்கள். அவள் விரும்புகின்றவகையில் எல்லாவிதமான ஆண்களும் கிடைக்கலாம். ஆனால் அவள் அவர்களை விரும்பவில்லை. திருமணம் செய்துகொள்ளூம் எண்ணமுமில்லை. அவளுக்கு அவள் அம்மாவுடன் இருப்பதற்கு விருப்பம், அவள் சொற்படி நடக்க விருப்பம். வேடிக்கையான தொப்பியும், லாமே காலணியுமாக இருக்கும் என்னைக் காட்டிலும் மணம் செய்துகொள்ளூம் தகுதி ஹெலெனுக்கு நிறையவே உண்டு. அவளை மணம் செய்துகொள்ளலாம், கணவன் மனைவி என்ற பந்தத்திற்குள் நிறுத்தலாம், அச்சுறுத்தலாம், அல்லது சொல்வதெதுவும் விளங்காமற் போனாலும், எவைகளெல்லாம் பயமுறுத்தக் கூடியவை என்பதையாவதுச் சொல்லிக்கொண்டிருக்கலாம், எங்கும் போகாதே, காத்திரு என்றும் கட்டளை இடலாம். இருவருக்குமே பதினேழு வயது இருந்தும், அவளுக்கு அநேக விஷயங்களில் என் அளவிற்கு எப்போதுமே ஞானம் போதாது என்பதுதான் எனது எண்ணம்.


மார்கெரித் த்யூரா (1914-1996)

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய, ‘காதலன்'(L’Amant – The Lover)) என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது. 1984ல் பிரசுரமான இந்நாவலுக்கு, பிரான்சின் மிகப்பெரிய இலக்கிய பரிசான கொன்க்கூர் (Le Prix Goncourt) பரிசு கிடைத்தது. நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது எழுத்துக்கள் அனைத்துமே அவரது சுயவரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அச் சுயவரலாற்றை சொல்லுவதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும், அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும், வாசகர்களை முற்றிலும் வேறான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை, மாயா உலகத்தில் சஞ்சரிக்க வைப்பவை. வாழ்க்கையின் இறுதி நாட்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்டப் புள்ளியில் தன்னை நிறுத்தி குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளாகியவர். அவரது எழுத்து ஒருவகைப் பாவமன்னிப்புகோரலாகவும், கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறி இருக்கிறார். முன்னாள் பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா மித்தரானுக்கு நெருக்கமான தோழி. நாற்பதுக்கு மேற்பட்ட இவரது படைப்புகளில் நாவல்கள், நாடகங்கள் இரண்டும் உள்ளன. இவரது பல படைப்புகள், இவரது இயக்கத்திலேயே திரைக்கும் வந்துள்ளன.