வாசிப்பும், யோசிப்பும் 101: முகநூலிலிருந்து…: தமிழினி ஜெயக்குமாரனின் ‘நஸ்ரியா’

வாசிப்பும், யோசிப்பும் 100: முகநூலிலிருந்து...: தமிழினி ஜெயக்குமாரனின் 'நஸ்ரியா'தமிழினியின் முகநூல் பக்கத்தில் வெளியான  ‘நஸ்ரியா’ என்னுமிந்தக் கவிதைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அகதிகளாக முஸ்லீம் மக்கள் யாழ் மாவ்வட்டத்திலிருந்து வெளியேறியதைப் பதிவு செய்கிறது. அதே சமயம் அவ்விதமான வெளியேற்றத்துக்குக் காரணமான அமைப்பின் முன்னாள் போராளியொருவரின் இன்றைய மனநிலையினையும், அன்று அகதியாகச்சென்ற முஸ்லீம் சமூகத்தின் வாரிசுகளிலொருவரின் எண்ணங்களையும், இருவருக்கிடையிலான மானுட நேயம் மிக்க நட்பினையும்  பதிவு செய்கின்றது. அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் இலங்கையின் சிறுபான்மையின மக்களனைவரும் ஒன்றிணைந்து தம் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய இன்றுள்ள சூழலில், கடந்த கால வரலாற்றின் கசப்பான பக்கங்கள் தலையிட்டு அவ்விதமான ஒற்றுமையினைக் குலைத்து விடும் அபாயமுள்ளதொரு சூழலில்,சிறுபான்மையின மக்கள் மத்தியில் புரிதுணர்வினையும், நல்லெண்ணத்தினையும் ஏற்படுத்துவதற்கு எழுத்தாளர்களின் இதுபோன்ற தம் மீதான சுய பரிசோதனை மிக்க  படைப்புகளின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.

இக்கவிதையில் எனக்குபிடித்த சில வரிகள் வருமாறு:

“மூளையின் மடிப்புகளில்
கேள்விப் பாம்புகள்
நெளிந்து நெளிந்து
பதில்களைத் தேடிப்
பசியோடு துடிக்கின்றன”

‘கேள்விப்பாம்புகள்’ நல்லதொரு உருவகத்திலுருவான படிமம். ‘நினைவு ஆணிகள்’ இன்னுமொரு சிறந்த உருவகத்திலுருவான படிமம்.

கவிதை பின்வருமாறு முடிகின்றது.

“நீரடித்து
நீர் விலகாதெனில்
உன்னையும்
என்னையும்
எப்படி விலக்கலாம்?”

நீரானது ஒன்றுடனொன்று அடிபட்டுச் சென்றாலும் ஒன்றாகக் கலந்து விடுகிறது. நீரினைப் பிரிக்க முடியாது. அது போன்றதுதான் நம்மிருவருக்குமிடையிலான நட்பும், உறவும். யாராலும் பிரிக்கப்பட முடியாதது என்று முடிகிறது கவிதை. கவிஞரின் படைப்புச் சிறப்பினை வெளிப்படுத்தும் வரிகள்.


நஸ்ரியா!

– தமிழினி ஜெயக்குமாரன் –

“கண்ணெல்லாம் செவந்து கெடக்கு
கவலைப்படாதிங்கக்கா
சூடா ஒரு கோப்பை…
பால்கோப்பி தாறன்
பாத்திட்டே இரிங்களேன்
பறந்து போயிரும் தலைவலி”

கருமிருட்டு வானத்திலே
கனிந்திருக்கும் வெண்நிலவாய்
முக்காட்டுக்குள்ளே
சிரிக்கும் முகவதனம்.

தனிமையும் நோயுமாய்
தவித்திருந்த நாளொன்றில்,
பார்த்தவுடன் பழக்கமாகிப்
பக்கத்தில் விழித்திருந்தாள்.
“நாங்கல்லாம் இரிக்கமே
பாத்துக்க மாட்டமா?”

கண்ணுக்குள்
திரண்டெழுந்த
கடலின் அலைகள்
மோதி மோதிப் புரள்கின்றன.
மூழ்கடிக்கப்பட்டிருந்த ஒரு
பொக்கிஷக் கப்பலின்
முனைகள் தீண்டிய பரவசத்தில்
மனது
மணல்மேடாய்க் கரைந்து
காணாமலாகிறது.

“உம்மா புட்டவிச்சி அனுப்பியிரிக்காங்க
ஒரு பிடி சாப்பிடுங்களேக்கா”
அன்பைக் குழையலாக்கி
வார்த்தைகளில் நீட்டுகிறாள்.
வயிற்றில் பசியிருக்கவில்லை.

மூளையின் மடிப்புகளில்
கேள்விப் பாம்புகள்
நெளிந்து நெளிந்து
பதில்களைத் தேடிப்
பசியோடு துடிக்கின்றன.

ஓய்வில்லாத
காற்றின் சிறகுகளாக
அவளின் உதடுகள்
அசைந்து கொண்டேயிருக்கின்றன.

வார்த்தைகளைக் கைப்பற்றும்
திராணியைத் தொலைத்தவளாய்,
மௌனத்தின் கூட்டுக்குள்
நத்தையாய் சுருண்டிருந்தேன்.

“நீங்க யாழ்ப்பாணமாக்கா
நானும் யாழ்ப்பாணந்தான்.
90 ல எனக்கு அஞ்சு வயசு
அப்பவே அகதியா வந்திட்டமெண்டு
வாப்பா அடிக்கடி சொல்லிட்டிரிப்பார்”

எனது எட்டாம் வகுப்புத்
தோழர்கள்
இமாம், மனாப்தீன்
இருந்தாற் போல ஓரிரவில்
குடும்பத்தோடு
ஊரை விட்டே போய்விட்டதன்
நினைவு ஆணிகள்
இன்னமும் இதயத்துக்குள்
தைத்துக் கிடக்கின்றன.

ததும்பத் ததும்ப
புன்னகையை நிறைத்தபடி
பால் கோப்பி தருகிறாள்.
கண்களால் கூட
ஒரு நன்றி சொல்லத் தடுமாறி
கைகளை நீட்டுகிறேன்.

நீரடித்து
நீர் விலகாதெனில்
உன்னையும்
என்னையும்
எப்படி விலக்கலாம்?

05-06-2015.