வாசிப்பும், யோசிப்பும் 104 : தகுதரம், தகுந்த தரம், உரிய தரம், த(மிழ்) கு(றியீட்டுத்) தரம் பற்றிச் சில கருத்துகள்….

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

திஸ்கி தகுதரம் என்று கூறுகிறோமல்லவா? ஆனால் பலருக்கு இந்தத்தகுதரம் என்பதற்கான சரியான அர்த்தம் தெரியவில்லையென்பது வியப்பினை அளிக்கிறது. யூனிகோட், திஸ்கி, அஸ்கி இவையெல்லாமே தகுதரங்கள்தாம். உண்மையில் தகுதரம் என்பதற்கான சரியான விளக்கமாக உரிய தரம் அல்லது தகுந்த தரம் என்று கூறலாம்.ஆங்கிலத்தில் Standardட் என்பதற்கான தமிழ் மொழிபெயர்ப்பாக இதனைக்கருத முடியும். ஆனால் உண்மையில் தகுதரம் என்பது இந்த அர்த்தத்தில்தானா தமிழில் முதன் முதலில் பாவிக்கப்பட்டது?

திஸ்கி (TSCII: TSCII  – Tamil Standard Code for Information Interchange. ) என்ற எழுத்துருவினை ஆக்கியவர்கள் அதன் தமிழ் மொழிபெயர்ப்பான ‘தமிழ் குறியீட்டுத் தரம்’ என்பதிலுள்ள முதல் இரு சொற்களின் முதன் எழுத்துகளான ‘த’, ‘கு’ ஆகியவற்றை உள்ளடக்கி ‘தகுதரம்’ எனச்சுருக்கி அழைத்ததாகத் தெரிகிறது.

ஆனால் தமிழ் குறியீட்டுத் தரம் என்பதிலிருந்து தகுதரம் வந்ததாக இருப்பினும் தகுந்த தரம் அல்லது உரிய தரம் என்னும் அர்த்தத்தில் பாவிப்பதே மிகவும் பொருத்தமாகத் தெரிகின்றது.

இவ்விதம் அழைப்பதன் மூலம் இதனை அஸ்கி, திஸ்கி, யுனிகோட் ஆகிய தகுதரங்கள் என்று அழைக்கலாம். இல்லாவிடில் திஸ்கி என்னும் எழுத்துருவுக்கு மட்டுமே அழைக்க முடியும்.

தகுதரம் பற்றிப் பலர் போதிய விளக்கமின்றி அறிய முடிந்ததால்தானிந்தப் பதிவு ஒரு தெளிவுக்காக மற்றும் மேலதிகப் புரிதலுக்காக.


இசை கேட்கும் நேரம் இது: மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

‘வாத்தியாரி’ன் தெய்வத்தாய் படப்பாடலிது. இந்தப்பாடலைக்கேட்கும்பொழுதெல்லாம் கேட்பவர்கள் இந்தப்பாடலில் கூறப்படாத மூன்றெழுத்துகளையே நினைத்துக்கொள்வார்கள். பாடகர் டி.எம்.எஸ் என்ற மூன்றெழுத்துகளால் அறியப்படுபவர். ஆனால் அந்த மூன்றெழூத்துகளை விட அதிகமாகக் கேட்பவர்கள் நினைத்துக்கொள்வது எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்துகளை; தி.மு.க என்ற அன்று அவரிருந்த கட்சிக்குரிய மூன்றெழுத்துகளை; அந்தக் கட்சியின் தலைவரான அண்ணா என்ற மூன்றெழுத்துகளை. இவ்விதம் பாடலில் குறிப்பிடப்படாத மூன்றெழுத்துகளைக் கேட்பவர்கள் நினைத்துக்கொள்வார்கள். இதே போல் இன்னுமொரு திரைப்படப்பாடலுமுண்டு. அது ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்; ஊருக்காகக் கொடுத்தான்’ என்ற படகோட்டி படப்பாடல். அந்தப்பாடலைக்கேட்கும் ஒருவர் அந்தப்பாடலின் வரிகள் கூறாத ஒருவரையே அவ்வரிகளுக்கு அர்த்தப்படுத்திக்கொள்வார்கள். கொடுத்ததெல்லாம் கொடுத்தான், ஊருக்காகக் கொடுத்தான் என்று எம்ஜிஆரையே நினைத்துக்கொள்வார்கள். ஆனால் அவ்வரிகள் இந்த உலகைப்படைத்தவரைப்பற்றி அவ்விதம் கூறுகிறது. இவ்விதம் வரிகள் இரு வேறு அர்த்தங்களைத் தருமாறு பாடலை இயற்றுவது பாடலாசிரியரின் திறமையினை வெளிப்படுத்துகிறது. சாமர்த்தியம் மிக்க அப்பாடலாசிரியர் வேறு யாருமல்லர், அதிக அளவில் வாத்தியாரின் புகழ்பெற்ற பாடல்களை எழுதிய கவிஞர் வாலிதான் அவர்.

ஆனால் என்னை இப்பாடல் கவர்ந்ததற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. பாடல் அதிக எண்ணிக்கையிலான மூன்றெழுத்துகளைக்கொண்டு பின்னப்பட்டிருப்பதுதான். பதவி, பணிவு, வரும், துணிவு, பழகி, அன்பே , அன்னை, அறிவு, ஒன்றே , உலகே, மூன்று மூச்சு, கடமை, மரம், உயிர், இன்று, கொள்கை, முகம், தந்தை, கோவில், பேச்சு என மூன்றெழுத்துகள் நிறைந்த பாடல் தெய்வத்தாய் திரைப்படத்தில் வாத்தியார் பாடுவதாக வருமிந்தப்பாடல்