தொடர் நாவல்: மனக்கண் (11)

[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்]

11-ம் அத்தியாயம்: சுந்தரேஸ்வரர் சந்நிதியில்

பத்மா நீச்சல் ராணிப் போட்டியில் கலந்து கொண்டது பற்றி பரமானந்தர் எவ்விதக் கவலையோ கோபமோ கொள்ளாதபடி ஸ்ரீதரும் சுரேசும் பார்த்துக் கொண்டனர். ஸ்ரீதர் பத்மாவை அன்று வழக்கத்துக்கு மாறாகத் தனது ‘பிளிமத்’ காரில் கொலீஜ் ரோட்டிலுள்ள அவள் வீட்டிலேயே கொண்டு போய் இறங்கி விட்டான். பரமானந்தர் கூட அன்று தான் அவன் காரை முதன் முதல் பார்த்தார். சிவநேசரின் மகன் என்பதை மூடு மந்திரமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் முற்றிலும் தீர்ந்து விட்டதும், பத்மாவுக்கும் தனக்குமுள்ள காதல், திருமணக் கட்டத்தை அடைந்து விட்டது, இனி யாருக்கும் தான் அஞ்சாமல் காரியங்களைச் செய்யலாம் என்று அவன் நம்பியதுமே அவன் இவ்வாறு பகிரங்கமாகத் தன் படாடோபக் காரில் பத்மா வீட்டுக்குப் போகும் துணிவைப் பெற ஏதுவாயிருந்தது. பத்மா – ஸ்ரீதர் திருமணத்தை விரைவில் செய்து முடிக்க இன்னும் ஒரே ஒரு நடவடிக்கைதான் எடுக்கப்பட வேண்டியிருந்தது. தந்தை சிவநேசரதும் தாய் பாக்கியத்தினதும் ஆசியைப் பெறுவதே அது. ஸ்ரீதருக்கு அது மிகவும் அற்ப விஷயமாகவே பட்டது.

 டாக்டர் சுரேஷ் அடுத்த வாரம் இங்கிலாந்துக்குப் புறப்பட்டதும், அவனை வழியனுப்பிய அடுத்த நாளே தான் ஊருக்குப் போய், அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் கூறித் திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் – கல்யாணத்தைத் தங்கள் பரம்பரைக் கோவிலான சுந்தரேஸ்வரர் கோவிலிலேயே நடத்தி விட்டு, திருமண வரவேற்பு வைபவத்தையும் விருந்தையும் ஹோர்ட்டன் பிளேசிலுள்ள தங்கள் இல்லத்திலோ அல்லது கால் பேஸ் ஹோட்டல் போன்ற ஒரு பெரிய ஹோட்டலிலோ நடத்திக் கொள்ளலாம் என்பது அவன் முடிவு. அதன் பின் பத்மாவும் தானும் ஜோடியாகக் கிராமத்திலுள்ள தங்கள் மாளிகைக்குப் போய் ஒரு வார காலமாவது உல்லாசமாகத் தங்கி விட்டு கொழும்புக்கு வந்து ஹோட்டன் பிளேஸ் ‘கிஷ்கிந்தா’வில் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று அவன் திட்டமிட்டிருந்தான். இதுவரை அந்தப் பெரிய வீட்டில் சுரேஷ் அவனுக்குத் தோழனாயிருந்தான். இனி மேல் பத்மா அந்த இடத்தைப் பெற்றுக் கொள்வாள். வாழ்க்கை சலிப்பின்றிப் போகும் ஆனால் கல்யாணம் செய்து கொண்டோமென்பதற்காக படிப்பை விட்டு விடக் கூடாது. குறைந்தபட்சம் பி.ஏ. பரீட்சையையாவது பத்மாவும் நானும் ‘பாஸ்’ பண்ணி விட வேண்டும் – என்றெல்லாம் திட்டம் தீட்டியிருந்தான் அவன். இந்தத் திட்டங்களுடன் இன்று புதியதொரு கனவும் சேர்ந்து கொண்டது. நீச்சலுடை அணிந்து அலைகளிடையே நீண்டு கொழுத்த ஒரு சுறா மீன் போல பத்மா தன் ஈரக் கால்கள் மீது புரண்டு ஆர்வத்துடனும் விரைவாகவும் நீந்தக் கற்றுக் கொண்டது அவனுக்கு அதிக இன்பத்தைக் கொடுத்திருந்தது. ஸ்ரீதருக்குக் கடல் ஸ்நானமென்றால் எப்பொழுதுமே பிரியம். பத்மாவுக்கும் அதே பிரியம் இருப்பதால் இருவரும் வாரத்துக்கொரு தடவையாவது கடற்கரைக்கு வந்து கடலிலும் கரையிலும் கும்மாளம் போடலாம். ஒரு வேலைக்காரனையோ வேலைக்காரியையோ வைத்துக் கொண்டால் கடற்கரையிலேயே சாப்பாட்டைக் கூட வைத்துக் கொள்ளலாம் என்றெலலாம் மனக் கோட்டை கட்டினான் அவன்.

ஸ்ரீதர் பத்மா வீட்டுக்குப் போன பொழுது சுரேசும் அவர்கள் கூடப் போனான். அவள் காரின் பின்னாசனத்தில் உட்கார்ந்து கொண்டு அங்கு குவிந்து கிடந்த பரிசுப் பொருள்களைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நீச்சல் ராணிக்குக் கிடைத்த பரிசுப் பொருள்கள் காரின் ‘டிக்கி’யை நிறைத்து, பின்னாசனத்தையும் நிறைத்துவிட்டன. அப்பப்பா, அப்பரிசுகள் தான் எப்படிப்பட்டவை? சேலை தொடக்கம் செருப்பு வரை, மார்புக் கச்சிலிருந்து மணிக் கூடு வரை ஒரு பெண்ணுக்குத் தேவையான சகலப் பொருள்களும் பரிசாகக் கிடைத்திருந்தன. எதிர் காலத்தைப் பற்றி அதிக யோசனையுள்ள ஒருவர் குழந்தைகளுக்குப் பால் பருக்கச் ‘சூப்பி’யுடன் கூடிய கண்ணாடி பாலூட்டி ஒன்றைப் பரிசாக அளித்திருந்தார். ஆனால் இப்பரிசை ஆட்சேபிப்பது போல, தேச நலனிலும் குடும்பக் கட்டுப்பாட்டிலும் அக்கறையுள்ள இன்னொருவர் ஒரு டசின் ரப்பர்க் கர்ப்பத் தடைக் கருவிகளைப் பரிசாக வழங்கியிருந்தார்! சுரேஷ் இவற்றைப் பிரித்துப் பார்த்து விட்டு “அழகுராணி கூட அதிகம் பிள்ளகள் பெறக் கூடாது என்பது இதைத் தந்தவர் எண்ணம். உன் எண்ணம் என்னப்பா?” என்றான் ஸ்ரீதரைப் பார்த்து. ஸ்ரீதர் சிரித்து விட்டு “பத்மாவைக் கேள்!” என்றான். பத்மாவோ நாணத்தோடு பொய்க் கோபம் காட்டி முகத்தைச் சுளித்துக் கொண்டாள்!

இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்க, கார் பத்மா வீட்டை அடைந்து விட்டது. ஸ்ரீதரும் சுரேசும் பரிசுப் பொருள்களை இறக்க, பத்மா துள்ளிக் குதித்து வீட்டுக்குள் போய்விட்டாள். அதன் பின், பரமானந்தரிடம் உரையாடுகையில் ஸ்ரீதர் தாங்கள் இருவரும் கல்கிசைக்குப் ‘பிக்னிக்’ போனதையும், அங்கு எதிர்பாராத விதமாக நீச்சலழகிப் போட்டியில் பத்மா பங்கு பற்ற வேண்டிய சூழ் நிலையும் ஏற்பட்டதையும் விளக்கிக் கூறினான்.

பரமானந்தர் அவனது பேச்சைச் சுவாரஸ்யமாகக் கேட்டுச் சிறிது நேரம் பேசாதிருந்து விட்டுப் பின் சிரித்தார்.

“பத்மா உன்னுடையவள். நீயும் அவளோடு இனி என்ன செய்தாலும் உங்களிஷ்டம். இதற்காக எனக்கேன் குற்றாவாளிகள் போல் இவ்வளவு பெரிய விளக்கம் தர வேண்டும்? இன்னும் இது நாகரிக காலம். இப்படிப்பட்ட விஷயங்களை ஆட்சேபிப்பதால் பிரயோசனமில்லை. மேலும், இன்று இது போன்ற போட்டிகள் உலகெல்லாம் நடக்கின்றன. என் மகளும் அதில் கலந்து கொண்டாலென்ன? இவற்றை எதிர்த்து இயக்கம் நடந்த நான் அவ்வளவு கர்நாடகமானவனல்ல” என்று விஷயத்தை மிகவும் சுருக்கமாகவே முடித்துவிட்டார் அவர். பத்மாவுக்குப் பெரிய நிம்மதி. “எங்கப்பாவைப்போல் யார் இருக்கிறார்கள்? எவ்வளவு நாசுக்காகவும் நாகரிகமாகவும் விஷயத்தை முடித்து விட்டார்! அவருக்கு வயதுதான் அதிகமேயொழிய, மனோபாவத்தில், இளைஞர். என் தங்க அப்பா அவர்!” என்று பெருமையோடு எண்ணிக் கொண்டாள் அவள்.

பரமானந்தர் சுரேஷிடம் பேசிக் கொண்டிருந்த பொது, “என் மகள் அழகி என்றால் எனக்குப் பெருமை இல்லையா? நீங்கள் அவள் அம்மாவைப் பார்த்திருக்க வேண்டும். பத்மா சரியாக அவள் அம்மாவைப் போல. அதனால் தான் அவள் அழகாயிருக்கிறாள். நல்ல வேளை, அவள் என்னைப் போல் இருந்திருந்தால் நிச்சயம் போட்டியில் தெரியப்பட்டிருக்க மாட்டாள்!” என்றார் தமக்கே இயல்பான நகைச்சுவையோடு. பத்மாவுக்கு இதைக் கேட்டதும் மேலும் அதிக ஆனந்தம்.

ஸ்ரீதரும் சுரேசும் வீட்டை விட்டுப் போனதும், பத்மா தனது அறைக்குள் போய்க் கதவைப் பூட்டிக் கொண்டு கண்ணாடி முன் நின்ற படி தன்னுடைகளைக் களைந்து வீசி விட்டுத் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஆடை ஆபரணங்களை ஒவ்வொன்றாய் அணிந்து பார்க்க ஆரம்பித்தாள்.

“அப்பப்பா என்னுடன் போட்டி போட்ட அந்தப் பத்துப் பெண்களும் எவ்வளவு அழகு! தங்கம் போன்ற மேனி, தளிர் போன்ற இடை, உருண்டு திரண்ட வாளிப்பான உடம்பு, முத்துப் பல் வரிசை, அழகாக் கத்தரித்து விசித்திரமாகச் செய்யப்பட்டிருந்த கூந்தல் அலங்காரங்கள், சிவந்து திரண்ட கால்கள், பூரித்துக் குடம் போல் விளங்கிய பின்னழகு – இப்படி அல்லவா அவர்கள் இருந்தார்கள்? அவர்கள் எல்லாரையும் விட நான் அழகா? நம்ப முடியவில்லையே! மேலும் கண்ணாடிக்குள் பார்த்தால் என்னழகு அவ்வளவு ஒன்றும் பிரமாதமாகத் தெரியவில்லையே! ஆனால் எனக்குத் தெரியாவிட்டலும் நான் பேரழகியாகத்தானிருக்க வேண்டும். எல்லோரும் என்னிடம் எனது அழகைப் பற்றித் தானே பேசுகிறார்கள்! விமலாவும் லோகாவும் கூட நான் அந்தச் சினிமா நட்சத்திரத்திலும் பார்க்க அழகு, இந்தச் சினிமா நட்சத்திரம் போலிருக்கிறேன், டீச்சரின் கையைப் பிடிக்க ஆசையாயிருக்கிறது. டீச்சரின் கைகள் மிகவும் அழகு என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறார்கள்” என்று தன்னோடு தான் பேசிக் கொண்டே பரிசாகக் கிடைத்த ஆடைகளை ஒன்று மாறி ஒன்றாக அணிந்து கண்ணாடியில் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவளுக்குப் பரிசாகக் கிடைத்திருந்த பொருள்களோ ஏராளம். சேலைகள் எட்டு, நீச்சலுடைகள் மூன்று, மார்புக் கச்சைகள் பதினேழு, செருப்புகள் நான்கு சொடி, கறுப்புக் கண்ணாடி இரண்டு, ஜீன்ஸ் என்னும் நீண்ட காற்சட்டைகள் இரண்டு, சுவெட்டர் ஒன்று, டென்னிஸ் விளையாடுவதற்கேற்ற கட்டைக் காற் சட்டைகள் இரண்டு, தங்கச் சங்கிலி ஒன்று, ரங்கூன் வைர மாலை ஒன்று, காதணிகள் மூன்று சோடி, வெள்ளி வளையல்கள் மூன்று சோடி, ஒரு கைக் கடிகாரம், தங்க வளையல்கள் இரண்டு, பொதுவாக ஒரு பெண்ணுக்குச் சீதனம் கொடுப்பதற்கே அவளுக்குக் கிடைத்த பொருள்கள் போதும் போலிருந்தன. இவற்றில் ஒரு சிலவற்றை அணிந்து பார்த்ததுமே அவளுக்குக் களைப்பேற்பட்டு விட்டது. முடிவில் ‘ஜீன்சை’ அணிந்து அறையில் அங்குமிங்கும் நடந்து அழகு பார்த்துக் கொண்டிருந்த போது களைப்பு மிகவும் அதிகமாகவே கட்டிலில் படுத்து ஒரு தலையணையை நெஞ்சுடன் அணைத்தவாறு நித்திரையாகி விட்டாள் அவள். கடலாடியதால் ஏற்பட்ட ஆயாசம் அத்து மீறி வந்து, ஆழ்ந்த துயிலுலகிற்கு அழைத்துச் சென்று விட்டது அவளை!

சற்றேறக் குறைய ஐந்தரை மணியளவில் துயில் சிறிது கலைந்து வரவும் விமலாவும் லோகாவும் கதவில் தட்டவும் சரியாக இருந்தது. பத்மா தான் ஜீன்ஸ் அணிந்திருந்ததை மறந்து படாரென்றெழுந்து கதவைத் திறந்து விட விமாலும் லோகாவும் வியப்போடு “அம்மாடி, டீச்சரைப் பார்! ஜீன்ஸ் அணிந்திருக்கிறா! மிகவும் அழகாயிருக்கிறது!” என்று கூச்சலிட்டார்கள். அந்தச் சப்தத்தைக் கேட்டு திரும்பிய பரமானந்தர் பத்மாவின் அழகுக் கோலத்தைக் கண்டு திகைத்துவிட்டார். பத்மா வெட்க மேலிட்டால் விமலாவையும் லோகாவையும் அறைக்குள் அனுமதித்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். பரமானந்தர் என்ன செய்வார்? பத்மாவுக்குத் தான் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று கருதித் தமது கைப்பிரம்பை எடுத்துக் கொண்டு வெளியே போகக் கிளம்பினார். போகுமுன் பலத்த குரலில் “பத்மா பத்மா’ எனக் கூவி “நான் வர எட்டு மணியாகும்” என்று கூறி விட்டுச் சென்றார் அவர்.

அதன் பின் குழந்தைகளோடு சேர்ந்து கும்மாளமிட்டாள் பத்மா. தான் நீச்சல் ராணியாகத் தெரியப்பட்ட விஷயத்தை விவரமாகச் சொல்லி “நாளைக் காலைப் பேப்பரிலே எனது படங்கள் நிறைய வரும், பாருங்களேன்!” என்று பெருமையாகக் கூறினாள் அவள். அதற்கு விமலா “அப்படியானால் அண்ணாவிடம் சொல்லி எல்லாப் பேப்பரையும் வாங்கி டீச்சரின் படங்கள் எல்லாவற்றையும் வெட்டி வைத்துக் கொள்ளப் போகிறேன்” என்று பளிச்சென்று பதிலளிதாள்

அண்ணா! அந்த வார்த்கைளைக் கேட்டதும் பத்மாவின் மனம் கமலநாதனைச் சுற்றிப் படர ஆரம்பித்தது. கமலநாதன் தன்னைப் பற்றியும் தன்னழகைப் பற்றியும் என்ன நினைக்கிறான்? அழகான பெண்ணைக் கண்டால் ஆண்கள் யாருக்குமே ஆசையும் சபலமும் ஏற்படுமென்பது அவளுக்குத் தெரியுமென்றாலும், தான் ஒரு பேரழகி என்பது இப்பொழுதுதான் உண்மையில் திட்டவட்டமாகவும் சந்தேகமில்லாமலும் அவளுக்குத் தெரிந்திருந்தது. கமலநாதனுக்கு முன்னால் தன் பேரழகு முழுவதையும் ஒரு முறை காட்டி, அவன் அதன் தாக்கத்துக்கு முன்னால் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. எனவே விமலாவிடம், “சீ, அண்ணாவிடம் போய், நான் நீச்சல் ராணியாகத் தெரியப்பட்டதைப் பற்றிப் பேசக் கூடாது. தெரியுமா?” என்றாள். இவ்வாறு சொன்னால் அவள் கட்டாயம் கமலநாதனிடம் தன்னைப் பற்றிப் பேசுவாளென்பதும், உடனேயே அது சம்பந்தமாக ஒரு வாக்குறுதியைத் தனக்கு அளிப்பாள் என்பதும் பத்மாவுக்குத் தெரியும். அவள் நம்பிக்கை வீண் போகவில்லை. ஏனெனில் விமலா உடனேயே “அதெப்படி முடியும்? வீடு போனதும் எல்லோருக்கும் இதைச் சொல்லிவிட்டுத் தான் மறு வேலை. முதற் சொல்லுவது அண்ணாவுக்குத்தான்” என்று கூறி விட்டாள்!

அடுத்த நாட் காலை கொழும்பு முழுவதும் நீச்சல் ராணி பத்மா பரமானந்தைப் பற்றித் தான் பேச்சு.. கொழும்பு மட்டுமல்ல, இலங்கை முழுவதுமே அவளைப் பற்றியே பேசியது. வெள்ளவத்தையிலிருந்த கல்யாணமாகாத எழுது வினைஞர் ‘கிளபிங்’குகள் தொடக்கம், செட்டியார் தெருவிலுள்ள சைவக் கடை, ஜவுளிக் கடை வீறாக எங்கும் பத்மாவின் பெயரே அடிபட்டது. ஒரு சிலர் “சிச்சீ, தமிழ்ப் பெண்கள் கூட இப்படியாகி விட்டார்களே!” என்று நாலு பேர் மத்தியில் முகம் சுளித்த போதிலும், ஆட்களில்லாத நேரமாகப் பார்த்து, பத்திரிகையில் வந்திருந்த பத்மாவின் ஒய்யாரப் படங்களை ‘லென்ஸ்’ என்ற பூதக் கண்னாடியால் கூடப் பார்த்தார்கள்! ‘வளவளப்பான’ காகிதத்தில் அச்சடித்திருந்தார்களானால் இந்த ‘லென்ஸி’ல் அவள் கால்கள் எவ்வளவு ஜோராக இருக்கும்” என்று தம்முள் இரகசியமாகக் கூறிக் கொண்ட இவர்களில் பலர், “என்ன கண்ணராவி, நீச்சலுடையாம் நீச்சலுடை! எவ்வளவு அவலட்சணமாயிருக்கிறது!” என்று நண்பர்களிடம் பகிரங்கமாகக் கூறிக்கொண்டார்கள். ஹோட்டல்களில் தேநீர்ப் பட்டறையில் வேலை செய்யும் ‘டீ மேக்கர்’களும், ‘குசினி’யில் வேலை செய்த சமையற்காரர்களும் மட்டுமே இவ்வாறு இரட்டை வேஷம் போடவில்லை. பத்மாவின் படங்களை வெட்டி எடுத்துச் சுவர்களில் ஒட்டி வைத்துக் கொண்டார்கள் அவர்கள்! அடுத்த நாள் மட்டுமல்ல, அடுத்து இரண்டு மூன்று நாட்களாகவே அவள் பேச்சாகவே இருந்தது எங்கும். கொலீஜ் ரோட் 48ம் இலக்கத் தோட்டத்தைப் பொறுத்த வரையில், அந்த இரண்டு மூன்று நாட்களில் ஒரு பெரிய பூகம்பமே நடந்து முடிந்து விட்டது. அன்னம்மா அனுதாபத்துடன் பேசினாள். திராவிட தாசனோ தனது அபிமான சினிமா நட்சத்திரமான எம்.ஜி.ஆருடன் பத்மா கடற்கரைக் காதற் காட்சிகளில் தோன்றினால் எவ்வளவு கவர்ச்சியாயிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தாள். குசுமாவோ பரமானந்தர் வீட்டிலில்லாத சமயம் வந்து பத்மாவை அவள் வெற்றிக்காகப் பாராட்டினாள். மூன்றாம் வீட்டு அவிஸ் நோனா முழுத் தோட்டத்திலும் செய்தியை இடை வீடின்றிப் பரப்பி விட, ஒரு சிலர் பத்மாவைப் பாராட்ட, இன்னும் சிலர் கிண்டலாகப் பேசவும் செய்தார்கள். தோட்டத்தில் வட்டிக்குப் பணம் கொடுத்து பிழைத்த கடைசி வீட்டுப் பூவுலிங்கத்தின் பொறாமைக்கார மகள் “ஆமாம் அங்கு வந்த பத்துப் பேரில் அவ அழகி. அதிலென்னாவாம்? இன்னும் நாங்கள் மரியாதையானவர்கள். இப்படி வெட்கமில்லாமல் நீச்சலுடை உடுத்துவோமா?” என்று கேட்டாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவளது தம்பி “ஆமாம், நீ நீச்சலுடை உடுத்தி உன் முகத்தில் முன்னே தள்ளிக் கொண்டிருக்கிற பல்லுகளில் இரண்டை சீனாக்காரன் கடையிலே போய்ப் புடுங்கிக் கொண்டு போயிருந்தால் உனக்குத்தான் பரிசு கிடைத்திருக்கும்! போக்கா, ஏன் அப்படிப் பேசுகிறாய்? பத்மா அக்கா நல்ல அழகு. நல்லவ கூட. காசு வாங்காமல் எத்தனை நாள் எனக்குப் பள்ளிப் பாடம் சொல்லித் தந்திருக்கிறா” என்று குறிப்பிட்டான். அதற்கு “போடா மடையா!” என்று சீறினாள் அக்கா. வெற்றிலைக் கடை வேலாயுதக் கிழவனுக்கு அவிஸ் நோனா செய்தியைச் சொல்லிப் பத்திரிகையில் கிடந்த பத்மாவின் படத்தைக் காட்டிய போது அவன் தன் மொட்டந் தலையைத் தடவி விட்டுக் கொண்டு “அப்படியா?” என்று கூறி அமைதியாகி விட்டான். அவன் மட்டும் தான், தான் கேட்ட செய்தியால் பாதிக்கப்படாதவன். “பத்மா நல்ல பெண், தமாஷ்காரி என்னோடு விளையாடுவதிலும் தலையில் குறும்பாகக் குட்டுவதிலும் அவளுக்குப் பிரியம்” என்ற நினைவைத் தவிர வேறொன்றுமே அவனுக்கு வரவில்லை. தோட்டத்தின் வாலிபர்களும் இளம் பெண்களும் பத்மாவை மீண்டும் மீண்டும் பார்க்க ஆசைப்பட்டார்கள். “ஆமாம், அந்தப் பெண் அழகுதான். அவள் நீச்சல் ராணியாகத் தெரியப்பட்டது நமது தோட்டத்துக்கே பெருமைதான்” என்று வஞ்சனையில்லாமல் ஜம்பமடித்துக் கொண்டார்கள் அவர்கள்.

பல்கலைக் கழகத்தைப் பொறுத்தமட்டில் பத்மா பெயர் பேசப்படாத இடமேயில்லை. இளம் பேராசிரியர், விரிவுரையாளர்கள் தொடக்கம் மாணவர்கள் வரை, எல்லோரும் பத்மாவைப் பார்க்கத் தவம் கிடந்தார்கள். பல தமிழ் மாணவர்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் நீச்சலழகியாகத் தெரியப்பட்டது ஒரு வித இனத் திருப்தியைக் கூடக் கொடுத்தது. “அது தமிழ்ப் பெண் குலத்துக்கே ஒரு பெருமை!” என்று குறிப்பிட்டான், அவர்களில் ஒருவன், சிற்றுண்டிச் சாலையில். “நல்ல பெருமை! என்னைப் பொறுத்த வரையில் அதை இழிவென்று நான் கருதுகிறேன்.” என்று அதற்குப் பதிலளித்தான் இன்னொரு மாணவன். அது அவன் மனதிலிருந்து வந்த வார்த்தைகளல்ல. பெருமை பேசியவனின் அரசியல் பின்னவனுக்குப் பிடிக்காது. ஆகவே அவனுக்குச் சூடு கொடுக்கச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை. ஒரு சில மாணவர்கள் “பத்மாவைத் திருமணம் செய்தாலோ” என்று கூட இரகசியமாகக் கற்பனை செய்து பார்த்தார்கள். வேறு சில மாணவர்கள் பத்மாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமான கதைகளைக் கட்டி விட்டார்கள். அவதூறுக் கதைகளைப் பரப்புவதிலும் பேசுவதிலும் அவ்வளவு திருப்தி சிலருக்கு!

பெண் மாணவிகள் பலர் பத்மாவைப் பார்ப்பதற்காக அவள் போகுமிடங்களுக்குப் படை எடுத்தார்கள். ஒரு பல்கலைக் கழக மாணவி போட்டியில் வெற்றி பெற்றது, பொதுவாக அவர்களுக்குத் திருப்தியையே தந்தது என்றாலும் ஒரு சிலருக்குப் பொறாமையும் ஏற்படவே செய்தது. சில அழகான பெண்கள் “நானும் இப்படிப்பட்ட போட்டிகளில் பங்கு பற்ற வேண்டும், அழகை அதிகரிக்கவோ வேண்டும், எனது உடம்பின் இந்தப் பகுதி மிகவும் கொழுத்திருக்கிறது. அதைத் தேகாப்பியாசத்தால் குறைக்க வேண்டும். இந்தப் பகுதி மிகவும் சிறுத்திருக்கிறது. அப்பகுதியைப் பெரிதாக்க முயற்சி எடுக்க வேண்டும்” என்ற தோரணையில் சிந்தித்துக் கொண்டார்கள். தங்கமணியைப் பொறுத்த வரையில் அவளுக்குத் தாங்கொணாத ஆத்திரம். “இந்தப் பத்மா ஆச்சரியமான பெண். பார்ப்பதற்குப் பசுப் போல! மிகவும் வெட்கமுள்ளவள் போலவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளுகிறாள். ஆனால் காதல், நீச்சலுடைப் போட்டி, இவற்றுக்கெல்லாம் துணிந்து விடுகிறாள். இவளை எவ்வளவு காலத்துக்குப் பொறுப்பது!” என்று சினந்து கொண்டாள் அவள். அவளை ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது தங்கமணிக்கு.

கமலநாதன் வீட்டிலோ பத்மாவைப் பற்றி ஒரே அமர்க்களம். விமலாவும் லோகாவும் பத்திரிகைகளை எடுத்து அதிலிருந்த பத்மாவின் படங்கள் எல்லாவற்றையும் வெட்டி ஒரு பழைய வரைதற்கொப்பியில் ஒட்டி வைத்துக் கொண்டு, “எங்கள் டீச்சரின் படங்கள்” என்று வருவோர் போவோருக்கெல்லாம் காட்டிக் கொண்டிருந்தார்கள். கமலநாதனிடம் அடிக்கடி காட்டி “அண்ணா, டீச்சர் மிகவும் அழகுதானே!” என்று கேட்டார்கள். கமலநாதனோ தனக்கு அதில் அக்கறை இல்லை என்பது போல் காட்டிக் கொண்டாலும், உண்மையில் தனது படுக்கை அறையில் தனியாக இருந்த போது இரவு வெகு நேரம் வரை பத்மாவின் படங்களைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். “அந்த ஸ்ரீதர் கொடுத்து வைத்தவன். மிகவும் அதிர்ஷ்டசாலி.” என்று பொறாமைப்பட்டான் அவன். பத்மாவைப் போன்ற அழகும் அறிவும் படைத்தவள் ஒருவனுக்கு மனைவியாகக் கிடைத்தால் அவனுக்கு அதை விட உலகில் வேறென்ன வேண்டும் என்று சிந்தித்தான் அவன். தன் கறுத்தடர்ந்த மீசையைத் தன் விரல்களால் தடவி விட்ட வண்ணமே அவன் “என் வாழ்க்கையில் பத்மா எனக்குக் கிடைப்பதற்கு வழியேயில்லை. அவள் ஏற்கனவே இன்னொருவன் காதலி. அவனது ஆலிங்கனங்களுக்கும் அவள் ஆளாகியிருக்கலாம். யாருக்குத் தெரியும்? சில சமயம் அதற்கு ஒரு படி மேலே கூட அவர்கள் போயிருக்கலாம். அப்படியானால் அவள் எச்சிற்படுத்தப்பட்ட மாங்கனி. இருந்தாலும் கூட அவள் எனக்குக் கிடைத்தால் நான் அவளை ஏற்றுக் கொள்ளவே செய்வேன்…! ஆனால் இது நடக்கக் கூடிய காரியமா? எச்சிற்படுத்தப்பட்ட மாங்கனி ருசியிலே குறைவதில்லை. ஆனால் சுகாதாரத்துக்குக் கேடுதான். முனிசிப்பல் சுகாதார பரிசோதகனான எனக்கு இது தெரியாததல்ல. ஆனால் எச்சிற்படுத்தியவன் சுகதேகியாய் இருந்தால் கிருமிகள் இருக்க இடமில்லை. அப்படிப்பட்ட நிலையில் எச்சிற்கனியால் கூட ஆபத்தில்லை. ஏன் நான் எச்சிற்படுத்திய உணவை எனது தங்கைகளும் அவர்கள் எச்சிற்படுத்தியதை நானும் வீட்டில் சாப்பிடுவதில்லையா? நேற்றுக் கூட லோகா தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த இனிப்பு மிட்டாயிற் பாதியை தன் வாயாற் கடித்து என்னை அண்னாந்து பார்க்கும் படி சொல்லி என் வாயில் இடவில்லையா? நான் நாளைக்கு வேலைக்குப் போகும் வழியில் அவள் வீட்டிற்குப் போய் அவள் நீச்சலழகியாகத் தெரியப்பட்டதற்கு என் நல்வாழ்த்தைத் தெரிவிக்கவே வேண்டும். உண்மையில் பத்திரிகைகளில் வெளி வந்த படங்களைக் கொண்டு பார்த்தால், நீச்சலுடையில் அவளது அழகு வியப்பூட்டவதாகவோ இருக்கிறது. உடுக்குப் போன்ற அவளது உருவ அமைப்பு சேலைக் கூடாக இவ்வளவு அழகாகத் தெரிவதில்லை. பத்மாவின் அழகு பாராட்டுக்குரியது தான் என்று பலவாறு சிந்தித்தான் அவன்.

அடுத்த நாள் கமலநாதன் தனது மோட்டார் சைக்கிளில் பத்மா வீட்டுக்குச் சென்ற போது, அவனது அதிர்ஷ்டம் போலும், பரமானந்தர் அங்கிருக்கவில்லை. பத்மாவின் செங்கரங்களை அவன் தன் கரங்களால் இறுகப் பற்றிக் குலுக்கி விட்டு, “அழகு ராணிக்கு என் நல்வாழ்த்துகள்!” என்று அவன் கூறிய போது பத்மா அடைந்த போது பெருமை கொஞ்சமல்ல. அவன் மீசை அவளைக் கவர்ந்திழுக்க, அவள், “என்னை எல்லோரும் அழகி அழகி என்று பாராட்டுவது உண்மையில் எனக்கு வெட்கமாயிருக்கிறது. நான் என்ன அவ்வளவு அழகியா? ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் தெரியப்பட்டு விட்டேன்!” என்றாள். “சே, அப்படிச் சொல்லிவிட முடியாது! நான் உங்களை விட அழகான பெண்ணை என் வாழ்க்கையிலேயே கண்டதில்லை” என்றான் கமலநாதன்.

அதைக் கேட்ட பத்மாவின் மனம் இன்பத்தால் நிறைந்தது. அவனோடு நீண்ட நேரம் உரையாடி மகிழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. ஆனால் கமலநாதனுக்கோ வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் “பத்மா உன்னை நான் வேறு நேரத்தில் ஆறுதலாகக் காணுவேன்” என்று கூறிவிட்டு, பின் திடீரென, “எங்கள் முனிசிப்பல் விளையாட்டுச் சங்கத்தின் வருடாந்த நடன விருந்து சீக்கிரம் நடைபெறும். கட்டாயம் நீங்கள் அதற்கு வர வேண்டும். நான் தான் சங்கத்தின் காரியதரிசி!” என்றாள்.

பத்மா, “பார்ப்போம் வசதியிருந்தால் வருகிறேன்.” என்று கூற, கமலநாதன் அவள் கரங்களை மீண்டும் ஒரு தடவை குலுக்கிவிட்டுத் தனது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டான்.

மோட்டார் சைக்கில் பேரிரைச்சலுடன் காற்றைக் கிழித்துச் செல்ல, பத்மா கமலநாதனின் பின்னழகைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றாள். சைக்கிளின் வெறுமையான பின்னாசனம் அவள் கவனத்தை ஈர்த்தது. சின்ன வயதிலிருந்து மோட்டார் சைக்கிளின் பின்னாசனத்தில் தன் காதலனோடு வீதியில் பவனி வர வேண்டுமென்று அவன் கண்டு வந்த ஆசைக் கனவு ஒரு கணம் உயிர்த்தெழுந்தது அப்போது.

இவை நடந்து இரண்டு மூன்று தினங்கள் கழித்து, பத்மாவும் ஸ்ரீதரும் பலகலைக் கழகத்தில் சந்தித்த ‘எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரு’க்கு ஐஸ்கிறீம் அருந்தச் சென்ற பொழுது அங்கே சுரேசும் எதிர்ப்பட, எல்லோரும் ஐஸ்கிறீம் அருந்த ஒரு மேசையில் உட்கார்ந்தார்கள். மணவாள சுந்தரேஸ்வரருக்குப் பத்மா செய்துகொண்ட நேர்த்திக் கடன் பற்றிப் பேச்சு எழும்பியது.

“இன்று மாலை நான் எப்படியும் சுந்தரேஸ்வரர் கோவிலுக்குப் போக வேண்டும். நேர்த்திக் கடனை முடிக்க வேண்டும். ஸ்ரீதர், நீங்களும் என்னுடன் வரவேண்டும், தெரிந்ததா? என்றாள் பத்மா.

சுரேஷ் கேலியாக, “காரியந்தான் முடிந்து விட்டதே. சுந்தரேஸ்வரர் நீ கோரிய வெற்றியைத் தந்துவிடார். இனியேன் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? பேசாது எங்கள் அலுவலைப் பார்க்க வேண்டியது தானே?” என்றான்.

பத்மா முகத்தைச் சுளித்துக் கொண்டு, “நன்றாயிருக்கிறது உங்கள் பேச்சு! கடவுளைக் கூட ஏமாற்றப் பார்க்கிறீர்களே? வைத்த நேர்த்திக் கடனை செய்யாது விட்டால், அதனால் பல விபரீதங்கள் ஏற்படும். தெரிந்ததா?” என்றாள்.

சுரேஷ் சிரித்துக் கொண்டு “கடவுளை ஏமாற்றிய இடையன் மனைவியின் கதை உங்களுக்குத் தெரியாதா? அவள் மிகவும் புத்திசாலி என்பதே என் கருத்து.” என்றான்.

பத்மா, “அப்படி ஒரு கதை இருக்கிறதா? சரிதான். அப்படியானால் அந்தப் புத்திசாலியின் கதையைச் சொல்லுங்கள் கேட்போம்!” என்றாள். ஸ்ரீதரும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்க ஆரம்பித்தான். சுரேசுக்கோ கதை சொல்வதில் ஆசை. அவர்களுக்கோ கேட்பதில் ஆசை. கதை படலம் ஆரம்பமாயிற்று.

“ஓர் இடையன் நோய்வாய்ப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தான். இடையன் மனைவி பக்கத்திலிருந்து பணிவிடை செய்து கொண்டிருந்தான். திடீரென அவள் கடவுளுக்கு ஒரு நேர்த்திக் கடன் வைத்தாள். ‘கடவுளே!! வைரவரே! என் கணவரைக் காப்பாற்று. காப்பாற்றினால், எங்களிடமுள்ள நூறு ஆடுகளையும் உனக்குப் பலி அளிப்பேன்,” என்றாள். அதைக் கேட்ட இடையன் “பைத்தியக்காரி. எங்களிடமுள்ளதே நூறு ஆடுகள். அவை யாவற்றையும் வைரவருக்குக் கொடுத்துவிட்டால் நாங்கள் சீவிப்பது எப்படி?” என்று கேட்டான். உடனே இடையன் மனைவி இடையன் காதுள் குனிந்து ‘எனக்குப் பைத்தியமில்லை. அது நான் சும்மா சொன்னனான். எதையாவது சொல்லி உங்களைச் சுகமாக்க வேண்டுமென்பதற்காக என்றாளாம்!”

பத்மாவும் ஸ்ரீதரும் சிரித்தார்கள். “சுரேசுக்கு ஆண்டவன் மீது என்ன கோபம்? எந்த நேரமும் கிண்டல் செய்கிறார்” என்றாள் பத்மா. அதன் பின் சுந்தரேஸ்வரர் செய்த உதவிக்குக் கைம்மாறாகப் பத்மாவும் ஸ்ரீதரும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிப் பேச்செழுந்தது.

ஸ்ரீதர், “அம்மனுக்குப் பத்மாவும் நானும் ஒரு தங்கப் பதக்கம் வாங்கி அளிக்கப் போகிறோம். எல்லோருமாகச் செட்டியார் தெருவுக்குப் போய் ஒரு பதக்கம் வாங்குவோம் வருகிறீர்களா?” என்றான்.

வழியில் காரிலே ஸ்ரீதர் தனது அன்றைய வேலைத் திட்டத்தைப் பற்றிப் பத்மாவிடம் விவரித்தான். “சுந்தரேஸ்வரர் கோவிலில் ஐயர் தொடக்கம் கோவில் மேளம் வரை எல்லோரும் என்னை நன்கு அறிந்தவர்கள். ஆகவே இன்று உன்னோடு ஜோடியாக நான் அங்கு செல்ல விரும்பவில்லை. நீ இரவு ஆறு மணியளவில் அங்கு வந்து காணிக்கையை ஐயரிடம் கொடுத்துப் பூசையை முடித்துக் கொண்டு மெல்லச் சண்டேசுரர் சந்நிதிக்கு வா. அங்கே நாம் சந்தித்துக் கொள்வோம். அப்புறம் நான் அங்கிருந்து உன்னை வீட்டுக்குக் கொண்டு போய் விடுகிறேன்.” என்றான். பத்மா “ஆகட்டும்” என்று தலையை அசைத்தாள். ஆனால் சண்டேசுரர் சந்நிதி என்றால் என்ன என்பது பத்மாவுக்கு விளங்க வில்லை. கொழும்பிலே பிறந்து வளர்ந்த அவள் கோயிலுக்கு இடையிடையே போய் வந்த போதிலும், முறையாக இந்து மதப் பயிற்சியைப் பெறாதிருந்ததே இதற்குக் காரணம். “சண்டேசுரர் சந்நிதியா, அது எங்கே?” என்றாள் பத்மா. ஸ்ரீதர் திடுக்கிட்டு விட்டான். “என்ன, இது கூடத் தெரியாதா? ஓர் இந்துப் பெண்ணுக்கு இது வெட்கமில்லையா?” என்றான் ஆச்சரியத்துடன்.

பின்னர் சண்டேசுரரைப் பற்றி விவரமாகச் சொல்ல ஆரம்பித்தான் அவன். “கோவிலிலே கடைசியாக நாம் கும்பிட வேண்டிய மூர்த்தி சண்டேசுர மூர்த்திதான். இவர் பொதுவாகக் கோவிலின் மூல ஸ்தானத்துக்குப் பின்னே இருப்பார். இன்னும் அவரைக் கும்பிடுவதற்குக் கூடத் தனி முறை இருக்கிறது. அவர் எப்பொழுதும் யோக நித்திரையிலிருப்பதால் அவரை விழித்தெழச் செய்த பின்பே நாம் அவரைக் கும்பிட வேண்டும். அவரை விழிக்கச் செய்ய என்ன செய்ய வேண்டுமென்று தெரியுமா?” என்று பத்மாவை வினவினான்.

தனக்குத் தெரியாது என்று பதிலளித்தாள் அவள். “மூன்று முறை சண்டேசுரர் காதுக்குச் சமீபமாக கை தட்ட வேண்டும்” என்றான் ஸ்ரீதர். அதன் பின் “எங்கள் அம்மாவுக்கு இதெல்லாம் நன்றாய் தெரியும். எனக்கு அம்மாதான் இவற்றைச் சொல்லிக் கொடுத்தார். யாழ்ப்பாணத்துக்கு வரும்போது நீ இவற்றை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும், பத்மா” என்றான் ஆர்வத்துடன்.

பத்மா “கட்டாயம் நான் இவற்றைக் கற்றுக் கொள்வேன்” என்றாள்.

சுரேஷோ அவர்களின் பேச்சைப் பின்னாசனத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தான். “யாழ்ப்பாணப் பெண்கள் வேறெந்தப் பரீட்சையில் சித்தி எய்தினாலும் எய்தாவிட்டாலும் இப்படிப்பட்ட விஷயங்களில் பரீட்சை வைத்தால், நிச்சயம் சித்தி அடையவே செய்வார்கள்” என்றான் அவன். “என்னைப் பொறுத்த வரையில் சண்டேசுரரின் யோக நித்திரையைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான் சிறுவனாயிருந்த போது சண்டேசுரரின் காதுகளில் நானும் கை தட்டி இருக்கிறேன். அவருக்குக் காது மந்தமென்றும் சற்றுப் பலமாக கை தட்டினால்தான் அவர் கண்ணை விழித்துப் பார்ப்பாரென்றும் மற்றப் பிள்ளைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்றும் கூறினான் அவன். சுரேசுக்கு எவ்வளவு உலக விஷயங்களும் இலக்கிய விஷயங்களும் தெரிந்திருந்தாலும் கோவில் சம்பந்தமான விஷயங்களில் ஸ்ரீதருக்கு இருந்த அறிவு அவனுக்கில்லை. எந்தப் பக்கத்தைப் பார்த்துக் கும்பிட வேண்டும், எந்தத் தெய்வத்தை முதலில் கும்பிட வேண்டும், எவரை அடுத்தபடி கும்பிட வேண்டுமென்பது போன்ற பிரச்சினைகளை அவன் விடுவிப்பது போல் சுரேஷால் இலகுவில் விடுவிக்க முடியாது. ஸ்ரீதர் கோவிற் சொந்தக்காரனல்லவா, ஆகவே சண்டேசுரரைப் பற்றித் தனக்கிருந்த ஐயங்கள் சிலவற்றை ஸ்ரீதரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினான் சுரேஷ்.

“சண்டேசுரர் யார்? ஒரு தெய்வமா? அப்படியானால் சிவ பெருமானுக்கு என்ன முறை? அதாவது உமை மனைவி, குமரக் கடவுள் மகன், விஷ்ணு மைத்துனன் என்பது போல!” இப்படிச் சில முக்கியமான கேள்விகளைத் தூக்கிப் போட்டான் சுரேஷ். ஸ்ரீதர் அவற்றுக்கெல்லாம் டக் டக் என்று பதிலளித்து வந்ததைக் கண்டு பத்மா பெரிது வியப்படைந்தாள். பார்க்கப் போனால் “சுரேஷ் எவ்வளவுதான் பெரிய ‘புரொபசர்’ போலப் பேசிக் கொண்டாலும், ஸ்ரீதரும் அவனுக்குக் குறைந்தவனல்ல” என்று மகிழ்ச்சியடைந்தாள் அவள்.

“சண்டேசுரர் ஒரு தெய்வமல்ல. அவர் ஒரு நாயனார். அவரது பக்தியை மெச்சிப் பரம சிவன் அவரைத் தொண்டர் நாயகனக நியமனம் செய்திருக்கிறார். உண்மையில் சிவ பெருமானுக்கும் உமா தேவிக்கும் அளிக்கும் பொருள்கள் யாவும் முடிவில் சண்டேசுரருக்கே உரியன” என்று விளக்கினான் ஸ்ரீதர். இந்த ருசிகரமான தகவல்களைக் கேட்கக் கேட்கத் தானும் புராணங்களைப் படித்தும் பெரியவர்களுடன் பேசியும் இவ்விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள் பத்மா.

இதற்கிடையில் செட்டியார் தெரு வந்து விடவே, பத்மாவும் ஸ்ரீதரும் அங்கே இருந்த ஒரு நகைக் கடைக்குப் போய் அன்று மாலை அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதற்காக ஒரு தங்கப் பதக்கத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். பத்மா அதனை வீட்டுக் எடுத்துச் சென்று, ஐந்தரை மணியளவில் கோவிலுக்கு வரும் போது, அதனை இதர நைவேத்தியப் பொருள்களுடன் எடுத்து வர வேண்டுமென்பது ஸ்ரீதரின் ஏற்பாடு.

11-ம் அத்தியாயம்: சுந்தரேஸ்வரர் சந்நிதியில் (தொடர்ச்சி)

அன்று மாலை கோவிலுக்குப் போவதற்காக ஸ்ரீதர் குளித்து முழுகிச் சந்தனப் பொட்டிட்டு அதற்கு மேல் ஒரு குங்குமப் பொட்டுமிட்டுக் கொண்டிருந்த போது, அறையுள் அழைத்து சுரேஷ் ஸ்ரீதரின் பக்திக் கோலத்தைக் கண்டு “அடி சக்கை! கோவிலுக்கு ‘ரெடி’யாகிறாய் போலிருக்கிறது! நல்ல வேஷப் பொருத்தம். அசல் பக்தனாகக் காட்சியளிக்கிறாய்” என்றான்.

அதற்கு ஸ்ரீதர், “சுரேஷ்! நீயும் வா! ஏதாவது சிரிப்பாய்ப் பேசிக் கொண்டிருப்பாயல்லவா! நீயிருந்தால் நேரம் போவதே தெரியாது. புறப்படு. ஆனால் குளிக்காமல் வரக் கூடாது.” என்றான்.

சுரேஷ், “ஓகோ கோவிலுக்கு எப்படிப் போக வேண்டுமென்று எனக்குச் சொல்லிக் கொடுக்கிறாய் போலிருக்கிறது. நீ வர வரப் பெரிய ஆளாகி வருகிறாய்!” என்றாள்.

ஸ்ரீதர், “ஆம் கோவிலுக்கு எப்படிப் போக வேண்டுமென்பது சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயம் தானே! இதெல்லாம் எனக்கு மனப்பாடம். சின்ன வயதில் எங்கள் வீட்டுப் பண்டிதர் சின்னையா பாரதியார் எனக்கு ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையைப் படிப்பித்து வைத்தார். அதில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா?” என்றாள்.

“சொல்லு!” என்றான் சுரேஷ்.

“ஸ்நானம் செய்து, தோய்த்துலர்ந்து வஸ்திரம் தரித்து, சந்தியா வந்தனம் முதலியன முடித்துக் கொண்டு, தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, கர்ப்பூரம், முதலியன வைக்கப்பட்ட பாத்திரத்தைத் தாமே எடுத்துக் கொண்டேனும் சுரேஷைக் கொண்டேனும் வாகனாதிகளின்றி நடந்து போதல் வேண்டும்.”

“சுரேஷ் என்று சொல்லாதே. பத்மா என்று சொல்லு!”

நண்பர்கள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள். ஸ்ரீதர் திடீரென சுரேஷை நோக்கி “அது சரி. உன்னிடம் நானொன்று கேட்க விரும்புகிறேன். பத்மாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.

“நான் என்ன நினைப்பது? அது தான் அதிகார் அம்பலவாணர் உட்படப் பென்னாம் பெரிய மனுஷர்களே தீர்மானித்து விட்டார்களே, பத்மா பேரழகி என்று!” என்றான் சுரேஷ்.

“நான் அதைக் கேட்கவில்லை. அவள் அழகு கிடக்கட்டும். மற்ற விஷயங்களில்?”

“பத்மா புத்திசாலி, படித்திருக்கிறாள். உன்னைப் போலவே கடவுளிலும் பக்தி! எப்போதும் உற்சாகமாயிருக்கிறாள். உனக்கேற்ற ஜோடிதான் பத்மா. சந்தேகமேயில்லை.”

“அப்படிச் சொல்லு. அதைத் தான் நான் கேட்டேன்.” இவ்வாறு சொல்லிக் கொண்டு பெரிய சரிகைக் கரை விட்ட வேட்டியை எடுத்து உடுக்க ஆரம்பித்தான் ஸ்ரீதர். சுரேஷ் அவனைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு “வேஷம் நன்றாக இருக்கிறது. அசல் பணக்காரப் பக்தன். பார்க்கப் போனால் வாழ்க்கையே ஒரு நாடகந்தானே? வேஷம் போடுவதே எல்லோர் வேலையுமாயிருக்கிறது” என்றான்.

“ஏன் அப்படிச் சொல்லுகிறாய்!” என்றான் ஸ்ரீதர்.

“ஏனா? உண்மையைச் சொன்னேன். இப்போது கோவிலுக்குப் புறப்படுகிறாய். அதனால் பக்தன் வேஷம். காலையில் பள்ளிக் கூடம் சென்றாய் – மாணவ வேஷத்தில்! சிறிது சுகமிலாவிட்டால் தொள தொளப்பாக உடுத்திக் கொண்டு நோயாளி வேஷம் போடுகிறோம். கல்யாணத்தன்று மாப்பிள்ளை வேஷம். அடுத்த வாரம் நான் இங்கிலாந்துக்குப் புறப்படுகிறேன் – பிரயாணி வேஷம் போட்டுக் கொண்டு. இப்படி நேரத்துக்கும் இடத்துக்கும் தக்கபடி உடைகளை மாற்றிக் கொண்டிருப்பது தானே எல்லோர் வேலையுமாயிருக்கிறது! இப்பொழுது உன்னுடைய மேக்கப்பையே பாரேன் . நெற்றியில் சந்தனம், குங்குமம் – எல்லாம் வேஷம் தானே? இன்னும் வாத்தியார், வாத்தியார் வேஷம் போடுகிறார். கிளார்க், கிளார்க் வேஷம் போடுகிறான். போலீஸ்காரன், போலீஸ்காரன் வேஷம் போடுகிறான். ஆகவே வேஷம் போடுவது நாடகத்துக்கோ சினிமாவுக்கோதான் என்று நினைத்து விடாதே. சாதாரண வாழ்க்கையே வேஷங்களால் தான் நடைபெறுகிறது. ஏன் அதிகார் அம்பலவாணரைப் பாரேன்! தலைப்பாகையும் ஆளுமாகப் பார்த்தவர் பயந்து மரியாதை செய்யும்படியாக ஒரு வேஷம்!” என்று ஒரு குட்டிப் பிரசங்கமே பண்ணிவிட்டான் சுரேஷ்.

“அது சரி, என்னைப் பார்த்தால் பணக்காரப் பக்தன் போலிருக்கிறது என்றாய். பிச்சைக்காரப் பக்தன் எப்படியிருப்பான்?” என்றான் ஸ்ரீதர்.

“அவனுக்கேது உன் போல் பல நூறு ரூபா பெறுமதியான பட்டு வேட்டி, வைர மோதிரம்! இவற்றுடன் உன்னைப் பார்த்தால் பளிச்சென்று பணக்காரனென்ற நினைவு வரத்தானே செய்கிறது? இன்னும் ஒன்றை யோசித்தாயா? நீ சாதாரணமாக அணியும் காற்சட்டை சேர்ட்டை விட இந்தப் பட்டு வேட்டியும் சாங்கையும் அதிக விலையல்லவா? பார்க்கப் போனால் பணக்காரர்கள் கோவிலுக்குப் போகும்போது, தமது மத நூல்களில் கூறியுள்ளதற்கு மாறாக மிக்க படாடோபமாக அல்லவா உடுத்தி செல்லுகிறார்கள்?” என்றான்.

ஸ்ரீதர் தன் தலைமயிரை மீண்டும் மீண்டும் அழகாக வாரி விட்ட வண்ணமே சுரேஷின் பேச்சை ‘உம்’ கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“இன்றைய உலகில் கோவில் கூடப் பணக்காரருக்குத்தான். அர்ச்சனைக்குக் கூட டிக்கெட் எடுக்க வேண்டும். அதிலும் ‘கிரேட்’ இருக்கிறது. ஒரு ரூபாவுக்கும் பூசை செய்யலாம். ஒன்பது ரூபாவுக்கும் செய்யலாம். அதிக காசு செலவழிப்பவனுக்குக் கடவுள் அதிகக் கருணை காட்டுவாரோ என்னவோ? இன்னும் காலையிலிருந்து மாலை வரை தொழிலும் வீட்டு வேலையுமாக இருக்கும் ஒருவன், அவற்றை விடுத்துக் கோவிலுக்குப் போய் வரும் போது, அவனுக்குப் பண நஷ்டம் ஏற்படுவதோடு, பஸ் செலவு முதலியனவும் உண்டு. ஆகவே பக்திக்குக் கூடப் பணம் தேவை!”

“சுரேஷ், நீ இதில் பிழை விடுகிறாய். பணக்காரன் ஐம்பது ரூபாவுக்குப் பூசை செய்தால் ஏழை ஐம்பது சதத்திலேயே அதை முடிக்கலாம். கடவுள் இருவருக்கும் ஒரே விதமாகத்தான் அருள் செய்வார் என்று அம்மா சொல்லுவாள். சின்னையா பாரதியார் கூட அப்படித்தான் சொல்லுவார். கடவுளுக்கு வேண்டியது காசல்ல, பூவல்ல, நைவேத்தியமுமல்ல. உனக்குத் தெரியுமா சுவாமி விபுலானந்தரின் “வெள்ளை நிறப் பூ” என்ற பாட்டு”

“தெரியாது, சொல்லு…”
“வெள்ளை நிறப் பூவுமல்ல
வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது!
– இப்படிப் பாடியிருக்கிறார் அவர்”

“கருத்தை நான் ஏற்றால் என்ன, ஏற்காவிட்டால் என்ன, இது அழகான பாட்டு. நானும் அதைப் பாடம் பண்ணிக் கொள்ள விரும்புகிறேன்.”

சுரேஷின் இவ்வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த ஸ்ரீதர், “சுரேஷ் நீ என்னை விட்டு இங்கிலாந்துக்குப் போகப் போகிறாய். நீ பக்கத்திலில்லாமல் நான் என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை” என்றான்.

“உனக்குத்தான் இப்பொழுது பத்மா இருக்கிறாளே! அவளைச் சீக்கிரம் கல்யாணம் செய்து ‘கிஷ்கிந்தா’வில் இதே அறையில் குடியேற்றி விடு. அப்பொழுது அறையும் இப்படியிருக்காது. மிகவும் அழகாய் வைத்திருப்பாள். மேலும் இப்பொழுது ‘கிஷ்கிந்தா’ தன் பெயருக்கேற்ற படி பிரமச்சாரிக் குரங்குகளின் வீடாகத்தானே இருக்கிறது? நான் அனுமான், நீ சுக்கிரீவன்! வேலைக்காரர்கள் வானரங்கள்! உங்க அப்பா பொருத்தமாகத்தான் வானரங்களின் ஊர்ப் பெயரை இவ்வீட்டுக்கு வைத்திருக்கிறார். ஆனால் பத்மா வந்ததும் இந்த வீடு கிஷ்கிந்தாவாக இருக்காது. அயோத்தியாவாக மாறிவிடும். இராமன் இருக்குமிடம் ‘அயோத்தியா’ என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இராமன் இருக்குமிடம் அயோத்தியாவல்ல. சீதையோடு அவனிருக்குமிடம் தான் அயோத்தியா! ஸ்ரீதர், ஓர் ஆச்சரியமான விஷயத்தைப் பார்த்தாயா, உனக்கும் பத்மாவுக்கும் இருக்கும் பெயர் பொருத்தம். ஸ்ரீதர் என்றால் விஷ்ணு, பத்மா என்றால் இலட்சுமி! விஷ்ணு, இலட்சுமி ஆகியவர்களின் மானிட உருவங்கள் தானே இராமரும் சீதையும்! அவர்களின் வீட்டுக்கு ‘அயோத்தியா’ என்பது தான் பொருத்தமான பெயர். பெயரை மாற்றி விடு.”

“பெயரை மாற்றுவது கூடாது. அப்பாவுக்கு அது பிடிக்குமோ என்னவோ? உனக்குத் தெரியுமா. சிலருக்கு இராமனை விட அனுமானில் தான் மதிப்பு அதிகம். அப்பாவுக்கும் அப்படியிருக்கலாம். ஆகவே ஒரு புதிய விட்டைக் கட்டி அதற்கு ‘அயோத்தியா’ என்று பெயர் வைத்து விட்டால் போகிறது. பத்மாவும் நானும் அங்கே வசிப்போம். நீ இங்கிலாந்திலிருந்து வந்ததும் நேரே அங்கு வந்து எங்களைக் காண்.’

ஸ்ரீதர் இவ்வாறு பேசி முடிப்பதற்கும் உடைகள் முழுவதையும் உடுத்தி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. அவன் சுரேஷின் முன்னால் கம்பீரமாகத் திரும்பி நின்று கொண்டு “சுரேஷ், என்னைப் பார், பக்தன் வேஷம் நன்றாயிருக்கிறதா? நான் அழகாயிருக்கிறேனா?” என்று கேட்டான்.

“பக்தன் வேஷமா? நான் வேடிக்கைக்காக அல்லவா பக்த வேஷம் என்று சொன்னேன். உண்மையில் நீ மாப்பிள்ளை போலல்லவா இருக்கிறாய்? ஆனால் உன் அழகைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். பத்மாவிடம் கேள்” என்றான் சுரேஷ்.

“பத்மாவிடம் கேட்பதா? என்னைப் போல் அழகானவன் உலகிலேயே இல்லையென்று என்னிடம் ஆயிரம் தடவை சொல்லி விட்டாள்!” என்று பெருமையாக முகத்தை நிமிர்த்திச் சொன்னான் ஸ்ரீதர்.

“அப்படியா? அப்படியானால் அனுமானாகிய நீ கிஷ்கிந்தாவின் இந்தச் சுக்கிரீவனை விட அழகென்கிறாய்! சரி. இருந்து விட்டுப் போகட்டும்” என்றான் சுரேஷ்.

“இல்லை நீயும் அழகுதான்” என்றான் ஸ்ரீதர், சுரேஷைத் தேற்றுவதற்காக. சுரேஷ் சிரித்தான். ஸ்ரீதரை அவன் தன் நண்பனாகக் கருதிய போதிலும் ஏனோ அவனை ஒரு குழந்தையாகக் கருதுவதையும் அவனால் விட்டு விட முடிவதில்லை.

“சரி நேரமாகிறது போ. பத்மா உனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர் சுந்தரேஸ்வரர் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்த போது அங்கே பத்மா கோபுர வாசலில் ஒரு பித்தளைத் தட்டில் தேங்காய், வாழைப்பழம், புஷ்பம் முதலியவற்றை ஏந்திய தட்டுடன் நின்று கொண்டிருந்தாள். நெற்றியில் குங்குமப் பொட்டுடன் தனியே ஒரு மல்லிகை மலர் போல், அவள் அங்கே நின்று கொண்டிருந்த காட்சி அவனை அப்படியே மெய் மறக்கச் செய்துவிட்டது! வெள்ளை நிறச் சேலையுடுத்தித் தூய்மையின் மறு உருவமாகக் காட்சியளித்த பத்மா அவன் மனதில் அப்பொழுது தான் காதலிக்கும் ஒரு பெண்ணாகத் தோன்றவில்லை. வணங்குதற்குரிய தெய்வத் திருமகள் ஒருத்தி தனக்கு அருள் புரிவதற்காக அங்கே நின்று கொண்டிருப்பது போன்ற மயக்கம் ஏற்பட்டது அவனுக்கு. அவளது வெள்ளைப் பாதங்களைத் தொட்டு வணங்கலாம் போலிருந்தது. அந்த நினைவின் உந்தலிலே அவன் கண்கள் பாதங்களிற் சஞ்சரித்த போது, அவற்றை அழகிய வெள்ளிப் பாதசரங்கள் அவள் தரித்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தான் அவன். பத்மாவுக்கு எத்தகைய அழகுணர்ச்சி என்று வியப்படைந்தான். பாதசரங்களை அவள் எங்கே வாங்கினாள் என்று கேட்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

நீச்சலுடை மோகினியாகத் தெரியப்பட்ட அவள் உண்மையில் நீச்சலுடையிலும் பார்க்க இந்த உடையில் அல்லவா மிகவும் அழகாயிருக்கிறாள் என்று எண்ணினான் அவன். நீச்சலுடையில், தெரியும் மலைப் பாம்பு போன்ற ஒரு மிருக அழகு அவளிடம் காணப்பட்டது. விஷம் தோய்ந்த அவ்வழகு அவளை ஒரு விளையாட்டுப் பொம்மை போலத் தோன்ற செய்ததல்லாமல், புனிதமான பூப்போலத் தோன்றும் படி செய்யவில்லை. இப்பொழுதோ அவள் தலையிலணியத்தக்க ஒரு மலர் போலக் காட்சியளிக்கிறாள். அவள் பார்வையிலும் உடலிலுமிருந்து விஷம் பிரவகிக்க வில்லை. அமிர்தம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.

என்றாலும் பத்மா மீது அவனுக்கு ஒரு கோபமும் ஏற்படச் செய்தது. அவள் வெள்ளை உடுத்திருந்ததே, அதற்குக் காரணம், கன்னிப் பெண்களும், சுமங்கலிகளும் வெள்ளை கறுப்புச் சேலைகளை அணியக் கூடாது என்பது சிவநேசரின் கொள்கை. உண்மையில் அவள் தாயார் ஒரு போதும் வெள்ளை உடுத்தி அவன் கண்டதேயில்லை. வெள்ளை விதவைகளுக்கும் கருமை சோகத்துக்கும் உரியது என்ற கொள்கை அவர்கள் வீட்டில் என்றும் நிலை பெற்றிருந்த ஒன்றாகும். ஆனால் “பாவம், பத்மாவுக்கு இவை ஒன்றும் தெரியாது. அவளுக்கு இவற்றைச் சொல்லித் தர யார் இருக்கிறார்கள்? தருணம் வரும்போது நான்தான் இவற்றை அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்!” என்று தனக்குள் தானே கூறிக் கொண்டான் அவன்.

இக் கருத்தை ஸ்ரீதர் சுரேஷிடம் கூறியிருந்தால், அவன் என்ன சொல்லியிருப்பான்? “ஓகோ மூட நம்பிக்கைகளில் பத்மாவுக்கு ஒரு ‘கோர்ஸ்’ கொடுக்கப் போகிறாயா என்ன?” என்று கேட்டிருப்பானல்லவா? ஒருவருக்கு அவசியமான அறிவாகப்படுவது இன்னொருவனுக்கு மூட நம்பிக்கையாகத் தெரியும் விசித்திரத்தை எண்ணி ஸ்ரீதர் தனக்குள் தானே சிரித்துக் கொண்டான்.

ஸ்ரீதர் கோபுர வாசலில் பத்மாவிடம் அதிகம் பேச விரும்ப வில்லை. கோவிலிலிருந்த கணக்கப்பிள்ளை, தவசிப்பிள்ளை தொடக்கம் ஐயர் குடும்பம் – எல்லோரும் அவனை நன்கறிந்தவர்களாயிருந்ததே இதற்குக் காரணம். ஆகவே சற்று எட்ட நின்ற படியே “பத்மா, போய்ப் பூசையை முடித்துக் கொண்டு நான் சொன்னது போல் சண்டேசுரர் சந்நிதிக்கு வா” என்று கூறிவிட்டுத் தான் தனியாகக் கோவிலுக்குள் சென்றான் அவன். பத்மாவும் தனியே மறு பக்கம் திரும்பிக் கொண்டு நடந்தாள். ஸ்ரீதர் அவளை ஒரு தரம் பார்த்துப் புன்னகை பரிமாறிக் கொள்ள விரும்பி, அவள் முகத்தை நோக்கினான். ஆனால் அவளோ தான் தன் முழு ஜன்மத்திலேயும் ஸ்ரீதரைக் கண்டது கூட இல்லை என்பது போல் வேண்டுமென்றே அலட்சியமாக வேறு புறமாகப் பார்த்து நடந்தாள். அவளது இக்குறும்பு ஸ்ரீதரின் உள்ளத்தைக் கிளுகிளுக்க வைத்தது!

சுந்தரேஸ்வரர் சந்நிதியில் ஸ்ரீதருக்குத் தனிக் கெளரவம் காட்டினார் ஐயர். அவனைக் கண்டதும் முதலில் அவன் பெயரில் பூசை செய்து திருநீறு, தீர்த்தம் கொடுத்த பின்னரே மற்றவர்கள் பக்கம் திரும்பினார் அவர். பத்மா எல்லாவற்றையும் ஒன்றுமறியாதவள் போல் கவனித்துக் கொண்டு நின்றாள். ஸ்ரீதரைக் கண்ட கோவில் ஊழியர்கள் அவனுக்கு விலகி இடங் கொடுத்த விதத்திலிருந்தே அவனிடம் அவர்களுக்கு எவ்வளவு மதிப்பிருந்தது என்பதை அவள் கண்டு கொண்டாள்.

திருநீற்றை கொடுத்த ஐயர், ஸ்ரீதரிடம் மிக விநயமாக “அப்பா நேற்றுக் கடிதம் எழுதியிருந்தார். இவ்வருடம் முடிவதற்குள் தெற்குக் கோபுரத்தைக் கட்டி விடத் திட்டம் ஒன்று போட்டிருக்கிறார் அவர்” என்றார். “ஓ! அப்படியா? நல்ல செய்தி” என்றான் ஸ்ரீதர்.

பூசை முடிந்ததும் ஸ்ரீதர் அங்கிருந்து கிளம்பி, சண்டேசுரர் சந்நிதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் வாய் ‘கூற்றாயினவாறு’ என்ற தேவாரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. இடையிடையே கோவிலை அங்குமிங்கும் உற்றுப் பார்த்த அவன் “சீ, கோவிலை இன்னும் எவ்வளவு அழகாய் வைத்திருக்கலாம்? இனி நானும் இந்த விஷயங்களில் அக்கறை எடுக்க வேண்டும். அம்மா எத்தனை தரம் கோவில் வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்று எனக்குச் சொல்லியிருக்கிறாள்? சரி கல்யாணம் முடியட்டும். அதன் பிறகு கோவிலைச் சுத்தமாவும் அழகாகவும் வைக்கும் பொறுப்பை நிச்சயமாக நான் கவனிக்கத்தான் போகிறேன். பத்மாவிடம் அதை விட்டு விட்டால் எல்லாவற்றையும் நேர்த்தியாகப் பார்த்துக் கொள்வாள்” என்று தனக்குள் தானே கூறிக்கொண்டாள். இப்படி அவன் தேவாரம் பாடியும் சிந்தனைகளில் ஆழ்ந்தும் சென்று கொண்டிருந்த போது “தம்பி” என்று ஓர் அழுத்தமான குரல் பின்னாலிருந்து கேட்க “யாரது பழக்கமான குரல்?” என்று திரும்பிப் பார்த்தான் அவன்.

“ஓ! வேணுகோபாலா?”

ஆம். அங்கே நின்று கொண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் பிரபல நாதசுர வித்துவான் வேணுகோபால். ஸ்ரீதருக்கு சிறு வயதிலிருந்தே அறிமுகமானவன். வைரக் கடுக்கன் அணிந்து நெஞ்சில் தங்கச் சங்கிலியொடும் வாழைப்பூக் குடுமியோடும் விளங்கிய அவன் இசைக் கலையில் இணயற்றவன் என்று பெயரெடுத்திருந்தான். அதனால் சிவநேசருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவனுக்கு இருந்தது. செக்கச் செவேலென்ற சிவந்த உடலமைப்போடு விளங்கிய அவனுக்குச் சுமார் ஐம்பது வயதிருக்கும். அவனது ஆரோக்கியமான உடலமைப்பு காட்ட மறுத்த அவன் வயதை அவன் குடுமியில் தலையாட்டிக் கொண்டிருந்த வெள்ளை மயிர்கள்தான் ஓரளவு வெளிக்காட்டின. வேணுகோபால் ஸ்ரீதரைப் நெருங்கி “எங்களுக்கெல்லாம் உங்கள் வீட்டில் பெரிய விசேஷம் காத்திருக்கிறது சீக்கிரம்! இன்னும் நாள் வைக்கவில்லையா? எப்பொழுது வைக்க உத்தேசம்?” என்று கேட்டான். ஸ்ரீதருக்கு இக்கேள்வி ஒரு புதிராக இருந்தது. என்றாலும் சமாளித்துக் கொண்டு, “வேணு என்ன புதிர் போடுகிறாய்? ஒன்றும் விளங்க வில்லையே!” என்றான்.

“என்ன, தம்பியின் கல்யாணத்தைப் பற்றித்தான் பேசுகிறேன். அப்பாவைப் போன கிழமை கீரி மலையில் சக்கிடுத்தார் மடத்துக்குக் கிட்ட சிவன் கோவில் வீதியில் சந்தித்தேன். அப்பொழுதுதான் விஷயத்தைச் சொன்னார்” என்றான் வேணு கோபால்.

“என்ன விஷயம்? எனக்கொன்னும் தெரியாது வேணு. சொல்லு!”

“இல்லை. சக்கிடுத்தார் மடக்காரர் சுழிபுரம் கந்தப்பர் இருக்கிறாரல்லவா. அவரது மகளை உனக்கு முடிவு செய்திருக்கிறாராம். அம்பிக்கு இன்னும் அறிவிக்கவில்லையா?”

“இல்லையே”

“ஆனால் ஒன்று. உங்கள் வீட்டில் சம்பந்தம் செய்யும் அந்தஸ்து சுழிபுரம் கந்தப்பரைத் தவிர வேறு யாருக்கு இந்த இலங்கையில் இருக்கிறது? பணத்தைப் பொறுத்த வரையில் உங்கள் அப்பாவின் சொத்தில் பாதியாவது அவருக்கிருக்கிறது. உனது பாட்டனார் சேர். நமசிவாயமென்றால் பெண்ணின் பாட்டனார் கதிர்காமம் சேர் பாலசிங்கம். நீ இந்தக் கோவிலின் சொந்தக்காரனென்றால் கீரிமலை சக்கிடுத்தார் மடமும், கதிர்காமம் சேர் பாலசிங்கம் மடமும் அவர்களுக்கிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் நான் இரண்டு குடும்பத்துக்கும் சேவகம். இன்னொன்று நீ உங்கள் குடும்பத்துக்கு ஒரே வாரிசு. பெண் அவர்கள் குடும்பத்துக்கு ஒரே வாரிசு. அது மட்டுமல்ல, அவள் சீமை எல்லாம் சுற்றி டாக்டர் பட்டமும் பெற்று வந்திருக்கிறாள். போதாதா?” என்றான் வேணு கோபால்.

ஸ்ரீதர் பதிலொன்றும் பேசாமல் வேணுவை மேலும் பேசும்படி தூண்டிக் கொண்டிருந்தான்.

“இன்னும் தம்பிக்கு அப்பாவைத் தெரியும்தானே? இலங்கையில் கல்யாணம் செய்வதானால் கந்தப்பர் வீடொன்று தான் இருக்கிறதென்றும் இதை விட்டால் சேர் நமசிவாயத்தின் தம்பியார் செய்த மாதிரி, ஒரு வெள்ளைக்காரியைத்தான் தம்பி கல்யாணம் செய்ய வேண்டி வருமென்றும் அப்பா சொன்னார். மற்ற இடங்கள் எதுவுமே உங்கள் அந்தஸ்துக்குப் பொருத்தமில்லை என்பது அவர் முடிவு” என்று வேணு மேலும் பேசிக் கொண்டு போனான். ஸ்ரீதர் இப்பொழுது கதையை வேறு பக்கம் திருப்ப எண்ணி, “வேணு, கொழும்புக்கு ஏன் வந்தாய்? என்ன விசேஷம்?” என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை. நாளைக்கு வெள்ளவத்தை சிறாப்பர் ராசதுரை வீட்டில் கல்யாணம். அதற்கு வந்தேன். ஆனால் கொழும்புக்கு வருகிற நேரத்தில் எங்களுடைய கோவிலை விட, எனக்குத் தங்குவதற்கு இடமேது? அது தான் இங்கே வந்திருக்கிறேன்” என்றான் வேணு.

அவன் இவ்வாறு பேசிக் கொண்டு நிற்க, பத்மா சண்டேசுரர் சந்நிதியை நோக்கிச் செல்வது தெரியவே வேணுவிடம் விடை பெற்றுக் கொண்டு அந்தத் திசையை நோக்கிச் சென்றான் ஸ்ரீதர்.

அங்கே காதலர்கள் சண்டேசுரர் காதில் பலமாகக் கைகளால் தட்டி நமஸ்காரம் செய்து விட்டுத் தனித் தனியாகப் புறப்பட்டுக் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கிச் சென்றார்கள். பத்மா சண்டேசுரர் காதில் கைகளால் தட்டி வணங்கியது இதுவே முதல் தடவை. அது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. இன்னும் ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொண்டோமே என்ற திருப்தியும் அவளுக்கு ஏற்பட்டது.

கார் புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றதும் பத்மா ஸ்ரீதருடன் ஒட்டி உட்கார்ந்து கொண்டாள். “பதக்கத்தை அம்மனுக்குக் கொடுத்துவிட்டேன். இதோ ஐயர் கொடுத்த பூசைப் பொருள்கள். வாழைப்பழத்தில் பாதியைச் சாப்பிடுங்கள்” என்று கூறி வாழைப்பழத்தை உரித்து அவன் வாயண்டை பிடித்தாள். ஸ்ரீதர் வாழைப்பழத்தை முழுக்கச் சாப்பிடப் பார்த்தான். “முழுக்கச் சாப்பிட்டு விடாதீர்கள். எச்சில் துண்டு எனக்கு” என்று கூறிப் பாதியைத் தான் சாப்பிட்டாள் பத்மா.

அதன் பின் கன்னிப் பெண்களும், சுமங்கலிகளும் வெள்ளை, கறுப்பு துணிகளை உடுத்தக் கூடாது என்ற சிவ நேசரின் கருத்தைப் பத்மாவுக்கு எடுத்துக் கூறினான் ஸ்ரீதர்.

“அப்படியானால் பெளத்த பெண்கள் கோவிலுக்குப் போகும்போது வெள்ளைதானே உடுத்துகிறார்கள்?” என்றாள் பத்மா.

“அது அவர்கள் கலாசாரம். எங்கள் கலாசாரம் வேறு. அதை நீ எங்கம்மாவிடமிருந்து படித்துக் கொள்ள வேண்டும்” என்றான் ஸ்ரீதர்.

அதன் பின் நீண்ட நேரம் வரை அவன் பேசவில்லை. வேணு கூறிய விவரங்கள் அவன் மனதில் சலனத்தை ஏற்படுத்தியிருந்ததே அதற்குக் காரணம்.

பத்மாவோ தான் வெள்ளை உடுத்தியதுதான் ஸ்ரீதருக்கு கோபத்தை உண்டு பண்ணியிருக்கிறது. அதுதான் முகத்தை நீட்டிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணிக் கொண்டு பேசாமலிருந்தாள்.     

[தொடரும்]