வாசிப்பும், யோசிப்பும் 119: தமிழினியின் ‘அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்…’

தமிழினி ஜெயக்குமாரன்அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.நிகழ்வுகளை விபரிக்கின்றது தமிழினி ஜெயக்குமாரனின் கவிதை. யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் கவிதை. கவிதையின் ஆரம்பம் நன்றாக வந்திருக்கின்றது. கவிதையின் முதல் பகுதியே முழுக்கவிதையினதும் கூறு பொருளை நிர்ணயித்து விடுகிறது.

கவிதை

‘போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது’

என்று ஆரம்பமாகின்றது. அம்பகாமப்பெருங்காட்டில் யுத்தம் நடைபெறும் மழை பொழியும் இரவு. மழையை வானத்தாயின் அழுகையாக உவமையாக்கியிருக்கின்றார் கவிஞர்.  வானத்தாய் ஏன் அழுகின்றாள்? போருக்குத்தன் புதல்வர்களைத்தந்து விட்டதற்காகத்தான் அழுகின்றாள். யுத்தம் நடைபெறும் சமயம் கானகம் வெடியோசையால் அதிர்வுறுகின்றது. அவ்வதிர்வினால் ,மருண்ட யானைக்கூட்டங்கள் குடி பெயர்ந்தலைகின்றன. இடம் விட்டு இடம் மாறி நகரும் இருண்ட மேகங்களும் வெடியதிர்வுகளால் குடி பெயர்ந்தலையும் யானைக்கூட்டங்களாகக் கவிஞருக்குத்தென்படுகின்றன. இங்கு யானைக்கூட்டங்களின் இடப்பெயர்வினை வெறும் உவமையாகவும் கருதலாம். அத்துடன் உண்மையாகவே அவ்விதம் நடைபெறும் யுத்தத்தினால் யானைக்கூட்டங்கள் இடம் பெறுவதாகவும், அவ்விதமாக அவை இடம் பெயர்வதைப்போல் இடம் பெயரும் மேகக்கூட்டங்கள் உள்ளதாகவும் கவிஞர் கருதுவதாகவும் கருதலாம். மழை பொழியும் யுத்தம் நடக்கும் இருண்ட இரவு அச்சத்தினைத்தருவது. அந்த இரவானது அம்பகாமப்பெருங்காட்டில் நடைபெறும் யுத்தத்தின் கோரத்தை வெளிப்படுத்துவது. ஏற்கனவே அந்த இரவானது பகலை விழுங்கித்தீர்த்திருக்கின்றது. இருந்தும் அதன் பசி அடங்கவில்லை. யுத்தத்தின் பேரொலியானது பகலை விழுங்கித்தீர்த்த இரவின் கர்ஜனையாகப் பயமுறுத்துகிறது கவிஞரை. மேலும் ‘காதலுறச் செய்யும் / கானகத்தின் வனப்பை / கடைவாயில் செருகிய / வெற்றிலைக் குதப்பலாக / சப்பிக்கொண்டிருந்தது / ‘யுத்தம்.

கவிதையின் இந்த முதற் பகுதியினைப்படிக்கும்போதே சங்ககாலக்கவிதையொன்றின் தாக்கம் பலமாகவே இருப்பதை உணர முடிகின்றது. சங்கக்கவிதைகளில் இயற்கையாக மையமாக வைத்தே, ஐம்பெருந்திணைகளை மையமாக வைத்தே கவிதைகள் பின்னப்பட்டிருக்கும். அவ்விதமானதோர் உணர்வே மேற்படி கவிதையின் ஆரம்பப்பகுதியை வாசிக்கும்போதெழுகின்றது.  அம்பகாமப்பெருங்காட்டை மையமாக வைத்தே கவிதை பின்னப்பட்டிருக்கின்றது.

மேலும் தமிழினியின் மொழி அவரது எழுத்தாற்றலை வெளிப்படுத்துகிறது. மரபுக்கவிதையின் அம்சங்களான எதுகை, மோனை போன்றவற்றையும் சீர்களில் அளவாகப்பாவித்திருக்கின்றார். உதாரணத்துக்கு மோனைகளாக போருக்கு / புதல்வரை, தந்த / தாயாக, பகலை / பயங்கரமாயிருந்தது, பெருங்காட்டின் / போர்க்களத்தில் போன்றவற்றைக்குறிப்பிடலாம். எதுகைகளாக வெடியதிர்வுகளின் / குடி பெயர்ந்தலையும், இருண்ட / மருண்டு போன்றவற்றைக்குறிப்பிடலாம்.

இவையெல்லாம் சேர்ந்துதான் கவிதை வரிகளைக் கவித்துவமுள்ளவையாக மாற்றுகின்றன.

அடுத்துவரும் வரிகள் கவிதையின் முக்கியமான வரிகள். அவை:

மீளாப் பயணம் சென்ற தோழி
விடைபெறக் கை பற்றி
திணித்துச் சென்ற கடதாசி
செய்தி சொன்னது..
காலமாவதற்காக காத்திருக்கும்
அம்மாவின் ஆத்மா
கடைக் குட்டியவளின்
கையாலே ஒரு துளி
உயிர்த் தண்ணிக்காகத்
துடிக்கிறதாம்.

போராளியான தோழியோ போர்க்களத்தில் மீளாப்பயணம் சென்று விட்டாள். அதற்கு முன்னர் அவள் விடைபெறுகையில் தன் தோழியான கவிஞரிடம் கடிதமொன்றினைத்தந்து விட்டே செல்கின்றாள். மரணப்படுக்கையில் கிடக்கும் அவளது தோழியின் தாயாரைப்பற்றிய கடிதமது. அத்தாயின் கடைக்குட்டியான மீளாப்பயணம் சென்றுவிட்ட தோழியின் கையால் ஒரு துளித்தண்ணீருக்காகத்துடிக்கிறது அந்தத்தாயின் மனது. அதனைத்தான் விபரிக்கின்றது அந்தக்கடிதம். அந்தத்துளித்தண்ணீரைக் கவிஞர் ‘உயிர்த்தண்ணி’ என்று கூறுகின்றார். ஏனென்றால் உயிர் போகக்கிடக்கும் அந்தத்தாயின் உயிர் அதற்காகவே, அந்தத்துளித்தண்ணீருக்காகவே துடிப்பதால்.’உயிர்த்தண்ணி’யாகின்றது.

போருக்குத்தன் புதல்வியைத்தந்த அன்னை அவள். இவளைப்போன்ற அன்னையர் பலர். அவர்களைப்பற்றித்தான் கவிதை கூறப்போகின்றது என்பதற்காகவே போலும் ஆரம்பத்திலேயே கவிஞர் ‘போருக்குப் புதல்வரைத் தந்த / தாயாக வானம் /அழுது கொண்டேயிருந்தது’ என்று குறிப்பாகக்கூறினார்போலும். இவ்விதமாகக்கவிதையின் பிரதான கூறுபொருளினை ஆரம்பத்திலேயே குறிப்பாகக்கவிதை கூறி நிற்பதால் அதுவே கவிதையின் சிறப்புமிகு அம்சங்களிலொன்றாக ஆகிவிடுகின்றது.

அதற்குப்பின்னரான கவிதையின் பகுதிகள் கவிஞரின் தோழியின் இழப்பு ஏற்படுத்திய உணர்வுகளை, போர் பற்றிய கவிஞரின் விமர்சனத்தை எடுத்தியம்புகின்றன.

கவிஞர் கவிதைக்கு எந்தவிதத்தலைப்புமிட்டிருக்கவில்லை. ஆனால் கவிதை வரிகளிலொன்றான ‘அம்பகாமப் பெருங்காட்டின்
போர்க்களத்தில்…. ‘ என்பதையே கவிதையின் தலைப்பாகக்கூறலாமென்று எனக்குத்தோன்றுகிறது.

கவிதை: அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.

– தமிழினி ஜெயக்குமாரன் –

போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது.
வெடியதிர்வுகளின் பேரோசைகளால
குடி பெயர்ந்தலையும்’
யானைக் கூட்டங்களாக
இருண்ட முகில்களும் கூட
மருண்டு போய்க் கிடந்தன.
பகலை விழுங்கித் தீர்த்திருந்த
இரவின் கர்ஜனை
பயங்கரமாயிருந்தது
அம்பகாமப் பெருங்காட்டின்
போர்க்களத்தில்.

காதலுறச் செய்யும்
கானகத்தின் வனப்பை
கடைவாயில் செருகிய
வெற்றிலைக் குதப்பலாக
சப்பிக்கொண்டிருந்தது
யுத்தம்.

மீளாப் பயணம் சென்ற தோழி
விடைபெறக் கை பற்றி
திணித்துச் சென்ற கடதாசி
செய்தி சொன்னது..
காலமாவதற்காக காத்திருக்கும்
அம்மாவின் ஆத்மா
கடைக் குட்டியவளின்
கையாலே ஒரு துளி
உயிர்த் தண்ணிக்காகத்
துடிக்கிறதாம்.

எவருக்கும் தெரியாமல்
என்னிடத்தில் குமுறியவள்
விட்டுச் சென்ற
கண்ணீர்க் கடலின்
நெருப்பலைகளில்
நித்தமும்
கருகிக் கரைகிறது
நெஞ்சம்.

தனி மனித
உணர்ச்சிகளின் மீதேறி
எப்போதும்
உழுதபடியே செல்கின்றன
போரின்
நியாயச் சக்கரங்கள்.

அக்கணத்தில்
பிய்த்தெறியப்பட்டிருந்த
பச்சை மரங்களின்
இரத்த வீச்சத்தை
நுகர்ந்த வல்லுாறுகளின்
நீண்ட நாக்குகளில்
உமிழ்ந்து
பெருகுகிறது
வெற்றிப் பேராசை.

ngiri2704@rogers.com