தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)-12

- மார்க் ட்வைன் -என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் பன்னிரண்டு

முனைவர் ஆர்.தாரணிவிசித்திரமான முறையில் தோணி மெதுவாய் நகர்ந்தது கடைசியாக அந்தத் தீவைத்தாண்டும் வேளை நள்ளிரவு மணி ஒன்று இருக்கக்கூடும். ஏதேனும் படகு எதிரில் வந்தால் உடனடியாகத் தோணியிலிருந்து வெளியே நதிக்குள் குதித்துத் தப்பிப்பதுடன், முன்பு போட்டத் திட்டத்தின் படி இல்லினோய் கரையை அடைவதைக் கைவிடுவது என்று நாங்கள் தீர்மானித்துக் கொண்டோம். நல்ல வேளை! எந்தப் படகும் எதிரில் வரவில்லை. புறப்படும் அவசரத்தில் துப்பாக்கி, மீன்பிடிக்கும் வலை அல்லது சாப்பிட ஏதேனும் எடுத்து வைப்பதைப் பற்றி நாங்கள் இருவருமே சிந்திக்கவே இல்லை. எங்களுக்கு இருந்த பதற்றத்தில் அந்தப் பொருட்களைப் பற்றி யோசிக்கவே தோன்றவில்லை. உண்மையில் உயிர் தப்பிப் பிழைக்கும் போது எல்லாவற்றையும் எடுத்து தோணியில் திணிப்பது என்பது நல்லதொரு நியாயம் இல்லை.

அந்த மனிதர்கள் அங்கே சென்றால் நான் மூட்டி வைத்திருக்கும் அந்தத் தீயைக் காண்பார்கள் என்பது எனது கணிப்பு. இரவு முழுதும் அவர்கள் அங்கேயே அமர்ந்து, வெளியே சென்றிருக்கும் ஜிம் திரும்பி வரக் காத்திருக்கக் கூடும். நல்லது. காரணம் எதுவாகினும், அவர்கள் எங்களை விட்டு வெகு தொலைவில் இருப்பது நல்லதுதான். அவர்களை திசைதிருப்ப நான் மூட்டிய பொய்யான தீ அவர்களை முட்டாளாக்கவில்லை என்றாலும் நான் முயற்சியே செய்யவில்லை என்று யாரும் கூறமுடியாது அல்லவா! என்னால் என்ன செய்து அவர்களை முட்டாளாக்க முடியுமோ அதை நான் கண்டிப்பாகச் செய்தேன்.

அடிவானத்திலிருந்து சூரியனின் முதல்கதிர்கள் வெளியே நீண்டபோது, இல்லினோய் பகுதியில் நீண்டதொரு வளைவுடைய மிஸ்ஸிஸிசிப்பி நதியின் ஊடே அடர்ந்த பஞ்சுப்பொதி மரங்கள் சூழ்ந்த மணல் மேடு உடைய சிறு தீவில் எங்களின் தோணியைக் கட்டி வைத்தோம். பஞ்சுப்பொதி மரங்களின் கிளைகளை சிறிய கோடரி கொண்டு தறித்தெடுத்து, எங்களின் தோணி மீது முழுதும் வைத்து நன்கு மூடி நதிக்கரையில் உள்ள சிறிய குகை போலத் தோன்றுமாறு செய்தோம்.

நதியின் மிஸ்ஸோரி பகுதிக் கரை முழுதும் மலைகளும், இல்லினோய் பகுதி மொத்தமும் அடர்ந்த வனமும் என்ற வகையான அமைப்பு இயற்கையிலேயே அங்கே காணப்படும். மிஸ்ஸோரிக் கரையைச் சுற்றிவர அகன்ற வாய்க்கால் அங்கே உள்ளதால் எங்களை நோக்கி யாரேனும் வந்துவிடுவார்கள் என்ற பயமில்லாமல் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஓய்வாக அங்கே சாய்ந்து கொண்டு மிஸ்ஸோரி நதிக்கரையோரம் மிதக்கும் மரக்கலங்களையும், நீராவிப் படகுகளையும் முழு நாளும் பார்த்துக் கொண்டே இருந்தோம். இன்னும் சில நீராவிப்படகுகள் நதியின் மத்தியில் நீரின் விசையோடு போட்டியிட்டுக்கொண்டு இரைச்சலுடன் மெதுவாய் நகர முயற்சிப்பதையும் கண்டுகொண்டிருந்தோம்.

ஊரில் அந்த வீட்டில் நான் சந்தித்த பெண்மணி கூறிய அனைத்து விஷயங்களையும் ஜிம்மிடம் கூறினேன். அந்தப் பெண்மணி மிகுந்த அறிவாளியாக இருக்கக்கூடும் என்று ஜிம் கூறினான். அவள் மட்டும் நம்மைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுவாளேயானால், தீ மூட்டிய அடையாளம் என்றெல்லாம் நேரத்தை வீணடிக்காமல், அவள் நாயைப்பயன்படுத்தி காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிடுவாள் என்றான் ஜிம். இந்த யோசனையை ஏன் அவள் தன் கணவனிடம் கூறவில்லை என்று நான் கேட்டேன். அவள் ஒருவேளை கூறியிருக்கக் கூடும். அவள் கணவனும் நதியின் மேல்பகுதியில் உள்ள ஊருக்குத் திரும்பிச்சென்று நாய் ஏதேனும் கிடைக்குமா என்று பார்க்கக்கூடும் என்றான் ஜிம். அதனால்தான் நதியின் கீழ்க்கரையில் பதினாறு பதினேழு மைல் தொலைவில் உள்ள அந்த டோஹெட் பகுதிக்கு தப்பி வர முடிந்தது. இல்லாவிடில் அப்போதே பிடிபட்டிருப்போம் என்றான் ஜிம். என்ன காரணத்தினால் நாம் தப்பினோம் என்பது பிரச்னையல்ல, எப்படியோ தப்பிவிட்டோம் என்பதுதான் உண்மை என்று நான் உரைத்தேன்.

அந்தப் பகுதி முழுதும் இருள் கவிய ஆரம்பிக்கும் சமயம், பஞ்சுப்பொதி மரக்கூட்டங்களின் பின்னிருந்து நாங்கள் மெதுவாக எங்கள் தலையை வெளியே காட்ட முற்பட்டோம். எங்களைச்சுற்றிலும் நாங்கள் பார்த்தபோது எங்களுக்கு எதுவும் தென்படவில்லை. மரக்கலத்தில் இருந்த சில பலகைகளை எடுத்து நாங்கள் சௌகரியமாக இருக்கவும், மழை, குளிர் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படாமல் இருக்கவும், அதன் ஒரு பகுதியில் ஜிம் ஒரு குவிந்த கூரை போன்ற அமைப்பில் கட்டி வைத்தான். அதைத் தோணியின் மேற்பரப்புக்கு மேல் ஒரு அடி உயரம் இருக்கும்படியும் அமைத்தான். இவ்வாறு அமைத்ததால் அந்தப் பலகைகளும், தடுக்குகளும் நீராவிப்படகுகள் கடந்து செல்லும்போது ஏற்படும் அதிர்வினால் எழும்பும் நீர் அலைகளால் நனைந்து சேதம் ஆகாமல் இருக்கும். அந்த மரப்பலகைகளால் ஆன குடிலின் நடுவில் ஐந்து அல்லது ஆறு இன்ச் ஆழம் இருக்கும்படி ஒரு சிறிய மரச்சட்டம் நான்கு புறமும் அமைத்து அது முழுதும் சேற்றை பல படுகைகளாக நிறைத்து வைத்தோம். அங்கே, அதன் மேல் எங்களால் தீ மூட்ட முடியும் என்பதுடன் அந்தத் தீயை யாரும் பார்க்கவோ அல்லது மழையால் அதை அணைக்கவோ முடியாது என்பதும் முக்கியமான ஒன்று.

யாரேனும் உடைத்து விட்டால் அல்லது நீரில் ஏதேனும் எதிர்பாராத இடையூறு ஏற்பட்டால் தேவைப்படும் என்று இன்னொரு துடுப்பு அதிகப்படியாகத் தயாரித்து வைத்தோம். நதியின் கீழ்க்கரை நோக்கி வேகமாக வரும் நீராவிப் படகுகள் எங்களின் தோணியை இடித்து விடாமலிருக்க, குவிந்த கூரையின் வெளிப்புறம் ஒரு சிறிய கவட்டி போன்ற குச்சியில் ஒரு லாந்தர் விளக்கை அடையாளமாகத் தொங்க விட்டோம். நீராவிப் படகு அதிக அளவில் குறுக்கே செல்லும் சமயம் வைத்தால் போதும் என்ற எண்ணத்தில் நாங்கள் விளக்கைப் பொருந்தவில்லை. பாருங்கள், நதி நீர் உயர்ந்து வரும் காரணத்தால் அந்தச் சமயத்தில் நீராவிப்படகுகள் கடக்க ஏதுவாக அந்த வாய்க்கால் இல்லை என்பதால் அவைகள் வேறு தோதுவான நீர் வழியை பார்த்துச் சென்றுவிடக் கூடும் அல்லவா!

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 12

 

இரண்டாம் நாளிரவு சுமார் எட்டு அல்லது ஒன்பது மணிநேரம் நீரின் விசையினூடே நாங்கள் மிதந்தோம். ஒரு மணி நேரத்திற்கு நான்கு மைல் அல்லது அதற்கும் அதிகமாக என்ற அளவில் நாங்கள் நகர்ந்துகொண்டிருந்தோம். மீன்களைப் பிடித்தோம். நிறையப்பேசினோம். அவ்வப்போது நீச்சல் அடித்தோம். பின்னர் விழித்திருந்தோம். மகா பிரம்மாண்டமான அசையா நதியில் மிதந்து கொண்டே மல்லாந்து படுத்து விண்மீன்களைக் கண்டுகளிப்பதென்பது ஒரு வகையான பெருமிதம். உரத்த குரலில் பேசுவதைக் கூட நாங்கள் விரும்பவில்லை. உரத்துச் சிரிப்பதையும் மிகவும் குறைத்துக் கொண்டோம். அவ்வப்போது சிறிது வாய் மூடி நகைத்துக் கொண்டோம். பருவநிலையும் மிகவும் மேன்மையாகவே இருந்தது. அந்த இரவு, அடுத்த நாளிரவு, அதற்கடுத்த நாளிரவு எல்லாம் பெரிதாக எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை.

ஒவ்வொரு நாள் இரவும் ஒரு சில நகரங்களைக் கடந்து சென்றோம். கறுத்த மலையோரங்களில் இருந்த நகரங்களில் பெரிதாக வீடுகள் ஏதும் இல்லை. அங்கங்கே பளபளக்கும் விளக்குகள் மட்டும் அவ்வப்போது தென்பட்டன. ஐந்தாம் நாளிரவு நாங்கள் செயின்ட் லூயிஸ் நகரைக் கடந்தோம். உலகம் முழுதுமே விளக்குகள் ஏற்றினாற்போன்ற வெளிச்சத்தில் அந்த நகரம் இருந்தது. இருபது அல்லது முப்பதாயிரம் மக்களைக் கொண்ட நகரம் செயின்ட் லூயிஸ் என்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் மக்கள் அடிக்கடி கூறுவார்கள். அந்த நள்ளிரவில் இரவு இரண்டு மணி வாக்கில் திகைக்க வைக்கும் ஒளி வெள்ளத்தை எனது கண்களால் காணும்வரை, அதை நான் ஒருபோதும் அதற்குமுன் நம்பியதில்லை. அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறு ஒலி கூட கேட்கமுடியவில்லை.

ஒவ்வொரு இரவும் பத்து மணி வாக்கில் நாங்கள் கடந்து செல்லும் வழியின் கரைகளில் இருக்கும் சிறு கிராமங்களுக்கு நான் நீச்சலடித்துச் செல்வேன். சுமார் பதினைந்து சென்ட் மதிப்புள்ள மக்காச்சோள உணவு அல்லது உப்புக்கண்டமிட்ட பன்றி இறைச்சி அல்லது வேறு ஏதேனும் உணவு வாங்குவேன். சில இரவுகளில் தங்களின் இருப்பிடங்களில் அமைதி கொள்ளாது சுற்றித் திரியும் கோழிகளைத் திருடவும் செய்தேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது கோழிகளைத் திருடிவிடவேண்டும் என்று அப்பா அடிக்கடி கூறுவார். சாப்பிட விருப்பம் இல்லாவிடினும், அதை யாருக்கேனும் கொடுத்து விடலாம். பிறகு உங்களிடம் கோழி பெற்றுக் கொண்ட மனிதன் எந்த நேரத்திலும் உங்களுக்கு உதவத் தயாராக இருப்பார். அப்பா கோழி சாப்பிட மறுத்ததை நான் என்றுமே பார்த்ததேயில்லை எனினும் இப்படித்தான் அவர் அடிக்கடி கூறுவார்.

ஒவ்வொரு நாளும் அதிகாலை விடியும் முன்னே, நான் மக்காச்சோளக் காடுகளுக்குள் பதுங்கிச்சென்று அங்கிருக்கும் தர்பூசணி, மஞ்சள் பூசணி, வெள்ளைப் பூசணி, மக்காச்சோளம் அல்லது அது போன்ற பொருட்களை எடுத்து வருவேன். அவ்வாறு பொருட்களை கடன் வாங்குவது தவறில்லை என்று அப்பா எப்போதும் கூறுவார். வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் அதை நீ திருப்பிச் செலுத்தத்தான் போகிறாய் அல்லவா! ஆனால் திருடுதல் என்ற செயலின் பூசி மெழுகும் இன்னொரு இழி செயலே கடன் வாங்குவது என்றும் அதைக் கண்ணியமான மக்கள் செய்யமாட்டார்கள் என்றும் அந்த விதவை கூறுவாள்.

அப்பா கூறியதும் அந்த விதவை கூறியதும் இரண்டுமே சரிதான் என்று தான் நினைப்பதாக ஜிம் கூறினான். சில பொருட்களை இனி ஒருபோதும் கடன் வாங்குவது இல்லை என்றும் சில பொருட்களை வாங்கிக்கொண்டே இருப்போம் என்றும் நமக்கு நாமே உறுதி எடுத்துக் கொண்டு சமாதானம் ஆகிவிட்டால் அதுதான் சிறந்தது என்றும் அவன் கூறினான்.

எனவே ஒருநாள் இரவுவேளை நாங்கள் நதியின் கீழ்த்திசையில் மிதந்து கொண்டிருக்கும்போது இது குறித்து உரையாடினோம். தர்பூசணி, மஞ்சள்பூசணி, அதன் வகைகள் இவற்றை எடுப்பதை விட்டு விடலாம் என்று முடிவு செய்ய இரவு முயற்சித்துக் கொண்டிருந்தோம். ஆனால் திடீரென அதிகாலை வேளையில் புளிப்புச் சுவை மிகுந்த கிரேப்ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற தோற்றமும் இனிப்புச் சுவையும் கொண்ட புஷிமன் பழங்களையும் கடன் வாங்குவதை விட்டுவிட முடிவெடுத்தோம். இதற்கு முன் இவ்வாறு எடுத்து வருவதை எண்ணி மிகுந்த குற்ற உணர்ச்சியுடன் இருந்தோம். ஆனால் இப்போது பொருட்களை எடுத்து வருவது பற்றிய விஷயத்தில் நாங்கள் நல்ல புரிதலோடு சிறப்பாய் உணர ஆரம்பித்தோம். கிரேப்ஆப்பிள் நல்ல சுவையில்லாத பழம் என்பதாலும், புஷிமன் பழங்கள் இன்னும் இரண்டு மூண்டு மாதங்களுக்கு பழுத்த கனிகளாகக் கிடைக்க வாய்ப்பில்லை என்பதாலும், நாங்கள் பேசி முடிவு செய்திருந்த இந்த நிலைப்பாடு எனக்கு மிகவும் திருப்தி அளித்தது.

இரவு நேரம்கழித்து உறங்கி அதிகாலையிலேயே விழிக்கும் நீர்ப்பறவையை அவ்வப்போது சுட்டு வீழ்த்துவோம். மொத்தத்தில் நாங்கள் நன்கு வாழ்ந்து கொண்டிருந்தோம்.

செயின்ட் லூயிஸ் நகரை நாங்கள் கடந்து வந்த ஐந்தாம் நாள் ஒரு மிகப்பெரிய புயல் நாங்கள் இருந்த நதிப்பகுதியைத் தாக்கியது. வானில் தொடர்ந்து கொண்டேயிருந்த இடி, மின்னல் இவற்றுடன் மழை தாரைதாரையாய் கொட்டித் தீர்த்தது. அந்த கூம்பு வடிவக் குடிலுக்குள் நாங்கள் பதுங்கிக் கொண்டு தோணியை அதன் போக்கில் விட்டு விட்டோம். மின்னல் பளீரென மின்னும் போது அகன்று விரிந்தஅந்த நதியின் நீர் நீண்டு மேலேறிக்கொண்டே செல்லுவதையும், அதன் இரு கரைகளிலும், பாறைக்குன்றுகள் இருப்பதையும் நாங்கள் காண முடிந்தது.

ஒரு சமயம் “ஹே ஜிம்! அங்கே பார்! என்று கத்தினேன். பாறையில் மோதி நின்ற நிலையில் ஒரு நீராவிப்படகு எங்களின் பாதையில் இருந்தது. ஒவ்வொரு முறை மின்னல் வெளி வரும்போதும் அந்தப் படகை நன்கு காண முடிந்தது. ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் இருந்த அந்தப்படகின் மேல்தளம் மட்டுமே நீருக்கு வெளியே தெரிந்தது. சின்ன சின்னதாக இருந்த புகைபோக்கிக் கூண்டுகளையும், ஒரு பெரிய மணியினருகே ஒரு நாற்காலியையும், அதன் பின்புறத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழைய தொப்பியையும் நன்கு காண முடிந்தது.

அந்தப்புயலானது எல்லா பொருட்களிலும் இருட்டையும் திகிலையும் கொடுத்ததால், கண்முன்னே உடைந்து கிடைக்கும் படகைக் காணும் எல்லா சிறுவர்களையும் போலவே நானும் நதியின் நடுவே தனிமையையும் துக்கத்தையும் உணர்ந்தேன். அந்த உடைந்த படகுக்குச்சென்று அங்கு என்ன உள்ளதென்று அறியவேண்டும் என்று நினைத்தேன். எனவே நான் சொன்னேன் “நாம் அதில் குதிக்கலாம், ஜிம்!” என்று

ஜிம் முதலில் அதை விரும்பவில்லை. அவன் சொன்னான் “அந்த உடைந்த படகினுள்ளே சென்று நான் முட்டாளாக விரும்பவில்லை. அது இல்லாமலே நாம் நன்றாக இருக்கிறோம். அதை அப்படியே விட்டு விடுவோம். பைபிள் சொல்லுவது போல அந்த உடைப்புக்குக்கூட யாரேனும் காவல் இருப்பார்கள்.”

“காவலாளிகள்.? என் தலை!” நான் சொன்னேன் “கப்பலில் பொதுவாகவே மாலுமியின் கேபின் அறைக்கும், முக்கிய ஆவணங்களை வைக்கும் அறைக்கும் தவிர வேறெங்கும் காவலாளிகள் கண்காணிக்க வேலை ஏதும் இல்லை. அதுவும் இந்த பயங்கர இரவில் தன் தலை போகும் ஆபத்தில் எந்த நிமிடம் வேண்டுமானாலும் உடைந்து நீரில் மிதந்து அழியப் போகும் இந்த படகின் கேபின் அறையையும், ஆவண அறையையும் பாதுகாக்க எவரேனும் இருப்பார் என்று நீ நினைக்கிறாயா?

ஜிம்மிடம் இதற்கான எந்த பதிலும் இல்லை. எனவே அவன் ஏதும் சொல்லவில்லை. நான் மேலும் கூறினேன் “அத்துடன், மாலுமி அறையிலிருந்து நமக்கு ஏதேனும் உருப்படியான விஷயங்கள் கிடைக்கலாம். ஐந்து டாலர் மதிப்பிலான சிகரெட்டுகள் இருவருக்கும் தனித்தனியே கிடைக்கலாம். நீராவிப்படகு மாலுமிகள் அனைவருமே கொழுத்த பணவசதி உடையவர்கள். ஒரு மாதத்திற்கு அறுபது டாலர் சம்பளம் வாங்குகிறார்கள். அதனால் எத்தனை விலை உயர்ந்த பொருளையும் வாங்க அவர்கள் தயங்குவதில்லை. என்ன வாங்க நினைக்கிறார்களோ அதை அவர்கள் உடனே வாங்குவார்கள்.”

“இந்தா! இந்த மெழுகுதிரியை உன் சட்டைப்பையில் வை. ஜிம்! அந்த படகில் இருப்பதை அடித்துச் சுருட்டி வராவிட்டால் இன்று இரவு எனக்கு உறக்கமே வராது. டாம் சாயருக்கு மட்டும் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அவன் அதை விட்டு வைப்பான் என்று நினைக்கிறாயா? ஒருக்காலும், எதற்காகவும் அவன் விடமாட்டான். இதை அவன் சாகசம் என்று கூறிக் கொள்வான். இதுதான் அவன் சாவதற்கு முன் செய்யப்போகும் கடைசிச் சாகசம் என்று அவன் தெரிந்து கொண்டாலும் கூட அந்த உடைந்த படகுக்குள் அவன் கண்டிப்பாகச்செல்வான். அதுவும் அவனுக்குரிய ஒயிலான பாணியில் செய்வான். ஏன்! அதைப் பார்த்து அவன்தான் புது உலகைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்று நீ கூட கையில் அடித்துச் சத்தியம் செய்வாய். ஐயா! டாம் சாயர் மட்டும் இந்த நிமிடம் இங்கே இருந்திருக்க வேண்டும்.”

கொஞ்சமாக முனகினாலும், ஜிம் சம்மதித்தான். நாம் இனி அதிகம் தேவையின்றி பேசக்கூடாது, அப்படியே பேசினாலும் கிசுகிசுக்கும் குரலில்தான் பேசவேண்டும் என்று அவன் கூறினான். பளீர் என மின்னிய மின்னல் அந்த உடைந்த படகுக்குச் செல்ல வழிவகுத்தது . உடைந்த படகின் வலதுபுறம் இருந்த கொடிக்கம்பம் போன்ற அமைப்பை இறுகப்பற்றி எங்களது தோணியை அதில் கட்டிவைத்தோம்.

படகின் மேற்புறம் நீரின் பரப்புக்கு மேல் நல்ல உயரத்தில் இருந்தது. படகின் இடது புறமாக நாங்கள் சென்றோம். மாலுமி அறைக்குச் செல்லும் வழியில், கும்மிருட்டில் பூனை நடை போட்டு, கால்களால் வழியைக் கொஞ்சம் கொஞ்சமாக அளந்துகொண்டு, கைகளை முன்புறமாக நீட்டி ,தாக்க வரும் காவலர்களை தடுக்கும் முன்முயற்சியாகப் பதுங்கிப் பதுங்கிச் சென்றோம். இருண்டு கிடந்ததால் அங்கே காவலர்கள் இருப்பதற்கான அடையாளம் ஏதும் எங்களுக்குத் தென்படவில்லை. வெகு விரைவிலேயே அந்தப் பாதையின் முடிவாக வான ஒளி முடியும் இடம் வந்து சேர்ந்தோம். எனவே அங்கிருந்து மேலே நாங்கள் ஏறினோம். எங்களது அடுத்த அடி மாலுமிகள் இருப்பிடத்தின் திறந்திருந்த கதவிடம் கொண்டு சேர்த்தது. மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தோம். அடேங்கப்பா! அந்த கேபின் அறையில் ஒரு வெளிச்சம். அதனுள் சில குரல்கள் கீழ்புறம் இருந்து ஒலிப்பதும் கூடக் கேட்டது.

இது ஏதோ கெட்ட விஷயம் என்று தனக்குப் படுவதாக ஜிம் கிசுகிசுத்த குரலில் என்னிடம் கூறினான். நாம் திரும்பிப் போவது நல்லது என்றும் அறிவுறுத்தினான். நானும் அதற்குச் சம்மதித்து மீண்டும் எங்களது தோணிக்குத் திரும்ப எத்தனிக்கையில், கீழிருந்து ஒரு குரல் சத்தமிடுவதைக் கேட்டேன்.

“ஓ தயை கூர்ந்து செய்யாதீர்கள்! மனிதர்களே! நான் எவரிடமும் சொல்லப் போவதில்லை என்று சத்தியம் செய்கிறேன்.”

அடுத்து ஒலித்த இன்னொரு குரல் மேலும் அதிகச் சத்தத்துடன் கேட்டது

“நீ பொய்யுரைக்கிறாய், ஜிம் டர்னர்! இதே போன்றே முன்பும் நீ நடித்திருக்கிறாய். எப்போதுமே அடிக்கும் கொள்ளையில் நீ அதிகப் பங்கு கேட்டு வாங்குவாய்.ஏனெனில் அவ்வாறு தராவிடில், இதை வெளியே சொல்லிவிடுவதாகப் பயமுறுத்தி இருக்கிறாய். நல்லது. அப்படிப்பட்ட வேண்டாத செயலும் இரண்டொரு தடவை நீ செய்திருக்கிறாய். உலகிலேயே சகிக்கமுடியாத நம்பிக்கைத் துரோகம் செய்யும் கயவன் நீதான்.”

அதற்குள்ளாக ஜிம் எங்களின் தோணிக்குச் சென்று விட்டான். ஆனால் என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் என்னை அரித்தெடுத்தது. டாம் சாயர் இங்கே இருந்திருந்தால், கண்டிப்பாகப் பின்வாங்க மாட்டான் என்று நான் சொல்லிக்கொண்டேன். எனவே நானும் அவ்வாறேதான் என்று முடிவு கட்டினேன். கீழே என்ன நடக்கிறது என்பதை நான் பார்க்கத்தான் போகிறேன். எனது கரங்களையும், முட்டிகளையும் கொண்டு அங்கே இருந்த சிறு வழியில் நான்கு காலில் நகர்ந்து படகின் கும்மிருட்டான பின்பகுதியை நோக்கி கேபின் அறையில் நுழையும் வழிக்கு முன்னதாக இருக்கும் சிறிய இடத்திற்கு நான் சென்றேன். எனக்கும் அந்த கேபினுக்கும் இடையில் அந்த இடம் மட்டுமே இருந்தது.

தந்திரமாக உள்ளே நோக்கினேன். அங்கே கால்களும், கைகளும் கட்டுண்ட நிலையில் ஒரு மனிதன் தரையில் கிடந்தான். மேலும் இரண்டு மனிதர்கள் அவன் தலைமாட்டில் நின்று கொண்டிருக்க, அதில் ஒருவன் கையில் லாந்தர் விளக்கு இருந்தது. இன்னொரு மனிதனின் கரத்தில் இருந்த துப்பாக்கியால் கீழே கிடந்த மனிதனின் தலைக்குக் குறி வைத்தவாறே அவன் கூறினான் “நான் உன்னைச்சுட விரும்புகிறேன். உன்னை நான் சுட்டுப் பொசுக்கத்தான் வேண்டும், கேவலமான பிராணியே!”

கீழே கிடந்த மனிதன் அச்சத்தில் சுருண்டு கூறியதாவது, “ஓ! தயை செய். வேண்டாம். பில்! நான் இனி ஒருபோதும் சொல்லமாட்டேன். “

அவ்வாறு அவன் சொன்னபோது கையில் லாந்தர் விளக்கு பிடித்திருந்த மனிதன் கடகடவென்று சிரித்துவீட்டுக் கூறினான்.

“கண்டிப்பாக. நீ சொல்ல மாட்டாய். இதைவிட உண்மை நீ வேறு எதுவும் கூறியிருக்க முடியாது.”

மேலும் கூறினான் “அவன் கெஞ்சுவதைக் கேட்கவேண்டுமாம். ஆனால் நன்கு அடித்து அவனை மட்டும் இவ்வாறு கட்டி வைக்காதிருந்தால், அவன் நம்மைக் கொன்று புதைத்திருப்பான். அதுவும் எதற்காக? ஒன்றுமில்லாத விஷயத்திற்காக. நாம் நம் உரிமைகளுக்காக போராடிய காரணத்திற்காக. ஆனால் இனி நீ யாரையும் பயமுறுத்த இயலாது என்று நான் சத்தியம் செய்கிறேன். ஜிம் டர்னர்! அந்த துப்பாக்கியை எடுத்து விடு, பில்!”

பில் கூறினான்: “நான் அதை எடுக்க விரும்பவில்லை ஜாக் பேக்கர்ட்! நான் அவனைக் கொல்ல விரும்புகிறேன். வயதான ஹேட்பீல்டை இதே மாதிரி இவன் கொல்லவில்லையா? இவன் சாக வேண்டியவன்தானே?

“ஆனால் அவனைக் கொல்லாமல் விட்டு வைப்பதற்கு எனக்கு சில காரணங்கள் இருக்கிறது.”

“வாழ்த்துகிறேன், ஜாக் பேக்கர்ட்! நான் வாழ்ந்து முடிக்கும் காலம் வரை உன்னை மறக்கவே மாட்டேன்.” தரையில் கிடந்த மனிதன் உளறினான்.

பேக்கர்ட் அவனைப் பொருட்படுத்தவில்லை. அவன் கையிலிருந்த விளக்கை ஒரு ஆணியில் மாட்டினான். நான் மறைந்திருந்த இடம் நோக்கி நடந்து வந்த அவன் தன்னைப் பின்தொடரும்படி பில்லுக்கு சைகை காட்டினான். நான் அவசரமாக இரண்டடி பின்னோக்கித் தவழ்ந்தேன். படகு ஒரு புறமாக சாய்ந்து இருந்ததன் காரணமாக, அப்படிச் செய்ய சாதாரணமான நேரத்தை விட அதிகம்நேரம் எடுத்தது. அவர்கள் என்மீது கால் வைத்து மிதித்து என்னைக் கண்டுபிடித்து விடாமல் இருக்க சாய்வாக இருந்த படகில் நான் பின்னோக்கி நகர்ந்தேன். அந்த மனிதன் இருட்டுக்குள் புகுந்து வந்தான். கூடவே பேக்கர்ட் அந்த இடைப்பட்ட பகுதிக்கு வந்தபோது, அவன் கூறினான், “ஹேய்! இங்கே வா.”

அவனும் பில்லும் நான் இருந்த பகுதிக்குள் வந்தார்கள். ஆனால் அவர்கள் வருமுன் நான் அங்கே உயரத்தில் இருந்த துயிலிடப்பலகைக்குத் தவழ்ந்து சென்று விட்டேன். இப்போது மூலையில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த நான் அந்தப் படகுக்கு வந்ததற்காக மனதில் வருந்திக் கொண்டிருந்தேன். அவர்கள் அங்கே நின்று பேசும்பொழுது அவர்களின் கரம் நான் இருந்த மேல்பலகையின் ஓரங்களைத் தொட்டுக்கொண்டிருந்தது. அவர்களை நான் பார்க்க இயலாவிட்டாலும், அவர்கள் எங்கு நிற்கிறார்கள் என்பதை அவர்களின் மூச்சுகாற்றிலிருந்த விஸ்கி வாசம் நன்கு காட்டிக் கொடுத்தது.

நல்ல வேளை! நான் மது அருந்தவில்லை என்று சந்தோசப்பட்டுக் கொண்டேன். ஆயினும் நான் மூச்சை அடக்கிப்பிடித்துக் கொண்டு அங்கே இருந்ததால் பெரிதாக ஏதும் வித்தியாசம் இருந்திருக்காது என்றும் யோசித்தேன். மிகவும் பீதியுற்றிருந்தேன். ஆனால் அவ்வாறு பீதியுற்ற நிலையிலும், மூச்சை நன்கு அடக்கிக் கொண்டு அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டேன். அவர்கள் கிசுகிசுத்த குரலில் மிகவும் தெளிவாகப் பேசிக் கொண்டார்கள்.

பில் டர்னரைக் கொல்ல விரும்பினான். அவன் சொன்னான் ” அவன் வெளியே கூறப் போவதாகச் சொன்னான். அவன் கூறுவான். நம் இருவரின் பங்கையும் சேர்த்துக் கொடுத்தாலும் கூட அது எந்தப் பலனையும் அளிக்காது. இப்போது அவனை நன்கு அடித்துக் கட்டியும் வேறு வைத்திருக்கிறோம். அவன் கண்டிப்பாக மாகாணத்திற்கு உதவ நமக்கு எதிராக சாட்சியம்சொல்லி அப்ரூவர் ஆக மாறிவிடுவான். நான் சொல்வதைக் கேள்! அவனை இந்த உலகத் துன்பத்திலிருந்து விடுதலை செய்து விடுவோம்.”

“நான் சமமதிக்கிறேன்” அமைதியுடன் கூறினான் பேக்கர்ட்.

“நாசமாய்ப் போயிற்று. நீ இதற்கு சம்மதிக்கவில்லை என்றுதானே நான் நினைக்க ஆரம்பித்தேன். சரி. நல்லது. அவ்வளவுதான். வா, உள்ளே சென்று அந்தக் காரியத்தை முடிக்கலாம்.”

“ஒரு நிமிடம் இரு. நான் சொல்லவந்த அனைத்தையும் சொல்லி முடிக்கவில்லை. நான் சொல்வதைக் கேள். சுட்டுக் கொள்ளவது நல்ல வழிதான். ஆயினும், கொல்லுவதற்கு வேறு சில அமைதியான வழிமுறைகளும் இருக்கின்றன. அவ்வாறு ஒரு அமைதியான வழியை நாம் தேர்ந்தெடுத்தால், சுட்டுக் கொள்வதன் மூலம் நாம் வம்பில் மாட்டும் பிரச்சினையைத் தவிர்க்கலாம். என்ன, சரியா?”

“சரிதான். ஆனால் வேறு எப்படி அவனைக் கொல்ல முடியும் என்று நீ யோசிக்கிறாய்?”

“நல்லது. முதலில் நாம் இந்தப்படகு முழுதும் அலசி ஆராய்ந்து துருவிப் பார்த்து ஏதேனும் பொருட்களை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமா என்று பார்க்க வேண்டும். பிறகு கரைக்குச் சென்று நாம் அடித்த கொள்ளையை பதுக்கி வைக்க வேண்டும். பின் நாம் காத்திருப்போம். இந்தப் படகு முழுதாக உடைந்து நதிநீரில் அடித்துச் செல்லப்பட இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகாது என்று நான் நினைக்கிறன். என்ன சொல்கிறேன் என்று உனக்குப் புரிகிறதா? அவன் மூழ்கி இறப்பான். அனைவரும் அவன் இறந்ததற்கு அவனையே குற்றம் சாட்டுவார்கள். அவனைக் கொல்வதை விட இது சிறந்த வழி என்று நான் நினைக்கிறன், இந்த மாதிரி நாம் கொள்ளையடிக்கும் சமயத்தில் ஒருவரைக் கொல்வது நமக்குத் தான் பாதகம் என்பதால் நான் அதற்கு எதிராகத்தான் இருப்பேன். அது நல்ல அறிவான விஷயம் அல்ல. நான் சொல்லுவது சரிதானே?”

“ஆம். நீ சொல்வது எனக்குச் சரியென்றே படுகிறது. ஆனால், இந்தப் படகு உடைந்து நீரில் அடித்துச் செல்லப்படாவிடில் …?”

“நல்லது. நாம் சில மணிநேரம் காத்திருந்து பார்ப்போம். பார்க்க முடியும் இல்லையா?”

“அப்படியானால் சரி. நாம் போவோம். வா.”

அவர்கள் வெளியே சென்றார்கள். நானும் அவசரத்தில் ஓடினேன். கும்மிருட்டைக் கிழித்துக் கொண்டு முன் சென்றேன். “ஜிம்” கிசுகிசுத்தேன் நான். எனது வலது கை முட்டியின் அருகே இருந்து அவனின் மெல்லிய முனகல் கேட்டது. நான் சொன்னேன் “சீக்கிரம் ஜிம்! முட்டாள்தனம் செய்யவும், முனகிக்கொண்டு திரியவும் இது சமயமல்ல. ஒரு கொலைகாரக் கும்பல் உள்ளே உள்ளது. அவர்களின் படகு எது என்று பார்த்து அதை நாம் அவிழ்த்து விட்டு விட்டால், அவர்கள் இங்கிருந்து தப்பிக்க முடியாது. ஒருவன் கொல்லப்பட இருக்கிறான். ஆனால், அவர்களின் படகை நாம் முடக்கி விட்டால், அவர்கள் இங்கேயே அடைபட்டு விடுவார்கள். பின்னர் இந்த ஊரின் தலைமைச் சட்ட அதிகாரி இவர்களைக் கைது செய்து விடுவார். துரிதமாக செயல்படு. நான் அவர்களின் படகை இந்த இடது பக்கம் சென்று பார்க்கிறேன். நீ அந்த வலது புறமாகச் சென்று தேடு. அத்துடன் நமது தோணியைத் தயார் நிலையில் வை. அப்புறம் …….”

“ஐயோ கடவுளே! தோணி. அங்கே தோணியைக் காணவில்லையே. அது உடைந்து வெள்ளத்துடன் சென்று விட்டது போல் தெரிகிறதே. இப்போது நாம் இங்கே வசமாக மாட்டிகொண்டோமே, கடவுளே!”

[தொடரும்]


 

மொழிபெயர்ப்பாளர் பற்றி…

முனைவர் ஆர்.தாரணி

– முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். –

akilmohanrs@yahoo.co.in