மனக்குறள் 13, 14& 15

மனக்குறள் 9 & 10

மனக்குறள்13: முள்ளிப் பத்தாண்டு-நீளும் நினைவு! (2009-2019)

ஈர நினைவுகள் இன்னும் அலைத்திடும்
பார நிலத்துப் படர்!

முள்ளிவாய்க் கால்முகம் மூட்டி அழித்தவை
அள்ளிவரும் நெஞ்சின்; அலை !

பிள்ளையோ பாலுக் கிரங்கி யழுகையில்
கொள்ளி விழுங்கியதே கூடு

தன்னைக் கொடுத்துத் தரணிக் கெழுதினன்
மன்னும் நிலத்து மகன்!

ஆயிர மாயிரம் அற்புத நெஞ்சமாய்
தாய்மை துடித்த தணல்!

கண்முன் கரைந்து கனவிழி நீரொடும்
அன்னை யறைந்தாள் அறம்!

வெள்ளைக் கொடியென்றும் மீட்பர் எனநின்றும்
சொல்லி யழித்தார் சிறியர்!

ஏமாற்றிக் குள்ளர் இணைந்து வரலாற்றின்
கோமாளி யானார் கொழுத்தி!

கொல்லும் படிக்கே குதர்க்க வழிகாட்டிச்
செல்லும் படியிட்டார் சேர!

ஆண்டு கரைந்தாலும் அள்ளும் கொடும்போரின்

நீண்டுகொண்டே போகும் நினைவு !


மனக்குறள்-14: கூடு எரிந்த பத்தாவது ஆண்டு

பத்தாண்டு ஆயினும் செத்தாலும் போகுமோ
கொத்தாய் எரிந்த குடில்!

நீரின்றிச் செத்தார் நிலத்தில் சுடுமணலில்
சோறின்றிச் செத்தாரே சோர!

முள்ளிவாய்க் காலில் முகமிழந்த மன்கொடுமை
சொல்லும் சரிதச் சுருள் !

உலக அரங்கினில் ஒத்தடம் வேண்டித்
தலமாய் அதிர்த்தார் தரணி!

நினைவெழுந்த அந்நாளை நெஞ்சிற் பரவி
மனமிழந்த மக்கள் மடை!

கண்ணீர் மடைதிரள கன்னஞ் சிவப்பேற
அன்னை விழுந்தாள் அழுது!

வையக மெல்லாமும் மன்றில் அழைத்தபடி
அய்நாவைக் கேட்டார் அமைதி !

மரணப் பொறியோடு மக்கள் பதைத்த
கருநாளைச்; சொன்னார்கள் காண்!

அன்று அழிந்தநிலம் ஆயுதங்கள் நச்சென்று
நின்று எரித்த நெருப்பு !

கொன்றார் கொடியரெனக் கூவி யழுதவர்க்கு
என்றோ அருள்வான் இறை!

 


 

மனக்குறள்-15:உயிர்த்த ஞாயிறில் விதைத்த மரணம்


தொல்காப் பியம்தெரியார் தேன்குற ளோராதார்
கொல்லுவெறி கொண்டார் கொடிது !

இருநூற்றி ஐம்பதின்மேற் செத்தார் இலங்கைப்
பெருந்துயரே பேசுபொரு ளாக!

மதம்மாற்றல் முனவறுமை மாற்றும் என்றே
நிலம்;மாற்றிக் கொண்டார் நினை!

மெய்தவழுங் கோவில் முடித்துப் பசுவெட்டும்
செய்வனமாய் இட்டார் சிறியர்!

கல்யாண மிட்டுக் கசிட்டம் கரைப்பமெனச்
சொல்லி மணங்கொண்டார் சொல்;!

மாயும் மனிதர் வரலாற்றை மாற்றிப்பின்
பேய்போல் அலைத்தார் பொறி !

காணியை வாங்கிக் கலைத்து மதமிட்டுக்
கூனலாய் ஆக்கினார் கேள் !

பணந்தன்னைப் பார்த்துப் பழம்பூமி விற்றாய்
இனந்தன்னில் நீயோர் இடி!

அமிழும் இழிவாகி அற்பமொடு மண்ணில்
தமிழை அழித்தார் தடி!

உணரார் இனத்தோடும் எண்ணார் மடமைப்
பிணமாய் நெளியும் புழு !

vela.rajalingam@gmail.com       Jul. 29 at 10:34 a.m.