நாவல்: புதிய பாதை ( ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’) (13-15)

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க ‘புதிய பாதை’ என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் ‘புதிய பாதை’ என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான ‘டீச்சர்’ பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் ‘புதிய பாதை’ என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் ‘புதிய பாதை’ என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]


அத்தியாயம் 13: ஊர் நிலைமை!

“ஹலோ. ஹலோ”

எதிர்த் தரப்பில் குரல் மிக நைந்துபோய் பலஹீனமாகக் கேட்டது. கொழும்புக் ‘கோல்’ போல் தெரிகிறது. யாராயிருக்கும்…

“ஹலோ. ஹலோ. யார் பேசுறது?”

‘அக்கா. அக்கா. இது. அடக்கடவுளே. இது பெரிய தங்கச்சியின் குரல் அல்லவா. இவள் எங்கு நின்று பேசுகிறாள். கொழும்புக்கு எதற்காக வந்திருக்கிறாள்?

“யாரது பெரிய தங்கச்சியோ. எங்கயிருந்து பேசுகிறாய். எதுக்கும் உன்ரை நம்பரைத்தா. நான் உடனே எடுக்கிறன்.”

பெரிய தங்கச்சி நம்பரைத் தந்தாள். இவள் எடுப்பதாக கூறி விட்டு, ‘லைனை’க் ‘கட்’ பண்ணி விட்டுத் திரும்ப ‘டயல்’ பண்ணினாள். சிறிது நேரம் ‘லைன்’ பிசியாக இருந்தது. ஒரு மாதிரிக் கிடைத்து விட்டது.

“ஹலோ. ஹலோ. “யாரு அக்காவா? அக்கா. எதிர்த்தரப்பில் பெரிய தங்கச்சி விம்மத் தொடங்கினாள். தங்கச்சி என்ன விசயம் என்ன நடத்திட்டதெண்டு இப்படி இவள் முடிக்கவில்லை. பெரிய தங்கச்சி குறுக்கிட்டாள்.

“அக்கா. அக்கா. அம்மா. அம்மா”

“அம்மாவா. அம்மாவுக்கு என்ன?” இவள் குரலில் சிறிது பதட்டம் படர்ந்திருந்தது.

‘அக்கா. இம்முறை பெரிய தங்கச்சி ஓவென்று அழத் தொடங்கினாள்.

‘அக்கா அம்மா எங்களை எல்லாம் ஏமாத்திப் போட்டு போய் சேர்ந்திட்டா’

‘என்ன. இவளுக்கு ஒரு கணம் எல்லாம் சுழல்வது போன்றதொரு பிரமை எழத் தலையை இறுகப் பற்றிக் கொண்டாள். சிறிது நேரத்துக்குள்ளாகவே தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டாள்.

“தங்கச்சி. அம்மாவுக்கு என்ன நடந்தது. நல்லாத்தானே இருந்தவ.”

‘அக்கா, ஆமிக்காரன் பழையபடி போனகிழமை ஷெல்” அடிச்சவன். தற்செயலாய் ஷெல் பட்டுத்தான் அம்மா.”

“தங்கச்சி ஒன்றுக்கும் கவலைப்படாதை. போன் கொஞ்சம் தள்ளி எடுக்கிறன்.”

“ஒகே.”

இதற்குள் இவள் முகபாவங்களை வெகு நுணுக்கமாக அவதானித்த சிறுவன் கதவை மீண்டும் இழுத்து மூடி விட்டு வந்திருந்தான். இவளுக்கு மண்டை பிளந்து விடுமாற் போல் தலையிடித்தது. சோபாவில் சாய்ந்தபடியே துவண்டு போனாள். “ஐயோ அம்மா, உனக்கு இப்படியா ஒரு முடிவு வரவேணும். ஒரு பூச்சி புழுவுக்கே கெடுதல் நினைக்க மாட்டியே, உனக்கா இப்படி ஒரு முடிவு.. அம்மாவின் ஞாபகங்கள் அலை அலையாய் எழுகின்றன. ‘எங்களை வளர்க்க அவ பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா என்ன, உன்னைக் கடைசியில கூடச் சந்திக்க முடியாமல் போட்டுதே. ஐயோ. அம்மா’ மனம் அழுது புலம்பிச் சோர்ந்து கிடக்கின்றது. ‘வாழ்க்கை முழுக்க எங்களுக்காகவே உருக்குலைந்து உருக்குலைந்து வாடிக் கிடந்தாய். ஒருக்கா உன்னை நல்லா வைச்சுப் பார்க்க வேணும் எண்டு நினைச்சிருந்தன். என்னை ஏமாற்றிப் போட்டாயே, ஐயோ, அம்மா. கண்ணும் கருத்துமாய் எவ்வளவு அருமையாய் பாசத்துடன் எங்களை எல்லாம் வளர்த்தாய், எவ்வளவு மென்மையான பூப்போன்ற உள்ளம். கடைசியில் உன்ரை முடிவிலை கூடச் சந்திக்க முடியாதபடி சூழல்கள். இவளுக்கு சமூகத்தின் மீது, இந்த உலகத்தின் மீது, இந்த வாழ்வின் மீதே வெறுப்பு வெறுப்பாக வந்தது. “எதற்காக இந்த உறவுகள்? பிணைப்புகள்? எதற்காக இந்த இழப்புகள்? கடைசியில் நாட்டு சூழல் உறவுகளைப் பிரித்து வைத்ததோ அந்த நாட்டுச் சூழலே இன்று இவளது அம்மாவையும் பலி எடுத்து விட்டது. இறுதிக் கடமைகளை செய்ய விடாதபடி இவளைத் தடுத்து விட்டது. இவளது தாயின் முடிவையே ஒரு கிழமை கழிந்து எல்லாம் முடிந்த பின் தான் அறிய வைத்திருக்கிறது. இப்படி எத்தனை எத்தனை குடும்பங்கள். குடும்பம் என்ற புனிதமான உறவு உருக்குலைந்து சீரழிக்கப்பட்ட நிலையில், உணர்வுகள் சிதைக்கப்பட்ட நிலையில் அந்நிய நாடுகளில் பிரிக்கப்பட்ட நிலையில் பொலிவிழந்து போய் கொண்டிருக்கிறது. இவளது வாழ்வு. மணவாழ்வு சீர்குலைந்து இருப்பதற்கு கூட ஒருவகையில் இதே சூழல் தான் காரணமாயிருக்கிறது. நாட்டில் பிரச்சனை இல்லை என்றால் அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடந்து வாழ்வு சீரான பாதையில் சென்று கொண்டிருக்கும். எத்தனையோ இளைஞர்களைப் பாலியல் ரீதியில் தவறிழைக்க வைத்து விட்டது கூட இதே நாட்டுச் சூழல் அல்லவா? உணர்வுகளை அடக்கி, அடக்கி மாடாக உழைத்துக் கொண்டிருப்பவர்களின் நெஞ்சங்களில் குமுறிக் கொண்டிருக்கும் உணர்ச்சிக்கடல் அணைப்புடைத்து வடிகால் தேடுகையில் அல்லவா தப்புகள் நடந்து விடுகின்றன. இளைஞர்களின் உளவியற் பிரச்சனைகள், கணவன் மனைவியருக்கு இடையிலான பிளவுகள், பெண்களின் உணர்ச்சி வெடிப்புகள், இவை எல்லாம் பிறந்த நாட்டுச் சூழலின், புகுந்த நாட்டுச் சூழலின், கணத்திற்குள் சிக்கி மூச்சு முட்டியதால் வந்து விட்ட விளைவுகள் அல்லவா. அதே சமயம் ஒரு சில பிரச்சனைகள், பெண்களின் உரிமைப் பிரச்சனைகள், பிறந்த நாட்டுச் சமுதாயத்தில் நிலவிய சீர் கேடுகளின் விளைவுதான். இருந்தாலும் இத்தகைய பிரச்சனைகள் எல்லா நாட்டுக்கும் பொதுவான பிரச்சனைகள்.ஆனால் குடும்ப உறவுகள் சீர்குலைக்கப்பட்ட போக்கு, உணர்வுகள் அடக்கப்பட்ட போக்கு. இவை எல்லாம்  பிறந்தநாட்டின் அரசியல் சூழல்கள் உருவாக்கி விட்ட விளைவுகள் அல்லவா. இவையெல்லாம் போர்களால், இரத்தக்களரிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டிருக்கும் மக்கள் யாவருக்கும் பொதுவான பிரச்சனைகள் அல்லவா. இந்தப் போர்களை பூசல்களை ஒழிப்பதற்கு வழியேதுமாயில்லை? உறவுகளை, மனிதத்துவத்தை கொத்திக் குதறிவிடும் போர்களை எதற்கு மனிதன் தொடர்ந்தும் செய்தபடியே இருக்கிறான். அறியாமை நிலவிய ஆதிகால சமுதாயத்தில்கூட மனிதன் முட்டி மோதிக் கொண்டான். ஆனால் அறிவுலகின் உச்சாணிக் கொம்பிலிருப்பதாக தம்பட்ட மடிக்கும் இன்றைய மனிதன் கூட முட்டி மோதித்தான் ஒருவனை ஒருவன் அழித்துக் கொள்கிறான். கல்லையும் பொல்லையும் பாவித்து சண்டையிட்ட ஆதிமனிதனின் அழிவே சிறியதென்றால், இன்றைய மனிதனின் நவீன யுத்த தளபாடங்களின் உதவியுடன் நடைபெறும் மோதல்களின் அழிவோ பயங்கரமானது. போர்கள் ஒரு போதும் ஆக்கத்தை தருவதில்லை. அழிவைத் தான் தருகின்றன. இந்நிலையில் எதற்காக இந்தப் போர்கள்? எதற்காக மனிதன் தன்னைத் தானே இவ்விதம் அழித்துக் கொள்கிறான்?  டெலிபோன் கதைத்து விட்டு சோபாவில் சாய்ந்து துவண்டிருந்த டீச்சரைப் பார்க்கையில் அவனுக்கு பாவமாயிருந்தது. அவளது பிரச்சனை தெரிந்தாலாவது ஏதாவது ஆறுதல் கூறலாம்.

“‘டீச்சர்”  என்று மெதுவாக தயக்கத்துடன் அழைத்த சிறுவனை ஒரு கணம் ஏறிட்டு பார்த்த இவளால் அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சி வெள்ளத்தை மேலும் கட்டுப்படுத்தி வைக்க முடியாமல் போய் விட்டது.

‘அம்மா. ” அம்மா. ஐயோ. அம்மா, எங்களை எல்லாம் விட்டுட்டுப் போயிட்டா’

இவன் இவ்வகையான ஏதோ ஒன்றை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தான். ஆனால் இவ்வகையான சந்தர்ப்பங்களில் எவ்விதம் ஆறுதல் கூறுவது என்பதில் அவ்வளவு பரிச்சயம் இல்லாதிருந்ததனால் சிறிது நேரம் மெளனமாய் இருந்தான்.

‘டீச்சர், நடந்தது நடந்திட்டுது. இந்தச் சமயத்தில் தான் நீ நல்ல உரமாய் நிற்க வேணும் இதற்கு மேல் அவனுக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. வார்த்தை வரவில்லை. ஆனால் அவளால் அடக்கி வைக்க முடியவில்லை. சிறிது நேரம் அழுது கொண்டிருந்தாள். பின் தன்னை ஒருமாதிரி அடக்கிக் கொண்டாள். ‘நானே இப்படி இருந்தால் தங்கச்சிமாருக்கு யார் ஆறுதல் சொல்வது’ என்ற எண்ணமும் எழுந்தது,  பெரிய தங்கச்சிக்குப் போன் எடுப்பதாக கூறியது நினைவுக்கு வந்தது. மீண்டும் டயல் பண்ண, விரைவிலேயே இந்த முறை லைன் கிடைத்தது.

“ஹலோ. ஹலோ” “ஹலோ. இது நான், அக்கா பேசுறன். கனடாவில் இருந்து’ ‘அக்கா, மீண்டும் பெரிய தங்கச்சி விம்மத் தொடங்கினாள். தங்கச்சி அழாதை. நடந்தது நடந்து போச்சு. இந்தச் சமயத்தில் தான் கவனமாயிருக்க வேணும். இப்ப கொழும்பில எங்க இருந்து பேசுறாய்”

‘பக்கத்து வீட்டு ஆறுமுகம் மாமாவின்ரை மருமகன்ரை வீடு. ஆறுமுகம் மாமாதான் எல்லா உதவி செய்தவர். அவரில்லாட்டி நான் நல்லாய் கஷ்டப்பட்டிருப்பன்’

ஆறுமுகம் அங்கிள் நிக்கிறாரே’ ‘இப்பதான் வெளியில போனவர்”

“நான் அவரிட்ட தாங்க் பண்ணினதா சொல்லி விடு. சின்னத் தங்கச்சி எங்கே”

“இங்க தான் நிக்கிறா. அவ ஒரே அழுதபடி, அம்மாவோட அவளுக்குத் தான் சரியான ஒட்டல், நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தன். எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.”

‘அவளை ஒருக்கா கதைக்கச் சொல்லு.”

‘யர்ரு தங்காவா?”

‘அக்கா. அக்கா. ஐயோ அம்மா.”

சின்னத் தங்கச்சி அழுது குளறத் தொடங்கி விட்டாள். அவளை ஆறுதல் படுத்துவது கஷ்டமாயிருந்தது. இதற்குள் பெரிய தங்கச்சி போனை மீண்டும் எடுத்து விட்டாள்.

‘பாத்தியா அக்கா. இவள் இப்படித்தான் எந்த நேரமும் அழுதபடி..”

“தங்க்ச்சி நீ தான் தங்காவை நல்லா கவனிக்க வேணும். கையில காசு நிலைமை எப்படி..”

‘காசுக்கு பிரச்சனையில்லை. நீ அனுப்பினதில் இன்னம் நிறைய இருக்கு. இப்ப அவசரமில்லை; தேவை என்றால் பிறகு சொல்லுறன்’ ‘எதுக்கு நீங்கள் கொழும்பு வந்தனிங்கள். பேசாமல் ஆறுமுகம் அங்கிளிட்ட விசயத்தைச் சொல்லச் சொல்லியிருக்கலாமே”

‘அப்படித்தான் முதலில நினைச்சிருந்தோம். ஆனா நீ செய்த ஸ்பொன்சர் போர்ம்ஸ் வந்திருந்தது. அதுதான் அப்படியே வந்தனாங்கள்.”

‘அடக் கடவுளே. அம்மா போன பிறகா, ஸ்பொன்சர் போர்ம்ஸ் போக வேணும். ஃபமிலி கிளாசிலை அல்லவா

‘எல்லோரையும் ஸ்பொன்ஸர் பண்ணினனான். ஆனா இப்ப அம்மா இல்லாதபடியா இவங்கள் றியெக்ட் பண்ணிப் போடுவாங்கள். என்றாலும் இங்கத்தைய எம்.பியைப் பிடித்து ஹியு.மனிட்டேரியன் கிறவுண்ட்ஸிலை ட்ரை பண்ணிப் பார்த்தால் சரி வரலாம்’ மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

‘சரி தங்கச்சி, போர்ம்கள் எல்லாத்தையும் ஆறுமுகம் அங்கிளைக் கொண்டு நிரப்பி அனுப்பு. எதுக்கும் கைகாவலுக்கு நானொரு இருநூறு டொலர் அனுப்புறன். நீ தான் தங்காவை கவனமாய் பார்த்துக் கொள். அது சரி அம்மாட விசயம்
கடைசிகளுக்கு தெரியுமோ”

“ஒமக்கா. இரண்டு பேரும் வந்தவையள். நல்லாமாறிப் போச்சினம். ஒரு சொட்டுக் கண்ணிர் கூட விடவில்லை. இருந்து எங்களுக்கு ஆறுதல் சொல்லிப் போட்டு போனவை’

“இயக்க ட்ரெய்னிங் அவையளை மாத்திப் போட்டுது போல. எதுக்கும் நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாமல் இருங்கோ. என்ன தேவை என்றாலும் அறிவியுங்கோ. தங்காவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கோ. அப்ப என்ன வைக்கட்டே’

“ஒமக்கா, நல்ல காலம் நீயிருக்கிறதாலை எங்களுக்குப் பயமில்லை. அக்கா. அக்கா. இங்க அங்கிள் வந்திட்டார், குடுக்கிறன். கதை”

‘அங்கிள். அங்கிள். உங்களுக்கு எப்படி தாங்க் பண்ணிறது எண்டு தெரியலை. நீங்கள் செய்த உதவிக்கு”

‘தங்கச்சி ஒன்றுக்கும் கவலைப்படாதை. உன்ரை தங்கச்சிமாரைப் பற்றி ஒன்றுக்கும் யோசிக்காதை, உங்கட ஸ்பொன்சர் அலுவல் முடியிற வரை இங்கேயே தங்கட்டும்.”

“தாங்ஸ் வெரிமச் அங்கிள். அங்கிள் உங்களுக்கு காசு அனுப்பிவிடுறன். தங்கச்சிமார் அங்க இருக்கிறதுக்கு வாடகையாயிருக்கட்டும்.”

“தங்கச்சி விசர்க்கதை கதைக்காதை. உன்ரை கொப்பர் என்ர பெஸ்ட் பிரண்ட், உன்ரை கொப்பர். கொம்மாயவை எங்களுக்கு எவ்வளவு செய்திச்சினம். அதை நாங்கள் மறப்பமே. சரி பிள்ளை. கனநேரமாய் கதைக்கிறாய். தங்கச்சியிட்ட போனைக் குடுக்கிறன். கதையுங்கோ. நீ ஒன்றுக்கும் யோசிக்காதை ஒகே’

‘அக்கா வேறென்ன?”

‘சரி நான் பிறகு ஆறுதலாய் எடுக்கிறன் அனுப்பிறகிலை அங்கிளுக்கும் நூறு டொலர் குடு, அவர் வாங்க மாட்டன் என்று நிற்பார். நீ குடு என்ன, சாப்பாட்டுச் சாமான்களும் வேண்டிப் போடு. ஒகே.”

‘ஓமக்கா.”

இவளுக்கு இப்ப மனசு சற்று தெளிவாக இருந்தது. அறைக்குள்ளிருந்து அல்பத்தை கொண்டு வந்தாள். போட்டோக்களை பார்க்கையில் அவளுக்கு சந்தோசமாக இருந்தது. இவனுக்கும் அவற்றைக் காண்பித்தாள். அம்மாவின் இளமைக் காலப் போட்டோவில் இருந்து அண்மைக்கால போட்டோ வரை வைத்திருந்தாள். லட்சுமிகரமான அம்மாவின் முகம் மீண்டும் இலேசாக துயர அலைகளை எழுப்பின. இவ்வளவு நாளும் அம்மா இருந்தா. தங்கச்சிமாரைப் பார்க்க. இனி அவையஞக்கு ‘ஒரு வழி செய்ய வேணும்’

திடீரென்று யோசனை வந்தவளாக. ‘சிறுவா. இது யார் தெரியுமா?”

‘முகச்சாடையைப் பார்த்தா உன்ரை தங்கச்சி மாதிரி தெரியுது”

‘ஓம். இவதான் மூத்த தங்கச்சி. உன்னை நான் ஒன்று கேட்பன். பயப்படாமல் பதில் சொல்லு’

“என்னவாம்?

‘இவள் எப்படி இருக்கிறாள்’

‘வடிவாய் உன்னைப் போல இருக்கிறாள், டீச்சர்”

“அப்ப இவளைக் கல்யாணம் செய்யிறியா?”

‘என்ன டீச்சர் பகிடியா விடுறாய்”

‘இல்லை. உண்மையாய் தான். யாராவது இருந்தால் பரவாயில்லை. இல்லை என்றால்’

‘அப்படி ஒன்றும் இல்லை. ஆனா எனக்கு இருக்கிற பிரச்சனைக்குள்ள இந்தக் குடும்பம் அது இதென்று சரிப்பட்டு வருமென்று நான் நினைக்கயில்லை’

‘எனக்கு உன்னைப் பற்றி தெரியும். உன்னை மாதிரி ஒரு மாப்பிள்ளையை எடுக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று எனக்குத் தெரியும். இப்ப அவசரமில்லை. ஆறுதலாய் கட்டலாம். என்ன சொல்றாய்”

‘டீச்சர் என்ரை எதிர்காலத்தைப் பற்றி எனக்கே சரியாய் தெளிவான திட்டமில்லை.”

‘இந்த நிலையில் இப்ப பதில் வேண்டாம். வடிவாய் யோசித்து இரண்டு மாதத்தில சொல்லு”

இச்சமயம் மீண்டும் டெலிபோன் அடித்தது.

“ஹலோ”

‘இது நான்”. அவளது கணவன்.

‘என்னை மன்னிச்சுக் கொள். அன்றைக்கு நீ போன் எடுக்கேக்கை விசயம் தெரியாமல் முட்டாள் தனமாய் நடந்து போட்டன். மன்னிச்சுக் கொள். ஐஆம் சொறி. உன்ரை அம்மாட விசயம் இப்பதான் தற்செயலாய் தெரிந்தது. என்ரை ஃபரெண்டு

“ஒருவனோட கொழும்புக்கு கதைக்கேக்கை தான் சொன்னவன். ஐ றியலி பீல் சொறி போர் யூ. எதுக்கும் இன்னும் கொஞ்சம் நேரத்தில வாறன். ஒன்றுக்கும் கவலைப்படாதை.”

இவளுக்கு சந்தோசமாயிருந்தது. இவளுக்கு துன்பம் என்றவுடன் இவளது கணவன் எப்படித் துடிக்கிறான். அவனது வார்த்தைகள் எவ்வளவு இதமாயிருக்கின்றன. இவ்வளவு அன்பை இன்னமும் இவள் மேல் அவன் வைத்திருக்கிறான்? இப்படி ஒரு அன்பைப் பெறுவதற்கு நான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவள் தான் இவ்விதம் எண்ணிக் கொண்டாள். பிரிவுகள், இழப்புகள் சிலவேளைகளில் பிளவுண்ட நெஞ்சங்களை ஒன்று சேர்க்கவும் உதவி விடுகின்றனதான்.


அத்தியாயம் 14: நண்பனின் தம்பி!

‘இந்த உலகத்தில் உண்மையான அன்பு தான் இன்பத்தை தருகின்றது. இவர் எவ்வளவு தூரம் என்னில் அன்பு வைத்திருக்கிறார். எனக்காக இப்படியெல்லாம் உருகிப் போகின்றார். இப்படிப்பட்ட சமயங்களில் இத்தகையதொரு ஆதரவை வேண்டித்தானே இதயம் ஏங்கித் தவிக்கின்றது? மீண்டும் சோபாவில் அமர்ந்தாள். தாயின் பிரிவு தந்த வேதனையால். வாடியிருந்த போதும் தன்னை உறுதியான நிலைக்கு மாற்றிக் கொண்டாள். கணவனின் ஆதரவான பேச்சும் இவ்விசயத்தில் அவளுக்கு உறுதுணையாக இருந்து விட்டது. சிறுவனைப் பார்த்தாள். அவனும் யோசனையில் மூழ்கிப் போயிருந்தான். பார்க்கப் பாவமாயிருந்தது. தனது கஷ்டத்தை அவன் மேல் திணிக்கின்றோமோ என்று பட்டது.

‘சிறுவா”

‘என்ன டீச்சர்”

‘நான் கேட்ட விசயத்தைப் பற்றி ஏதும் பிழையாய் நினைக்கிறியா?

‘இல்லை டீச்சர்”

‘நீ அதைப் பற்றி அதிகம் யோசித்து மூளையைக் குழப்பிக்கொள்ளாதை. ஆறுதலாய் யோசித்துப் பார். பெரிய தங்கச்சிக்கு அதிட்டமிருந்தால் எல்லாம் நல்லபடியாய் நடக்கும்”

சிறுவனுக்கு டீச்சரைப் பார்க்க பாவமாயிருந்தது. இவளுக்கு எத்தனை பிரச்சினைகள். ஊரிலுள்ள குடும்பத்தவர்களைத் தாங்க வேண்டிய பொறுப்புகள். தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தள்ளிச் செல்ல வேண்டிய கவலைகள். நான் இவளது தங்கச்சியைக் கட்டுவதால் கட்டாயம் இவளது பாரங்களில் ஒன்று குறையத்தான் செய்யும். ஆனால் என் வாழ்க்கையைப் பற்றிய எதிர்காலத் திட்டங்கள் இன்னமும் தெளிவான நிலையில் நானில்லை. இந்நிலையில் இதுபற்றி அவசரப்படக் கூடாது.

‘சிறுவா”

‘டீச்சர். என்ன டீச்சர்”

இப்ப போன் பண்ணினது யார் தெரியுமோ?

‘யார் டீச்சர்”

இவர் தான். சிறிது மெளனமாயிருந்தாள்.

“அவர் எவ்வளவு கவலைப்பட்டார் தெரியுமா? எப்படித் துடிச்சுப் போனார். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரும் வரப் போறார் சிறுவனுக்கு அவளது கணவன் மேல் ஒருவிதமான மதிப்பு எழுந்தது. அதேசமயம் அவன் வரும் சமயத்தில் அவர்களின் அந்தரங்கத்தை குழப்பும் வகையில் தான் இடைஞ்சலாயிருப்பதும் சரியல்ல என்று பட்டது.

‘டீச்சர்”

“என்ன சிறுவா”

‘டீச்சர் எனக்கு கொஞ்சம் அலுவல் இருக்கு”

இவன் தயக்கத்திற்கான காரணத்தை அவள் அறிந்தே யிருந்தாள்.

‘சிறுவா. நீ கட்டாயம் இருக்க வேணும். அவரையும் மீட் பண்ண வேணும். நீயிருப்பது எனக்கு ஆறுதலாயிருக்கு”

அவளது அப்போதைய நிலையில் அவளது வேண்டுதலைத் தட்டுவதும் அவ்வளவு சரியாகப் படவில்லை. பழையபடி டீச்சர் அல்பத்துக்குள் மூழ்கி விட்டாள். அவளது நிலையைக் குலைக்க விரும்பாத அவனும் சிந்தனையில் மூழ்கி விட்டான். அவனது சிந்தனை நாட்டுப் பிரச்சனையில் மூழ்கியது.

‘இன்னும் எத்தனை நாட்கள் தான் எங்கட நிலைமை இப்படி இழுபட வேணுமோ? கிணறு வெட்ட பூதம் வெளிக்கிட்ட மாதிரியல்லவா இருக்கறது எங்கட நிலைமை. ஆரம்பத்திலை எவ்வளவு எதிர்பார்ப்புடன் நம்பிக்கையுடன் தொடங்கிய போராட்டம் இன்றைக்கு ஒற்றுமையிழந்து சிதறுண்டு. நம்பிக்கையற்றதொரு நிலைமையில் போய்க் கொண்டிருக்கிறது. உபகண்ட அரசியலில் பகடைக்காய்களாகி விட்ட நிலைமையில் எவ்வளவு தேவையற்ற அழிவுகள்.

இண்டர்கொம்’ ஒலித்தது.

‘யாரது

“நான் இது அவளது கணவன். இவள் லொபி கதவை திறப்பதற்குரிய பட்டனை அழுத்தினாள். அவளிடத்தில் ஒருவித பரபரப்பு காணப்பட்டது. கணவனுடனான இந்தச் சந்திப்பு முந்தைய சந்திப்புகளிலிருந்தும் மாறுபட்டது. இம்முறை தான் இவளும் முதன்முறையாக அவனை மீண்டும் ஏற்பதற்குரிய பக்குவத்திற்கு வந்திருந்தாள். இச்சந்திப்பு அவளைப் பொறுத்தவரையில் அவளது வாழ்க்கையில் წლ2 (სნ திருப்புமுனையாக அமையப் போகிறது. மீண்டும் தாயாரின் நினைவும் கூடவே தோன்றியது. மிகவும் சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டாள்.

“டொக் டொக் டொக்”

கதவு தட்டப்படும் ஓசை. இவள் எழுந்து சென்று கதவைத் திறந்தாள். எதிரில் அவன் அவளது கணவன். முகத்தில் வேதனை மண்டியிருந்தது. அவனைக் கண்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த துயரத்தை அவளால் அதற்கு மேலும் தடுத்து வைக்க முடியவில்லை.

“ஐயோ. அம்மா. அம்மா.” என்று குலுங்கி குலுங்கி அழுதபடியே அவனைப் பாய்ந்து அணைத்தபடி அவன் மார்பில் சாய்ந்தாள்.

“ஹனி. டேக் இட் ஈஸி. அவளது கணவன் அவளைத் தாங்கியவனாக ஆறுதல் கூறினான். சிறுவன் மெல்ல எழுந்து பல்கணிக்கு வந்தான். அவனுக்கு தற்போது மனது சந்தோசமாக இருந்தது. டீச்சரைப் பொறுத்தவரை இனிக் கவலைப்படத் தேவையில்லை. அவளும் கணவனும் சேர்ந்து விட்டார்கள்.

அவர்களிருவரையுமே காலம் நன்றாக வாட்டி எடுத்து விட்டது.

டீச்சரோ அதேசமயம் கணவனின் ஆதரவான அணைப்பினுள் தஞ்சம் புகுந்தவளாக தன்னையே கண்ணிரால் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். தனது தாயின் பிரிவிற்காக அழுதாள். தன் துரோகத்திற்காக அழுதாள். தன் கணவனின் தூய அன்பினை நினைத்து அழுதாள். அவளது அழுகையால் அவனது நெஞ்சு நனைந்து கொண்டிருந்தது. அவனும் அவள் அழுவது வரையில் அழட்டும் என்று எண்ணியவனாக அவளை ஆதரவாக தாங்கிக் கொண்டிருந்தான். உண்மையில் மனம் விட்டு அழுவதன் மூலம் மனப் பாரங்கள் குறைந்து விடத்தான் செய்கின்றன.

நீண்ட நாட்களின் பிரிவினால் அவர்களிருவருக்குமிடையில் ஏற்பட்டு விட்ட இந்த மனப்பூர்வமான இணைப்பு அவர்களிருவரையும் சுற்றுச்சூழலை மறக்க வைத்தது. அந்தச் சமயம் அவர்களிருவரும் சிறுவன் இருப்பதையே மறந்து போனார்கள். சிறிது நேரத்தில் அவள் தன் நிலைக்கு திரும்பினாள். சிறுவன் பல்கனியிலிருப்பதை அவதானித்தாள். அவளது கணவனிடம் சிறுவனைப் பற்றி சிறுவனின் மாமா மகனைப் பற்றி கூறினாள்.

‘உங்களுக்கு சிறுவனை இன்ட்ரடியூஸ் பண்ணவேணும்” என்றாள். இருவரும் பல்கனிக்கு வந்தார்கள்.

‘சிறுவா. மீட் மை பிலவட் ஹஸ்பண்ட்”

‘ஹாய். கிளாட் டு மீட் யூ” சிறுவன் சங்கோஜத்துடன் கையை நீட்டினான். சிலபேரைப் பார்த்ததும் உடனேயே பிடித்துப் போய் விடுகிறது. அவளது கணவனுக்கும் அவனைப் பார்த்தும் உடனேயே பிடித்துப் போய் விட்டது.
சிறிது நேரம் அவளது கணவன் சிறுவனுடன் பேசிக் கொண்டிருந்தான். அவனது மாமா மகனைப் பற்றி விசாரித்தான். அதேசமயம் சிறுவனுக்கும் அவர்களிருவரையும் தனிமையில் விட்டு விட்டுப் போய் விடுவதே நல்லது போல் பட்டது.
நீங்களிருவரும் என்னை மன்னிச்சுக் கொள்ள வேண்டும். எனக்கும் கொஞ்ச அலுவலிருக்கு இவ்விதம் சிறுவன் கூறவும் அவள் இடைமறித்தாள்.

‘நீ பொய் சொல்லாதை, நீ கட்டாயம் இருக்க வேணும். நான் சமைக்கப் போறன். அம்மாட எட்டுச் செல்வா நினைச்சுக் கொள்ளன்’

இதற்கு மேலும் அவனால் மறுப்புக் கூற முடியவில்லை. ஓகே டீச்சர். சமையலுக்கு ஏதாவது உதவி செய்யட்டே’ ‘ஒன்றும் வேண்டாம். இரண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருங்கள்.”

அவளது கணவனும் அவனும் பல்கனியில் தனித்து விடப்பட்டனர். அவர்களுக்கு இடையில் உரையாடல் தொடர்ந்தது. சிறிது நேரத்திலேயே நெருக்கமாகி விட்டனர்.

‘நானே உங்களிட்ட டீச்சுருக்காக வர இருந்தனான். அதற்குள் நிலைமை வேறுவழியில் வந்து விட்டது. நீங்களிருவரும் சேர்ந்தது எவ்வளவு சந்தோசமாய் இருக்குது தெரியுமா?”

அவளது கணவனுக்கும் சிறுவனது பேச்சு ஆறுதலை தந்தது.

‘நீங்களிருவருமே நடந்ததெல்லாவற்றையுமே அடியோடு மறந்து விட்டு புதிதாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பழையதைக் கிளற வேண்டாம். நீங்களிருவருமே ஒருவரையொருவர் உயிருக்குயிராய் நேசிக்கிறீங்கள். ஏதோ ஒருசில தேவையில்லாத சம்பவங்கள் ஏற்பட்டு விட்டன. அதையெல்லாம் கெட்ட கனவாக மறந்து விடுங்கள். சிறுவன் தொடர்ந்தான்.

‘டீச்சருக்கு இந்த சமயத்தில் தான் ஆதரவும் அன்பும் நிறைய வேண்டும். நீங்கள் தான் அவவுக்கு எல்லாமே. நீங்களிருவருமே சந்தோசமாக இப்படியே எப்பவும் இருக்க வேண்டும். அதுதான் என் விருப்பம்”

அன்றிரவு சிறுவன் டீச்சரிடமிருந்து விடைபெற்றுச் சென்ற போது இரவு பன்னிரண்டாகி விட்டது. அவனது மனமும் சந்தோசத்தால் பூரித்திருந்தது.

வீதி இரவின் அமைதியில் மூழ்கி ஆரவாரமற்று கிடந்தது. வீதியில் இவனைத் தவிர வேறு யாருமேயில்லை. அச்சமயம் ஒரு கார் இவன் அருகில் வந்து நின்றது. நின்ற காரிலிருந்து ஒருவன் இறங்கினான். இலங்கையன் தான். அவனை எங்கோ பார்த்தது போன்ற நினைவு. ஆனால் உடனடியாக ஞாபக்துக்கு வரவில்லை. வந்தவன் கேட்டான். ‘என்ன என்னைத் தெரியுதா? வந்தவனின் குரலும் தடிப்பாக, இறுக்கமாயிருந்தது.

“எங்கேயே பார்த்த மாதிரியிருக்கு, ஞாபகம் வரேல்லையே’

‘அதெப்படி ஞாபகம் வரும் வந்தவன் இளக்காரமாக சிரித்தான். திடீரென அவனது குரலின் தொனி மாறியது. டேய் முரண்டு பிடிக்காதை. நான் சொன்னபடி செய். பிரச்சனையில்லை. பார்த்தியா இதை
அவன் கைகளில் சிறியதொரு பிஸ்டல். ஆனால் சிறுவன் மிரளவில்லை. பேசாமல் இருந்தான்.

‘பேசாமல் காரிலை ஏறு. உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும்’

இவனுக்கு இப்போது ஞாபகம் வந்தது. இவன். இவன்” அவனது நண்பனின் தம்பியல்லவா. இவன் தான் டெலிபோனில் அடிக்கடி மிரட்டுபவனாயிருக்க வேண்டும்.


அத்தியாயம் 15: புதிய பாதை!

அதே சமயம் சிறுவனின் மனது துரிதமாக வேலை செய்தது. இந்தச் சமயத்தில் இவனோடு போவது உயிராபத்தாக முடியும். சிறுவன் சாவதற்கு பயப்படவில்லை. ஆனால் அதற்கிடையில் உண்மை வெளிப்பட வேண்டும். இந்தச் சமயத்தில் இவனுக்கு இயக்க ட்ரெயினிங் கை கொடுத்தது. மின்னல் வேகத்தில் செயற்பட்டான். வந்தவன் எதிர்பார்க்கவில்லை. தடுமாறி நிலைகுலைந்து போனான். வந்தவனின் கையிலிருந்த பிஸ்டல் கீழே விழவும் ஒடிச்சென்று அதனையெடுத்தபடி , அதனை நோக்கி ஓடி வந்த நண்பனின் தம்பி மீது இன்னுமொரு பலமான உதையை விட்டான். இவனது உதையால் மீண்டும் நிலைகுலைந்தவனது முகத்தில் பலமாகக் குத்துகளை இறக்கினான். இவனது குத்துகளின் வலிமையினாலும், எண்ணிக்கையினாலும் நிலத்தில் வீழ்ந்த நண்பனின் தம்பியைப்பார்த்துச் சிறுவன் கூறினான்:

“பயப்படாதை. உன்னை நான் கொல்ல மாட்டன். காரிலை ஏறு. நான் சொல்றபடி செய். உன்னோட ஒருக்கா வடிவா கதைக்க வேணும்’

வந்தவன் பதில் பேசாமல் காரில் ஏறினான். சிறுவன் பின்சீட்டில் அமர்ந்து கொண்டான்.

“எங்கே போகலாம்? கடைசியில் சிறுவனுக்கு பார்க் தான் சரியான இடமாக பட்டது.

“எங்க போக நண்பனின் தம்பி கேட்டான். பார்க்கிற்கு திரும்பு. நிலவும் விண்ணிலிருந்த நட்சத்திரங்களும் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

சிறுவன் கேட்டான். ‘என்ன பிளானோட வந்தனி? அவன் மெளனமாய் இருந்தான். ‘என்னைக் கொலை செய்ய பிளான், இல்லையோ’

இதற்கும் அவன் பதில் கூறாமல் மெளனமாக இருந்தான்.

‘உன்ரை மெளனம் நான் கேட்டதற்கு சம்மதம். அப்படித்தானே’

இப்போது அவன் வாய் திறந்தான். ‘உனக்கு பாசம் எண்டால் என்னவென்று தெரியுமா? என்ரை அண்ணையில் நான் எவ்வளவு பாசம் வைச்சிருக்கிறன் தெரியுமோ? என்ரை அண்ணை தன்ரை இயக்கத்தில. எங்கட நாட்டிலை, மக்களிலை, எவ்வளவு பாசம் வைச்சிருந்தவர். உன்னிலை எவ்வளவு பாசம் வைச்சிருந்தவர். அதாவது உனக்குத் தெரியுமோ? இப்படி கேட்டவன் திடீரென பேசுவதை நிறுத்தி கேட்டான்.

‘இப்ப என்னை என்ன செய்யப் போறாய்? என்ரை அண்ணையைச் சாக் கொண்டது. மாதிரி என்னையும் முடிக்கப் போறியோ’

பயப்படாதை. நான் உன்னைக் கொல்ல மாட்டன்’

“பிறகென்னத்துக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போறாய்”

“உனக்கு நடந்ததை எல்லாம் விளங்கப்படுத்த வேணும். அப்பதான் உனக்கும் உண்மை தெரியும். நான் படுற வேதனை விளங்கும்”

‘உங்களுக்கு வேதனைப்படக் கூடத் தெரியுமோ? ” அவன் இகழ்ச்சியாகச் சிரித்தான்.

“எத்தனை பேரை மண்டையில போட்டிருப்பியள்? சித்திரவதை செய்திருப்பியள்? எத்தனை பேரின்ரை முதுகை அயர்ன் பண்ணியிருப்பியள்? தோலை உரிச்சிருப்பியள்? நிகங்களை பிடுங்கியிருப்பீங்கள்? உங்களுக்கெல்லாம் வருத்தப்படக் கூடத் தெரியுமோ?

அவன் சிரித்தான்.

“நாங்கள் இயக்கத்தில் இருந்தனாங்கள். அதுக்காக உணர்ச்சிகளை இழந்து விட்ட சடங்களல்ல. எங்களுக்கும் உணர்ச்சிகளுண்டு. அதை நீ உணர வேண்டும். உன்ரை வேதனை எனக்கு நல்லாய் விளங்குது. பழி வாங்கிற அளவுக்கு அந்த வேதனைதான் உன்னை துரத்தி விட்டிருக்கு. அதனால தான் உன்னோட நான் வடிவாய் கதைக்க விரும்பிறன். என்னை தெளிவாக்க விரும்புறன். அதுக்குப் பிறகும் நீ என்னை கொல்ல விரும்பினால் நான் தடுக்க மாட்டன்’

இவ்விதம் கூறிய சிறுவனை நண்பனின் தம்பி ஒரு வித வியப்புடன் நோக்கினான்.

‘பார்க் இரண்டாகப் பிரியுமிடத்தில் காரை நிறுத்தி நண்பனின் தம்பி கேட்டான்.

“இப்ப எந்தப் பக்கம் போறது”

“ரைட்டுக்கு திருப்பு. அந்த மூலையில் காரை நிப்பாட்டிப்போட்டு. அந்தா. அந்த மரங்களுக்கு பக்கத்தில் விரிந்து கிடக்குதே புல்வெளி, அங்கை பேசாமல் போ’

நண்பனின் தம்பி சிறுவன் சொன்னதை மறுபேச்சின்றி பின்பற்றினான். பார்க் அமைதியில் மூழ்கியிருந்தது. அந்தப் புல்வெளியில் தொலைவாக இருந்ததால் யாருமே கண்டுவிடப் போவதில்லை. ஆறுதலாக கதைக்கலாம்.

இருவரும் ஓரிடத்தை தெரிவு செய்து அமர்ந்து கொண்டார்கள். நண்பனின் தம்பிக்கும் தனக்கும் பாதுகாப்பு வலயமொன்றை ஏற்படுத்தும் தொலைவிலேயே சிறுவன் அமர்ந்திருந்தான்.

“சரி. உன்ரை பிரச்சனையை வடிவாய் சொல்லு, உன்ரை அண்ணையை நான் முடித்து விட்டேன் என்று தானே இந்த முடிவுக்கு வந்தாய்’

சிறுவனின் இந்தக் கேள்விக்கு நண்பனின் தம்பி ‘ஆமென்பதற்கு அறிகுறியாக தலையை அசைத்தான்.

‘நீ தான் அண்ணையை கைது செய்து கொண்டு போனாய். அதுக்குப் பிறகு நாங்கள் அவரைப் பாக்கவேயில்லை. உன்னை நம்பித்தானே அவர் உங்கட இயக்கத்திற்கு வந்தவர். உனக்கு ஞாபகமிருக்குதா?

‘என்னத்தைப் பற்றி”

“அண்ணாவை நீ இயக்கத்திற்கு கூட்டிக்கொண்ட புதிதில் அம்மா உன்னட்டை வந்து கதைத்ததைப் பற்றி கூறினவ. அது உனக்கு ஞாபகமிருக்கா”

‘ஓம் அதுக்கென்ன”

“அப்ப நீ என்ன சொன்னனி?”

“நான் என்ன சொன்னேன். சரியாக ஞாபகம் வரேலை”

“அதெப்படி உங்களுக்கு எல்லாம் ஞாபகம் வரும். அம்மா எல்லாத்தையும் சொன்னவ. எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு”

இவ்விதம் கூறிய நண்பனின் தம்பி சிறிது நேரம் மெளனமாயிருந்தான். பின் தொடர்ந்தான்.

“நீ சொன்னியாம் அம்மாட்டை, அம்மா, உங்கட மகனைப் பற்றி நீங்கள் பெருமைப்பட வேணும். எங்கட சமுதாயத்தின்ரை விடுதலைக்காக போராடப் புறப்பட்ட அவனை உங்களை மாதிரி அம்மாமார் வீரத்தாய்மார்களாக நின்று வாழ்த்தி வழியனுப்ப வேண்டுமென்று சொன்னாயாமே. அதாவது உனக்கு நினைவிருக்குதா?”

‘உண்மை தான்’,

சிறுவனுக்கு எல்லாமே நினைவுக்கு வருகிறது. அப்படித்தான் இவன் அப்பொழுது கூறினான். எல்லாமே நன்றாக நினைவுக்கு வருகிறது. இதயம் லேசாக வலித்தது. நண்பனின் நினைவும் கூட எழுந்தது. அந்தப் பார்வை, ஏக்கம் படிந்து, நம்பிக்கை சிதைந்த முகம். நெஞ்சில் எழுகிறது. சிதைந்தது அவனது நம்பிக்கை மட்டுமா?

‘கடைசியிலை நீங்களெல்லாரும் சேர்ந்து எங்கண்ணனைக் கொண்டு போட்டீங்கள். விடுதலையெண்டு சொன்னிங்கள். கடைசியில அவருக்கு உலகத்திலை இருந்தே விடுதலை கொடுத்திட்டீங்களேடா”. அந்த இருட்டிலும் அவன் அழுவது தெரிந்தது. சிறுவனது வேதனையும் சற்றே அதிகரித்தது.

‘தம்பி. சிறுவனின் குரலில் மெல்லிய கரகரப்பு தென்பட்டது.

‘நீ சொன்னது அவ்வளவும் சரிதான். உங்கண்ணனை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ பேரின் அழிவுக்கு காரணமாகத் தான் இருந்து விட்டோம். நீ சொன்னது போல் உங்கண்ணனை நான் தான் கைது செய்தேன். உண்மைதான். ஆனால் ஏன் கைது செய்தேன்?”

நண்பனின் தம்பி இவன் கூறுவதையே மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறுவன் தொடர்ந்தான்.

‘உன்ரை அம்மாவிடமும் நான் கூறியதெல்லாம் உண்மை தான். ஏன். உன்ரை அண்ணையைப் போலத் தான் நானும் விடுதலை வேணுமெண்ட பேராவேசத்திலை இயக்கத்திலை சேர்ந்தனான். நாட்டு விடுதலையை உயிருக்கு மேலாக நேசித்தவன். இதனால் தான் இயக்கத்தில் சேர்ந்தன். எங்கட மக்களின் விடுதலையைத் தவிர நான் வேறெதனையுமே எண்ணியிருக்கவில்லை. அதே சமயம் விடுதலைக்காக இயக்கத்திலை சேர்கிற ஒவ்வொருவனுக்கும் சில முக்கியமான கடமைகளுண்டு. கட்டுப்பாடுகள் உண்டு.”

சிறிது நேரம் சிறுவன் மெளனமாக இருந்தான். ஆகாயத்தை நோக்கினான். நட்சத்திரங்கள் நகைத்தபடி இருந்தன. நிலவை மட்டும் சில கருமுகில் கூட்டங்கள் விழுங்கியிருந்தன. டொன்வலிப் பார்க்வேயும் ஆரவாரமின்றி சோர்ந்து போய்க் கிடந்தது. உடம்பை வருடிக் கொண்டு மெல்லிய குளிர் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. நீண்டதொரு பெருமூச்சு ஒன்று சிறுவனின் நாசியிலிருந்தும் வெளிப்பட்டது.

“ஆ. என்னத்தைப் பற்றிச் சொன்னேன். போராளியின் கடமைகளைப் பற்றியா? உண்மை தான். போராளிகளின் நிலைமை சிக்கலானது. இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான். ஒரு புறம் நாட்டு விடுதலைக்காக துடிக்கிற நெஞ்சு, மறுபுறம் பந்த பாசங்களை உதறித் தள்ளிவிட்டு கடமையாற்ற வேண்டிய நிலைமை, கடமைக்கு குறுக்கே எது வந்தாலும் அவற்றை ஒதுக்கித் தள்ள வேண்டும் இல்லாவிட்டால் ஒரு போராளியால் கருமமாற்ற முடியாது. ஒரு போராளியால் ஒரு போதுமே தனித்து செயலாற்ற முடியாது. அப்படி ஒவ்வொருத்தரும் தத்தமது உணர்வுகளுக்கேற்ப இயங்கத் தொடங்கி விட்டால் எல்லாமே சிதைந்து விடும். இப்படித்தான் ஒரு நிலைமையில் நான் இருந்தேன். இயக்கக் கட்டுப்பாடுகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய சூழல். உன் அண்ணனுக்கெதிராக உளவாளி என்ற குற்றச்சாட்டு, என்னைக் கைது செய்யும்படி உத்தரவிட்டார்கள். நான் என்ன செய்ய? உன் அண்ணையை என் நண்பன் என்ர ரீதியில் அணுகி அவனைத் தப்ப வைப்பதா? அல்லது விடுதலைக்காக உயிரையும் அர்ப்பணித்த நிலையில் பந்த பாசங்களை துறந்து விட்டு கடமையைச் செய்வதா? நான் என்ன செய்ய? என் நிலையில் நீ இருந்தால் என்ன செய்வாய் சொல்லு?”

நண்பனின் தம்பியை இந்தக் கேள்வி திகைக்க வைத்தது. சிந்திக்க வைத்தது. அவன் நிலையில் இவன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான்? பகவத் கீதையின் ஞாபகம் எழுந்தது. ‘கடமையைச் செய். பலனை எதிர்பாராதே. தர்மப் போரில் பந்த பாசங்களை துறந்து விடு’ சிறுவனின் நிலை சிக்கலானது தான். அப்படியென்றால் அவன் அண்ணையின் இழப்பிற்கு காரணம் யார்? யார் குற்றவாளி?

‘பார்த்தாயா. உனக்கே பதில் சொல்ல முடியவில்லை. இது தான் எனது நிலைமை. அன்றைக்கிருந்த சூழலிலே நான் அப்படித்தான் செயல்பட வேண்டிய நிலைமை. ஆனால் இன்றைக்கு சிந்தித்துப் பார்க்கும் போது உன் அண்ணையைத் தப்ப வைத்திருக்கலாம் போல் படுகுது. இதனால் தான் சொன்னேன். போராளியின் நிலை இரு தலைக் கொள்ளி எறும்பு மாதிரி என்று. இயக்கக் கட்டுப்பாடுகளை ஏற்று பந்த பாசங்களை துறந்து கடமையாற்ற வேண்டிய நிலைமையில் இயக்கம் தவறான கோட்பாடுகளின் அடிப்படையில் செல்லும் போது பிழையான நடவடிக்கைகளை விடுதலை என்ற பெயரில் மேற்கொள்ளும்படி பணிக்கும் போது, ஒரு போராளியின் நிலைமை சிக்கலானது. ஒரு பிழையான செயலைச் சரியானதென்ற ரீதியில் செய்ய வேண்டிய நிலைமை. அதனைச் செய்யா விட்டால் இயக்கக்கட்டுப்பாடுகளை மீறுகின்ற நிலைமை. இதே சமயம் அந்தப் பிழையான செயலை, பிழையென்று தெரியாத நிலையில், செய்து விட்டாலோ, பின்னாளில் எத்தனையோ பேருக்கு மட்டுமல்ல. தன் மனச்சாட்சிக்கே பதில் சொல்ல வேண்டிய சிக்கலான நிலை. உன்ரை அண்ணை விசயத்திலும் நடந்தது இதுதான். உன்ரை அண்ணையை கைது செய்யும் போது நான் என்ரை இயக்கத்தில் முழு விசுவாசமாய் இருந்தனான். உன்ரை அண்ணையை விசாரித்துப் போட்டு விடுவதாக சொன்னார்கள். நானும் நம்பித்தானிருந்தன். ஆனா பிறகு தான் உள்ளுக்க நடந்த விசயங்கள் சில தெரியவந்தன. அதற்குப் பிறகு இத்தனை வருசமாய் நான் படுற பாடு. உன்ரை அண்ணையைப் போல எத்தனை பேர் முடிஞ்சு போச்சினம். என்னைப் போல் எத்தனை பேரின்ரை விடுதலைப் போரார்வம் மழுங்கடிக்கப்பட்டது? இதுக்கெல்லாம் யார் குற்றவாளி? சிறுவன் கேட்டான்.

‘அது தான் நானும் கேக்கிறன். என்ரை அண்ணையின் முடிவுக்கு யார் குற்றவாளி? நண்பனின் தம்பி கேட்டான்.

சிறுவன் தொடர்ந்தான். “யார் குற்றவாளி? இயக்கத் தலைமைகளா? மத்திய குழு உறுப்பினர்களா? உளவுப் பிரிவினரா? இயக்கங்களின் ஆலோசகர்களா? இவற்றைக் கேள்வியின்றி பின்பற்றும் உறுப்பினர்களா? விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பிழையான இயக்க நடவடிக்கைகளை கைகொட்டி ஆரவாரித்து வரவேற்கும் சமுதாயமா? யார் குற்றவாளி? சிக்கலான பிரச்சனை. குற்றவாளியை இனம் காணுவதில் தான் இங்கு பிரச்சனையே! உதாரணத்திற்கு இயக்கத் தலைமைகள் இயக்க நலன்களிற்காக உளவுப் பிரிவிடம் தங்கியிருக்க வேண்டிய நிலைமை. இந்நிலையில் உளவுப்பிரிவு பிழையான தகவல்களின் அடிப்படையில் செயற்பட்டால் அல்லது பிழையாக செயற்பட்டால் அவ்விதம் செயற்படுகையில் ஏற்படும் விளைவுகளுக்கு தலைமையை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. அதே சமயம் சக்தி வாய்ந்த தலைமையின் ஆதிக்கத்திற்குட்பட்டு, செயற்படும் இயக்கத்தினரை தலைமையின் பிழையான நடவடிக்கைகளிற்கு முழுமையாக குறை கூற முடியாது. இதே சமயம் இயக்க உறுப்பினர்களில் கலந்திருக்கும் சமூக விரோத நடவடிக்கைகளிற்கான பொறுப்புகளையும் முற்றாக இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்கள், தலைமைகளின் மேல் சுமத்தி விட முடியாது. இது போலவே ஆலோசகர்களின் பிழையான வழிநடத்தலின் விளைவுகளையும் மற்றவர்களின் மேல் சாட்ட முடியாது. இது தான் சிக்கலானது. யார் குற்றவாளி?”

இடைமறித்த நண்பனின் தம்பி கேட்டான்.

“இப்படியான சூழ்நிலையில் தொடரும் போராட்டத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? இதுவும் சிக்கலான பிரச்சனையல்லவா?”

‘நீ சொல்வதும் சிக்கலான பிரச்சனை தான். ஆதரித்தால் குற்றத்திற்கு மேலும் உடந்தையாக இருக்கிறோம். எதிர்த்தாலோ. இன, மத, மொழி, அரசியல் ரீதியாக அடக்கப்படும் மக்களின் நியாயமானதொரு போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் ஒரு முயற்சியில் ஈடுபட்டவர்களாவோம். அதே சமயம் பல்வேறு குழுக்களாக, பச்சோந்திகளாக செயற்படும் இயக்கங்களின் இன்றைய நிலையில் யாரை ஆதரிப்பது? யாரை எதிர்ப்பது? எந்த இயக்கத்தை ஆதரித்தாலும் ஏதோ ஒரு வகையில். முத்திரை குத்தப்பட்டு ஏதோ ஒன்றால் பாதிக்கப்படுவது நிச்சயம் தான். இது அடுத்த சிக்கலான பிரச்சனை. பிரச்சனைகளை இனம் காணுவதற்கும் குற்றவாளிகளை அடையாளம் காணுவதற்கும், போராட்டத்தைச் சரியான வழியில் முன்னெடுப்பதற்குமிடையில் தான் எத்தனை சிக்கலான தடைச்சுவர்கள்.”

“இவ்வளவு நாளும் நானும் ஒரு வித உணர்ச்சி வெறியிலை தான் உன்னை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தன். அண்ணை மேலிருந்த பாசம் கண்ணை மறைத்திருந்த நிலை. இப்படியெல்லாம் சிந்தித்துப் பார்த்ததேயில்லை. ஆனா சிந்திச்சுப் பார்க்கேக்கை இவைக்கெல்லாம் வழியிருப்பது போல் தான் படுகிறது”

‘என்ன வழியை நீ நினைக்கிறாய்”

‘அநியாயமாக, அப்பாவிகள் தண்டிக்கப்படுவதன் காரணம், சாகடிக்கப்படுவதன் காரணம். விசாரணையின்றி விரைவாக தண்டனைகளை நிறைவேற்றுவதுதான்’

“நீ சொல்வதும் உண்மை தான். ஒரு தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடியதும் இதனால் தான். ஒவ்வொரு மனிதனதும் தனிப்பட்ட உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பேச்சுரிமை, எழுத்துரிமை உட்பட சகல உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். போராட்டச் சூழலில் நீண்ட விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது தான். இருந்தாலும் மரண தண்டனைகள் விடயத்தில் இயக்கங்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும். இயக்க ரீதியாக, சரியான வழியில், பிரச்சனை அணுகப்பட வேண்டும். தண்டனைகள் நிறைவேற்றுவதில் அதிக அவசரம் காட்டக் கூடாது. இயக்கங்கள் தங்களது இயக்க விதிகளை, யாப்புகளை மறுசீரமைக்க வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில் முன்னிற்க வேண்டும். அதேசமயம் ஒற்றுமையற்று, சிதைந்திருக்கும் எம் மக்களிற்கிடையே. இயங்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். நடந்தவற்றை கெட்ட கனவாக மறந்து விட்டு, புதிய பாதையில் இனியாவது நடை போட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை என்றாலும் நமக்கு நல்லதொரு வழியைக் காட்டட்டும். இவ்விதம் கூறிய சிறுவன் பிஸ்டலை எடுத்து நண்பனின் தம்பியிடம் கொடுத்தான்.

“நான் என்ன சொல்ல விரும்பினேனோ சொல்லி விட்டன். இனி உன் விருப்பம் எதுவோ அதன்படி நீ நடக்கலாம்.”

பிஸ்டலை வாங்கியவன் ஒரு கணம் பிஸ்டலையும் சிறுவனையும் மாறி மாறிப் பார்த்தான். மறுகணம் ஏதோ எண்ணியவனாக ‘என்ரை அண்ணையின் முடிவிற்கு நீ மட்டும் காரணமில்லை. நாங்களெல்லாம் காரணம் தான். இந்நிலையில் உன்னைக் கொல்ல வந்த என்ரை முட்டாள்தனத்தை நினைக்க வெக்கப்படுகிறன். இவ்விதம் கூறிய நண்பனின் தம்பி பிஸ்டலை அருகிலிருந்த “கோ ட்ரெயின் தண்டவாளத்தின் மேல் வைத்து விட்டு வந்தான். வந்தவன் சிறுவனை அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் தெளிவு இருந்தது. அந்த அணைப்பில் உறுதியிருந்தது. அந்த அணைப்பில் புதியதொரு பயணத்திற்கான தொடக்கத்தின் நேர்மையிருந்தது. அந்த அணைப்பில் நடந்தவற்றின் படிப்பினைகளிலிருந்து பெற்று விட்ட அனுபவ ஞானத்தின் சுடர் மிகுந்திருந்தது. அந்த அணைப்பில் ஒற்றுமையின் வலிமை செறிந்திருந்தது.

முற்றும்!


– போர்களினால் எமது மண் இன்று சீரழிந்து போய்க் கிடக்கின்றது. காலத்திற்குக் காலம் தோன்றிய சிங்கள இனவாத அரசியற் தலைமைகளாலும், ஒரு சில தீர்க்கதரிசனமற்ற தமிழ்த் தலைமைகளாலும் உருவான நிலைமைதான் இன்றைய நிலைமை. பழையபடி இன்றைய அரசு, பிரச்சனைகள் இவ்வளவு தூரம் வளர்வதற்குக் காரணமான ஜே.ஆர். அரசின் பாணியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இனப்பிரச்சினையைப் பயங்கரவாதப் பிரச்சனையாக உருவகிக்கின்றது. இத்தகைய பேரினவாத அரசுகளிலிருந்து எம் மக்களிற்கு நிரந்தரமான விடுதலை வேண்டும். இத்தகைய அரசுகளால் நாங்கள் மட்டுமல்ல சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் தான் பாதிக்கப்படுகின்றார்கள். முன்னாள் பிரேமதாஸ் அரசால் படுகொலை செய்யப்பட்ட 50,000 க்குமதிகமான சிங்களவர்களை எண்ணிப் பாருங்கள். அத்துமீறிய சிங்களக்குடியேற்றங்கள் இராணுவ அடக்குமுறை இவற்றால் பாதிக்கப்படுவது தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லிம் சகோதரர்களும் தாம். எம்மக்களின் நியாயமான கோரிக்கைகளிற்காகப் போராட ஆயுதம் ஏந்தியவர்கள் தொடர்ந்தும் தமக்கிடையில் மோதித் தேவையற்ற அழிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். அப்பாவிகள் யாராயிருந்தாலும் அவர்களிற்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்படவேண்டும். –

ngiri2704@rogers.com