வாசிப்பும், யோசிப்பும் 137: ஞானியின் ஞானச்செருக்கில் விளைந்த ஞானச்சிறுமை!

இசைஞானி இளையராஜா!அண்மையில் இசைஞானி என்றழைக்கப்படும் இளையராஜா அவர்கள் சென்னை வெள்ளப்பாதிப்பு உதவி சம்பந்தமாகக்கலந்துகொண்ட் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வந்திருந்தபொழுது அவரிடம்  ஊடகவியலாளரொருவர் சிம்பு/அநிருத்தின் ‘பீப்’ பாடல் பற்றிக்கேட்டார். அதனைச்செவிமடுத்த உடனேயே இளையராஜா அந்த ஊடகவியலாளரைப்பார்த்து ‘உனக்கு அறிவிருக்கா?’ என்று எரிந்து விழுந்தார். இது சமூக ஊடகங்களிலும், வெகுசன ஊடகங்களிலும் பரபரப்பு மிக்க செய்திகளிலொன்றாக மாறிவிட்டிருக்கின்றது. இளையராஜா ‘சரி’யென்று ஒரு குழுவும், ‘சரியில்லை அது பிழை’ என்று இன்னுமொரு குழுவும் கோதாவில் இறங்கியிருக்கின்றன.

நிகழ்வொன்றுக்குக் கலந்து கொள்ளவரும் கலை,இலக்கியவாதிகள் தொடக்கம் அரசியல்வாதிகள் வரை , எல்லாருமே இவ்விதமான சர்ச்சைகள் மிகுந்த சம்பவங்கள் பற்றிய கேள்விகளை எதிர்கொள்பவர்கள்தாம். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் என்னும் நிலையில் இவ்விதமான வினாக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் பண்பட்ட கலை, இலக்கியவாதிகளோ, அரசியல்வாதிகளோ இவ்விதம் இளையராஜா எரிந்து விழுந்ததைப்போன்று எரிந்து விழுவதில்லை. நிதானமாகக் கேள்விகள் எதுவானாலும் அவற்றை எதிர்கொண்டு பதிலளிக்கத்தவறுவதில்லை. உதாரணமாக மேற்படி நிகழ்வில், கலந்துகொண்ட நிகழ்வுக்குச்சம்பந்தமற்ற கேள்வியினை அந்த ஊடகவியலாளர் கேட்பது தனக்குப் பிடிக்கவில்லை என்று இளையராஜா அவர்கள் கருதியிருந்தால், அவர் அந்த ஊடகவியலாளரிடம் ஆத்திரப்படாமல், நிதானமாக தற்போது தான் கலந்துகொள்ள வந்துள்ள நிகழ்வுக்குச்சம்பந்தமற்ற எந்தவொரு கேள்வியினையும் தான் எதிர்கொள்ள விரும்பவில்லையெனவும், இன்னுமொரு உரிய நிகழ்வில் இது பற்றிப்பதிலளிப்பதாகவும் கூறியிருக்கலாம்.

இசைஞானிக்கு அந்த ஊடகவியலாளரின் மேற்படி கேள்வி ஏன் அவ்வளவு ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்று நினைத்துப்பார்க்கின்றேன். தான் இசையமைத்திருந்த ‘நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்!’ பாடலை ஒருமுறை அவர் நினைத்திருக்கலாம். ‘நேற்று ராத்திரி யம்மா’வில் ஜானகியம்மாவின் முக்கல், முனகல்களில் வெளிப்படும் உணர்வுகளின் பாவங்களை எண்ணியிருக்கலாம். இவ்விதமான கேள்விக்குப்பதிலளிப்பது இறுதியில் தன் மீதே வந்து பாயுமென்று கருதியிருக்கலாம். ஒருவேளை அவர் சிம்புவின் ‘பீப்’ பாடலுக்கு எதிர்ப்பினைத்தெரிவித்திருந்தால், அடுத்த கணமே அந்த ஊடகவியலாளர் ‘அப்படியென்றால் ‘நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்’ பாடலின் இறுதியில் ஆண், பெண் உறவின் உச்சக்கட்ட உணர்வாக வெளிப்படும் ஜானகி அம்மாவின் குரலைப்பாடிக்காட்டியிருக்கலாம். அந்தச்சமயத்தில் இசைஞானி பதிலெதுவும் கூற முடியாமல் , திக்குமுக்காடிப்போயிருக்கலாம். கண்ணாடி வீட்டினுள்ளிருந்து கல்லெறிய இசைஞானி விரும்பவில்லை. அதனால்தான் அவருக்கு அந்த இளம் ஊடகவியலாளரின் அந்தக் கேள்வி ஆத்திரத்தை எழுப்பியதுடன் , அந்த ஊடகவியலாளரின் அறிவு பற்றி மட்டம் தட்டவும் தூண்டியிருக்க வேண்டும்.

உண்மையில் இடமறிந்து அங்கு அந்தக் கேள்வியினைக்கேட்டதன் மூலம் இசைஞானியின் பண்பு தவறிய ஆளுமையினை வெளிப்படுத்தியதன் மூலம் தான் எவ்வளவு அறிவு மிகுந்தவர் என்பதை வெளிப்படுத்திய அதே சமயம், இசைஞானியின் அறிவுச்சிறுமையினையும் வெளிப்படுத்தியுள்ளாரென்றுதான் கூற வேண்டும். அந்தக்கேள்வியின் மூலம் வரலாற்றில் அவர் தன்னைப்பதிந்துகொண்டார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள்.

தமிழ்த்திரையுலகில் சிம்பு இவ்விதமான வார்த்தைப்பிரயோகங்களைப்பாவித்ததைக்கண்டு இவ்வளவு தூரம் கொதிக்கும் தமிழக ஆளுமைகளைப்பார்த்தால் ஒன்று மட்டும் நல்லாத்தெரிகிறது. நமது சமகால எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளை இவர்கள் வாசிப்பதில்லை என்பதுதான். இவர்கள் பலரின் படைப்புகளில் இவ்விதமான வார்த்தைப்பிரயோகங்களைத் தாராளமாகவே காணலாம்.

ngiri2704@rogers.com