நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 14

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணிஎன் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் பதினான்கு

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி  உறக்கம் நீங்கி கண்விழித்து எழுந்ததும், உடைந்திருந்த படகிலிருந்து நாங்கள் எடுத்து வந்திருந்த கொள்ளையர்களின் பொருட்களை ஆராய்ந்து பார்த்தோம். பூட்ஸ்கள், துணிமணிகள், புத்தகங்கள், ஒரு தொலைநோக்கிக் கண்ணாடி, மூன்று பெட்டி சிகரெட்டுகள் இன்னும் இது போன்ற எத்தனையோ பொருட்களைக் கண்டோம். நாங்கள் இருவருமே எங்கள் வாழ்க்கையில் இதுவரையில் இத்தனைப் பொருட்களுடன் பணக்காரர்களாக இருந்ததில்லை. சிகரெட்டுகள் அத்துணை அருமையாக இருந்தது. காட்டினுள் அமர்ந்து அன்று மதியம் முழுதும் நாங்கள் பேசிக் கொண்டே இருந்தோம். அந்த புத்தகங்களைப் படித்துப் பார்த்தேன். எங்களின் பொழுது நன்கு கழிந்தது.

அந்த உடைந்த படகில் நடந்த அனைத்து விஷயங்களையும் மற்றும் அந்த நீராவிப்படகு விஷயத்தையும் நான் ஜிம்மிடம் கூறினேன். இவையெல்லாம் சாகசங்கள் என்று நான் அவனுக்கு விளக்கினேன். ஆனால் அவனோ இது போன்ற சாகசங்கள் தனக்கு இனி வேண்டாம் என்று பதிலுரைத்தான். நான் திரும்ப அந்தக் கேபினுள் சென்ற பின் அவன் தவழ்ந்து தோணிக்குச் சென்றபோது, அங்கே தோணியைக் காணவில்லை என்று தெரிந்ததும், தான் இறந்தே விட்டோம் என்று நினைத்துக் கொண்டதாக ஜிம் கூறினான். எல்லாவழிகளும் அடைபட்டுத் தான் சிக்கிவிட்டதாக அவன் கருதியிருக்கிறான். யாருமே அவனைக் காப்பாற்ற இல்லையெனில் அவன் நீரில் மூழ்கி இறந்து விடுவான். ஆனால் யாராவது அவனைக் காப்பாற்றினால் அவன் ஜிம்முக்காக அறிவித்திருக்கும் பணப்பரிசுக்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுத்துவிடுவான். பின்னர் மிஸ். வாட்ஸன் அவனைத் தெற்கில் இருக்கும் யாருக்கேனும் கண்டிப்பாக நல்ல விலைக்கு விற்று விடுவாள். நல்லது. சந்தேகமில்லாமல் அப்படித்தான் நடந்திருக்கும். உண்மையில் ஜிம் நீக்ரோக்களின் மத்தியில் ஒரு சிறந்த அறிவாளிதான்.

ராஜாக்கள், ராணிகள், நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள் மற்றும் அது போன்ற பலரைப் பற்றி உள்ள கதைகளை நான் ஜிம்முக்குப் படித்துக் காட்டினேன். எப்படி ஆடம்பரமாக அவர்கள் உடை உடுத்துவார்கள், எவ்வாறு பந்தா செய்து கொள்வார்கள், எப்படி அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் மிஸ்டர் என்று அழைப்பதற்கு பதிலாக மாண்புமிகு, கனம் பொருந்திய, கருணைப் பிரபு, எங்கள் கடவுளே என்றெல்லாம் அழைத்துக் கொண்டார்கள் என்று படித்துக் காட்டினேன். மிகவும் ஆச்சரியமடைந்த ஜிம்மின் கண்கள் விரிந்தன. அவன் சொன்னான்.”

“இத்தனை நபர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவே தெரியாது. பைபிளில் நான் படித்த ராஜா சாலமனைத் தவிர வேறு எந்த ராஜாவையும் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. அது தவிர விளையாடும் சீட்டுக்கட்டுகளில் உள்ள ராஜாக்கள் வேண்டுமானால் தெரியும். ஒரு ராஜா எத்தனை பணம் சம்பாதிப்பார்?”

“சம்பாதிப்பது?” நான் சொன்னேன் “ஏன்! அவர்கள் நினைத்தால் ஒரு மாதத்திற்கு ஆயிரம் டாலர்கள் கூட சம்பாதிக்கக் கூடும். அவர்கள் நாட்டில் உள்ளது எல்லாமே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பதால் இன்னும் எத்தனை பணம் வேண்டுமானாலும் அவர்கள் சம்பாதிக்கலாம்.”

“அதுவும் அப்படியா? அத்தனை பணம் சம்பாதிக்க அவர்கள் என்ன வேலை செய்வார்கள், ஹக்?”

“என்ன பேசுகிறாய் நீ? அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். வெறுமனே உக்காந்து கொண்டிருப்பார்கள்.”

“இல்லை. இருக்கவே இருக்காது. உண்மையாகவா சொல்கிறாய் ?”

“கண்டிப்பாக, உண்மைதான் சொல்கிறேன். போர் வந்தாலொழிய மற்ற நேரம் எல்லாம் சும்மாதான் உக்காந்து கொண்டு இருப்பார்கள். போர் வந்தால் மட்டும் போவார்கள். ஆனால் முக்கால்வாசி சமயம் சோம்பேறிகளாக அமர்ந்து கொண்டிருப்பார்கள். அல்லது பழக்கிய பருந்துகளை அவர்கள் எடுத்துக் கொண்டு வேட்டைக்குச் செல்வார்கள். அப்புறம் ……… ஸ் ஸ் … அந்தச் சப்தம் உனக்குக் கேட்டதா?”

மறைந்திருந்த இடத்தைவிட்டு வெளியே வந்து சுற்றிலும் பார்த்தோம். ஆனால் அந்த ஒலியானது துடுப்புகள் நீரில் மோதும் சத்தம் அல்லது தூரத்தே இருந்து அந்த இடத்திற்கு வரும் ஒரு நீராவிப்படகின் சத்தமாக இருந்ததால், நாங்கள் எங்கள் இடத்திற்கே திரும்பச் சென்றோம்.

“ஆம்” நான் கூறினேன் “அப்புறம் வாழ்க்கை மிகவும் மெதுவாகவும் சுவாரஸ்யம் இல்லாது போகும் மற்ற சமயங்களில், அவர்கள் ராஜ்ய சபைப் பக்கம் செல்வார்கள். அங்கே அவர்கள் சொற்படி கேட்காது யாரேனும் தொந்தரவு கொடுத்தால், அவர்களின் தலையைக் கொய்து எறிவார்கள். ஆனால், பொதுவாக அவர்கள் அந்தப்புரம் செல்லத்தான் பெரிதும் ஆர்வம் காட்டுவார்கள்.”

“எங்கே போவார்கள்?”

“அந்தப்புரம்”

“அந்தப்புரம் என்றால் என்ன?”

“அங்குதான் ராஜா தன் மனைவிகளைத் தங்க வைத்திருப்பார். அந்தப்புரம் பற்றி உனக்குத் தெரியாதா? ராஜா சாலமனுக்குக் கூட ஒரு மில்லியன் மனைவிகள் இருந்திருக்கிறார்கள்.”
“ஆமாம். அது உண்மைதான். நான் சுத்தமாக அதைப் பற்றி மறந்து விட்டேன். அந்தப்புரம் என்பது தங்கும் விடுதி போல என்று நான் நினைக்கிறேன். அந்த இடம் எப்போதும் இரைச்சலாகவே இருக்கும் இல்லையா? கண்டிப்பாக அந்த மனைவிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அந்த இடத்தில் மேலும் கூச்சலை உருவாக்குவார்கள். ராஜா சாலமனை இத்தனைக்குப்பிறகுமா அனைத்து மனிதர்களிலும் மிகச் சிறந்த விவேகி என்கிறார்கள். நான் அதை நம்ப மாட்டேன். எதற்காக ஒரு விவேகி இத்தனை பைத்தியகாரத்தனத்துக்குள் வாழவேண்டும்? இல்லை. அவன் அப்படி வசிக்கவும் முடியாது. உண்மையான ஒரு விவேகி ஒரு கொதிகலன் தொழிற்சாலை கட்டி, அவனுக்குத்தோன்றும் போதெல்லாம் அங்கே சென்று ஒய்வு எடுப்பான்.”

“நல்லது. எப்படியாயினும், அவன்தான் சிறந்த விவேகி. அப்படித்தான் அந்த விதவை எனக்குக் கூறியிருக்கிறாள். “

“அவன் ஒன்றும் விவேகி இல்லை. அந்த விதவை சொன்னது பற்றி எனக்கு அக்கறை இல்லை. அவன் செய்யும் செயல்கள் எல்லாமே வித்தியாசமான வழிமுறைகளுடன் இருக்கும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவன் இரண்டு துண்டாக வெட்ட நினைத்த குழந்தை பற்றி உனக்குத் தெரியுமா?”

“ஆம். அந்த விதவை அதைப் பற்றி கூறி இருக்கிறாள்.”

“நல்லது. அது உனக்குப் புரிந்துள்ளது. இந்த உலகிலேயே ஒரு பித்துக்குளித்தனமான விஷயமாக அது தோன்றவில்லையா? ஒரு நிமிடம் அது பற்றி நினைத்துப் பார். இப்படிச் சொல்லலாம். குழப்பமடைந்த அந்த இரு பெண்களில் ஒன்று அந்தப் பெண்மணி, இன்னொன்று நீ என்று வைத்துக் கொள்வோம். நான்தான் சாலமன். இந்த டாலர் காகிதம்தான் அந்தக்குழந்தை. நீயும் அந்தப் பெண்மணியும் குழந்தை தனித்தனியாக உங்கள் இருவருக்கும்தான் சொந்தம் என்கிறீர்கள். நான் என்ன செய்யவேண்டும்? அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களை கேட்டு விசாரித்து உங்கள் இருவரில் யாருக்கு இந்த டாலர் சொந்தம் என்று கண்டறிந்து பின்பு சரியானவர்களிடம் அதைச் சேர்த்து நியாயம் வழங்குவதுதானே முறை? பொது அறிவு உள்ள எந்த மனிதனும் இதைத்தான் செய்வான். ஆனால், இல்லை. அப்படிச் செய்யாமல், இந்த டாலரை இரண்டாகக் கிழித்து உனக்கு ஒரு பகுதி, அந்தப் பெண்ணுக்கு ஒரு பகுதி என்று கொடுப்பது எப்படி நியாயம்? அந்த மாதிரிதான் சாலமன் அந்தக் குழந்தையை செய்யத்துணிந்தான். இப்போது, நான் உன்னைக் கேட்கிறேன். ஒரு டாலர் காகிதத்தை அரையாகக்கிழிப்பதில் யாருக்கு என்ன லாபம்? அதை வைத்து நீ எதையும் வாங்க முடியாது. அப்படியானால் ஒரு அரைக் குழந்தையை வைத்து என்ன செய்ய முடியும்? அந்த மில்லியன் ஆட்களைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை.”

“ஆனால் ஜிம் நீ மொத்தக் கருத்தையும் விட்டுவிட்டு ஒரு ஆயிரம் மைல் தாண்டி விட்டாய்.”


“யார்? நான்? இங்கிருந்து போ. உன்னுடைய கருத்தைப் பற்றி என்னிடம் பேசாதே. ஒன்றைப் பார்த்தாலே அதைப் பற்றி அறிந்துகொள்கிற பொது அறிவு என்னிடம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவ்வாறான தேவையற்ற நடவடிக்கைளில் எந்த நல்ல கருத்தும் எனக்குக் கிடையாது. அந்த பெண்கள் சண்டையிட்டுக் கொண்டது அரைக் குழந்தைக்காக அல்லவே. ஒரு முழுகுழந்தைக்காகத்தானே! அப்படி இருக்கையில், ஒரு முழுக் குழந்தையை அரைக்குழந்தையாக மாற்றி அந்தப் பிரச்னையை முடிக்கச் சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் மழை பெய்யும்போது உள்ளே ஒதுங்கி நிற்கவேண்டும் என்ற பொது அறிவு கூட இல்லாத அறிவிலிகளுள் ஒருவரனாகத் இருப்பான். சாலமன் பற்றி மேற்கொண்டு என்னிடம் எதுவும் பேசாதே ஹக்! தேவையானஅளவு எனக்கு முன்பே தெரியும்.”

“ஆனால் நான் சொல்ல வரும் கருத்தை நீ புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய்.”

“நாசமாய்ப் போன கருத்து. எனக்கு என்ன தெரியுமோ அது எனக்குத் தெரியும். அத்துடன் உண்மையான கருத்து அதை விட ஆழமானது. சாலமன் வளர்க்கப்பட்ட நாளில் இருந்தே அது தொடங்குகிறது. உதாரணத்துக்கு, இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு மனிதனை எடுத்துக் கொள்வோம். அவன் தனது குழந்தைகளை வீணடிக்க விரும்புவானா? இல்லை. அவன் மாட்டான். அப்படிச் செய்யவும் முடியாது. அவனுக்கு குழந்தைகளின் மதிப்பு நன்கு புரியும். ஆனால் ஐந்து மில்லியன் குழந்தைகள் வீடு முழுக்கச் சுற்றிக்கொண்டிருக்கும்படி இருக்கும் மனிதனுக்கு வேறு விதமாக எண்ணங்கள் இருக்கும். ஒரு பூனையைத் துண்டாடுவது போல அவன் ஒரு குழந்தையைத் துண்டு போடத் தயங்க மாட்டான். ஏனென்றால் அவனுக்குத்தான் கணக்கிலடங்கா குழந்தைகள் இருக்கின்றனவே. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என்பது சாலமனுக்கு முக்கியமாகப் படாது. சனியன்!”

இந்த மாதிரி ஒரு கறுப்பனை நான் கண்டதேயில்லை. ஒருமுறை ஒரு கருத்து தலைக்குள் ஏறிவிட்டால், அதை வெளியேற்ற எந்த முயற்சி செய்வதிலும் பலனில்லை போலும். எனக்குத் பழக்கமான மற்ற எந்த நீக்ரோவையும் விட இவன் அதிக அளவில் சாலமனை வெறுக்கிறான். எனவே சாலமனைப் பற்றிய பேச்சை அத்தோடு நிறுத்தி விட்டு மற்ற அரசர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். நீண்ட நெடுங்காலம் முன்பு பிரான்ஸ் நாட்டை ஆண்ட பதினாறாம் லூயி பற்றியும் அவரது தலை கொய்யப் பட்டதையும் அவனிடம் கூறினேன். பிறகு அவரது மகன் இளவரசன் டால்பின் என்பாரைப்பற்றியும், அவன் மட்டும் சிறையில் அடைக்கப்படாமல் இருந்திருந்தால் ஒரு நாள் ராஜாவாக இருந்திருப்பான் என்றும் கூறினேன். பரிதாபமாக டால்பின் சிறையிலேயே இறந்து விட்டான் என்றும் சொன்னேன்.

“பாவம் அந்தக் குழந்தை.”

“ஆனால் சிலர் அவன் தப்பித்து அமெரிக்காவுக்கு வந்து விட்டதாகக் கூறுகிறார்கள்.

“நல்லது. ரொம்ப நல்லது. ஆனால் சீக்கிரமே இங்கே அவன் தனிமையை உணரக் கூடும். இங்கே ராஜாக்கள் என்று யாருமே இல்லை. அல்லவா, ஹக்?”

“இல்லை.”

“அப்படியானால், அவன் வாழ்ந்த பழைய வாழ்க்கையை வாழ அவனால் முடியாது. பிறகு அவன் என்ன செய்யவான்.?”

“நல்லது. எனக்குத் தெரியாது. சிலர் காவல்துறையில் சேர்ந்து காவல்காரர்கள் ஆகலாம். மற்றவர்கள் மக்களுக்கு பிரெஞ்சு மொழியை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் ஆகலாம்.”

“என்ன சொல்ல வருகிறாய், ஹக்? பிரெஞ்சு மக்கள் நாம் பேசுவது போலப் பேச மாட்டார்களா?”

“இல்லை ஜிம். உன்னால் பிரெஞ்சு மக்களின் ஒரு வார்த்தையைக் கூடப் புரிந்து கொள்ள முடியாது. ஒரு சிறு வார்த்தை கூட.”

“நல்லது. நாசாமாய்தான் போனேன் நான். அது எப்படி அவ்வாறு நடக்கும்?”

“எனக்குத் தெரியாது. ஆனால் இது உண்மை. அவர்களின் அறிவில்லா வார்த்தைகளை ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து நான் கொஞ்சம் படித்தேன். ஏதாவது ஒரு மனிதன் உன்னிடம் வந்து “போல்லி வூ பிரான்சீ” என்று கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நீ அதைப் பற்றி என்ன நினைப்பாய்?”

“நான் அதில் நினைக்க எதுவுமே இல்லை. அவன் ஒரு வெள்ளையனாக மட்டும் இல்லாவிட்டால், அவன் மண்டையில் ஒரே போடாகப் போட்டு விடுவேன். அவ்வளவுதான். நான் ஒருபோதும் ஒரு நீக்ரோவை என்னைப் பார்த்து அப்படி வார்த்தை பேச அனுமதிக்க மாட்டேன்.”

“அடச்சே, ஜிம்!. அவன் உன்னைப் பார்த்து கெட்ட வார்த்தையில் பேசவில்லை. உனக்கு பிரெஞ்சு பேச வருமா” என்று கேட்கிறான். அவ்வளவுதான்.

“ஓ! அப்படியானால் அந்த வார்த்தைகளை எதுக்கு அவன் கூறவேண்டும்?”

“அவன் அப்படித்தான் கேட்பான். அப்படித்தான் ஒரு பிரெஞ்சுக்காரன் கேட்பான்.”

“நல்லது. அவ்வாறானால் மிகுந்த கேலிக்குரிய வகையில் பேசுவதுதான் அவன் வழக்கம் போலும். இதைப்பற்றி நான் மேலும் ஏதும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. எனக்கு அது புத்தியுள்ள விசயமாகத் தெரியவில்லை.”

“பாரு ஜிம்! நாம் பேசுவது போல பூனை பேசுகிறதா?”

“இல்லை. பூனை அப்படிப் பேசாது.”

“நல்லது. ஒரு பசு அவ்வாறு பேசுகிறதா?”

“இல்லை. பசுவும் அவ்வாறு பேசாது.”

“ஒரு பசு பூனையைப் போல் பேசுகிறதா? இல்லை பூனைதான் பசுவைப் போல் பேசுகிறதா?”

“இல்லை. அவைகள் அவ்வாறு இல்லை.”

“அப்படி ஒருவருக்கொருவர் வித்தியாசமாகப் பேசுவது இயற்கை என்றும் சரி என்றும் உனக்குப் படவில்லையா?”

“கண்டிப்பாக, சரிதான்.”

“அதே போல் பூனையும் பசுவும் பேசுவது மனிதர்களை விட வித்தியாசமாக இருப்பது இயற்கையானது மற்றும் சரியானதுதானே?”

“ஆம். அதில் சந்தேகம் என்ன இருக்கிறது.”

“நல்லது. அப்படியானால். ஒரு பிரெஞ்சுக்காரன் நம்மைவிட வித்தியாசமாகப் பேசுவது இயற்கையாகவும், சரியாகவும் ஏன் இல்லை? அதற்கு பதில் கூறு.”

“ஒரு பூனை மனிதனா, ஹக்?”

“இல்லை.”

“நல்லது, அவ்வாறானால், ஒரு பூனை மனிதனைப் போல் பேச எந்த நியாயமும் இல்லை. பசு மனித இனமா? அதாவது ஒரு பசு ஒரு பூனையாகுமா?”

“இல்லை. ஒரு பசு மனிதனும் இல்லை. பூனையும் இல்லை.”

“மிகவும் சரிதான். அப்படியெனில், ஒரு பசு இருவரைப் போலவும் பேசவேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. ஒரு பிரெஞ்சுக்காரன் மனிதன்தானே?”

“ஆமாம்.”

“நல்லது. உனக்கே புரிந்திருக்கும். சனியன் பிடித்த பிரெஞ்சுக்காரன் ஏன் மனிதனைப் போல பேச மறுக்கிறான்?இதற்கு பதில் சொல்லு முதலில்.”

வார்த்தைகளை வீணடிப்பது பிரயோசனம் இல்லை என்று எனக்குத் தெரிந்து விட்டது. ஒரு நீக்ரோவுக்கு எப்படி வாக்குவாதம் செய்வது என்று நீங்கள் யாரும் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை. எனவே நான் என் வாதத்தைக் கைவிட்டேன்.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி
– முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். –

akilmohanrs@yahoo.co.in