தொடர் நாவல்: வன்னி மண் (14 -18) – வ.ந.கிரிதரன் –

‘தாயகம்’ (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: ‘கணங்களும், குணங்களும்’, ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’. ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’. இந்நான்கு நாவல்களும் ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். ‘வன்னி மண்’ நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது.


அத்தியாயம் பதினான்கு: காட்டில் கரடி!

காடு ஆரம்பமாகும் இடம் வந்தது. ஒற்றையடிப் பாதை தெரிந்தது. குமரன் பகடியாகக் கூறினான்.

“டே ராகவா. நல்லா ஒருக்கா ஆசை தீரத் திரும்பிப் பார்த்துக்கோ. காட்டுக்குள்ளை போனால். வரும் வரைக்கும் ஊரையோ மனிசங்களையோ பார்க்க முடியாது”

ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். அப்பொழுதுதான் முதன் முறையாக ஒருவித திகில் படர்ந்த உணர்வு நெஞ்சை வெட்டியோடியது. பயணத்தின் யதார்த்தம் புரிந்தது. காடு, பயங்கரமான மிருகங்கள் வசிக்கும் காடு! எந்தவிதப் பாதுகாப்புமில்லாமல் செல்கின்றோம். திரும்பி வருவோமா. ஒரு கணம் தான்! மறுகணமே நெஞ்சில் ஆர்வம் குடிகொண்டு விட்டது. புதியனவற்றைப் பார்க்கப் போகின்றோமே என்று சந்தோஷம் பரவியது. ஒருவித எதிர்ப்பார்ப்புடன், ஒருவித களிப்புடன் விரிந்திருந்த காட்டை ஊடறுத்த ஒற்றையடிப் பாதையினுள் காலடியெடுத்து வைத்தோம். மனித சஞ்சாரமேயற்ற புதியதோருலகினுள் மெல்ல நுழைந்து கொண்டோம். திரும்பின பக்கமெல்லாம் மரங்கள். பெரிய சிறிய, ஓங்கிய, வீங்கிய, மரங்கள், ‘மிக்க நலமுடைய மரங்கள், பல விந்தைச் சுவையுடைய கனிகள். நெஞ்சிற் கனல் மணக்கும் பூக்கள். மதி வஞ்சித்திடு மகழிச்சுனைகள். முட்கள் மண்டித் துயர் கொடுக்கும் புதர்கள்” மலிந்த திக்குத் தெரியாத காடு. காலையிளஞ் சூரிய ஒளியினை பெருவிருட்சங்கள் மறைத்து விட்டன. இலேசாகத் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. பல்வேறு விதமான பறவைகளின் கீச்சொலிகள். இடையிடையே காற்றிலசையும் இலைகளின் ஓசைகள். தொலைவிலெங்கோ தாவிய மந்திகளின் ஒலிகள். இவை தவிர ஒருவிதமான மோன அமைதியெங்கும் பரவிக்கிடந்தது.

குமரனின் மாமாவும் நண்பனும் சிரிக்கச் சிரிக்கச் கதைத்தபடி சென்று கொண்டிருந்தார்கள். பின்னால் நானும் குமரனும் எங்களிற்குள் கதைத்தபடி சென்று கொண்டிருந்தோம். செல்லும் வழியெங்கும் விரிந்து கொண்டிருந்த காட்சிகளை வியப்புடன் பார்த்தபடி குமரனுடனும் கதைத்தபடி சென்று கொண்டிருந்த நெஞ்சில் உற்சாகம் பொங்கிக் கொண்டிருந்தது. களிப்பு துள்ளி யோடியது. நேரம் ஏற ஏற கோடை வெப்பமும் ஏறிக்கொண்டிருந்தது. அவ்வெப்பத்தை ஓரளவிற்குக் காட்டு மரங்கள் தணித்தபடியிருந்தன. நாங்களோ நடந்து கொண்டேயிருந்தோம். கால்கள் கூட இலேசாக வலிக்கத் தொடங்கின. வலி கூடும் சமயங்களில் சிறிது தங்கி நின்றுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். இடையிடையே தென்பட்ட சிறிய குட்டைகளெல்லாம் காய்ந்து போயிருந்தன. அந்த வருடம் வழமையை விடக் கோடை கடுமையாகயிருந்தது. ஏனைய சமயங்களில் சிறிதளவாவது குட்டைகளில் நீர் தேங்கிக் கிடக்கும். அவ்வருடம் அது கூட இல்லை. ராகவன் கூறினான்

“வேண்டுமென்றால் நீயே பார். நாங்கள் போற இடத்திலை மட்டும் ஊற்று வற்றவே வற்றாது.”

எங்கிருந்தோ மிருகமொன்றின் சத்தம் கேட்டது. குமரனின் மாமா கூறினார்.

“அது காட்டெருமையின்ற சத்தம். கிட்டடியிலைதானெங்கோ நிற்கவேண்டும்.”

இவ்விதம் கூறியவர் அருகிலிருந்த காய்ந்த மரமொன்றிலிருந்து கிளைகளையுடைத்து ஆளிற்கொரு தடிகளைத் தந்தார். ‘’எதுக்கும் கையிலை தடியை வைச்சிருப்பம்.” காட்டெருமைகள் பயங்கரமானவையென்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அவற்றின் கூரான கொம்பகள் உறுதியானவை. காட்டெருமைகளும் மூர்க்கமானவை, தொடர்ந்தும் நடந்து கொண்டிருந்தோம். ஆனால் காட்டெருமைகள் தென்படவேயில்லை. மரணம். வாழ்க்கைப் பாதையின் எந்த மூலையில் நம்மை எதிர்பார்த்து நிற்கின்றதென்பது எமக்குத் தெரியவில்லை. ஆனால் மரணம் நிற்கிறதேயென்று நாம் பயணத்தை நிறுத்தி விடுவதில்லை. தொடர்ந்து நடந்து கொண்டு தானிருக்கின்றோம். ஒரு குறிக்கோளை வைத்து, ஆர்வத்துடன், எதிர்பார்ப்புடன், எதிர்ப்படும் நிகழ்வுகளை எதிர்வு கொண்டு, ஒருவித உற்சாகத்துடன், களிப்புடன் சென்று கொண்டிருக்கின்றோம். முடிவதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவை முடித்துவிட வேண்டுமென்பது போல பறந்துகொண்டிருக்கின்றோம். அன்றைய எம் பயணமும் அவ்வகையில் தான் அமைந்திருந்தது. குறைந்தது நான்கு மைல்களாவது காட்டினுள் சென்றிருப்போம். அப்பொழுதுதான் அதனைக் கண்டோம். கறுத்து. மயிர் முட்டி, பார்ப்பதற்குப் பயமாயிருந்தது. கூழாம்பழங்களைப் போல் பார்வைக்கு, ஆனால் அவற்றை விடச் சிறியதாக, சுவையிலும். கூழாம்பழத்தைப்போல் புளிப்புடன் கூடிய சுவையில்லாமல் இனிப்பாக இருக்கும் முதலிப் பழங்கள் நிறைந்த மரமொன்றினருகே பழங்களைச் சுவைத்தபடி கரடியொன்று நின்றிருந்தது.

குமரன் தான் முதலில் கரடியைக் கண்டான்.

தென்னங்கள்ளும், கஞ்சாவும் தந்த கலையில் மெய் மறந்திருந்த மாமாவினதும், மாமாவின் நண்பனினதும் வெறி இருந்த இடத்தை விட்டு ஓடிப்போனது. முதலிப் பழங்களைச் சுவைத்துக் கொண்டிருந்த கரடியின் கவனம் எங்கள் பக்கம் திரும்பியது. அவ்வளவுதான். அருகிலிருந்த குமரனின் மாமாவையும் மாமாவின் நண்பனையும் காணவில்லை. கையில் கிடந்த தடிகளைப் போட்டுவிட்டு அப்படி எப்படித்தான் அவ்வளவு விரைவாக அருகிலிருந்த மரத்தினில் ஏறினார்களோ.
இதற்குள் முற்றாக முதலிப்பழங்களின் மேலிருந்த கவனத்தைக் கைவிட்ட கரடியைப்பற்றி ஏற்கனவே நிறைய கதைகளைக் கேள்விப்பட்டிருந்தோம். மனிதர்களின் கண்களைத் தோண்டுவதில் அவை கைதேர்ந்தவை, சில சமயங்களில் அகப்படும் மனிதர்களின் ஆணுறுப்புக்களையும் பிடுங்கி விடுவதில் விருப்பமுள்ளவை. இதே சமயம் சிறு வயதில் படிந்திருந்த ‘அம்மாக்கரடி ‘அப்பாக்கரடி ‘குட்டிக்கரடி”யின் கதை ஞாபகத்திற்கு வந்தது. பிணம்போல் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தால் மரக்கட்டையாக எண்ணிக் கரடி விட்டு விட்டுப் போய்விடுமாம். ஆனால் அதனை முயன்று பார்க்கும் தைரியம் எங்களிருவரிற்குமேயில்லை. சிலவேளை இந்தக் கரடி வித்தியாசமான கரடியாகயிருந்து விட்டால். சிறிது அறிவு கூடின கரடியாயிருந்து விட்டால்.

இதற்கிடையில் குமரன் மிக விரைவாக ஒரு காரியம் செய்தான். உணவுப் பார்சலை எடுத்து சுற்றிக் கட்டியிருந்த பேப்பரைக் கழட்டிவிட்டு உணவை கரடி வரும் திசையை நோக்கி எறிந்தான். கரடியின் கவனம் ஒரு கணம் எறியப்பட்ட உணவின் மேல் திரும்பியது. அந்தச் சிறு கணப்பொழுதிற்குள் கையிலிருந்த பேப்பரைப் பற்ற வைத்து அருகிலிருந்த காய்ந்து குவிந்திருந்த குப்பை கூளங்களின் மேல் போட்டு விட்டான். நெருப்பு ‘குபீரெனப் பற்றியது. நெருப்பைக் கண்டு மருண்ட கரடி வந்த வழியே ஒடிக் காட்டினுள் மறைந்தது. நெருப்பு எவ்விதம் மிருகங்களைப் பயப்படுத்தி விடுகின்றதென்பதை அன்று தான் அறிந்து கொண்டேன். கரடி ஒடி மறைந்ததும் குமரனின் மாமாவும், நண்பனும் மரத்திலிருந்து இறங்கி வந்தார்கள், எங்களைப் பார்க்க அவர்களிற்கே வெட்கமாயிருந்தது. இருந்தாலும் குமரனின் அறிவை மெச்ச அவர்கள் தவறவேயில்லை. இந்தச் சம்பவம் எனக்குப் பெரியதொரு உண்மையை எடுத்துக் காட்டியது. பய உணர்வு எவ்விதம் அறிவை மறைத்து விடுகின்றது. சுயநலத்தை எவ்விதம் தூண்டிவிடுகின்றது. கரடியைக் கண்டதும் பயந்து விட்ட குமரனின் மாமாவோ நண்பனோ தங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்ற உணர்வில் ஏறி மரத்தில் ஒளிந்து கொண்டார்களே தவிர சிறுவர்களான எங்களைப் பற்றிக் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. இதேசமயம் இந்தச் சம்பவம் இன்னுமொரு விடயத்தையும் எடுத்துக்காட்டியது. எதிர்ப்படும் சூழல்கள் எவ்வளவு ஆபத்து நிறைந்தவையாகவிருந்தாலும், அறிவைப் பாவித்து தப்புவதற்கு முயற்சி செய்து பார்க்க வேண்டும். முயற்சி தோற்கலாம். வெல்லலாம். அத்தகைய ஆபத்தான் சமயங்களில் பய உணர்விற்கு ஆட்பட்டுக் கலங்கி நின்று விடுவதால் நிகழப் போகின்ற அழிவை தடுத்து நிறுத்த முடியுமா? குமரன் உண்மையில் நெஞ்சுரம் மிக்கவன் தான். மாமாவின் சிகரட்டிற்காக எடுத்துவந்த நெருப்புப்பெட்டியையும் சாப்பாட்டுப் பார்சலையும் இணைத்துக் கலங்காமல் ஒரு திட்டம் போட்டு முயன்று பார்த்தான். வெற்றி கிட்டிவிட்டது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் எத்தகைய ஆபத்தானவையாக எதிர்ப்பட்டாலும் மனிதனே முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதே. மூளையை மட்டும் பாவிக்காமலிருந்து விடாதே. மூளையுடன் கூடிய முயற்சி நிச்சயம் உன்னைக் காப்பாற்றும்.


அத்தியாயம் பதினைந்து: நீர்நிலை  தந்த ஏமாற்றம்!

“தம்பிமாரே என்ன சொல்றீங்கள். திரும்பிப் போவமா. இல்லை. தொடர்ந்து போகத்தான் போறிங்களா” குமரனின் மாமாதான் கேட்டார். எனக்கோ கரடியின் தரிசனம் முன்னைவிட ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. ஏதோ வீரதீர பராக்கிரமங்கள் நிறைந்த பயணமொன்றை நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது போன்ற உணர்வு நெஞ்சில் நிறைந்திருந்தது. குமரன் கேட்டான்.

“என்ன ராகவா சொல்லுறாய். உன்ர விருப்பமென்ன போறதா. திரும்புறதா.”

“இவ்வளவு தூரம் வந்துவிட்டுத் திரும்புறதா.” நான் இழுத்தேன்.

“சரி சரி பொடியனின் ஆசையை ஏன் கெடுப்பான். இவ்வளவு தூரம் வந்தாச்சு போய்ப் பார்ப்பம்.” மாமாவின் நண்பன்தான் சிரித்தபடி கூறினான். இதற்கிடையில் ஒரு தம் அடித்து விட்டிருந்தான். மாமாவும் வாங்கி ஒரு தம் இழுத்தார். சிரிப்பு இருவரையும் தொற்றிக் கொண்டது. நாங்கள் எங்களிற்குள் சிரித்துக் கொண்டோம். பயணம் தொடர்ந்தது.

நேரம் நண்பகலை அண்மித்துக் கொண்டிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது. கால்கள் சற்றே தள்ளாடத் தொடங்கின. அப்பொழுதுதான் கட்டிக் கொண்டு வந்த சாப்பாடும் கரடியோடு போனது நினைவிற்கு வந்தது. பாலைமரம் தென்பட்டபோது கல்லால் அடித்துப் பாலைப்பழங்களைப் பொறுக்கித்தின்றோம். வீரையைக் கண்டபோது வீரைப் பழங்களைப் பறித்துண்டோம், முதலிப்பழ மரங்களைக் கண்டபோது அவற்றைப் பிடுங்கிச் சுவைத்தோம். பசியை ஒருவாறு அடக்கினோம் பசி சிறிது அடங்க தாகமெடுக்கத் தொடங்கிவிட்டது. தாகத்தால் நாவெல்லாம் வறண்டு விட்டது. அடங்கியிருந்த பசி சிறிது நேரத்தில் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கி விட்டது. தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மரங்கள் நிறைந்து கிடந்தன. உண்ணக்கூடிய பழ மரங்கள் ஒன்றைக்கூடக் காணவில்லை. தாகத்தால் வறண்ட தொண்டையை நனைப்போமென்றால் ஒரு குளங் குட்டையைக் கூடக் காணவில்லை. தென்பட்டவையெல்லாம் வரண்டு கிடந்தன.

குமரனின் மாமா கூறினார். ‘இன்னுங் கொஞ்சத்தூரம் தான். அங்கு போனால் தண்ணிக்குப் பஞ்சமில்லை. தொண்டையை நனைக்கலாம். அந்த இடத்திலை முதலிப் பழமரங்களும் நிறைய இருக்கு.”

எனக்கோ பசியால் கண்கள் பஞ்சடைந்தன என்பார்களே அப்படியிருந்தது. கால்கள் தளர்ந்து தள்ளாடின. வெளியில் சொன்னால் வெட்கக்கேடென்று பொறுத்தபடி நடந்து கொண்டிருந்தேன். எல்லோர் நிலையும் இதுதான் எங்களிற்கிடையில் பேச்சு குறைந்தது. உற்சாகத்தை வரவழைப்பதற்காக மாமாவின் நண்பன் ‘மாசிலா உண்மைக் காதலே” என்று பாட முயன்று பார்த்து முதலிரண்டு அடிகளுடன் தோற்றுப் போனான். சரியான தயாரிப்புக்களின்றி ஒருபோதும் இப்படி வெளிக்கிடக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன். நடந்து கொண்டிருந்த குமரனின் மாமாவின் கண்கள் விரிந்தன.

“அப்பா. ஒரு வழியாக வந்தாயிற்று.” அவர் காட்டிய திசையைப் பார்த்தோம். சிறியதொரு நீர்நிலையிருந்ததற்கு அடையாளமாக ஒரு பிரதேசம் தென்பட்டது மாமாவின் முகமும் வாடிவிட்டது.

“இப்பிடி யொரு நாளுமே நடந்ததில்லை இதிலை நீர் எந்தப் பெரிய கோடையென்றாலும் வற்றியதாகச் சரித்திரமேயில்லை.”

எனக்கும் சிறிதே சப்பென்றாகி விட்டது. அதிசயமானதொன்றைப் பார்க்கப் போகின்றோமென்று வந்தால் நிலைமை இப்படியாயிருக்கவேண்டும். அந்த நீர்நிலையைச் சுற்றி மரங்களில் பரண்கள் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் இரவிரவாகக் காவலிருந்து தண்ணி குடிக்க வரும் மிருகங்களை வேட்டையாடுவார்களாம். அப்பரண்களில் ஏறிப் பார்க்க வேண்டும் போலிருந்தது. உடல்தான் வலுவற்றிருந்தது. இதற்கிடையில் குமரனின் முயன்று பார்க்கும் மூளை வேலைசெய்யத் தொடங்கிவிட்டது. வரண்டிருந்த நிலத்தில் சிரட்டையொன்றிருந்தது. யாரோ வந்தவர்கள் பாவித்திருக்க வேண்டும். சிரட்டையையெடுத்து குமரன் தரையில் அங்காங்கே கிண்டிப் பார்க்கத் தொடங்கினான். என்ன ஆச்சர்யம். ஓரிடத்தில் நீர் சுரந்தது. சுரந்த நீரோ மண்கலந்த நீராயிருந்தது. இதையெல்லாம் யார் கண்டார்கள்? வரண்டிருந்த தொண்டைக்கு அதுவே அமிர்தமாகயிருந்தது. (ஆனால் அதன் பிறகு ஒரு கிழமையாக வயிற்றுக் கோளாற்றால் அவதிப்பட்டது இன்னுமொரு கதை) சாதாரண சமயமென்றால் இப்படியொரு அசுத்தமான சிரட்டையில் அசுத்தமான நீரை அள்ளிக் குடித்திருப்போமா? சந்தர்ப்ப சூழ்நிலைகள் வரும் போதுதான் எல்லாமே தெரிகின்றது. ஒரு சமயத்தில் நடக்க முடியாது போல் தென்படும் ஒரு விடயம் இன்னுமொரு சமயத்தில் சாதாரண விடயமாக நடந்து முடிந்து போகின்றது. ஒரு காலத்தில் என் மண்ணில் எவையெல்லாம் நடக்க முடியாத  விடயங்களாயிருந்தனவோ அவையெல்லாம் இன்று சாதாரண விடயங்களாகிவிட்டன. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காட்டுப் பாதைகளால் ஓடுவது. கிளாரிக் கடலேரியைக் கடப்பது, பாம்பும் பூச்சியும் குடியிருக்கும் பங்கர்களிற்குள் குடங்கிக் கிடப்பது. உருக்குலைந்து ஆங்காங்கு தென்படும் நாய்கள் தின்னும் மனித உடல்களைச் சாதாரணமாகப் பார்த்துச் செல்வது. இவையெல்லாம் ஒரு காலத்தில் நடக்க முடியாத விடயங்கள் தாம். இன்று அவை சாதாரண விடயங்கள்.

அந்த அசுத்த நீரைக் குடித்துவிட்டு, அருகிலிருந்த ‘முதலிப்’ பழங்களைச் சாப்பிட பிறகுதான் சிறிது தென்பு வந்தது. அதன் பிறகு வேட்டைக்காரர்கள் கட்டி வைத்திருந்த பரண்களில் ஏறிப் பார்த்தோம். வியப்பான விசயமென்னவென்றால் அந்த ஆழநடுக் காட்டினுள், அந்த நீர்நிலைக்கருகாக புல்வெளியொன்று விரிந்து கிடந்ததுதான். ‘ஹட்டரி போன்ற ஆங்கிலப் படங்களில் வரும் ஆபிரிக்கப் புல் வெளிகளைப் போன்றதொரு புல்வெளி விரிந்து கிடந்தது. தொலைவில் மான்கள் சில மேய்ந்தபடியிருந்தன. இன்னும் சிறிது தொலைவிலிருந்து காட்டெருமைகள் சில குரல் கொடுத்தன. அப்படியே அந்தப் புல்வெளியில் எல்லோரும் மல்லாந்து படுத்தோம். தொலைவுவரை விரிந்திருந்த புல்வெளி, அருகில் செறிந்திருந்த காடு. மேலே விரிந்து, பரந்து முடிவற்றிருந்த நீலவான், பட்சிகள், மான்கள், காட்டெருமைகள். இயற்கை இன்பத்தைத் தந்தது. சிறிது கண்ணயர்ந்தோம். வாழ்க்கை பற்றிய சில பக்கங்களை விளக்கிக் காட்டிய எங்களது அந்த ‘நீண்ட பயணம் ஒரு முடிவிற்கு வந்தது. அந்த முல்லைக் குமரனின் வாழ்க்கை இன்று பத்தோடு பதினொன்றாகப் போய்விட்டது. உண்டு உறங்கி வாழும் சாதாரண மனிதர்களில் ஒருவனாகிவிட்டான். அவனும் என்னைப் போல் இன்னுமொரு அன்னிய நாடொன்றில் வாழ்வதாகக் கேள்வி. அவனிடமிருந்த கலையார்வத்திற்கும் திறமைக்கும் பிரகாசித்திருக்க வேண்டியவன். ஒருவேளை இனித்தான் பிரகாசிக்கப் போகின்றானோ? இப்படித்தான் எத்தனையோ ஆற்றலுள்ளவர்கள் தங்கள் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்த வளர்த்தெடுக்க முடியாதவாறு சூழல்கள் அவர்களை இழுத்துக் கொண்டோடி விடுகின்றன. ஒரு சிலர்தான் சூழல்களை மீறிச் சாதித்து விடுகின்றார்கள் பாரதியைப் போல! ஆனால் ஒரு சிலரைச் சூழல்கள் மாற்றியும் விடுகின்றன. ஒருவேளை சுமணதாஸ் பாஸையும் சூழல்கள் மாற்றித்தான் விட்டிருக்குமோ. அல்லது சூழலின் விளைவாகத் தண்டிக்கப்பட்ட அப்பாவி மக்கட் கூட்டத்தில் அவரும் ஒருவரா. ஏன் மனோரஞ்சிதத்தைக் கூட இன்று புகுந்த நாட்டுச் சூழல்கள் ஆட்டிப் படைக்கத்தான் தொடங்கி விட்டிருக்கின்றன. ஆடிக் கொண்டிருக்கின்றாள். இதிலிருந்து விடுபடுவது அவளது நெஞ்சின் உறுதியில் தானிருக்கின்றது.


அத்தியாயம் பதினாறு: குளத்தில் நீச்சல் முயற்சி!

குடுமி, அகன்ற பெல்ற், சறம், குமிண் சிரிப்பு. இதுதான் சுமணதாஸ் பாஸ். பாஸிற்கு என்ன நடந்தது? சுமணதாஸ் பாஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். காரணம் உளவாளி, தமிழர்களிற்கெதிராக சிங்கள இராணுவத்துடன் ஒத்துழைத்தார். அவர் குடும்பத்திற்கென்ன நடந்தது? மனைவி பிள்ளைகள் எல்லோருமே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? சுமணதாஸ் பாஸஸுடன் சேர்ந்து அவர்களும் உளவு கூறினார்களா? சிங்கள இராணுவத்திற்குத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்தார்களா? சந்தேகத்தின் வித்து இங்கு தான் முளைவிடுகின்றது. விசாரணை நடக்கவில்லை, சாட்சிகள் வரவழைக்கபடவில்லை, முழுக்குடும்பத்திற்குமே தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்டதனால் தான் இன்று எம்மக்களின் போராட்டமே வெடித்துக் கிளம்பியுள்ளது. அதில் நீதியிருக்கின்றது. நியாயமிருக்கின்றது. அந்தப் போராட்டத்தை மாசு படுத்தக் கூடாது. கொச்சைப் படுத்தக் கூடாது. அப்பாவிகளின் உயிர்களிற்கு உத்தரவாதம் தேவை. அவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும். அரசுடன் சேர்ந்தியங்குகின்றார்கள் என்பதற்காக, தமிழ் இளைஞர்களின் குடும்பங்களையே ஒட்டு மொத்தமாகப் போட்டுக் கொன்றுவிட முடிகிறதா? ஒரு குடும்பத்து உறுப்பினர்களிலேயே பல்வேறுபட்ட கருத்துள்ளவர்கள் இருக்கும் போது.

சுமணதாஸ் பாஸை நான் கடைசியாகச் சந்தித்தது வன்னிமண்ணை விட்டு யாழ் மண்ணிற்குப் பழையபடி திரும்பியபோதுதான். அதன் பிறகு அவரை நான் சந்திக்கவேயில்லை. பல வருடங்கள் ஓடிவிட்டன. நான் அறிந்த சுமணதாஸ் பாஸ் அதன்பிறகு முற்றாகவே மாறிவிட்டிருக்கலாம். உண்மையிலேயே இராணுவத்தின் உளவாளியாக செயலாற்றியிருக்கலாம். சூழல் யாரைத் தான்விட்டது. அல்லது இன உணர்வைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டுவதற்கு அந்தக் குடும்பத்தையே பலியாக்கியிருக்கலாம். ஏனைய சிங்களவர்களை அப்பகுதிக்கு வரக்கூடாதென்று எச்சரிப்பதற்காக அச்செயல் புரியப்பட்டிருக்கலாம்.

‘தவளைக் குஞ்சுகள் என்ன விநோதம் ஆடிப்பாடியோடி ஆடும் விநோதம்’..  சுமணதாஸ பாஸின் மழலைக்குரல் இன்னமும் காதுகளில் ஒலிக்கின்றது. தவளைக் குஞ்சுகளில் விநோதத்தைக் கண்ட சுமணதாஸ் பாஸிற்கு என்ன தான் நடந்தது? சுமணதாஸ் பாஸுடன் எனக்கிருந்த அனுபவங்களை எடைபோட்டுச் சீர்தூக்கிப்பார்க்க மனம் முயலத் தொடங்கியது. குறிப்பாக அந்தச் சம்பவம். என்னால் மறக்கவே முடியாத சம்பவம். இன்று நான் உயிரோடிருக்கின்றேனென்றால் அதற்குக் காரணம் சுமணதாஸ் பாஸ். அந்த சுமணதாஸ் பாஸ் இன்றில்லை.

பட்டாணிச்சுப் புளியங்குளம். வித்தியாசமான பெயர். மன்னார் ரோட்டில், குருமண் காட்டுச் சந்தியில், முஸ்லிம் சுடலைக்கு முன்பாகவுள்ள குளம், நான் முதன் முறையாக நீந்தப் பழகியது இந்தக் குளத்தில்தான். நாங்கள் முதன் முதல் வன்னிமண்ணில் காலடியெடுத்து வைத்தபோது இந்தக்குளம் முட்டி மோதிக்கொண்டிருந்தது. முட்டி மோதும் சமயங்களில் வடிவதற்காக குளக்கட்டின் ஒரு புறத்தில் காட்டை வெட்டி, குளத்து நீர்மட்டத்துடன் சேர்த்து சிறியதொரு அணைகட்டி வைத்திருந்தார்கள். தாமரைகள் படர்ந்து குளம் அழகு பெற்றுக்கிடந்தது. குளத்தின் மறுபுறம் வயல்வெளியும் விரிந்து கிடந்தன. வயல் வெளிகளை ஊடறுத்துப் பார்த்தால் எல்லைக்காவலனின் மாளிகை பார்வையில் தட்டுப்படும். குளமும் வயல்வெளியும் சந்திக்குமிடத்தில் தாமரைக் கொடிகள் படர்ந்திருந்தன. கொக்குக்கள் எந்நேரமும் தவமியற்றிக் கொண்டிருந்தன. குளக்கட்டும் மரங்களின் அரவணைப்பில் மயங்கிக் கிடந்தது. மீன் கொத்திகள் மரங்களில் அடிக்கடி கொத்திய மீன்களுடன் காணப்பட்டன.

என்னையும் அக்காவையும் ‘கட்டிலிருத்தி விட்டு அப்பா குளத்தில் மூழ்கியெழுவார். அப்பா அடிக்கடி நீரினுள் காணாமல் போகும் போதெல்லாம் நெஞ்சு பதைக்கும். வியக்கும். நல்ல காலம் நான் அழவேயில்லை. அழுதிருந்தால் என் வாழ்க்கையே மாறிவிட்டிருக்கலாம். அம்மையும் அப்பனும் காட்சி தந்திருக்கலாம். ஞானப்பால் சுவைத்திருக்கலாம். இன்னுமொரு தேவாரச் செல்வர் தமிழிற்கு அழகு சேர்த்திருக்கலாம். எதுவுமே நடக்கவில்லை. நானும் அழவில்லை அதற்குப் பதிலாக வேறொன்று செய்தேன். ஒருமுறை இப்படித்தான் காணாமல் போகும் அப்பாவைக் கண்டு பிடித்தாலென்ன என்றொரு எண்ணம் எழுந்தது. விளைவு நான் காணாமல் போனேன். அக்காதான் முதலில் காணாமல்போன என்னைக் காணவில்லை என்பதைக் கண்டு பிடிச்சா. மூச்சு முட்டக் குடித்திருந்தவனை அப்பா ஒரு மாதிரிக் கண்டுபிடித்துக் கரைசேர்த்தார். நானின்று உயிரோடிருப்பதற்கு முதற்காரணம் அப்பா, ஏற்கனவே நானிவ்வுலகிலிருப்பதற்கே அவர்தான் காரணமாயிருந்தார். அதனுடன் ஒப்பிடும்பொழுது இதன் முக்கியத்துவம் குறைந்து போய்விடுகின்றது. இதனையே எம் குடும்பத்தைச் சேராத ஒருவர் செய்தால் அதற்கு முக்கியத்துவம் வந்துவிடுகின்றது. அதனைத் தான் சுமணதாஸ் பாஸ் செய்தார். அது நடந்தபோது எனக்குப் பதினொருவயது. நீந்துவதற்கு முயன்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் மூக்காலும் வாயாலும் நீர் உள்ளே போய்விடும். இதற்கிடையில் தண்ணி ரென்றால் எனக்கொரு பயம் கூட இருந்தது. அதற்குக்காரணம் எம் பாடசாலை நண்பனொருவன், எனக்குத் தலையில் மூன்று சுழிகள். நண்பன் சொன்னான். ‘மூன்று சுழிக்காரர்கள் தண்ணிரென்றால் கவனமாயிருக்கவேண்டும் நான் சிறிது எச்சரிக்கை. ஆனால் அதையும் மீறி நீந்துவதற்கு மனம் பேரார்வத்துடன் முயன்று கொண்டிருந்தது.

வழக்கம் போல் ஒரு மதியம். சூரியன் உச்சியில் சுட்டெரிந்துக் கொண்டிருந்தான். நீர்கொழும்பு ஆறுமுகத்தின் குடும்பம், சுமணதாஸ் பாஸ், ரஞ்சிற் இவர்களுடன் நானும் தம்பியும் குளத்திற்குப் புறப்பட்டோம். குளத்தில் அன்று அவ்வளவு சனநடமாட்டமில்லை. கொக்குகளும் நீர்காகங்களும் நிறைந்திருந்தன. குமார், பாபு இருவரும் நன்றாக நீந்துவார்கள். ரஞ்சிற்றுடன் சேர்ந்து மரக்குற்றியைப் பிடித்துக் கொண்டு நீந்தியபடியிருந்தார்கள். நானும் குந்தவியும், தம்பியும் நெஞ்சளவு தண்ணில் நின்றுகொண்டு ஒருவரிற்கொருவர் முகத்தில் தண்ணி அடித்து விளையாடிக்கொண்டிருந்தோம். இதில் குந்தவி சரியான கெட்டிக்காரி. அவளுடன் போட்டி போட முடியாது. நீர்கொழும்பு ஆறுமுகம் தன்பாட்டில் பாடியபடி கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அது ஒரு பழைய திரைப்படப் பாட்டு கேட்பதற்கு இனிமையான நாட்டுப் பாட்டு. பாகப்பிரிவினையில் சிவாஜி சரோஜாதேவியைப் பார்த்துப் பாடுவதாகவுள்ள பாட்டு.

“தாழையாம் பூ முடித்து
தடம் பார்த்து நடை நடந்து
வாழையிலை போல வந்த கண்ணம்மா”

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து நிறைதண்ணியில் வரும் நீர்கொழும்பு ஆறுமுகத்தின் பழைய படப்பாடல்களை வானொலிப் பெட்டிகளில்லாத அப்பகுதி மக்களிற்கு ஒரு வரப்பிரசாதமென்றுதான் கூறவேண்டும். சுமணதாஸ் பாஸ் கரையில் உடம்பிற்குச் சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் கரைப்பக்கம் குற்றியுடன் நீந்தி வந்த ரஞ்சிற் மீண்டும் நடுப்பக்கம் திரும்பத் தொடங்கினான். எனக்கொரு யோசனை…எத்தனை நாள் தான் கரையிலையே கிடந்து பழகுவது. மரக்குற்றியைப் பிடித்து நீந்திப் பழகினாலென்ன ரஞ்சிற் சம்மதித்தான். குற்றியை மட்டும் இறுகப் பற்றிக்கொள்ள, எக்காரணம் கொண்டும் கைப்பிடியை மட்டும் தளரவிட்டிடாதே யென்றான். சரியென்றேன். குற்றியைப் பற்றியடி நீந்தத் தொடங்கினேன். குற்றியின் முன்பக்கத்தில் ரஞ்சிற் பின்பக்கத்தில் நான்.


அத்தியாயம் பதினேழு: உயிர் காப்பாற்றிய சுமணதாஸ் பாஸ்!

மரக்குற்றியைப் பிடித்து நீந்துவதிலேற்பட்ட உள்ளக் கிளர்ச்சியில் கரையை விட்டு நீண்ட தூரம் வந்ததே தெரியவில்லை. சுற்றிவரத் தண்ணிர். மேலே நீலவான். பார்ப்பதற்கு அழகாயிருந்தது. என்னையே மெய்மறந்து போனதில் என்பிடியைச் சிறிது நெகிழவிட்டேன். அவ்வளவுதான். .குற்றி என் பிடியைவிட்டு முற்றாகவே விடுபட்டுப் போனது. தண்ணிருக்குள் கைகளை அடித்துக் கொண்டு தத்தளிக்கத் தொடங்கினேன். மூச்சு முட்டியது. நீரை நன்கு குடித்தேன். ஒரு முறை உள்ளே போய் மீண்டபோது ரஞ்சிற் பதைபதைப்புடன் என்னை நோக்கி வருவது தெரிந்தது. அந்தக் கணத்தில் தத்தளிப்பதில் தான் முழுக்கவனம். வேறெந்த யோசனையுமே ஏற்படவில்லை. ஏற்படவும் முடியாது. இரண்டாவது முறை மேலே வந்தபோது ரஞ்சிற் வந்து என் தோள்களைப் பற்றிப்பிடித்தான். அங்குதான் அவன் பிழை விட்டான். நீரில் தத்தளிப்பவனைத் தலையில் பிடித்துத்தான் காப்பாற்ற முயலவேண்டும். தத்தளித்துக் கொண்டிருப்பவன் எது தட்டுபட்டாலும் அதனைப் பற்றியிறுகப் பிடித்து விடுவான். அது தான் இயல்பு. அதனைத்தான் நானும் செய்தேன். ரஞ்சிற்றின் கழுத்தைச் சுற்றிக் கைகளால் அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். பாவம் ரஞ்சிற்; என்னைக் காப்பாற்ற வந்தவன் என்னுடன் சேர்ந்து மூழ்கத்தொடங்கினான். என்னுடன் சேர்ந்து என்னைக் காப்பாற்ற, தன்னைக் காப்பாற்ற தத்தளித்துக் கொண்டிருந்தவனை விட்டு மரக்குற்றியும் தூரத்திற்குச் சென்றுவிட்டது. இருவருமே மூழ்கத் தொடங்கினோம்.

இதற்கிடையில் நாங்கள் தத்தளிப்பதைக் குந்தவி கண்டுவிட்டாள். கரையில் சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்த சுமணதாஸ் பாஸிற்கு விசயத்தைக் கூறினாள். கரையில் வேறு பெரிய மனிதர்கள் சிலருமிருந்தார்கள். எல்லோரும் யோசித்தார்கள் ஆனால் சுமணதாஸ பாஸோ யோசிக்கவில்லை. இதுதான் சுமணதாஸ் பாஸின் முக்கியமான குணங்களிலொன்று. ஆபத்துக்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்வது. தத்தளித்துக் கொண்டிருந்த எங்களருகில் வந்தவர் இருவர் கழுத்துகளையும் தனது கைகளால் இறுக்கிப் பிடித்து எங்களை அசையவிடாதபடி நீந்திக்கொண்டு வந்து கரைசேர்த்தார். அண்மையில் கூட எங்கோவொரு நாட்டில் குளமொன்றில் தவறிவிழுந்த குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் நூறுபேர் வரையில் கரையில் நின்று வேடிக்கை பார்த்தார்களென்று பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஏன் அன்று கூட சுமணதாஸ் பாஸைத்தவிர வேறு சிலரும் கரையில் நிற்கத்தான் செய்தார்கள். வேடிக்கை பார்க்கத்தான் செய்தார்கள். ஆனால், சுமணதாஸ் பாஸ் மட்டும் தான் ஒன்றைப் பற்றியும் யோசிக்காமல் எங்களைக் காப்பாற்ற முயன்றவர். ஒருவரைக் காப்பாற்றவே தயங்குவார்கள். அதிலும் தத்தளிக்கும் இருவரைக் காப்பாற்றுவதென்றால் சுமணதாஸ் பாஸ், உனக்கு நெஞ்சுத் துணிவு மிகவும் அதிகம் தான். இன்று உன்னால் உயிர் கொடுக்கப்பட்ட நான் இருக்கிறேன். ஆனால் நீ. உளவாளியென்று உன்னோடு சேர்ந்து முழுக்குடும்பத்தையும் கூண்டோடு கைலாசமேற்றி அனுப்பிவிட்டார்கள். நியாயப் படுத்துவதற்கா ஆட்களில்லை. எதையுமே நியாயப்படுத்த அடுக்கடுக்காக அள்ளி வீசக் காரணங்களாயில்லை. சொந்தச் சகோதரர்களையே தெருவில் எரித்துப் போட்டுவிட்டு அதற்குமொரு நியாயம் கற்பித்த பரம்பரையைச் சேர்ந்தவர்களல்லவா நாங்கள். வழக்கம்போல் இதற்கும் காரணங்களை அள்ளி வீசுவோம்.

‘பாஸ் இராணுவத்திற்கு உளவு சொன்னான்’ ‘பாஸின்ற மனுசிக்கும் இராணுவத்திற்கும் அப்படியிப்படி ஏதோ தொடர்பாம். விட்டு வைக்க கூடாது’ ‘அவங்கட பிள்ளைகளும் சேர்ந்துதானாம்.” ‘போராட்டப் பாதையில் இதையெல்லாம் விட்டு வைக்ககூடாது’….  ஆனால் எனக்குத் தெரிந்த நீ. என்னைவிட அம்மண்ணுடன் உனக்குத் தான் அதிக சொந்தம், நாங்கள் முதன் முறையாக வந்தபோதே அந்தப் பகுதி காடுமண்டிப் போய்க் கிடந்தது. ஆனால் நீ வந்தபோதோ நான் பிறந்திருக்கவேயில்லை. அந்தப் பகுதி எந்த நிலையில் இருந்திருக்கும். இளைஞனான நீ கனவுகளுடன் கற்பனைகளுடன் புதுமண்ணில் வாழ்க்கையைத் தொடங்கி யிருப்பாய், திட்டங்கள் பல போட்டிருப்பாய். எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. உன் கற்பனைகள் மட்டுமல்ல. இன்று என் கற்பனைகள் கூடத்தான். என் கனவுகள், கற்பனைகள். வாழ்க்கைத் திட்டங்கள் அழிக்கப்பட்ட நிலையில் எனக்கோ அன்னிய நாடொன்றில் அகதிவாசம், உனக்கோ இவ்வுலகிலிருந்தே அன்னிய வாசம், “போராட்டம்” , “இராணுவத் தீர்வு” என்று பெயரில் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகப் போகின்றனவோ? போரில் நேரடியாக ஈடுபட்டவர்களின் அழிவைவிட, இதுவரை அழிந்துபோன , பாதிக்கப்பட்ட அப்பாவி உயிர்களின் எண்ணிக்கைதான் மிகமிக அதிகம். உலகம் முழுவதிலும் நிலைமை இதுதான். இதன் முடிவு தானென்ன.

சுமணதாஸ் பாஸ் உன்னையும், உன் குடும்பத்தையும் “உளவாளி யென்று பரலோகம் அனுப்பி வைத்தவர்களிற்கு உன்னையும் தெரியாது. உனக்கும் அந்த மண்ணிற்கு மிடையிலிருக்கும் பந்தமும் புரியாது. அவர்கள், நீ அந்த மண்ணில் காலடிவைத்து ஆண்டுகள் பல கழிந்து இவ்வுலகில் அவதரித்திருக்கலாம். தெரிந்திருக்க நியாயமில்லைதான். ஆனால் எனக்கு. காடுமேடுகளென்று குளங்களென்று உன்னுடன் அலைந்து திரிந்த எனக்கு உன்னைத் தெரியும், உன் நெஞ்சையும் நல்லாய் புரியும். நான் நிச்சயமாக நம்புகிறேன். நீ உளவாளியாகியிருக்க முடியாது. என் உயிரைக் காப்பாற்றும் போது நான் தமிழன் நீ சிங்களவனென்று நீ நினைத்திருக்கவில்லை. மனிதனென்று தான் எண்ணினாய். அந்த மனிதாபிமானத்தை எனக்கு விளங்கும். என் எதிர்பார்ப்பையும் மீறி உண்மையிலேயே காலம் உன்நெஞ்சிலும் இனஉணர்வுகளை விதைத்து விட்டிருந்தால். அதற்கும் கூட உனக்கும் உன் குடும்பத்தவர்க்கும் கிடைத்த தண்டனை கொடியதுதான். மிகவும் கொடியதுதான்.

“தவளைக்குஞ்சுகள் என்ன விநோதம்”

“ஆடிப்பாடியோடி ஆடும் விநோதம்” சுமணதாஸ் பாஸ் குமிண்சிரிப்புடன் மழலைத்தமிழில் பாடிக்கொண்டிருக்கின்றார். வீசும் காற்றில் இறுக்கமான அந்தக் குடும்பிகூட இலேசாக ஆடுகின்றது. அவரைச் சுற்றி நாங்களும் அந்தப் பாடலைப் பாடியபடி ஆடிக்கொண்டிருக்கின்றோம். வாழ்க்கையில் எவ்வளவு அர்த்தம் பொதிந்து கிடக்கின்றது. தவளைக்குஞ்சில் தெரியும் விநோதமாகத் தான் வாழ்வேயிருக்கின்றது. தவளைக் “குஞ்சினோடு வாழ்க்கையை விநோதமாகப் பார்த்தாய் நீ, ஆனால் உன் முடிவே இவ்விதம் விநோதமாக முடியுமென்று யார் கண்டது? சுமணதாஸ் பாஸ் நீ எங்கேயிருக்கின்றாய்? விரிந்து கிடக்கின்றது பிரபஞ்சம், புதிர் நிறைந்து முடிவற்ற தொடராக விரிந்து கிடக்கின்றது தொலைவில் இதன் ஆழங்களிலெங்கோ இருந்தபடி நீ இன்னமும் “தவளைக் குஞ்சுகள் என்ன விநோதம் பாடிக் கொண்டிருக்கலாம். அதே மழலைக்குரலில் அதே குமிண் சிரிப்பில். உன்னைச்சுற்றி உன்னைக் கொன்றவர்களே ஆடிப் பாடிக் கொண்டிருக்கலாம். யார் கண்டது? உண்மையை அறிந்தவர் யாரே? நனவிடை தோய்ந்துவிட்டு நனவிற்கு வருகின்றேன். கண்கள் பனித்துப் போய்க் கிடக்கின்றன. மனம் பாறையாகிக் கிடக்கின்றது. “பியர்சனை நோக்கி ‘எயர் கனடா வொன்று விரைவதை அந்த சிவந்த மேப்பிள் இலை காட்டி நிற்கின்றது. யதார்த்தம் உறைக்கின்றது.


அத்தியாயம் பதினெட்டு: அமைதியிழந்த வன்னி மண்!

வழக்கம் போல் ‘வூல்கோ வெயர் ஹவுஸ்கேட் ஹவுஸ், வழக்கம் போல் ஆஜானுபாகுவான், கைகளில் பச்சை குத்திய ட்ரக் ட்ரைவர்கள், வழக்கம் போல் “பியர்சனை நோக்கியும், விலகியும் விரையும் விமானங்கள், வழக்கம் போல் மைல் நீளப் பெட்டித் தொடர்களை முக்கி முனகி இழுத்தபடி “சரக்கு ரயில்”கள், வழக்கம்போல் நனவிடை தோய்ந்தபடி நான்.

பூமிப் பெண்ணின் போர்வை சிறிதே கலைந்து கிடக்கின்றது. கிழக்கில் மெல்லிய வெளுப்பு, அடிவானம் சிவப்பில் பறவைகள் சில பறப்பது தெரிகின்றது. விடிவெள்ளி தனித்துச் சுடர்ந்த படியிருக்கின்றது. முழுநிலவும் இன்னும் மறையவில்லை. அதன் தண்ணொளியில் பூமிப் பெண்ணின் துயில் இன்னும் கலையவில்லை.

நகுலேஸ்வரன், கடைசியில் இவன் திரும்பி வன்னிக்கே போய் விட்டான்.

‘ராகவா இவங்களும் இவங்கட “பேப்பரும் மனுசி போயாச்சு! இப்படியேயிருந்தால் குழந்தைகளையும் இழக்க வேண்டியது தான். ஊரிலைபோய் கூழோ கஞ்சியோ குடிச்சுக்கொண்டு இருக்கும் மட்டுமாவது பிள்ளைகளோட சந்தோசமாயிருப்பம்.”

இப்படியெத்தனை நகுலேஸ்வரன்கள் சிலரிற்கு விரைவாக அகதிக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விடுகிறது. வேறு சிலரிற்கோ ஐந்தாண்டுகள் கடந்தும் பதிலில்லை. கனடா இமிகிரேசன் காரியாலங்களில் பைல்கள் நகரும் விதமே ஒரு புதுமை, சக்திச் சொட்டுப் பெளதிகத்தில் ஒரு விதியுள்ளது. அடிப்படைத் துகள்களின் நிச்சயமற்ற தன்மையைக் கூறும் விதி. அதன்படி ஒரே மாதிரியான சூழல்களில் அடிப்படைத் துணிக்கைகள் ஒரே மாதிரி எப்பொழுதும் இயங்குவதில்லை. இதுபோல் தான் கனடா இமிகிரேசனும், அகதிகளின் பைல்களைப் பொறுத்தவரையில் அவர்களது நடைமுறையும் அப்படித்தான். ஐந்து வருடங்களிற்கு முன்னால் வந்தவரிற்குப் பதில் கிடைத்திருக்கலாம். கிடைக்காமலுமிருக்கலாம். நேற்று வந்தவரிற்கும் கிடைத்திருக்கலாம். இன்னுமொரு ஐந்து வருடங்களிற்குக் கிடைக்காமலுமிருக்கலாம். அடிப்படைத் துகள்களும், அவர்களும் இந்த விடயத்தில் ஒரே மாதிரித்தான். ஒரே வகையில் எப்பொழுதும் நடப்பதில்லை. அகதிகள் கோரிக்கையை இவர்கள் பரிசீலிக்கும் விதமும் வேடிக்கையானது. இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சனை சர்வதேசம் முழுவதும் தெரிந்ததொன்று.

இன, மத, மொழி, ரீதியாகத் தமிழர்கள் பாதிக்கப் படுகின்றார்கள். சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கைகள். புகழ்பெற்ற செய்தி ஸ்தாபனங்கள் இவையெல்லாம் அடிக்கடி தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுக்கின்றன. ஆனால் கனேடியன் இமிகிரேசன் அதிகாரிகளிற்கு மட்டும் இவையெல்லாம் தெரியாது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படுவதை இவர்களிற்கு நிரூபிக்க வேண்டும். பொய்மையில் வாழ்வினை ஆரம்பிக்க அகதிகளை இவர்களே தூண்டுகின்றார்கள். நகுலேஸ்வரனிற்கு ஆரம்பத்திலேயே பதில் கிடைத் திருந்தால் ஒருவேளை அவன் தன் மனைவியை இழந்திருக்கத் தேவையில்லை. மனமுடைந்திருக்கத் தேவையில்லை. நாட்டிற்குத் திரும்பியிருக்கத் தேவையில்லை. இன்று இவன்

எந்த நம்பிக்கையில் திரும்பியிருக்கின்றான். போர்க்களச் சூழல் நிலவும் மண் துப்பாக்கிப் புகைகளால் சூழப்பட்டிருக்கும் மண் இவன் எந்தவித அமைதியை அதில் காணப் போகின்றான்?

ஒரு காலத்தில் அந்த மண்ணில் அமைதி நிலவியது. நள்ளிரவில் சுடலை நரிகளின் ஊளைக்குரலைக் கேட்கும்போது ஒருவித திகிலுடன் வியப்பு கலந்ததொரு இனிமையும் இருகத்தான் செய்தது. அம் மண்ணின் திக்குத் தெரியாத காட்டில் திக்குத் திசை கெட்டு அலைந்து திரிந்தபோது அதிலொரு ஆனந்தம், நள்ளிரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு நீர்கொழும்பு ஆறுமுகத்தின் “மானல்லவோ கண்கள் தந்தது. மயிலல்லவோ சாயல் தந்தது” என்ற பாட்டுக்குரல் கேட்டபடி தூங்குவதன் சுகமே ஒரு தனிதான். ஆட்காட்டிகளை ரசித்தபடி அணில் வேட்டையாடும் சுமணதாஸைப் பின் தொடர்வது. தாமரைப் பெண்கள். வயல்வெளிகள். கொண்டைக் குருவிகள். இயற்கையின் தாலாட்டில் தூங்கிக் கிடந்த மண்ணின் வனப்பே வனப்பு. அந்த மண்ணின் அமைதி மெல்ல மெல்லப் பறி போனது. முதன் முதலாக அதற்கான அறிகுறி சேகுவேராப் புரட்சியின் போது தென்பட்டது. ஆயுதக் கலாச்சாரத்தை மெதுவாக முத்தமிடத் தொடங்கியது. அப்போதுதான் அதன் பிறகோ. “போரென்றால் போர், சமாதானமென்றால் சமாதானம்,” கிழட்டு நரியொன்றின் ஊளைக்குரலொன்று இன்னமும் காதுகளில் ஒலிக்கின்றது. அதன் பிறகு அந்த மண் முற்றாகவே அதன் அமைதியை இழந்து விட்டது.

முற்றும்.


‘வன்னி மண் ‘முடிவுரை

‘வன்னிமண்’ இது ஒரு நாவலா? நாவல் என்ற வழக்கமான வரைவிலக்கணங்களின்படி பார்த்தால் இது நாவலேயல்ல. வரைவிலக்கணங்களை காலத்திற்குக் காலம் நாம் தான் நிர்ணயித்துக் கொள்கின்றோம். வழக்கமான நாவலிற்குரிய வரைவிலக்கணங்களை மீறி அண்மையில் சில நாவல்கள் வெளிவந்துள்ளன. வன்னிமண்ணும் அத்தகைய வகையைச் சேர்ந்ததொரு நாவல்தான். ஒரு காலத்தில் அமைதி தவழ்ந்த வன்னி மண்ணின் அமைதி இன்று பறிபோய்விட்டது. போர்மேகங்கள் அந்த மண்ணைச் சுற்றிக் கவிந்து விட்டன. இவ்வன்னி மண்ணினுாடு எம் மண்ணின் இன்றைய நிலைமை ஆராயப்படுகின்றது. இந் நாவலின் போக்குப் பலரிற்குப் பிடித்திருக்கின்றது என்பதை செவிவழிவாயிலாக அறிய முடிந்தது. வாசகர்களின் கருத்துக்களை எப்பொழுதுமே நான் மதிப்பவன். எழுத்தாளனொருவனின் வளர்ச்சிக்கு இத்தகைய கருத்துக்கள் மிகவும் அவசியம்.

இன்னுமொரு விடயம் என் பால்ய காலத்து வாழ்வு இந்த மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். சுமனதாஸ் பாஸைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய உண்மையைக் கூறத்தான் வேண்டும். வன்னிமண்ணில் நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டிற்கருகில் ஒரு சிங்கள பாஸ் குடும்பம் இருக்கத்தான் செய்தது. அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நாங்கள் அம்மண்ணிற்குப் போவதற்கு முன்பிருந்தே அம்மண்ணுடன் பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள். எங்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். சுக துக்கங்களில் பங்கு பற்றியவர்கள் ஒருமுறை எங்கள் வீட்டிற்கருகிலிருந்த குளமொன்றில் மூழ்கும் தறுவாயில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னையும், சாந்தா என்ற சிங்கள இளைஞனையும் துணிச்சலுடன் காப்பாற்றியவர். அந்த சிங்கள் பாஸ்தான். நாங்கள் 70களில் யாழ்ப்பாணம் திரும்பி விட்டோம் அதன்பிறகு எங்களிற்கும் அவர்களிற்குமிடையிலிருந்த தொடர்பு விடுபட்டுப்போனது. 1983 இலிருந்து மாறிவிட்ட நாட்டு நிலைமையைத் தொடர்ந்து, தமிழ் மக்களின் போராட்டம் கனன்றெரியத் தொடங்கி விட்டது. இந்தக் காலகட்டத்தில் விடுதலைக்காகப் போராடும் அமைப்பொன்றினால் அந்தச் சிங்கள பாஸ் குடும்பமே முற்றாக அழிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். அண்மையில் தான் கேள்விப்பட்டேன்.

யார் செய்தார்கள்?

ஏன் செய்தார்கள்?

வழக்கம்போல் பலவிதமான வதந்திகள், ஊகங்கள். அந்த சிங்கள பாஸ்தான் ‘சுமணதாஸ் பாஸாக’ ‘வன்னி மண் நாவலில் உருப்பெற்றிருக்கின்றார். நான் இன்று உயிருடன் இருப்பதற்குக் காரணமானவர் அந்தச் சிங்கள பாஸ். அதனை என்னால் ஒரு போதுமே மறக்க முடியாது.

போர்களினால் எமது மண் இன்று சீரழிந்து போய்க் கிடக்கின்றது. காலத்திற்குக் காலம் தோன்றிய சிங்கள இனவாத அரசியற் தலைமைகளாலும், ஒரு சில தீர்க்கதரிசனமற்ற தமிழ் தலைமைகளாலும் உருவான நிலைமைதான் இன்றைய நிலைமை. பழையபடி இன்றைய அரசு, பிரச்சனைகள் இவ்வளவு தூரம் வளர்வதற்குக் காரணமான ஜே.ஆர். அரசின் பாணியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இனப்பிரச்சினையைப் பயங்கரவாதப் பிரச்சனையாக உருவகிக்கின்றது. இத்தகைய பேரினவாத அரசுகளிலிருந்து எம் மக்களிற்கு நிரந்தரமான விடுதலை வேண்டும். இத்தகைய அரசுகளால் நாங்கள் மட்டுமல்ல சிங்கள, முஸ்லிம் சகோதர்களும்தாம்  பாதிக்கப்படுகின்றார்கள். முன்னாள் பிரேமதாஸ் அரசால் படுகொலை செய்யப்பட்ட 50,000 க்குமதிகமான சிங்களவர்களை எண்ணிப் பாருங்கள். அத்துமீறிய சிங்களக்குடியேற்றங்கள் இராணுவ அடக்குமுறை இவற்றால் பாதிக்கப்படுவது தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லிம் சகோதரர்களும்தாம்.

எம்மக்களின் நியாயமான கோரிக்கைகளிற்காகப் போராட ஆயுதம் ஏந்தியவர்கள் தொடர்ந்தும் தமக்கிடையில் மோதித் தேவையற்ற அழிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். அப்பாவிகள் யாராயிருந்தாலும் அவர்களிற்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்படவேண்டும். நம் மண்ணின் அமைதிக்கு முதற்படியிதுவே. ‘வன்னிமண் நாவலின் நோக்கமும் இதுவே.

ngiri2704@rogers.com

வன்னிமண் (1 -5)

வன்னிமன் (6 -9)

வன்னிமண் (10 -13)