என்னோடு வந்த கவிதைகள்(1)

“நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது
 சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
 சொல்லடி, சொல்லடி. சக்தி மாகாளி!” – பாரதி.-

- பிச்சினிக்காடு இளங்கோ கவிதை… கவிதை என்ற சொல்லைக் கேட்டது எப்போது? கவிதை என்ற சொல்லைப் பார்த்தது எப்போது? துல்லியமாகச் சொல்லிவிடமுடியுமா? துல்லியமாகச்சொல்லிவிட முயற்சி செய்கிறேன். நடக்கும்போதும் யோசிக்கிறேன். படுத்துக்கொண்டும் யோசிக்கிறேன். அந்தத்துல்லியம் சற்று தூரத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை. அம்மா பேசிய சொலவடைக்கிடையே மறைந்திருந்ததை கவனிக்கத்தவறிவிட்டேன். இன்று என் மனைவி பேசுவதுபோல் அன்று பேசிய பலரின் சொற்சித்திரங்களைக் கையகப்படுத்த தவறிவிட்டேன். காரணம்…கவிதையை இனம்காணும் பருவத்தில் நான் இல்லை`  அது, கவிதை உணர்வு என்னிடம் தோன்றாமலிருந்த காலம். கவிதை உணர்வு எனக்குள் தோன்றி என்னைத்தூங்கவிடாமல் உசுப்பத்தொடங்கியபொழுதிலிருந்துதான் கவிதையை இனம்காணும் தூண்டுதல் நிகழ்ந்தது.` அந்தத்தூண்டுதலுக்குப்பின்பே கவிதைபற்றிய உணர்வு, கவிதைபற்றிய எண்ணம், கவிதையோடு தொடர்பு வளர்ந்தது .தொடக்கப்பள்ளியில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்,மூதுரை, நல்வழிப் பாடல்கள்தாம்  முதலில் அறிமுகம். அவற்றை ஒரு கடமையாகப் படித்தோம்; பாடினோம். அவற்றிலிருந்து நாம் பெற்றது சில அசைக்கமுடியாத உண்மைகள்; தெளிவுகள்;வழிகாட்டுதல்கள்; நீதிகள். செய்யுளாகப்படித்தோம். நீதிகளைத்தெரிந்துகொள்ள படித்தோம்.

சாதிகளால் பிரிந்துகிடக்கும் நம்மைப்பார்த்து ஒளவையார் கூறிய அறிவுரை:

“சாதி இரண்டொழிய வேறுஇல்லை சாற்றுங்கால்
நீதி வழுவார் நெறிமுறையின் –மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி”

இன்றைக்கும் நினைவுக்கு வருகிறது; நீதியைச்சொல்கிறது. அது ஒரு வெண்பா என்று நினைவுக்கு வருவதைவிட, கொடுப்பவர் மேலோர்.கொடுக்காதவர்கள் கீழோர் என்ற இரண்டு சாதிதான் என்று வரையறை செய்து வழிகாட்டியது நினைவுக்கு வருகிறது. சாதிய கணக்கெடுப்பில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கும் இந்தவேளையில் ஒளவையார் பாடல் எப்படி வழிகாட்டியது! என்பதை உணரமுடிகிறது. சாதியை ஒழிக்க பாடுபட்ட காலம் மாறி; அதற்காக இயக்கம் கண்ட நிலையை மறந்து; சாதி வேரூன்றும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தச்சூழலில் அண்மையில் ஒரு கவிதை எழுத நேர்ந்தது:

“எந்தக்கட்சியின் பெயரிலும்
சாதி இல்லை

சாதி இல்லாமல்
எந்தக்கட்சியும் இல்லை

சாதி இல்லா வேடம்
தேவையாகிறது

சாதிதான்
வேராக இருக்கிறது

வேர் ஒன்றாக
வேடம் ஒன்றாக
நாடகம் நடக்கிறது
நாகரீகமாய்…

வேர்மறைத்து
கணக்கெடுப்பில் கவனம் செலுத்தும்
தலைவர்களின் முகத்தில் பூக்கும்
சிரிப்பைப்பார்த்துக்
கழுத்தில் கிடக்கும்
பூக்கள் நகைக்கின்றன.”

காலம் மாறியிருக்கிறது. நிலையான கொள்கைகள் நிலைகுலைந்திருக்கின்றன.எல்லாம் அரசியல்.
எங்கும் அரசியல்.

அந்த இளமைப்பரவத்தில் பாடிய இன்னொரு பாடல் உலகநாதர் இயற்றிய, உலக நீதியில் இடம்பெற்ற

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
  ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
  வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
  போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய வேண்டாம்” என்ற பாடல்.

இதுபோன்ற பாடல்களைச் சின்னவயதில் எந்தச்சிந்தனையுமில்லாமல் படித்தகாலம் நினைவுக்குவருகிறது. நீதியை; அறத்தை;வாழ்வியல் உண்மைகளைச் செய்யுளாகப் பாடிய நினைவுகளின்றி கவிதைபற்றிய எந்த ஈர்ப்பும்; நினைப்பும் இல்லாமலிருந்ததுதான் நினைவுக்குவருகிறது.

பட்டுக்கோட்டையில் உயர்நிலைப்பள்ளியில் எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது தமிழாசிரியராக இருந்தவர் புலவர் பாஸ்கரன். மயிலாடுதுறையைச்சேர்ந்தவர். பாரதியைப்போல் முறுக்கு மீசைவைத்துக்கொண்டு வெண்ணிற ஜிப்பா அணிந்துகொண்டு கம்பீரமாக வகுப்பிற்கு வருவார்.கடுமையானவர். தமிழில் அனைவரும் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பாடம் நடத்துவார். மாணவரிடையே உயர்வு தாழ்வு பார்க்காதவர். எல்லோருக்கும் திறமை இருக்கிறது என்ற நம்பிக்கை உடையவர். ஒருநாள் பள்ளியில் பாரதியின் பாடலை ஒப்புவிக்கும் போட்டி அறிவிப்பு வந்தது. போட்டி என்றால் ஒருசிலரே கலந்துகொள்ளும் சூழ்நிலையும் ஒரு சிலரே பரிசுபெறும் நிலையும் இருந்துவந்தது. எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளவைத்தார். அனைவரும் பெயர் கொடுத்து போட்டியில் ஒப்புவிக்கும் அந்தப்பாடல்பகுதியைத் தெரிந்துவந்தோம். அனைவரையும் மனப்பாடம் செய்யவைத்தார்.மூன்று நாள்கழித்து அனைவரையும் வகுப்பில் ஒப்புவிக்கச்செய்தார். எப்படிப்பாடலைச் சொல்லவேண்டும் என்று கற்றுத்தார். அவரே பேசிக்காட்டினார். உணர்வோடும்; பாவத்தோடும்;ஏற்ற இறக்கத்தோடும் பாரதியின் பாடலை மேடையில் பேச பயிற்சியும் தந்தார். போட்டி நடைபெறும் நாள்வரை வகுப்பில் அனைவருக்கும் பயிற்சி தொடர்ந்தது. போட்டிநாளன்று அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கலந்துகொண்டோம். அப்போதுதான் ஒரு கவிதையை வாசித்ததும், மனப்பாடம் செய்து ஒப்புவித்ததும் என் வாழ்வில் நிகழ்ந்தது. அதுதான் கவிதைக்கும் எனக்கும் நிகழ்ந்த நேரடித் தொடர்பாகும். பாரதியின் பாடலை நானும் உணர்வோடு ஒப்புவித்தேன். அது ஒரு புதிய அனுபவம். இன்னும்கூட அந்த உணர்வை நான் அடைகாத்துவருகிறேன். அன்றைய போட்டியில் எனக்குப் பரிசில்லை. எனக்குமட்டிமல்ல எப்போதும் பரிசுகளைத் தட்டிச்செல்லும் நண்பர்களுக்கும் பரிசில்லை. வகுப்புக்கு ஒழுங்காக வர இயலாத; படிக்கும்போதே ஓவியராக விளங்கிய; ஒர் ஏழைமாணவனான இராமானுஜத்திற்குக் கிடைத்தது. பாரதியின் பாடலை அவ்வளவு உணர்வோடு, நடிப்புத்திறன்கூட்டி பேசிக்காட்டினான். அனைவரும் பார்த்து ரசித்தனர். ரசித்துச் சிரித்தனர். பரிசுபெற்ற நண்பன் இராமானுஜத்தைக்காட்டிலும் தமிழாசிரியர் பாஸ்கரன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அன்று ஆற்றல்மிகு ஓர் இளைஞனைக் கண்டுபிடித்தார். இன்று அந்த இராமானுஜம் எங்கே? எனக்கு அந்த வாய்ப்பே பரிசு.இல்லையெனில் பாரதியின் பாடலைத்தேடிப்படிக்கும் காலம் எனக்கு எத்தனை ஆண்டுகளுக்குப்பின் கிடைத்திருக்கும் என எண்ணிப்பார்க்கிறேன்… அந்த வாய்ப்பைத்தந்தவர் தமிழாசிரியர் பாஸ்கரன். அதுமட்டுமல்ல,அறிஞர் அண்ணா முதல்வராகப் பதவி ஏற்றபின் வானொலியில் ஆற்றிய உரையைக்கேட்டுவிட்டு அடுத்தநாள் வகுப்பிற்கு வந்ததும் மிகவும் மகிழ்ச்சியோடு” இன்றுதான் நான் ஒரு தமிழாசிரியனாகப் பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார். அண்ணாவின் உரையில் தமிழகத்தில் ஆங்காங்கே நாளங்காடி,சிற்றங்காடி, சிறப்பங்காடிகள் திறக்கப்படும் என்று குறிப்பிட்டாராம். சிறப்பங்காடி( போன்ற தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தியதுதான் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார்.

போட்டியில் என்னை ஆசிரியர் பாஸ்கரன் கலந்துகொள்ளவைத்ததால் எனக்கும் பாரதியின் கவிதைக்கும் ஓர் அறிமுகம் நிகழ்ந்தது. இன்றைக்கும் அந்தப்பாடலை நினைக்கும்போது; அசைபோடும்போது; சொல்லிப்பார்க்கும்போது ஒரு தனி உணர்வு என்னைக்கவ்விக்கொள்கிறது. இதோ பாரதியின் அந்தப்பாடல்…

பார்: சுடர்ப்பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன; ஓகோ!
என்னடி! இந்த வண்ணத் தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்!வெம்மை தோன்றாமே
எரிந்திடும் தங்கத்தீவுகள் பாரடி
நீலப் பொய்கைகள் அடடா!நீல
வண்ண மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை! கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையில், மிதந்திடுந் தங்கத்
தோணிகள்,சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்!காணடி ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்!ஆகா எங்கு நோக்கிடினும்
ஒளித்திறள்! ஒளித்திரள்! வண்ணக் களஞ்சியம்!”

pichinikkaduelango@yahoo.com