வாசிப்பும், யோசிப்பும் 145: புகலிடப்படைப்புகளைப்பற்றி…

 வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்.....; புகலிடப்படைப்புகளைப்பற்றி...; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....‘எதுவரை’ இணைய இதழில் எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணலொன்று  வெளியாகியுள்ளது. அதனைக்கண்டவர் எழுத்தாளர் கோமகன். அந்நேர்காணலில் ஒரு கேள்வி. அது:

“புலம் பெயர் இலக்கிய சூழலில் இருந்து வெளியாகின்ற படைப்புகளில் ஒரு சிலதைத்தவிர அநேகமான படைப்புகள் மலரும் நினைவுகளையொத்த படைப்புகளாகவே வெளிவருகின்றன. இவர்களால் ஏன் புலம் பெயர் கதைக்களங்களையும், கதைமாந்தர்களையும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியாது இருக்கிறது ?”

இவ்விதமான கேள்விகளை எதிர்கொள்ளும்போதுகளில் நான் எனக்குள் சிரித்துக்கொள்வதுண்டு. இந்தக்கேள்வியில் கூறப்பட்டிருப்பதுபோல்தான் உண்மையான நிலை உள்ளதா? ‘இவர்களால் ஏன் புலம் பெயர் கதைக்களங்களையும், கதைமாந்தர்களையும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியாது இருக்கிறது’ என்ற கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளது. இவ்விதமான கேள்விகளுக்கு முக்கிய காரணம்: இவ்விதமான கேள்விகளைக்கேட்பவர்கள் குறிப்பிட்ட சிலரின் படைப்புகளையே முக்கியமான , தரமான படைப்புகளாகக்கருதிக்கொண்டு, அவர்களது படைப்புகளை மட்டுமே படிப்பார்கள். அவ்விதம் படிப்பதால் , இவர்களால் ஏனைய படைப்பாளிகள் பலரின் படைப்புகளைப்படிக்க முடிவதில்லை என்றெண்ணுகின்றேன். உண்மையில் புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பல புலம் பெயர் கதைக்களங்களையும், மாந்தர்களையும் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.

புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத்தாங்கி வெளியான தொகுப்புகளில் முதலாவதும், முக்கியத்துவம் பெற்றதுமான தொகுப்பு: ‘பனியும், பனையும்’ அதிலுள்ள கதைகளை ஒருமுறை இந்த நேர்காணலைக்கண்ட கோமகன் வாசித்துப் பார்த்தால் தெரியும் அவற்றில் எவ்வளவு கதைகள் புகலிடச்சூழலைக் கதைக்களங்களாக்கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றன என்று.

அதே நேரத்தில் புகலிடச்சூழலைக்கதைகளங்களாகக்கொண்டு படைக்கப்பட்டுள்ள புனைவுகளில் தாயக நிலை பற்றிய கழிவிரக்கம் வருவதென்பது மிகவும் சகஜமானதும், தவிர்க்க முடியாததுமானதோர் அம்சம். ஏனெனில் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு காரணங்களுகாகப் புலம்பெயர்ந்தவர்களின் படைப்புகளில் தென்படும் சொந்த மண் மீதான கழிவிரக்க உணர்வுகள் என்பது அவ்வகையான படைப்புகளின் முக்கியமானதோர் அம்சம்தான்.

இவ்விதமான கேள்விகள் போதிய படைப்புகளைப்படிக்காததால் உருவாகுபவை. புகலிடப்படைப்புகளைபற்றிய பிழையான சித்திரத்தை உருவாக்குபவை. இதுவரை வெளியான புகலிடப்படைப்புகள் (நூல் வடிவில் அல்லது இணையத்தில்) இயலுமானவரையில் படித்துப்பார்த்தால், அவை பற்றிய ஆய்வுகளைச்செய்தால் , மேலுள்ள கேள்வியே தவறானதென்பது தெரியவரும்.

இந்த நேர்காணலில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில விடயங்கள் பற்றிச் சில கேள்விகள் இன்னுமுள. அவை பற்றிப்பின்னர் எழுதுவேன். ஆனால் இது நல்லதொரு நேர்காணல் என்பதில் எந்தவிதக் கருத்து வேறுபாடுகளுமில்லை.

இவ்விதம் கேள்விகளைப்பலர் கேட்பதால் ஏன் புகலிடச்சூழலை விபரிக்கும் புகலிடப்படைப்பாளிகளின் புனைகதைகள் பற்றி ஆரம்பக் கட்டுரையொன்றினை எழுதக்கூடாது என்றொரு எண்ணம் தோன்றுகிறது. நிச்சயம் எழுதுவேன் என்றும் தீர்மானித்துக்கொள்கின்றேன்.

முருகபூபதியுடனான முழு நேர்காணலையும் கீழுள்ள இணைப்பில் வாசிக்கலாம்:

http://eathuvarai.net/?p=5157

 


இப்பதிவு பற்றி முகநூலில் வெளியான கருத்துகள் சில:

Prasanna Ramaswamy: All art gets created from memories, experiences of the past and reflections on that. The present may get into it as a reference or even the happening place but it is the past, which made the character what it is that gets recreated. What is literature but documentation of life, the lived experience? The second generation of those exiled will write about these places, life in it as that will be the geoterritory of their work.

வ.ந.கிரிதரன்: வணக்கம் ப்ரசன்னா ராமஸ்வாமி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உண்மையில் எழுதும் , பேசும் அனைத்துமே தர்க்கரீதியாகச்சிந்திக்கப்போனால் கடந்த காலத்தைப்பற்றிப்பேசுபவைதாம். ஏனென்றால் எல்லாமே எமது சிந்தையின் வெளிப்பாடுகள்தாம். “நிகழ்காலம் என்பது ஒரு ரெவரென்ஸ் ஆக, நிகழ்வுகளின் இடமாகக் கதைகளில் புகுந்தாலும், கடந்த காலம்தான் பாத்திரத்தை மீளுருவாக்கம் செய்கிறது. இலக்கியமென்றால் என்ன? வாழ்க்கையை, வாழ்க்கை அனுபவங்களை ஆவணப்படுத்துவதுதானே என்கின்றீர்கள். புகலிட மக்களின் இரண்டாவது தலைமுறையினர் இந்த இடங்களைப்பற்றி, அங்குள்ள வாழ்க்கையைப்பற்றி எழுதுவார்கள். அதுவே அவர்களின் படைப்புகளின் நில உலகப்பிரதேசமாக (geoterritory) இருக்கும்” என்று கூறுகின்றீர்கள்.

நான் கூற வந்தது என்னவென்றால்.. ஏற்கனவே முதலாவது தலைமுறைப்படைப்பாளிகளின் படைப்புகள் பலவற்றிலேயே புகலிடம் களமாகவும், புகலிட மாந்தர்கள் பாத்திரங்களாகவும் வந்திருக்கின்றார்கள் என்பதைத்தான். அதே நேரம் பிறந்த மண் மீதான கழிவிரக்கம் என்பது தவிர்க்க முடியாததோர் பண்பாகப் புகலிடப்படைப்புகளில் இருக்கும் என்பதைத்தான்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘நில உலகப்பிரதேசமாக (geoterritory)’ என்பது பற்றிச் சிறிது விரிவாக விளக்க முடியுமா? இரண்டாவது தலைமுறைப்படைப்பாளிகளின் படைப்புகளில் புகலிடச்சூழலும், மாந்தரும் – வாழ்வும் அவர்களது படைப்புகளின் ‘நில உலகப்பிரதேசமாக (geoterritory)’ என்று குறிப்பிடுவதைத்தான் கூறுகின்றேன்.

ப்ரசன்னா ராமஸ்வாமி:
பின்னர் விரிவாகப் பேசுவோம். நீங்கள் குறித்தபடி உள்ளதற்காலப் புகலிட விவரணங்களூடாகப் பேசப் படுவதும் கடந்தகால வாழ்க்கையின் தொடர்ச்சி, மீட்டுருவாக்கம், நினைவுகளே. ஜயபாலனின் சொற்றொடரை எடுப்போம், “நீர்ப் பாலை”.முத்துலிங்கத்தின் கதை மனிதர்களின் மனப் பரப்பைப் பார்ப்போம்… மேலதிகம் கவிதைகளில்… திருமாவளவன், சேரன், இன்னும் பலரும். இரண்டாம் தலைமுறையினரின் எழுத்தில் அனுபவம், நிலப் பரப்பு இரண்டும் ஒன்றாக இருக்கும்….
இது சுருக்கமான பதிவு. விரைவில் விரிவாகப் பேசுவோம்.

வ.ந.கிரிதரன்: உங்கள் கருத்துக்கு நன்றி ப்ரசன்னா ராமஸ்வாமி. புகலிட இலக்கியமென்பது ஜெயபாலனின், சேரனின், முத்துலிங்கத்தின், திருமாவளவனின் எழுத்துகள் மட்டுமல்ல. இங்கு நிறையவே பலர் எழுதுகின்றார்கள். எழுதியிருக்கின்றார்கள். இணையத்தில் பல படைப்புகளை வாசிக்க முடியும். அவற்றைப்பற்றி விரிவான தேடலை முதலில் செய்வோம். அதன் பின்னர் புகலிட இலக்கியம் பற்றி விரிவாகப்பேசுவோம். ‘பனியும், பனையும்’ , ஞானம் புலம்பெயர் இலக்கியத்தொகுப்பு உட்படப்பல படைப்புகளை, இணையத்தில் வெளியாகியுள்ள படைப்புகளை , ஐரோப்பியாவிலிருந்து வெளியாகியுள்ள ;குவார்னிகா’ போன்ற பல தொகுப்புகளை , படிப்பகம் தளத்தில் காணப்படும் பல புகலிடச்சஞ்சிகைகளை, வெளியாகும் இணைய இதழ்களில் வெளியாகும் புகலிடப்படைப்புகளை, முதலில் வாசிப்போம். அதன் பின்னர் புகலிட இலக்கியம் பற்றிப்பேசுவோம். நீங்கள் குறிப்பிட்டவர்களைத்தவிர இன்னும் பலர் நிறையவே எழுதுகின்றார்கள். இல்லாவிட்டால் தொடர்ந்தும் ‘குண்டுச்சட்டிக்குள் குதிரை’யோட்டும் தவறினையே செய்தவர்களாக இருப்போம். இவற்றை வாசித்தால் நீங்கள் கூறும் நாலுபேர்தான் புகலிட இலக்கியம் என்னும் மாயை உடைந்து போவதைக்காண்பீர்கள். உங்களுக்கு நிறைய புகலிடப் படைப்புகளை இணையத்தில் வாசிக்க முடியும். மேற்படி நேர்காணலில் கோமகன் செய்த தவறும் அதுதான். புகலிட இலக்கியம் பற்றிய போதுமான வாசிப்பு இல்லாததால்தால், குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமே வாசித்து, அவற்றையே புகலிட இலக்கியப்படைப்புகளாகக் கருதியதால்தான், அவரால் அவ்விதமொரு கேள்வியினை எழுத்தாளர் முருகபூபதியிடம் கேட்க முடிகிறது. எனவே முதலில் வாசிப்போம். பின்னர் யோசிப்போம்.

வ.ந.கிரிதரன்: புகலிடத்தமிழ் இலக்கியம் பற்றி கட்டுரைகள் , ஆய்வுக்கள் எழுதுபவர்கள் கட்டாயம் படித்திருக்க வேண்டியவை:

1. படிப்பகம் தளத்திலுள்ள சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளியான படைப்புகள்.
http://padippakam.com/index.php?option=com_sectionex&view=category&id=14&Itemid=54

2. தொகுப்புகள்: பனியும் பனையும், குவார்னிகா, ஞானம் புலம்பெயர்சிறப்பிதல் இது போல் வெளியான ஏனைய தொகுப்புக்ள்.

3. கணையாழியில் வெளியான ஆஸ்திரேலியச்சிறப்பிதழ், கனடாச்சிறப்பிதழ் போன்ற சஞ்சிகைகளில் வெளியான படைப்புகள்.

4. காலம் போன்ற சஞ்சிகைகள், பதிவுகள் போன்ற இணைய இதழ்களில் வெளியான படைப்புகள்.

5. புகலிட எழுத்தாளர்களின் வலைப்பதிவுகள்.