கடந்த ஞாயிறு அன்று மாலை ரகுமான் ஜானுடன் நீண்ட நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. காலத்தின் கோலத்துடன் பலர் காணாமல் போய் விடுவதைத்தான் பொதுவாகப் பார்த்திருக்கின்றோம். ஒரு சிலர்தாம் தம் சிந்தனையில் தெளிவு மிக்கவர்களாக , சிந்தனையில் பரிணாம வளர்ச்சி பெற்றவர்களாக , எப்பொழுதும் கற்றலை விடாது கடைப்பிடிப்பவர்களாக இருப்பதைப்பார்த்திருக்கின்றோம். அவர்களில் ஒருவர்தான் ரகுமான் ஜான்.
ஈழத்தமிழர்களின் வரலாறு பற்றிய விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டியதன் அவசியம் பற்றி ரகுமான் ஜான் ஆர்வமுள்ளவராகவிருக்கிறார். இதற்காக அவ்வப்போது பல்வேறு வழிகளில் , கடந்த காலங்களில் தான் எடுத்த முயற்சிகள் பற்றி உரையாடலில் எடுத்துரைத்தார். இன்றும் அதே ஆர்வத்துடன் தமிழர் வரலாறு முறையாக , ஆய்வுக்கண்ணோட்டத்தில் எழுதப்பட வேண்டியது அவசியம் என்னும் கண்ணோட்டத்தில் இருக்கிறார் ஜான். குறிப்பாக ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்ட வரலாறு உட்பட ஈழத்தமிழர்களின் வரலாறு முறையாக எழுதப்பட வேண்டியது அவசியம் என்னும் அவரது கொள்கையுடன் எனக்கும் உடன்பாடே. ஆயுதப்போராட்டத்தின் அடிப்படைக்காரணிகள், போராட்ட அமைப்புகள் பற்றிய விபரங்கள், அமைப்புகளுக்கிடையில் நிலவிய அக / புற முரண்பாடுகளும், மோதல்களும், அமைப்புகளின் அரசியல் மற்றும் போராட்டச்செயற்பாடுகள் எனப்பல்வேறு விபரங்களையும் உள்ளடக்கியதாக அவ்வரலாற்று நூல் அமைய வேண்டும். மேலும் ஈழத்தமிழர் வரலாறு பற்றிய நூல்கள், ஆவணங்களைச்சேகரித்துக்கொண்டிருக்கின்றார் ரகுமான் ஜான்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் இவரை முதன் முறையாகச்சந்தித்ததிலிருந்து இன்று வரை பல தடவைகள் நிகழ்வுகளில், தனிப்பட்ட சந்திப்புகளில் அவ்வப்போது சந்தித்துக்கொண்டுதான் வருகின்றேன். ஒவ்வொருமுறை இவரைச் சந்திக்கும்போதும் முதலில் என் நினைவில் தோன்றுவது மேற்கு நாடொன்றில் மருத்துவராக ‘டாலர்களின’ , ‘பவுண்ட்’சுகளில் செழிப்பில் வாழ்ந்திருக்க வேண்டியவரின் இருப்பை , எம் நாட்டுச்சூழல் எவ்வளவுதூரம் சிதைத்து விட்டிருக்கின்றது என்பதைத்தான். [இவர் யாழ் இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களிலொருவர் என்பதை அண்மையில் நிகழ்வொன்றில் பரதன் நவரத்தினம் கூறியபொழுதுதான் அறிந்து கொண்டேன்.] ஆனால் இவ்வளவு தூரம் தன் வாழ்வை அர்ப்பணித்து, பல தனிப்பட்ட சுகங்களை இழந்திருந்தபோதும் , இன்று வரை தான் நம்பும் கொள்கைகளுக்காக, மானுட விடுதலைக்காக, தெளிவான சிந்தனை மிக்கவராக இவர் நிலை தளராது இயங்கி வருவது மதிப்புக்குரியது.
அடுத்து இவரைச்சந்திக்கும்போதெல்லாம் தோன்றும் எண்ணம். முஸ்லீம் மக்கள் எப்பொழுதும் நடைமுறைச்சாத்தியமாகத்தான் சிந்திப்பார்கள், தமிழர்களின் விடுதலை பற்றியெல்லாம் சிந்திக்க மாட்டார்கள் என்றொரு தவறான எண்ணம் ஈழத்தமிழர்கள் மத்தியில், குறிப்பாக வடக்குத்தமிழர்கள் மத்தியில் இருந்ததொரு காலத்தில், இவரைப்போன்ற முஸ்லீம் இளைஞர்கள் பலர் தமிழர் விடுதலைப்போராட்டத்தில் இணைந்திருக்கின்றார்கள். இவ்விதமானதொரு சூழலில் அன்று யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றபட்டபோது இவரைப்போன்றவர்களையே முதலில் நினைத்துக்கொண்டேன்.
பயனுள்ள சந்திப்பு. சிறிது நேரம் சிந்தனையை விரிவாக்கிக்கொள்ள வைத்த, பல்வேறு விடயங்களைப்பற்றிய கருத்துகளைப்பரிமாறிக்கொண்ட சந்திப்பு. பணம் , பணம் என்று மேற்குநாட்டுச்சூழலுக்குள் மூழ்கி, களியாட்ட நிகழ்வுகளில், இரவுகளில் அவ்வப்போது மதுவும், கையுமாக அரசியல் பேசுவோர் மத்தியில், உணர்ச்சியில் கொந்தளிப்போர் மத்தியில் இவரைப்போன்றவர்கள் , தம் நிலையில், நோக்கில் தெளிவுடன் இயங்கி வருகின்றார்கள்.
ngiri2704@rogers.com