வாசிப்பும், யோசிப்பும் 154: இலக்கியத்தில் தடம் பதித்துவரும் சகோதரிகள் இருவர்!

ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் (புகலிடம் இலக்கியத்தையும் உள்ளடக்கி)  தடம் பதித்துvவரும் பெண் எழுத்தாளர்களில் இருவர் சகோதரிகள். ஒருவர் சந்திரா ரவீந்திரன். மற்றவர் சந்திரவதனா செல்வகுமாரன். நீண்ட நாள்களாக சந்திரா ரவீந்திரன், சந்திரா தியாகராஜா, சந்திரவதனா செல்வகுமாரன் ஆகிய மூவரும் சகோதரிகள் என்று நினைத்திருந்தேன். இவர்களில் சந்திரா தியாகராஜாவே மூத்தவராக இருக்க வேண்டுமென்றும் எண்ணியிருந்தேன். பின்னர்தான் தெரிந்தது சந்திரா தியாகராஜாவும், சந்திரா ரவீந்திரனும் ஒருவரே என்பது. சந்திரா தியாகராஜா எண்பதுகளிலிருந்தே ஈழத்துத் தமிழ் வெகுசன ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட ஒருவராக விளங்கியவர் என்பதாலேயே அவ்விதம் எண்ணியிருந்தேன்.

தற்போது சந்திரா ரவீந்திரனாக அறியப்படும் இவரது ‘நிலவுக்குத்தெரியும்’ சிறுகதைத்தொகுதி அண்மையில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாகத்தமிழகத்தில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவர் சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதிய காலகட்டத்தில் வெளியான ‘நிழல்கள்’ சிறுகதைத்தொகுப்பு பருத்தித்துறையில் யதார்த்தா வெளியீடாக 1988இல் வெளியாகியுள்ளது. அத்தொகுப்பில் சிரித்திரனில் பரிசு பெற்ற இவரது சிறுகதைகளும், யாழ் இலக்கிய வட்டம் / வீரகேசரி இணைந்து நடாத்திய குறுநாவல் போட்டியில் (1984 / 1985) இரண்டாம் பரிசு பெற்ற ‘நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்’ என்னும் குறுநாவலும் அடங்கியுள்ளன.

‘நிழல்கள்’ என்னும் இத்தொகுப்பினை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தொடுப்பு: http://noolaham.net/project/45/4435/4435.pdf

சகோதரிகள் இருவரும் தொடர்ச்சியாக ஆற்றி வரும் இலக்கியப்பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சந்திரவதனா செல்வகுமாரனும் 1975 தொடக்கம் எழுதி வருகின்றார். இருவருமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலமாகவே தம் இலக்கிய வாழ்வினைத்தொடங்கியவர்கள் என்பதை இவர்களைப்பற்றிய விக்கிபீடியாத்தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு இவரது படைப்புகளைப்பற்றிப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது:

“எழுத்துலக வாழ்வு 1975லிருந்து எழுதிவரும் இவரது எழுத்தார்வம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலமாகத் தொடங்கியது. இவரது பன்முகப்பட்ட படைப்புகள் வானொலிகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் பலவற்றில் வெளிவந்துள்ளன. இவரது மனஓசை வலைப்பதிவு இவரின் சமூக, அரசியல், இலக்கிய மற்றும் சுய உணர்வுகளின் வெளிப்பாடாக விரிந்து கிடக்குமொரு தளம். சிறுகதை, கவிதை, கட்டுரையென இவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி நிற்பன இவரது ஆக்கங்கள். இவரின் படைப்புக்கள் எரிமலை, களத்தில் ஈழமுரசு, ஈழநாடு, குமுதம், இளங்காற்று, புலம், சக்தி (பெண்கள் இதழ்), பெண்கள் சந்திப்பு மலர் (பெண்கள் இதழ்), உயிர்ப்பு, பூவரசு (சஞ்சிகை), வெற்றிமணி, முழக்கம், தங்கதீபம், வடலி, குருத்து மாதஇதழ், செம்பருத்தி (சஞ்சிகை), யாழ் (இணைய இதழ்), சூரியன் (இணைய இதழ்), பதிவுகள் (இணைய இதழ்), திண்ணை (இணைய இதழ்), அக்கினி (இணைய இதழ்), யுகமாயினி உட்படப் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன.”

மேலும் சந்திரவதனா செல்வகுமாரன் தொடர்ச்சியாக வலைப்பதிவுகளை நடாத்தி வருகின்றார். குறிப்பாக மனஓசை இணைய இதழ் (2002 இல் ஆரம்பிக்கப்பட்டது), மனஓசை வலைப்பதிவு (2003 தொடக்கம்), மற்றும் பெண்கள் என்னும் வலைப்பதிவு ஆகியவற்றைக்குறிப்பிடலாம். விக்கிபீடியாவுக்கான இவரது பங்களிப்பும் முக்கியமானது. ஈழத்து எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் பலவற்றை விக்கிபீடியாவுக்காக இவர் எழுதியுள்ளதாக அறிய முடிகிறது.

இவை தவிர சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பான ‘மனஓசை’ தற்போது மின்னூலாகவும் இணையத்தில் கிடைக்கிறது. முகவரி: http://freetamilebooks.com/ebooks/manaosai-short-stories/

சந்திரவதனா பன்முக ஆற்றல் வாய்ந்தவர். கதை , கட்டுரை, கவிதை என இலக்கியத்தின் பல் பிரிவுகளிலும் தடம் பதித்து வருபவர். சகோதரிகள் இருவரினதும் இலக்கியப்பங்களிப்பு தொடரட்டும்; வாழ்த்துகள்.

இவர்களைப்பற்றிய மேலதிகத்தகவல்களை விக்கிபீடியா(தமிழ்)வில் எழுத்தாளர்கள் பகுதியில் பெற்றுக்கொள்ளலாம்.

ngiri2704@rogers.com