பயணியின் பார்வையில் அங்கம் — 16: 1925 இல் தோன்றிய இலங்கை வானொலியின் பொற்காலமும் இன்றைய காலமும் ஒரு நேர்காணலும்!

முருகபூபதி தம்பி ஐயா தேவதாஸுடன்இலங்கை வானொலி தொடங்கப்பட்டு 92 வருடங்களாகின்றன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர் உலகெங்கும் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. அதன்பின்னர் கணினியின் தோற்றத்தையடுத்து இணையத்தளத்தின் அறிமுகம் வந்ததும், மேலும் வானொலி நேயர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆயினும், இன்றும் வானொலி நேயர்களின் ரசனைக்கும் பயன்பாட்டிற்கும் வானொலிகள் இயங்கியவண்ணமிருக்கின்றன. வாகனத்தை செலுத்திக்கொண்டே வானொலியை இயக்கவிட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பவர்கள், கைத்தொலைபேசியில் கேட்பவர்கள், இணையத்தின் வழியே கேட்பவர்களின் எண்ணிக்கை குறையவேயில்லை. இந்தப்பின்னணிகளுடன்தான் கொழும்பு ரேடியோ என்ற பெயரில் 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இலங்கை வானொலிதான் உலகிலேயே இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது.

நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் தொலைக்காட்சி இருக்கவில்லை. இலங்கை வானொலியின் தேசிய சேவையும், வர்த்தகசேவையும் இலங்கையில் மூவின மக்களையும் பெரிதும் கவர்ந்திருந்த ஊடகமாகத்திகழ்ந்தது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டினரும் விரும்பிக்கேட்ட நிகழ்ச்சிகள் இலங்கை வானொலியில்தான் ஒலிபரப்பாகின. நடிகர் கே. ஏ. தங்கவேலுவும் ஒரு திரைப்படத்தில் இலங்கைவானொலி அறிவிப்பாளர் மயில்வாகனம் பற்றிப்பேசுவார். அந்தளவுக்கு தமிழகத்து நேயர்களையும் கவர்ந்திருந்த இலங்கை வானொலியில் எனது குரலும் ஒலிக்காதா…? என்று ஏங்கியிருந்த காலம் ஒன்றிருந்தது.

எமது ஊருக்கு, கலைஞர் ‘சானா’ சண்முகநாதன் தமது குழுவினருடன் வந்து, குதூகலம், மத்தாப்பு முதலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்பும்போது நான் மாணவன். அந்த நிகழ்ச்சி எங்கள் பாடசாலையில் 1962 ஆம் ஆண்டில் நடந்தது. பின்னாளில் எங்கள் பாடசாலை அதிபர், வித்துவான் இ.சி சோதிநாதன், ஆசிரியை திலகா தில்லைநாதன் ஆகியோர் வானொலி நாடகங்களில் பங்குபற்றும் கலைஞர்களாக இருந்தும், ஒலிபரப்பாகும் சிறுவர் நிகழ்ச்சியில்கூட பங்குபற்றுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. எனினும் எனக்கும் இலக்கிய முகம் வந்தபின்னர், வி.என். மதியழகன், கே.எஸ். சிவகுமாரன் ஆகியோரின் தொடர்பினால் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் அமைந்திருந்த இலங்கை வானொலி நிலையத்தின் படிக்கட்டுகளில் எனது கால் பதிந்தது.

என்னை மதியழகனுக்கு அறிமுகப்படுத்தியவர் கே.எஸ்.சிவகுமாரன். இவர்களுடனான நட்புறவு இன்றும் நீடிக்கிறது. பின்னாளில், இலங்கை வானொலிக்கலைஞர்கள் சுந்தா சுந்தரலிங்கம், காவலூர் இராஜதுரை, சில்லையூர் செல்வராசன், கே. எம். வாசகர், அருந்ததி ஶ்ரீரங்கநாதன், பி.எச். அப்துல்ஹமீத், ஜோர்ஜ் சந்திரசேகரன், ஜோக்கின் பெர்னாண்டோ, புவனலோஜனி, ராஜேஸ்வரி சண்முகம், நடராஜசிவம், புஷ்பரத்தினம், கே.எஸ். ராஜா, ஹரிகர சர்மா, சற்சொரூபவதி நாதன், இராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், விவியன் நமசிவாயம், சிவஞானம் ஆகியோருடனும், தமிழ்ச்சேவைப்பணிப்பாளர்கள் கே.எஸ். நடராஜா, பொன்மணி குலசிங்கம், வீ. ஏ. திருஞானசுந்தரம், ஞானம் இரத்தினம் ஆகியோருடனும் தற்போதைய பணிப்பாளர் கணபதிப்பிள்ளை ஆகியோருடனும் தொடர்புகள் வந்தன.

எனது சில சிறுகதைகள் வானொலி நாடகங்களாக ஒலிபரப்பாகின. சன்மானமும் கிடைத்திருக்கிறது. மதியழகன் நடத்திய இளைஞர்களுக்கான சங்கநாதம் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியிருக்கின்றேன். அதில் கலந்துகொண்டபோதுதான் சண்முகநாதன் வாசுதேவனும் நண்பரானார். இவர் பின்னாளில் அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலம் வந்து, அங்கு பிரிஸ்பேர்ண் தமிழ் ஒலி என்ற வானொலி நிகழ்ச்சியை திறம்பட நடத்தினார். எனது கதைகள், கட்டுரைகளையும் அதில் ஒலிபரப்பியிருக்கிறார். எனது இனிய நண்பன் வாசுதேவன் தற்கொலை செய்து கொண்டதை என்னால் இன்றும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நல்ல கவிஞன், சிறந்த ஒலிபரப்பாளன். இழந்துவிட்டோம்.

இந்தப்பத்தியில் நான் குறிப்பிடும் சிலர் இன்று எம்மத்தியில் இல்லை.

நண்பர் கே. எஸ். சிவகுமாரனால் எனக்கு அறிமுகப்படுத்திவைக்கப்பட்ட வி.ஏ. திருஞானசுந்தரம் தமிழ்ச்சேவை பணிப்பாளராக இருந்தபொழுது கலைக்கோலம் நிகழ்ச்சியை சிறிது காலம் நடத்துவதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்கியிருந்தார் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் குறிப்பிட விரும்புகின்றேன். இந்நிகழ்ச்சியை பேராசிரியர்கள் கைலாசபதி, சித்திரலேகா மெளனகுரு, காவலூர் இராஜதுரை ஆகியோரும் அதற்கு முன்னர் நடத்தியிருக்கிறார்கள். நூல் அறிமுகம், கலந்துரையாடல், நேர்காணல், நாடகம், திரைப்பட விமர்சனம் உட்பட சில நிகழ்ச்சிகள் கலைக்கோலத்தில் இடம்பெறும். கலை, இலக்கியவாதிகள் பெரிதும் விரும்பும் நிகழ்ச்சியாக கலைக்கோலம் அக்காலத்தில் விளங்கியது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

நான் கலைக்கோலம் நடத்திய காலப்பகுதியில் பத்திரிகையாளர்கள் எஸ். எம். கார்மேகம், வீரகத்தி தனபாலசிங்கம், அன்னலட்சுமி இராஜதுரை, பிரணதார்த்தி ஹரன் ( தற்போதைய தினக்குரல் பிரதம ஆசிரியர்) ராஜஶ்ரீகாந்தன் ( முன்னாள் தினகரன் பிரதம ஆசிரியர்) ஆகியோரையும் அழைத்துச்சென்று அதில் கலந்துகொள்ளவைத்திருக்கின்றேன்.

இலங்கை வானொலியுடனான எனது உறவு 1974 இல் தொடங்கி 1983 கலவர காலத்துடன் முடிந்துவிட்டது. அதன்பின்னர் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் எனது குரல் 1997 ஆம் ஆண்டில்தான் இலங்கை திரும்பியிருந்தவேளையில் இலங்கை வானொலியில் ஒலித்தது. அச்சமயம் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த நண்பர்கள் கந்தையா குமாரதாசன் ( கம்பன் கழகம்) மற்றும் தம்பிஐயா தேவதாஸ் ஆகியோர் அழைத்து நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். எழில்வேந்தன், வன்னியகுலம், சற்சொரூபவதி நாதன், திக்குவல்லை கமால், விஸ்வநாதன் ஆகியோர் சக்தி, ரூபவாகினி ஆகிய தொலைக்காட்சிகளில் நேர்காணல் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து ஒளிபரப்பியிருக்கிறார்கள்.

இவ்வாறு தொடர்ச்சியாக இலங்கை வானொலியிலும் சில தொலைக்காட்சிகளிலும் நேர்காணல்களுக்கு சென்றுள்ளமையால், மீண்டும் மீண்டும் சென்று அலைவதற்கு சலிப்பும் வந்திருந்தமையினால் இம்முறை பயணத்தில், இலங்கை வானொலி நேர்காணலை நேரப்பற்றாக்குறை காரணமாகவும் தவிர்க்கவே விரும்பினேன். எத்தனைபேர் தற்காலத்தில் வானொலி கேட்கிறார்கள்…? என்ற மனச்சோர்வும் மற்றும் ஒரு காரணம். இன்று உலகெங்கும் கமலின் பிக்பொஸ் தான் பெரும்பாலான தமிழர் வீடுகளை ஆக்கிரமித்திருக்கிறது. இலங்கை வானொலிக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. மேலே குறிப்பிட்ட கலைஞர்கள் பணியாற்றிய காலத்தில், இலங்கை வானொலியின் தேசிய சேவைக்கும் வர்த்தகசேவைக்கும் கடல்கடந்தும் நேயர்கள் இருந்தனர். Old is Gold எனச்சொல்லி இன்று நாம் ஆறுதல்படமுடியும்.

” இலங்கை வானொலி தனது வர்த்தக சேவைப் பிரிவை 30 -09 – 1950 இல் தொடங்கிய உடனேயே, இந்திய துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இமயமலையில் உச்சியில் கால் பதித்த எட்மண்ட் ஹிலாரியும், டென்சிங் நார்கேயும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் செவிமடுத்தார்கள். பொங்கும் பூம்புனல், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, அன்றும் இன்றும், புது வெள்ளம், மலர்ந்தும் மலராதவை, இசை தேர்தல், பாட்டுக்கு பாட்டு, இசையும் கதையும், இன்றைய நேயர், விவசாய நேயர் விருப்பம், இரவின் மடியில் என தூய தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி, தமிழகத்தில் தனக்கென்று நேயர்கள் வட்டத்தை இலங்கை வானொலி உருவாக்கிக் கொண்டது.” முதலான தகவல்களையும் இந்தப்பத்தி எழுதும் வேளையில் நான் பெற்றுக்கொண்டேன். (ஆதாரம்: எஸ். முகம்மது ராஃபி – http://tamil.thehindu.com/tamilnadu/article19522985.ece)

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 2008 ஆம் ஆண்டில் இலங்கை வானொலி நிலையம் இந்தியாவிற்கான தமிழ் ஒலிபரப்பை நிறுத்திக்கொண்டது. மீண்டும் ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்னர் அந்த ஒலிபரப்பு தொடங்கியிருக்கும் நற்செய்தியையும் அந்த இணைப்பு தந்திருக்கிறது. அன்று அதிகாலையே எழுந்து கொழும்புக்கு புறப்பட்டேன். கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்திற்கான போக்குவரத்து வசதிக்காக கட்டுநாயக்காவிற்கும் பேலியாகொடைக்குமிடையே அதிவேகப்பாதை ( சமிக்ஞை விளக்கு இல்லாத ) அமைக்கப்பட்டிருப்பதனால் 20 நிமிடங்களில் நீர்கொழும்பிலிருந்து கொழும்புக்கு சென்றுவிடலாம். அந்த சௌகரியம் காலைவேளையிலும் மாலைக்குப்பின்னர் இரவுவேளையிலும்தான் வரும். இடைப்பட்ட நேரத்தில் புறக்கோட்டைக்கும் பேலியாகொடைக்கும் இடையில் வாகனங்கள் நத்தைபோன்றுதான் ஊர்ந்துகொண்டிருக்கும். நண்பர் தம்பிஐயா தேவதாஸ் அழைத்திருந்த நேரம் காலைவேளையென்பதனால் முதல் நாள் வடக்கிலிருந்து வந்த பயண அலுப்பையும் துறந்து புறப்பட்டேன்.

அப்துல் ஹமீட்வி.என்.மதியழகன்இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை பணிப்பாளர் திரு. கணபதிப்பிள்ளையிடமும் அந்த நேரடி ஒலிபரப்பு நேர்காணலுக்கு தம்பிஐயா தேவதாஸ் முன் அனுமதி பெற்றிருந்தமையால், என்ன காரணம் சொல்லியும் அதனை தவிர்க்க முடியாது. நண்பரையும் அநாவசிய சிக்கலில் மாட்டிவிடுவதற்கு நான் விரும்பவில்லை. பஸ் பயணத்தில் சற்று உறங்கி, தூக்கக்கலக்கத்துடன் இலங்கை வானொலிக்கு சென்றபொழுது, நண்பரே வாசலுக்கு வந்து வரவேற்று கலையகத்திற்கு அழைத்துச்சென்றார். இலங்கை வானொலி நிலையம் என்றும் பதினாறு மார்க்கண்டேயராகவே இன்றும் காட்சியளிக்கிறது.

இந்தப்பத்தியில் ஏற்கனவே சொல்லியிருக்கும் அன்பர்களை நினைவிலிருத்திக்கொண்டே நண்பர் அழைத்துச்சென்ற ஒலிப்பதிவு கூடத்துள் நுழைந்தேன். காலைச்செய்தி ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. மூத்த தலைறையினர்தான் தற்காலத்தில் வானொலி நிகழ்ச்சிகளை கேட்கின்றனர். நான் வாழும் அவுஸ்திரேலியாவிலும் இந்த நிலைமைதான் தொடருகின்றது. ” இலங்கையில் காலை முதல் இரவு வரையில் குறிப்பிட்ட நேரத்தில்தான் இலங்கை வானொலி ஒலிக்கிறது. நான் வாழும் கங்காரு தேசத்திலும் எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் 24 மணிநேரங்களும் ஒலிபரப்பாகும் வானொலிகள் இயங்குகின்றன. ” என்ற தகவலை நண்பருக்குச்சொன்னேன்.

எனது இலங்கை பயணத்தின் முக்கிய நோக்கமே நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து இயக்கும் இலங்கை மாணவர்கல்வி நிதியம் சார்ந்த மாணவர் ஒன்றுகூடல்தான். அதனால், நான் போர்க்காலம் பற்றியும் அந்த நேர்காணலில் பேசிவிடுவேனோ என்ற தயக்கம் நண்பருக்கு இருந்தமையால், முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டார். இலங்கை வானொலி அரச சார்பு நிறுவனம். நாம் அங்கு நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய காலப்பகுதியில் ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்று சொல்ல முடியாத எழுதாத சட்ட விதியிருந்தது. அதனால் இலங்கை இலக்கிய வளர்ச்சி என்றே பேசுவோம்.

நான் கலைக்கோலம் நிகழ்ச்சி நடத்திய காலப்பகுதியில் மூத்த எழுத்தாளர் கே. டானியல் தமிழகத்திற்கு சிகிச்சைக்கு சென்றிருந்தவேளையில் தஞ்சாவூரில் காலமானார். அவர் பற்றிய நினைவுரையை நண்பர் வீரகத்தி தனபாலசிங்கத்தை அழைத்து நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்தபோது, இலங்கை வானொலி தமிழ்ச்சேவையின் மேலிடத்திலிருந்து ஒலிப்பதிவு கூடத்துக்கு திடீரென்று ஒரு உத்தரவு வந்தது. ” டானியல் நினைவுரையில் சாதி என்ற சொல் வந்துவிடக்கூடாது. “
எனக்கு உடனே, பாடசாலை மாணவர்களுக்கு நடத்தும் போட்டிகள்தான் நினைவுக்கு வந்தது. குடை என்ற தலைப்பில் பேசவேண்டும். ஆனால், மழை, வெய்யில் என்ற சொற்கள் வந்துவிடக்கூடாது. நான் எனக்குள் சிரித்துக்கொண்டு, டானியல் பற்றிய கட்டுரையில் சாதி என்று வரும் இடங்களில் அடிநிலை மக்கள் என்று எழுதி அந்த உரையை பதிவுசெய்தேன்.

ஒலிப்பதிவு கூடத்தைவிட்டு வெளியே வந்தபோது, அதுவரையில் அதனை வேறு ஒரு அறையிலிருந்து செவிமடுத்த அன்றைய தமிழ்ச்சேவை பணிப்பாளர் வீ. ஏ. திருஞானசுந்தரம் நேரில் வந்து கையை குலுக்கி, நிகழ்ச்சியை சாதுரியமாக சமாளித்துவிட்டதாக பாராட்டினார். அந்த அனுபவம் இருந்தமையால் தம்பிஐயா தேவதாஸ் கேட்டகேள்விகளுக்கு இடையில் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களைப்பற்றி பேசும்போது சில சொற்களை புகுத்தினேன். சுமார் ஒரு மணிநேரம் நேரடி ஒலிபரப்பாக வான்அலைகளில் பரவிய அந்த நிகழ்ச்சியில் ஈழத்து இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், தமிழ்க்கல்வி, எழுத்தாளர்கள் பற்றிய நினைவலைகள், அவுஸ்திரேலியாவின் கலை, இலக்கிய செயற்பாடுகள் முதலான இன்னோரன்ன விடயங்கள் குறித்து உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

அடுத்த பயணம் பேராதனை பல்கலைக்கழகம் நோக்கியிருந்தமையால் நண்பர் தம்பிஐயா தேவதாஸ் உடன் வந்து கொழும்பு புறக்கோட்டையில், கண்டி செல்லும் பஸ்ஸில் ஏற்றிவிட்டார்.

(பயணங்கள் தொடரும்)