நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 16

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணிஎன் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் பதினாறு

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 16பெரும்பாலான பகல்நேரங்களை நாங்கள் தூங்கிக்கழித்துவிட்டு இரவு நேரங்களில் வெளியே புறப்பட்டோம். இறுதி ஊர்வலத்திற்குச் செல்வதை போன்ற ஒரு மிகப்பெரிய படகின் பின்னே நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதன் ஒவ்வொரு திசைப்பகுதியிலும் நான்கு நீண்ட துடுப்புகள் இருந்தன. எனவே அதில் குறைந்த பட்சம் முப்பது மனிதர்களாவது இருக்கவேண்டும் என்று கணக்கிட்டோம். படகின் மேற்பரப்பில் ஐந்து கூம்புக்குடில்கள் மிகுந்த இடைவெளியுடன் ஒன்றொக்கொன்று தள்ளிப் போடப்பட்டிருந்தது. அவற்றின் நடுவில் திறந்தவெளியில் குளிர்காயும் தீ மூட்ட வசதியாக ஒரு அமைப்பு இருந்தது. உயர்ந்த கொடிக் கம்பங்கள் ஒவ்வொரு இறுதி முனையிலும் இருந்தன. அந்தப் படகுக்கென்று தனி நேர்த்தி இருந்தது. நீங்கள் மட்டும் இப்படிப்பட்ட ஒரு படகைச் செலுத்தும் நபர்களுள் ஒன்று என்றால் நீங்கள் கண்டிப்பாக தனித்துவம் வாய்ந்தவர்தான்.

இரவு மிகவும் சூடாகவும், மேகமூட்டத்துடனும் இருந்தபோது, ஒரு மிகப்பெரிய வளைவில் கீழ்நோக்கிய திசையில் நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம். பரந்து விரிந்த நதியின் கரைகளில் இருபுறமும் அடர்ந்த காடுகள் அரண் போல் தென்பட்டன. அந்த காடுகளில் எங்கேயும் இடைவெளியோ அல்லது ஏதேனும் ஒளிக் கீற்று உள்ளே நுழைவதையோ காணவே முடியாது. கைரோ நகரைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, உண்மையில் அந்த நகரை அடைந்தால் அதை எங்களால் இனம் காணமுடியுமா என்று நாங்கள் வியந்து கொண்டிருந்தோம். ஒரு டசன் வீடுகளுக்கு மேல் அங்கே இருக்க வாய்ப்பில்லை என்று நான் முன்னமே கேள்விப்பட்டிருந்ததால், ஒருக்கால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது போகலாம் என்று நான் கூறினேன். அதுவும் அந்த வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படாமல் இருந்தால், அந்த நகரைக் கடந்து செல்வது எங்களுக்கு எப்படித் தெரியும்? அந்த நகரின் அருகேதான் இரண்டு பெரிய நதிகளும் சந்திக்கின்றன என்பதால் அதை வைத்து நாம் கண்டுபிடித்துவிடலாம் என்று ஜிம் கூறினான். அவ்வாறு நதிகள் சந்திக்கும்போது ஏற்படும் மணல் குவியலை, நதியின் மத்தியில் இருக்கும் தீவின் பாதம் என்று நினைத்து அதைக் கடந்து செல்வதாக நாங்கள் தவறுதலாக நினைத்து விடக் கூடாது என்று நான் எச்சரிக்கை விடுத்தேன். இந்த விஷயம் எங்கள் இருவரையும் கவலை கொள்ள வைத்தது.

எனவே நாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. கரையில் ஏதேனும் விளக்கு காணப்பட்டால், முதலில் தெரியும் விளக்கை நோக்கி துடுப்பு வலித்து நாங்கள் கரைசேரவேண்டும். பின்னர் அங்குள்ள எல்லோரிடமும் எனது அப்பா வணிகப்படகு ஒட்டிக் கொண்டு எங்களைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவிக்க வேண்டும். அவர் புதிதாகத் தொழில் தொடங்கியுள்ளதால், கைரோ எத்தனை தொலைவில் உள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக அனைவரிடமும் கூறுவோம் என்று யோசனை சொன்னேன். ஜிம்முக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. எனவே திருப்தியாகப் புகைப்பிடித்துக் கொண்டு இருவரும் காத்திருந்தோம்.

ஏதேனும் நகர் வருகிறதா என்று கூர்மையாக அந்தச் சமயத்தில் கவனித்தால் மட்டுமே கைரோ நகரை எங்கள் கண்ணிலிருந்து தொலைக்காமல் இருக்க முடியும். கண்டிப்பாக அந்த நகரை கவனிக்காமல் விடப்போவதே இல்லை என்று ஜிம் உறுதியாகக் கூறினான். அதைப் பார்த்த மறு வினாடியே அவன் சுதந்திர மனிதன் ஆகிவிடுவான் அல்லவா! அப்படிக் கவனிக்காமல் விட்டால், ஒரு வீசம் அளவு கூட சுதந்திரம் இல்லாது அவன் திரும்பவும் அடிமையாக பழைய ஊர்களுக்கே செல்ல வேண்டும் இல்லையா? எனவே கொஞ்ச நேரத்திற்குப் பின் அவன் குதித்துக் . . கேட்டான் “இதுதான் அதுவா?” ஆனால் அது அதுவல்ல. அது ஏதேனும் ஜேக்கின் லாந்தர் போலத் திசை திருப்பும் வேறு ஏதோ ஒளி அல்லது விளக்குப் பூச்சிகளின் கூட்டமாக இருந்தது. எனவே அவன் மீண்டும் அமர்ந்து பழையபடி கூர்ந்து கவனிக்கலானான்.

சுதந்திரத்தின் அருகே நெருங்குவது அவனுக்கு மிகுந்த ஆவலையும், பரபரப்பையும் கொடுப்பதாக ஜிம் கூறினான். நானும் உண்மையைக் கூறுகிறேன். எனக்கும் அதே அளவிலான பரபரப்பும், ஆவலும் அவன் அதைப்பற்றிப் பேசுவதைக் கேட்கும்போது இருந்தது. அவன் சுதந்திரம் அடைந்து விட்டதைப் போலவே நான் உணர ஆரம்பித்தேன். அவனைச் சுதந்திர மனிதனாக மாற்றியதற்கு யாரைக் குற்றம் சாட்டமுடியும்? என்னையா? மனச்சாட்சி குறுகுறுவென நச்சரித்தது. நான் எத்தனையோ முயற்சித்தும் என்னால் அவ்வாறு சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அந்த எண்ணம் கொடுத்த தொந்தரவினால் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அமைதியாக அமர்ந்திருக்கவும் முடியவில்லை. நான் என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறேன் என்பது முன்பு என் அறிவுக்குப் புலப்படாமல் இருந்தது. இப்போது அது எனக்கு நன்கு விளங்கி எனது மனச்சாட்சியைச் சுட்டெரித்தது. அவனுக்கு உரிமை கோரும் முதலாளியிடமிருந்து நான் ஜிம்மைத் திருடவில்லை என்பதால் ஜிம் சுதந்திர மனிதனாக மாறுவதற்கு என்னைக் குற்றம் சாட்டிப் பலனில்லை என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். ஆனால் அது பலனளிக்கவில்லை.

எனது மனச்சாட்சி தொடர்ந்து இடித்துரைத்தது “ஆனால் அவன் தன் சுதந்திரம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான் என்பது உனக்கு முன்னமே தெரியும். அவ்வாறிருக்கையில். அவனைத் தோணியுடன் சேர்த்து துடுப்பு வலித்து நகருக்குத் திரும்பக் கொண்டு சென்று யாரிடமாவது அவனைப் பற்றிக் கூறியிருக்கலாமே.” உண்மைதான் இது. எத்தனை முயற்சித்தாலும், இந்த எண்ணத்தை நான் மறுக்க முடியாது என்பதால் அது என்னைக் கடும் இன்னலுக்கு ஆளாக்கியது. எனது மனச்சாட்சி மேலும் கூறியது “மிஸ். வாட்ஸனின் நீக்ரோ உன் கண் முன்னே ஓடிப்போவதை நீ பார்த்துக் கொண்டு அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட அவளிடம் கூறாமல் இருக்க அவள் உனக்கு என்ன துரோகம் செய்தாள்? அந்த பாவப்பட்ட மூதாட்டி உனக்கு என்ன செய்தாள் என்று நீ இத்தனை மோசமாக அவளை நடத்துகிறாய்? ஏன், அவள் உனக்கு எப்படிப் படிப்பது என்று கற்றுக் கொடுத்தாளே. எப்படி நடந்து கொள்வது என்றும் பாடம் சொல்லிக்கொடுத்தாளே. அவள் தனக்குத் தெரிந்த அத்தனை வழிகளிலும் உனக்கு நல்லது செய்ய நினைத்தாளே. அதற்காகவா? இவைதான் அவள் உனக்குச் செய்தது.”

நான் செத்துப் போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணும் அளவுக்கு நான் மிகவும் சோகமாகவும், இழிவாகவும் உணர்ந்தேன். குறைவாக என்னை நானே மதிப்பிட்டு அமைதியற்று மேலும் கீழுமாகப் படகில் நடந்தேன். ஜிம்மும் என்னைப் போன்றே அமைதியிழந்தவனாக என்னுடன் சேர்ந்து மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான். எங்கள் இருவராலும் செயலற்று இருக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவன் குதித்தவாறே கத்தினான், “அதோ அங்கே கைரோ” என்று. எனது உடலில் துப்பாக்கிக் குண்டு துளைத்த வேதனையை அது ஏற்படுத்தியது. அது கைரோ நகராக இருக்கும் பட்சத்தில் நான் துயரத்தில் இறந்து விடுவேன் என்றுகூட நான் நினைத்தேன்.

தொடர்ந்து ஜிம் சத்தமாக பேசிக் கொண்டிருந்த போது, எனக்கு நானே உரையாடிக் கொண்டிருந்தேன். சுதந்திர மாகாணத்திற்கு சென்று சேர்ந்தவுடன் அவன் செய்யப் போகும் முதல் காரியம் ஒரு சென்ட் கூட வீணடிக்காமல் பணத்தைச் சேமிப்பது என்று சொல்லிக் கொண்டிருந்தான். அப்படிப் பணம் சேமித்து மிஸ். வாட்ஸனின் இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள பண்ணையில் அடிமையாக இருக்கும் அவனின் மனைவியை முதலில் விலைக்கு வாங்கவேண்டும் என்றும் கூறினான். பின் இருவரும் சேர்ந்து கடுமையாக உழைத்து பணம் சேர்த்து அடிமைகளாக இருக்கும் அவர்களின் குழந்தைகளை வாங்கவேண்டும் என்றான். குழந்தைகளின் முதலாளி அவர்களை விலைக்குக் கொடுக்க மறுத்தால், அடிமைத்தன ஒழிப்புவாதி யாரையேனும் கூட்டிவந்து அவர்களைத் திருடி விடவேண்டும் என்று கற்பனை செய்தான்.

அவ்வாறான பேச்சு என்னை மேலும் திகிலடையச் செய்தது. அப்படிப்பட்ட விஷயங்களை ஜிம் இதற்கு முன் இத்தனை தைரியத்துடன் பேசியதில்லை. தான் சுதந்திரம் பெற்றுவிடுவோம் என்ற அவனது எண்ணம் அவனிடம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது என்று நீங்கள் நன்கு காணலாம். “ஒரு நீக்ரோவுக்கு ஒரு இன்ச் கொடுங்கள். அவன் ஒரு அடியை எடுத்துக் கொள்வான்” என்ற பழமொழி கூறுவது சரியாகத்தான் இருக்கிறது. நன்கு சிந்திக்கவில்லையெனில் இப்படித்தான் நடக்கும் என்று நான் நினைத்துக் கொண்டேன். இதோ, இங்கே ஒரு நீக்ரோ. அவன் தப்புவதற்கு நான் உதவி செய்தேன். இப்போது என் முகத்திற்கெதிராகவே அவன் குழந்தைகளைத் திருடிக்கொள்வேன் என்று சொல்கிறான். அவன் குழந்தைகளின் முதலாளி யாரோ எனக்குத்தெரியாது. ஆனால் அவன் எனக்கு எந்த வகையிலும் கெடுதல் செய்ததில்லை.

ஜிம்மின் அந்தப் பேச்சுக்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அவன் மேல் எனக்கு உள்ள அபிமானத்தை அது குறைத்தது. என் மனச்சாட்சி என்னைப் படுத்திய பாட்டில் தாங்கமுடியாத நான் இறுதியில் அவனிடம் “போதும் நிறுத்து. நிறையக் கூறிவிட்டாய். என்னைக் காயப்படுத்துவதை நிறுத்திக் கொள். இப்பவும் நேரம் ஆகிவிடவில்லை. கரையில் முதல் விளக்கைப் பார்த்துத் துடுப்பு வலித்து அங்குள்ளோரிடம் முதலில் சொல்லவேண்டும்” என்று கூறினேன். கொஞ்சம் நிம்மதியாக இருப்பது போல் தோன்றியது. எனது கஷ்டங்கள் தீர்ந்து ஒரு பறவையின் இறகு போல் மெல்லியதாய் இதயம் மாறியதுபோல் உணர்ந்தேன். விளக்கு ஒன்று எரிவது போன்ற அடையாளம் கரையில் தென்படுமா என்று பார்த்துக் கொண்டே, எனக்கு நானே ஒரு பாட்டு பாடிக்கொண்டேன். வெகு விரைவில் விளக்கு ஒன்றையும் நான் கண்டு பிடித்தேன். ஜிம்மும் பாட ஆரம்பித்தான்.

“நாம் பாதுகாப்பாகி விட்டோம், ஹக்! நாம் பாதுகாப்பாகி விட்டோம். இப்போது குதித்து நடனமாடலாம். அதோ கடைசியாக அங்கே தெரிவதுதான் நல்லதொரு பழம்நகரம் கைரோ. எனக்குத் தெரியும்.”

நான் கூறினேன் “இந்த சிறு படகு எடுத்துக் கொண்டு நான் சென்று பார்க்கிறேன், ஜிம்! அது கைரோவாக இல்லாமலும் இருக்கலாம், தெரியுமா!”

அவன் குதித்து எங்களின் சிறு படகை எனக்காகத் தயாராக வைத்தான். அவனின் பழைய மேல்ச்சட்டையை அந்தப் படகின் உள்பக்கம் போட்டு அதன் மேல் வசதியாக நான் அமரத்தயார் செய்தான். துடுப்பை என்னிடம் கொடுத்தான். நான் துழாவிக்கொண்டு செல்லும்போது கூறினான் “கூடிய விரைவில், நான் மட்டற்ற மகிழ்ச்சியில் கூச்சலிடப் போகிறேன். இவை அனைத்தும் என்னுடைய ஹக்கினால்தான் என்று கூறப் போகிறேன். நான் ஒரு சுதந்திர மனிதன். ஹக் மட்டும் இல்லாவிட்டால் நான் எப்படி சுதந்திரம் அடைந்திருக்க முடியும்- எல்லாம் ஹக் தான். ஜிம் தன் வாழ்வில் என்றுமே இதை மறக்க மாட்டான் ஹக்! என் வாழ்வில் எனக்குக் கிடைத்த நண்பர்களில் உத்தமமான நண்பன் நீ மட்டும்தான். இப்போது நீ ஒருவன் மட்டும்தான் ஜிம்முக்கு உள்ள ஒரே நண்பன்.”

நான் துடுப்புகளைத் துழாவிக் கொண்டே அவனிடம் என் எண்ணத்தைச் சொல்லத் துடித்தேன். ஆனால் அவன் இவ்வாறு கூறிய பிறகு, என் மனதில் ஏதோ ஒன்று பட்டென்று உடைந்தது போல் ஆயிற்று. அதன் பின் நான் மெதுவாகச் சென்றேன். கரைக்குச் செல்வதற்கு என் மனதில் விருப்பம் இருக்கிறதா அல்லது இல்லையா என்று என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. தோணியை விட்டு விலகி ஒரு ஐம்பது அடித் தூரம் சென்றவுடன் ஜிம் கூறினான் “அதோ செல்வது என்னுடைய நேர்மையான ஹக். வயதான ஜிம்முக்குச் செய்து கொடுத்த தனது சத்தியத்தை என்றென்றும் காப்பாற்றிய ஒரே வெள்ளை நிற கனவான் ஹக்.”

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 16

நல்லது. நான் மிகவும் சோர்வுற்றேன். ஆனால் நான் அவனைக் காட்டிக்கொடுத்தேயாகவேண்டும். அதிலிருந்து மாறுவதாக இல்லை. அந்தக் கணத்தில், ஒரு படகில் இரண்டு மனிதர்கள் கையில் துப்பாக்கியுடன் வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவன் கேட்டான் “அங்கே என்ன இருக்கிறது?”

“ஒரு சிறிய தோணி” நான் பதிலிறுத்தேன்.

“அது உனக்குச் சொந்தமானதா?”

“ஆம் ஐயா!”

“வேறு யாரேனும் மனிதர்கள் அதிலிருக்கிறார்களா?”

“ஒருவர் இருக்கிறார் ஐயா!”

“நல்லது. இன்றிரவு நதியின் மேல்நோக்கிய திசையில் அந்த பெரிய வளைவுக்கும் கொஞ்சம் மேலாக ஐந்து நீக்ரோக்கள் தப்பித்து ஓடி விட்டனர். உன் படகில் இருப்பவன் கறுப்பனா, வெள்ளையனா?”

“நான் உடனடியாக பதில் கூறவில்லை. நான் முயற்சித்தேன். ஆனால் வார்த்தைகள் வெளி வரவில்லை. இரண்டு அல்லது மூன்று வினாடிகளுக்கு முயற்சி செய்து துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவர்களிடம் உண்மையைக் கூற முன்வந்தேன். ஆனால் அங்கே ஒரு முயலுக்கான துணிச்சலைக் கூட என்னால் பெற முடியவில்லை. எனது பலமெல்லாம் இழந்தது போன்று நான் உணர்ந்தேன். எனவே எனது முடிவைக் கைவிட்டுவிட்டு. நான் கூறினேன். “அவன் ஒரு வெள்ளையன்.”

“நாமே அங்கு சென்று பார்ப்பதுதான் நல்லது என்று நினைக்கிறன்.”

“நன்றாகப் பாருங்கள். அதைத்தான் நானும் நினைக்கிறன்.” நான் மேலும் கூறினேன் ” ஏனெனில் அது என் அப்பா. நீங்கள் அங்கே சென்றால் அந்தத் தோணியை இழுத்துக் கொண்டு வந்து அதோ கரையில் தெரியும் அந்த விளக்கினருகே கொண்டு சேர்க்க உதவியாயிருக்கும். என் அப்பா உடல்நலம் குறைவால் அவதிப்படுகிறார். என் அம்மாவும் அப்படியே. அப்புறம் மேரி ஆன்.”

“சனியன்! நாங்களே அவசரத்தில் இருக்கிறோம். சிறுவனே! இருந்தாலும், நாம் அங்கு சென்று பார்த்தால்தான் என்ன? வா. துடுப்பைத் துழாவு. நாம் அந்தத் தோணி நோக்கி நகரலாம்.”

நான் துடுப்பை வலிக்கலானேன். அவர்களும் தங்களின் படகைச் செலுத்தினார்கள். நீரில் ஒரு சில அடிகள் நகர்ந்த பிறகு நான் கூறினேன் “அப்பா உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளார். யாருமே எங்களுக்கு உதவ வராத போது நீங்கள் வந்தீர்கள். நன்றி. நானே அதைச் செய்து கொள்வேன்.”

“நல்லது.. இது ரொம்பக் கேவலமாக இருக்கிறது. விசித்திரமாகவும் தான். சொல்லு பையா! உன் அப்பாவுக்கு என்ன பிரச்னை?”

“அது வந்து …. அது ஆஹ்…. அது ….. வந்து … நல்லது. அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.”

அவர்கள் படகு ஓட்டுவதை நிறுத்தினார்கள். அப்போது எங்கள் தோணிக்கு மிக அருகாமையில் அவர்கள் இருந்தார்கள். ஒருவன் கூறினான்

:”சிறுவனே! அது ஒரு பொய். உன்னுடைய அப்பாவுக்கு என்ன பிரச்னை?சரியான செயலைச் செய்ய நேர்மையான பதிலைக் கூறு.”

“கண்டிப்பாக நேர்மையாக நான் இருப்பேன் சார். ஆனால் தயவு செய்து விட்டு விட்டுப் போய்விடாதீர்கள். அது என்னவென்றால், அது ……. பெருமகன்களே! தோணியை விட்டு சிறிது தொலைவிலேயே தள்ளி இருந்து நான் உங்களுக்கு கொடுக்கும் கயிறை வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் தோணி அருகே வருவதை தவிர்த்து விடுங்கள். தயை செய்து அதைச் செய்யுங்கள்.”

“பின்னால் வா, ஜான், படகுடன் பின்னுக்கு வா!” அவர்களில் ஒருவன் சொன்னான். அவர்கள் பின்பக்கமாக செல்ல ஆரம்பித்தார்கள். “விலகி நில்லு. விலகி கரைக்குச் செல். கஷ்டகாலம். காற்று அங்கிருந்து இங்கே அடிக்கிறது வேற. உன் அப்பாவுக்கு

வைசூரி எனப்படும் பெரியம்மை போட்டு உள்ளது இல்லையா? அது உனக்குத் தெரியும். அதை ஏன் எங்களிடம் சொல்லவில்லை? அதை எல்லோருக்கும் பரப்பிவிட முடிவு செய்து விட்டாயா?”

“நல்லது” அழுவது போல் நடித்துக் கொண்டே நான் கூறினேன் “யாரிடம் கூறினாலும் உதவ மறுத்து எங்களை விட்டு ஓடிவிடுகிறாரக்ள்.”

“நல்லது. நீ சொல்வதிலும் ஒரு விஷயம் உள்ளது. உனக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ஆனால் நாங்கள் ……….. கஷ்டகாலம். எங்களுக்கு வைசூரி வாங்கிக் கொள்ள இஷ்டம் இல்லை. இங்கே பார். நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று நான் கூறுகிறேன். கேள். இந்தத் தோணியை நீயே கரையில் கொண்டு நிறுத்த நினைக்காதே. அப்படிச் செய்தால் நீ அதை தூள் தூளாக்கி விடுவாய். இப்படி நதியினூடே மிதந்து கொண்டு ஒரு இருபது மைல் தொலைவு செல். அங்கே ஒரு நகரம் வரும். அங்கே உதவி கேள். அவர்களிடம் குளிர் சுரம் என்று கூறி உதவி கேள். மறுபடியும் முட்டாள்தனமாக நடந்து அங்கிருக்கும் மக்களை உன் குடும்பத்தைப் பற்றி சந்தேகப்படும்படி செய்யாதே.”

“ இப்போது, உனக்கு உதவி செய்ய இதை நாங்கள் கூறுகிறோம். எனவே நல்ல பையனாக இருந்து எங்களது அறிவுரைகளின் படி நடந்து கொள். உங்கள் குடும்பத்திற்கும் எங்களுக்கும் இருபது மைல் தொலைவு வைத்துக் கொள். இங்கே விளக்கு தெரியும் இடத்தில் கரை சேர்வது எந்தப் பலனையும் கொடுக்காது. அது வெறும் மரம்அறுக்கும் கடைதான். உனது அப்பா ஏழையாகத்தான் இருப்பார். அதனால்தான் உனது குடும்பம் மிகவும் கஷ்ட ஜீவனத்தில் உள்ளது. இதோ இங்கே இந்தப் பலகை மேல் இருபது டாலர் பெறும் தங்க நாணயம் வைக்கிறேன். அது உன்னிடம் மிதந்து வரும்போது அதை எடுத்துக் கொள். உன்னை இப்படி விட்டுச் செல்ல வருத்தமாய்த்தான் இருக்கிறது. ஆனால் கடவுளே! வைசூரியிடம் போட்டிபோட எனக்குத் தைரியம் இல்லை, தெரிந்து கொள்.

“ஒரு நிமிடம், பார்க்கர்! இரண்டாம் மனிதன் பேசினான் “இதோ இன்னொரு இருபது டாலர் தங்கக் காசு என்னுடைய பங்கு அந்தப்பலகையில் வைத்து விடு. செல்கிறோம், குழந்தாய்! மிஸ்டர் பார்க்கர் சொல்லியது போல நீ செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும்.”

“உண்மைதான் மகனே! சென்று வருகிறோம். ஓடிச்சென்ற நீக்ரோ எவரேனும் உன் வழியில் வந்தார்கள் என்றால் அவர்களைப் பிடித்துக் கொடுத்து நீ கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம் “

“சென்று வாருங்கள் சார்” நான் சொன்னேன் “நான் அவ்வாறான ஓடிப்போன நீக்ரோவைக் கண்டால் கண்டிப்பாக விடமாட்டேன்.”

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 16

அவர்கள் சென்று விட்டார்கள். நான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை உணர்ந்த நான் மிகுந்த வெறுப்புடன் திரும்பவும் படகைச் செலுத்தினேன். நல்ல விஷயம் செய்து இனி எனக்கு ஒரு பலனும் இல்லை என்று எனக்குப் புரிந்தது. சிறு குழந்தையாக இருக்கும்போதே நல் வழியில் செல்லாத ஒருவனின் பாதையை பிற்காலத்தில் மாற்றிக் கொள்வது கடினம்தான். மோசமான காலங்களில், அவனைத் திருத்தி நல்வழிப் படுத்த சரியான ஆள் இல்லையென்றால், அவன் எல்லாவற்றையும் இழந்து விடுவான்.

இப்படி நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்த நான் பிறகு ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து என்னை நானே கேட்டுக் கொண்டேன். இந்த சமயம், ஒரு நிமிஷம், இப்படி நினைத்துப் பார். சரியான விஷயம் செய்கிறேன் என்று ஜிம்மைக் காட்டிக் கொடுத்திருந்தால்? இப்போது வருத்தப்படுவது போல் அல்லாமல் சந்தோசமாக இருந்திருப்பாயா? இல்லை. நான் கூறிக் கொண்டேன். மிகவும் மோசமாக உணர்வேன். இப்போது எத்தனை வருத்தப் படுகிறேனோ அதே அளவு கண்டிப்பாக வேதனைப்படுவேன். அப்படியானால் – எனக்கு நானே கூறிக்கொண்டேன் – எதற்காகச் சரியான விஷயம் செய்வதைப் பழக வேண்டும்?

நல்ல விஷயம் செய்வதில் அதிக இடர்ப்பாடுகள் இருக்கின்றன. தவறு செய்வதில் எந்தப்பாதிப்பும் இல்லை. இரண்டுக்கும் முடிவு என்னவோ ஒரே மாதிரிதான். நான் மலைத்துப் போய் விட்டேன். எனது கேள்விக்கு என்னாலேயே விடை அளிக்க முடியவில்லை. எனவே இது பற்றி இனிமேல் வருத்தப்பட்டுப் பலன் இல்லை என்று முடிவு கட்டினேன். அந்த சூழ்நிலைக்கு என்ன பொருத்தமோ அதைச் செய்வதே சிறந்தது என்று தெரிந்தது.

நான் அந்த கூம்புக் குடிலுக்குச் சென்றேன். ஜிம் அங்கே இல்லை. சுற்றிலும் தேடித் பார்த்தேன். ஆனால் எங்கேயும் அவன் தென்படவில்லை. நான் கூப்பிட்டேன் “ஜிம்”

“இங்கே இருக்கிறேன், ஹக்! கண்ணை விட்டு அவர்கள் மறைந்து விட்டார்களா? சத்தமாகப் பேசாதே.”

தோணியின் பின்பகுதியில் நதிக்குள், துடுப்புக்குக் கீழ் மூக்கை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு அவன் இருந்தான். அவர்கள் வெகு தொலைவு சென்று விட்டதாக அவனிடம் கூறினேன். எனவே அவன் படகின் மீது ஏறி வந்தான். பின் கூறினான்

“நீங்கள் மூவரும் பேசுவதை நான் கேட்டுக் கொண்டேதான் இருந்தேன். எனவேதான் நான் நதிக்குள் சென்று மறைந்துவிட்டேன். அவர்கள் மட்டும் தோணிக்குள் வந்திருந்தால் நான் அப்படியே நீச்சல் அடித்துக் கரை சேர்ந்திருப்பேன். பின்னர் அவர்கள் சென்றபிறகு மீண்டும் தோணிக்கு வந்து சேர்ந்திருப்பேன். ஆனால், தம்பி! நீ அவர்களை சரியாக ஏமாற்றி விட்டாய். ஹக்! மிகவும் சாதுர்யமான முடிவு எடுத்தாய், குழந்தாய்! உன்னுடைய சமயோசித புத்தி இந்த வயதான ஜிம்மைக் காப்பாற்றி விட்டது. இந்த கிழட்டு ஜிம் ஒருபோதும் உன்னை மறக்கமாட்டான், குழந்தாய்!”

பிறகு நாங்கள் எங்களுக்குக் கிடைத்த பணத்தைப் பற்றிப் பேசினோம். இருபது டாலர்கள் ஒவ்வொருவருக்கும்.என்பது. – மிகப்பெரிய ஆதாயம். அந்தக் காசை வைத்து பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்கக் கூடிய நீராவிப்படகின் மேற்தட்டுப் பயணம் கூட இப்போது செய்ய முடியும் என்று ஜிம் கூறினான். அந்தப் பணம் சுதந்திர மாகாணங்கள் அடையும் வரை செலவுக்குச் சரியாக இருக்கும் என்றும் கூறினான். தோணியில் செல்ல இன்னும் இருபது மைல் என்பது நீண்ட தொலைவு இல்லாவிடினும், அவன் அந்த நிமிடமே அங்கு இருக்க வேண்டும் என்று விரும்பினான்.

மதிய வேளை நாங்கள் கரையில் சேர்ந்து தோணியைக் கட்டினோம். தோணி நன்கு மறைவில் இருக்கவேண்டும் என்பதில் ஜிம் குறியாக இருந்தான். பிறகு முழு நாளும் தோணியில் உள்ள பொருட்களை மூட்டை கட்டி அடுக்கிவைத்து, தோணியை நாங்கள் எப்போது வேண்டுமானாலும் துறந்துவிட ஆயத்தம் செய்தான்.

அன்று இரவு பத்து மணிக்கு நதியின் வளைவு ஒன்று உள்ள இடது கரை ஓரமாக நிறைய விளக்குகள் எரியும் ஒரு நகரம் கண்களில் தென்பட்டது. நான் சிறுபடகில் புறப்பட்டு அந்த விளக்குகளைப் பற்றி அறியச் சென்றேன். போகும் வழியிலேயே ஒரு மனிதர் நதியின் மேல் சிறு ஓடத்தில் அமர்ந்து, அதிக மீன்பிடிகொக்கிகள் கொண்ட நீண்ட வலையை நீரில் சரியாகப் பொருத்திக் கொண்டிருந்தார். நான் அருகில் சென்று கேட்டேன் “மிஸ்டர். அங்கே தெரியும் நகரம் கைரோ தானே?”

“கைரோ? உங்களுக்கு என்ன பைத்தியமா ?”

“பிறகு அது என்ன நகரம் மிஸ்டர் ?”

“உங்களுக்குத் தெரிய வேண்டுமானால் நீங்களே சென்று தெரிந்து கொள்ளுங்கள். இன்னும் அரை வினாடி இங்கே இருந்து என்னை நச்சரித்தால். உங்களுக்குப் பிடிக்காத ஒன்று நடக்கும்.”

தோணிக்கே திரும்ப துடுப்பை வலித்துப் போய்ச் சேர்ந்தேன். ஜிம் மிகவும் மோசமாக ஏமாற்றமடைந்தான். ஆனால் அவனைக் கவலைப்படவேண்டாம் என்று கூறினேன். கைரோ அடுத்த நகரமாக இருக்கலாம் என்று நம்பிக்கை கூறினேன்.

இன்னொரு நகரத்தை அன்று பொழுது மங்குவதற்குள் கடந்தோம். அங்கேயும் நான் கரைக்குச் சென்று பார்க்க விரும்பினேன். ஆனால் அங்கே கரை மிகவும் செங்குத்தாக இருந்தது. கைரோவின் கரைகள் செங்குத்தாக இருக்காது என்று ஜிம் கூறியதை நான் மறந்து விட்டேன். அன்றைய நாளை நதியின் இடதுபுறமான கரைக்கு மிகவும் அருகிலிருந்த மணல்திட்டில் நாங்கள் மறைந்திருந்து கழித்தோம், ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு சந்தேகம் எனக்குள் எழ ஆரம்பித்தது. அதே போன்று தான் ஜிம்முக்கும் தோன்றியிருக்கிறது. நான் சொன்னேன்

“ஒருவேளை அந்த பனிமூட்ட நாளில் நாம் கைரோவைக் கடந்து வந்துவிட்டோமோ?”

:அதைப்பற்றிப் பேசவேண்டாம் ஹக்! பாவப்பட்ட நீக்ரோவுக்கு ஒரு சிறு இடைவெளி வேண்டும். நான் சந்தேகப் பட்டது போலவே அந்த நச்சு விரியனின் தோல் எனக்கு கொடுக்கும் துன்பங்கள் இன்னும் தீர்ந்த பாடில்லை.”

“நான் அதைப் பார்த்திருக்கக் கூடாது என்று நினைக்கிறன், ஜிம். என் கண்கள் அதன் மீது பட்டிருக்கவே கூடாது என்று இப்போது நான் நினைக்கிறன்.”

“அது உன்னுடைய தவறில்லை ஹக்! உனக்குத் தெரியாது. உன்னை குற்றம் சாட்டிக் கொள்ளாதே.”

பகல் வெளிச்சத்தில் கரையின் அருகே சிலுசிலுத்து ஓடும் தெளிந்த ஒஹையோ நதியைப் பார்த்தோம். அதே சமயம் நதியின் மத்தியில் சேற்றுடன் கலங்கி வந்த மிஸிஸிப்பி நதியின் நீரையும் கண்டோம். கைரோவை மறப்பது தவிர வேறு வழியில்லை இப்போது.

அடுத்து இனி என்ன செய்வது என்று நாங்கள் யோசித்தோம். உண்மையில் கரைக்கும் செல்ல முடியாது, மேற்கொண்டு நதியின் மேல்நோக்கிய பாதையில் தொடரவும் முடியாது தவித்தோம். நாங்கள் செய்ய முடிந்த ஒரே விஷயம் இருட்டும்வரை காத்திருந்து பிறகு மேல்நோக்கிய நதிநீரில் படகு கொண்டு எங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சித்துப்பார்ப்பது ஒன்றுதான். பஞ்சுப்பொதி மரங்களின் அடர்த்தியில் மறைந்து முழுநாளும் தூங்கினோம். நீண்ட இரவு துடுப்பு வலித்து நதியில் முன்னேறிச் செல்லத் தேவையான சக்தியை நாங்கள் பகலில் நன்கு தூங்கி சேகரித்துக் கொண்டோம் . ஆனால் இரவின் இருட்டில் நாங்கள் தோணி அருகே சென்ற போது படகு காணாமல் போயிருந்தது.

நெடு நேரம் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. சொல்வதற்கு அங்கே ஒன்றும் இல்லை. அந்த நச்சு விரியனின் தோல் எங்களை இந்தப் பாடு படுத்துகிறது என்பதை நாங்கள் இருவரும் நன்கு உணர்ந்திருக்கும் போது, அதைப் பற்றி பேச என்ன இருக்கிறது? அந்த சமயத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாற்றிக் கொள்வது மட்டும்தான் முடியும் . ஆனால் அது இதைவிட அதிகமான கெட்ட விஷயங்களை கொண்டு வந்து சேர்க்கும், வாயை மூடிக்கொள்ள படித்துக் கொள்ளாவிடில் துரதிஷ்டம் இன்னும் வந்து சேர்ந்து கொண்டுதானிருக்கும்.

சிறிது நேரம் கழித்து, இனி என்ன செய்வது என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம். வேறு நல்ல வழி ஏதும் இல்லாததால், சந்தர்ப்பம் கிடைக்கும் போது மேல்திசைக்குச் பயணம் செய்ய துடுப்பு வலிக்க ஒரு நல்ல படகை விலைக்கு வாங்கும்வரை தோணியின் மேல் மிதந்து கொண்டே செல்வது என்று முடிவு செய்தோம். கண்டிப்பாக யாருக்கு காணாத வேளையில், படகைக் “கடன் வாங்குவதான (திருடுவதான)” எண்ணம் எங்களுக்கு இல்லை. அப்படிச்செய்தால் மக்கள் எங்களைத் துரத்தி வர ஆரம்பித்து விடுவார்கள். எனவே இரவு ஆரம்பித்ததும், தோணியின் மீதேறிப் புறப்பட்டோம். நச்சு விரியனின் தோலைக் கையாளுவது எத்தனை மடத்தனம் என்று உணராதவர்கள், அந்தப் பாம்புத்தோல் எங்களுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்த துரதிஷ்டங்களை படித்துத் தெரிந்து கொண்ட பிறகாவது உறுதியாக நம்புவார்கள் அல்லவா!

எங்கேனும் அதிகமாக தோணிகள் நிறுத்தப்பட்டிருந்தால், படகுகள் வாங்க அது சிறந்த இடம் என்று கண்டுகொள்ளலாம். ஆனால் கரையின் மீது தோணிகள் நிறுத்தப் பட்டிருப்பதை நாங்கள் காணவே முடியவில்லை. எனவே மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அபப்டியே மிதந்தவாறே பயணம் செய்தோம். நல்லது. இரவு சாம்பல் நிறத்துடன் தொடங்கி அடர்த்தியான கருப்பு நிறத்திற்கு மாற ஆரம்பித்தது. பனி மூட்டத்தை விடக் கொடுமையான விஷயம் அது. நதியின் வடிவத்தைச் சரியாகக் கணிக்க உங்களால் முடியாது. மேலும் முன் உள்ள பாதையில் தூரத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கவும் இயலாது. நள்ளிரவு நேரம் ஆனதால் அனைத்து விஷயங்களும் செயலற்று இருந்தன.

திடீரென அங்கே ஒரு நீராவிப்படகு நதியின் மேல் வந்து கொண்டிருப்பதைக் கண்டோம். அந்தப் படகில் இருப்பவர்கள் எங்களைக் காணுவதற்காக லாந்தர் விளக்குகளை ஏற்றினோம். நதியின் மேல்த்திசை நோக்கி இரைச்சலிட்டுக் கொண்டு செல்லும் படகுகள் பொதுவாக இலகுவான நீரோட்டம் உள்ள மணல்திட்டுகளை ஒட்டிய வழிகளில் செல்லவே முயற்சிக்கும் என்பதால் எங்களுக்கு மிக அருகே வர வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இது போன்றதொரு இரவுகளில், அவைகள் என்ஜின் சத்தத்துடன் நதியின் மத்தியப் பகுதிக்கு நீரின் விசைக்கு எதிராக பயணம் செய்து வந்து கொண்டிருக்கும்.

நதி நீரில் படபடவென்ற இரைச்சலுடன் நீராவிப்படகு வருவதை நாங்கள் கேட்க முடிந்தாலும், எங்களுக்கு மிக அருகே அது வரும்வரை அதை நாங்கள் சரியாகக் காண முடியவில்லை. அது எங்களை நோக்கியே வந்து கொண்டிருந்தது. எங்களைத் தொட்டுவிடாமல் அருகில் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பொதுவாக சில சமயங்களில் அந்தப் படகின் துடுப்புச் சக்கரம் எங்களின் துடுப்புகளைப் பதம் பார்த்துவிடக் கூடும். அவ்வாறான சமயங்களில், நீராவிப்படகின் மாலுமி தன் தொப்பியைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஏதோ தனது அறிவுக்கூர்மையால் பெரிய சாதனை நிகழ்த்திவிட்டது போலச் சிரிப்பார்.

நல்லது. அது எங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் அது எங்களின் வலது புறமாக முயற்சி செய்து உரசிச் சென்றுவிடும் நாங்கள் நினைத்தோம். ஆனால் அது அப்படித் திரும்புவதாகவே தெரியவில்லை. அது ஒரு மிகப் பெரிய நீராவிப்படகு. மிகவும் அவசரத்தில் செல்வது போலவும் காணப்பட்டது. பளபளக்கும் நீரோட்டத்தின் நடுவே கருத்த மேகம் ஒன்று செல்வது போலத் தோற்றம் அளித்தது. பெரிதாக, அச்சமூட்டும் விதமாக உப்பி, நீண்ட வரிசையில் உள்ள உலைக்கலன்களின் கதவுகள் முழுதாகத் திறந்திருந்து சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து காணப்பட்டன. அதனின் பிரம்மாண்டமான அம்புகளும், காவலாளிகளும் எங்கள் கண் முன்னே தெரிந்தார்கள். ஆர்ப்பரிப்பும், என்ஜினை நிறுத்துவதற்காக ஒலித்த மணிகளின் ஓசைகளும், பல்வேறு விதமான கோஷங்களும், நீராவியின் உஸ்ஸென்ற ஓசையும் முழுதுமாய் அதில் நிறைந்து காணப்பட்டது. அதனின் ஒரு புறம் ஜிம் தொற்றிக் கொள்ள, நான் இன்னொரு புறம் பற்றிக் கொணட வேளையில், அந்த நீராவிப் படகு நடுப்பக்கமாக எங்களின் தோணியின் மீதேறி துவம்சம் செய்தது.

நீருக்குள் மூழ்கிய நான் நேராக கீழ் பகுதிக்குச் சென்றேன். முப்பதடித் துடுப்புச்சக்கரம் என் மீது ஏறிவிடும் என்பதால் அதிகம் இடம் உள்ள பகுதியை நாடி நகர்ந்தேன். பொதுவாக நீருக்குள் மூழ்கிய நிலையில் என்னால் ஒரு நிமிடம் தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் இந்த முறை, ஒன்றரை நிமிடம் உள்ளேயே இருந்திருப்பேன் என்று அடித்துக் கூறுகிறேன். பின்னர் அதற்கு மேலும் தாங்க முடியாது வெடித்து விடுவேன் போலத் தோன்றியதால், நீரின் மேலே பின்புறமாக எழும்பினேன். எனது அக்குள்கள் வரை ததும்பிய நீரை வழித்தெடுத்துக் கொண்டு, மூக்கினுள் இருந்த நீரை வெளியே உறிஞ்சினேன். சிறிதாக மூச்சை ஊதி வெளியிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். உண்மையில் நீரின் விசை மிகவும் வலுவாக இருந்தது. அத்துடன் பத்து அல்லது அதற்கும் குறைவான வினாடிகளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்ஜின் மீண்டும் இயங்கத் தொடங்கியது அவ்வாறான பெரிய படகுகளைச் செலுத்தும் படகோட்டிக் குழு எங்களைப் போன்ற சிறு தோணிக்காரர்களைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்வதில்லை. இவ்வாறாக, அந்தப் படகு நீரின் விசையோடே சுழன்று, இரவின் கும்மிருட்டைக் கிழித்துக் கொண்டு கண்களால் காண முடியாத தூரத்திற்குச் சென்று கொண்டிருந்தாலும், அதன் சப்தத்தை என்னால் நன்கு கேட்க முடிந்தது.

நான் ஜிம்முக்காக பலமுறை அழைத்தும் எந்த பதிலும் இல்லாது போயிற்று. எனவே அங்கு மிதந்த ஒரு மரப்பலகையை பற்றிக் கொண்டு நீரில் அளைந்துகொண்டு அந்தப் பலகையை எனக்கு முன்புறமாகத் தள்ளிக் கொண்டே கரையை நோக்கிச் சென்றேன். நீரின் விசை இடது கரையை நோக்கிச் செல்வதைக் கண்ட நான், இரண்டு விசைகள் ஒன்றாகச் சேரும் இடத்தில் நான் தற்போது இருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன். எனவே, எனது போக்கை மாற்றிக் கொண்டு நீர் விசையோடே செல்ல ஆரம்பித்தேன்.

நதியைக் கடப்பதற்காக இருக்கும் சாய்வான இரண்டுமைல் நீளமுள்ள ஒரு இடத்தில் நான் இருந்தேன். எனவே கரையை அடைய நீண்ட நேரம் எடுத்தது. எப்படியோ கரையைப் பத்திரமாக அடைந்து மேலே ஏறினேன். என் முன்னே சிறு சிறு வழிகளே காணப்பட்டன. ஆனால் அதனுள்ளே எப்படியோ நுழைந்து கரடுமுரடான தரையைப் பின்பற்றி ஒரு காத தூரம் அல்லது அதற்கும் மேலான சில அடிகள் நடந்து சென்றேன். பின்னர் நான் முழுதாகத் தெரிந்து கொள்ளும் முன்னரே, பழையகால முறைப்படி மரக்கட்டைகளால் இரண்டு மாடியுடன் கட்டப்பட்டுள்ள ஒரு பெரிய வீட்டை வந்தடைந்தேன். யாரும் என்னைப் பார்த்துவிடும் முன்பே அதைக் கடந்து ஓட நினைத்தேன். ஆனால் ஒரு நாய்க் கூட்டம் குதித்து வெளியே வந்து என்னைப் பார்த்து ஊளையிட்டவாறே கத்த ஆரம்பித்தன. இனி ஒரு அடித் தூரம் நான் நகர்ந்தாலும் எனக்கு அதோ கதிதான் என்று நன்கு தெரிந்து விட்டது.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி
– முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். –

akilmohanrs@yahoo.co.in