கலாநிதி கைலாசபதியின் நூல்களை வாசித்திருக்கின்றேன். ஆனால் அவரை ஒருமுறைதான் என் வாழ்நாளில் நேரில் சந்தித்திருக்கின்றேன். ‘மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க’த்தின் வருடாந்த வெளியீடான ‘நுட்பம்’ இதழுக்காக ஆக்கம் வேண்டி, யாழ் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை சந்தித்திருக்கின்றேன். இதழுக்குக் கட்டுரை தர ஒப்புக்கொண்ட அவர் குறிப்பிட்ட திகதியில் கட்டுரையைத் தரவும் செய்தார். அது மட்டுமின்றி ‘நுட்பம்’ மலர் கிடைத்ததும் அது பற்றிய சிறு விமர்சனக்குறிப்படங்கிய கடிதமொன்றினையும் அனுப்பி வைத்தார். அக்கடிதம் இன்னும் என்னிடமுள்ளது. நேரத்தை மதிக்கும், சொன்ன சொல் தவறாத அவரது பண்பு என்னைக்கவர்ந்ததொன்று.
கைலாசபதியவர்கள் தினகரனில் ஆசிரிய பீடத்தை அலங்கரித்த காலகட்டம் தினகரனின் இலக்கியச்சிறப்பு மிக்கதொரு காலம் என்று கூறலாம். ஈழத்துத்தமிழ் முற்போக்கிலக்கியத்துக்கு அதுவொரு பொற்காலம் என்றும் கூறலாம்.
அவரது எழுத்தில் எனக்குப் பிடித்த அம்சம்: தெளிவான நடையில், தர்க்கச்சிறப்பு மிகுந்திருப்பதுதான். கூறிய பொருள் பற்றிய அவரது தர்க்கம் எப்பொழுதும் என்னைக் கவர்ந்தது. வேறு சிலர் ஒரு பொருளைக்கூற வந்து, பலரின் மேற்கோள்களுடன் , வாசிப்பவரைக்குழப்புமொரு மொழி நடையில் எழுதுவார்கள். அவர்கள்தம் கட்டுரைகளை வாசிப்பவர்கள் பிரமித்துப்போவார்கள் அவர்கள் மேற்கோள்களைக்கண்டு, ஆனால் வாசித்து முடித்ததும் தங்களது தலைகளைச்சொறிந்துகொள்வார்கள் கூறும் பொருள் அறியாது. ஆனால் கைலாசிபதியின் எழுத்து இதற்கு நேர்மாறானது. தெளிவான நடையில், ஆழமான மொழியில், தர்க்கம் செய்யும் எழுத்து அவருடையது.
அவர் மார்க்சியக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்டவர். அதனால் அழகியலை மையமாக வைத்து எழுதப்படும் எழுத்துகளை மக்களுக்குப் பயன்படாத எழுத்துகள் என்று கருதினார். அதனால் அவற்றை அவர் வன்மையாகச் சாடினார். அவர் இருந்திருந்தாலும் ஏனைய சிலர் மாறியதுபோல் தன் கொள்கையிலிருந்தும் அவர் மாறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.
ஈழத்துத் தமிழ் முற்போக்கிலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகளில் கைலாசபதியும் ஒருவர். பேராசிரியரின் நூல்கள் பலவற்றை ‘நூலகம்’ இணையத்தளத்தில் வாசிக்கலாம்:
கலாநிதி க.கைலாசபதி பற்றி விக்கிபீடியாவில்..: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF